pm logo

திருச்சிறுபுலியூர் உலா
(கி. இராமானுஜன் தொகுப்பு)

tirucciRupuliyUr ulA
(K. Ramanujan, ed.)
In Tamil script, Unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We sincerely thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருச்சிறுபுலியூர் உலா
(கி. இராமானுஜன் தொகுப்பு)


Source:
திருச்சிறுபுலியூர் உலா
[குறிப்புரையுடன்)
பதிப்பாசிரியர் : திரு. கி. இராமாநுஜையங்கார்.
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை.
1951, விலை அணா - 12. செந்தமிழ்ப் பிரசுரம் - 70.
=======================
ஸ்ரீ: கடவுள் துணை
இப்புத்தகத்தில் அடங்கியவை

1. முகவுரை
2. திருச்சிறுபுலியூர் விஷயமான பெரியதிருமொழிப்பதிகம்
3. திருச்சிறுபுலியூருலா மூலமும் குறிப்புரையும்
1. திருமாவின் யோகநித்திரை 11. உலாப்போதல்
2. கண்ணுவர்வரலாறு 12. புடைவருவோர்
3. சிறுபுலியூர்த் தலமான்மியம் 13. குழாங்கோள்
4. இத்தலத்துப் பேறுபெற்றோர்14. பேதை
5. தீர்த்தமான்மியம்15. பெதும்பை
6. மூர்த்திமான்மியம்16. மங்கை
7. வசந்தவிழாவொப்பனை 17. மடந்தை
8. கொடியேற்றம் 18. அரிவை
9. திருவாராதநச்சிறப்பு 19. தெரிவை
10. கோலங்காண்டல்20. பேரிளம்பெண்
------------------
ஸ்ரீ
முகவுரை


"வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
நீயளந்து கொண்டாய் நெடுமாலே! தாவியநின்
எஞ்சா இணையடிக்கே யேழ்பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்''
      (திவ். இயற்பா. 3-ஆம் திருவந்தாதி 18. பேயாழ்வார்)

"வானார் மதிபொதியுஞ்சடை மழுவாளியொடொருபால்
தானாகியதலைவன்னவன் அமரர்க்கதிபதியாம்
தேனார்பொழில் தழுவும் சிறுபுலியூர்ச்சலசயனத்
தானாயன தடியல்லதொன்றறியேனடியேனே"
      (திவ், பெரியதிருமொழி 7-9 - 4. திருமங்கையாழ்வார்)

உலா என்பது பவனி என்று பொருள்படும். அது, ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும் அளியும் ஆண்மையும் முதலிய உயர் குணங்களாற் சிறந்த மாந்தரும் தேவருமாகிய உத்தமநாயகர் உலா வருதலைச் சிறப்பித்துப் பேசுதலின் அப்பெயர்த்தாயிற்று. தமிழ் மொழியிலுள்ள பிரபந்தவதைகளில் உலாவும் ஒன்று.

பாரகாவியங்களிலே பாட்டுடைத்தலைவன் திருமணம் புணர்ந்த திப்பியநாளிலும் மணிமுடிபுனைந்த மங்கலதினத்திலும் பகை வென்றுநின்ற தகைபெறுபொழுதினும் பிற மங்கலங்கள் நிகழுங் காலத்தும் தன் வளநகர் மாந்தர் மகிழ்ந்தெதிர்கொள்ள உலாவரும் செய்தியும் அவ்வுலாக்காட்சியால் பேதைமுதல் எழுபருவ மகளிரும் அத்தலைமகன் மாட்டுக் காதல் கைம்மிக்கு நின்றநிலையும் கூறப்படுவதுண்டு. அது பெருங்கதை சீவகசிந்தாமணி இராமாவதாரம் முதலிய பெருநூல்களில் இனிதுபுலனாகும்.

இவ்வாறு பெருங்காப்பியங்களில் ஒரோவழிச் சுருங்கப் பேசப்பட்ட தலைமக்கள் உலாவரும் செய்தியையே நுவல்பொருளாகக் கொண்டு விரித்துப்பேசும் பிரபந்தமே உலாவாகும். இது முதனிலை பின்னிலை என்னும் உறுப்புக்களோடு கலிவெண்பாவான் இயற்றப்படுவதாகும். முதனிலையும் பின்னிலையும் தனித்தனி ஏழுறுப்புக்களை யுடையவாய் வரும். 'முதனிலை பின் எழுநிலை யுலா என்பது பொய்கையார் பாட்டியல். இச்சூத்திரத்துள் 'பின் எழுநிலை' என்பதனுள் ‘எழு' என்பதனைப் பிரித்து முதல் என்பதனோடு கூட்டி முதல் எழுநிலை, பின் எழுநிலை எனக் கொள்க.

முதனிலையென்பது: பாட்டுடைத் தலைமகனது உயர்குடிப் பிறப்பு, முன்னோர் பெருமையோடியைந்த ஒழுகலாறு, கொடை திறம், துயிலெழல், நாணீராடல், கோலங்கொளல், மதகளிறு முதலிய ஊர்திகளில் நகரிவலம்வருதல்: என்னும் ஏழுறுப்புக்களை யுடையது. பாட்டுடைத்தலைவனது பவனிகாண்டற்கு நகரமகளிர் குழுமுதலை முதனிலையென்பாரும் உளர்.

"குடிநெறி மரபு கொளல்கொடை விடியல்
நன்னீ ராடல் நல்லணி யணிதல்
தொன்னக ரெதிர்கொள நன்னெடு வீதியின்
மதகளி றூர்தல் முதனிலை யாகும்"

"ஆதி நிலையே குழாங்கொளல் என்றெடுத்
தோதிய புலவரும் உளரென மொழிப”
என்பர் பொய்கையார்.

இம் முதல்நிலை, ஆதிநிலை முன்னிலை எனவும்படும். முதல்நிலைக்குப் போலவே பின்னிலைக்கும் ஏழுறுப்புக்கள் உண்டு. அவை பாட்டுடைத் தலைமகன் பவனிவரக்கண்ட பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்: என்னும் எழுவகைப் பருவமகளிருடைய எழில் இயல்பு செயல் காதல் முதலியவைகளாம்.

"ஏழு நிலையும் இயம்புங் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி யுரைப்பது நுண்ணியோர் கடனே'

என்பது பொய்கையார் பாட்டியல்.

இனி மகளிர்க்குரிய எழுவகைப்பருவங்களுக்கும் வகுத்த வயது வரையறை,
ஐந்தாம் வயதுமுதல் எட்டாம்வயதுமுடிய நான்கு ௵ பேதை
9-ஆம்வயதுமுதல் 10-ஆம்வயதுமுடிய 2- ௵ பெதும்பை
11-ஆம் வயதுமுதல் 14 - ஆம்வயது முடிய 4- ௵ மங்கை
15-ஆம் வயதுமுதல் 18-ஆம்வயதுமுடிய 4- ௵ மடந்தை
19-ஆம்வயதுமுதல் 24-ஆம்வயதுமுடிய 6- ௵ அரிவை
25-ஆம் வயதுமுதல் 29 - ஆம்வயதுமுடிய 5- ௵ தெரிவை
30-ஆம்வயதுமுதல் 36-ஆம்வயதுமுடிய 7. ௵ பேரிளம்பெண்
எனப்படும்.

"பேதைக் கியாண்டே ஐந்துமுதல் எட்டே"
"பெதும்பைக் கியாண்டே ஒன்பதும் பத்தும்''
"மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்''
"மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்’’
"அரிவைக் கியாண்டே அறுநான் கென்ப"
"தெரிவைக் கியாண்டே இருபத் தொன்பது'
"ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்பென மொழிப”

என்பது பொய்கையார் பாட்டியல்.

இதனிற் சிறிது சிறிது வேறுபடவும் பாட்டியலிலக்கண நூல்கள் கூறிச்செல்லும்.
இவ் வெழுவகைப் பருவமகளிருள்ளே பேதை காதல் அரும்பாத நிலையினள்; பெதும்பை காதல் சிறிது தோன்றியும் தோன்றாத நிலையினள்; மங்கை காதல் மலர்ந்த நிலையினள்; மடந்தை காதலின்பந் துய்த்தற்கேற்ற உறுப்புநலன் அனைத்தும் நிரம்பிய நிலையினள்; அரிவையும் தெரிவையும் காதல் வாழ்க்கையின் அரும்பெறற் பயனான இன்பநுகர்ச்சியும் புதல்வற்பேறும் புண்ணியப்பேறும் எய்தத்தக்க நிலையினர்; பேரிளம்பெண் தலைமகனொடு வீடுபேறடை விக்கும் விரதவொழுக்கம் மேற்கொளும் நிலையினள்: எனலாம்.

இனி இவர் பொழுதுபோக்கும் விளையாட்டு வகைகளுள், பேதைக்குச் சிற்றிலிழைத்தலும் பாவையாட்டும், பெதும்பைக்குக் கழங்காடலும் அம்மனையாடலும், மங்கைக்குப் பந்தாடலும் ஊசலாடலும், மடந்தைக்குக் குழலும் யாழும் முதலிய பயிலுதலும், அரிவைக்குப் பொழிலாட்டும் குறிகேட்டலும் கூடலிழைத்தலும், தெரி வைக்குப் புனலாட்டும் கிள்ளை அன்னம் முதலியவற்றோடு பயிலு தலும், பேரிளம்பெண்ணுக்கு நன்மது நுகர்தலும் தான் விரும்பிய தலைவனின் வீரமும் புகழும் விளம்பக்கேட்டலும் சிறந்தனவாகும்.

"சிற்றில் பாவை கழங்கம் மனையே
பொற்புறும் ஊசல் பைங்கிளி யாழே
பைம்புன லாட்டே பொழில்விளை யாட்டே
நன்மது நுகர்தல் இன்ன பிறவும்
அவரவர்க் குரிய வாகு மென்ப”
என்பர் அவிநயனார்.

உலா இயற்றும் புலவருக்குப் பெதும்பைப்பருவம் ஏனைப்பருவங்களினும் பேச அரியதொன்றாகும். "பேசும் உலாவிற் பெதும்பை புலி" என்பது முன்னோர்கூற்று.

பாட்டியல் நூலுடையார், மகளிரை எழுபருவத்தினராக வகுத்து அவர்க்கு வயது வரையறையும் விதித்தது போலவே ஆடவரையும் பாலன், மீளி, மறவோன், திறலோன், காளை, விடலை, முதுமகன்: என ஏழுபருவத்தினராக வகுத்து அவ்வேழு பருவங்களுக்குரிய வயது வரையறையும் அவர் உலா வரத்தக்க ஆண்டெல்லையும் கூறிப்போந்தனர்.

"பாலன் யாண்டே ஏழென மொழிப”
“மீளி யாண்டே பத்தியை காறும்"
"மறவோன் யாண்டே பதினான் காகும்''
"திறலோன் யாண்டே பதினைந் தாகும்"
"பதினா றெல்லை காளைக் கியாண்டே"
“அத்திறம் இயன்ற முப்பதின் காறும்
விடலைக் காகும் மிகினே முதுமகன்"
"நீடிய நாற்பத் தெட்டி ளைவும்
ஆடவர்க் குலாப்புரி வுரித்தென மொழிப"
என்பர் அவிநயனார்.

ஏழுபருவத்தினராய ஆண்மக்களுள்ளே பாலனுக்குக் குழவி விளையாட்டும், மீளிக்கும் மறவோற்கும் கல்வி கேள்விகளும், திறலோனுக்கும் காளைக்கும் போர்ப்பயிற்சியும், விடலைக்கு அல்லவை கடிந்து நல்லனநாட்டலும் அறத்தாற்றினால் வந்த பொருளின்ப நுகர்ச்சியும், முதுமகற்குத் துறவுநெறியும் சிறந்தனவாகும்.

'உலாக்களிலே கூறப்படும் எழுவகைப் பருவமகளிர்க்கும் வகுத்த வயது வரையறையை நோக்குமிடத்து அவரனைவரும் மன்றலெய்தாத கன்னியரெனக் கொள்ளற்கில்லை; மன்றலெய்திய மகளிரேல் அவர் உலாவரு தலைமகனைக் கண்டு காதலுற்றனரென்றல் ஒண்ணாது; அவர்கற்புக்கு இழுக்காகும்' என்று கொண்டு அவ்வெழுவகைப் பருவமகளிரும் பரத்தையரென ஒருசிலரும் உருத்திர கணிகையர் என ஒருசிலரும் கூறுவாராயினர். இக்கூற்று ஆராயத்தக்கது.

தலைவன் உலாவரும் வீதியைப் பரத்தையர்வீதி அல்லது பரத்தையர்சேரி என்றேனும் உருத்திரகணிகையர் வீதியென்றேனும் காவியங்கள் கூறவில்லை. பொய்கையார் பாட்டியலோ,

“தொன்னகர் எதிர்கொள நன்னெடுவீதியில் மதகளிறூர்தல்” என்று கூறுகிறது. இங்கே 'நன்னெடுவீதி' என்றது பரத்தையர் வீதி அல்லது பரத்தையர் சேரியாகாது; உருத்திரகணிகையர் வீதியும் ஆகாது. "மறையவர்வீதி, அரசர்வீதி, வணிகர்வீதி என்று விதந்துகூறாது பொதுவகையால் ‘நன்னெடுவீதி' என்றதனால் பரத்தையர் தெரு ருத்திரகணிகையர் தெரு என்று பொருள் கொள்ளலும் ஆம்" எனின், உயர்குடிப்பிறப்பும் நல்லொழுக்கமும் அறிவும் திருவும் அழகும் கல்விகேள்விகளும் கொடையும் ஆண்மையும் முதலிய நலமனைத்தும் ஒருங்குடைய 'ஓங்கியவகை நிலைக்குரிய தலைமகன்' பரத்தையர்தெருவில் அல்லது உருத்திர கணிகையர் தெருவில் உலாப்போதல் ஒல்லாது; உலாப்போந்தான் என்று கூறுதலாற் பெறும் சிறப்பும் இல்லை. அன்றியும் அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியினராகிய பரத்தையர் உலாவரும் தலைமகனைக் காதலியார். காதலித்தாலும் உலாப்போந்த தலைமகன் அதனால் எய்தும் பெருமை யென்னை? உருத்திர கணிகையராற் காதலிக்கப்பட்டான் என்பதும் உலாவரு தலைவர்க்கெல்லாம் பொருந்தாது ஆகவே, உலாக்களிற் கூறப்படும் எழுவகைப் பருவமகளிர் என்பது சிறப்புவகையால் சாதி குடி முதலியவை சுட்டாது பொதுவகையால் எல்லா மகளிரையுமே குறிக்கும் என்று கோடலே பொருந்துமென்று தோன்றுகிறது. இவ்வாறு கொள்ளின் மேற்குறித்தபடி அம்மகளிர் கற்புப் பழுது பட்டதாகாதோ எனின், ஆகாது. உலாக்கூற்று நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி கூறும் வாயுரையாகாது, புலவன் புனைந்துரையாதலின். இதனால் உலாவரு தலைமகன் மகளிரனைவரும் கண்டு காதல்கொள்ளத்தக்க கனிந்த கட்டழகன் என்பதே உலாகக்கூற்றின் கருத்தென்று கொள்ளத் தக்கதாயிருக்கிறது.

அன்றியும், உலாநூல்களிலே பாட்டுடைத்தலைவர் திருமால் முதலிய கடவுளராகிய அவரைக்கண்டு காதலித்தார் என்று பேசும் ஏழுபருவ மகளிரையும் சீவான்மாக்கள் என்று கொள்ளலும் ஆகும். அவ்வாறு கொள்ளுங்கால் (1) அபிலாஷை, (2) சிந்தநை, (3) அநுஸ்மிருதி, (4) இச்சை, (5) ருசி, (6) பரபத்தி, (7) பரம பக்தி என்னும் ஏழும் அவ்வான்மாக்களின் ஏழுபருவங்களாகக் கூறுவதுண்டு.

இம்முறையிற் சீவான்மாக்களின்
1. அபிலாஷையைப் பேதையென்றும்
2. சிந்தநையைப் பெதும்பையென்றும்
3. அநுஸ்மிருதியை மங்கையென்றும்
4. இச்சையை மடந்தையென்றும்
5. ருசியை அரிவையென்றும்
6. பரபக்தியைத் தெரிவையென்றும்
7. பரமபக்தியைப் பேரிளம்பெண்ணென்றும்
கொள்ளலாம். இவற்றுள்,

1. அபிலாஷை - (தக்க தலைவனைக் காண எழும்) விழைவு.
2. சிந்தநை - (கண்ட தலைவனைப்பற்றியெழும்) நினைவு.
3. அநுஸ்மிருதி-(தலைவனைப்பற்றியெழுந்த) நினைவு இடைவிடாதிருக்கை.
4. இச்சை – (தலைவனையணைவதில் உறுதியான) ஆசை.
5. ருசி - (வேறுபுலங்களிற்செல்லாத) அவ்வாசையின் முதிர்ச்சி.
6. பரபக்தி - தலைவனைக் கூடுதலும் பிரிதலுமாகிய இவற்றை முறையே இன்பமும் துன்பமுமாக நினைகை.
7. பரமபக்தி - தலைவனைப் பிரிந்தநிலையில் முடிகை.
என்பர்.

இனி, திருச்சிறுபுலியூர் உலா என்பது சிறுபுலியூரில் அர்ச்சாரூபியாய் எழுந்தருளியுள்ள திருமாலைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு, அவர் பவனிவரும் சிறப்பை விரித்துக் கூறுவதொரு தமிழ்ப் பிரபந்தமாகும். இது அத்தலத்திலே ஆண்டுதோறும் சித்திரைமாதம் திருத்தேர்க்காட்சியொடு நிகழும் வசந்தவிழாவின் தொடர்புடையதாய் அத்தல மான்மியம் தீர்த்த மான்மியம் மூர்த்தி மான்மியம் முதலியவற்றை விரித்துச் செல்வது.

சிறுபுலியூர் என்பது சோழநாட்டுத் திருமால் திருப்பதி நாற்பதனுள் ஒன்று; மாயூரத்திலிருந்து திருவாரூர் செல்லும் புகைவண்டி வழியில் மங்கநல்லூர்க்குத் தென்கிழக்கே மூன்றுமயில் தூரத்தில் உள்ளது.
இவ்வுலாவால் தெரியவந்த இத்தல மூர்த்தி தீர்த்தங்களைப் பற்றிய விவரம் வருமாறு.
புலிக்கான் முனிவர் (வியாக்ரபாதர்) தவஞ்செய்து பேறுபெற்ற தலமாதலின் (கண்ணி - 15) முன்னே புலியூரென நின்ற இது, அப்பெயரானும் அடையடுத்த பெரும்புலியூர் என்னும் பெயராலும் வழங்கப்படும் சிதம்பரத்தின் வேறாதல் தெளியச் சிறுபுலியூர் என விசேடித்து வழங்கப்பட்டது. முன்னின்ற திரு என்பது அடையின் மேலடையாய் உறையும் இடவகையாற் சிறியதாயினும் மான்மியத்தாற் பெரியதென இத்தலத்தின் சிறப்புணர்த்திநின்றது: இத்தலம் திருமங்கையாழ்வார் அருளிய பதிகம்பெற்ற மாண்புடையது.* இங்கே பாஞ்சராத்திர ஆகமநெறியால் வழிபாடுகள் நடை பெறும் (கண்ணி-84).
*அப்பதிகம் அடுத்துப் பதிக்கப்பட்டுளது.
இத்தலத்துத் திருமால் திருநாமம் - அருமாகடலமுது என்பது. தேவி திருநாமம் திருமாமகள் என்பது. இத்திருநாமங்களின் பெருமை உற்றுநோக்கி யுணர்ந்தின்புறுந் தகைத்து. தன்னை அடைந்தார்க்கு இன்பம் விளைத்தல்கொண்டு திருமாலை அமுது என்பர். "தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து' என்பது தமிழ்மறை. இன்பம் விளைத்தலோடு கடலிடைத்தோன்றலும் இரண்டுபொருட்கும் ஒக்குமாயினும், அமுது பாற்கடல் கடையப் பிறந்தது; அழிதன் மாலையரான தேவரால் நுகரப்படுவது; ஒருகால வரையறைக்குள் அளவுபட்ட இன்பம் விளைப்பது. திருமாலாகிய அமுது வேதமுதலாகவுள்ள நூற்கடல்கடைய - (ஆராய) வெளிப்பட்டது; அழிவற்றவரான விண்ணோராலும் மண்ணோராலும் நுகரப்படுவது; எஞ்ஞான்றும் அளவுபடாத இன்பம் விளைப்பது — ஆதலின் தேவருண்ணும் அமுதினும் திருமாலாகிய அமுது சிறந்தமை தோன்றச் சிறுபுலியூர்த் திருமால் அருமாகடலமுது என விசேடித்து வழங்கப்பட்டார். திருமகளினும் சிறந்தாள் திருமாமகள். எவ்வுயிர்க்கும் தாயாயினும் வீட்டுலகில் நித்தியசூரியர் கண்டு வாழ்த்தி வணங்கும்படி திருமாலொடு மருவிய திருமகளினும் மண் ணுலகிற் சேதநரும் எளிதிற்கண்டு வாழ்த்தி வணங்கி மகிழும்படி இத்தலத் திறைவனொடு மேவிய தேவி சிறப்புடையளாதலின் திருமாமகள் எனப்பட்டாள்.
இங்கே இறைவன் கண்ணுவமுனிவர் வேண்டுகோளின்படி பாம்பணைப்பள்ளியில் யோகநித்திரை கொண்டருளுகிறார் (கண்ணி 44). இவ்வாறு யோகநித்திரை கொண்டருளும் மூலஸ்தான விமாநம் நந்தியாவருத்தம் எனவும், இவ்வறிதுயிற்கோலம் சலசயனம் எனவும் வழங்கப்படும். சலசயனம் - மாயப்படுக்கை = யோக நித்திரை. நந்தியாவருத்தவிமானம் விச்சுவகன்மாவினால் ஆக்கப் பட்டது. (கண்ணி-52)

இங்குள்ள தீர்த்தங்கள் :- பிரமதீர்த்தம் (கண்ணி - 19) அநந்த சரஸ் கண்ணி - 21) சக்கரதீர்த்தம் (கண்ணி - 27) என்பனவாம்.

இத்தலத்தே திருமாலை வழிபட்டுப் பேறுபெற்றோர்:- பிரமன், சிவபிரான், ஆதிசேடன், சூரியன், வியாக்ரபாதர், தேவசன்மா, கண்ணுவர் முதலியோராவர்.

அவருள், பிரமன் இங்கே திருமாலை வழிபட்டு அஷ்டாக்ஷர துவாதசாக்ஷர உபதேசம் பெற்றனன். (கண்ணி 21-22)

ஆதிசேடன் திருமாலை வழிபட்டு முக்கால நிகழ்ச்சிகளையும் அறியும் அறிவுபெற்றனன் (கண்ணி-14).

சூரியன் இத்தலத்தே ஆலயங்கண்டு, அருமாகடலமுதைப் பிரதிட்டை செய்வித்துத் திருமால் தொண்டர் இருபத்துநால்வரைக் குடியேற்றி வழிபாடுகள் நடைபெறச்செய்து சித்திராபௌர்ணமியிலே வசந்தவிழாவும் நிகழச்செய்து இறையருள்பெற்றனன் (கண்ணி -16, 17).

தென்பாண்டி நாட்டானாகிய தேவசன்மா என்பான் நெடுங்காலம் புத்திரப்பேறின்றி வருந்தி அகத்தியமுனிவர் கட்டளையால் இத்தலத்தையடைந்து திருமாமகளோடு மேவிய அருமாகடலமுதை யடிபணிந்து சுற்றத்தோடு சக்கரதீர்த்தக் கரையிலே தவம் மேற்கொண்டு வதிந்து திருமாலடியரான மூன்று புதல்வரைப் பெற்று மகிழ்ந்தனன் (கண்ணி -23-29).

வீட்டுலகவாழ்வுவிழைந்த கண்ணுவமுனிவர் தாம் கருதியதை யடைவிக்குந் தவமியற்றற்கேற்ற புண்ணியதலம் இதுவே யென்று ஆராய்ந்து துணிந்து இங்குவந்து தவஞ்செய்ய, அவர் தவத்தான் மகிழ்ந்த திருமால் பாற்கடலிற் பள்ளிகொண்ட சேஷ சயனத் திருக்கோலத்தோடு அவர்முன்தோன்றி அவர் விரும்பிய வீடுபேற்றினை வரன்முறையால் எய்த அருள, அதனால் உவகை யெய்திய கண்ணுவர், அப்பொழுது தமக்குக் காட்சி தந்தகோலத்தோடு அத்தலத்தே என்றும் வாழ்ந்தருளவேண்டுமென்று பிரார்த்தித்து அவ்வாறு தங்கிய திருமாலை வழிபட்டு வாழ்ந்தனர் என்ப (கண்ணி - 9-44).

இத்தலத்து நிகழும் திருவிழாக்களுள் வசந்தவிழாச் சிறந்தது. இவ்விழாவில் திருமாமகள் மருவும் அருமாகடலமுதம் பிரான், நெல்லைத் திருமலைராயன் என்பவர் கட்டுவித்த ஆயிரத்திருநூறு தூண்களுடைய வசந்தமண்டபத்தில் எழுந்தருளித் திரு மஞ்சனமும் திருவாராதநமுங் கண்டருளியபின் வீதிப்புறப்பாடு நிகழும் (கண்ணி -79-96).

தொடக்கமும் நடுவும் முடிவும் ஒரேபடித்தாய்ச் சொற்சுவை பொருட்சுவை கனிந்து கற்பனைநயம் மலிந்து விளங்கும் இவ்வுலாவை இயற்றத்தொடங்கிய கவி, இத்தலத்தின் பெருமை, மூர்த்தி, மான்மியம் முதலிய அனைத்தையும் ஒரு பதிகத்தால் விளக்கியருளிய திருமங்கையாழ்வார் பக்கலில் தமக்குள்ள ஈடுபாட்டினைக் காப்புச் செய்யுளால் வெளியிடுகிறார். இதனுள் கை விரும்பிய பேற்றினை அளிக்கும் உறுப்பு. வேல் பகையொழிக்கும் உறுப்பு. முன்பு திருமாலை மணங்கொல்லையில் வழிபறித்தற்கு உதவிய கையும் வேலுமே இன்று சிறுபுலியூரில் அத்திருமால் விஷயமாகத்தாம் இயற்றப் புகுந்த உலாவை இனிதுமுற்றுவிக்கும் காப்பாம் என்றவாறு. திருமங்கையாழ்வார்பால் இவர்க்குள்ள அன்புநிலை,

''உறைகழித்த வேலையொத்த விழிமடந்தை மார்கண்மேல்
      உறையவைத்த சிந்தைவிட்டவ் வுலகளந்த நம்பிமேல்
குறையவைத்து மடலெடுத்த குரையலாளி திருமணங்
      கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க அவன்முன்னே
      மடியொதுக்கி மனமொடுக்கி வாய்புதைத்தவ் வொன்னலார்
கறைகுளித்த வேலணைத்து நின்றஇந்த நிலைமையென்
      கண்ணைவிட் டகன்றிடாது கலியனாணை யாணையே''

என மணவாளமாமுனிவர்க்கு அவ்வாழ்வார்மாட்டுள்ள அன்புநிலையினை நினைவூட்டுகிறது.

கடவுளருள் சிறுபுலியூர்த் திருமாலைப் பாட்டுடைத்தலைவனாக கொண்டியற்றப்பட்ட இவ்வுலாவுள் 1 தலமான்மியம், 2 தீர்த்தமான்மியம், 3 மூர்த்திமான்மியம், 4 வசந்தவிழாவொப்பனை, 5 ஆராதனம், 6 கோலங்காண்டல், 7 உலாப்போதல் என்னும் ஏழும் முதனிலைக்குரிய உறுப்புக்களாகும். பின்னிலையிற் பேசப்படும் பேதைமுதல் எழுவகைப் பருவமகளிரையும் அபிலாஷை, சிந்தனை, அநுஸ்மிருதி, இச்சை, ருசி, பரபக்தி, பரமபக்தி என்றும் எழு வகைப்பருவமுடைய சீவான்மாக்களாகக்கொள்ளல் தகும்.

முதனிலையுள் முதல் 9 கண்ணிகள் திருமால் பாற்கடலிற் கொண்டருளிய அறிதுயிற்காட்சியை நம் கண்ணெதிர் தோன்றச் சித்திரிக்கின்றன. பின்பு கண்ணுவர் சிந்தனை கூறும் கண்ணிகளால் பிறவியின் பயன் இறைவனையடைதலே என்று தெளிவாகிறது. சிறுபுலியூர்த் தலமான்மியம் கூறுங் கண்ணிகள் அத்தலம் இம்மை மறுமைப் பயன்களையும் வீட்டின்பத்தையும் உதவவல்லது என்று விளக்குகின்றன. மூர்த்திமான்மியம் கூறும் கண்ணிகளால் திருமால்பால் அமைந்த அடைந்தாரைக் கைவிடாதுபுரக்கும் ஆற்றலும், பகைத்திறந் தெறும்பான்மையும் உயர்வறவுயர்ந்த நிலையும் கிட்டுதற்கு எளியனாநிலையும் அவனவதாரங்களுள் தசாவதாரத்தின் ஏற்றமும் அர்ச்சாவதாரத்தின் மேம்பாடும் பிறவும் இனிது புலனாகின்றன.

மேலும் 53 - முதல் 56 - முடியவுள்ள கண்ணிகளில் ஆடிமுதல் முறையே பன்னிருமாதப்பெயர்களும் இனிதுதொனிக்கப்புணர்த்த நயமும், 58 முதல் 62 முடியவுள்ள கண்ணிகளில் திருமால் திருநாமங்களை அடைவிரவாதடுக்கிய நயமும் 63- முதல் 65 - முடியவுள்ள கண்ணிகளிலும் பிறவற்றிலும் செம்பாகமாய் அமைந்த மடக்கு நயம் முதலியவையும் படித்து இன்புறத்தக்கன.

அருமாகடலமுதெம்பிரான் பவனி காணக் குழுமிய மகளிர் கூற்றாகவும் பின்னிலையுள் பேதை முதல் எழுபருவ மகளிர் கூற்றாகவும் அமைந்த கண்ணிகள், ஆழ்வார்கள் பாசுரங்களிலும் ஆண்டாள் அருளிச்செயலிலும் திருக்குறள் முதலிய பிற தொன்னூல்களிலும் அமைந்த சொல்லும் தொடரும் கவியும் பொருளும் கருத்தும் தோய்ந்து, புலவன் பேச்சாகாது உண்மையில் ஞானபக்திகளால் அமைந்து திருமாலினிணையடிக்கே ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய விழைந்த ஆன்மாக்களாகிய மகளிர் கூற்றாகவே விளங்குகின்றன.

இவ்வுலாவுள் பேதை பரவைக்கும் பூவைக்கும் கிளிக்கும் தான்விரும்பிய தலைவனாகிய திருமால் திருநாமங்களைப் பயிற்றுவித்தும் சிற்றிலிழைத்தும், பெதும்பை தான் விழைந்த தலைவன் விஷயமான திவ்யப்ரபந்த ரகஸ்யக்ரந்த - அநுசந்தானத்தோடு - கழங்காடியும், மங்கை தான் ஆசையுற்ற தலைவன் பெயரையும் புகழையும் பாடிக்கொண்டு பந்தாடியும், மடந்தை தான் காதலித்த தலைமகன் புகழ்களை யாழிசையோடிணைத்துப் பாடியும், அரிவை தன்னாற் காதலிக்கப்பட்ட தலைமகனைக் கூடக்கருதிப் பொழிலிடையிருந்து கூடல்வளைத்துக் குறிபார்த்தும், தெரிவை தான் விரும்பிய தலைவனைப் பிரிந்திருக்கலாற்றாது கிளியை அவன்பால் தூது செல்ல விட்டும், பேரிளம்பெண் தான் விழைந்த தலைமகன் புகழைப் பேசியும் அவன்பெருமைகளைப் பரமஹம்ஸர்களான ஆசாரியர் புகலக் கேட்டும் பொழுதுபோக்கினர் என்று ஆசிரியர் பேசுகிறார்.

மேலும், குழாங்கொண்ட மகளிர் திருத்தேரிலும், பேதை திருத்தேருள் கருடவாகனத்திலும், பெதும்பை தேரிலே அநும வாகனத்திலும், மங்கை தேரின்கண் சேஷவாகனத்திலும், மடந்தை தேரின்மீது யானைவாகனத்திலும், அரிவை தேரின்மேல் குதிரை வாகனத்திலும், தெரிவையும் பேரிளம் பெண்ணும் திருத்தேரிலும் சிறுபுலியூரெம்பெருமான் எழுந்தருளக்கண்டு காதல் மிக்கனர் என்று கூறப்படுகிறது.

முதனிலையுறுப்புக்களும் பின்னிலையுறுப்புக்களும் வெற்றெனத் தொடுத்தலின்றி அவ்வவற்றுக்கு ஏற்றபெற்றியான் வரையறுத்துப் பேசப்பட்டுள்ளன.

அவற்றுள் பேதையில் உருவக வாய்பாட்டால் வந்த உருவ வருணனையும் அப்பருவத்தோடியைய அவள் விழைவுகூறும் கண்ணிகளும், புலவர் கூற்றுப்படி பேசுதற்கரியதாகாது, பேசுதற்கெளிதென்று தோன்றும்படி அமைந்த பெதும்பைப்பருவ வருணனையும் அவள் கழங்காடும் பகுதியும், மங்கையில் முடுகு சந்தத்தோடமைந்த பந்தாடும் பகுதியும், மடந்தையில் உவமவாய் பாட்டான்வந்த உருவ வருணனையும், அரிவையில் இருபதுக்கும் மேற்பட்ட திருமால் திருப்பதிகளின் பெயர் தொனிக்கும்படி அமைந்த அவள் உருவ வருணனையும், தெரிவையில் அவள் தான் விழைந்த தலைவன் பால் கிளியைத் தூதனுப்பும் இடமும், பேரிளம்பெண்ணில் அவள் தான் காதலித்த தலைவன் பெருமையினை அன்னஞ்சொல்லக் கேட்கும் இடமும் படித்துப்படித்து இன்புறத்தக்கன.

இந்த உலாவை இயற்றிய ஆசிரியருடைய ஊர் பெயர் முதலிய ஒன்றும் புலப்படவில்லை. இவர் வைணவசமய நூல்களான திவ்யப்ரபந்தங்களையும் அவற்றின் வியாக்யானங்களையும் ரஹஸ்ய க்ரந்தங்களையும் வரன்முறையாற் கற்றுக் கேட்டுத் தெளிந்த பழுத்தஞானி யென்பதும் பரமபாகவதர் என்பதும் இவ்வுலா நூலை நுனித்து நோக்குவார்க்கு நன்குபுலனாகும். இவ்வுலாவில் சிறுபுலியூர்த்திருமாலின் உலாப்புறப்பாடு கூறுமிடத்துப் புடைவருவோரில் வைணவ சமயாசாரியர்களில் இராமாநுசரைக்கூறி அவர்க்குப்பின் பொதுப்பட எழுபத்துநான்கு சிம்மாசனாதிபதிகளைக் கூறிச்சென்றதல்லது பின் வந்த ஆசாரியர்களைப் பெயர்சுட்டிச் சொல்லாமையால் இவ்வுலாவை இயற்றிய ஆசிரியர் இராமாநுசர்க்குப் பின்னும் ஸ்ரீவேதாந்ததேசிகர் மணவாளமாமுனிவர் என்போர்க்கு முன்னும் இருந்தவர் என்று ஊகிக்கலாம்.

மேலும் இவ்வுலாவில் ஆசிரியர் 79-80-ஆம் கண்ணிகளில் சிறுபுலியூர் வசந்தவிழா நிகழுங்காலத்து உலாப்புறப் பாட்டுக்குமுன் அருமாகடலமுதெம்பிரான் எழுந்தருளித் திரு மஞ்சனமும் திருவாராதனமும் கண்டருளிக் கோலங்கொள்ளும் 1200கால் மண்டபம் நெல்லைத் திருமலைராயன் என்பவரால் அமைக்கப் பட்டதென்று கூறுதல்கொண்டு இவர் அத்திருமலைராயன் என்பவர்க்கு முன் அல்லது அவர்காலத்தில் அல்லது அவர்க்குப்பின் வாழ்ந்தவர் என்று கொள்ளலும் ஆகும்.

இவ்வுலாவின் காகிதக் கையெழுத்துப் பிரதியொன்றை அருமை நண்பர் ஆழ்வார்திருநகரி ஸ்ரீமான் பெரியன் வெ. நா. ஸ்ரீநிவாஸையங்காரவர்கள் என்னிடம்தந்து அதை ஆராய்ந்து குறிப்புரையும் எழுதி அச்சிட்டுச் செந்தமிழில் வெளியிடும்படி கூறினார்கள். இப்பெரியன், கருவிலே அமைந்த திருவுடையவர்; கல்விகேள்விகளும் எய்தியவர்; ஆழ்வார் திருநகரித் திருஞாநமுத்திரைப் பிரசுராலயகர்த்தர்; அப்பிரசுராலய வாயிலாகக் கம்பராமாயணம் முதலிய அரிய தமிழ்நூல்களை ஆராய்ந்து அச்சிட்டு வெளியிட்டு வருபவர்; அச்செயற்கரிய செயலால் தம் குடிப்பிறந்தார்க்கெல்லாம் உரிய சிறப்புப்பெயராகிய 'பெரியன்' என்பதைத் தமக்கே உரிய சிறப்புப் பெயராக்கிக் கொண்டவர். இவருதவிய இவ்வுலாப் பிரதி இடையிடை சிதைந்தும் பிழைபொதிந்தும் இருந்தது. அதைச் செவ்விய சுத்தப்பிரதியாக்கி அச்சிட எண்ணி வேறுபிரதி கிடைக்குமா என்று தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு பிரதியும் சிதைந்து இறந்துபடாது பாதுகாக்கவிரும்பி, உலா மூலத்திற் சிதைவுற்ற பகுதிகளை ஆங்காங்குப் புள்ளியிட்டுக்காட்டியும் எழுத்துப்பிழை முதலியவற்றைத் திருத்தியும் யான் நூதனமாக வரைந்த குறிப்புரையுடன் இவ்வுலாவைச் செந்தமிழ்ப்பிரசுரமாக வெளியிடு வித்தேன்.

சுவைக்கு நிலைக்களமான இவ்வுலாவின் காகிதக் கையெழுத்துப் பிரதியின் இறுதியில் "அளஅக - ஆண்டு கார்த்திகைமீ ய௩ உ சுக்ர வாரமும் அவிட்ட நட்சத்திரமும் பெற்ற சுபயோக சுபகரணத்தில் வடமலையப்பன் கவிராயனுடைய சிறுபுலியூருலா" என்று காணப்படுகிறது. இதனுட் குறிக்கப்பட்ட ஆண்டு கொல்லம் ஆண்டாகத் தெரிகிறது. கொல்லம் ஆண்டில் இப்போது நடப்பது 1126 ஆதலின் இக்காகிதப்பிரதி எதைப்பார்த்து எழுதப்பட்டதோ அந்த ஏட்டுப்பிரதி இற்றைக்குச் சற்றேறத்தாழ 235ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டதென்று தெரிவதுடன் அவ்வேடு வடமலையப்பன் கவிராயர் என்பவருக்கு உரியதென்றும் தெரிகிறது.

இவ்வுலாவின் கையெழுத்துப்பிரதியையுதவி என்னை இந்நற்பணியில் ஈடுபடச் செய்த நண்பர் ஸ்ரீமான் பெரியன் வெ. நா. ஸ்ரீநிவாஸையங்காரவர்கள் விஷயத்தில் என்றும் நன்றிபாராட்டுங் கடப்பாடுடையேன்.

இவ்வுலாவின் மூலத்திற் காணப்படும் சிதைவுகளையும் மூலத்துள்ளும் குறிப்புரையிலும் காணப்படும் பிழைகளையும் நீக்கிச் செவ்விதாக்கி மறுபதிப்பிடற் குதவியாக அவைகளைத் தெரிவித்தருளும் வண்ணம் நல்லறிஞரை வேண்டுகின்றேன்.

சிந்தைக்கினிதாய்ச் செவிக்கினிதாய் வாய்க்கினிதாய், வந்த இருவினைக்கு மாமருந்தாய்த்திகழும் இவ்வுலாவினை எளியேனால் வெளியிடுவித்த இறைவன் பெருங்கருணைத்திறத்தை வியந்து நிற்பதல்லது யான் வேறு என்செய்யவல்லேன்.
      இங்ஙனம்,
      திரு.கி. ராமாநுஜன்,
      செந்தமிழாசிரியன்.
------------
ஸ்ரீ:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரியதிருமொழி-8-ஆம் பத்துள் ஒன்பதாம் பதிகம்

திருச்சிறுபுலியூர்விஷயம்
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்
வெள்ளம்முது பரவைத்திரை விரியக்கரை யெங்கும்
தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்
துள்ளும்மென துள்ளத்துளும் உறைவாரை யுள்ளீரே.       (1)

தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொ டுகஞ்சி
மருவிப்பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்
திருவிற்பொலி மறையோர்சிறு புலியூர்ச்சல சயனத்து
உருவக்குற ளடிகள்ளடி யுணர்மின் உணர்வீரே.       (2)

பறையும்வினை தொழுதுய்ம்மினீர் பணியும்சிறு தொண்டீர்
அறையும்புன லொருபால்வய லொருபாற்பொழி லொருபால்
சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத்து
உறையும்மிறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே.       (3)

வானார்மதி பொதியுஞ்சடை மழுவாளியொ டொருபால்
தானாகியதலை வன்னவன் அமரர்க்கதி பதியாம்
தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்து
ஆனாயன தடியல்லதொன் றறியேனடி யேனே.       (4)

நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை நாளும்
எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அந்தாமரை யடியாய்!உன தடியேற்கருள் புரியே.       (5)

முழுநீலமுமல ராம்பலும் அரவிந்த மும்விரவி
கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முக மலரும்
செழுநீர்வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழுநீர்மைய துடையாரடி தொழுவார் துயரிலரே.       (6)

சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும்
மாயா!எனக் குரையாயிது மறைநான்கின் உளாயோ
தீயோம்புகை மறையோர்சிறு புலியூர்ச்சல சயனத்
தாயோ உன தடியார்மனத் தாயோ?அறி யேனே.       (7)

மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்தனம் விட்டிட்
டுய்வானுன கழலேதொழு தெழுவேன்கிளி மடவார்
செவ்வாய்மொ ழியிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து
ஐவாயர வணைமேலுறை யமலாஅரு ளாயே.       (8)

கருமாமுகி லுருவாகன லுருவாபுனலுருவா
பெருமால்வரை யுருவாபிற வுருவாநின் துருவா
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அருமாகட லமுதேயுன தடியேசர ணாமே.       (9)

சீரார்நெடு மறுகிற்சிறு புலியூர்ச்சல சயனத்து
ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானைக்
காரார்வயல் மங்கைக்கிறை கலியன்ஒலி மாலை
பாரார்இவை பரவித்தொழப் பாவம்பயி லாவே.       (10)

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
----------------------

திருச் சிறுபுலியூருலா

ஸ்ரீ:
காப்பு.
வெண்பா.
திருமா மகள்சேர் சிறுபுலியூர் மாமால்
அருமா கடலமுதை யாரத் - தருமாலை
செய்யுமுலா விற்குத் திருமங்கை வாட்கலியன்
கையும் வடிவேலுங் காப்பு.

நூல்
திருமாலின் யோகநித்திரைவருணனை

1 கார்பூத்த பைந்துளபக் கண்ணன் கருதலர்மேற்
போர்பூத்த நேமிப் புயல்வண்ணன் - சீர்பூத்த

2 பூமடந்தை நீளை புவிமடந்தை தாள்வருட
நாமடந்தை கேள்வ னலம்பாட- மாமணிசேர்

3 பாற்கடலி லாயிரவாய்ப் பாம்பணையின் மேற்கிடந்த
நீற்கடல்கண் டாங்கு நிறம்பூத்துச் - சூற்கரிய

4 கொண்டலொளி மின்விழுங்கிக் கொண்டுசுடர் கால்வதெனப்
புண்டரிகக் காடுபொலிந் தோங்கி - விண்டடவு

5 நீல கிரிகிடந்த நீர்மையெனக் கற்பகத்தின்
கோல வடிவுகுடி கொண்டதெனச் - சால

6 அடியா யிரந்தோள்க ளாயிரம்பொற்பான
முடியா யிரங்கதிர்கள் மொய்ப்பப் - படியிருளைக்

7 காயுங் கதிராழி சங்குகதை வாள்சார்ங்கம்
வாயும் புயவலயம் வாளிமைப்பப் - பாயொளிய

8 செம்பொன் னுடைவயங்கத் தேவர்குழாங் கைதொழுது
செம்பதுமத் தாள்போற்றிச் சேவிப்ப - நம்பரமர்

குறிப்புரை
காப்பு :- சிறுபுலியூர் - சோழநாட்டுத் திருமால் திருப்பதிகளுள் ஒன்று. திருமாமகள் என்பது சிறுபுலியூரிற் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் பிராட்டி திருநாமம். மாமால் – பெருமை பொருந்திய திருமால். மாமாலாகிய அருமாகடலமுது என்க. அருமாகடலமுது - சிறுபுலியூர்த்திருமால் திருநாமம், ஆர - உண்ண = அனுபவிக்க, அருமாகடலமுதை ஆரத் தரும் உலா, மாலைசெய்யும் உலா என இயைக்க. மாலைசெய்யும் உலா - மாலையாக இயற்றப்பட்ட உலா. திருமங்கை - சோழநாட்டகத்ததொரு சிறுநாடு. கலியன் என்பது திருமங்கையாழ்வார் திருநாமங்களுள் ஒன்று.
[1]. கருதலர் - பகைவர். நேமி-சக்கரம்.
[2]. பூமடந்தை - திருமகள். நீளை - ஆயர்குலமகள். புவிமடந்தை - பூமிதேவி. தாள் - திருவடி. வருட - தடவ, நாமடந்தை கேள்வன் - பிரமன்.

[3] நீற்கடல் - நீலக்கடல். சூல் - கரு.
[4] கொண்டல்-மேகம். சுடர் கால்வதென - ஒளியை உமிழ்தல் போல. புண்டரிகக்காடு - தாமரைக்காடு. விண்தடவும் - ஆகாயமளாவிய
[5] நீலகிரி - நீலமலை. நீர்மை - தன்மை.
[6] பொற்பு - அழகு. படியிருளை - உலகத்திலுள்ள இருட்டை.
[7] காயும் - சினந்து ஓட்டுகின்ற வாயும் புயவலயம் - சிறந்த தோள் வளை.
வாள் இமைப்ப - ஒளிவிட. பாய் ஒளிய - பரவிய ஒளியையுடைய.
[8] பொன்னுடை - பிதாம்பரம். வயங்க - விளங்க. பதுமம் - தாமரை.
நம் பரமர் - நம் இறைவர் (திருமால்).
----
சிறுபுலியூர்த் தலமான்மியம்
(கண்ணுவர் வரலாறு)

9 யோகுதுயில் காலை யொருநாளிற் கண்ணுவனார்
மாகவலை யெய்தி மறுக்குற்றுச் - சோகித்

10 திதுநாட் பிறந்துபய னென்பெற்றோ மென்று
கதிநாட்டுச் செல்லக் கருதி - முதுநிலத்து

11 வானவர்கள் போற்றி மதிக்கு முலோககுரு
வானபெரு மானை யடைதுமென - நானிலத்திற்

12 போற்றுமிடம் யாவையினும் புண்ணியபூமித்தலம்பார்த்
தேற்றுதவ மாங்கே யிழைத்துமென - ஆற்றலால்

13 ஞான விழிதிறந்து நான்குதிக்கும் பார்த்து நமக்
கானவிட மீதென் றறிவுற்று - மோனமுனி

[1-9] புயல்வண்ணன் திருமகளும் புவிமகளும் ஆய்மகளும் அடிவருட, பிரமன் துதிக்க, நிறம்பூத்து, ஓங்கி, மொய்ப்ப, இமைப்ப, வயங்க, சேவிப்ப, பாற்கடலில் நீலகிரிகிடந்த நீர்மையெனக் கற்பகத்தின் கோலவடிவு குடி கொண்டதென யோகுதுயில்காலை என வினைமுடிவுசெய்க.

[9] யோகுதுயில்காலை - யோகநித்திரைசெய்தபொழுது, கண்ணுவனார் கண்ணுவமுனிவர். மறுக்குற்று - கலங்கி.
[10] இது நாள் - இக்காலத்து. கதிநாட்டு - புகலிடமாகிய வைகுந்த வானாட்டிலே. முதுநிலம் - வீட்டுலகு.
[11] வானவர் - நித்தியரும் முத்தர்களும். உலோககுரு - லோகாசாயன் என்றது திருமாலை. அடைதும் என அடைவோமென்று. நால் நிலத்தில் - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நான்குவகையான நிலங்களில்.
[12] போற்றும் இடம் யாவையினும் - புகழ்ந்துபேசப்படும் இடம் எல்லாவற்றுள்ளும். ஏற்றுதவம் - உயர்நிலையடையச்செய்கின்ற தவத்தை. ஆங்கே - அந்தப் புண்ணிய தலத்திலே. இழைத்துமென -செய்வோமென்று.
[13] மோனம் மௌனம்.
-----------
[இத்தலத்துப் பேறுபெற்றேர்]
14 காலமொரு மூன்றுங் கருதி யரவரசு
சீல மிகுதவங்கள் செய்யிடமும் - ஞாலமிசை

15 பண்டு வியாக்கிர பாதர் தவம்பலிக்க
விண்டு வுரைத்த வியலிடமும் - புண்டரிகக்

16 காடு மலர்த்துங் கதிரோன் றவம்புரிந்து
நீடு திருநாள் நிறைவேற்றி - நாடி

17 ஒருபத் துருவா யுதித்தபிரான் றொண்டர்
இருபத்து நால்வர்குடி யேற்றி - வருபத்தி

18 செய்யு மிடமுந் திசைமுகத்தோன் மாதவத்துக்
கெய்து மிடமுமவ னெம்மானைக் - கைதொழுது

19 தோத்திரஞ் செய்து துதிசொல்வோர் வாழ்வுபெற
வாய்த்த தலமு மலரயனார் - தீர்த்தமெனத்

20 தேவார் நதியனைத்துந் தெற்கா லடிநிழலி
லாவா கனஞ்செய் யறைபுனலும் - நாவிரண்டு

21 கொண்ட வனந்தன் குளிர்சோலை சூழ்தடமும்
முண்டகத்தோ னுக்கு முகுந்தனார்—பண்டைமறை

22 யெட்டெழுத்து மீரா றெழுத்துமுப தேசத்தாற்
கட்டுரைக்க வாய்த்த கவினிடமுஞ் - சிட்டர்சேர்

23 தென்பாண்டி நாட்டுறையுந் தேவசன்மா வுள்ளுருகி
அன்பான புத்திரரில் லாமையிற் றுன்புறுநாட்

24 கும்பமுனி யெய்திக் குடகா விரிநாட்டில்
நம்பர் சிறுபுலியூர் நண்ணுகென - நம்பியே

[14] காலம் ஒரு மூன்றும் கருதி - இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் எண்ணி, அரவரசு - ஆதிசேடன்
[15] விண்டு - விஷ்ணு = திருமால், வியலிடம் - பெருமையுடைய தலம்.
[17] ஒருபத்து உருவாய் உதித்தபிரான் - திருமால்.
[16-18] கதிரோன் தவம்புரிந்து, திருமாலடியார் இருபத்துநால்வரைக் குடியேற்றித் திருநாள் நிறைவேற்றிப் பத்திசெய்யும் இடமும் எனக் கூட்டுக.
[18] திசைமுகத்தோன் - பிரமன். எம்மான் - எம் இறைவன் = திருமால்.
[20-21] தேவார் - தெய்வத்தன்மைபொருந்திய. ஆவாகனஞ்செய்தல் -நிலைபெறச் செய்தல். முண்டகத்தோன் - பிரமன். முகுந்தன் - திருமால். இவ்விரண்டு கண்ணியாலும் தீர்த்தமான்மியம் கூறப்பட்டது.
[22] எட்டெழுத்து - அஷ்டாக்ஷரம். ஈராறெழுத்து - துவாதசாக்ஷரம். கவின் - அழகு. சிட்டர் - பெரியோர்.
[24] கும்பமுனி - அகத்தியர், நம்பர் - நம் இறைவர் = திருமால்.
---------------
25 கூராழி மால்கனகக் கோகனகத் தாள் பணிந்தாங்
காரா வமுதை யடிவணங்கி- நேரே

26 திருமா மகள்சரணஞ் சேவித்துக் கண்ணால்
அருமா கடலமுதை யார்ந்து - தருமருவு

27 சக்கர தீர்த்தத் தடங்கரையிற் சுற்றமொடும்
புக்கிருந்த நாட்கனவிற் பூவைவண்ணன் - மிக்கவராய்

28 மூவர் தனைய ரளித்துமென வம்முறையே
மூவர் பிறந்து முகுந்தனார்க் - கேவற்

29 பணிவிடை செய்யப் பலித்த விடமுங்
கணிவிடையி லேறுகறைக் கண்டர் - அணியொருபால்

30 ஈட்டு தவஞ்செய் திருக்குமிட மும்பார்த்து
மூட்டு கனலை முறைவகுத்துத் - தாட்டுணைமே

31 லாகத் தலைகீழாய் நின்றுதவ மாங்கிழைப்ப
(கண்ணுவர்தவத்தாலுவந்த திருமால் இத்தலத்து அவர்க்கு அருள்புரிந்து தங்குதல்)
மாகத் தமரர் மறுக்குற்று - நாகத்
--------------------------------------------------------------
[25]. கனகக்கோகனகத்தாள் - பொற்றாமரையடி.
[26]. சரணம் – திருவடிகளை; ஆர்ந்து - உண்டு = அநுபவித்து
[27]. சக்கரதீர்த்தம் - சிறுபுலியூரிலுள்ள தீர்த்தங்களுள் ஒன்று. பூவை
வண்ணன் - திருமால்.
[28]. மூவர்தனையர் - மூன்றுபுத்திரர்கள். அளித்தும் என – கொடுப்
போமென்றுசொல்ல. முகுந்தனார்க்கு – திருமாலுக்கு.
[28-29]. ஏவற் பணிவிடை - ஆஜ்ஞா கைங்கரியம். பலித்த இடமும் – பலனளித்த
தலமும், கணி - கண்ணி = நினைந்து. விடை - காளை. கறைக்கண்டர் -
காளகண்டராகிய சிவபெருமான். அணி - அண்ணி = கிட்டி.
[30]. தாட்டுணை - இரண்டுகால்களும்.
[31]. மாகத்து அமரர் - விண்மிசைத் தேவர். மறுக்குற்று - கலங்கி.
----------------------------------------------------------
32 தணையானே பாலாழி யானே யடியோம்
துணையானே யென்று துதிப்ப - இணையிலீர்
33 நீவிர் வெருவலிர் நில்லா வுமதுலகில்
ஆவல்புரி கின்றா னலன்கண்டீர் - யாவருக்கும்
34 எட்டா வுலகம் புகுவா னிழைத்தவரம்
முட்டா வருந்தவத்தோன் முன்செல்வான் - சுட்டி
35 எழுதுமியாம் நீவிருமங் கேகுவீ ரென்னத்
தொழுதங் கமரர்குழாஞ் சூழக் - கெழுதகைய
36 கண்ணன் வனத்துநின்ற கண்ணுவனார் கண்ணெதிரே
அண்ணன் மணிப்பாம் பணை மீது - நண்ணியே
37 வெள்ளி வரையிற் கருஞா யிறுவிளங்கிப்
பள்ளிகொண்டா லன்ன படிதோன்ற - உள்ளுருகி
38 வெள்ளங் கொழித்து விழிநீ ருகவுடலம்
பொள்ளென் றுரோமம் புறம்பொடிப்பத் - தள்ளி
39. உரைகுழறக் கைதொழுத வோர்மா முனியைக்
கரைபொருத கட்கருணைக் கண்ணன் - பெரிதுவந்து
40. கண்ணுவனை யுள்ளக் கருத்தே தெனநினது
விண்ணுலகம் வேண்டு மெனவிளம்ப -அண்ணலும்
41. சத்திய லோகந் தனினீயும் வேதாவும்
சித்த மகிழச் சிறந்திருந்து - முத்தராய்
42 வாய்த்த திருநாட்டில் வம்மினெனக் கண்ணுவனார்
ஏத்தியிறை யோனை யினிதிறைஞ்சிப் - பூத்ததிரு
43 வுந்தியா யிவ்விடத்தி லூழிபல காலமெல்லாம்
எந்தையே வாழ்க வெனவிளம்ப - அந்தமுறை
44 பாலாழி நாகணையிற் பள்ளிகொண்ட கோலமொடு
நீலாழி போல்வளர்ந்த நேமியோன் - வேலை

9-31. கண்ணுவனார் பிறந்து பயனென்பெற்றோமென்று கவலையெய்தி, மறுக்குற்று, சோகித்து, கதிநாட்டுச்செல்லக்கருதி, பெருமானையடை துமென, தவமிழைத்துமென, நான்கு திக்கும்பார்த்து, இடமும் இடமும் இடமும் இடமும் தலமும் புனலும் தடமும் இடமும் இடமும் இடமும் (ஆகிய சிறு புலியூரைப்) பார்த்து, இது நமக்கான இடமென்று அறிவுற்று, கனலை வகுத்து, நின்று தவம் இழைப்ப என வினை முடிவுசெய்க.
33. நீவிர் - நீங்கள். வெருவலிர் - பயப்படாதீர்கள். ஆவல்புரிகின்றானலன் - விரும்பவில்லை. கண்டீர் முன்னிலையசை.
34. யாவருக்கும் எட்டா உலகம் - எவராலும் அடைதற்கரிய வைகுந்தம். புகுவான் – அடையும் பொருட்டு; அருந்தவத்தோன் முன்செல்வான் - அரிய தவத்தோனான கண்ணுவனுக்குக் காட்சிதர. சுட்டி- கருதி.
35. கெழுதகைய - செறிந்த குணங்களையுடைய.
31-37. கண்ணன், நீவிர் வெருவலிர், உமதுலகில் ஆவல்புரிகிறானலன், அருந்தவத்தோன்முன் செல்வான்சுட்டியாம் எழுதும், நீவிரும் அங்கேகுவீர் எனக் கண்ணுவனார் எதிர் பாம்பணைமீது தோன்ற என முடிக்க.
38. உடலம் - மெய். பொள்ளென்று - விரைந்து. உரோமம் புறம் பொடிப்ப - புளகம் தோன்ற. விழி நீருக, உடலம் புளகங்கொள்ள என்க.
-----------------------------------------------

மூர்த்திமான்மியம்
45 உருத்துவரும் வெவ்விடத்தா லும்பரெலா மஞ்ச
உருத்திரனாம் பாத்திரத்தி லுண்டோன் - பெருத்தநர
46 சிங்கமாய்ப் பொன்ன னுரநகங் கீறியும்பின்
வெங்கண்மா கோபம் விளைதலுமே - துங்கமிகு

39. உரை - சொல்.
41. சத்தியலோகம் - பிரமலோகம். வேதா - பிரமன். முத்தராய் –
பந்தமற்றவராய்.
42. திருநாடு - வைகுந்தநாடு. இறையோனை - திருமாலை. இறைஞ்சி -வணங்கி.
44. நீலாழி - நீலக்கடல். நேமியோன் சக்கராயுதத்தையுடைய திருமால்.
வேலை - (திருப்பாற்) கடலின்கண்.
45. உருத்து - சினந்து. வெவ்விடத்தை - கொடிய விஷத்தை.; உம்பர் –
தேவர். அஞ்ச - பயப்பட. உருத்திரனாம் பாத்திரத்தில் உண்டோன் - சிவபிரானாகிய கலத்திற்கொண்டு உண்டோன்.
46. பொன்னன் - இரணியன். உரம் - மார்பு.
-----------------------------------------------------

47. தேவ ரொடுசாபச் சிம்புளாய் வந்தவனைக்
காவதம்போய் வீழக் கரஞ்சிரங்கால் - மேவுமுடல்
48. சின்னபின்ன மாக்கித் திசைதோறும் விட்டெறிந்து
தன்னிகரில் கோபந் தணிந்தருள்வோன் - பின்னுசடை
49. அக்கரவு சூடிக் கடுசூல மன் றளித்துச்
சக்கரமுஞ் சங்குந் தரித்தருள்வோன் - செக்கமலப்
50. பஞ்சடியிற் பார்த்தன் பரிந்திட்ட பூவரனார்
செஞ்சடையிற் காட்டித் தெளிவித்தோன் - கஞ்சன்
51. அடிவிளக்குங் கங்கை யரைச்சோமன் கட்டும்
முடிவிளக்கக் கண்ட முதல்வன் - படிவிளக்க
52. விச்சுவ கன்மன் விதித்தநந்தி யாவருத்தம்
நச்சிச் சலசயன நண்ணினோன் - நச்சுவிளை

47. சரபமாகிய சிம்புள்; இஃது எட்டுக்கால்களையுடையதொரு பறவை; சிங்கத்தின் நாவையுண்டு சீவிப்பதென்பர்; இரணியனைக்கொன்ற நரசிங்கப் பெருமான் சினத்தைத் தணிக்கும் பொருட்டுச் சிவபெருமான் சரபவுருவில் வர நரசிங்கப்பெருமான் அதன்வலியையும் அழித்துச் சினந்தணிந்தனர் என்பது
புராணகதை. காவதம் - காதம். கரம் - கை. சிரம் - தலை.
48-49. பின்னு சடை அக்கு அரவு சூடிக்கு - பின்னிய சடையின் கண்
சங்குமணியும் பாம்பும் சூடிய சிவபிரானுக்கு. செக்கமலம் - செங்கமலம்; வலித்தல்விகாரம்.
50. பார்த்தன் - அருச்சுனன். பரிந்து - விரும்பி. அரனார் - சிவபெருமான். கஞ்சன் - பிரமன்.
51. அடிவிளக்கும் கங்கை - (தன்)அடியிணைகளை யாட்டிய கங்கை நீரை. அரைச்சோமன் - பிறைமதி. கட்டும் - தரித்த படி - பூமியை.
52. விச்சுவகன்மன் விதித்த - தெய்வத்தச்சனால் நிர்மாணம்பண்ணப் பட்ட, இந்தக் கண்ணியுள் இத்தலத்திறைவன் எழுந்தருளியுள்ள விமானம் குறிக்கப்படுகிறது. இவ்விமானத்தின் பெயர் பிறநூல்களில் நந்தவர்த்தனம் என்று காணப்படுகிறது. இங்கு நந்தியாவருத்தம் என்றிருக்கிறது. இவற்றின் பொருளும் பொருத்தமும் ஆராயத்தக்கன. நச்சி - விரும்பி. சலசயனம் - மாயப்படுக்கை = யோகநித்திரை, நச்சு விளை - விஷம் உண்டாகின்ற.
--------------------------------------------------

53. பன்னகத்திலாடியான் பண்டுமெமக் காவணியான்
பொன்னனுடல் கீண்டுபுரட் டாதியான் - முன்னுலகுண்
54. கொள்ளைப் பசியான்வெங் கூற்றினடங் கார்த்திகையான்
வள்ளத் தனத்திருவை மார்கழியா - னுள்ளினரை
55. மீண்டுடம்பு தையான் விதிமறைக்கு மாசியான்
பாண்டவர்போ ரிற்காண்டீ பங்குனியான் - வேண்டினோர்
56. தஞ்சித் திரையான் றமிழ்மறைவை காசியான்
அஞ்சப் புகும்வினைக்கோர் ஆனியான் - விஞ்சுற்ற

53. பன்னகத்தில் - பாம்பின்மேல். ஆடியான் - நடித்தோன். இக்கண்ணி
முதல் 56ம் கண்ணிவரை பன்னிரண்டுமாதப்பெயர்களும் (ஆடி முதல்) முறையே தொனிக்கப் புணர்த்த நயம் காண்க, பண்டும் எமக்கா அணியான் - முன்பும்
(இராம கிருஷ்ணாதி அவதார காலத்தும்) எங்கள்பொருட்டு எளிதில் அடையுமாறு கிட்டியவன். உம்மையால் இன்றும் எமக்கு அர்ச்சா ரூபியாய் எளிதில் அடையுமாறு கிட்டியவன் என்றும் பொருள்படும். பொன்னன் - இரணியன். கீண்டு - பிளந்து. புரட்டு - புரட்டிய ஆதியான் - தலைவன். முன் உலகு உண் - முன்னே (பிரளயகாலத்து) உலகத்தையுண்ட.
54. கொள்ளை - மிகுதியான. வெம் கூற்றின் அடங்கார்த்திகையான் - கொடியபேச்சினை யுடைய பகைவர்திறத்து மயங்காதவன். வள்ளம் –
கிண்ணம். திருவை - திருமகளை. மார்கழியான் - மார்பினின்று நீங்காதவன். உள்ளினரை - நினைந்தோரை.
55. மீண்டு உடம்பு தையான் - மறுபடியும் உடம்பிற் பொருத்தாதவன் (பிறவியறுப்பவன்). விதி மறைக்கும் ஆசியான் - ஊழையும் தடுக்கும் வாழ்த் தையுடையான். பாண்டவர்போர் - பாரதப்போர். காண்டீபம் குனியான் - வில்வளையாதவன் (படையெடாதவன்). இங்கே காண்டீபம் என்பது வில் என்னும் மாத்திரையாய்நின்று உபலக்ஷணத்தால் பிற படைக்கலங்களையும் குறித்தது.
56. இத்தலத்துத் திருமாலைக் கதிரவன் சித்திரைமாதத்துச் சித்திரை நக்ஷத்திரத்தோடுகூடிய பூரணைநாளில் பிரதிட்டை செய்து வழிபட்டு விழா வெடுத்தமையாற் 'சித்திரையான்' என்றார் (69, 71 ஆம் கண்ணி பார்க்க). தமிழ்மறை வைகு ஆசியான் - தமிழ்மறையாகிய ஆழ்வார்களருளிச்செயல்களில் முன்னுள்ள திருப்பல்லாண்டாகிய வாழ்த்தையுடையான். அஞ்சப் புகும் வினைக்கு ஓர் ஆனியான் - அஞ்சும்படிவரும் தீவினைகளுக்குக் கேட்டை விளைப்பவன். விஞ்சுற்ற - மிக்க.
--------------------------------------------------------------

57. ஏழ்பாரு முய்ய விசைத்தமிழ்வே தந்தொகுத்த
ஆழ்வார்க ளுள்ள மகலாதான் - கோழிமயில்
58. சோரங்கத் தம்மான் சிறுபுலியூரான் பேரான்
நீரகத்து மூரகத்து நின்றபிரான் - காரகத்தான்
59. மாயன் முகுந்தன் மதுசூ தனன்வாமன்
ஆயன் முராரி யகிலேசன் - தூய
60. அரிகே சவன்கண்ண னாதிபரந் தாமன்
பரவாசு தேவன்கோ பாலன் - நரசிங்கன்
61. ஆதி வராகனச்சு தானந்தன் கோவிந்தன்
மாதவன்மால் விண்டு வரராமன் - சீதரன்
62. ஆரா வமுத மருமா கடலமுதம்
நாரா யணன்பரம னால்வேதன் - சீராரா
63. காயத்தா னூற்றுவரைக் காயத்தான் பாண்டவர்பங்
காயத்தா னானச காயத்தான் - காயத்தான்
64. வாகனத்தான் சொன்னவடி வாகனத்தான் வேள்வியிலா
வாகனத்தான் செய்யதிரு வாகனத்தான் - மாகனத்த
-------------------------------------------------
57. கோழிமயில் - உறையூர் நாச்சியார்.
57- 58. திருமா லுக்கந்தருளின தலங்களுட் சிலவற்றைக் குறிக்கும் ‘கோழிமயில் சேரரங்கத்தம்மான் சிறுபுலியூரான் பேரான்' என்பதனுள் கோழி, மயில், மான், புலி, ஆன் (இடபம்) என வேறு பொருளும் தொனிக்கப் புணர்த்த நயம் காண்க.
59-62. இக்கண்ணிகளுள் திருமால் திருநாமங்களை அடைவிரவாது அடுக்கிய நயம் நோக்கத்தகும்.
62-63. சீரார் ஆகாயத்தான் - சிறப்புப்பொருந்திய பரமாகாயத்தையுடையான். நூற்றுவரைக்காயத் தான் பாண்டவர்பங்காய் அத்தானான சகாயத்தான் - துரியோதனாதி நூற்றுவரையும் கொல்லும்பொருட்டுத் தான் பாண்டவர்பக்கத்து நின்று மைத்துனனுமாகிய உதவியையுடையான். காயத்தான் – உருவத் திருமேனியுடையான்.
64. வாகு அ(ன்)னத்தான் சொன்ன வடி வாகன் நத்தான் - அழகிய அன்னத்தை யூர்பவனான பிரமனால் துதிக்கப்பட்ட (முழங்கால்வரையில்) தாழ்ந்த தோள்களையுடையான் (பிரமன் துதித்தமை 18-ஆம் கண்ணியிற் காண்க.) பாஞ்சஜந்நியமென்னும் சங்கத்தையுடையான். வேள்வியில் ஆவாகனத்தான் - யாகத்தில் நிலைபெறுவோன்.
-------------------------------------------------

65. ஆழியான் கண்டுயில்பா லாழியா னொற்றைநட
வழியா னாழிநடு வாழியான் - ஆழியநீர்
66. மீனாகி யாமையாய் வெள்ளெகின மாயாயர்
கோனாகி நீளுங் குறளாகி - யேனாகி
67. மூவ ரிராமராய் மூரிநர சிங்கமதாய்த்
தேவர்சூழ் கற்கித் திருவுருவாய் - மேவினோன்
68. கண்ணபுரத்தான் கணமங்கை யான்காயா
வண்ணபுரத் தானென் மனத்தினான் - கண்ணனருட்

வசந்தவிழாவொப்பனை
69. காதவன்முன் செய்த திருநாளழகுபெற
மாதர் குழாங்கள் மனைகடொறுஞ்- சோதி
70. விளக்கேற்றித் தூபமிட்டு மென்மலர்க டூவி
வளக்கதலி தண்கமுகு வைப்பத் - துளக்கறவே
71. ஆதி யுகம்வந் தடிக்கொள்ளச் சித்திரையிற்
சீத நிலவிற் றிருநாளுக்- கேதமிலா

65. ஆழியான் - சக்கரப்படையுடையான். பாலாழி - திருப்பாற் கடல். நடவு ஒற்றை யாழியானாழிநடு வாழியான் - செலுத்தப்படுகிற ஒற்றைச் சக்கரத்தையுடைய தேரையுடையனான சூரியனுடைய மண்டலத்தினிடையே வாழ்தலையுடையான். ஆழிய - ஆழமான
66. வெள் எகினம் - வெண்மைநிறமுடைய அன்னம். ஆயர்கோன் - கண்ணன். குறள் - வாமனன். ஏனாகி - ஏனமாகி = வராகமாகி.
67. மூவர் இராமர் - பரசுராமன், தசரதராமன், பலராமன் என்பார். மூரி -அடங்காத.
68. காயாவண்ணபுரத்தான் – காயாமலர்நிறத்தையுடைய திருமேனியினான்.
கண்ணனருட்கு - திருமாலின் அருளைப் பெறும்பொருட்டு.
69. ஆதவன் - சூரியன்.
70. தூபம் அகிற்புகை முதலியன. கதலி - வாழை. துளக்கற - கலக்கம் ஒழிய.
71. ஆகியுகம் வந்தடிக்கொள்ள - (கலிகெட்டுக்) கிருதயுகம்வந்து நிலை பெற. ஏதம் - குற்றம்.
----------------------------------------------------------

72. மண்டபமுங் கோபுரமு மாளிகையுஞ் செய்குன்றும்
விண்டடவு நீண்மதிளும் வீதிகளும்—அண்ட
73. முகடளக்கும் பொற்கொடிகள் மூரிக் கடல்வாய்
அகடளக்கும் வெண்டிரைபோ லாடத் - துகடீர்ந்த
74. காவணமு மேடைகளுங் காவுங் கனகமணி
யாவணமு மெங்கு மலங்கரித்துப் - பூவலரும்

[கொடியேற்றம்]
75. வாவிச் சிறுபுலியூர் மாயனரு மாகடலைச்
சேவித் திறைஞ்சத் திருநாளுக் - கோவாத
76. தேவர் முனிவர் திசைகா வலருரகர்
யாவரும் வம்மி னெனவழைத்துக் - கூவுதல்போற்
77. சொற்கம் பயில்வோர் தொழவருதற் கேணியாம்
பொற்கம்ப மேற்கருடப் புள்ளரசாய் — நிற்கும்
78. படியேற மக்கட் பரப்பெல்லா மாங்கே
குடியேறக் கொற்றக் குடைக்கீழ் - நெடிதாளும்

[திருமஞ்சன-திருவாராதனச் சிறப்பு]
79. நெல்லைத் திருமலை ராய னிறைகமலக்
குல்லைத் திருமகட்குக் கோவிலாய்ச் - செல்வத்தால்
80. ஆறிருநூ றம்பொ னமைத்தகான் மண்டபத்தின்
ஏறி யருளி யினிதிருந்து - நாறுமலர்

72-73. மண்டபத்திலும் கோபுரத்திலும் மாளிகையிலும் செய்குன்றுகளிலும் மதில்களிலும் வீதிகளிலும் கொடிகள் ஆட என இயைக்க. துகள் தீர்ந்த - புழுதி நீங்கிய.
74. காவணம் - பந்தல். ஆவணம் - கடைவீதி. அலர்தல் - விரிதல்.
75. வாவி - தடாகம். ஓவாத - குறையாத.
76. திசைகாவலர்- திக்குப்பாலர். உரகர் - நாகர். வம்மின்-வாருங்கள்.
78. கொற்றக்குடை - வெற்றிக்குடை.
79. நெல்லை - திருநெல்வேலி, திருமலைராயன் என்பார் இத்தலத்து 80ஆம் கண்ணியிற்கூறும் வசந்தமண்டபம் கட்டுவித்தவர். குல்லை - துழாய்.
80. ஆறிருநூறு அம்பொன் அமைத்த கால் மண்டபத்து - ஆயிரத்திருநூறு செம்பொன்னாற்செய்த கால்களையுடைய மண்டபத்து,
----------------------------------------------

81. வீட்டி லிருந்து விளையாடு மன்னமும்வெண்
கோட்டி லிருந்த குலமயிலும் - தோட்டு ஈறும்
82. பூமாலை சூடிக் கொடுத்துப் புதிய தமிழ்ப்
பாமாலை பாடும் பசுங்கிளியும் - தாமுந்
83. திருமஞ் சனமாடித் தேவியருந் தாமும்
ஒருமஞ்ச மீதிலுவந் தேறிக் - கருமவிதி
84. ஆகமவே தாந்தபஞ்ச ராத்திரத்தி னூலுணர்ந்த
பாக வதர்கள் பணிகேட்பச் - சேகறுசீர்

(வீதிப்புறப்பாடு)
85. ஆரா தனங்கொண் டருளி யமுது செய்தாங்
கேராரும் வீதி யெழுந்தருளி - நீரார்
86. பவளக் குடையும் பலகோடி முத்தின்
தவளக் குடையுந் ததைந்து - திவளுற்
87. றாருபா னிலவு மொருபால் வெயிலும்
இருபா லொளிவிட்டெறிப்ப - இருபாலும்
88. வெண்கவரி வீசமதி வெய்யவன்போ லாலவட்டம்
பண்கவருஞ் சொல்லார் பணிமாறப் - பண்பயின்ற
89. மத்தளங் காள மகரயாழ் நாகசுரந்
தித்திமுக வீணை சிறந்தொலிப்பச் - சித்தசனன்

80-81. நாறு மலர்வீட்டிலிருந்து விளையாடும் அன்னம் என்றது திருமகளை. வெண்கோட்டில் இருந்த குலமயில் என்றது பூமிதேவியை. வெண் கோடு - (வராகப்பெருமானது) வெள்ளிய கொம்பு. தோடு - இதழ்.
82. கிளியென்றது ஆண்டாளை.
83. மஞ்சம் - கட்டில். கருமவிதி - கருமங்களைவிதிக்கின்ற.
84. பஞ்சராத்திரம் - பாஞ்சராத்திராகமம். சேகு-குற்றம்.
86. தவளக்குடை - வெண்குடை. ததைந்து - நெருங்கி, திவளுற்று - விளங்கி.
88. ஆலவட்டம் - விசிறி. பணிமாற - வீச.
89. தித்தி - ஊதுகுழல், முகவீணை - ஒருவகையிசைக்கருவி. சித்தசனன் - மன்மதன்.
-----------------------------------------

90. வேதம் பயிலும் விழிமடவார் சங்கீத
நாதம் பயின்று நடமாடப் - போதத்
91. தரிசனங்க ளாகி யகலாது ஞானப்
பரிசனங்கள் சூழ்ந்துபணி கேட்பப் - பரிவான
92. ஆழ்வார்கள் பாட லருளிச் செயல்வேதம்
வாழ்வாம் வயிணவர்கள் வாழ்த்தெடுப்பத் - தாழ்விலா
93. வேத முழங்கவித்தி யாதரரு நாரதருங்
கீதவிசை வீணைக் கிளைபாட - மீதுலகில்
94. அந்தர துந்துமிநின் றார்ப்பெடுப்பப் பல்லியங்கள்
சிந்து முழக்கிற் சிறந்தொலிப்பக் - கந்தனுக்குத்
95. தாதையொடு வேதாவைத் தந்தபிரான் வந்தானென்
றூது திருச் சின்ன வொலிமுழங்க - வீதி
96. உலவுதிரு நாளி லொருநாளி லெங்கும்
நிலவுபுக ழோங்கி நிறைய - நலம்விளங்கத்

90. போதம் -ஞானம்.
91. பரிசனங்கள் - அடியார். பரிவு - அன்பு.
92. ஆழ்வார்கள் பாடலாகிய அருளிச்செயல் வேதம் என்க.
93. மீதுலகில் - மேலுலகில்.
94. பல் இயங்கள் - பலவகை வாத்தியங்கள். சிந்து - கடல்.
95. கந்தனுக்குத் தாதை - முருகனுக்குத்தந்தை = சிவபிரான். வேதா - பிரமன். திருச்சின்னம் - எக்காளம்.
44-96 நேமியோன் உண்டோன் ... கணமங்கையான் என் மனத்தினான், திருநாள் அழகுபெற மாதர்குழாம் விளக்கேற்றித் தூபமிட்டு மலர்கள் தூவிக் கதலி கமுகு வைப்ப, ஆதியுகம்வந்து ஆடிக்கொள்ள, மண்டபமும் ………….. வீதிகளும் பொற்கொடிகள் ஆட, காவணமும் ... ஆவணமும் எங்கும் அலங்கரித்து, இறைஞ்சு திருநாளுக்கு யாவரும் வம்மின் எனக் கூவுதல்போற் கருடப்புள் ஏற, மக்கட் பரப்பெல்லாம் குடியேற, மண்டபத்தில் ஏறியருளி, இருந்து, அன்னமும் மயிலும் கிளியும் தாமும் ஆடி, ஏறி, ஆராதனங்கொண்டருளி, எறிப்ப, வீச, பணிமாற, ஒலிப்ப, நடமாட, கேட்ப, வாழ்த்தெடுப்ப, பாட, ஆர்ப்பெடுப்ப, ஒலிப்ப, முழங்க உலவுதிருநாளில் ஒரு நாள் என முடிவு கொள்க.
----------------------------------------------

[கோலங்காண்டல் - கேசாதிபாதம்]
97. தேவியருந் தாமுமொரு சிங்கா தனத்திலிருந்
தாவியன மாதர்க் கணியணிந்து - மாவலிபால்
98. மூவடிமண் வாங்கியநாண் மூதண்ட கூடமூட்டத்
தாவடி போன தனியிடத்தே - ஓவா
99. திழைத்த பசும்பொன் னிடைபதும ராகந்
தழைத்த வயிரமுடி சாத்தி - மழைத்த
100. இருளிடையே யிந்திரவில் லிட்டதெனக் கேசச்
சுருளருகே கோறம்புஞ் சூட்டிப்—பெருகும்
101. மகரக் குழையெழுவர் மல்லருயிர் மாய்த்த
சிகரத் திடையுலவச் சேர்த்திப் - பகிரண்டம்
102. எல்லாம் விழுங்கு மிடத்தே செழுந்தரள
வில்லாருங் கண்டசரம் வேய்ந்தருளிக் - கொல்லரனார்க்
103. கைய மளித்த விடத்தே யழகுபெறத்
துய்யமணிப் பச்சைத் தொடியணிந்து - வையகப்பைந்
104. தோகை களபத் துணைப்பொருப்புச் சேரிடத்தே
வாகு வலயம் வனைந்தருளிக் - கோகனகை

98. தாவடி - தாவி. தனியிடமென்றது சிரத்தினை. மழைத்த - குளிர்ச்சியையுடைய.
100. கேசம் - குழல். கோறம்பு - நெற்றிப்பட்டம் (திவ். பெரியாழ். 3-4-6).
101. மல்லருயிர் மாய்த்த சிகரம் என்றது தோள்களை.
101-102. அண்டமெல்லாம் விழுங்குமிடம் - கழுத்து. தரளம் - முத்து. வில் - ஒளி, கண்டசரம் - கழுத்தணி. கொல் அரனார் - அழித்தற்கடவுளான சிவபிரான்.
102-103. அரனார்க்கு ஐயம் அளித்த இடம் என்றது கைத்தலத்தை. தொடி - வீரவளை.
103-104. வையகப்பைந்தோகை - பூமிதேவி. களபம் – கலவைச்சாந்து. துணைப்பொருப்பு - இணைத்தனம். களபத்துணைப்பொருப்புச்சேரிடம் என்றது தோள்களை. வாகுவலயம் - தோள்வளை. வனைந்தருளி - தரித்து. கோகநகை - திருமகள்.
-----------------------------------------------------

105. தங்கு மிடத்தே தழுவுதுழாய் மாலையொடு
கொங்கு வனமாலைக் கொத்தணிந்து - திங்க
106. ணிலவும் வெயிலும் நிரந்தெனமுந் நூலும்
விலகு கவுத்துவமும் வேய்ந்து - குலையா
107. துருவுதர வண்ட மொளித்த விடத்தே
திருவுதர பந்தனமுஞ் சேர்த்தி - அருகு
108. துவளொளிப்பொன் னாடை சுரிகையுடன் வீக்கிச்
சிவளிகைக் கச்சாற் செறித்துத் - தவறுடைய
109. கல்லைப்பெண் ணாக்கிக் கரியைமக வாக்கியதற்
கெல்லைக் குறியா மிரண்டிடத்தே - தொல்லை
110. உருச்சிலம்புங் கங்கை யுடன்மறைக ளார்க்கும்
திருச்சிலம்புங் கிண்கிணியுஞ் சேர்த்தி - மருச்செறிந்த

104-105. கோகநகை தங்கும் இடம் என்றது திருமார்பை, கொங்கு - தேன். வனமாலை பலவகைநிறமுள்ள மலரும் தழையும் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை.
106. நிரந்தென - நிரல்பட அமைந்தாற்போல. முந்நூல் – பூணூல்; கவுத்துவம் - திருமால் மார்பின் மணி. வேய்ந்து - பூண்டு.
106-107. அண்டம் உருவுகுலையாது எனக் கூட்டுக. அண்டம் ஒளித்த இடம் - வயிறு. உதரபந்தனம் - அரைப்பட்டிகை.
108. சுரிகை - உடைவாள். வீக்கி -கட்டி. சிவளிகைக் கச்சு - உடை மேற்கட்டுங் கச்சு (திவ். பெரியதிரு. 817). செறித்து - கட்டி. தவறு – கொண்டாற் பிழைத்த குற்றம்.
109. கல் இங்கு அகலிகை. கரியை மகவாக்கியது - உத்தரை கருவிலிருந்த சிசு அசுவத்தாமன் ஏவிய அபாண்டவாஸ்திரத்தால் கரிந்ததனை மீட்டும் மகவாக்கிய கண்ணன் கழல். அதற்கு எல்லைக்குறியாம் இரண்டிடம் – அக்கழலுக்கு முடிவிடமாகக் குறிக்கப்படும் கணைக்காலும் விரலுமாகிய இரண்டுறுப்பிலும். தொல்லை – பழமையான.
110. உருச் சிலம்பும் - அச்சமெழ ஒலிக்கின்ற. சிலம்பு - நூபுரம். கிண்கிணி – தண்டை
---------------------------------------------
111. கற்பூரஞ் சாத்திக் கதிர்மதியிற் கத்தூரிப்
பொற்பூர் திலகம் புனைந்தருளி - எற்பொலிந்த
112. விண்ணா டிரவிக்கு வீசு கதிர்கொடுக்குங்
கண்ணாடி யூடுதிருக் கண்சாத்தித் - தண்ணார்
113. மணிதிருத்துஞ் செம்பொன் வடவரைபோ லோங்கும்
அணிதிருத்தே ரேறி யருளித் - திணிநிலவு

உலாப்போதல்
114. கொற்றக் குடைநிழற்றக் கோதையர்பல் லாண்டிசைப்பக்
கற்றைக் கவரிசிறு காலசைப்பட - வெற்றிப்
115. பணில முழங்கநிறை பல்லியங்க ளார்ப்பக்
குணிலறையும் பேரிநிரை கொட்பத் - திணியவுல
116. குண்டுமிழ்ந்தான் வந்தா னுபயவிபூ தித்தலமும்
கொண்டுசெங்கோல் செய்தருளுங் கோன்வந்தான் - பண்டைமறைக்
117. கெட்டாத சோதிவந்தா னெங்கள் பிரான்வந்தான்
மட்டார் துழாயலங்கல் மால்வந்தான் - எட்டெழுத்தும்

111. கத்தூரி - கஸ்தூரி. எல் - ஒளி.
112. விண் நாடு இரவிக்கு - ஆகாயத்தை விரும்பிய சூரியனுக்கு.
97-113. என்மனத்தினான் (68), சித்திரைத்திருநாளில் ஒருநாள் (96), இருந்து, அணிந்து (97), சாத்தி, (99), சூட்டி (100), சேர்த்தி, (101), வேய்ந்தருளி (102), அணிந்து (103), வனைந்தருளி (104), அணிந்து (105), வேய்ந்து (106), சேர்த்தி (107), வீக்கி, செறித்து (108), சேர்த்தி (110), சாத்தி, புனைந்தருளி (111), கண்சாத்தி (112), ஏறியருளி (113) என வினைமுடிவுகொள்க.
114. கவரிக்கற்றை - சாமரைத்தொகுதி, சிறுகால் அசைப்ப - இளங் காற்றுவீச.
115. பணிலம் - சங்கம், குணில் - குறுந்தடி. நிரை - வரிசை. கொட்ட - சூழ. திண்ணியவுலகு என்க.
116. உபயவிபூதி - நித்யவிபூதியும் லீலா விபூதியும்.
117. மட்டு - தேன். அலங்கல் - மாலை.
----------------------------------

118. தானாகி நின்றருளுந் தம்பிரான் வந்தானென்
றானாது சின்னங்க ளார்ப்பெடுப்ப - வானளவு
[புடைவருவோர்]
119. சேடத் திருப்புளிக்கீழ்த் தென்பா லுதித்தமகிழ்த்
தோடுற்ற மாலைச் சுடர்ப்பரிதி - பீடுற்ற
120. வெள்ளி நெடுஞ்சிகா மீதிலிள ஞாயிறுபோற்
புள்ளெகின வாகனத்திற் போற்றிவரத் - தெள்ளுதமிழ்க்
121. கொல்லிக்கும் வஞ்சிக்குங் கோழிக்குங் கூடற்குஞ்
செல்வத் தனிச்செங்கோல் செய்தருளி - நல்லகுடப்
122. பாம்பின் வாய்க் கைந்நீட்டிப் பாகவதர் மேற்பழிச்சொற்
றீம்பு கெடச் செய்தகுல சேகரனும் - ஆம்பரிசாற்
123. சென்று தமிழ்மதுரைத் தென்னன்பால் வாதியரை
வென்று கிழியறுத்த வேதியனும் - பொன்றாத
124. தேவர்கா ணப்பரனைச் சிந்தை விளக்கேற்றி
மூவராய்க் கண்ட முனிவரரும் - பூவணையாம்
125. பன்னாகப் பாய்சுருட்டிப் பச்சைமால் பின்னடக்க
முன்னாகக் சென்ற முதலோனும் — ஒன்னாரைத்

118. சின்னங்கள் - எக்காளங்கள். ஆர்ப்பு எடுப்ப - ஆரவாரத்தை மிகுவிக்க.
119. சேடத்திருப்புளி - ஆதிசேஷனாகிய திருப்புளி. மகிழ்த்தோடுற்ற மாலை - வகுளமாலை. மகிழ்த்தோடுற்றமாலைச்சுடர்ப்பரிதி - வகுளபூஷண பாஸ்கரராகிய சடகோபர். பீடு - பெருமை.
120. எகினப்புள் எனக் கூட்டுக. எகினப்புள் - அன்னம்.
121. கொல்லி - கொல்லிநகர், கோழி - உறையூர்.
122. தீம்பு - தீங்கு.
123. கிழி - பொன்முடிப்பு. வேதியன் - பெரியாழ்வார். பொன்றாத - அழியாத.
124. முனிவரர் - பொய்கையார் பூதத்தார், பேயார்.
125. பன்னகமென்பது பன்னாகமென்றாயது விகாரம். சென்ற முதலோன் என்றது திருமழிசையாழ்வாரை.
-----------------------------------------------

126. தோள் வலியாற் கொன்று தொலைத்தமால் மந்திரத்தை
வாள்வலியாற் கொண்டுகலி மாய்த்தோனும் — கோளரவிற்
127. பொன்னி நடுவே புளினத்துக் கண்டுயின்ற
தென்னரங்கர் நீண்முடியுஞ் சேவடியும் - முன்னுறவே
128. கண்டகண்கள் மற்றொன்று காணாதெனவே முன்
வண்டமிழிற் சொன்னமுனி வாகனனும் - விண்டடவி
129. வெள்ளி யுதித்து விடிபோதின் மாயோனைப்
பள்ளி யுணர்த்தியசொற் பாவலனும் - வெள்ளநீர்க்
130. கங்கை குடையமகிழ்க் கற்பகத்தைத் தென்றிசைக்கே
வெங்கதிர்போற் கண்டுவரு வித்தகனும் - பொங்குமறை
131. நாலா யிரந்தமிழும் நாவீறன் பாற்கேட்டு
மேலாய நாதமுனி வேதியனும் - நாலாய
132. பண்டை மறையிற் பதிந்திருந்த வுட்பொருளைக்
கொண்டுபா சண்டக் குறும்பறுத்து - விண்டுவே
133. மிக்கோ னெனவுலகில் வீறுபெற நூலுரைத்து
முக்கோல் பிடித்த முனிவரனும் - அக்கலையே

126. கலிமாய்த்தோன் என்றது திருமங்கையாழ்வாரை, கோளரவில் வலிய பாம்பில்.
127. பொன்னி - காவிரி. புளினம் - மணல்திடர்.
128. முனிவாகனன் - திருப்பாணாழ்வார்.
129. பள்ளியுணர்த்திய பாவலன் - தொண்டரடிப்பொடியாழ்வார்.
130. மகிழ்க்கற்பகம் - வகுளமாலையணிந்த கற்பகத்தைப்போல வரையாது
கொடுக்கும் வள்ளலாகிய சடகோபர். வித்தகன் என்றது மதுரகவியாழ்வாரை.
131. நாவீறன் - சடகோபர்
132. பாசண்டக்குறும்பு - வேதநிந்தனைசெய்யும் புறச்சமயிகளாகிய
பகைவரை.
133. நூல் - சீபாடியம் முதலியவை. முனிவரன் – இராமாநுசர்.
--------------------------------------------------

134. இங்கா தரிக்க வெழுபத்து நாலுமணிச்
சிங்கா தனத்திருந்த தேசிகரும் - அங்கவர்கள்
135. கூட்டிய தொண்டர் குழாங்கள் புடை நெருங்கி
ஈட்டு தமிழ் வேதத் திசைபாடத் - தோட்டிதழி
136. ஆகத்தா னான்முகனு மாறுமுக னுஞ்சேய
மாகத்தா னாம்வச் சிரத்தோனும் - வேககதிர்
137. ஆறிருவ ரோரிருவ ரானோர் பதினொருவர்
கூறுமிரு நால்வர் குழாங்களுடன் - பேறான
138. உம்பர் முனிவ ருரகேச ருஞ்சூழ்ந்து
செம்பதுமத் தாள்போற்றிச் சேவிப்பப் - பம்புதிரள்
-----------------------------------------------
134. தேசிகர் - ஆசாரியர்.
135. தொண்டர்குழாங்கள் அடியார் திருக்கூட்டமும், ஈட்டு - திரட்டித் தொகுக்கப்பட்ட தமிழ்வேதம் - ஆழ்வார்களுடைய அருளிச் செயல்கள்.
122-135. குலசேகரனும் (122), வேதியனும் (123), முனிவரரும் (124), முதலோனும் (125), கலிமாய்த்தோனும் (126), முனிவாகனனும் (128), பாவலனும் (129), வித்தகனும் (130), நாதமுனி வேதியனும் (131) முனிவரனும் (133), தேசிகரும் (134), தொண்டர் குழாங்களும் (135), தமிழ் வேதத்திசைபாட (135) என முடிக்க.
135-36. தோட்டிதழி ஆகத்தான் - இதழ்களையுடைய கொன்றை மாலையையணிந்த மார்பினையுடைய சிவபிரான். நான்முகன் - பிரமன். ஆறுமுகன் - முருகன். சேய் - நெடிதாகிய, மாகம் - விண்ணுலகு. வச்சிரத்தோன் - வச்சிராயுதத்தையுடைய இந்திரன்.
136-37. வேக கதிர் ஆறிருவர் - விரைந்து செல்லும் பன்னிரண்டு ஆதித்தரும். ஓர் இருவர் - ஒப்பற்ற இருவராகிய தேவமருத்துவரும். பதினொருவர் – பதினோரு ருத்திரரும். கூறும் - சொல்லப்படுகிற. இருநால்வர் - எண்மராகிய வசுக்களும். (என்றது முப்பத்துமுக்கோடி தேவர் தலைவராகிய முப்பத்துமூவரை. குழாம்- கூட்டம். பேறு - இலாபம்.
138. உம்பர் - தேவர். உரகேசர் - நாகர் தலைவர். செம்பதுமத்தாள் - செந்தாமரை மலர்போலும் திருவடிகளை. போற்றி - துதித்து. சேவிப்ப - வணங்க. பம்பு - ஆரவாரத்தையுடைய. திரள் - கூட்டமான.
-------------------------------------------------

139. ஆனை முகவமர ரைஞ்ஞூறு பேர்சூழச்
சேனை முதற்கடவுள் சென்றணுகி - வானோர்
140. திரண்ட குழுவைத் திருக்கைப் பிரம்பால்
இரண்டு புறமும் இயக்கச் - சுருண்டகுழல்
குழாங்கோள்.
141. நாக மடந்தையரும் நானிலத்தின் மாதர்களும்
போக புவியிலுள்ள பூவையரும் - மாகத்
142. தரம்பையரும் கின்னரர்கூட் டத்துமட வாரும்
வரம்பிகந்து தேர் மறுகில் வந்து - பரம்புகிளிக்
143. கூட்டங்கள் போன்றுங் குயிற்குழாம் போன்றுமளி
யீட்டங்கள் போன்றும் எழுந்திரைத்துத் - தோட்டுமலா
144. ஓதி சரிய வுடைநெகிழ மேகலையும்
பாதி சரியமுலைப் பாரத்தைச் - சீதமலர்க்
145. கையா லணைத்துக் கலைதாங்கிக் காமவேள்
கொய்யா மலர்வாளி கோத்திழுக்கப் - பொய்யாம்

139. ஆனைமுக அமரர் - ஆனைமுகத்தையுடை தேவர். ஐஞ்ஞூறு - ஐந்நூறு. சேனைமுதற்கடவள் - சேனைத்தலைவர்= விஷ்வக்ஸேநர். அணுகி - கிட்டி.
வானோர் - தேவர்.
140. இயக்க – செலுத்த; குழல் - கூந்தல்.
141. நாகமடந்தையர் - நாகலோகத்துப்பெண்கள். நானிலத்தின் மாதர்கள் - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று பகுக்கப்பட்ட நான்கு நிலத்திலும் வாழும் பெண்கள். பூவையர் - பெண்கள். மாகம் - தேவருலகம்.
142. மடவார் பெண்கள். வரம்பு இகந்து - எல்லைகடந்து. தேர் மறுகு - ரதவீதி,
பரம்பு - பரவிய
143. கூட்டம் குழாம் ஈட்டம் என்பன ஒருபொருட்கிளவிகள். அளி - வண்டு. இரைத்து - ஆரவாரித்து. தோட்டு - இதழ்களையுடைய.
144. ஓதி - கூந்தல். மேகலை - இடையணி. சீதம் - குளிர்ச்சி.
145. கலை - உடை. காமவேள் - மன்மதன். கொய்யாமலர்வாளி - பறிக்காத மலரம்பு.
--------------------------------------------------------------

146. இடையொடியு மென்றுசிலம் பேங்கவெழுந் தோடி
நடைதளர்ந்து தேர்மருங்கி னண்ணிப்- படியளந்த
147. தாளுந் திருவரையுந் தார்மார்புஞ் சங்காழித்
தோளுங் குழையுஞ் சுடர்முடியும் - மூளும்
148. கருணைத் திருமுகமுங் காராழி யன்ன
தருணத் திருவழகுந் தாங்கண் - டுருகியவர்
149. பேரழகு வெள்ளப் பெருக்காற்றி னின்றுமனம்
பேரவறி யாதயர்ந்து பேதுறுவர் - ஆரியரே!
150. கண்ணுதல்நஞ் சுண்ணக் கடலமுதந் தேவருண்ணப்
பெண்ணமுத முண்ட பெருமானே! - தண்ணார்
151. அருமா கடலமுதே! ஆதிப் பிரானே!
திருமா மகள்மருவுந் தேனே!- பெருமானே!
152. எண்ணில்பல கோடி யிடைமாதர் வாயமுதம்
உண்ணவுண்ணத் தித்தித் துவந்தீரே - நண்ணுப
153. னாறாயிரம் பெண்க ளார முலைக்களபச்
சேறாடி யாகம் திளைத்தீரே - பேறாக
154. எங்களிரு கொங்கை இடைக்கே யுமையணைத்துச்
செங்கை வளைநெரியச் சேரோமோ - பொங்குந்

146. சிலம்பு - நூபுரம்.
147. தாள் - திருவடி. குழை - காதணி = குண்டலம். சுடர்முடி - ஒளிபொருந்திய கிரீடம். மூளும் - பொங்குகின்ற.
148. கார் ஆழி - கருங்கடல். தருணம் - யௌவனம்.
149. பேர - பெயர. அயர்ந்து - சோர்ந்து. பேதுறுவர் - மயங்குவாராகி.
ஆரியரே - வணங்கத்தக்கவரே.
150. கண்ணுதல் - நெற்றியிற் கண்ணுடைய சிவபிரான். தண் ஆர் - குளிர்ச்சி பொருந்திய.
153. ஆரமுலை - மாலையணிந்த தனம். ஆகம் திளைத்தீர் - மார்பைக் கூடினீர்.
----------------------------------------------

155. திருப்பவள வாயமுதந் தித்திக்க மாந்தி
யிருப்பவெமைக் கண்பார்த் திரங்கீர் - பொருப்புநிகர்
156. கச்சுப் பொதிமலையிற் காமவே ளம்புபட்ட
பச்சைப் பசும்புண்ணைப் பாரீரோ - நச்சரவின்
157. ஏழ்மரமு மோரம்பா லெய்தீரே யன்றில்வாழ்
பாழ்மரத்தை யெய்தாற் பழியாமோ - சூழ்கின்ற
158. வோசைக் கடலடைத்தீ ரொண்ணுதலுக் காகவெங்க
ளாசைக் கடலடைத்தா லாகாதோ - நேசித்த
159. கூனிக் கழகு கொடுத்தணைந்தீ ரெம்முடைய
மேனிக் கழகழித்து விட்டீரே - சானகிக்காய்ப்
160. பாரச் சிலையொடித்தீர் பஞ்சபா ணன்கருப்பு
வீரச் சிலையொடித்து மேவீரோ - ஆரத்
161. திருக்குழலோ சைக்குருகுஞ் சிந்தயந்தி யாகா
திருக்கின்றோம் யாமினிக்கென் செய்வோம் - முருக்கிதழ்வாய்

155. மாந்தி - உண்டு. பொருப்பு - மலை. நிகர் - ஒத்த.
156. கச்சு - ரவிக்கை. பொதி - மறைத்த, நச்சரவு - விடப்பாம்பு.
157. இதனுள், இராமாவதாரகாலத்துச் சுக்கிரீவன் வேண்ட ஏழு மராமரங்களையும் ஓரம்பால் எய்த வரலாறு பேசப்பட்டது. அன்றில் - ஒரு பறவை விசேடம். இதன் தொனி காதலரைப்பிரிந்தார்க்குத் துன்பஞ்செய்யும். பாழ்மரமென்றது இங்கே பனையை.
158. ஒண்ணுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய சீதாபிராட்டி.
159. கூனிக்கு அழகுகொடுத்து அணைந்தது கிருஷ்ணாவதாரத்தில்.
160. பாரச்சிலை - கனத்தவில்; பெரியவில்லுமாம். பஞ்சபாணன் - மன்மதன். கரும்புச்சிலை வீரச்சிலை யென இயைக்க. கரும்பு கருப்பு என்றானது வலித்தல் விகாரம்.
161. சிந்தயந்தி - கண்ணனிடத்தில் காதல்கொண்ட ஒரு கோபகன்னிகை. யாமினி - இரவு. முருக்கு - செம்முருக்கமரம். இதன் பூவிதழை அதரத்துக்கு உவமை கூறுவது மரபு.
-------------------------------------------------

162. ஊதுகுழ லோசை யுயிருண்ணும் உம்முடைய
சீதமுக மாவி சிதையாதோ - ஆதரவாய்த்
163. தேரேறி வந்து செருச்செய் தொருத்தியிரு
வாரேறு கொங்கை மணந்தீரே - போரேறிப்
164. பாயுமெரு தேழடர்த்துப் பாவை யொருத்திகனி
வாயமுத முண்டு மகிழ்ந்தீரே - சேயிழையார்
165. தங்க ளுறவு தவிர்ந்தீரே யாசைகொண்ட
எங்களையுங் கண்பார்த் திரங்கீரோ - துங்கமுலை
166. மானார்க ளின்ப மறந்தீரோ வெம்மைவிட்டுப்
போனாலு மும்மைவிட்டுப் போவோமோ - நானிலத்தி
167. லூரார் மகளிர் ஒருகோடி பெண்களுக்குந்
தீராத வா … … தேவரீர் - மார்பிறுகப்
168. புல்லிக் கிடந்து புளக முறாக்கொங்கை
கல்லிக் கிழங்கெடுத்துக் காட்டாமோ - கல்லுக்கு
169. நேரான வும்முடைய நெஞ்சிற் கொடுமையெல்லாம்
ஊராரறிய வுணர்த்தோமோ - ஆராத
170. மோகமுடன் வந்தவளை மூக்கரிந்து காதரிந்து
சோகமுட னோடத் துரந்தீரே - வேகமொடு
171. தாயாகி வந்துமுலை தந்தவளை யாவியொடும்
வாயார வுண்டு மகிழ்ந்தீரே - மாயாத

162. ஆதரவாய் - விருப்புற்று.
163. ஒருத்தியென்றது உருக்குமிணியை. இருகொங்கை, வார் ஏறு கொங்கை என இயைக்க. கொங்கை - தனம். வார் - கச்சு.
164. எருது ஏழடர்த்து - ஏழு காளைகளை வலியழித்து. பாவை ஒருத்தி - நப்பின்னைப்பிராட்டி.
167. மூலத்திற் சிதைந்த பகுதி புள்ளியிட்டுக் காட்டப்பட்டது.
168. புல்லி - தழுவி. புளகம் - மயிர்க்கூச்சு. கல்லி - கிளைத்து
169-170. ஆராத - தணியாத, மோகமுடன் வந்தவள் - சூர்ப்பநகை. துரந்தீர் - ஓடச்செய்தீர்.
171. முலைதந்தவள் – பூதனை.
-----------------------------------------------

172. பண்பழியுந் தாடகையைக் கொன்றபழி போலெமது
பெண்பழியுங் கொள்ளப் பிறந்தீரோ - விண்பிறந்த
173. திங்களுக்கு மன்றிலுக்குந் தென்றலுக்கும் மாரனுக்குங்
கங்குலுக்கு மாவி கரைவேமோ - எங்கட்
174. கிரங்கீ ரிரங்கீ ரெனவுருகி மார
சரங்கோடி கோடியாச் சார- நெருங்குதன
175. பாரத்தை நோக்கிப் பதைத்தார் படைமாரன்
வீரத்தை நோக்கி வெதுப்புற்றார் - காரொத்த
176. நீலமணி முத்தும் நிரைராசிப் பைம்பொன்னுங்
கோலமணிச் செப்பிடையே கொட்டினார் - மாலுழந்து
177. கைவா ரணமுங் கலையுஞ் சிறுபுலியூர்ச்
செய்வா ரணமறுகு சேர்வித்தார் - பைய
178. நடந்தபடி கண்டு நடுங்கினார் வேளும்
தொடர்ந்து கணைமாரி தூர்த்தான் - தடந்தேரில்
179. ஆய்ப்பாடி மாத ரழுங்கமது ராபுரியிற்
போய்ப்பா வையர்மகிழப் புக்கதுபோற் - பாப்பணைமால்

172. விண் - ஆகாயம்.
173. திங்கள் - சந்திரன். மாரன் - மன்மதன். கங்குல் - இரவு.
174. மாரசரம் - மன்மதபாணம்.
176. கோல மணிச்செப்பு - அழகிய மணிகள் பதித்த செப்புப்போலும் தனம்.
மால் உழந்து - காமத்தால் வருந்தி.
177. கைவாரணம் - கைவளை. கலை - மேகலை. செய்வாரண மறுகு -
அலங்கரிக்கப்பட்ட யானைசெல்லும் வீதி.
178. வேள் - மன்மதன். கணைமாரி - அம்புமழை.
178-79. ஆய்ப்பாடிமாதர் அழுங்கத் தடந்தேரிற்போய் மதுராபுரியிற் பாவையர் மகிழப் புக்கதுபோல் எனக் கூட்டுக. தடம் தேர் - பெரிய தேர். அழுங்க - வருந்த. பாப்பணை - பாம்பணை; வலித்தல்விகாரம். மால் - புலியூர்த்திருமால்.
----------------------------------------------------

180. வீதி கடந்து மற்றோர் வீதிநடந் தார்வேளுங்
கோதை வரிவிற் குனித்தகன்றான் - பேதை
பேதை.
181. ஒருத்தியிளந் தென்ற லுருவிலா னம்பு
வருத்தியறி யாதமட மஞ்ஞை - அருத்தி
182. விளையாத தேறல் விலைபடா முத்தம்
கிளையா வமுத கிரணம் - முளையா
183. முளைக்கின்ற கொங்கை முகங்காட்டி யாசை
விளைக்கின்ற பேரழகு வெள்ளம் – வளைத்தொசிந்து

180. கோதை வரி வில் - மாலைசூட்டிய கட்டமைந்த வில். குனித்து - வளைத்து.
113-180. திருத்தேர் ஏறியருளி, குடைநிழற்ற, கோதையர் பல்லாண்டிசைப்ப, கவரியசைப்ப (114), பணிலம் முழங்க, பல்லியங்கள் ஆர்ப்ப, பேரிநிரைகொட்ப (115), சின்னங்கள் ஆர்ப்பெடுப்ப (118), போற்றி வர (120), தமிழ்வேதத்திசைபாட (135), சேவிப்ப (138), சூழ (139), இயக்க (140), மடந்தையரும் மாதர்களும் பூவையரும் (141) அரம்பையரும் மடவாரும் (142) மறுகில்வந்து (142), இரைத்து (143), அணைத்து, தாங்கி (145), ஓடி, தளர்ந்து, நண்ணி (146), கண்டு, உருகி (148), அறியாது, அயர்ந்து பேதுறுவாராகி (149), பெருமானே! (150), அமுதே! ஆதிப்பிரானே! தேனே! பெருமானே! (151), இரங்கீர் (155), பாரீர் (156), இரங்கீர் என உருகி (174), பதைத்தார், வெதுப்புற்றார் (175), கொட்டினார் (176), சேர்வித்தார் (177), நடுங்கினார் (ஆக 178) மால் மற்றோர்வீதி நடந்தார் (180) என வினைமுடிவு கொள்க.
181. இளந்தென்றலும் உருவிலானம்பும் என உம்மை விரிக்க. உருவிலான் - மன்மதன். மஞ்ஞை - மயில், பேதை காதலரும்பாத இளம் பருவத்தினளாதலால் தென்றலாலும் காமபாணங்களாலும் வருந்தாதவள் என்றபடி. பேதையின் சிறப்புத்தொனிக்க, அவளை மஞ்ஞை, தேறல், முத்தம், அமுதகிரணம் (182), அழகுவெள்ளம் (183), மலர்க்கொம்பு, மாலை (184) என உருவகவாய்பாட்டாற் கூறினார்.
181-182. அருத்தி விளையாத தேறல் - (இளைஞருள்ளத்தில்) காதலையுண்டாக்காத தேன், கிளையா - நிறைவடையாத. கிரணம் - கதிர்.
182-183. முளையா முளைக்கின்ற - தோன்றாமல் தோன்றுகின்ற = சிறிதே தோன்றுகிற, முளையாது என்பது ஈறுகெட்டு முளையா என நின்றது. ஒசிந்து - அசைந்து.
--------------------------------------------

184. வாடாத செவ்வி மலர்க்கொம்பு வம்பவிழ்ந்து
சூடாத சாதித் துணர்மாலை - நாடாது
185. தன்பிறந்த தாதை தலையோடு கொண்டவன்போல்
முன்பிறந்து பின்பிறந்த மூரலாள் - முன்புகரி
186. காத்தவனை யேத்தார் கவியின் பயன்போலக்
கோத்து முடியாக் குழலினாள் - வாய்த்தெடுத்த
187. கைத்தாய் குடங்கையுங் காதலித்துப் பெற்றதாய்
கைத்தா மரையுமன்றிக் கண்டுயிலாள் - மெய்த்தனுவைக்
188. கண்ணாடி யூடுகண்டு கைவிளித்து ……… …….
……. ... மென்றழைத்துப் பேசுவாள் - விண்ணோர்
189. பெருமான் றிருநாமம்... …………………கு
வருமாறு சொல்லுவித்த வண்ணம் - திருமாது
190. பாவைக்கும் பச்சைப் பசுங்கிளிக்குந் தான்வளர்த்த
பூவைக்கும் வேறிருந்து போதிப்பாள் - ஓவாத

184. செவ்வி - பருவம். வம்பு அவிழ்ந்து - நறுமணம் விரிந்து. சூடாத - அணியப்படாத. சாதித்துணர்மாலை - உயர்ந்த பூங்கொத்துக்களால் தொடுக்கப் பட்ட மாலை. நாடாது - ஆராயாமல்.
185. தன் தாதை, பிறந்த தாதை எனக் கூட்டுக. தன்னுடைய பிறவிக்குக் காரணமாகிய தந்தை = பிரமன். தாதை தலையோடு கொண்டவன் – பிரம கபாலத்தைக் கைக்கொண்ட சிவபிரான். முன்பிறந்து பின்பு இறந்த - முன்னே தோன்றிப் பின் நெறிகடந்த. மூரல் - பல். கரி - யானை = கஜேந்திரன்.
186. கரிகாத்தவன் - திருமால். கோத்து - இணைத்து. குழல் - கூந்தல்.
187. கைத்தாய் - செவிலி. குடங்கை - உள்ளங்கை. தனு - உடல்.
188. விளித்து - அழைத்து.
188 – 189. மூலத்திற் சிதைவுற்றபகுதி புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பின்னும் இவ்வாறு காட்டப்பட்டது.
190. பூவை - நாகணம்புள். ஓவாத - கெடாத.
------------------------------------------

191. கன்னற் புதிய கணுமுத்துங் கார்க்கழனிச்
செந்நெற் பொதிந்த செழுமுத்தும் - பின்னித்
192. திரையெறியுந் தண்பொருளை சேர்முத்துந் தெண்ணீர்
கரையெறியுங் காவேரி முத்தும் - விரவிமணி
193. முற்றிலுந் தூதையுங் கொண்டு முகந்துய்த்துச்
சிற்றி லிழைத்துத் தெருவீதிப் - பொற்றொடியார்
194. பண்ணையில் வண்டல் பயில்காலை யிற்புலியூ
ரண்ண லருமா கடலமுதம் - பண்ணமைந்த
195. தேரிற் பெரிய திருவடிமேற் றோன்றுதலும்
பாரிற் பணிவா ரொடும்பணிந்தாள் - ஆர்வத்தால்
196. அம்மனைமீ ரெம்பிரான் ஆகத் தணிமணியைத்
தம்மினென வாங்கித் தருகவென்றாள் - அம்மனே
197. பத்துருவங் கொண்ட பரந்தாம னார்படைக்குஞ்
சித்துருவம் வாங்கவெளி தேயென்றார் - முத்தனார்

191. கன்னல் - கரும்பு. கார்க்கழனி - பெரிய வயல். பொதிந்த - மறைந்து தங்கிய.
192. திரை - அலை. பொருநை - தாமிரபரணிநதி. தெண்ணீர் - தெளிந்தநீர். விரவி - கலந்து மணி - அழகிய.
193. முற்றில் - சிறுசுளகு. தூதை - மண் மரம் முதலியவற்றான் இயன்ற சிறுமியர் விளையாட்டுக்குரிய கருவிகளில் ஒன்றான சிறுகலம். முற்றிலும் தூதையும் கொண்டு முகந்துய்த்து - முற்றிலாலும் தூதையாலும் அள்ளிச்சொரிந்து. சிற்றில் இழைத்து - சிறுவீடுகட்டி.
193 – 94. பொன்தொடியார் பண்ணையில் - பொன்னாற் செய்யப்பட்ட வளையணிந்த மகளிர்கூட்டத்தில். வண்டல்பயில்காலை - விளையாடுங்காலத்து. பண் - ஒப்பனை.
195. பெரியதிருவடி - கருடன், ஆர்வம் - அன்பு.
196. அம்மனைமீர் - தாய்மார்களே! எம்பிரான் ஆகத்தணி மணி - கவுத்துபம். ஆகம் - மார்பு. தம்மின் - தாரும். அம்மனே - தாயே!
197. பத்துருவம் - தசாவதாரம். பரந்தாமன் - திருமால். சித்துருவம் - அறிவுரு. எளிதே - எளியதாகுமா? முத்தன் - கட்டற்றவனாகிய திருமால்.
-----------------------------------------

198. மார்பி லிருந்த வனசத் திருவுடனே
சேரவிளை யாடவென்னைச் சேருமென்றாள் - நேரிழையாய்
199. அண்டந் திரண்முத்த மாகவடு சோறமைத்து
வண்ட லிழைக்குமொரு வல்லிகாண் - பண்டைமறை
200. தேடியுங்கா ணாதவளைத் தீண்டலெளி தோவென்றார்
சூடவன மாலைதரச் சொல்லுமென்றாள் - பீடுடையான்
201. பன்மாத் திரளண்டம் பண்ணுதற்குக் காரணமாந்
தன்மாத் திரையான தாரென்றார் - அன்னைமீர்
202. மன்றலையில் வைத்த மணிமுடிவாங் கிச்சற்றே
தன்றலையில் வைக்கத் தருகவென்றாள் - ஒன்றறியா
203. மின்னே யுபய விபூதிதனை யாளுதற்கு
முன்னே யமைத்த முடியென்றார் - மின்னனையாள்
204. ஊற்றுவழி கண்ணீ ரொழுகநின்றா ளம்மனைமார்
போற்றி யெடுத்தணைத்துப் போயினார் - கீற்றுவரிச்

198. வனசத்திரு - தாமரைமலரிலுள்ள இலக்குமி.
199. அண்டம் - உலகம். அடுசோறமைத்து – சிறுசோறட்டு; வண்டல் - மகளிர் விளையாட்டு.
200. வனமாலை - துழாய்மாலை. பீடு - பெருமை. பீடுடையான் - பெருமை யுடையவனான சிறுபுலியூர்த் திருமால்.
201. பன்மாத் திரள் அண்டம் பண்ணுதற்கு பலவாகிய பெரிய அண்ட கோளங்களைப் படைத்தற்கு. தன்மாத்திரை - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற மூலப்பொருள்களின் அடையாளம். தார் - மாலை.
202. மன் - சிறுபுலியூர்த்திருமால்.
203. உபயவிபூதி - நித்தியவிபூதியும் லீலாவிபூதியும்.
181-204 பேதையொருத்தி மூரலாள் (185), குழலினாள் (186) கண்டுயிலாள் (187), பேசுவாள் (188). போதிப்பாள் (190), ஆகி, கன்னல்முத்தும் செந்நெல்முத்தும் (191), பொருநை முத்தும் காவேரி முத்தும் (192), முற்றிலும் தூதையும்கொண்டு முகந்துய்த்துச் சிற்றிலிழைத்து வீதியில் (193), தொடியார்பண்ணையில் வண்டல் பயில்காலை, அருமாகடலமுதம் தோன்றுதலும் பணிந்தாள் (194-195), தருகவென்றாள் (196), சேருமென்றாள் (198), சொல்லுமென்றாள் (200), தருகவென்றாள் (202), ஒழுகநின்றாள் (204) என வினைமுடிவுகொள்க,
--------------------------------------------

205. சங்க முழங்கத் தடந்தேரி னிற்புலியூர்
எங்கள் பெருமானு மேகினார் - அங்கசனும்
206. தேவாதி தேவன் றிருத்தோருடனடந்து
பூவாளி பூட்டாம .... முற்றும் - மூவாப்
பெதும்பை.
207. பெதும்பை யொருத்தி பெருகவிருங் காத
… ... ழைகொண்டாள் - கதம்பயில்போர்.
208. ஈரான் பதுநா ளிழைத்தகளம் … … …
காரொன்று தாமக் கருங்குழலாள் - மாரவேள்
209. மட்டுப் பொதிந்த மலர்க்கமல வாளியுரம்
பட்டுப் படாத பருவத்தாள் - நெட்டிலைய
210. பூங்கரும்பன் சூதம் பொருதற்கு நாட்பார்க்க
வாங்கரும்பித் தோன்று மணிமுலையாள் - பாங்கரும்பு
211. நாணு நிறையு நடையழகு மெய்யெழிலுங்
காணுமொரு தோற்றமுள்ள காட்சியாள் - வேணவா

204-205. கீற்று உவரிச்சங்கம் - வரிகளையுடைய கடற்சங்கு. அங்கசன் - மன்மதன்.
207. பெதும்பை - 8வயதின்மேற் 11 வயது வரையுள்ள பெண். கதம் பயில் - சினம் மிக்க.
208. கார் ஒன்று - மேகத்தையொத்த. தாமம் - குழவிற்சூட்டும் மாலை. குழல் - கூந்தல், மாரவேள் - மன்மதன்.
209. மட்டுப்பொதிந்த - தேனைத் தன்னுட்கொண்ட. கமலமலர் வாளி – தாமரைப் பூவாகிய அம்பு. உரம் - மார்பு. கமலமலர்வாளி யுரம் பட்டுப் படாத பருவத்தாள் எனவே, சிறிதே காமம் அரும்பிய நிலையினள் என்றவாறாயிற்று. நெட்டிலைய - நீண்ட இலைகளையுடைய
210. பூங்கரும்பன் - பொலிவுமிக்க கரும்புவில்லையுடைய மன்மதனது; சூதம் - தேராகிய தென்றல். பொருதற்கு - (பெதும்பையைத்) தாக்குதற்கு; ஆங்கு - அப்பொழுதே. அரும்பி - மொட்டின் தன்மையுடையதாகி. பாங்கு அரும்பும் - நன்றாக உண்டாகிய.
211. நிறை - கற்பு. மெய்யெழில் - உடலழகு.
-------------------------------------------

212. மார்க்கமுஞ் சூதும் மதன்கலையும் வந்துவந்து
பார்க்கும் விரகப் படைவிழியாள்- போர்க்காம
213. வேளாக மத்தை விரிக்குமட வார்குழுவில்
வாளா விருந்து மனக்கொள்வாள்- நாளமலர்
214. அன்னமு மானுங் கிளியு மணிமயிலும்
துன்னிய பூவையுந் தோழியரும் - பின்னேகச்
215. சக்கர தீர்த்தத் தடஞ்சோலை மண்டபத்திற்
புக்கிருந்து மாறன் புகழ்பாடி-மிக்க
216. திருமா மகளருளின் சீர்பாடி யாதி
அருமா கடலமுதை யார்ந்து - பெருமான்சீர்த்
217. தென்னரங்கம் பாடித் திருவேங் கடம்பாடி
மன்னுபுகழ்க் கச்சி வளம்பாடி - யின்னபதி
218. நூற்றெட்டும் பாடி நுவன்ற தமி ழாழ்வார்கள்
போற்றிட்ட வேதப் புகழ்பாடித் - தோற்றும்

211-12. வேணவா மார்க்கம் - வேட்கைப்பெருக்கின் நெறி. மதன் கலை - காமநூல்.
விரகம் - காமநோய். படை விழி - வாளாயுதம் போன்ற கண்.
212-13. போர்க் காமவேள் ஆகமத்தை - கலகஞ்செய்கின்ற மன்மதனுடைய காமநூலை. விரிக்கும் - விளக்கிப்பேசும். மடவார்குழுவில் - மகளிர்கூட்டத்தில். வாளா இருந்து - பேசாதுதங்கி. மனக்கொள்வாள் - மனத்துக்கொள்வாள். வேளாகமத்தை மனத்துக்கொள்வாள் என்க. நாளம் - தண்டு.
214. அணி - அழகிய துன்னிய - நெருங்கிய பூவை - நாகண வாய்ப்புள். பின் ஏக - பின்வர,
215. சக்கரதீர்த்தம் - சிறுபுலியூரிலுள்ளதொரு புண்ணிய தீர்த்தம். இந்நூலின் 27- ஆங்கண்ணி பார்க்க. மாறன்புகழ் - மால் தன் புகழ் = திருமால்சீர். தன் சாரியை.
216. திருமாமகள் - இலக்குமி. ஆதி உலககாரணனாகிய. அருமா கடல் - சிறுபுலியூர்த் திருமால். ஆர்ந்து - குணானுபவம்பண்ணி.
217. கச்சி - காஞ்சீபுரம். இதனுள் அரங்கம் வேங்கடம் கச்சி என்ற மூன்றும் சிறப்புடைமைபற்றி முற்கூறப்பட்டன. இன்ன - இப்படிப்பட்ட
217-218. பதி நூற்றெட்டும் - நூற்றெட்டுத் திருமால்பதிகளும். நுவன்ற - பேசிய.
-----------------------------------------------

219. திருமா லெடுத்த திருவவதா ரத்தின்
பரியாய முள்ளதெல்லாம் பாடித் - திருமால்
220. இடங்கை வலம்புரியோ டேய்ந்தவளை முத்தம்
குடங்கை தனிலெடுத்துக் கொண்டு - தடங்கா
221. அரங்க விமானமென்ன வானவெழுத் தொன்றும்
இருங்குறளாய் நீண்ட விரண்டும் - நெருங்குபதம்
222. மூன்று மதனை மொழியு மறைநான்கும்
ஆன்றபொரு ளைந்தும் பதமாறும் - தோன்றுதிரு
223. வாசிரிய மேழுங் கழங்காடிப் பாடுதலும்
பூசுரர்க ளாசி புகழ்ந்தேத்தத் - தேசுபொலி

219. பரியாயம் - பிறிது.
220. இடங்கை வலம்புரியோடு ஏய்ந்த வளைமுத்தம் - இடக்கையிலே யுள்ள வலம்புரியோ டொப்புமைவாய்ந்த சங்கத்திற்பிறந்த முத்தினை. குடங்கை - அகங்கை = உள்ளங்கை. தடம் கா பெரிய சோலை (சூழ்ந்த).
221. அரங்க விமானமென ஆன எழுத்து ஒன்று என்றது பிரணவத்தினை. அரங்கவிமானம் ஓம் என்னும் பிரணவவடிவமைந்ததாதலின். இரும் - பெருமையுடைய. குறளாய் நீண்ட இரண்டும் - குறளுருவாய் நீண்ட த்வயமும். த்வயமென்பது (1) ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே (2) ஸ்ரீமதே நாராயணாயநம: என இரண்டு வாக்யமாக அமைந்ததனைக் குறிக்கும்.
222. பதம் மூன்று என்றது இங்கே 'ஓம் நமோ நாராயணாய' என்ற மூன்று சொற்களை. ஆன்ற - நிறைவுடைய. பொருள் ஐந்தென்றது அர்த்த பஞ்சகத்தை. அர்த்தபஞ்சகமாவன :- இறைநிலை, உயிர்நிலை, உயிர் இறைவனை யடையுமாறு, விரோதிநிலை, புருஷார்த்தநிலை என்பன. பதம் ஆறு என்றது ஆறுஆறு சொற்களால் பூர்வகண்டமாகவும் உத்தரகண்டமாகவும் பிரித்துரைக்கப்பட்ட சரமசுலோகத்தை.
222-23. சடகோபர் அருளிய திருவாசிரியத்துள் திருமந்த்ரம் த்வயம் சரமஸ்லோகம் என்கிற ரகஸ்யத்திரயத்தாலும் சொல்லப்படும் பொருளனைத்தும் புலப்படுதலின் "எழுத்தொன்றும் … … பதமாறும் தோன்று திருவாசிரியம்" என்றார். கழங்கு - கழற்காய். பூசுரர் பார்ப்பார். ஆசி - வாழ்த்து. தேசுபொலி - விளக்கம் மிக்க.
207-223. குழலாள் (208), பருவத்தாள் (209), முலையாள் (210) காட்சியாள் (211), விழியாள் (212), கொள்வாள் (213), ஆகிய பெதும்பை
---------------------------------------

224. யம்பொன் மணித்தேரில் அஞ்சனைசெல் வன்பிடர்மேல்
எம்பெருமான் வீதி யெழுந்தருள - நம்புமனக்
225. காதல...... கழங்கா டலையொழிந்து
மாதருடன் சென்று மறுகணைந்து - சீதரனார்
226. தோளும் சுடர்முடியுஞ் சோதித் திருமுகமும்
தாளுஞ் சிலம்புந் தடமார்பும் - நாளு
227. … … … புயமு மெங்களரு மாகடல் பேரழகும்
பருகுவபோற் கணின்றிருமார்பி?
228. … … … … … … ...
லெண்கவரு மந்தமறு வேதென்றாள் -- தண்கடல் சூழ்
229. இந்த … … தை யெம்பெரு மாட்டிதனக்
கந்தப் புரமா யமைந்ததென்றார் - பைந்தொடியார்
230. சொல்லு மளவிற் சுருதிப் பறைகறங்கப்
பல்லியங்க ளார்ப்பப் பரந்தாமன் - மெல்லியலை
231. மெள்ள நகைத்து விழியாற் கடைக்கணித்துப்
புள்ளரயன் றேர்வீதி போந்தகன்றான் - மெள்ளமதன்

யொருத்தி (207), புக்கு இருந்து பாடி (215-16), ஆர்ந்து (217), பாடி (217-219) கொண்டு, (220), கழங்காடி, திருவாசிரியம் ஏழும் பாடுதலும் (223) என முடிக்க.
224. அஞ்சனைசெல்வன் - சிறியதிருவடி = அநுமான்.
225. மறுகு - வீதி. சீதரன் ஸ்ரீதரன் = திருமகளை (மார்பில்) தரித்தவன். ஆர் சிறப்புக்குறித்து நின்றது.
226. சுடர்முடி - ஒளிர்கின்ற கிரீடம். தடம் - பெரிய.
229. எம்பெருமாட்டியென்றது திருமகளை. அந்தப்புரம் - உள்வீடு. மகளிர் இருக்கை. பைந்தொடியார் - பசுமையான (பொன்னாலாகிய) வளைகளை
யணிந்த மகளிர்.
230. சுருதிப்பறைகறங்க - வேதமாகிய பறை முழங்க. பல் இயங்கள் ஆர்ப்ப - பலவகை வாத்தியங்களும் ஒலிக்க. பரந்தாமன் என்றது சிறுபுலியூர்த்
திருமாலை. மெல் இயலை - மென்மைத்தன்மையுடையவளாகிய பெதும்பையை.
231. கடைக்கணித்து - கருணைசெய்து. மதன் - மன்மதன்.
-----------------------------------

232. கொய்தமலர்ப் பூங்கணையிற் கோலமலர் வாளியொன்றும்
எய்து தொடைமடக்கி யேகினான்—செய்யமுகைக்
மங்கை
233. கொங்கை மடவார் குழுவிற் குயில்போலும்
மங்கை யொருத்தியிள வஞ்சியாள் - செங்கை
234. வரிசிலைவே ளுக்கு மதனகலை யெல்லாம்
தெரியவுரை யிட்டுணர்த்துந் தெய்வம் - பிரியாக்
235. கொலையுங் களவும் கொடுவிடமுங் காமக்
கலையுங் குடிகொண்ட கண்ணாள் - அலையெறியும்
236. பேரழகு வெள்ளப் பெருக்கில் விளையாட
மாரனுஞ் செவ்வி மடமானும் - சீரியகைக்
237. கொண்ட குடம் போலுமிரு கொங்கையா ளுந்திமலர்
வண்டொழுக்க தாம்ரோம வல்லியாள் - கண்டோர்

232. கொய்த - பறித்த. கோல மலர் வாளி ஒன்றும் எய்து - அழகிய தாமரைமலராகிய அம்பொன்றினையும் பிரயோகித்து. பெதும்பைப்பெண் காதல் சிறிதேயரும்பும் பருவத்தினளாதலின் அவள் கண்ட தலைவன் நினைவை யெழுப்பும் தாமரை மலரம்பு ஒன்றைமட்டும் எய்து என்றார். 'நினைக்கும் அரவிந்தம்' என்பவாகலின். தொடை - அம்புதொடுத்தலை. மடக்கி - நிறுத்தி. ஏகினான் - சென்றான். செய்ய - செம்மையுடையவாகிய. முகை - மொட்டு.
225- 231. பெதும்பை கழங்காடலையொழிந்து, சென்று, அணைந்து (225), என்றாள் (228) ஆக, பைந்தொடியார் என்றார் (229), பைந்தொடியார் சொல்லுமளவில் (230), பரந்தாமன் நகைத்து, கடைக்கணித்து, அகன்றான் (231) என முடிக்க.
233. கொங்கை - தனம். மடவார்குழுவில் – பெண்கள் கூட்டத்தில். வஞ்சி - கொடி.
234. வரிசிலை - கட்டமைந்தவில். மதனகலை - காமநூல். உரையிட்டு -
விரிவுரைசெய்து.
236-37. மாரன் - மன்மதன், செவ்வி மட மான் - அழகும் இளமையும் வாய்ந்த மான் போல்பவளாகிய இரதி. மதனனும் இரதியும் அழகாகிய வெள்ளப்பெருக்கில் நீந்துதற்குக் கொண்ட குடங்கள்போலும் இரண்டு கொங்கைகளையுடையாள் என்றபடி. உந்திமலர் - கொப்பூழ்த்தாமரை. உந்தியாகிய தாமரையின் கட்செல்லும் வண்டின் வரிசை போன்ற உரோமவல்லி யினையுடையாள் என்க. ஒழுக்கது - ஒழுக்கு; அது நிலைமொழிப்பொருட்டு. வல்லி – கொடி.
-------------------------------------------------

238. மனங்கவருஞ் சோதி வதனத்தாள் வெற்றி
யனங்கன்முடி சூடுமபி டேகம் - அனங்கன்
239 படைக்குடைந்த காமுகர்கண் பார்க்கினிலம் பார்த்துக்
கடைக்கணிட்டு நோக்கியகள் ளத்தாள்- விடைக்கொடியோன்
240 நெற்றி விழியழலி னீறான வேடனுக்கு
வெற்றி கொடுக்கும் விரகினாள் - முற்று நீ
241 ராசை யளவி லடங்காம லாடவர்தம்
ஆசை யெனப்பரந்த வல்குலாள் - கேசவனை
242 யல்லாத தேவ ரளித்தவரம் போற்சிறிதும்
இல்லாது தேய்ந்த விடையினாள் - எல்லையில்லாத்
243 தோழியருந் தானுமொரு சோலையிடத் தேகிமணி
யாழி வண்ணன் பேரா யிரம்பாடிக் - கேழ்கிளரும்
244 நித்திலப்பூங் கொத்து நிரைத்தமணிப் பந்தெடுத்துக்
கைத்தல மேந்திக் கனங்குழையாள் - சித்ரமுலைச்

238. வதனம் - முகம். அபிடேகம் - கிரீடம். அநங்கன் - அங்கமில்லாதவன் = மன்மதன்.
239. படைக்கு - படையால்; உருபுமயக்கம். உடைந்த – தோல்வியுற்ற; காமுகர் - காமநோயுடையார். விடைக்கொடியோன் - இடபக் கொடியுடைய சிவபெருமானுடைய.
240. அழலின் - நெருப்பினால். நீறு - சாம்பல். வேடனக்கு - வேள் - தனக்கு = மன்மதனுக்கு; தன் சாரியை. விரகு - அறிவு. நீர்முற்றும் என மாறிக்கூட்டிக் கடலாற் சூழப்பட்ட எனப் பொருள்கொள்க.
241. ஆசை - திசை. ஆசை - விருப்பம். அல்குல் - நிதம்பம், கேசவன் - திருமால்.
233-42. வஞ்சியாள் (233), தெய்வம் (234), கண்ணாள் (235), கொங்கையாள், ரோமவல்லியாள் (237), வதனத்தாள் (238), கள்ளத்தாள் (239), விரகினாள் (240), அல்குலாள் (241), இடையினாள் (242), ஆகிய மங்கையொருத்தி (233) என இயைக்க.
243. மணி – அழகிய; ஆழிவண்ணன் - கடல்வண்ணன் = திருமால்.
கேழ்கிளரும் - நிறம் விளங்குகின்ற.
244. பூங்கொத்துநிரைத்த மணி நித்திலப்பந்து என மாறிக் கூட்டிப் பூங்கொத்துக்கள் வரிசையாக வரையப்பட்ட அழகிய முத்துப்பந்து எனப் பொருளுரைக்க. கனங்குழை என்றது மங்கையை.
-----------------------------------------------

245. செப்புக் குவமை சிறந்ததிது வோவென்று
தப்பிப்... டிக்குந் தன்மைபோல் - மொய்ப்பவரி
246. வண்டு துதைந்து … … …. …
கொண்டை யவிழ்ந்து குலைந்திட - வண்டு
247. கரங்களி னின்று கலன்கல னென்று
நிரந்தொலி பம்ப நிமிர்ந்து - நெருங்கு
248. குரும்பை நிகர்ந்து குவிந்தெழு கொங்கை
யரும்பு குலுங்க வசைந்து - மருங்குல்
249. வருந்தி யொடுங்கி வளைந்திறு மென்று
புரிந்து சிலம்பு புலம்ப - நிரந்த
250. இருங்குழை தண்ட வெறிந்து மறிந்து
கருங்குழல் சென்று கடந்து - திரும்பிய
251. கண்கள் சிவந்து கலந்த நலந்தரு
வண்கை சிவந்து வருந்திட - நண்பில்
252. எழுந்து மறிந்து விழுந்தெழு பந்தை
அழுந்து கரங்கொ டறைந்து - சுழன்று
253. பதங்கள் பெயர்ந்து பெயர்ந்து படர்ந்து
கதம்ப மளைந்து கமழ்ந்து - பதங்கொள்

246. துதைந்து - நெருங்கி. கொண்டை - குழலின்முடி. வண்டு - சங்கவளை
247. கரங்கள் - கைகள். நிரந்து - ஒழுங்குபட்டு, பம்ப - நிறைய.
248. குரும்பை - தெங்கின் இளங்காய். நிகர்ந்து - ஒத்து. கொங்கையரும்பு - தனமாகிய மொட்டு. குலுங்க - அசைதலால். அசைந்து - இளைத்து. மருங்குல் - இடை.
249. இறுமென்று - ஒடியுமென்று. புரிந்து - விரும்பி. நிரந்த - ஒழுங்குபட்ட
250. குழை -காது. தண்ட கெட. மறிந்து - மீண்டு.
252. கரம்கொடு அறைந்து - கையால் அடித்து.
253. பதங்கள் - கால்கள். படர்ந்து - சென்று. கதம்பம் - பரிமளப்பொடி.
அளைந்து - பூசப்பட்டு. பதம் - ஒளி.
-------------------------------------------

254. உடம்பு புழுங்க வணங்கி வணங்கி
இடங்க ளிடங்களி லெங்கும் - நடந்துவரிப்
255. பந்தாடிப் பாடவுயிர்ப் பாங்கியருந் தோழியரும்
அந்தோ விடையொடிந்த தாமென்று - வந்தணைத்துப்
256. பொன்னான மேனிப் புழுதித் துகண்மாற்றி
மின்னாண் முகத்து வியர்வாற்றி - அன்னமே
257. எங்கள் குலத்துக் கரசே யிளைஞோர்கள்
தங்கள் குலத்துத் தவப்பேறே - செங்கமல
258. வேதியனார் நாலுமுக மானதுவும் வேணியரன்
பாதி யுடம்பாகப் பட்டதுவும் - மூதுலகில்
259. இந்திரனா ராயிரங்க ணெய்தியதும் நாடோறுஞ்
சந்திரனார் தேய்ந்து தளர்ந்ததுவும் - செந்தழலில்
260. மூழ்கிமத னங்க முடிந்ததுவுங் கோதமனார்
ஆழ்பு னலின் மூழ்கி யமிழ்ந்ததுவும் - தாழ்சடையோர்

254-55. உணங்கி - வாடி. வரிப்பந்து - கோலம்வரையப்பட்ட பந்து. அந்தோ - ஐயோ.
243-255. கனங்குழையாள் (244), ஏகி, பாடி (243),எடுத்து, ஏந்தி (244),
குலைந்திட (246), குலுங்க (248), புலம்ப (249), வருந்திட (251), அறைந்து
(252), நடந்து (254), ஆடிப் பாட (255) என முடிக்க.
256. புழுதித்துகள் – புழுதியாகிய துகள். மாற்றி - போக்கி. மின்னாள் - மங்கை.
257. இளைஞோர்கள் - இளைஞர்கள். பேறு - பயன். கமலம் - தாமரை.
258. வேதியன் - பிரமன். ஆர் - சிறப்புப்பொருட்டு. வேணி - சடை. அரன் -
சிவபிரான். மூதுலகில் - பழமையானவுலகில்.
260. மதன் - மன்மதன். அங்கம் முடிந்தது - உடலிழந்தது, கோதமன் – கௌதம முனிவன். கௌதமன் புனலின் மூழ்கியமிழ்ந்தது அகலிகையைப் பெறும்பொருட்டு. கௌதமனும் இந்திரனும் அகலிகையைக் காதலித்தனராக, அகலிகை நும்முள் நெடுநேரம் புனலின் மூச்சடக்கி மூழ்கியிருப்பார்க்கே யான் உரியேன் என இருவரும் புனலின் மூழ்கிநிற்க, இந்திரன மூச்சடக்க இயலாது முன்னே வெளிப்படக் கௌதமன் பின்னெழுந்து அகலிகையைப் பெற்றனன் என்பது கதை. சடையோர் - சடையையுடைய முனிவர்கள்.
-------------------------------------------------------
261. காயஞ் சருகாகக் கானகத்தும் வெற்பகத்தும்
தூயதவஞ் செய்யத் தொடங்கியதும் - சேயிழையாய்
262. உன்னுடைய பெண்மைநல முண்ணப் பெறாமையன்றோ
இன்னமுமவ் வண்ண மிருக்கின்றார் - என்னும்
263. அளவிற் சிறுபுலியூ ரண்ணல்பரந் தாமன்
துளபத் தொடையழகு தோன்ற - வளமிக்க
264. ஆயிரவாய்ச் சேடனணைமீ தினிதிருந்து
பாயிரநால் வேதப் பறைமுழங்கப் - பாயிருளைக்
265. காயுந் திகிரிசங்குங் கையுந் திருமுகமும்
சேயிதழ்த் தாமரையஞ் சேவடியும் - வேயூது
266. செம்பவள வாயுந் திருநகையுந் தோன்றமணிச்
செம்பதும ராகத் திருத்தேர்மேல் - எம்பெருமான்
267. வீதி யெழுந்தருளி வேதியர்க டற்சூழப்
போது மளவிற் புனையிழையாள் - கோதியளி

261. காயம் - உடல். சருகாக - சருகின்றன்மையையடைய மெலிந்து வற்ற. கானகத்தும் - காட்டிலும். வெற்பகத்தும் - மலையிலும்.
263. துளபத்தொடை - துழாய்மாலை.
255-263. பாங்கியரும் தோழியரும் வந்தணைத்து (255), மாற்றி, ஆற்றி, அன்னமே (256), அரசே, தவப்பேறே (257), சேயிழையாய் (261), ஆனதுவும், பட்டதுவும் (258), எய்தியதும் தளர்ந்ததும் (259), முடிந்ததுவும், அமிழ்ந்ததுவும் (260), தொடங்கியதும் (261), உன் பெண்மைநலம் உண்ணப்பெறாமையினாலன்றோ, அதனானன்றோ இன்னமும் அவ்வண்ண மிருக்கின்றார் என்னும் அளவில் (262- 263) என முடிவுகொள்க.
264. சேடன் அணை - சேடனாகிய அணை. பாயிரம் - முகவுரை = உபோற் காதம். பாயிருள் - பரவிய இருள்.
265. காயும் - சினந்தோட்டுகின்ற. திகிரி - சக்கரம். சேயிதழ்த் தாமரையஞ் சேவடியும் - செவ்விய இதழ்களையுடைய தாமரைமலர் போன்ற அழகிய திருவடியும். வேய் என்றது இங்குப் புல்லாங்குழலை.
266. திருநகை - அழகிய புன்சிரிப்பு. பதுமராகம் - மாணிக்கம்.
267. புனையிழையாள் - அணிகலன்களையணிந்தவளாகிய மங்கை. கோதி- குடைந்து, அளி - வண்டு.
263-267. சிறுபுலியூரண்ணல், அழகுதோன்ற இனிதிருந்துபறை முழங்க (264), கையும் திருமுகமும் சேவடியும் (265), வாயும் நகையும் தோன்றத் திருத்தேர்மீது (266), வீதியெழுந்தருளிப்போதுமளவில் (267) என முடிக்க.
---------------------------------------------------

268. யூதுகுழற் … … லைய
மோதுங் களப முலையசைய - மாதருடன்
269. சென்று வணங்கிச் செழுந்தடக்கை கூப்பியெதிர்
நின்று மடநா ணிறையழிந்தாள் - குன்றான
270. தோளொருத்தி மார்பொருத்தி தோய்ந்தா லுமக்கேவ
லாளொருத்தி நானானா லாகாதோ - வாளுருத்த
271. கண்ணார்க ளாய்ப்பாடிக் காரிகையார் தம்மொடொரு
பெண்ணாக வெண்ணிற் பிழையாமோ - தண்ணார்ந்த
272. வள்ளத் திருப்பவள வாய்முத்தந் தந்தாலென்
உள்ளத் துயர மொழியேனோ - வெள்ளத்தின்
273. ஆலினிலை மேற்கிடந்த வாகந் தனைத்தழுவிக்
கோலமுலை மேலணைத்துக் கொள்ளேனோ - கோலமதன்
274. றன்கைவளை வில்லாற் சரமாரி தூவமெலிந்
தென்கைவளை யெல்லா மிழந்தேனே - முன்கடலைக்
275. கற்கொண்டு தூர்த்தீரென் காமக் கடலையொரு
சொற்கொண்டு தூர்த்தாற் சுவறாதோ - விற்கொண்ட
276. தோளுடையீர் மூன்று தொழிலுடையீ ரைம்முகனை
ஆளுடையீர் கண்ணி னருளுடையீர் - வேளுடைய

268. களபம் - கலவைச்சாந்து.
269. மடமும் நாணும் நிறையும் அழிந்தாள் என உம்மை விரிக்க. குன்று-மலை.
270. நான் ஒருத்தி உமக்கு ஏவலாளானால் ஆகாதோ எனக் கூட்டுக. வாளுருத்த - வாளைச்சினந்த.
271. ஆய்ப்பாடிக்காரிகையார் தம்மொடு - திருவாய்ப்பாடிப் பெண்களுடன். தம் சாரியை. தண் ஆர்ந்த - குளிர்ச்சிபொருந்திய.
272. வள்ளம் - கிண்ணம். உள்ளத்துயரம் - மனத்துயர்.
273. ஆகம் - மார்பு. கோலமதன் – அழகிய மன்மதன்.
274. சரமாரிதூவ - அம்புமழைபொழிய.
275. சுவறாதோ - வற்றாதோ?
276. மூன்றுதொழில் - படைத்தல் காத்தல் அழித்தல் என்பன. ஐம் முகன் - ஐந்துமுகங்களை யுடைய சிவபிரான்.
-----------------------------------------

277. வில்லாண்மை பார்த்து விழிபார்த் தொருவார்த்தை
சொல்லாத தேதென்று சோர்வுற்றாள் - மெல்லியலைச்
278. சற்றே கடைக்கணித்துத் தண்முறுவல் செய்துபிரான்
பொற்றேருந் தானும் புடைபெயர்ந்தான் - மற்றொருவன்
279. தென்றலந்தே ரேறிச் சிறுநா ணொலிபரப்பி
மன்றலம்பூங் காவி மலர்வாளி - ஒன்றொழியப்
280. பல்லா யிரங்கணைகள் பாரித்துப் பாவையுட
லெல்லாந் துளைபட் டிடவெய்து - வில்லால்
281. அடித்துத் தரைப்படுத்தி யாங்கொழிய மாதர்
எடுத்துக் கொடுமனையி னேகி - உடுத்திரள் சூழ்
282. வெண்மதியின் றிண்மணியால் வேய்ந்தமணி மண்டபத்தி
னுண்மதன சாலையெனு மோரிடத்தில் - தண்மதிபாய்
283. சாளர வாயிலருகுகளி மம்படுத்து
வாளரவேற் கண்ணாள் வனப்பமைந்த - நீளிலைய
284. தேமாந் தளிருஞ் சிறுசண் பகமலரும்
தாமாங் கணைமீது தானிழைத்துப் - பூமாண்ட
285. கோழரைய வாழைக் குருத்துவிரித் துக்கிடத்தி
வாழியிவ ளென்னும் வகைகூறிக் - கேழ்கிளரும்

267-277. புனையிழையாள், சென்று வணங்கி அழிந்தாள் (269) ஆகி, ஆகாதோ (270), பிழையாமோ (271), ஒழியேனோ (272), கொள்ளேனோ (273), இழந்தேனே (274), சுவறாதோ (275), உடையீர் (276), பார்த்து (277), ஒருவார்த்தை சொல்லாதது ஏது? என்று சோர்வுற்றாள் (277) என முடிக்க.
278. மற்றொருவன் என்றது மன்மதனை.
279-80. காவி நீலமலர். மன்மதனுடைய பஞ்சபாணங்களில் நீலம் கொல்வதாதலின் அதனை யொழித்து மற்றவற்றை யெய்தானென்றார்.
281. உடுத்திரள் - நக்ஷத்திரக்கூட்டம்.
282. வெண்மதியின் திண்மணி - சந்திரகாந்தக்கல்.
283. சாளரம் - காலதர். தளிமம் - பாயல்.
284. தாம் அசை. ஆங்கு அணைமீது இழைத்து என்க. தான் அசை.
பூமாண்ட - பூவான் மாட்சிமையுடைய,
285. கோழரைய வழவழப்பான அடிப்பக்கத்தையுடைய. இது வாழைக்கு அடை. கேழ்கிளரும் - நிறம் மிக்க.
----------------------------

286. சந்தக் குழம்புஞ் சவாதும் பனிநீரும்
அந்தத் திருவுடம்பி லப்பினார் - செந்தளிர்கள்
287. காமாக் கினியிற் கருகி யுடல்வெதும்பச்
சோமாக் கினியுஞ் சுடவைத்தார் - தாமக்
288. குழலியொரு கட்டுவிச்சி கூடுகுறி பார்த்துச்
சுழல முடிதுளக்கிச் சொல்வாள் - எழிலுடைய
289. மானனையீ ரிந்த மடமான் பிணிதீர
ஆனமருந் தொன்று மறியீரோ - தேனருந்தி
290. வண்டு படியு மலர்த்துழாய் நீழலின்கீழ்க்
கெண்டையங்கண் ணாளைக் கிடத்துவீர் - கொண்டனிற்
291. மாய னணிந்த மலர்த்துழாய் மாலையிவள்
தூய குழல்மீது சூட்டுவீர் - சேயிழையீர்
292. வாரார் முலையாள் வலதுசெவிக் கேயவன்பேர்
ஓரா யிரமு முணர்த்துவீர் - பேராளன்
293. சங்கு திகிரி தனுநாந் தகங்கதைவான்
கொங்கைமிசை தூரிகை கொண்டெழுதீர் - அங்கவன்றன்
294. பொன்னாடை வாங்கிப் புனையீ ரெனக்கேட்ட
மின்னாளம் மால்புயத்தை மேவினள்போல் - இன்னாமை

287. சோமாக்கினி சந்திரனாகிய நெருப்பு. தாமம் - மாலை.
281-287. மாதர், ஏகி (281), படுத்து (283), இழைத்து (284), விரித்து, கிடத்தி, கூறி (285), அப்பினார் (286), சுடவைத்தார் (287) என்க.
288. கட்டுவிச்சி - குறிசொல்பவள். முடிதுளக்கி - தலையசைத்து.
292. வார் - கச்சு. வலது செவி - வலக்காது.
293. திகிரி - சக்கரம். தநு - வில். நாந்தகம் - வாள். கதை - தண்டாயுதம். வான்கொங்கைமிசை - சிறந்த தனத்தின்மேல். தூரிகை - எழுதுகோல்.
294. பொன்னாடை - பீதாம்பரம். புனையீர் - அணியின். மின்னாள் என்றது இங்கு மங்கையை. மால் - சிறுபுலியூர்த்திருமால். புயம் - தோள். இன்னாமை - துன்பம்.
288-94. கட்டுவிச்சி, குறிபார்த்து, சொல்வாள் (288) ஆகி, மானனையீர்! அறியீரோ? (289), கிடத்துவீர் (290), சூட்டுவீர் (291) உணர்த்துவீர் (292), எழுதீர் (293), புனையீர் என (294) என்று முடிக்க.
-------------------------------------

295. தீர வெழுந்து தெளிவுற்றாள் பொற்பூணும்
ஆர வடமு மணிந்திருந்தாள் - ஏரார்
மடந்தை
296. மடந்தை யொருத்தி வனசமலர்ப் பாவை
யுடன்பிறந்த செவ்வி யுடையாள் - அடங்கா
297. அழகு படைத்தமுலை யாரமுதங் காமன்
பழகு …. …. டுத்தபஞ்ச பாணம் - புழுகு
298. மணக்குஞ் செழுந்தேன் மதன்மகுடந்
வணக்குமொரு கற்பகப்பூ வல்லி - இணக்கமரிற்
299. கோலத் திகிரிகொ … …. தழைத்த
காலத்தை வென்ற கருங்குழாள் - மேலைநாள்
300. அண்டரிற வாம லரனார் மணிமிடற்றுக்
கொண்டதுபொய் யென்னுங் கொலைவிழியாள் - பண்டுவிரல்
301. ஊன்றிவிரல் பொத்தி விடுத்திசையூ தக்கானந்
தோன்று குலம் போன்றதடந் தோளினாள் - வான்றடவி
302. யாங்கு மழைபொழிய வாநிரைகாத் தன்றுபிரான்
தாங்கியது போலுந் தடமுலையாள் - ஓங்கியெழு

295. ஆரவடம் - முத்துமாலை. ஏரார் - அழகுபொருந்திய.
294-95. மின்னாள் எழுந்து தெளிவுற்றாளாகி, பூணும் வடமும் அணிந்திருந்தாள் என முற்றுவிக்க.
296. வனசமலர்ப்பாவை - தாமரைப்பூவிலெழுந்தருளியுள்ள திருமகள்.
298. வணக்கும் - வளைக்கும். இணக்கு அமரில் - இசைவித்தபோரில்
299. கோலத்திகிரி - அழகிய சக்கரப்படை. காலம் - இரவு=இருள். மேலைநாள் - முன்னாள்.
300. அண்டர் - தேவர். அரனார் - சிவபெருமான். மணிமிடறு - மணிகண்டம். பண்டு - முன்பு.
301. வேய்ங்குழலூதுவோர் குழற்றுளையில் விரலையூன்றியும் விரல் கொண்டு மறைத்தும் மறைத்ததைவிடுத்தும் ஊதுதல் இயல்பாதலின் 'விரலூன்றி விரல்பொத்தி விடுத் திசையூத' என்றார் கானம் தோன்றுகுலம் - இசை பிறந்த வம்சம் - மூங்கில். தடம் - பெரிய.
302. ஆநிரை - பசுக்கூட்டம். பிரான் - கண்ணன். தாங்கியது - கோவர்த்தனம். ஓங்கி எழு - பெருகிக்கிளர்ந்த
---------------------------------------

303. சேல்கிடந்த வெள்ளத் திரட்பெருக்கி லண்டமுண்டு.
மால்கிடந்த பாயல் வயிற்றினாள் - சூல்கிடந்த
304. மையிடையிற் றோன்றி மறையு மவைபோல
நொய்ய சிறிய நுடங்கிடையாள் - வையமெல்லாம்
305. தாங்கி நிறைந்து தடந்திசையெல் லாம்பரந்
தாங்கு விரிந்தகன்ற வல்குலாள் - தாங்கமரில்
306. வாகை புனையு மகவான் புயந்தழுவும்
தோகைபெயர் கொண்ட துடையினாள் - மோகமலர்
307. அஞ்சிலம்பு பூட்டு மடல்வேள் முடிவணங்கி
யஞ்சிலம்பு பூட்டு மடியினாள் - அஞ்சிலம்பும்
308. வாவி மலரில் மடவன்னம் பின்னடந்து
காவினடை கற்கநடை. கற்பிப்பாள் - கோவைவடம்
309. தாங்கு முலையிற் றனிமகர யாழணைத்துப்
பாங்குபெற வேழிசையிற் பாடுதலும் - பூங்காவி
310. வண்ணன் சிறுபுலியூர் மாயன் றிருத்தேர்மேற்
பண்ணமைந்த வேழப் பவனிவர - ஒண்ணுதலாள்
-------------------------------------------------------
303-304. சேல் - மீனில் ஒருவகை. மால்கிடந்த பாயல் - ஆலிலை. சூல்கிடந்தமை - கருக்கொண்டமேகம். மையிடையிற்றோன்றி மறையுமவை - மின். நொய்ய - மென்மையுடைய.நுடங்கிடை - துவளும் இடை.
305. அல்குல் - நிதம்பம். அமரில் - போரில்.
306. வாகைபுனையும் - வெற்றிமாலை சூடிய. மகவான் - இந்திரன். மகவான் புயந் தழுவுந்தோகை பெயர் - அரம்பை. அது இங்கே வாழைத்தண்டை யுணர்த்திநின்றது. வாழைத்தண்டுபோலும் துடையினாள் என்றபடி.
306-307. மோகமலர் அஞ்சில் அம்புபூட்டும் அடல்வேள் - ஆசையை விளைக்கின்ற ஐந்துபூக்களால் அம்புபூட்டும் வலிய மன்மதன். அம் சிலம்பு பூட்டும் அடியினாள் என்க. சிலம்பு - கால்விரலணி, அம் சிலம்பும் நீர் - ஒலிக்கின்ற.
308. கோவைவடம் - முத்து மணி முதலியவை கோக்கப்பட்ட மாலை.
309. மகரயாழ் - மகரமீன்வடிவாகச்செய்யப்பட்ட யாழ். ஏழிசை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை.
310. வேழப்பவனி - யானைமீதுவரும் உலா.
--------------------------------------------

311. பாட லொழிந்தெழுந்து பாங்கியருந் தானுமெதி
ரோடி வணங்கி யுளமெலிந்தாள் - ஓடைநெடுங்
312. கைவா ரணங்காத்தா னென்று கரங்குவித்துக்
கைவா ரணமதனை … … ன்றாள்- நொய்யவிடை
313. சோர்ந்த மணிக்கலையுந் தோளிலிடு …
ஏந்தெழிலு நாணு மிழந்தொழிந்தாள் - பூந்துவரை
314. மன்னன் சிறுபுலியூர் மால்மதனைக் கண்காட்டி
இன்னகைசெய் தோர்வீதிக் கேகினான் - அன்னாளைத்
315. தாங்கி யெடுத்தணைத்துத் தாய்மாருந் தோழியரும்
தேங்கமழும் பூவணையிற் சேர்த்தினார் ஆங்கே
அரிவை.
316. அரிவை யொருத்தி யமுதமுஞ்செந் தேனும்
பரிமளமுஞ் சர்க்கரையும் பாகும் - விரவியயன்
317. கையால் வருந்தக் கவினுறீஇச் செய்தமைத்த
மையார் தடங்கண் மடமாது - சையநதி
318. மன்னன் பொருப்பில் வளர்பாவை மீனுயர்த்த
தென்னன் பொருப்பிற் செழுந்தென்றல் - பொன்னார்ந்த
----------------------------------------------------
311 – 13. ஓடை - நெற்றிப்பட்டம். வாரணம் - யானை = கஜேந்திரன்; கரம் குவித்து - கைகூப்பி = வணங்கி. கைவாரணம் - கைச்சங்கம் = கைவளை. நொய்ய - சிறிய. இடைசோர்ந்த - இடையினின்றும் நழுவிய. மணிக்கலை - மணியானியன்ற மேகலை. பூந் துவரை - பொலிவுடைய துவாரகை.
296 – 313. செவ்வியுடையாள் (296), அமுதம், பஞ்சபாணம் (297), தேன், வல்லி (298); குழலாள் (299), நுதலாள் (310), விழியாள் (300), தோளினாள் (301), முலையாள் (302), வயிற்றினாள் (303), இடையாள் (304), அல்குலாள் (305), துடையினாள் (306), அடியினாள் (307), கற்பிப்பாள் (308) ஆகிய மடந்தை யொருத்தி (296) அணைத்து, பாடுதலும் (309), சிறுபுலியூர் மாயன் பவனிவர (310), அம்மடந்தை ஒழிந்து, எழுந்து, ஓடி, வணங்கி, மெலிந்தாள் (311), இழந்தொழிந் தாள் (313) என முடிவுகொள்க.
317 – 18. கவின் - அழகு. உறீஇ - உறுவித்து. சையநதிமன்னன் பொருப்பில் வளர் பாவை - குடகமலையிற்றோன்றிய பேரியாற்றையுடையவனாகிய சேரனது கொல்லிமலையில் உள்ள பாவை = கொல்லிப்பாவை. மீன் உயர்த்த - மீனைக் கொடியின் கண் மேம்படக்கொண்ட, தென்னன் - பாண்டியன். தென்னன் பொருப்பு - பொதியம்.
----------------------------------------------

319. நீரகஞ்சேர் நெற்றி நிலாத்திங்கட் டுண்டத்தாள்
காரகங்கார் வானமன்ன கார்க்குழலாள் - பேரொளிய
320. விற்றுவக்கோ டென்ன மிளிரும் புருவத்தாள்
பொற்குழைசேர் கண்ண புரத்தினாள் - முற்றுநீர்க்
321. கங்கைவளை சேர்ந்தகரைக் கண்டத்தாள் காந்தண்மல
ரங்கைவளை சேர்ந்த வழகினாள் - துங்கமணிச்
322. சித்திர கூடந் திருநீர் மலைபோலும்
முத்துவடம் பூண்ட முலையினாள் - அத்தன்
------------------------------------------
319-332. அரிவையின் கேசாதிபாதவருணனையில் திருமால் திருப்பதிகளிற் பலவற்றின் பெயர்களும் தொனிக்கப் புணர்த்தநயம் உவகையூட்டுவது.
319. நீர் அகம் சேர் நெற்றி நிலாத்திங்கள் துண்டத்தாள் நீர்மையைத் தன்னிடத்துக்கொண்ட நெற்றியாகிய நிலவையுடைய மதிப்பிளவையுடையவள், கார் அகம் கார் வானம் அன்ன கார்க்குழலாள் - குளிர்ச்சியையுட் கொண்ட நீரைப்பொழிகின்ற மேகத்தையொத்த கரிய கூந்தலையுடையாள். இதனுள் நிலாத்திங்கட்டுண்டம், காரகம், கார்வானம் என்னும் திருமால் திருப்பதிகளின் பெயர்கள் அமைந்து விளங்குதல் காண்க. பேர் ஒளிய - மிக்க ஒளியையுடைய.
320. வில் துவம் கோடு என்ன மிளிரும் - வில் இரண்டின் வளைவையொத்து விளங்கும். குழை - காதணி. கண்ணபுரம் - கண்ணாகிய இடம். இதனுள் திருவிற்றுவக்கோடு, திருக்கண்ணபுரம் என்ற தலங்கள் அமைந்தவாறு காண்க.
320-21. நீர் முற்று கங்கைக்கரை சேர்ந்த வளைக்கண்டத்தாள் எனக் கூட்டி, நீர்மிக்க கங்கையின் கரையிற்பொருந்திய சங்கை யொத்த கழுத்துடையாள் எனப் பொருளுரைக்க. காந்தள்மலர் அம் கை வளைசேர்ந்த அழகினாள் – காந்தட்பூவை யொத்த அழகிய கையினிடத்து வளையணிந்த அழகினையுடையாள். இதனுள், கங்கைக்கரைக்கண்டம் என்னும் திருப்பதி தொனிக்கப் புணர்த்தநயம் காண்க.
321-22. துங்கம் - உயர்ந்த. மணி - இரத்தினங்களையுடைய. சித்திரகூட பருவதமும் திருநீர்மலையும் போன்ற முத்துமாலையணிந்த இணைத்தனங்களையுடையாள் என்றபடி. இதனுள் திருச்சித்திரகூடம், திருநீர் மலை என்னும் திருப்பதிகளின் பெயர்கள் அமைந்தமை காண்க. அத்தன் - இறைவன்.
-------------------------------------

323. திருத்தங்கா லென்னத் திகழுதரத் தாள்மா
லுருத்தங்கா ரோம வொழுங்காள் - மருத்தேர்
324. திருவல்லிக் கேணிவலஞ் செய்யுஞ் சுழிபோல்
ஒருவல்லிக் கீழுந் தியினாள் - பெருமான்
325. … ... போலு மகன்று சிலைவேடன் மனஞ்செய்?
கடித்தானம் வாய்த்த … … லைக்கீ
326. ழாடகஞ்சேர் வாழையிரண் டன்ன குறங்கினாள்
பாடகஞ்சேர் செம்பொற் பதத்தினாள் - சூடகஞ்சேர்
327. செங்கைத் திரு ... … … சிறுபுலியூர்
அங்கைத் திகிரியரு மாகடலைக் - கொங்கைத்
328. தலைச்சங்க நாண்மதியந் தன்னிலெண்ண மாரன்
சிலைச்செங்கை வாளிசெருச் செய்ய - நிலைத்த

322-23. அத்தன் தங்கு ஆல் திரு தங்கு ஆல் என இயைக்க. திகழ் - விளங்குகின்ற. உதரம் - வயிறு. பிரளயவெள்ளத்தில் இறைவன் குழவியுருவாய்த்தங்கிய சிறப்பு மிக்க ஆலிலைபோன்று விளங்கும் வயிற்றினையுடையாள் என்றபடி. மால் உரு தங்கு ஆ ரோம ஒழுங்காள் - பேரழகுபொருந்திய அதிசயிக்கத்தக்க உரோமவல்லியை யுடையாள். இதனுள் திருத்தங்கால் என்னும் திருப்பதியின் பெயர் புலப்படப் புணர்த்தமை காண்க. மரு தேர் - வாசனையுடைய.
324. திரு அல்லிக்கேணி வலம் செய்யும் சுழிபோல் - சிறந்த அல்லிக் கொடிகள் நிறைந்த நீர்நிலையில் வலமாகச் சுழித்துத் தோன்றிய நீர்ச்சுழி போல்கின்ற. ஒருவல்லி - ஒப்பற்ற ரோமாவளி. உந்தி - கொப்பூழ் இதனுள் திருவல்லிக்கேணி யென்னும் தலம் குறிக்கப்பட்டது.
325. இதனுள் திருக்கடித்தானம் என்னும் திருப்பதி வந்தவாறு காண்க. கடித்தானம் - அரை; நிதம்பமுமாம்.
326. ஆடகம் சேர் இரண்டுவாழை யன்ன குறங்கினாள் - பொன்னாற் செய்த திரட்சியையுடைய இரண்டு வாழைத்தண்டு போலும் தொடையினையுடையாள். ஆடகம் - பொன். சேர்தல் - திரட்சியுடையதாதல். குறங்கு - தொடை. பாடகம் - காலணி; பதம் - கால். இதனுள் பாடகம் என்னும் திருப்பதி கூறப்பட்டது. சூடகம் - கைவளை.
327 – 28. திகிரி - சக்கரம். அருமாகடலைக் கொங்கைத்தலைச் சங்கம் நாண் மதியந்தன்னில் எண்ண - அருமாகடலமுது என்னும் திருநாமத்தை
------------------------------------

329. நறையூருந் தண்கா நடுவிருந்து கண்ணீ
ருறையூர் வளையோ டொழுகப் - பிறைநுதலாள்
330. கூடல்வளைத் தன்பிற் குறிபார்க்கு மெல்லைக்கட்
சேட கிரித்திருமால் தேரழுந்தூர் - மாடநெடுஞ்

யுடைய சிறுபுலியூர்த்திருமாலைத் தன் தனதடத்தே கூடுதலை நாணொடுகூடிய மனத்தே நினைய. சங்கம் - கூட்டம், மாரன் செங்கைச் சிலைவாளி(யாற்)
செருச்செய்ய என இயைக்க. மாரன் - மன்மதன். சிலை - வில். வாளி - அம்பு.
செரு - போர். இதனுள் திருத் தலைச்சங்கநாண்மதியம் என்னும் திருப்பதி வந்தவாறு காண்க.
329. நறை ஊரும் தண் கா நடு இருந்து - தேன் பெருக்கெடுக்கும் குளிர்ந்த சோலையினிடையே தங்கி. நறை - தேன்; நறுமணமுமாம். இங்கே திருநறையூர், திருத்தண்கா, உறையூர் என்னும் திருப்பதிகள் தோன்ற ஆண்ட நயம் காண்க. கண்ணீர் உறை ஊர் வளையோடு ஒழுக - கண்ணீர்த்துளிகள் மிக்க கைவளைகளுடன் விழ. நுதல் - நெற்றி. பிறைநுதலாள் என்றது இங்கே அரிவையை·
330. கூடல்வளைத்தல் என்பது மகளிர் தாம் எண்ணிய கருமம் கை கூடுமோ
கூடாதோ என்று அறியும்விழைவால் கண்ணைமூடிக்கொண்டு மணலிலே விரலால் வலயமாகச் சுழித்தலாம். இவ்வாறு சுழிக்குங்கால் அச்சுழி தொடங்கிய இடத்தே வந்துபொருந்தின் தாம் நினைந்தது கைகூடு மென்பதும் பொருந்தாதாயிற் கைகூடாதென்பதும் மகளிர் குழுவழக்கு. பிறைநுதலாள் (329) சிறுபுலியூர்த் திருமால் வந்து தன்னைக் கூடுவனோ கூடா னோ என்று கூடலிழைத்துக் குறிபார்க்கும்பொழுதில் (330) என்க. இதனுள் கூடலென்னும் திருப்பதி தோன்றியவாறு காண்க.
319 – 30. குழலாள், நெற்றியாள் (319), புருவத்தாள், கண்ணினாள் (320), கண்டத்தாள், கையினாள் (321), முலையினாள் (322), உதரத்தாள் உரோமவொழுங்கினாள் (323), உந்தியினாள் (324), கடித்தானத்தாள் (325), குறங்கினாள், பதத்தினாள் (326), மடமாது (317), பாவை, தென்றல் (318) ஆகிய அரிவையொருத்தி (316), சிறுபுலியூர் அருமாகடலை (த் தன்) கொங்கைத்தலைச் சங்கம் எண்ண (லால்) மாரன் செருச்செய்ய (327-28), பிறை நுதலாள் கண்ணீர் வளையோடொழுகக் கா நடுவிருந்து (329), கூடல்வளைத்துக் குறிபார்க்கும் எல்லைக்கண் (330) என முடிவுகொள்க.
-----------------------------------------------

331. செம்பொன்செய் கோவில் செறிந்ததிரு வீதியின்வாய்
உம்பர் முனிவ ருவந்தேத்த - நம்பன்
332. திருக்கா வளம்பாடிச் செந்தமிழ்நால் வேதம்
இருக்கார் மொழியா ரிசைப்ப - நெருக்கியதார்
333. ஆடன்மா மேற்கொண் டணிதிருத்தே ரூடுவரக்
கூட லொழிந்தெதிர்போய்க் கும்பிட்டாள் - ஓடரிக்கண்
334. ணீர்சோர நாண நிறைசோர வாணுதலின்
வேர்சோர மெய்புளக மீதூரக் - காரார்ந்த

330-33. சேடகிரித்திருமால் (330), நம்பன் (331), அணிதிருத்தேரூடு, நெருக்கிய தார் ஆடன்மா மேற்கொண்டு (333), உம்பர் முனிவர் உவந்தேத்த (331), இருக்கார் மொழியார் திருகா வளம் பாடிச் செந்தமிழ் நால் வேதம் இசைப்ப (332), நெடுமாடம் (330), செம்பொன் செய்கோயில் செறிந்த (331) தேர் அழுந்து ஊர் (330)த் திருவீதியின்வாய் (331) வர (333) என இயைத்துத் திருவேங்கடமலையி லெழுந்தருளியுள்ள திருமாலும் நம் இறைவனுமான (சிறுபுலியூர்) அருமாகடலமுது, அழகிய திருத்தேரிடை யே, இறுக்கிப்பிணித்த மாலையினையுடைய நாட்டியம் வல்ல குதிரை நம்பிரானில் வீற்றிருந்து, தேவரும் முனிவரும் மகிழ்ந்து வணங்க, வேதங்கள் நிரம்பிய மொழிகளையுடைய அந்தணர் மாறுபடாத இறைவன் செல்வங்களை வியந்து பாராட்டிச் செவ்விய தமிழ்வேதம் நான்கையும் இசையொடு பாட, உயர்ந்த மாடங்களும் செவ்விய பொன்னாற்செய்த கோயில்களும் நெருங்கிய தேர்கள் பதிந்துள்ள சிறுபுலியூர்த் திருவீதியில் எழுந்தருள எனப் பொருளுரைத்துகொள்க. இப்பகுதியிற் சேடகிரி, தேரழுந்தூர், செம்பொன்செய் கோவில், திருக்காவளம்பாடி என்னும் திருப்பதிப்பெயர்களும் தோன்றியவாறு காண்க. சேடகிரி - திருவேங்கடமலை. இம்மலை ஆதிசேடனமிச மாதலின் இப்பெயர்பெற்றது. உம்பர் - தேவர்.நம்பன் - நம் இறைவன். திரு காவளம் என்பது எதுகைநோக்கித் திருக்காவளம் என்றானது விகாரம். திருகா - முரண்படாத. செந்தமிழ் நால்வேதம் என்றது ஆழ்வார்கள் அளித்த அருளிச்செயல்களை. இருக்கு - வேதம். இசைப்ப - பண்ணொடு பாட. தார் - மாலை. கூடல் ஒழிந்து - கூடற்சுழியிழைத்தலை விட்டு. கும்பிட்டாள் - வணங்கினாள். அரி ஓடு கண் - செவ்வரி கருவரி பரந்த கண்(களிலிருந்து).
334. சோர - விழ. நாணமும் நிறையும் சோர என விரிக்க. சோர - நழுவ. வாள் நுதலில் - ஒளிபொருந்திய நெற்றியின் கண் (உண்டாகிய). மெய் - உடல். புளகம் - மயிர்சிலிர்த்தல், மீதூர - மிக.கார் ஆர்ந்த - மேகத்தையொத்த. இதனுள், சிறுபுலியூர்த் திருமாலைக் கண்ட அரிவைமாட்டு நிகழ்ந்த மெய்ப்பாடுகள் கூறப்பட்டன.
----------------------------------------------
335. மெய்யழகுஞ் செய்ய விழியழகுஞ் சங்காழிக்
கையழகுங் கண்டு கலங்கினாள் - ஐயனெங்கோன்
336. தண்ணந் துழாய்மவுலித் தாமோ தரனுமிவள்
எண்ணந் துழாவு மியல் கண்டு - கண்ணருளாற்
337. பார்த்து நகைத்தகன்றான் பஞ்சபா ணங்கள்வந்து
போர்த்துடல மெல்லாம் புழைபட்டா ... த்
338. தொடைமடக்கி மாரனுந்தேர்த் தூளியொடும் போனான்
மடவரலைச் சேர்ந்தணைத்து மாதர் - கொடுபோகிச்
339. சீத மலரணையிற் சேர்த்திப் பனிநீர்சவ்
வாது புழுகுமுலை மார்பணிந்தார் - சீதரன்பேர்
340. ஓரா யிரமு முரைத்தா ருளந்தெளிவுற்
றாராத மையல்சிறி தாறினாள் - சீரார்

335-36. மெய் - திருமேனி. விழி - கண். ஆழி - சக்கரம். ஐயனும் எம் கோனும் ஆகிய தாமோதரனும் என்க. தண் அம் துழாய் குளிர்ந்த அழகிய துழாய்மாலை. மவுலி - கிரீடம். இவள் என்றது அரிவையை. இவள் எண்ணம் துழாவும் இயல் கண்டு. எண்ணம் - நினைவு. துழாவு மியல் - ஆராயும் தன்மை, அருட்கண்ணால் என மாற்றிக்கூட்டுக.
337. பஞ்சபாணங்கள் வந்து போர்த்து உடலமெல்லாம் புழைபட்டாள் என்க. போர்த்து - போர்க்க= மறைத்தலால். உடலம் - மெய், புழை - துவாரம்.
338-40. மாரனும் தொடைமடக்கித் தேர்த்தூளியோடும் போனான் எனக் கூட்டுக. மாரன் - மன்மதன். தொடைமடக்கி - (அம்பு) தொடுத்தலை மாற்றி. தேர்த்தூளி - சிறுபுலியூர்மாலின் தேர்செல்லுதலால் எழுந்த தூசி. மாதர் மடவரலைச்சேர்ந்து அணைத்துக்கொடுபோகி என்க. மாதர் – செவிலி முதலியோர். மடவரல் - பெண் ; இங்கே அரிவை. சீதம் - குளிர்ச்சி. மலரணை-பூப்படுக்கை. சேர்த்தி – படுக்க வைத்து, புழுகு புனுகு, மையல் - காமமயக்கம்.
329-340. பிறைநுதலாள் (329) குறிபார்க்கும் எல்லைக்கண், திருமால் (380), திருத்தேரூடு மாமேற்கொண்டுவரக் கூடலொழிந்து போய்க் கும்பிட்டாள் (338) ஆகிச் சோர ஊர (334) அழகும் அழகும் அழகும் கண்டு கலங்கினாள் (ஆக), ஐயன் எங்கோன் (335) ஆகிய தாமோதரனும் இவள் இயல்கண்டு (336) அருட்கண்ணாற் பார்த்து நகைத்து அகன்றானாக (337), மாதர் மடவரலை, அணைத்துக்கொடுபோகு (338) சேர்த்தி, அணிந்தார் (339), உரைத்தார் (340 ஆக அவள்) மையல் சிறிது ஆறினாள் என முடிக்க.

------------------------------------------

தெரிவை.
341. தெரிவை யொருத்தி சிலைவேடனைத்தன்
புருவநெறிப் பானிறுத்தும் பூவை - விரதமுறும்
342. தாபதர்க டம்மைத் தவமழிக்க வந்தவிந்த்ர
சாபநுதற் காரளகத் தையலாள் - கோபமுறப்
343. பூட்டாத வில்லும் பொரும்போர்க்குச் சாணைவைத்துத்
தீட்டாத வம்புஞ் செழும்பாகு - கூட்டாது
344. தித்தித் தமுதூறுஞ் சேதாம்ப லுங்குமிழும்
பத்தித் தளவும் பதிந்திருபால் - ஒத்தகுழை
345. வள்ளையும் பூத்த மதிமுகத்தாண் மாரனூர்
கிள்ளையெனு மின்சொற் கிளிமொழியாள் - கொள்ளை மறை

341. தெரிவை எழுவகைப் பருவமகளிருள் 26-க்குமேல் 5 வயது நிரம்பிய (அதாவது 31 வயதுள்ள) பெண். சிலை - வில். வேள் தனை - மன்மதனை; தன் சாரியை. நெறிப்பால் - நெளித்தலால், மன்மதனையும் தன் குறிப்பின்படி அடங்கியொழுகச்செய்பவள் என்றபடி.
342. தாபதர்கள் தம்மை - தவஞ்செய்வோரை; தம் சாரியை. இந்த்ர சாபம் – இந்திரவில் = வானவில். இந்த்ரசாபநுதல் - வானவிற்போன்ற புருவம்.
கார் அளகம் - மேகம்போன்ற கூந்தல். இந்த்ரசாபநுதல் காரளகம் என்பன தொகையுவமை.
343-45. பூட்டாத - வளைத்து நாணேறிடப்படாத. பூட்டாத வில் என்றது புருவத்தை. தீட்டாத அம்பென்றது கண்களை. சேதாம்பல் - செவ்வாம்பல். பாகுகூட்டாது தித்தித்து அமுதூறும் சேதாம்பல் என்றது அதரத்தை; விபாவனாலங்காரம். குமிழ் - குமிழம்பூ என்றது நாசியை. பத்தி - வரிசையான. தளவு - முல்லையரும்பு என்றது பற்களை. பதிந்து - பொருந்தி. இருபால் - இரண்டுபக்கமும். குழை - குண்டலங்களோடு கூடிய. வள்ளை - வள்ளைக்கொடி; என்றது காதுகளை. பூத்த - உண்டாயிருக்கிற, வில்லும் அம்பும் சேதாம்பலும் குமிழும் தளவும் பதிந்து வள்ளையும் பூத்த மதி என்றது இல்பொருளுவமம். மாரன் - மன்மதன். ஊர் ஏறிச் செலுத்துகின்ற. கிள்ளை - கிளி. கிளியை மன்மதனுக்கு வாகனமாகக் கூறுவது கவிமரபு. கொள்ளை - மிகுதியான, மறை - மறைப்பொருள்.

------------------------------------------

346. தேங்கிப் பணைத்த திருவாய் மொழிப்பொருள்போரல்
ஓங்கிப் பெருத்தமுலை யொண்ணுதலாள் - ஆங்கவளைப்
347. போற்றாத மாந்தர் புகழுந் திருவுமெனத்
தோற்றது தேய்ந்து துவளிடையாள் - மாற்றிலாக்
348. கொத்தாணிச் செம்பொன் குயின்றகலை சூழ்ந்துமதன்
அத்தாணி யாயகன்ற வல்குலாள் - பொத்தகம்போற்
349. சேர்ந்து கமலச் செழும்போதை வென்றுசிவப்
பார்ந்தழகு கொண்ட வடியினாள் - சேர்ந்தன்னம்
350. கற்கநடை கற்பிக்குள் காட்சியாள் … …
… … சாயல் வனப்பினாள் - சொற்கற்கும்

346. ஒண்ணுதலாள் என்பது நுதல் (புருவம்) என்னும் உறுப்படியாகவந்த பெயராகாது வாளா பெயராய் அவள் எனச் சுட்டிநின்றது; 342-ஆம் கண்ணியில் நுதல் கூறப்பட்டது காண்க. ஆங்கு அவனை - அத்திருவாய்மொழியிற் பேசப்பட்ட அகாரவாச்யனான) திருமாலை.
347- 48. மாற்றிலா - ஒப்பில்லாத, கொத்து – தொகுதியான. ஆணிச்செம்பொன் - செவ்விய மாற்றுயர்ந்த பொன்னால். குயின்ற - செய்யப்பட்ட. கலை - மேகலை. மதன் அத்தாணி - மன்மதன் கொலுவிருக்கை. அல்குல் - நிதம்பம் = பின் தட்டு. பொத்தகம் - புத்தகம்.
349 – 50. கமலம் - தாமரை. போது - பூ. புறவடிக்குப் புத்தகத்தை உவமைகூறுதல் மரபாதலிற் பொத்தகம்போற் சேர்ந்தென்றார். சேர்ந்து - கிட்டிவந்து. அன்னம் சேர்ந்துகற்க நடைகற்பிக்குங் காட்சியாள் எனக் கூட்டுக.
341 – 350. தெரிவையின் கேசாதிபாதவருணனை. பூவை (341), தையலாள் (342), முகத்தாள், மொழியாள் (345), முலையாள் (346), இடை யாள் (347), அல்குலாள் (348), அடியினாள் (349), காட்சியாள், வனப்பினாள் (350), (ஆகிய) தெரிவை யொருத்தி (340) என இயைக்க.
------------------------------------------

351. கிள்ளை தனைத்தழுவிக் கீரமு … …
வள்ளமிசை யூட்டி வளர்த்தேனே - தெள்ளியசொ
352. லஞ்சுகமே … … யானனுதி
னஞ்சுகமே வாழ வருளாயோ - பஞ்சவனத்
353. தத்தையே யின்றெனக்குத் தத்தையே காட்டுமனத்
தத்தையே நீக்கு ... ... தத்தையே
354. விண்ணப்பஞ் செய்து விறல்வே ளெனதுயிரை
யுண்ணப்பஞ் செய்வ தொழியாயோ - பெண்ணொப்பார்
355. தீயின்றி வேவாரு முண்டோ சிறிதுடம்பில்
நோயின்றி யாற்றாத நோவுமுண்டோ - காய்கின்ற
356. தண்மதியு முண்டாமோ தாயும் பகையாமோ
பெண்மதியுங் குன்றிப் பிழையாமோ - வண்மைதிகழ்
357. ஆயன் சிறுபுலியூ ரண்ணலரு மாகடல்செவ்
வாயன் றிருமா மகண்மருவும் - தூய
358. திருமார்பில் வண்டுழாய்த் தேமாலை வாங்கித்
தருமாறு செல்லென்று சாற்றப் - பெருமானும்
------------------------------------------
351. கிள்ளை - கிளி, கீரம் - பால், வள்ளம் - கிண்ணம். தெள்ளிய - திருந்திய.
352-53. அம் சுகமே - அழகிய கிளியே! யான் அநுதினம் சுகமே வாழ எனப் பிரிக்க. அநுதினம் - தினந்தோறும். பஞ்சவ(ன்)னத் தத்தையே பஞ்சவர்ணக்கிளியே. தத்தையே - ஆபத்தையே. அநத்தத்தை - பொல்லாங்கை.
354 விண்ணப்பஞ்செய்து - சொல்லி. உயிரை உண் அப்பு அஞ்சு எய்வது ஒழியாயோ! எனப் பிரிக்க. அப்பு - அம்பு. அம்பு அஞ்சு - பஞ்ச பாணங்கள்.
355-56. காய்கின்ற - சுடுகின்ற. மதி - சந்திரன். பெண்மதி - பெண்ணறிவு. வண்மை - கொடை.
351- 58. தெரிவை தன் காதல் நோய்தீரச் சிறுபுலியூர்த்திருமால் பால் தூதுசென்று அவன்மார்பிற் றுழாய்மாலை வாங்கிவருமாறு தான் வளர்த்த கிளியை விடுஞ் செய்தி கூறப்படுகிறது. தெரிவை கிள்ளைதனைத் தழுவி (351), 'சுகமே! பஞ்சவன்னத்தத்தையே! அருளாயோ! (352),
------------------------------------------

359. வீதியின்வா யாழ்வார்கள் வேத முழக்கதிரக்
கோதில் கருடக் கொடியோங்கப் - போதுதலும்
360. சென்று பணிந்து திசையளந்த சேவடியும்
பொன்றிகழுஞ் சோதிப் புனை துகிலும் - குன்றுநிகர்
361. தோளுஞ் சிலையுஞ் சுடராழி யுஞ்சங்கும்
வாளுங் கதையு மதிமுகமும் - மூளும்
362. குழையுங் கருணை கொழித் ... …
விழையுங் கமல விழியும் - பழையமறை
363. தேடுந் திருமுடியுஞ் சிந்தையுற வேயமைத்து
நீடும் பொழுதெல்லா நின்றயர்ந்தாள் - கோடும்

ஒழியாயோ; (354) உண்டோ? (355), ஆமோ? (356) சிறுபுலியூர் அருமா கடல் திருமார்பில் துழாய்மாலை வாங்கித்தருமாறு செல்' என்று சாற்ற (358) என இயைக்க.
358- 59. பெருமானும் - சிறுபுலியூர்த்திருமாலும், வீதியின்வாய் - தெருவில். போதுதலும் - எழுந்தருளலும்.
360 – 68. சிறுபுலியூர்த்திருமால் பாதாதிகேசவருணனை.
360. பணிந்து - வணங்கி. திசை இங்கே உலகம். திகழும் - விளங்குகின்ற.
சோதி - ஒளிபொருந்திய. புனை - அணிந்த. திகழுஞ் சோதிப் பொன்துகில், புனைதுகில் எனக் கூட்டுக. பொன்துகில் – பொன்னாடை. குன்று நிகர் - மலைபோன்ற.
361-63. சிலை - வில் = சார்ங்கம். சுடர் - ஒளிவிடுகின்ற, ஆழி - சக்கரம். கதை - தண்டாயுதம். சிலையும் ..... கதையும் என்று பஞ்சாயுதங்களும் கூறப்பட்டன. மூளும் - வளர்ந்த. குழையும் - காதுகளும். விழையும் விரும்புகின்ற. கமலம் - தாமரை. விழி - கண். சிந்தையுற - மனத்துப் பொருந்த. அயர்ந்தான் - சோர்ந்தாள். கோடும் - வளைந்த.
358-63. (தெரிவை தன் கிளியை நோக்கித்) தூதுசெல் என்று சாற்ற, (அவ்வளவிற்) சிறுபுலியூர்த்திருமால் போதுதலும் (359), (அவள்) சென்று பணிந்து, சேவடியும் துகிலும் (360) தோளும் சிலையும் ஆழியும் சங்கும் வாளும் கதையும் முகமும் (361), குழையும் விழியும் (362), முடியும் சிந்தையுற அமைத்து நின்று அயர்ந்தாள் (363) என முடிக்க.
-------------------------------------------

364. சிலைவளைத்து மாரவேன் செய்வதெல்லாஞ் செய்து
கொலைவிளைத்து நாண்மடக்கிக் கொண்டான் - தலைவளைத்த
365. பூங்கரும்பன் வாளிதைத்துப் புண்பட்ட மாதினுயிர்ப்
பாங்கியருந் தாயும் பரிந்தணைத்து - நீங்குதலும்
366. விண்ணோர் பெருமானவ் வீதிகடந் தேகியிந்த
மண்ணோர் வணங்க மறுகணைந்தான் - பெண்ணரசாம்

பேரிளம்பெண்
367. ஆங்கொருத்தி பேரிளம் ... …னாரமுதும்
தீங்கரும்பும் போலினிய தேமொழியாள் - பாங்காய
368. வண்மையுங் கல்வியும் வாய்மையும் பேரழகும்
பெண்மையுமொப் பில்லாத பெற்றியாள் - விண்மழைகூர்
369. நள்ளிருளுங் காரகிலு நாவியுங் காவியுங்கொண்
டள்ளி முடிக்கு மளகத்தாள் - பிள்ளை
370. மதிக்கு நிகர்நுதலாள் வார்குழையைப் பாய்ந்து
மிதிக்கு மிருகூர் விழியாள் - பதிக்குமணி
371. முத்த நிரையை முகிழ்விரிசே தாம்பலிடை
வைத்தனைய செம்பவள வாயினாள் - ஒத்துவிரி

364-65. சிலை - வில். மாரவேள் - மன்மதன். பூங்கரும்பன் - பூவோடு கூடிய கரும்புவில்லை யுடையான் = மன்மதன்.
366. விண்ணோர்பெருமான் என்றது சிறுபுலியூர்த்திருமாலை. கடந்தேகி - கடந்து சென்று. மறுகு - (பிறிதொரு) தெருவை.
367-75. பேரிளம்பெண்ணின் கேசாதிபாதவருணனை.
368-70. வாய்மை-மெய். விண்மழை - ஆகாயத்திலுள்ள மேகமும். கூர் - மிக்க. நள்ளிருளும் - செறிந்த இருளும். காரகிலும் - கரிய அகிற்புகையும். நாவி - கத்தூரி. காவி - நீலமலர். அளகம் - கூந்தல். பிள்ளைமதி - பிறைச்சந்திரன். நிகர் - ஒத்த. நுதல் - நெற்றி. வார் குழையை - நீண்ட காதுகளை. பதிக்கும் - பதிக்கப்பட்ட. அணி - அழகிய.
371-72. முத்தநிரை - முத்துவரிசை. முகிழ் - அரும்பு. சேதாம்பலிடை - செவ்விய ஆம்பற்பூவின் கண். வைத்தனைய – வைத்தாற்போன்ற. முத்தநிரை பல்வரிசைக்கும் ஆம்பல் வாய்க்கும் உவமை. ஒத்து விரி - ஒரு தன்மைத்தாய் மலர்ந்த. காந்தள் மலர் கைக்குவமை. வண் புழுகு - சிறந்த புனுகு. தோய்ந்த - அணிந்த கழை - மூங்கில்.
------------------------------------

372. காந்தண் மலானைய கையினாள் வண்புழுகு
தோய்ந்த கழைபோலுந் தோளினாள் - ஏந்துலகில்
373. எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்தென்னும் - தொல்லுரையாற்
374. றேய்ந்து தனை வணங்குஞ் சிற்றிடையைத் தான் வணங்கிச்
சாய்ந்தழகு கொண்ட தனத்தினாள் - பூந்துகில்சூழ்
375. பைவிரியு மல்குற் படத்தினாள் பாடகஞ்சேர்
செய்ய கமலமலர்ச் சீறடியாள் - வையமெல்லாம்
376. வேண்டி வணங்கி விலையா வணமெழுதி
ஆண்டரசு செய்யு மழகினாள் - பூண்ட
377. ரதிக்குங் காமனுக்கு மிந்திரா ணிக்கும்
சுரதக் கலைபலவுஞ் சொல்வாள் - பரதத்
378. துவத்தை விளக்குஞ் சுருதித் தமிழ்தேர்
தவத்தை யிழைக்கத் தகுவாள் -- பவத்துயரம்

373-374. பேரிளம்பெண்ணின் தலைசாய்ந்து கீழ்நோக்கிய தனத்தை வருணிக்கப்புக்க கவி, "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து' என்னும் திருக்குறளைச் சொல்லும் பொருளும் தொடையும் முதலிய நயம் சிதையாமல் எடுத்தாண்டு, அக்குறட்பொருளை யறிந்ததுபோலப் பேரிளம்பெண்ணின் தனம் தன்னைவணங்கிய இடையைத் தான் வணங்கி அழகு கொண்டது என்று தற்குறிப்பேற்றமாகக்கூறியது உவகை விளைப்பது. தொல்லுரை - பழமொழி = குறள். பூம் துகில் சூழ் - பொலிவுடைய பட்டுடை வனைந்த.
375-76. பை - அழகு. பாடகம் - ஒருவகைக் காலணி. செய்ய - சிவந்த. சீறடி –
சிறிய அடி. வையம் - உலகம். விலையாவணம் - கிரைய பத்திரம்.
377-78. சுரதக்கலை - காமநூல். பரதத்துவத்தை விளக்கும் சுருதித் தமிழ் - திருவாய்மொழி. பவத்துயரம் - பிறவித்துன்பம்.
---------------------------------------

379. நீக்கி … … நிலாமணிமே டைத்தவிசு
நோக்கி யடைந்து நுடங்கிடையாள் - தாக்குமணிக்
380. கற்றைக் கவரிசிறு காலசைப்ப வீற்றிருந்து
முற்ற … … முழுதுணர்ந்து - தெற்றெனவெம்
381. வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தாந்தொழா - பேய்முலைநஞ்
382. சூணாக வுண்டா னுருவொடு பேரல்லாற்
காணாகண் கேளா செவியென்று - நாணாளும்
383. மாறன் பணித்த மறைநான்கும் மங்கையர்கோன்
ஆறங்கங் கூறு மருந்தமிழும் - வேறுமுள்ள

379. நிலாமணிமேடைத் தவிசு - சந்திரகாந்தக்கல்லாலாகிய திண்ணையிலிட்ட ஆசனத்தை. நுடங்கு - துவளுகின்ற. மணி தாக்கும் - மணிகள் அழுத்திய.
380. கற்றைக்கவரி - தொகுதியான சாமரை. சிறுகால் அசைப்ப - இளங்காற்றை யெழுப்ப, தெற்றென - தெளிவாக.
367-80. அளகத்தாள் (369), நுதலாள், விழியாள் (370), வாயினாள் (371), மொழியாள் (367), தோளினாள், கையினாள் (872), தனத்தினாள் (374), இடையாள் (379), அல்குற்படத்தினாள், அடியாள் (375), அழகினாள் (376), சொல்வாள் (377), தகுவாள் (378), பெற்றியாள் (368) (ஆன) பேரிளம் பெண்ணொருத்தி (367), தவிசுநோக்கியடைந்து (379), வீற்றிருந்து (380) என இயைக்க.
381-82. இங்கே, 'வாயவனை … … செவி' என்னும் முதல் திருவந்தாதிப் பாசுரம் (11) எடுத்தாளப்பட்ட நயம் இன்பம் விளைப்பது. பேய்முலை நஞ்சு ஊணாகவுண்டான் உருவல்லாற் கண் காணா, உண்டான் உருவொடு பேரல்லால் செவி கேளா எனக் கூட்டிப் பொருள்கொள்க. ஊண் உணவு பின் உரு - திவ்யாத்துமகுணங்கள். நாணாளும் - தினந்தோறும்.
383. மாறன் - நம்மாழ்வார். பணித்த - அருளிச்செய்த. மறை நான்கென்றது திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி என்பவற்றை. மங்கையர்கோன் - திருமங்கையாழ்வார். ஆறங்கம் கூறும் அருந்தமிழ் - ஆறங்கமாக இயற்றிய அரிய தமிழ்த் திவ்யப்பிரபந்தங்களாகிய சிறியதிருமடல், பெரியதிருமடல், திருவெழுகூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், பெரியதிருமொழி என்பவை. வேறும் உள்ள - மற்றும் உள்ள.
----------------------------------

384. ஆழ்வார்கள் பாட லருமறைநூ லும்பயின்று
வாழ்வா யிருந்து மகிழ்போதிற் - சூழ்வானத்
385. தும்பரிடை தோன்றி யொளிர்சோதி யோதிமமொன்
றிம்ப ரிடையிறங்கி யெய்துதலும் - கொம்பனையாள்
386. நீயா ரெனவினவ நீண்டதிரைப் பாற்கடலின்
மாயோ னளித்த வரத்தினாற் - காயம்
387. நரைதிரைநோய் மூப்பிறப்பு நண்ணா துடையேன்
கரையிறந்த கல்வியெலாங் கற்றேன் - விரைசெறிந்த
388. தாமரைமே னான்முகனார் தம்முலகு மெவ்வுலகும்
சேம முடன்பயிலுஞ் செய்கையேன் – ஆமவையாற்
389. காலமொரு மூன்றுங் கருதுங் கருவியினான்
மூல முதற்பொருளை முன்னுவேன் - ஞாலமெலாம்
390. பண்டளந்து கொண்ட பரந்தாமன் சேவடியால்
தொண்டளந்த தேவரை நான் சொல்லேனே - ஒண்டொடியாய்
391. என்னு மளவி லிணையடிமேல் வீழ்ந்திறைஞ்சி
அன்ன நடையா ளகங்குழைந்து - நன்னெறிதேர்

380-386. பேரிளம்பெண் வீற்றிருந்து, மறைநான்கும், அருந்தமிழும் (383), மறைநூலும் பயின்று மகிழ்போதில் (384) என முடிக்க. வானத்தும்பரிடை - வானத்தின் மேல். ஓதிமம் - அன்னம். இம்பரிடை இந்நிலவுலகில். காயம் - உடல்.
387. திரை - தோற்சுருக்கம். கரையிறந்த எல்லையற்ற, விரை - நறுமணம். செறிந்த - நிரம்பிய.
388. சேமம் - இன்பம். பயிலும் - சஞ்சரிக்கின்ற. ஆம் அவையால் - பொருந்திய வரம் முதலிய அவற்றாலும்.
389. ஒருமூன்றுகாலமும் கருதும் கருவியினால் என இயைத்து இறந்தகால நிகழ்கால எதிர்கால நிகழ்ச்சிகளை அறியும் (அறிவாகிய) கருவியினால் எனப் பொருள்கொள்க. மூல முதற்பொருள் - உலகத்தோற்றத்துக்குக் காரணமானவனும் தலைவனும் ஆகிய திருமால். முன்னுவேன் - தியானிப்பேன். ஞாலம் எலாம் - உலகம் முழுவதையும்.
391. இணையடி - இரண்டு கால். இறைஞ்சி - வணங்கி. அன்ன நடையாள் - அன்னநடை போலும் நடையுடையளாகிய பேரிளம்பெண்.
---------------------------------------------

392. ஓதிமமே யம்மானை யுள்ள படியறிய
வோதிமயல் மாற்றென்று ... … - நல்லாய்
393. முற்குணத்தான் செய்கை முழுவேத முங்காணா
நற்குணத்தா… …..னல்ல நமக்கெளிதோ - சிற்குணத்த
394. ரான முனிவ ரயனார் சி … ….
வானவருஞ் சொல்லி வடுப்பட்டார் - ஆனாலும்
395. நெய்க்கடலை யோரெறும்பு நின்று பருகுவபோல்
மைக்கடல்வண் ணன்சீர் வளமுரைக்கேன் - எக்குணமும்

385 – 91. ஓதிமம் ஒன்று எய்துதலும், கொம்பனையாள் (பேரிளம்) பெண்) 'நீயார்' என வினவ (386), (ஓதிமம்) தொடியாய் (390), உடையேன்,கற்றேன் (387), செய்கையேன் (388), முன்னுவேன் (389), சொல்லேனே (390) என்னும் அளவில் (391) என முடிக்க,
392. ஓதிமமே - அன்னமே. அம்மானை - அழகிய பெரியோனை = திருமாலை. அம்மானை அறிய, உள்ளபடி அறிய என இயைக்க. அறிகையாவது அம்மானுடைய சொரூப ரூபகுணங்களை அவையவை உள்ளவாறு தெரிதல்.
ஓதி - சொல்லி. மயல் மாற்று என்று (என்னுடைய) மயக்கத்தைப் போக்குவாயாக என்று; இது பேரிளம்பெண் பேச்சு. இனி, 400-ஆம் கண்ணி முடியத் திருமால் பெருமைசெப்பும் அன்னத்தின்பேச்சு, வேதத்திலும் திருவாய்மொழி முதற்பத்தின் முதற்பதிகத்திலும் பிறஇடங்களிலும் விரித்துக்கூறப்பட்டவற்றின் சுருக்கமாயமைந்து இன்பம்விளைத்தல் காண்க. நல்லாய் - நற்குணமுடையவளே; என்றது பேரிளம் பெண்ணை.
393. முற்குணத்தான் - முன் எண்ணப்படும் சத்துவகுணத்தையுடையனான திருமாலினுடைய. சிற்குணத்தர் ஆன - ஞானத்தையே பண்பாகவுடை யவர்களாகிய.
394. அயனார் - பிரமன். வானவரும் - தேவர்களும். சொல்லி – திருமால் பெருமை பேசி. வடுப்பட்டார் - (முற்றக்கூறமுடியாதவராய்) வசையுற்றார்.
395. திருமால் பெருமைக்கு நெய்க்கடலும், அதைக் கூறப்புக்க அன்னத்துக்கு அந்நெய்க் கடலைப் பருகப்புக்க சிற்றெறும்பும் உவமை. ஓர் என்பது சிறுமை தோன்ற நின்றது. பருகுவதுபோல் என்பது பருகுவபோல் என்றானது விகாரம். பருகுதல் - குடித்தல், மைக்கடல்வண்ணன் - திருமால், சீர்வளம் - பெருமைமிகுதி.
------------------------------------

396. தானாகி யெவ்வுலகுந் யெவ்வுயிரும்
தானாகி யொத்துளனுந் தானாகி - நானிலமும்
397. உண்டா னுமிழ்ந்தா னளந்தா னொருகோட்டிற்
கொண்டா னறமனைத்துங் கூறினான் - விண்டுவல்லார்
398. கண்ணுக் குருப்பொல்லார் காதுக்குத் தீப்புகழார்
நண்ணிக் கொடுத்தவர நாசமுள்ளார் - எண்ணுற்ற
399. தங்கள் படுந்துயரந் தாந்துடைக்க மாட்டாமல்
எங்கள் பிரானை யிரந்துரைப்பார் - செங்கைவளை
400. மின்னே முகுந்தனுக்கும் வேறுமுள்ள தேவருக்கும்
பொன்னே ரிரும்பெனவும் போதாதோ - என்னும்

396-97. நால் நிலம் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன. நானிலமும் என்பதனைப் பின்வரும் வினைகளோடுங்கூட்டி நானிலமும் உண்டான், நானிலமும் உமிழ்ந்தான், நானிலமும் அளந்தான், நானிலமும் ஒரு கோட்டிற் கொண்டான் என முடிக்க, நானிலமும் உண்டது பிரளய காலத்தில்; உமிழ்ந்தது படைப்புக்காலத்தில்; அளந்தது திரிவிக்கிரமாவதார காலத்தில்; கோட்டிற் கொண்டது வராகாவதார காலத்தில்; அறமனைத்துங் கூறியது கிருஷ்ணாவதார காலத்தில். விண்டு அல்லார் - (தேவருள்) திருமாலல்லாத பிறர்.
398-99. உரு - வடிவு. பொலார் – பொல்லார் - தீயர் தங்கள் துயர், படும் துயர் என இயைக்க. துடைக்கமாட்டாமல் - போக்கிக்கொள்ள முடியாமல். எங்கள்பிரான் என்றது திருமாலை. இங்கே, 'காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார், பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை, ஆணமென் றடைந்து வாழும் ஆதர்காள்! எம் ஆதிபால், பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே" (திவ். திருச்சந்த விருத்தம் - 49) என்னும் பாசுரப்பொருளை எடுத்தாண்டது காண்க.
400. மின்னே என்றது பேரிளம்பெண்ணை. முகுந்தன் - திருமால். முகுந்தனுக்குப் பொன்னும் பிறதேவருக்கு இரும்பும் உவமை, இங்கே, பொன்னொடிரும்பனையர் நின்னொடு பிறரே' என்ற பழம்பாடற் சொல்லும் பொருளும் தொடர்புற்றமைந்தது காண்க.
391-400. ஓதிமம் 'சொல்லேனே' என்னுமளவில் அன்னநடையாள், இறைஞ்சி (391), 'ஓதிமமே! அம்மானை உள்ளபடி அறியஓதி (என்) மயல் மாற்று' என்று உரைசெய்ய, (அன்னம்), 'நல்லாய்! (392) முற்குணத்தான் செய்கை வேதமும் காணா, நமக்கெளிதோ; (393) வானவரும் சொல்லி வடுப்பட்டார்; ஆனாலும் (394) உரைக்கேன்; (395) விண்டு, தானே எக்குணமுமாகி, எவ்வுலகுமாகி எவ்வுயிருமாகி, உளனுமாகி இலனுமாகி (396) நானிலமும் உண்டான், உமிழ்ந்தான், அளந்தான், கோட்டிற்கொண்டான், அறமனைத்தும் கூறினான்; (397), விண்டுவல்லார் உருப்பொல்லார், தீப்புகழார், வரநாசமுள்ளார் (398), தங்கள் துயர் தாம் துடைக்கமாட்டாமல் எங்கள் பிரானை இரந்துரைப்பார் (399), திருமாலும் பிறதெய்வங்களுமாகிய இவரிடை வாசி பொன்னேரிரும்பெனவும் போதாதோ" (400) என்னும் யொழுதில் என முடிக்க.

-------------------------------------

401. பொழுதிற் சிறுபுலியூர்ப் புங்கவன்வண் டாடிக்
கொழுதிக் குடைந்த துழாய்க் கொண்டல் - பழுதற்ற
402. விண்டுதிக்குந் தென்மழிசை வேந்தன் வலமாதல்
கண்டுதிக்கெல் லாந்திரும்பிக் கண்வைத்தோன் - மண்டுதிக்க
403. விண்ணாடர் போற்ற விளங்குந் திருத்தேர்மேற்
கண்ணா யிரமுடையான் கண்ணுற்றான் - தண்ணார்ந்த
404. காவியு நீலமுங் காருங் கருங்குவளை
பூவையுங் காயாவும் போல்வடிவும் - பாவுமறை

401 – 403. சிறுபுலியூர்ப் புங்கவன் - சிறுபுலியூரில் எழுந்தருளியுள்ள உயர்ந்தோனான திருமால். வண்டு ஆடிக் கொழுதிக் குடைந்த - வண்டுகள் மொய்த்து உழுது குடைந்த. கொண்டல் - மேகம், பழுதற்ற - குற்றம் அற்ற. விண் துதிக்கும் - வீட்டுலகத்தார் போற்றும். விண் ஆகுபெயர். பழுதற்ற விண் என்றமையால் விண் என்பது வீட்டுலகையுணர்த்திநின்றது. தென் - அழகிய. மழிசைவேந்தன் - திருமழிசையாழ்வார். வலமாதல் கண்டு - வலம் வருதலைப் பார்த்து. திக்கு எல்லாம் - திசைகளிலெல்லாம். கண்வைத்தோன் - கடாக்ஷித்தவன்; என்றது திருமழிசையாழ்வார் சிறுபுலியூரில் வீதி வலம் வந்தகாலத்துப் புலியூர்த் திருமால் அவர் சென்ற சென்ற திசை தொறும் திரும்பி நோக்கி நின்ற வரலாறுணர்த்தி நின்றது. மண் துதிக்க - மண்ணுலகோர்போற்ற, கண்ஆயிரம் உடையான் - திருமால். அன்னம் 'போதாதோ என்னுமளவில் (400) துழாய்க்கொண்டலும் (401) கண்வைத்தோனும் (402), ஆயிரம்கண் உடையானும் (403) ஆகிய சிறுபுலியூர்ப் புங்கவன் (401), திருத்தேர்மேற் கண்ணுற்றான் என முடிக்க. தண் ஆர்ந்த - குளிர்ச்சிபொருந்திய.
---------------------------------------

405. காணாத சேவடியுங் கையுங் கனிவாயு
பூணார மார்பும் புனை துகிலும் - தோணான்கும்
406. ஐந்து படையு மடற்கதிரோன் பேரொளியைச்
சிந்தி யொளிருந் திருமுடியும் - சுந்தரஞ்சேர்
407. வெள்ளக் கருணை விழியுந் திருமுகமும்
உள்ளத் தமைத்தா ளுருகினாள் - வள்ளத்
408. தனத்தி லணைக்கத் தடந்தோளி லிட்ட
வனத்துளப மாலை வழங்கீர் - புனத்திடையே
409. ஆய னெறிந்தமர மானேன் விளாமரத்திற்
காய்களிறு தின்ற கனியானேன் - வாயமுதம்

404-5. காவி முதலியவை திருமால் திருமேனிநிறத்துக்கு உவமை. கார் - மேகம், குவளை - குவளையும்; செய்யுள் விகாரத்தால் உம்மை தொக்கது. பூவை - காயாம்பூ. காயா - கருந்துளசி. பாவம் - பரவிய. மறை - வேதம், கனிவாயும் – கொவ்வைக்கனி போன்ற அதரமும். ஆரம் பூண் மார்பும் - மாலையணிந்த மார்பும். புனை - அணிந்த துகிலும் - பட்டும்= பீதாம்பரமும். தோள் நான்கும் - நான்கு தோள்களும்.
406. ஐந்துபடையும் - பஞ்சாயுதங்களும், அடற்கதிரோன் பேரொளியை - வருத்துகின்ற கிரணங்களையுடைய சூரியனுடைய மிக்க ஒளியை. சிந்தி - கெடுத்து ஒளிரும் - விளங்குகின்ற. சுந்தரம் சேர் - அழகு பொருந்திய.
407-8. கருணைவெள்ள விழியென இயைக்க, உள்ளத்து - மனத்தில். வள்ளத்தனத்தில் - கிண்ணம்போன்ற தனத்தில். தடம்-பெரிய. துளபமாலை - அழகிய துழாய்மாலை. புனத்திடை - காட்டில்.
404 – 407. பேரிளம்பெண், சிறுபுலியூரிறைவனைச் சிந்தித்தபடி. சேவடியும் துகிலும் மார்பும் கையும் நான்குதோளும் (405), ஐந்துபடையும் (406), வாயும் (405), விழியும் முகமும் (407), முடியும் (406), வடிவும் 404 உள்ளத்தமைத்தாள் எனப் பாதாதிகேசமாகக் கூட்டுக. இது, திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதி பிரான் என்னும் திருப்பதிகத்தின் சுருக்காய் அமைந்தது.
409. ஆயன் - இடையன். எறிந்த - அறுத்துத்தள்ளிய. இடையன் எறிந்த மரம் தழையும் குழையும் அற்று வாடிநிற்றல்போல் யானும் மன்மதனம்பால் தாக்குண்டு நிறமும் ஒளியுமற்று மெலிந்தேன் என்றபடி. “இடைய னெறிந்த மரமே யொத்திராமே" (திவ். பெரியதிரு -11-8-6) என்று பெரியாரும் பணித்தார். காய் - சினந்த. களிறு - யானை. யானையென்பது விளாங்கனியிற் பற்றுவதோர் நோய். யானையுண்ட விளங்கனி யென்பது வழக்கு. விளாமரத்திற் கனி, களிறுதின்ற கனியென இயைக்க. யானையுண்ட விளாங்கனி உள்ளீடற்றிருத்தல்போல் யானும் யானை போல்வானாகிய உன்னால் நாணும் நிறையும் கவரப்பட்டு உள்ளீடற்றவளானேன் என்றவாறு வாயமுதம் - அதரபானம்.
------------------------------

410. தாரீர் தழுவத் தடமார்பு தந்துமுகம்
பாரீரென் னாவி பதைப்பேனோ - பார்மகளைப்
411. பொங்கெரியில் மூழ்கப் பொறுத்தீ ரெனைக்காம
வெங்கனலில் வேவ வெறுத்தீரோ - கொங்கையினை
412. பூரிக்க வும்முடைய பொன்மேனி யைத்தழுவிப்
பாரித் திருந்துநலம் பாராமல் ஊரறியாக்
413. காட்டி லெறித்த நிலவாய்க் கமரிடையே
கோட்டு மலர்சொரிந்த கொள்கையாய் - ஈட்டியவென்

410 – 11. தாரீர் - தந்தீரில்லை. தழுவ - அணைக்கும்படி. தடம் - பெரிய. பாரீர் - பார்த்தீரில்லை. ஆவி - உயிர். பதைத்தல் - துடித்தல். பார்மகளை - பூமிதேவியின் மகளாகிய சீதாபிராட்டியை. பூமியிற் பிறந்தமை பற்றிச் சீதாபிராட்டியைப் பார்மகள் என்றார். பார்மகளைப் பொங்கு எரியில் மூழ்கப் பொறுத்தீர் என்றது, இராவணனைவென்று களங்கொண்ட இராம பிரான், சீதாபிராட்டியின் கற்புடைமையை உலகம் அறியும்பொருட்டு அவளை அக்கினியில் முழுகியெழும்படி இட்டகட்டளையை யுட்கொண்டெழுந்தது. பொங்கு எரி - கிளர்ந்தெழும் நெருப்பு. காம வெங்கனல் - காமமாகிய கொடிய நெருப்பு. காமம் நெருப்பினுங் கொடிதென்பது, "ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு, நீருட் குளித்தும் உயலாகும் - நீருட், குளிப்பினும் காமம் சுடுமே குன்றேறி, ஒளிப்பினும் காமம் சுடும்" என்னும் நாலடிச் செய்யுளானும் விளங்கும். வேவ - வேகும்படி. கொங்கையிணை - இரண்டு தனங்களும்.
412. பூரிக்க - பருக்க. நலம் - அழகு.
413-15. மக்கள் வழங்காத காட்டில் எறித்த நிலவும், கமரிடையே கோட்டுமலர் சொரிந்த கொள்கையும் பேரிளம்பெண்ணின் அழகும் வடிவும் பயனின்றிக் கழிதலுக்கு உவமை. கமர் - நிலவெடிப்பு. கோட்டுமலர் - கிளைகளிலுள்ள பூ, ஈட்டிய - நிறைவித்த. வண்மை அழகும் வடிவும் - வளத்தொடு கூடிய அழகும் உடலும். குடிபோகி என்னை விட்டு நீங்க; போகி என்பதனைப் போக எனத் திரிக்க. என் வண்மையழகும் வடிவும் காட் டில் எறித்த நிலவாய்க் கமரிடையே கோட்டு மலர்சொரிந்த கொள்கையாய்க் குடிபோக, என் பெண்மைநலமும் பிழையாம் எனக் கூட்டுக. விண் - ஆகாயத்திலுள்ள. மதியத்தீக்கும் - சந்திரனாகிய நெருப்புக்கும். காமநோயுற்றவர்க்கு மதியும் கடலும் தென்றலும் அன்றிலும் வேய்ங்குழலும் நோயை மிகுவிக்குமாதலின், 'தீக்கும் … … வேய்க்கும் இரையாக்கி விட்டீ’ரென்றாள். அன்றில் - ஒரு பறவை. வேய் - வேய்ங்குழல்.
------------------------------------------

414. வண்மை யழகும் வடிவுங் குடிபோகிப்
பெண்மை நலமும் பிழையாமே - விண்மதியத்
415. தீக்கு மலைகடற்குந் தென்றலுக்கு மன்றிலுக்கும்
வேய்க்கு மிரையாக விட்டீரே - தாய்க்கும்
416. பகையானே னென்று பலபலவுஞ் சொல்லி
வகையாவ தெல்லாம் வகுத்தாள் - முகைமுலையார்
417. பேதை முதலாகப் பேரிளம்பெண் மாதளவா
யோதுமட வாரு மொருகோடி - காதல்

[416]. பகையானேன் - விரோதியானேன். வகையாவதெல்லாம் -தன் விருப்பத்தை நிறைவேற்றுவிக்கும் உபாயமான வார்த்தைகளையெல்லாம். வகுத்தாள் - சொன்னாள். முகை - அரும்பு.
[407-16]. பேரிளம்பெண் சிறுபுலியூரிறைவன் திருவுருவை உள்ளத்தமைத்து உருகினாளாகி (407), அவ்விறைவனை நோக்கி, மாலை வழங்கீர் (408), வாயமுதம் தாரீர், முகம் பாரீர் (410), வெறுத்தீர் (411), இரையாக விட்டீர் (415), அதனால் மரமானேன், கனியானேன் (409), ஆவிபதைப்பேன் (410), உம்முடைய மேனியைத் தழுவி நலமடையாமையால் (412) என் அழகும் வடிவும் (414) காட்டிலெறித்த நிலவாய்க் கமரில் மலர் சொரிந்த கொள்கையாய் (413) ஒழிய, (414), என் பெண்மைநலமும் பிழையாம்; யான் தாய்க்கும் பகையானேன் என்று (மேலும்) வகையாவதெல்லாம் வகுத்தாள் (416) என முடிக்க.
[418]. மடவாரு நின்று மயங்கமறை நான்குங்
கடவாத தாட்கமலக் கண்ணன் - சுடராழி
[419]. ஆய னருமா கடலமுத மண்டமு ண்ட
வாயன் றிருமா மகள் மருவும் - ஆயிரம்பேர்ச்
[420]. சீருடையான் செல்வஞ் செழிக்குஞ் சிறுபுலிசை
யூருடையான் போந்தா னுலா.
[418-20]. கண்ணன், ஆயன், அருமாகடலமுதம், அண்டமுணவாயன், திருமாமகள் மருவும் சீருடையான், ஆயிரம் பேரான், சிறுபுலிசையூருடையான் என்பன பெயரடுக்கு. சிறுபுலிசை - சிறுபுலியூர், மரூஉ. புலிசையை ஊராகவுடையான் உலாப்போந்தான் என்க.
------------
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
௮௱௮௰௧ - ஆண்டு கார்த்திகை மீ ௰௩௨ சுக்ரவாரமும்
அவிட்ட நட்சத்திரமும் பெற்ற சுபயோக சுபகரணத்தில்
வடமலையப்பன் கவிராயனுடைய சிறுபுலியூருலா.
--------------------

This file was last updated on 26 June 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)