மா. இராசமாணிக்கனாரின்
பல்லவர் வரலாறு
பாகம் 3 (அத்தியாயம் 18-26)
pallavar varalARu, part 3 (chapters 18-26)
by M. rAjamAnikkanAr
In Tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பல்லவர் வரலாறு
பாகம் 3 (அத்தியாயம் 18-26)
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
Source:
பல்லவர் வரலாறு
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,
522, டி.டி.கே. சாலை, சென்னை-18.
----------------
18. பல்லவர் ஆட்சி
நாட்டுப் பிரிவு
பல்லவப் பெருநாடு பல இராட்டிரங்களாக (மண்டலங்களாகப்) பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர்
இராட்டிரமும் பல விஷயங்களாக (கோட்டங்களாக)ப் பகுக்கப்பட்டிருந்தது. பல்லவர்
பட்டயங்களில் முண்ட ராட்டிரம் வெங்கோ ராட்டிரம்ட (வேங்கி ராட்டிரம்) முதலிய ஆந்திரப்
பகுதி மண்டலங்களும் துண்டக ராட்டிரம் என்னும் தொண்டை மண்டலமும் குறிக்கப்
பட்டுள்ளன. பல்லவர் ஆண்ட தமிழ் நாட்டில் கோட்டம் நாடு ஊர் என்னும் பிரிவுகள்
காணப்படுகின்றன. ஆந்திர நாட்டுப் பகுதிகளின் பெயர்களையும் தமிழ் நாட்டுப் பகுதிகளையும்
நோக்கப், பல்லவர், தமக்கு முன் இருந்த தமிழ் அரசர் தொண்டை நாட்டுப் பிரிவுகட்கு
வைத்திருந்த பெயர்களை அப்படியே தங்கள் ஆட்சியிலும் கையாண்டு வந்தனர் என்பதை
நன்குணரலாம். தொண்டை நாடு பல்லவர்க்கு முன்னரே 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு
இருந்தது. அவையாவன:
1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம்,
4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம்,
7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9. களத்துர்க் கோட்டம்,
10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம்,
13. பலகுன்றக் கோட்டம், 14.இலங்காட்டுக் கோட்டம், 15. கலியூர்க் கோட்டம்,
16. செங்கரைக் கோட்டம், 17. படுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம்,
19.செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவட்டான கோட்டம், 21. வேங்கடக்கோட்டம்,
22. வேலூர்க்கோட்டம், 23. சேத்துர்க் கோட்டம், 24. புலியூர்க்கோட்டம்.[1]
அரச முறை
பெரும்பாலான பட்டயங்களால், பல்லவர் அரசமுறை தந்தையினின்று மூத்த மகனுக்கு
உரிமையானதாகவே தெரிகிறது. அரசுக்கு ஏற்ற மைந்தன் இல்லாத காலங்களில் அரசனுடைய
தம்பி மகன் பட்டத்தைப் பெறுதல் இயல்பாக இருந்தது. அரசன் திடீரெனப் பிள்ளை
இன்றி இறந்தபோது, அமைச்சர் முதலிய பொறுப்புள்ள மக்கள் ஒன்று கூடி எண்ணிப்
பார்த்து அரச மரபில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முடி புனைதல் வழக்கம். இச் செய்திகளை
எல்லாம் முன்கண்ட பகுதிகளிலிருந்து நன்குணரலாம்.
அரசர் பட்டப் பெயர்கள்
பல்லவ அரசர்கள் தத்தம் தகுதிக் கேற்றவாறு பட்டயங்களைப் பெற்றிருந்தார்கள்.
மகாராசன், தரும மகாராசன். மகா ராசாதிராசன் என்று பட்டங்களைப் பட்டயங்களிற்
காணலாம். முற்காலப் பல்லவருள் சிறந்து விளங்கிய சிவஸ்கந்தவர்மன் தன்னை
‘அக்நிஷ்டோம-வாஜ பேய-அஸ்வமேத ராஜ்’ என்று பட்டயத்தில் கூறிக்கொண்டதைக்
காணப் பல்லவ வேந்தர் தாம் செய்த வேள்விப் பெயர்களையும் தங்கள் பட்டப் பெயர்களாகக்
கொண்டமை நன்கறியலாம். பல்லவர் வீட்டுப் பெயர் ஒன்றாகும்; பட்டம் ஏற்றவுடன்
கொண்ட பெயர் வேறாகும். அதனை ‘அபிடேக நாமம்’ என்னலாம். இராசசிம்மன் என்பது
இயற்பெயர்; அவனுக்கிருந்த (இரண்டாம்) நரசிம்ம வர்மன் என்பது அபிடேகப் பெயர்.
பரமேசுவரன் என்பது இயற்பெயர் அவனுக்கிருந்த (இரண்டாம்) நந்திவர்மன் என்பது
அபிடேகப் பெயர்.[2] இவை அன்றிப் பல்லவப் பேரரசர் பெற்றிருந்த் விருதுப் பெயர்கள்
மிகப் பல ஆகும். அவை ஆங்காங்கே முன்னரே காட்டப்பட்டுள்ளன. அப் பெயர்கள்
அவ் வேந்தர்தம் பலவகை இயல்புகளை நமக்கு விளக்குவனவாகும்.
அரசரும் சமயநிலையும்
பல்லவ வேந்தர் நல்ல உடற்கட்டு உடையவர்கள்; உயரமானவர்கள்: மணிமுடி தரித்த
மன்னர்கள் என்னும் விவரங்கள் மகாமல்லபுரத்தில் உள்ள உருவச் சிலைகளைக் கொண்டு
நன்கறியலாம். மூன்றாம் சிம்மவர்மன்[3] சிம்ம விஷ்ணு முதலிய பல்லவ அரசர்
அனைவரும் வடமொழிப் புலவராக இருந்தவர்; மூன்றாம் நந்திவர்மன் மூன்றாம்
சிம்மவர்மன். அபராசிதவர்மன் என்பவர் சிறந்த தமிழ்ப் புலவராக இருந்தவர். இராசசிம்மன்
சைவ சித்தாந்தத்திற் சிறந்தவன்.[4] பல்லவ அரசமாதேவியாரும் நிரம்பப் படித்தவர்கள்,
ஒழுக்கம் மிக்கவர்கள் என்பது சாருதேவி, ரங்கபதாகை, தர்ம மகாதேவி, சங்கா,
மாறம்பாவையார், பிருதிவீ மாணிக்கம் முதலிய பெண்மணிகள் பற்றிய கல்வெட்டுக்
குறிப்புகளால் நன்கறியலாம்.
பல்லவர் இலச்சினை
பாண்டியர்க்கு மீனும், சோழர்க்குப் புலியும், சேரர்க்கு வில்லும், கங்கர்க்கு நாகமும்,
சாளுக்கியர்க்குப் பன்றியும் இலச்சினை ஆனாற்போலப் பல்லவர்க்கும் நந்தி இலச்சினை
ஆயிற்று. நந்தி இலச்சினை பொதுவாகப் பல்லவர் சைவ சமய உணர்ச்சி உடையவர்
என்பதை நன்கு விளக்குகிறது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த விளக்குகள், இடையே
நந்தி அமர்ந்துள்ள அழகிய கோலம் கொண்ட பல்லவர் இலச்சினை பார்க்கத்தக்கது.
உருவப்பள்ளி, பிகாரப் பட்டயங்களில் சிங்க இலச்சினை காணப்படுகிறது. சிங்க இலச்சினை
கொண்ட பட்டயங்கள் யாவும் போர் முகத்திலிருந்து விடப்பட்டவை ஆகும். வெற்றியைக்
குறிக்கச் சிங்க இலச்சினையை விடச் சிறந்த இலச்சினை கிடைத்தல் அரிய தன்றோ?
பிற்காலப் பல்லவர் அனைவருமே நந்தி இலச்சினையே நன்கு பயன்படுத்தினர். பல்லவர்
கொடி நந்திக்கொடி ஆகும். பல்லவர் காசுகளிலும் நந்தி இருத்தலைக் காணலாம்.[5]
பல்லவ அரசர் வைணவராக இருந்த காலத்திலும் சமணராக இருந்த காலத்திலும்
இந்த நந்திக் கொடியும் நந்தி இலச்சனையும நந்திப் பதிவு கொண்ட நாணயங்களும்
வழக்கில்
இருந்தமை அறியற்பாலது. கூரம்காசக் குடிப்பட்டயங்களில் நந்தி மீது லிங்கம்
அமைந்திருத்தல் இம் முடிபை நன்கு வலியுறுத்துவதாகும். எனவே, தனிப்பட்ட அரசன்
எச்சமயத்தவன் ஆயினும், பல்லவர் ஆட்சியில் சைவமே அரசியல் சமயமாக இருந்தது
என்பது இதுகாறும் கூறிய குறிப்புகளால் நன்கு புலனாகும்.
‘விடேல் விடுகு’ என்பது பல்லவர் விருதுப் பெயர்களுள் ஒன்று எனத் தவறாகக் கருதிய
ஆராய்ச்சியாளர் பலர் ஆவர். இது ‘விடை+வெல்+விடுகு’ என்றிருத்தலே சிறப்புடையது.
இதன் பொருள், ‘வெற்றியுடைய நந்தி இலச்சினையோடு விடுதல் பெற்ற (விடப்பெற்ற)
ஆணை’ என்பதாகும். இப் பொருள் சரியா என்பது ஆராயத்தக்கது.[6]
பல்லவரது கத்வாங்கம்
‘கத்வாங்கம்’ என்பது சிவன் கொண்ட படைகளில் ஒன்றாகும். இதனாற்றான் சிவபெருமான்
‘கத்வாங்கன், கத்வாங்கதரன்’ என்றெல்லாம் கூறப்பட்டுள்ளான்.[7] இக் கத்வாங்கப்
படையைப் பிற்காலப் பல்லவர் தம் சமய அடையாளமாகக் கொண்டிருந்தனர்.[8]
முதலாம் பரமேசுவரவர்மன் கத்வாங்கத்தைக் கொடியிலே பெற்றவன் என்பது காசக்குடிப்
பட்டயம் கூறுகின்றது. இரண்டாம் நந்திவர்மன் பட்டமேற்றபோது அவனுக்குக்
கொடுக்கப்பட்ட பலவகைப் படைகளில் கத்வாங்கமும் ஒன்று என்று வைகுந்தப்
பெருமாள் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.[9]
அமைச்சியல்
சிவஸ்கந்தவர்மன் வெளியிட்ட ஹிரஹத கல்லிப் பட்டயத்தில் ஆமாத்யர் (அமைச்சர்)
கூறப்பட்டுள்ளனர்.[10] பிற்காலப் பல்லவருள் மகேந்திவர்மனான குணபரன்
திருநாவுக்கரசரை அழைத்துவரத்தன் அமைச்சரை அனுப்பினான் என்பதைப் பெரிய
புராணத்தால் அறிகிறோம்.
பெரிய புராணத்ததைக் கொண்டு. மகேந்திரன் காலத்தில் அமைச்சர் இருந்தனர் என்பதை
அறிதல் போல - இரண்டாம் நந்திவர்மன் காலத்திலும் பிற்காலத்திலும் பல்லவர் அரசியல்
அமைப்பில் அமைச்சர்குழு இருந்தது என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறியலாம்.
இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சன் ‘பிரம்மஸ்ரீ ராஜன்’ எனப்பட்டான்.
எனவே, அவன் பிராமணன் என்பது வெளிப்படை மூன்றாம் நந்திவர்மன் அமைச்சன்
நம்பன் இறையூர் உடையான் என்பவன். அவன் முன்னோர் பல்லவர் ஆட்சியில்
அமைச்சராக இருந்தவர். உத்தமசீலன் - ‘தமிழ்ப் பேரரையன்’ என்று ஓர் அமைச்சன்
பெயர் காணப்படுகிறது. எனவே, ‘பிரம்மராஜன்’ (பிரமராயன்), பேரரையன் என்பன
அமைச்சர் பெறும் அரசியல் பட்டங்களாக இருந்தன. ‘தென்னவன் பிரமராயன்’ என்று
மாணிக்கவாசகர் அழைக்கப்பட்டமை காண்க. இதனால் பண்டைத் தமிழ் அரசர், தம்
அமைச்சருடைய சிறப்பியல்புகளை நோக்கிப் ‘பிரமராயன், பேரரசன்’ என்று பட்டங்களை
வழங்கிய முறையைப் பின்பற்றியே பல்லவரும் நடந்து வந்தனர் என்பது நன்கு
விளங்குகின்றது.[11] ‘உத்தம சீலன், நம்பன்’ என்னும் அமைச்சர் ஆணையை நடைமுறையிற்
கொணர்ந்தனர் என்பது தெரிகிறது. அமைச்சர் அரசர்க்கு ஆலோசனையாளராகவும்
இருந்தனர் என்பது வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டால் அறியக் கிடக்கிறது.
உள்படு கருமத்தலைவர்
பல்லவ வேந்தரிடம் உள்படு கருமத்தலைவர் (Private Secretaries) இருந்தனர் என்பதை
ஹிரஹத கல் முதலிய சில பட்டயங்களால் அறியலாம். வாயில் கேட்பார் (Secretaries)
கீழ் வாயில் கேட்பார் (Under Secretaries) முதலியவர்.பல்லவர் ஆட்சியில் அரசியலில்
இடம் பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.[12]
அறங்கூர் அவையம்
பல்லவப் பெருநகரங்களில் அறங்கூர் அவையங்கள் இருந்தன. அவை ‘அதிகரணங்கள்’
எனப் பெயர் பெற்று இருந்தன என்பது மகேந்திரன் எழுதியுள்ள மத்தவிலாசப் பிரகசனத்தால்
தெரிகிறது. அறங்கூர் அவையத்துத் தலைவர் ‘அதிகரண போசகர்’ எனப்பட்டனர்.
அதிகரணம் என்பது பெரிய அறங்கூர் அவையாகும். கரணம் என்பது சிற்றுரில் இருந்த
அறங்கூர் அவையாகும். கரண அலுவலாளர் (தலைவர்) அதிகாரிகள் எனப்பட்டனர்.
பெரிய புராணத்தைக் கொண்டு சில சுவையுள்ள செய்திகளை அறியலாம். சிற்றுர்களில்
சான்றோர் அறங்கூர் அவையத்தலைவராக இருந்தனர். மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்)
காலத்தில் திருவெண்ணெய் நல்லூரில் ஊரவை இருந்தது. அது வழக்கை விசாரித்து
முடிவு கூறியதைப் பெரியபுராணத்தில் விரிவாகக் காணலாம். வழக்கில் முடிவுகூற
மூன்று சான்றுகள் தேவை: அவை, (1) ஆட்சி (2) ஆவணம் (3) அயலார் காட்சி என்பன.
இவற்றுள் ஆட்சி என்பது நீண்ட காலமாகக் கையாண்டு வரும் ஒழுக்கம் (அதுபோக
பாத்தியம்). ஆவணம் என்பது வழக்கை முடிவு செய்ய உதவும் சுவடி, ஒலை முதலிய
எழுத்துச் சீட்டுகள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியைக் கண்டார் கூறுவது.
ஒப்பந்தம் ‘இசைவு’ (Will) எனப்படும். அந்தந்த ஊரார் கையெழுத்துகளையும் கை
ஒப்பங்களையும் தனியாக ஊர்ப்பொது அரசாங்க அறச்சாலைப் பாதுகாப்பில் வைக்கும்
வழக்கம் அக்காலத்தில் இருந்தது. சிற்றுக்களில் இருந்த அறங்கூர் அவைய அலுவலாளன்
காரணத்தான் எனப்பட்டான். பத்திரத்தில் சாட்சிகளாகக் கை ஒப்பமிட்டவர் ‘மேல்
எழுத்திட்டவர்’ எனப்பட்டனர்[13]
இத்தகைய அறங்கூர் அவையங்களில் கைக்கூலி(லஞ்சம்) தாண்டவமாடியது என்பதை
மகேந்திரவர்மனே தான் வரைந்துள்ள மத்தவிலாசத்தில் குறிப்பிட்டுளான். இக்காலத்தில்
உள்ளது போல் உயர்நீதி மன்றம் (High Court) அக்காலத்திலும் இருந்தது. அது தருமாசனம்
எனப்பட்டது. அது பல்லவப் பேரரசின் பொது மன்றம் ஆகும். அஃது அரசனது நேரான
மேற்பார்வையில் இருந்தது. ‘அதிகரணம்’ என்பது குற்ற வழக்குகளை (Criminal)
விசாரிக்கும் மன்றம் எனவும், ‘தருமாசனம்’ என்பது பிற வழக்குகளை (Civil) விசாரிக்கும்
மன்றம் எனவும் கோடல் பொருத்தமாகும்.[14]
அரண்மனை அலுவலாளர்
இவருள் பொற்கொல்லர். பட்டய எழுத்தாளர், புலவர் முதலியோர் சிறப்பாகக் குறிக்கத்தக்கவர்.
(1) அரண்மனைப் பொற்கொல்லர் அரண்மனைக்கு வேண்டிய அணிகலன்களைச்
செய்ததோடு செப்புப்பட்டயங்களில் அரசர் ஆணைகளைப் பொறித்துவந்தவர் ஆவர்.
மாதேவியாகிய அரசிக்கு அணி செய்த பொற்கொல்லர். மாதேவி பெருந்தட்டார், என்று
பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ளர். இப்பொற்கொல்லர் தம் மைந்தரும் பெயரரும்
அரண்மனைப் பொற்கொல்லராகவே இருந்துவந்தனர் என்று பட்டயம்பகர்கின்றது.
அரசனுக்கு அணிகள் முதலியன செய்து வந்த பொற்கொல்லன் அரசர் விருதுப்பெயருடன்
‘பெருந்தட்டான்’ என்பது சேர்த்து வழங்கப்பட்டான். (2) பொற்கொல்லர் அல்லாமல்
செப்புப் பட்டயங்களைத் தீட்டப்பட்டய எழுத்தாளர் என்பவரும் இருந்தனர். அவர்
அலுவலும் வழிவழி வந்ததாகும். (3) அரசர் மெய்ப்புகழை நாளும் பாடும் புலவர்.
பல்லவர் அரண்மனையில் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் கல்வெட்டுகளிலும்
பட்டயங்களிலும் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் கவிகளைப் பாடியுள்ளனர்.
உதயேந்திரப் பட்டயத்தில் அரசனது மெய்ப்புகழை வரைந்த புலவன், மேதாவிகள் மரபில்
வந்தவனும் புகழ்பெற்ற சந்திரதேவன்
மகனுமான ‘பரமேசுவரன்’ எனப்பட்டவன். இத்தகைய புலவர் ‘காரணிகர்’[15]
எனப்பட்டனர்.
பல்லவர் படைகள்
தேர்ப்டை பல்லவரிடம் இருந்ததென்பதை மெய்ப்பிக்கக் கல்வெட்டு - பட்டயச்
சான்றுகளோ, ஓவிய - சிற்பச் சான்றுகளோ இதுகாறும் கிடைத்தில. அவர்கள் யானைகள்,
குதிரைகள், வீரர்கள் பெற்றிருந்தார்கள் என்பது தேற்றம். சிறந்த துறைமுகப்பட்டினமாகிய
மாமல்லபுரத்தில் பழைய காலத்திலிருந்தே மேனாட்டுக் குதிரைகள் இறக்குமதி
செய்யப்பட்டு வந்தமை இலக்கியம் கண்ட சான்று. வைகுந்தப் பெருமாள் கோவில்
சிற்பங்கள் வாயிலாகப் போர்ப்பரிகள் பல இருந்தன என்பது தெளிவாகும். சிறந்த சேனைத்
தலைவர்கள் பல்லவர் காலத்தில் இருந்தனர். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன்
என்னும் தானைத்தலைவன் சிறந்திருந்தான்; நரசிம்மவர்மன் காலத்தில் வாதாவி கொண்ட
சிறுத்தொண்ட நாயனார் சிறந்த சேனைத் தலைவராக விளங்கினார். இரண்டாம்
நந்திவர்மன் காலத்தில் அப் பேரரசனைத் பகைவர் முற்றுகையி லிருந்துகாத்த பெருவீரனான
உதய சந்திரன் என்பவன் படைத்தலை வனாக இருந்தான். மூன்றாம் நந்திவர்மனிடம்
பூதிவிக்கிரம கேகரி என்பவன்தானைத்தலைவனாக இருந்தான். -
பண்பட்ட படைகள்
பல்லவர் படைகள் போரில் வன்மை பெற்றவை. இடைக்காலப் பல்லவர் காலத்தில்
வடபகுதியில் மேன் மதுரை, தசனபுரம் முதலிய இடங்கட்குச் சென்று போர் நடத்தி
வெற்றிபெற்றன; பிற்காலப் பல்லவர் காலத்தில் கடம்பரை நிலைகுலையச் செய்தன. புகழ்
பெற்ற சாளுக்கியரை அடக்கின; தமிழ் வேந்தரைப் பின்னடையச் செய்தன; இரட்டரை
ஒடச் செய்தன. இக் குறிப்புகளை நன்கு நோக்குழிப் பல்லவர் பண்பட்ட போர்த்திறன்
பெற்ற படைகளை வைத்திருந்தனர் என்பது வெள்ளிடை மலையாகும்.
கடற்படை
பல்லவர் கடற்படையும் இளைத்ததன்று. நரசிம்மவர்மன் தன் நண்பனான மானவன்மனுக்கு
உதவிபுரியத் தன் கடற்படையை ஈழத்திற்கு அனுப்பினான்-அப்படைவெற்றிகொண்டது
என்பவற்றை உணர்கையில் பல்லவர் கடற்படை வலிமை தெற்றெனத் தெரிகின்றதன்றோ?
நிருபதுங்கவர்மன் காலத்தில் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவன்
கடற்படை பெற்று ஈழத்தின் மீது படையெடுத்த செய்தியைக் காண்க.[16] இராசசிம்மன்
இலக்கத் தீவுகளை வென்றதாகக் குறிப்புக் காணப்படுகிறது.[17]
இந்த இராசசிம்மன் காலத்தில் பல்லவ நாடு சீனத்துடன் சிறந்த வாணிபம் செய்து வந்தது.
அக் காலத்தில் நாகப்பட்டினம் பல்லவர் துறைமுகப் பட்டினங்களில் ஒன்று. அங்கு இவன்
சீனவணிகர் பொருட்டுப் புத்தர் கோவில் ஒன்றைக் கட்டுவித்துச் சீனப்பேரரசன்
நன்மதிப்பைப் பெற்றான்.[18] அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினமும் சிறந்த துறைமுகப்
பட்டினமாக இருந்த தென்னலாம்.[19] மூன்றாம் நந்திவர்மன் காலத்திலும் பல்லவர்
கப்பல்கள் சையாம் முதலிய கடல்கடந்த நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தன என்பது
‘தகோபா’ கல்வெட்டு முதலியவற்றால் அறியலாம்.
நாடும் ஊரும்
நாடு என்பது சிற்றுரைவிடப் பெரியது. கோட்டத்தை விடச் சிறியது. நாட்டார் என்பவர்
அப்பகுதிக்கு உரிய சான்றோர். ஊரார் என்பவர் சிற்றுரைச் சேர்ந்த அறிஞர். ‘ஆள்வார்’
என்பவர் ஊரை ஆண்ட அவையினர். ஒரு நாட்டிற்கு உட்பட்ட எந்தச் சிற்றுரைப் பற்றிய
செய்தியிலும் இம்முத்திறத்தாகும் கலத்தேதங்கள் கருத்தைத் தெரிவித்து வந்தனர் என்பது
தெரிகிறது. ‘ஊற்றுக் காட்டுக் கோட்டத்து நாட்டாரும் காண்க.’ “திருமுகம் கண்டு.
நாட்டோம் நாட்டு வியவன் சொல்லிய எல்லை போய், பதாகை வலம் செய்து கல்லும்
கள்ளியும் நாட்டிக் கொடுத்ததற்கு எல்லை”[20] எனவரும் பட்டயக் குறிப்புகளைக் காண்க.
பல்லவ மல்லன் விடுத்த பட்டத்தாள் மங்கலப் பட்டயத்தில், ‘நாட்டார்க்கு விட்ட திருமுகம்
நாட்டார் பொழுது தலைக்கு வைத்து எல்லை போய்க் கல்லும் கள்ளியும் நாட்டிப் பதாகை
வலம்செய்து நாட்டார் விடுத்த அறை ஒலைப்படி.... என வருதல் காண்கையில் (1) அரசன்
விடுத்தது திருமுகம் என்பதும், (2) நாட்டார் அதனை நிறைவேற்றிப் பொது மக்கட்கு
அறிவிப்பது அறை ஓலை என்பது தெளிவுறல் காண்க.
ஊர் ஆட்சி
ஊரார் ஆட்சிமுறை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக அறிதற்குரிய சான்றுகள்
கிடைத்தில. ஆயினும் ஊரார், சிற்றுர்ச் சபையாருடன் (ஆள்வாருடன்) கலந்து வேலைகள்
செய்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஊர் அவையார் பெருமக்கள் எனப்பட்டனர்.
இப் பெருமக்கள் உழவு. கோவிற் பணி, அறங்கூறல் முதலிய பல வேலைகளைப் பார்த்து
வந்தனர். ஊர் அவை பல உட்பிரிவுகளாகப் பிரிந்து பல துறைகளிலும் நுழைந்து சிற்றுர்
ஆட்சியைத் திறம்பெறச் செய்து வந்தது.[21] அக்காலத்தில் இத்தகைய ஊர் அவைகள்
ஏறக்குறைய இருபது இருந்தன என்பது பட்டயங்களாலும் கல்வெட்டுக்களாலும் தெரிகிறது.
மேலும் பல ஊர் அவைகள் இருந்திருத்தல் வேண்டும். இத்தகைய ஊர் அவைகளே
கி.பி. 9ஆம் நூற்றாண்டில் (சுந்தரர் காலத்தில்) திருவெண்ணெய் நல்லூரில் இருந்தது;
திருநீலகண்ட நாயனார் காலத்தில் சிதம்பரத்திலும் இருந்தது என்பது பெரியபுராணத்தில்
அறிக.
ஊர் அவைப் பிரிவுகள்
ஊர் அவைக்குள் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் வாரியம் (Committee) எனப்பட்டது.
‘ஏரி வாரியப் பெருமக்கள்’ ‘தோட்ட வாரியப் பெருமக்கள்’ எனப் பல வகுப்புப் பெருமக்கள் கொண்ட
முழு அவையே ஊரவை ஆகும். சிற்றுர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர்
ஆளுங்கணத்தார் எனப்பட்டார். இவர் ஊரவையாரின் வேறானவர். இக்கால நகர அவையாரைப்
போன்றவர் அக்கால ஊரவையார்; இக்காலக் கமிஷனர் முதலிய அரசியல் அலுவலாளர் அக்கால
ஆளும் கணத்தார் ஆவர். கோவில் தொடர்புற்ற பலவகை வேலைகளையும் தவறாது கவனித்துக்
கோவில் ஆட்சி புரிந்து வந்த கூட்டத்தார் அமிர்த சணத்தார்[22] எனப்பட்டார். “திருவொற்றியூர்ப்புறத்து
ஆதம்பாக்கத்துச் சபையோமும் அமிர்த கணத்தோமும் இப்பொன்னால் யாண்டுவரை கழஞ்சின்
வாய் மூன்று மஞ்சாடி...” எனவரும் கல்வெட்டுத் தொடரைக் காண்க. இவர்கள் கோவிலுக்கு
வரும் தானங்களைப் பெறுவர்; கோவில் பண்டாரத்திலிருந்து பொருள்களைக் குறித்த வட்டிக்குக்
கடன் தருவர். இவை தொடர்பான பாத்திரங்களைப் பாதுகாப்பர். கோவில் தொடர்புற்ற பிற
வேலைகள் எல்லாவற்றையும் கவனிப்பர். இவர்கள் ஊர் அவையாருக்குக் கோவில் சம்பந்தமான
செய்திகளில் பொறுப்புள்ளவர் ஆவர்.[23]
இராட்டிர ஆட்சி
இராட்டிரங்களாகிய மண்டலங்களை ஆண்டவர் பெரிதளவு தம்மாட்சியே செலுத்திவந்தனர்.
இவர் நாளடைவில் வழிவழியாக இப் பதவிகளில் நிலைத்துவிட்டனர். பல்லவர் வடவர் ஆதலாலும்,
அவரது பேரரசு வடக்கில் சாளுக்கியர் இரட்டர்களாளும், தெற்கில் பாண்டியராலும் அடிக்கடி
துன்புற்றதாலும் பல்லவர் தமிழ்க் குறுநில மன்னர்களை மிகுதிப்படுத்த வேண்டியவர் ஆயினர்.
தமிழ் மக்கட்கு ஆளும் பொறுப்புத்தர வேண்டியவர் ஆயினர்.[24] இதனை நன்கு நினைந்தே
சோழ அரசைப் பெயரளவில் தனியரசாக விட்டு வைத்தனர் போலும்!
சிற்றரர்கள்
இக் காலச் சிற்றுர்களே பெரும்பாலும் மாறுதல் இன்றி அக்காலத்திலும் இருந்தன. மக்கள் குடி
இருப்புக்குரிய வீடுகள், நன்செய்-புன்செய் நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள், குளங்கள், புறம்போக்கு
நிலங்கள், சிற்றுர்ப் பொது நிலங்கள். கடை வீதிகள், சுடுகாடு-இடுகாடுகள். கோவில்கள்,
கோவில் நிலங்கள் முதலியன இருந்தன. ஒவ்வொரு சிற்றுாரும் நன்கு அளக்கப்பட்டு எல்லைகள்
குறிக்கப்பட்டிருந்தது. சிறிய சிற்றுார்கள் பல பெரிய சிற்றுார்கள் சில: இவை பல்வேறு குடி
இருப்புகளையும் சேரிகளையும் கொண்டவை. பிராமணர் பெரும் பகுதியினராக வாழ்ந்த
சிற்றுரர்களிலும் பல திறந்து மக்கள் குடியிருந்தனர். பலவகைத் தொழிலாளிகளும் வணிகரும்
வாழ்ந்து வந்தனர். இக்கால வழக்கப்படியே கிணறுகள், குளங்கள். கோவில்கள், ஓடைகள்
முதலியன சிற்றுர்களுக்குப் பொதுவாக இருந்தன. நெல் அடிக்கும் களத்துக்கு வரியாக நிலமுடையார்
குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றுர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தி வந்தனர். இத்தகைய
பணிகளை ஊர் அவையார் கவனித்து வந்தனர்.
பிரம்மதேயச் சிற்றரர்கள்
இவை மறையவர் பொருட்டே புதியனவாக உண்டாக்கப் பட்டவை. அவற்றுள் உதயசந்திர
மங்கலம், தயாமுக மங்கலம், பட்டத்தாள் மங்கலம் முதலியன சிலவாகும். இச் சிற்றுார்கள்
எத்தகைய வரியும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியதில்லை. அதனால் இவை நன்னிலையில்
வளர்ச்சியுற்று வந்தன.
தேவதானச் சிற்றூர்கள்
சில சிற்றுர்கள் கோவில்களுக்கென்று விடப்பட்டன. அவை தேவதானச் சிற்றுார்கள் எனப் பெயர்
பெற்றன. அவற்றுள் ஒன்று மூன்றாம் நந்திவர்மனால் யக்ளுேஸ்வரர்க்கு விடப்பட்ட
திருக்காட்டுப்பள்ளி என்னும் (பொன்னேரிக்கு அடுத்த) சிற்றுர் ஆகும். அச் சிற்றுாரின் வருவாய்
முழுதும் கோவிற் பணிகளுக்கே செலவிடப்பட்டது. பல்லவப் பேரரசர் இந் நாட்டில் பல இடங்களில்
பல வகைக் கோவில்களைக் கட்டினார்கள்: பல கோவில்கட்கு நிலதானம் செய்தார்கள்.
இம்முறையால், பல்லவர் ஆட்சியில் கோவில், சிற்றுார்ப் பொதுவாழ்வில் பெரிய மாறுதலைச்
செய்துவிட்டன என்று கூறலாம்.
சிற்றரர்க் கோவில்கள்
கோவிலால் பல ‘குடும்பங்கள்’ பிழைத்தன. ‘தனிப்பரிவாரம், கோவில் பரிவாரம் அமிர்தகணத்தார்’
என்பவர் அனைவரும் கோவில் வருவாயைக் கொண்டு பிழைத்தவர் ஆவர். கோவில்களை
அடுத்து அடியார்கட்கும் ஏழைகட்கும் உணவுச் சாலைகள் நடைபெற்று வந்தன.[25] கோவில்
அல்லது உணவுச் சாலைக்கு ஊராரிடமிருந்தும் வணிகரிடமிருந்தும் இக் கால வழக்கம் போல
‘மகன்மை’ (மகமை அல்லது மகிமை) யாக ஒரு பகுதி நெல், அரிசி முதலியவற்றைப் பல்லவர்
காலத்தில் வசூலித்து வந்தனர் என்பது தெரிகிறது. இச் செய்தியைப் பெருமான் அடிகள் என்று
போற்றப்பட்ட இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு தெளிவாக அறிவிக்கின்றது.[26]
இத்தகைய சத்திரங்கள் அல்லது மடங்கள் பல இந்த நாட்டில் இருந்தன. அவற்றில் காபாலிகர்
காளாமுகர் முதலிய பலவகைச் சைவர் உண்டு வந்தனர். விழாக்காலங்களில் உள் ஊரார்
வெளி ஊரார்
என்னும் அனைவர்க்கும் உண்டி வழங்க வசதிகள் அளிக்கப்பட்டி ருந்தன. அப் பணிக்கு
அரசனும் பிறரும் பொருள் உதவி செய்தனர். திருஆதிரை முதலிய நல்ல நாட்களில் கோவில்
விழாக்கள் சிறப்புற நடந்தன. அவற்றுள் சித்திரைவிசுத்திருவிழா ஒன்று. இது நடைபெற ஒரு
தனிமகன் 15), கழஞ்சுபொன் திருத்தவத்துறை (லால்குடி) கோவிலுக்குச் கொடுத்தான் என்று
ஒரு கல்வெட்டு கூறுகிறது. இங்ஙனம் சிற்றுர்க் கோவில்கள் சிற்றுாரார்க்குப் பக்தியை மட்டும்
ஊட்டுவதோடு நில்லாது. ஊர்மக்கட்குக் கடன் கொடுத்துதவும் அறச்சாலையாகவும்,
அடியார்களை உண்பிக்கும் உணவு நிலையங்களாகவும் இருந்தன. இவற்றோடு, தேவைப்பட்ட
காலங்களில் ஊரார்க்குப் பண உதவி செய்யும் கோவில் பண்டாரமாகவும், கோவில்கள் இருந்து
வந்தன.[27]
பள்ளிச் சந்தம்
தேவதானம், பிரம்மதேயம் என்பன போலப் பள்ளிச் சந்தம் என்பது சமணப் பள்ளிக்கென
விடப்பட்ட இறையிலி நிலங்கள் ஆகும். ஆனால், இப் பள்ளிச் சந்தம் பிற்காலத்ததே ஆகும்.
ஆயின், இதுகாறும் கிடைத்துள்ள பல்லவர் பட்டயங்களில் பெளத்தர்க்கு நிலம் விட்டதாக ஒரு
சான்றும் காணக் கிடைக்கவில்லை என்பது குறிக்கத் தக்கது.[28]
ஏரிப்பட்டி
சிற்றுார்களில் உள்ள ஏரிகளை அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய செலவுக்காகச் சில நிலங்கள்
ஊரவையார் பார்வையில் விடப்பட்டி ருந்தன. அவை ஏரிப்பட்டி எனப்படும். ஏரிப்பட்டியை
மேற்பார்வை யிட்டடவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனப்பட்டனர்.[29] ஒரு குறிப்பிட்ட
அளவையுடைய நிலத்து விளைவிலிருந்து குறிப்பிட்ட அளவுள்ள நெல்லை ஏரிவாரியாகத் தரும்
பழக்கம் பல்லவர் காலத்திருந்தது.
நிலவகை
மிராசுதாரர் நிலங்களில் பெரும்பகுதி “பயல் நிலம்’ என்றும் அரசர்க்குரிய வரியைச் செலுத்த என்று
விடப்பட்ட நிலப்பகுதி ‘அடை நிலம்’ என்றும் குறிக்கப்பட்டன. பயல் நில வருவாயில் பாதியை
நிலத்தவர் பெற்றனர்; மற்றப் பகுதி பயிரிட்டவர் பெற்றனர். அரசாங்க நிலங்களைப் பயிரிட்ட
குடியானவர் சிலர் இருந்தனர். அவர்களது ‘பயிரிடும் உரிமை’ அரசாங்கத்தாரால் தரப்பட்டு
வந்தது. அந்த உரிமை அடிக்கடி மாற்றப்பட்டு வந்தது.[30]
பலவகை வரிகள்
தென்னை - பனை முதலியன
தென்னை மரங்கள் சிறப்பாகப் பிரம்மதேய தேவதானச் சிற்றுார்களில் அரசர் உரிமை பெற்று வரி
செலுத்தாது பயிரிடப்பட்டன. இதனால் பிற ஊர்களில் அவற்றைப் பயிரிட விரும்பினோர் அவற்றின்
விளைவில் ஒரு பகுதியை அரசர்க்கு வரியாகச் செலுத்தி வந்தனர் என்பது பெறப்படுகிறது.
முன்சொன்ன பிரம்மதேய - தேவதானச் சிற்றுர்களில் இருந்த தென்னை - பனை மரங்களிலிருந்து கள்
இறக்குதல் விலக்கப்பட்டிருந்தது. கள் இறக்கினவர் அரசாங்க வரி செலுத்தி வந்தனர்; இம்
மரங்களைப் பயிரிட்டவர் அரசாங்கத்திற்கு ஒரு பகுதி வருவாயை வரியாகச் செலுத்தி வந்தனர்;
வெட்டப்பட்ட மரங்களின் அடிப் பகுதியில் ஒரு பகுதியும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது.
தென்னை பனை மரங்கட்கு உரியவர், சாறு இறக்க வரி கட்டினர். பனம்பாகு செய்ய வரி
கட்டினர். கடைகளில் விற்கப்பட்ட பழைய பாக்கு மரங்களிலும் அரசாங்கம் பங்கு பெற்று வந்தது.
‘கல்லால மரம்’[31] பயிரிடச் சிற்றுாரார் அரசாங்கத்தினிடம் உரிமை பெற வேண்யிருந்தது.
அவ்வுரிமைக்குச் சிறு தொகை செலுத்தவேண்டி இருந்தது; அது ‘கல்லால் காணம்’ எனப்பட்டது.
மருந்துச் செடிகள்
செங்கொடி (செங்கொடி வேலி அல்லது சித்திர மூலம்) என்பது மிகச் சிறந்த மருந்துக்கொடி. இது
பல வகை நோய்களையும் இரணங்களையும் போக்க வல்ல ஆற்றல் பெற்றது. இதனைப்
பயிரிடுவோர் உரிமை பெறவேண்டும். இதற்குச் செலுத்தப்பட்டவரி செங்கொடிக் காணம்
எனப்பட்டது. ‘கருசராங் கண்ணி’ என்பதும் சிறந்த பயன்தரும் செடியாகும். அது பல நோய்களை
நீக்க வல்லது. இச் செடியைப் பயிரிட அல்லது விற்க உரிமை தரப்பட்டது. அவ்வுரிமை
பெறச்செலுத்தப்பட்ட தொகை கண்ணிட்டுக் காணம் எனப்பட்டது.
மருக்கொழுந்து முதலியன
பல்லவர் காலத்துக் கடல் வாணிபம் கிழக்கிந்தியத் தீவுகளிலும் சீயம், சீனம் முதலிய நாடுகளிலும்
பரவி இருந்தது. அதனால் சீனத்திற்கு உரிய ‘மருக்கொழுந்து’ இங்குக் கொணரப்பட்டுப்
பயிரிடப்பட்டதாகும். இதனைப் பயிரிடப் தேவதான - பிரம்மதேயச் சிற்றுர்கள் உரிமை
பெற்றிருந்தன. பிற சிற்றுார்கள் அரசாங்க உரிமை பெற்றே (வரிசெலுத்தியே) பயிரிடவேண்டியவை
ஆயின.
‘நீலோற்பலம்’ எனப்படும் குவளைச் செடிகளை நடுவதற்கும் உரிமைபெற வேண்டும்; விற்பதற்கும்
அரசினரிடம் உரிமை பெற வேண்டும். இவை முறையே ‘குவளை நடு வரி’ எனவும், குவளைக்
கானம்’ எனவும் பெயர் பெற்றன. இக் குவளை மலர் பூசைக்கும்
மருந்துகள் செய்வதற்கும் பயன்பட்டது. இங்ஙனமே செங்கழுநீர் நடுவதற்கும் உரிமை பெற
வேண்டும். பிரம்மதேய - தேவதானச் சிற்றுார்கள் வரி இல்லாமலே இதை நடுவதற்கு உரிமை
பெற்றிருந்தன. இதன் மலர் பூசைக்கு உரியது. வேர் மருந்துக்கு உரியது. இங்ஙனம் அரசாங்க
உரிமை பெற்றுப் பயிரிடப் பட்டவை பல.[32] உப்பெடுத்தலும் சர்க்கரை செய்தலும் அரசாங்கமே
கவனித்து வந்தது.[33]
பிற வரிகள்
கால்நடைகளாற் பிழைப்பவர், ‘புரோகிதர், வேட்கோவர், பலவகைக்கொல்லர், வண்ணார்,
ஆடைவிற்போர், ஒடக்காரர், தரகர், செக்கர், ஆடை நெய்பவர், நூல் நூற்பவர், வலைஞர்,
பனஞ்சாறு எடுப்போர், நெய் விற்போர், மணவீட்டார் முதலிய பல தொழிலாளரும் பிறரும்
அரசாங்கத்திற்குக்குறிப்பிட்டவரி செலுத்தி வந்தனர்’ என்பது பல பட்டயங்களாலும் நன்கு
புலனாகும் செய்தியாகும். சிற்றுர்த் தலைவன் சிற்றுர் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்று
வாழ்ந்தான். அவனுக்கு அவ்வூரார் செலுத்தி வந்த வரி ‘விசக்கானம்’ அல்லது ‘வியவன் காணம்’
எனப்பட்டது. இவ் வரிகள் அன்றி நெல் விற்பவர் அரிசி முதலிய பலவகைக் கூலவகைகளை
விற்போர் குறிப்பிட்ட அளவையுடைய அரிசியோ பிற கூலமோ வரியாகத் தந்துவந்தனர்
என்பதும் தெரிகிறது. இக்காலத்தில் அரசர் தலை இடப்பட்ட திருமுகங்களை நாம் பணம் தந்து
பெறுதல்போல - அக்காலத்தில், செய்திகள் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குள் கொண்டு
செல்ல வசதி இருந்ததோ என்னவோ தெரியவில்லை. அத்தகைய வசதிக்கென்று வரி இருந்ததை
நாம் ஒருவாறு உய்த்துணரலாம். அது ‘திருமுகக் காணம்’ எனப் பெயர் பெற்றது. கத்தி முதலிய
கருவிகளைச் செய்த தொழிலாளர்க்கு விதிக்கப்பட்ட வரி ‘கத்திக்காணம்’ எனப்பட்டது.
பறையடிப்போர் ஒருவகை வரி செலுத்தி வந்தனர். அது ‘நெடும்பறை’ எனப் பெயர்பெற்றது.
அறுவடைக் காலங்களில் அரசியல் திறையாக நெல்லைப் பெற வந்த அதிகாரிகட்கு ஊரார்
உணவளித்தல் வழக்கம்; அதற்கென்று ஊராரிடம் பெற்று வந்த சிறுதொகை ஒருவகை வரியாகக்
கருதப்பட்டது.
அதன் பெயர் ‘எ(ல்) சோறு’ (நாட்சோறு) என்பது. ஊர் மன்றங்களில் வழக்காளிகட்கு விதிக்கப்பட்ட
தண்டம் ‘மன்று பாடு’ எனப்பட்டது. இங்ஙனம் பல துறைகளினும் வந்த வருவாய் அரசாங்கப்
பண்டாரத்தை அடைந்து வந்தது. இதுகாறும் கூறியவற்றால், பல்லவ அரசாங்கம் கணக்கற்ற
துறைகளில் வருவாய் பெற்றுவந்தது என்பதை நன்குணரலாம்.[34]
பல்லவர் அரசாங்கப் பண்டாரம்
பல்லவர் வரலாற்றிற் கண்ட போர்களையும், பல்லவர் கட்டிய-குடைவித்த உலகம் போற்றும்
கோவில்களையும் நினைக்கும்பொழுது, அவர்தம் செல்வநிலை நன்னிலையில் இருந்திருத்தல்
வேண்டும் என்பதை அறியலாம். அரசியல் பண்டாரத்தைப் பொறுப்புள்ளவரே காத்து வந்தனர்.
தண்டன் தோட்டப் பட்டயத்தால், ‘குமாரன்’ என்பவன் பண்டாரத் தலைவன்: அவன் சமயக்கல்வி
உடையவன்; அவா அற்றவன்; நடுநிலை யாளன் சிறந்த ஒழுக்கம் உடையவன். பகைவர்க்கும்
உறவினர்க்கும் ஒரே படித்தானவன் என்பது தெளிவுறத் தெரிகிறது.[35] இப் பேரரசுக்குரிய
பண்டாரத்தலைவன் அன்றி, மாணிக்கப் பண்டாரம் காப்போர் பலர் இருந்தனர். பண்டாரத்திலிருந்து
பொருள் கொடுக்கும் படி ஆணை இடும் அலுவலாளர் ‘கொடுக்கப் பிள்ளை’ எனப்பட்டனர்.[36]
நில அளவை
பல்லவர் ஆட்சிக்குப்பட்ட நாட்டில் நிலம் முழுவதும் செவ்வையாக அளவை பெற்று இருந்தது.
இன்ன பகுதி நிலங்கள் வரியற்றவை என்ற முடியும் பெற்றிருந்தன. நில அளவைக் கணக்குகளையும்
வரி அளவை முதலிய கணக்குகளையும் சிற்றுர் - பேரூர் அரசியல் அலுவலாளர் வைத்திருந்தனர்.
‘பழம் பிரம்மதேயம் இருபத்து நாலு வேலியும் நீக்கி’ என வரும் பட்டயத் தொடரை நோக்குங்கால்,
‘பல்லவர் ஆட்சியில் நில அளவைக்கணக்கு முதலியன உண்டு’ என்பதைத் தெளிவாக உணரலாம்.
ஒரு குறிப்பிட்ட நிலத்தை அளந்ததும் கள்ளியும் கல்லும் நட்டு எல்லை வகுத்தல் அக் காலப்
பழக்கமாக இருந்தது.[37]
நீர்ப்பாசன வசதிகள்
பல்லவர் ‘காடு வெட்டிகள்’ ஆதலால், நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்ய வேண்டியவர்
ஆயினர். ஏரிகள் ‘தடாகம்’ என்று கூறப்பட்டன. பல்லவர் பல ஏரிகளைத் தம் நாட்டில் உண்டாக்கினர்.
அவை அரசர் பெயரையோ, தோண்டப்பட்ட இடத்தைச் சேர்ந்த சிறந்த தலைவன் பெயரையோ
கொண்டதாக இருக்கும். இராசதடாகம், திரளயதடாகம் (தென்னேரி), மகேந்திர தடாகம், சித்திர
மேக தடாகம் (மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம் (கூரம் ஏரி) வைரமேகன் தடாகம்
(உத்திரமேரூர் ஏரி), ‘வாலி வடுகன்’ என்பவன் வெட்டுவித்த வாலி ஏரி, குன்றாண்டார்கோவில்-
(புதுக்கோட்டை).திருச்சிராப்பள்ளியில் ஆலம்பாக்கத்தில் ‘மாரிப்பிடுகன்’ என்பவன் வெட்டுவித்த
‘மாரிப்பிடுகு ஏரி’ வடஆர்க்காட்டுக் கோட்டம் குடிமல்லத்தில் உள்ள வெள்ளேரி தும்பான் ஏரி,
மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் காவேரிப்பாக்கம் ஏரி, வந்தவாசிக் கூற்றத்தில் இருந்த மருதாடு
ஏரி, வேலூர் கூற்றத்தில் உள்ள கனவல்லி தடாகம் முதலியன குறிப்பிடத் தக்கவை. இவையன்றிக்
கல்வெட்டுகளில் குறிபிடப்பெறாத ஏரிகள் பல இருந்தன. இவ்வேரிகளில் பல மழை நீரையே
பெற்றவை; சில ஆற்று நீரையும் பெற்றவை. இவற்றிலிருந்து கால்வாய்கள் பல இடங்கட்கும்
சென்று வயல்கட்கு நீரைப்பாய்ச்சிவந்தன. இந்த ஏரிகள் அல்லாமல் கூவல் (கிணறு)கள் பல
எடுக்கப்பட்டன. இக் கிணறுகள் பெரியவை: வயல் கட்கு நீரை உதவுபவை; இப் பெருங்கிணறுகள்
போன்றவற்றை இன்றும் தொண்டை நாட்டில் காணலாம். திருவெள்ளறை என்னும் வைணவத்
தலத்தில் முத்தரையர் மரபைச் சேர்ந்த கம்பன் அரையன் என்பவன் ‘மாரிப் பிடுகு பெருங் கிணறு’
ஒன்றை எடுத்ததாகப் பல்லவர் பட்டயம் (நந்திவர்மன் காலத்தது) கூறுகின்றது.
பாலாறு காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் பல்லவர்
நாடெங்கும் இருந்தன. அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. திருச்சிராப்பள்ளிக்
கோட்டத்தில் வைரமேகன் (நந்திவர்மன்) வாய்க்கால் இருந்தது. கூரத்தில் இருந்த பரமேசுவர
தடாகத்திற்குப் பாலாற்று நீரைக் கொண்டுவந்தது ‘பெரும்பிடுகு வாய்க்கால்’ என்பது. இப் பெரிய
கால்களிலிருந்து பிரிந்த கிளைக்கால்கள் பலவாம். அவை ‘குரங்கு, கால். கிளைக்கால், ஓடை
எனப் பலவாறு பெயர் பெற்றிருந்தன. அவற்றுள் சில ‘கணபதி வாய்க்கால்’ ‘ஸ்ரீதர வாய்க்கால்’
என்றாற் போல வேறு பெயர்களும் பெற்றிருந்தன.[38] ஆறுகளில் நீர் இல்லாத காலங்களில்
ஊற்றுக்கால்கள் எடுத்து நீர் பாய்ச்சப் பெற்றது. ஏற்றம் இறைத்து வயல்கட்கு நீரைப் பாய்ச்சும்
முறையும் அக் காலத்தில் இருந்து வந்தது. கால் வசதி இல்லாத இடங்களில் வேறு என்ன
செய்யமுடியும்? வாய்க் கால்களில் அங்கங்கு மதகுகள் இருந்து கிளைக்கால்களில் நீரைவிட்டு
வந்தன. சிலபெரிய கால்வாய்கள்மீது பாலங்கள் இருந்தன. அங்கு மதகுகள் இருந்தன. அவை
தண்ணிரை வேண்டிய அளவு சிறிய கால்வாய்களில் விட்டு வந்தன. மதகில் இருந்த சிறப்பு வாய்கள்
‘கூற்றன் வாய்” வாய்த்தலை, தலைவாய், முகவாய் எனப் பலவாறு பெயர் பெற்றன.
ஏரி வாரியம்
இதுகாறும் கூறிவந்த ஏரி, கிணறு வாய்க்கால், மதகு இவற்றை மேற்பார்வையிட்டு வேண்டிய
திருத்தங்களை ஏரிவாரியப் பெருமக்கள் செய்து வந்தனர். பெரிய ஏரிகளில் சீர் திருத்தம்
நடைபெறும்போது, ஏரிக் கரைகளைப் பண்படுத்தத் தோணிகள் பயன்படுத்தப்பட்டன.
இத்திருத்தங்களைச்செய்ய ஊரவையாரிடம் பணம்படைத்த பெருமக்கள் அடிக்கடி பொன்
முதலியவற்றை ஒப்புவித்தல் மரபு. அவர்கள் அத்தொகையை வட்டிக்கு விட்டுப் பெருக்கி
அதனை நல்வழியிற் பயன்படுத்தி வந்தனர். நீர்ப்பாசன வசதிகளை ஊராரும் ஊன்றிக் கவனித்து
வந்தனர். பலர் நிலங்களைத் தானம்செய்து, அவற்றின் வருவாயைக் கொண்டு நீர்ப்பாசன
வசதிகளைத் திருத்தமுறச் செய்து வந்தனர். ஊர் வருமானத்தில் ஒரு பகுதியும் இப் பணிகட்குப்
பயன்பட்டுவந்தது. போதாத இடங்களில் அரசாங்கமும் பொருள் உதவி செய்து வந்தது. இத்தகைய
வியத்தகு முறைகளால் நீர்ப்பாசனம் குறைவின்றிப் பல்லவர் காலத்தில் நடைபெற்று வந்தது.[39]
நீட்டல் அளவை
‘கலப்பை, நிவர்த்தனம், பட்டிகா, பாடகம்’ என்னும் நான்கு அளவைகள் பல்லவர் ஆட்சியில்
இருந்தன. (1) கலப்பை- இரண்டு எருதுகள் பூட்டப்பெற்ற ஒரு கலப்பையைக் கொண்டு குறிப்பிட்ட
ஒரு நேரத்தில் ஒருவன் உழும் நிலத்தின் அளவு கலப்பை எனப்பட்டது. (2) நிவர்த்தனம் ஒருவன்
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து புறப்பட்ட இடத்தை
அடைந்தவுடன் அவனால் எல்லை கோலப்பட்டநில அளவே ‘நிவர்த்தனம்’[40] எனப்பட்டது.
பிற்காலத்தில் 200 சதுரமுழம்
கொண்ட நிலப்பரப்பே ‘நிவர்த்தனம்’ எனப் பெயர்பெற்றது. (3) பட்டிகா (பட்டி) என்பது ஆட்டை
ஓர் இடத்தில் கட்டி அதன் கயிற்றின் உதவியால் சுற்றும் அளவையுடைய நிலப்பகுதியை ஆகும்.
(4) பாடகம் என்பது 240 குழிகொண்ட நிலமாகும். பிற்காலப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும்
‘வேலி குழி’ என்பன அளவைகளாகக் காண்கின்றன. குழி என்பது 144 சதுர அடி முதல் 576
சதுர அடிவரை நாட்டுக்கேற்ப வழங்கப்பெற்றது. நிருபதுங்கன் காலத்தில் ஒரு குழி 81 சதுர
அடி அளவை உடையதாக இருந்தது.
இந்த அளவைகளோடு (1) நாலு சாண் கோல், (2) பன்னிரு சாண் கோல், (3) பதினாறு சாண்
கோல் முதலிய நீட்டல் அளவைகள் இருநதன என்பதும் கல்வெட்டுகளால் அறியத்தகும்
செய்தியாகும்.[41]
முகத்தல் அளவை
நாழிகள் பல பெயர்கள் பெற்றிருந்தன; அவை, (1) கரு நாழி (2) நால்வா நாழி (3) மாநாயநாழி (4)
பிழையா நாழி (5) நாராய(ன) நாழி முதலியன. உறி என்பது ஒருமுகத்தல் அளவைக் கருவியாகும்.
ஒரு கல்வெட்டில் ‘பிருதி(வீ) மாணிக்கஉறி’ என்னும் பெயர் காணப்படுகிறது. ‘பிருதிவீ மாணிக்கம்’
என்பது நிருபதுங்கவர்மன் மனைவி பெயராகும் இங்ஙனம் பல அளவைகள் கோப்பெருந்
தேவியர் பெயர்களை கொண்டனவாக இருந்திருக்கலாம். ‘விடேல் விடுகு உழக்கு என்பது
பொதுவாக மூத்திரையிடப் பட்ட பல்லவர் கால முகத்தல்கருவியாகும். அஃது எல்லாப் பல்லவ
அரசர்காலத்தும் இருந்து வந்ததாகலாம் எண்ணெய், நெய் பால் முதலிய அளக்கப் பயன்பட்ட
சிறிய அளவை ‘பிடி’ எனப்பட்டது. இவை அன்றி, நெல்முதலியன அளக்கச் சோடு, நாழி,
மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் முதலியன பயன்பட்டன.[42]
நிறுத்தல் அளவை
கழஞ்சு, மஞ்சாடி என்பன பொன் முதலியன நிறுக்கும் அளவைகள், கழஞ்சி’ என்பது பல
பட்டயங்களில் காணப்படும் அரசாங்க அளவை (Standard Weight) ஆகும். கழஞ்சின் பன்னிரண்டில்
ஒரு பாகம் ‘மஞ்சாடி’ ஆகும். அதனாற்றான் பட்டயங்களில், கழஞ்சிற்கு வட்டி குறிப்பிட்ட
போதெல்லாம் ‘மஞ்சாடி’ அளவை குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லவர் காசுகள்
பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவற்றின்
காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டி லிருந்து கூறலாம். அவை பிற்காலப் பல்லவருடையன
என்னலாம். பெரும்பாலான காசுகள் நந்தி இலச்சினை பெற்றவை. சில, இரண்டு பாய்மரக்கப்பல்
இலச்சினை கொண்டவை. முன்னது பல்லவரது சைவ சமயப் பற்றையும் பின்னது கடல்
வாணிபத்தையும் குறிப்பவை; காசின் மறுபுறம் சுவஸ்திகா, வேள்விக்குரிய விளக்கு, சங்கு,
சக்கரம், வில், மீன், குடை, சைத்தியம் (கோவில்), குதிரை. சிங்கம் முதலியன காசுதோறும்
வேறுபட்டுள்ளன. -
(1) எல்லாக்காசுகளும் சிறந்த வேலைப்பாட்டுமுறை பெற்றவை. டாக்டர் மீனாட்சி என்னும்
ஆராய்ச்சித்திறன் பெற்ற அம்மையார்,தாம் சென்னைப் பொருட்காட்சிச்சாலை களிற் சோதித்த
காசுகளில் பொற்காசுகளாக இருந்த ஆறும், முதலாம் மகேந்திரன் காலத்தவையாக இருக்கலாம்
என்று கருதுகின்றனர்.[43] அக்காசுகளின் மீது கதாசித்ரா என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அவை ‘கடாக-(கடாவ)- சித்ர (காரப்புலி)’ என்பவற்றைக் குறிப்பனவாகக் கொண்டு அம்மையார்,
அவை ‘காடவனாகிய எத்திரகாரப்புலி (மகேந்திர வர்மன்) என்பவன் காலத்தவை’ என்று
கூறுதல் பொருத்தமாகவே காணப்படுகிறது. பல்லவர் வரலாற்றில் பண்பட்ட ஆராய்ச்சி உடைய
அவ்வம்மையார் கூற்றுக்கோடற்பால்தேயாம்.
(2) நந்தி முத்திரை கொண்ட சில காசுகளில் ‘ஸ்ரீபரன், ஸ்ரீநிதி’ என்பன குறிக்கப்பட்டுள்ளன.
இப்பெயர்கள் இராசசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனைக் குறிப்பன என்பது
மகாபலிபுரம் - தருமராசர் தேரில் உள்ள தொடர்களாலும் கயிலாசநாதர் கோவிலில் உள்ள
கல்வெட்டுகளாலும் நன்கறியலாம். எனவே, இக்காசுகள் அவன் காலத்தன ஆகும்.
(3) நந்தி முத்திரையுடன் மீன் பொறிக்கப்பட்டுள்ள காசுகளிலும், ஸ்ரீபரன், ஸ்ரீநிதி என்பன
காணப்படுகின்றன. ‘மீன்’ பாண்டியர்க்கே உரியது. இராசசிம்மன் காலத்தில் பாண்டிய மன்னனாக
இருந்தவன் கோச்சடையன் இரணதீரன் என்பவன். இவன் பெரிய புராணம் கூறும் நின்றசீர்
நெடுமாறனுக்கும் மங்கையர்க்கரசியாருக்கும் பிறந்தவன். இவன் மகன் இராசசிம்மன் எனப்
பெயர் பெற்றான். இதைக்கொண்டும் மீன் கொடி பல்லவர் காசுகளில் இருத்தலைக் கொண்டும்,
கோச்சடையன் இரணதீரன் இராசசிம்ம பல்லவனின் மகனை மணந்து, பிறந்த குழந்தைக்குப்
பல்லவ இராசசிம்மன் (பாட்டன்) பெயரையே இட்டிருக்கலாம் என்று அறிஞர்[44] கருதுகின்றனர்.
அங்ஙனமாயின், பல்லவப் பேரரசை மருமகனான கோச்சடையன் பெருமைப்படுத்தி இருக்கலாம்.
அதற்கு அடையாளமாகப் பல்லவ மன்னன் பாண்டியன் இலச்சினையைத் தன்காலத்துக் காசில்
பொறித்தல் முறையே. இதனை வலியுறுத்த,
இராசசிம்ம பல்லவனிடம் சீன தூதனாக வந்த ஒருவன் சீனப் பேரரசனால் கொடுக்கப்பட்ட
மீன் உருவம் அமைக்கப்பட்ட பை ஒன்றுடன் வந்தான் என்னும் குறிப்பினால், இராசசிம்மன்
பாண்டியரும் பாராட்டத்தக்க நிலையில் பேரரசனாக இருந்தான் என்பதைச் சீனப் பேரரசனும்
மதித்துவந்தான் என்று விளக்குகின்றது என்று அறிஞர் கருதுகின்றனர்.[45]
(4) நந்தி இலச்சினைக்கு மேல் ‘மானபரா’ என்பது பொறிக்கப்பட்டுள்ள காசுகள் சிலவாகும்.
இக்காசுகளின் பின்புறம் சங்கு ஒன்று பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளதே போலப் பொறிக்கப்
பட்டுள்ளது. இதனைக் ‘கதிரவன்’ என்று எலியட் கூறுவர். இஃது ‘அதிமான’ என்று தன்னைக்
கூறிக்கொண்ட இராசசிம்மனது காசாகாலம் என்று டாக்டர் மீனாட்சி அம்மையார் கருதுகின்றனர்.
‘சங்கு’ தெளிவாகப் பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளதை நன்கு நோக்க, இக்காசுகள்
வைணவப் பற்றுடைய பல்லவ அரசர் காலத்தவை எனக்கோடலே பொருத்தமாகும். (பிற்காலப்
பல்லவருள்) வைணவப் பற்றுடையராக இருந்தவருள் சிறப்பாக முதலாம் நரசிம்மவர்மன்,
இரண்டாம் நந்திவர்மன் என்போரைச் சொல்லலாம். ஆதலின், சங்கு பொறிக்கப்பட்ட காசுகள்
இவர்கள் காலத்துக் காசுகளாக இருக்கலாம். வழிவழியாக வரும் நந்தி இலச்சினைக்குப்பின்
தாம் மேற்கொண்டசமயத்தைக் குறிக்கச்சங்கு சக்கரம் இவற்றைக் காசுகளின் பின்புறத்தில்
பொறிக்க இவ்வைணவ அரசர் விழைந்திருத்தல் இயல்பே அன்றோ?
(5) நண்டு, ஆமை, கப்பல் முதலியன பொறிக்கப்பட்ட காசுகள் பல்லவரது கடல் வாணிபச் சிறப்பைக்
குறிப்பன ஆகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.
(6) பல்லவர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொன் காசுகள் இருந்தமை குறிக்கப்பட்டுள்ளது.
பொன்[46] என்பது ஒரு காசின் பெயர் பழங்காசு என்பன சிறந்த வேலைப்பாடு கொண்டவை;
‘பழங்காசினோடு உறைப்ப துளைப் பொன்’ என வருதல் காண, பிற்காலக் காசுகள் அப்பழங்காசு
நிலையில் இருந்தனவா என்பது சோதிக்கப்பட்டன[47] என்பது அறியத்தகும். பழங்காசு நிலையில்
இல்லாத பொற்காசுகள் வாசி இன்றி (வட்டம் இல்லாமல்) செல்லாவாயின. இவ்வரிய நுட்பமான
செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியக்கிடத்தல் காண்க. அம்மட்டமான காசுகளைக்
‘கறைகொள் காசு’ என்று சம்பந்தர் கூறல் காண்க.[48] துளைப்பொன் என்பது துளையிடப்பட்ட
பொற்காசு, ‘விடேல் விடுகு - துளையிட்ட செம்பொன்’ என்பது துளையிடப்பட்ட விடேல்
விடுகு முத்திரை பெற்ற காசாகும். கழஞ்சுக் காசு என்பது ஒரு கழஞ்சு எடையுள்ள பொற்காசு.
பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்
(1) மழை பெய்யாவிடில் பயிர் விளையாது; நாட்டில் பஞ்சம் ஏற்படுதல் இயற்கை. அத்துடன்
ஓயாத பெரும் போர்களாலும் அரசியல் நிலைகுலைய-மூலபண்டாரம் வற்ற-அவ்வந்நாட்டுப்
பண்டாரங்கள் வற்ற-நாட்டில் பஞ்சக் கொடுமை தலைவிரித் தாடலும் இயல்பு பல்லவப் பேரரசில்
தொண்டை நாடு ஆற்றுவளம் நிரம்பப்பெற்றதன்று. மழை இன்றேல் ஏரிகளில் நீர் இராது.
பல்லவர் ஆட்சிக்குட்பட்ட சோணாட்டில் ‘செவிலித்தாய்’ என்ன ஒம்பும் தீம்புனற்கன்னியாறு
மழை பெய்யாவிடில் என்ன செய்யும்! ஆற்றில் மழை நீர் வரினும், நாட்டின் செல்வ நிலை
இழிவுற்றிருப்பின், நிறைந்த விளைச்சலை எதிர்பார்த்தல் இயலாது. அரசியல் மூலபண்டாரம்,
நாட்டுப் பண்டாரம், ஊர்ப்பண்டாரம் என்பவை போரால் வற்றி வயல்களில் நீர்மட்டும்
குறைவற இருந்தும் பயன் என்ன? பணமும் இன்றி மழையும் இல்லையேல் நாடு சொல்லொணா
வறுமைப் பிணியுள் ஆழ்ந்து விடும். இத்தகைய துன்ப நிலையே அப்பர், சம்பந்தர் காலத்திய
முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சி இறுதியில் அல்லது பரமேசுவரவர்மன் ஆட்சி இறுதியிலும் -
பிற்பட்டபல்லவர் காலங்களிலும் அடிக்கடி உண்டானது. சைவசமய குரவர் திருவிழிமிழலையில்
இருந்தபொழுது கொடிய வறுமை நோய் நாடெங்கும் பரவியது. அடியார்கள் உணவின்றித்
துன்புற்றனர். அப்பொழுது சமய குரவர் திருவீழிமலைப் பெருமானை வேண்டிக் காசு பெற்று
அடியாரை உண்பித்தனர் என்று பெரிய புராணம் கூறும். இக்கூற்றால் நாம் உணரத்தக்க
வரலாற்றுச் செய்திகள் இரண்டு. அவை: (1) அவர்கள் காலத்தில் பல்லவ நாட்டில் கொடிய
பஞ்சம் ஏற்பட்டது; (2) கோவில் பண்டாரம் அடியார் உணவுக்காகப் பொற்காசுகளை நல்கியது[49]
என்பன. இப்பொழுது நடைபெற்ற உலகப் பெரும் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் பேரரசின்
மூலபண்டாரம் எந்த அளவுவற்றிவிட்டது என்பதை நாம் நன்கு உணர்கின்றோம் அல்லவா?
இந்த உணர்ச்சியுடன் அக்கால நிலையை நோக்கின், உண்மை புலனாகும்.
(2) நரசிம்மவர்மன் காலத்துப் பஞ்சம் கல்வெட்டுச் சான்றுகள் பெற்றிலது. முதலாம் பரமேசுவர
வர்மனுக்கும் சாளுக்கிய விக்கிரமாதித்தற்கும் (கி.பி. 665-680) நடந்த கொடிய போர் முன்பே
விளக்கப்பட்டதன்றோ? அப்போரில் பாண்டியர், சோழர் முதல் பலரும் தொடர்புற்றனர்.
இங்ஙனம் நடைபெற்ற பெரும் போரினால் மூல பண்டாரம் வற்றக்கேட்பானேன்? நாடு
வறுமை கொள்ள இதைவிடச் சிறந்த காரணம் வேறென்ன வேண்டும்? இதுகாறும் கூறப்பட்ட
பெரும் போர்களின் விளைவாலும், இராசசிம்மன் காலத்தில் கொடிய வறுமை உண்டானது.
இதனை அவன் காலத்து அவைப்புலவரான தண்டி என்பார் பின்வருமாறு கூறியுள்ளார்
அது, “சோழ பாண்டிய நாடுகள் பகைவன் கொடுமையால் வெந்துயர் உற்றன; மங்கையர்
சீரழிக்கப் பட்டனர்; வேள்விகள் குன்றின, களஞ்சியங்கள் காலியாயின. மதிப்புக் கெட்டது.
தோட்டங்களும் மரங்களும் அழிக்கப்பட்டன; பலர் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர்;
வேள்விச் சாலைகள் அழிக்கப்பட்டன... செல்வர் கொல்லப்பட்டன. சாலைகள் பழுதுபட்டுக்
கிடந்தன; பல்லவ நாட்டில் தண்டியின் உற்றார் உறவினர் மாண்டொழிந்தனர்; தண்டி
உணவின்றி நாடு முழுவதும் சுற்றி அலைந்தார்; பல்லவப் பேரரசு தத்தளித்தது: காஞ்சிநகரம்
கை விடப்பட்டது; அவைப் புலவரும் கற்றாரும் நாடு முழுவதும் அலைந்து திரிந்தனர்,” என்பது.[50]
(3) மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்) தெள்ளாற்றில் தன் பகைவரான தமிழ் வேந்தரை
முறியடித்தான். அக்காலத்தில் சோழர் சேனைத்தலைவராக இருந்தவர். கோட்புலி நாயனார்[51]
ஆவர். பல்லவர்க்கும் தமிழ் அரசர்க்கும் இருந்த மனக் கசப்பையும், போரில் கோட்புலியார்
காட்டிய வீரத்தையும் சுந்தரர் தம் பதிகங்களில் பாடியுள்ளார்.[52] இக் கோட்புலி நாயனார்
போருக்குச் சென்ற பிறகு நாட்டில் பெரும் பஞ்சம் உண்டானது. அவர் சிவனடியார்க்கு என்று
வைத்திருந்த நெல்லை அவர் உறவினர் உண்டுவிட்டனர்.[53] இக்குறிப்பினால், சுந்தரர்-மூன்றாம்
நந்திவர்மன் கோட் புலியார் காலத்தில் (கி.பி. 825-850) தென்னாட்டில் பஞ்சம் உண்டானது
என்பதை அறியலாம். இங்ஙனம் பல்லவர் ஆட்சியில் பல காலங்களில் பஞ்சம் உண்டாயின
என்பது தேற்றம்.
பஞ்சம் ஒழிப்பு வேலை
பெரும் போர்களில் ஈடுபட்டிருந்த பேரறிவும் பெரும் பக்தியும் கொண்ட பல்லவப் பேரரசர்
சிற்றுர்களில் முன்னெச்சரிக்கையாக, அல்லது போர் நடந்தபிறகு (இயன்ற வரை குடிகட்குத்
துன்பம் உண்டாகாமற் காக்கப்) பஞ்ச வார வாரியம் ஏற்படுத்தி இருந்தனர் என்பது ஊகித்து
உணர்தற்பாலது. ஒவ்வொரு சிற்றுரிலும் அறுவடையானவுடன் பஞ்ச ஒழிப்பிற்கென்று ஒரு
பகுதி நெல் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதனைச் சேர்த்தல், மேற்பார்வை இடல். காத்தல், பஞ்ச
காலத்தில் குடிகட்குத் தந்து உதவல் முதலிய
வேலைகளைச் செய்து வந்தவர் கூட்டமே ‘பஞ்சவார வாரியம்’ எனப்பட்டது. குடிகள் கொடுத்த
நெல் ‘பஞ்ச வாரம்’ (வாரம்-பங்கு) எனப்பெயர் பெற்றது. இது பற்றிய செய்தி மூன்றாம் நந்திவர்மன்
காலத்துக் கல்வெட்டு ஒன்றில், “திருக்காட்டுப் பள்ளிப் பஞ்சவாரம் ஆயிரக்காடி நெல்,” என்னும்
தொடரில் காணப்படுகிறது.[54]
அறப்பணிகள்
ஒருவரை அவரது செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலிற் பொன் கொடுத்து
விளக்கு வைத்தலோ வேறொன்று நடைபெறச் செய்தலோ அக்காலப் பழக்கங்கள் பலவற்றுள்
ஒன்றாகும். மாடு பிடிப்போரில் மாண்டவீரர் இருவர் நினைவுக்காகப் பல்லவர் சிற்றரசன்
ஒருவன், குறிப்பிட்ட மதிப்புள்ள பொன்னைக் கோவிலுக்குத் தானம் செய்து, அவர்
நினைவுக்கறிகுறியாக விளக்கிடச் செய்தான்.[55]
நிருபதுங்கன் ஆட்சிக்காலத்தில் இத்தகைய செயல்கள் சில நடைபெற்றன. அவற்றுள் ஒன்று
திருத்தவத் துறைச் சிவன்கோவில் கல்வெட்டுக் குறிக்கும் செய்தியாகும். பூதிகந்தனிடம்
பொன்னைப்பெற்ற இடையாறு நாட்டு அவையார், அப்பொன்னுக்கு வட்டியாக ஆண்டு
தோறும் நெல் அளந்து கொடுத்துச் சித்திரை விசுத்திருவிழாவை நடத்த உடன்பட்டனர்.
அப்பொன் பூதி கந்தனின் தாயார் செய்த செயல் ஒன்றைப் பாராட்டிக் கோவிலுக்குக்
கொடுக்கப்பட்டதாகும்.[56]
‘பிள்ளைப்பாக்கக் கிழார்’ என்பவன் செய்த நற்செயல் ஒன்றின் நினைவிற்காக, அவன்
தம்பியான அய்யாக்குட்டி யார் என்பவன் பிள்ளைப்பாக்கத்தில் இருந்த தனது நிலத்தில்
ஒரு பகுதியை அவ்வூர்ச் சிவன் கோவிலுக்கு எழுதி வைத்தான்.[57]
இம்மூன்று சான்றுகளாலும், பல்லவர் காலத்தில் தனிப்பட்டவர் நினைவிற்காகவும் அவர்
தம் மதிப்பிடத்தக்க செயலுக்காகவும் குறிப்பிட்ட தொகையை அல்லது நிலத்தைக் கோவிலுக்
களித்து அறப்பணி செய்தல் மரபு என்பது நன்கு புலனாகிறது.
உருவச் சிலைகள்
பல்லவர் காலத்தில் உருவச் சிலைகள் செய்யப்பட்டன என்பதற்குக் கல்வெட்டுச் சான்று
இல்லை எனினும், ஆதிவராகர் கோவிலில் உள்ள சிம்ம விஷ்ணு, மகேந்திரவர்மன் உருவச்
சிலைகளையும், தந்திவர்மன் ஆட்சிமுதல் தோன்றிய வீரக்கற்களில் பொறிக்கப்பட்ட உருவச்
சிலைகளையும் நோக்க, இவ்வேலை பல்லவர் காலத்திற் சிறப்புற்றதென்பதை நன்கு உணரலாம்.
வீரக் கற்கள்
பல்லவர் காலத்து வீரக்கற்கள் மீது தொல்காப்பியர் காலத்துப் பழக்கம் போலவே “பெயரும் பீடும்
எழுதி” உருவமும் பொறித்தல் மரபு. ஆனால் இக்கற்கள் அனைத்தும் தந்திவர்மன் கால முதலே
புறப்பட்டவை. என்னை? அவன் காலத்திற்றான் பல்லவப்பெருநாடு சீர்குலையத்தொடங்கியது.
பல பக்கங்களிலும் எல்லையிற் சுருங்கத் தொடங்கி யது ஆதலால் என்க. யாண்டும் போர்களும்
சிறு கலகங்களும் நடந்தன. இக்கற்கள் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, செங்கற்பட்டுக்
கோட்டங்களிற்றாம் கிடைக்கின்றன.
திருத்தவத்துறை (லால்குடி)யை அடுத்த சென்னி வாய்க்கால் என்ற இடத்திற்கு அருகில் வீரக் கல்
ஒன்று உண்டு. அதில் ஒரு மறையவன் உருவம் அம்பைக் கழுத்திற் செருகுதல் போலப் பொறிக்கப்
பட்டுள்ளது. அதன் அடியில், “பாண அரசன் படையெடுப்பால் மடம் ஒன்று அழிந்தது. அதனைக்
காக்க முயன்ற இம் மறையவனான சத்தி முற்ற தேவர் இறந்தான்,” என்பது பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி மூன்றாம் நந்திவர்மன் காலத்தது.[58]
கம்பவர்மன் ஆட்சி ஆண்டில் இரண்டு இடங்களில் வீரக்கற்கள் நடப்பெற்றன. ஒன்று ஒலக்கூரில்
நடப்பெற்றது. ஒலக்கூரைப் பகைவர் தாக்கியபோது எதிர்த்து நின்ற வீரருள் மாந்திரிகள் ஒருவன்.
அவன் அப்பொழுது நடைபெற்ற போரில் இறந்தான் என்று கல்வெட்டுக் குறிக்கிறது. ஒலக்கூரைக்
கம்பவர்மனே கைப்பற்ற எதிர்த்தான் போலும்![59]
கம்பவர்மனைத் தாக்க வந்த பிருதிவி கங்கராயருடன் உண்டான பூசலில் ‘வாணராயர்’ என்னும்
தலைவன் ஒருவன் மாண்டான். அவனுக்கு வட ஆர்க்காடு கோட்டத்து மேல் பட்டியில் வீரக்கல்
நடப்பெற்றதென்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[60]
சில சமயங்களில் வீரக்கல் நடாமல் இறந்தவர் நினைவுக்கு அறிகுறியாகக் கோவில்களில்
விளக்கேற்றல் முதலிய பணிகட்காகப் பொருள் அளித்தலும் வழக்கமாக இருந்தது. மாடுபிடிச்
சண்டையில் ‘விடை போற்பட்ட’[61] இருவர் நினைவாகப் பாண அரசன் ஒருவன் பிடாரி
கோவிலுக்குப் பணம் அளித்தான் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[62] இது தந்திவர்மன்
காலத்துச் செய்தியாகும்.
நிருபதுங்கன் காலத்து வீரக்கற்கள் இரண்டு ஆம்பூரில் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிலும் மேலே
தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இறந்த வீரன் தன் இடக்கையில் வில்லும் வலக்கையில்
வாளும் ஏந்தியுள்ளன். அவன் அம்புகள் தைத்த நிலையில் காண்கின்றான். அவன் தலை
இரண்டு கவரிகட்கிடையே காண்கின்றது. இதன் குறிப்பு, அவன் வீரசுவர்க்கம் அடைந்தான்
என்பதாகும். அவனுக்குப் பின்புறம் ஒரு கூடையில் பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு
வீரற்கு எதிரில் விளக்கும் பின்புறம் பானை ஒன்றும் விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளன.
இவை யாவும் இறந்தார்க்கு வைக்கும் வழிபாட்டுப்பொருள்கள் ஆகும். வீரர் இருவரும்
அகளங்ககாடவராயன் பிள்ளையும் தமையன் மகனும் ஆவர்.[63]
நித்தார் நினைவுக் குறிகள்
நீத்தார்க்குக் கோவில் கட்டல் நாட்பட்ட வழக்கம் என்பதை விரக்கல் கொண்டும் கண்ணகி
கோவில் கொண்டும் நன்கறியலாம். இங்ஙனம் கோவில் கட்டும் பழக்கம் பல்லவர் காலத்தும்
இருந்தது. செங்கற்பட்டுக் கோட்டம் பொன்னேரிக் கூற்றத்தைச் சேர்ந்த சத்தியவேடு என்னும்
சிற்றுளில் உள்ள ‘மதங்கப்பள்ளி’ இங்ஙனம் அமைந்ததே ஆகும். அஃது இன்று சிவன் கோவிலாக
இருந்து வருகிறது. மதங்கன் பெரிய சிவனடியராக இருந்து இறந்தவர் போலும்.[64]
கம்பவர்மன் காலத்துப் பள்ளிப்படை ஒன்று உண்டு. அஃது இராசாதித்தன் என்ற தலைவன் தன்
தந்தையான பிருதிவி கங்கராயன் என்பவன் இறந்த இடத்தில் எழுப்பிய சமாதி கொண்ட
கோவிலாகும்; தம் அப்பனாரைப் பள்ளிப் படுத்த இடத்து ஈசராலயமும் அதீ தகரமும் (சமாதியும்?)
எடுப்பித்துக் கண்டு செய்வித்தான் என்பது கல்வெட்டு.[65]
--------
References
[1]. Chingleput, Manual p.438.
[2]. S.I.I Vol.IV Vaikuntaperumal Koil Inscription.
[3]. இவன் பெரியபுராணம் கூறும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்று ஆராய்ச்சியர்
கருதுகின்றனர். Vide Mysore Archaeological Annual Report 1925, pp-9.11
[4]. S.I.I. Kailasanathar Temple Ins.
[5]. Walater Elliet’s “Coins of South India’ Nos. 31 to 38; 65, 57.
[6]. Dr. C. Minakshi’s “Administration and social Life under the Pallavas’ pp.42, 43, 44.
[7]. அப்பர் தேவாரம், ஐந்தாந்திருமுறை ()
[8]. S.I.I Vol. II p.357
[9]. S.I.I. Vol, IV, No.135.
[10]. Ep.Indica Vol.II, p.5.
[11]. Dr.C.Minakshi’s “Administration & Social Life under the Pallavas, p.52.
[12] . S.I.I.Vol.II. Page 361.
[13]. C.K.Subramania Mudaliar’s “Sekkilar’ pp.68-72 (Madras University Lectures, 1930)
[14]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’ pp. 53-55.
[15]. இறையனார் அகப்பொருளுக்கு ‘இன்ன உரைதான் சரி’ என்பதை உணர்த்தக் ‘காரணிகள்’
ஒருவன் வேண்டும் என்று இறைவனிடம் குறை இரந்த செய்தி களவியல் உரையிற் காண்க.
எனவே ‘காரணிகள்’ பட்டயம் தீட்டுவதிலும், படிப்பதிலும் தேர்ந்தவன் என்பது தேற்றமாதல்
காண்க.
[16]. EP, Indica, Vol. XVIII, P.13,
[17]. Ibid p.152. 370.
[18]. Dr.C.Minakshi’s Administration and Social Life under the Pallavas” pp.68-69
[19]. சம்பந்தர் தேவாரம் பக்.14-15. (கழகப் பதிப்புப்)
[20]. S.I.I. Vol. II part, pp. 109, 110.
[21]. R.Gopalan’s “Pallavas of Kanchi’ pp.154-156
[22]. இந்த அமிர்த கணத்தார் ஆட்சி இருந்தனமயாற்றான் அப்பர் சமபந்த்ர், சுந்தரர் காலங்களில்
கோவில்கள் உயர்நிலையில் இருந்தன. நாயன்மார்க்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.
அக்காலத்தில் கோவில்களில் ஆடல் - பாடல்கள், விழாக்கள் முதலியன குறைவின்றி
நடைபெற்றன. சைவ சமயம் இசை, நடனம், சிற்பம், ஒவியம் முதலியன கொண்டு செவ்வனே
வளர்ந்தது. இங்ஙனமே வைணவமும் நன்கு வளர்ந்தது.
[23]. R.Gopalan’s “Pallavas of Kanchi’ pp.156-157.
[24]. Srinivasachari’s History and the Institutions of the Pallavas’ p.23.
[25]. S.I.I Vol II P.509.
[26]. M.E.R. 17 of 1899.
[27]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’ p. 138.
[28]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under Pallavas’ p. 145.
[29]. EP. Indica Vol.XI, p.225.
[30]. S.I.I. Vol.II .P.351.
[31]. ‘கல்லால் நிழல்கீழ் அறங்கள் உரைத்த அம்மானே'- சுந்தரர் தேவாரம், - திருக்கச்சூர்
ஆலக்கோவில் பதிகம். கல்லால் மரம் செங்கற்பட்டை அடுத்த செம்பாக்கம் மலையில் இருக்கிறது.
[32]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallava’s p. 151-153.
[33]. உப்பெடுக்கும் உரிமை சாதவாகனர் ஆட்சியிலும் அரசாங்கத்தினிடமே இருந்து வந்தமை
இங்கு அறியத் தக்கது.
Dr.K.Gopalachari’s Early History of the Andhra Country p.115.
[34]. இத்தகைய பல வரிகள் ஏறத்தாழக் கங்கநாட்டிலும் வசூலிக்கப்பட்டன. Vide M.VK.Rao’s
“Ganges otTalakad’ pp.145-150.
[35]. S.I.I. Vol.II, pp.525, 530.
[36]. 17 of 1899.
[37]. Gopalan’s “Pallavas of Kanchi’ p.149.
[38]. இந்த ஏரிகள் பெருங்கிணறுகள், வாய்க்கால்கள் என்பவற்றிற் பல சோழர் காலத்தில்
அப் பெயர்கள் கொண்டே இருந்தன என்பது சோழர் கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.
Vide the Author’s “Cholar Varalaru’, Part II.
[39]. K.V.S. Iyer’s “Ancient Dekkhan,’ pp.368-370 392.
[40]. கங்க நாட்டிலும் இப்பெயர்கள் உண்டு.
[41]. இத்தகைய நீட்டல் அளவைகள் கங்க நாட்டில் வரிசைக்கோல், கங்ககோல், பெருந்த கோல்,
மர்குந்தி கோல், சச்சவி கோல் எனப் பலவாறு வழங்கப்பெற்றன. Vide “Gangas ofTalakad,’ P. 144.
[42]. Dr.C.Minakshi’s “Administration and SocialLife under the Pallavas'
[43]. Vide her “administration and Social Life under the Pallavas’, P89.
மகேந்திர வர்மன் காலத்தவராகிய அப்பரும், நரசிம்மவர்மன் காலத்தவராகிய அப்பரும்
சம்பந்தரும் மிழலை நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்கத் திருவிழிமிழலையில் கோவில்
கொண்டிருந்த சிவபிரானிடம் (கோவில் பண்டாரதத்திலிருந்து) பொற்காசுகள் பெற்று அடியார்க்கு
உணவு வழங்கினர் என்னும் பெரியபுராண தேவாரச் செய்திகள் இங்குக் கருதற்பாலன. இங்ஙனம்
காணப்பெறும் பெரியபுராண - தேவாரச் செய்திகள் பல, பல இடங்களில் பல்லவர் வரலாற்றுச்
செய்திகளுடன் ஒன்றுபடல் காணத்தக்கது. பெரியபுராணமும், தேவாரப் பதிகங்களும் பல்லவர்
வரலாறு காட்ட இலக்கியச் சான்றாக நின்று எத்துணைப் பேருதவி புரிகின்றன என்பதைத் தமிழ்
மக்கள் அறிதல் நலமாகும்;- Vide Appar Puranama SS. 235-261.
[44]. Prof. J. Dubreuil’s “Pallavas,’ p.63.
[45]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.90.
[46]. கங்க நாட்டில் அரைச்சுவரன் ‘பொன்’ எனப்பட்டது. Vide “Gangas of Talakad’ p.145.
[47]. Ibid. p.92.
[48]. ‘வாசி திரவே காசு நல்குவீர்’ என்னும் சம்பந்தர் பாடல் இங்கு ஆராய்ச்சிக்குரியது - திரு
இருக்குக்குறள். பதிகம்: (12): 1.
[49]. ‘திருவிழிழலையில் உள்ள இறைவனைப் பாட இறைவன் காசு கொடுத்தான்’ என்பது, ‘எல்லாம்
இறைவன் திருவருளால் நடப்பன’ என்னும் அடியார் கொள்ளும் பொதுக்கொள்கை பற்றியதே
என்பதை அறிஞர் உணர்வர்.
பிற்காலச் சோரு காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கீழே காண்க.
‘கி.பி.1152இல் சோழநாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. ஆலங்குடி மக்கள் கோவில் பண்டாரத்திலிருந்து
101 கழஞ்சு நிறையுள்ள பொன் நகைகளும், 464 பலம் நிறையுள்ள வெள்ளிப் பொருள்களும்
கடனாகப் பெற்று உயிர் வாழ்ந்தனர்’ என வரும் ஆலங்குடிக் கல்வெட்டின் கூற்று இங்குக்
கவனிக்கற்பாலது.
K.A.N. Sastry’s “Cholas, Vol.II, Part I, p.377.
[50]. இதனைப் பாண்டிய நாட்டுப் பஞ்சவருனனையொடு (களவியலிற் கூறப்படுவது) ஒப்பிட்டுக்
காண்க.களவியல் உரையின்கூற்றுப் பொய் என்று கூறினோர் பலராவர். ‘பொய்’ எனப்பட்டதெல்லாம்
வரலாற்றால் ‘உண்மை’ ஆகுதல் கருதற்பாலது. இத்தகைய பஞ்சம் ஒன்று காஞ்சியில் உண்டான
தென்று மணிமேகலை கூறல் காண்க. ‘மணிமேகலை அங்குச் சென்று பெருஞ்சோறு வழங்கினாள்’
என்பதும் மணிமேகலை குறிக்கிறது. அப் பஞ்சம் அக்காலத்தில் உண்டானதேன் இளங்கிள்ளி
சோழ, பாண்டியரோடு காரியாற்றில் நடத்திய பெரும்போரே காரணமாகும் என்பது இங்கு
உணரற்பாலது.
[51]. Dr. C. Minakahi’s “Administration and Social Life under the Pallavas’, pp.304-305.
[52]. “பல்லவற்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் புலியூர்ச்சிற்றம்பலத்
தெம் பெருமான்” - சுந்தரர். “கூடாமன்னரைக் கூட்டத்து வென்ற கோட்புலி”
[53]. கோட்புலி நாயனார் புராணம், செ.4-10
[54]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, pp.119,120
‘பிற்காலச் சோழர் ஆட்சியில் பல பஞ்சங்கள் உண்டாயின. அவற்றுள் மூன்றாம் குலோத்துங்கன்
ஆட்சியில் உண்டானது கொடியது; ஒரு காசுக்குக் கால்படி அரிசி விற்றது. இப்பஞ்சக் கொடுமையை
நீக்கச் செல்வர் பலர் குளம் எடுத்தல், ஆற்றுக்குக் கரையிடுதல் முதலிய பணிகளில் மக்களைப்
புகுத்திக்காசு கொடுத்து உதவினர்’ என்பது இங்கு நினைக்கத்தக்கது.
K.A.N. Sastrys “The Cholas “Vol.II Part I, p.135.
[55]. 283 of 1916
[56]. 122 of 1929.
[57]. 172 of 1730
[58]. 144 of 1929.
[59]. 357 of 1909. A.R.E. 1910, p.80
[60]. 171 of 1921.
[61]. ‘எய்போற் கிடந்தான் என் ஏறு’ - பு.வெ.மாலை.
[62]. 283 of 1916.
[63]. Ep. Ind. Volp.130
[64]. K.V.S. Iyer’s “History of Ancient Dekkan’ pp. 384-385.
[65]. 429 of 1902.
-----------------
19. கலைக் கழகங்கள்
முன்னுரை
பண்டைக் காலக் கல்விமுறை இக்காலக் கல்விமுறையில் முற்றும் மாறுபட்டதாகும். அக்காலக் கல்வி,
இக்காலக் கல்வி முறைப்படி தொடக்கக் கல்வி, நடுத்தரக்கல்வி, பல்கலைக் கழகக் கல்வி எனப்பல
பிரிவுகளை உடையதன்று. உலகில் அறம், பொருள், இன்பம் நுகரவும் வீடுபேற்றுக்குரியநெறியிற்
பயிலவுமே பண்டைக் காலத்தார் கல்வி கற்றனர். அவர்கள் உயிர்க்கு உறுதி பயக்கும் கல்வியையே
சிறப்பாகக் கொண்டனர்.
ஒவிய - சிற்பக் கலைக்கூடங்கள்
பல்லவரை உலகம் புகழ வைத்த பெருமை ஒவிய-சிற்பப் புலவர்கட்கே உரித்தானது. உயிருள்ள
சித்தன்னவாசல், ஓவியங்கள், மாமல்லபுரம், வைகுந்தப் பெருமாள்கோவில், கயிலாசநாதர் கோவில்
இவற்றில் உள்ள வியப்பூட்டும் சிற்பங்கள் இன்ன பிறவும் இயற்றிய பெருமக்கள் கலை அறிவை நாம்
என்னெனப் புகழ்வது?
ஓவியம் வரைதலும் சிற்பம் பொறித்தலும் எளிய செயல்கள் அல்ல. பல்லவர் கால ஓவிய சிற்பங்கள்
இற்றைக்கு 1300 ஆண்டுகட்கு முற்பட்டவை; ஆயினும் இன்று செய்தாற் போலக் காட்சி அளிப்பவை
எனின், இவற்றில் அமைந்துள்ள வேலைத்திறனை என்னென்பது! இவ்வேலைத்திறனை இன்றளவும்
நாம் உணருமாறு செய்த அப்பெருமக்கள் கலை அறிவு வியக்கத்தக்கதன்றோ? அவர்கள் எங்ஙனம்
எங்கு - இக்கலை அறிவைப் பெற்றனர்’ பல்லவர் பெருநாட்டிலே அன்றோ காவியம் படித்துணர்வது
ஓவியமும் சிற்பமும் பார்த்து உணர்பவை, இவை காவியத்தையே கண்முன் காட்டுபவை அல்லவா?
எனவே, இவற்றில் வல்ல பெருமக்கள் முதலிற் காவிய உணர்ச்சிஉடையராதல் வேண்டும். அத்துடன்
சிறந்த ஒழுக்கமும்பத்தி முதிர்ந்த உள்ளமும் உடையவராதல் வேண்டும் மாசற்ற அகத்தூய்மை
உடையவர் தாம் இவற்றைச் செய்து முடித்தல் கூடும். ஆதலின், அந்நிலையைப் பெற அப்பெருமக்கள்
இசை நாடகம், நடனம், சமயம், இலக்கியம், உலகியல் இவற்றில் திப்பிய புலமை சான்றவராக
இருந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அவர்கள் அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும்
உயர்வாக மதிக்கப் பெற்று வந்தவராவர். இந்நிலைக்கு உரிய கல்வி எத்தகையதாக வளர்ச்சி
யுற்றிருத்தல் வேண்டும் பல்லவப் பெருநாட்டில் சிறந்த கலைக்கூடங்கள் இராவிடில், இக்கலைகள்
ஒருபோதும் வளர்ச்சிற்று இரா.
காஞ்சிக் கல்லுரரி
கதம்ப அரசர் மரபைத் தோற்றுவித்த மயூரசன்மன் முதற்பல்லவர் காலத்தில் காஞ்சியில் இருந்த
வடமொழிக்கல்லூரியில் (கடிகையில்) படிக்க வந்தான். அவன் காலம் கி.பி. 345-370 என
ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்;[1] எனவே, காஞ்சி வடமொழிக் கல்லூரி அக்காலத்திலேயே
சிறப்புற்று இருந்ததென்பதை அறியலாம்.
எத்தகைய கல்வி?
அக்கல்லூரியில் எவ்வகைக் கல்வி அளிக்கப்பட்டது? ‘மயூரசன்மன் வேதங்களை நன்றாகப்
படித்தவன். அவன் தன் ஆசிரியருடன் காஞ்சி வடமொழிக் கல்லூரிக்கு மேலும் படிக்கச் சென்றான்’
என்னும் தாளகுண்டாப் பட்டயத்தை நோக்கக் காஞ்சி -வடமொழிக் கல்லூரி வேதங்களைப்
படித்தவர்க்கு அளிக்கும் உயரிய ஆராய்ச்சிக் கல்வியையும் அளித்து வந்தது என்பதை நன்குணரலாம்.
அக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர் வடமொழிச் சாத்திரங்களைக் கற்றனர். அவற்றைப்
போதிக்க வடமொழிப் புலவர் பலர் இருந்தனர்.
மயூரசன்மன் பல்லவ அரசனால் கல்லூரியிலிருந்து விரட்டப்பட்டான் என்பதிலிருந்து, கல்லூரி
பல்லவ அரசனது பார்வையின் கீழ் இருந்தது என்பது தெளிவாகும்.
பல கலை வல்லார் இங்குக் கூடிப் பேசலும் மரபு. ஒரு கலையிற் புலமை எய்திய ஒருவர், தாம்
கண்டதைக் கூறிப்பிறர் இசைவைப் பெறவும் இக்கடிகை பயன்பெற்றது. சமந்தபத்திரர், பூச்யபாதர்
முதலிய சமண சமய ஆசிரியரும் பெரும் புலவரும் ஆகிய பெருமக்கள் இங்கு வந்திருந்தனர்
எனின், இக்கடிகை, மதுரைத் தமிழ்ச் சங்கம் போல அனைவர்க்கும் பொதுக் கடிகையாக
இருந்ததென்னலாம். இங்குப் பேசுதல் அக்காலத்தில் சிறப்பளித்த ஒன்றாகக் கருதப்பட்டது.
இதனால், இச்சிறப்பைப் பெறப் பல நாட்டார் இங்கு வந்து சென்றனர்.[2] இங்கிருந்து தர்மபாலர்
நாலந்தாப் பல்கலைக் கழகப் பேராசிரியராகச் சென்றார். எனின் இக்கடிகை அஃகாலத்தில்,
பெற்றிருந்த பெருஞ் சிறப்பை என்னென்பது இதனை நன்கு அறிந்தே அப்பர் பெருமான், “கல்வியிற்
கரையிலாத காஞ்சி மாநகர்” எனப் பாராட்டியுள்ளார்.
கடிகாசலம்
இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோளிங்கர் (சோழ சிங்கபுரம், கடிகாசலம்) மலைமீதுள்ள
கடிகைக்கு மானியம் விடப்பட்டதாகத் திருவல்லம் கல்வெட்டுக் குறிக்கிறது. இது நீண்ட
காலமாக அங்கு இருந்திருக்கலாம். இது வைணவர் கலைப் பீடமாக இருந்திருத்தல் கூடியதே.
பாகூர் வடமொழிக் கல்லூரி
பாகூர் என்பது தென்னார்க்காட்டுக் கோட்டத்தில் திருப்பாதிரிப்புலியூருக்கும் புதுச்சேரிக்கும்
இடையில் உள்ள பெரும்பாதையில் அமைந்துள்ள சிற்றுாராகும். இது பல்லவர் காலத்திற்
சிறந்திருந்த பெரும் பதியாகும். இங்கு ஒரு வடமொழிக் கல்லூரி இருந்தது. நிருபதுங்கவர்மன்
காலத்துப் பட்டயத்தில் உள்ள செய்திகளைக் காண, அக்கல்லூரி அதற்கு முன்னரே உயரிய
நிலையில் இருந்துவந்தது. என்பது தெரிகிறது. அக் கல்லூரியில் படித்தவர் அனைவரும்
மறையவரேயாவர்; அதனைப் பார்வையிட்ட வரும் மறையவரே ஆவர். இங்கு 14 கலைகள்
கற்பிக்கப்படுகின்றன; இக்கல்லூரி மறையவராற் பார்வையிடப்பெறுகின்றது; இச் சிற்றுரைச்
சேர்ந்த அலுவல்களும் அவராலே கவனிக்கப்படு கின்றன; இங்குப்பதினான்கு கலைகளுடன்
18 வகை வித்தைகளும் கற்பிக்கப்படுகின்றன.[3] 18 வகை வித்தையாவன: நான்கு வேதங்கள்,
ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தருமசாத்திரம், புராணம், மருத்துவம், வில்வித்தை,
இசை, பொருள் நூல் என்பன.
முன்று சிற்றரர்கள்
இக் கல்லூரி செவ்வனே நடைபெற, ஏறத்தாழக் கி.பி. 860இல், நிருபதுங்கவர்மன் ஆட்சியில்,
பாகூரை அடுத்த மூன்று சிற்றுார்கள் மார்த்தாண்டன்[4] என்ற (கோட்டத்து) அதிகாரி ஒருவனால்
விடப்பட்டன. அச்சிற்றுார்களாவன: (1) சேட்டுப்பாக்கம், (2) விளாங்காட்டங் கடுவனுர், (3)
இறைபுனைச்சேரி என்பன.
வாகூர்ப் பட்டயப்படி, (1) விளாங்காட்டங் கடுவனுர் என்பது இன்று கடுவனூர் என்ற பெயருடன்
இருக்கிறது. அது வாகூர்க்குத் தென்மேற்கில் மூன்று கல் தொலைவில் இருக்கிறது. (2) அதற்குத்
தெற்கே சேட்டுப்பாக்கம் இருந்தது என்று பட்டயம் குறிக்கிறது. அப்பெயர் இன்று காணுமாறில்லை.
சேட்டுப்பாக்கம் கிழக்கில் நென்மலிப் பாக்கத்தையும், மேற்கே மாம்பாக்கத்தையும், வடக்கே
கடுவனுரையும், தெற்கே நென்மலைப்பாக்கம், நெல் வாய்ப்பாக்கம், உரத்தூர் என்பனவற்றையும்
எல்லைகளாகப் பெற்றிருந்தது என்று பட்டயம் கூறுகிறது. இவ்வூர்களின் பெயர்கள் இன்றுகாணு
மாறில்லை. (3) பட்டயப்படி, இறைபுனைச் சேரிக்குக் கிழக்கே காடு இருந்தது. இதற்கு
அடையாளமாக அங்குக் ‘காட்டுப்பாக்கம்’ என்னும் சிற்றுர் இன்று இருக்கின்றது. பட்டயப்படி
வடக்கே கிரிமாம்பட்டி இருந்தது. அதுவே இன்றைய கிரிமாம் பாக்கம் என்பது. ‘இறைபுனைச்சேரி’
என்னும் பெயர் கொண்ட சிற்றுார் இப்பொழுதில்லை. பட்டயத்தில் உள்ள எல்லைகளை நோக்க
இன்றைய பின்னாச்சி குப்பம் என்பதே அக்கால இறைபுனைச் சேரியாக இருந்திருக்கலாம்
என்பது உய்த்துணரலாம்.[5]
பாகூர்ப் பழம்பதி[6]
இன்றுள்ள பாகூர் (வாகூர்), நெடுவழிக்கு இரண்டு கல் தொலைவில் இருக்கின்றது. நெடுவழிக்கு
மறுபுறத்தில் பெருமான் கோவிலும் பார்ப்பனச்சேரி ஒன்றும் பழங்காலத்துக் குளம் ஒன்றும் பிற
சிதைவுகளும் இருக்கின்றன. இன்றைய பாகூர் சிற்றுர் ஆகும். அதன்கண் உள்ள சிவன் கோவில்
பழைமையானது. அங்குக் கல்வெட்டுகள் பல இருக்கின்றன. பாகூர் பட்டயத்தை நோக்க,
அங்கிருந்த கல்லுர்ரி, பல்லவர் காலத்தில், தென் பல்லவ நாட்டிற்கு அமைந்த பெருங் கல்லூரியாக
இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. இதனால் பழைய பாகூரும் மிகப்பெரியதாக
இருந்திருத்தல் வேண்டும் என்பது தவறாகாது. ஆகவே, சாலைக்கப்பால் உள்ள கோவில், குளம்,
அக்கிரகாரம் இவற்றையும் இன்றைய பாகூரையும் தன்னகத்தே கொண்டதாகப் பழைய பாகூர்
இருந்தது எனக் கோடலே பொருத்தமாகும்.
அக்கிரகாரங்க
நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் முதலிய பல கலைகளில் வல்ல மறையவரைக் கொண்ட
சேரியே அக்கிரகாரம் என்பது. இத்தகைய சேரிகள் சில சங்க காலத்திலே இருந்தன என்பது
பத்துப்பாட்டால் அறியலாம். கற்றறிந்த மறையவர் - வாதங்களில் வல்ல மறையவர் - கற்பிக்கும்
ஆற்றல் பெற்ற மறையவர் கூடி உறைந்தமையின், மாணவர் பலர் அவர்களிடம் சென்று கல்வி
கற்க வசதி இருந்தது. பொதுவாக இச்சேரிகள் ஊர்கட்கு வெளியே, அமைதி குடி கொண்ட கழனி
வெளிகட்கு இடையே, இயற்கைப் பொருள்களின் நடுவே அமைந்திருந்தன. அரசர்கள் இவர்கட்குச்
சிற்றுார்களை இறையிலியாக விட்டு எல்லா வசதிகளையும் அளித்தனர். இவ்விரு காரணங்களாலும்
இம் மறையவர் மன அமைதியுடன் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினர்; இவர்களைத் தேடி
வந்த மாணவர்க்கும் பலதுறைக் கல்வியைப் புகட்டினர். இங்ஙனம் மாணவர் விருப்பத்தோடு
வந்து கற்பதைக் கண்ட அரசரும் செல்வரும், அம் மாணவர் இருந்து உண்டு படிப்பதற்கேற்ற
விடுதிகளும் பிற வசதிகளும் செய்து தந்தனர். இங்ஙனம் சேர்ந்த பொருளைச் சேரி மறையவரே
பாதுகாத்து, வேண்டிய வசதிகளை மேன்மேலும் பெருக்கிக் கொண்டே சென்றனர், கட்டடங்கள்
பெருகின; வகுப்புகள் மிகுதிப்பட்டன; பிற நாட்டு நல்லறிஞர் வரின் தங்குதற்கேற்ற விடுதிகள்
(சத்திரங்கள்) உண்டாயின, கோவிலும் உண்டாயிற்று. இங்ஙனம் சேரி பெரிதாய் விட்டமையின்,
மறையவரே ‘ஊராண்மையை'ச் சட்டப்படி கவனித்து வந்தனர். இவையே ‘குடி’ அல்லது ‘சதுர்வேதி
மங்கலம்’ எனப் பெயர் பெற்ற சிற்றுர்கள். இவை பலவாக இருந்தன என்பது கல்வெட்டுகளாலும்
பெரிய புராணத்தாலும் நன்கறியலாம். சம்பந்தரை வரவேற்ற சதுர்வேதி மங்கலத்தார் பலராவர்;
சுந்தரர்க்கு வேண்டிய வசதிகள் அளித்த மறையவர் பலராவர். இச் சிற்றுர்களில் எப்பொழுதும்
‘மறை ஒலி' கேட்டபடியே இருந்தது என்பதும், அம் மறையவர் அனைவரும் பண்பட்ட
அறிவுடையோர் என்பதும் தேவாரப் பாடல்களால் நன்கறியும் செய்திகளாம்.
ஊராண்மை
இவர்கள் ஆட்சியில் ‘ஊர் அவைகள்’ பல இருந்தன. அவை ஊருக்கு வேண்டிய அனைத்தையும்
செய்து வந்தன; வழக்குகளை விசாரித்துமுடிவு கூறின. இதனைத் தடுத்தாட்கொண்ட புராணத்தும்
திருநீலகண்ட நாயனார் புராணத்தும் சண்டீசர் புராணத்தும் காணலாம். பெரிய புராணத்துள்,
20க்கு மேற்பட்ட ஊர்கள் குறிக்கப்பட்டுள. அவற்றுள் சேந்தன் அளித்த சேய்ஞலூர், திருமணஞ்சேரி,
தெளிச்சேரி, திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர், திருநின்றவூர் முதலியன குறிப்பிடத்தக்கன.
பல்லவ அரசர் அளித்த சிற்றுர்கள் மிகப் பல ஆகும். சான்றாக, இரண்டாம் நந்திவர்மன் காலத்தில்
கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய இரண்டிற்கும் அருகில் இரண்டு சேரிகளை உண்டாக்கினான்.
அவையே பட்டயத்தாள் மங்கல அக்கிரகாரம், தயாமுகமங்கல அக்கிரகாரம் என்பன.
படைக்கலப் பயிற்சி
இங்ஙனம் கல்வி கற்பித்தும் ஊராண்மை செய்தும் வந்த நான்மறையாளர், தம் சேரிகளைப்
பகைவரிடமிருந்து பாதுகாப்பதற்கென்று படைக்கலப் பயிற்சியும் பெற்றிருந்தனர். இத்தகைய
பயிற்சியாற்றான் பிராமணர் பலர் மேலைச் சாளுக்கியரிடம் மகா சாமந்தராக இருந்தனர்
என்பது இங்கு அறியத்தகும். பல்லவர் ஆட்சியில் இத்தகையோர் இருந்தமைக்குரிய சான்றுகள்
இல்லை; ஆயினும், மயூரசன்மனைக் குறிக்கலாம்.
வேலைகள்
இம் மறையவர் வடமொழியுடன் இந்நாட்டு மொழியான தமிழையும் கற்றிருந்தனர்; கோவிற்
பூசைசெய்தனர்; கோவில்களின் விழாக்கள் நாடகங்கள் நடத்தினர்;உண்டிச்சாலை, மருத்துவச்சாலை
முதலிய நடத்தினர். சுருங்கக் கூறின், அரசர் ஆணைப்படி இம் மறையவர், சிற்றுர்களில் இருந்து
கொண்டு பலவகைத் தொண்டுகளைச் செய்து வந்தனர் என்னலாம். புரோகிதர் கோவில் உரிமை
பெற்றதும், தமிழ் மக்களிடம் குருக்கள் வேலை தொடங்கியதும் இந்தக் காலமே ஆகும்.[7]
பிரம்மபுரிகள்
பேரூர்களிலும் நகரங்களிலும் கலை வளர்ச்சிக்காக மறையவர் தங்கியிருந்த இடம் பிரம்மபுரி
எனப்பட்டது. இவர்க்கு பிரம்மதேயம் இல்லை எனினும், கல்வி கற்பிப்பதற்காக நிலம் மானியமாக
விடப்பட்டது. இத்தகைய பிரம்மபுரிகள் கங்கர் தலைநகரான தழைக்காட்டில் பல இருந்தன.[8]
இப் பிரம்மபுரிகள் பல்லவர் காலத்தில் இருந்தன என்பதற்குப் பட்டயச்சான்று இல்லை. ஆயினும்,
சீகாழிக்கு உரிய பல பெயர்களுட் பிரம்மபுரம் என்பதொன்றாகும். இப் பெயர் முதலில் சீகாழிப்
பகுதியில் பிராமணர் இருந்த பகுதியை மட்டும் குறித்து வந்து, சம்பந்தர் காலத்தில் சினையாகு
பெயராய் நகரத்தையே குறிக்கலாயிற்று[9] எனக் கோடலில் எவ்வித தவறும் இல்லை. சீகாழிப்
பிரம்மபுரியில் மறையவர் பலர் இருந்தனர்; வேத வேள்விகளிற் சிறந்திருந்தனர் எனவரும்
பெரியபுராணக் குறிப்பும் சம்பந்தர் பதிகக் குறிப்பும் நோக்கத்தக்கன.
பட்டவிருத்தி
பல்லவப் பேரரசர் தனிப்பட்டவர் கல்விக்கு மதிப்பீந்தனர்; சாணக்கியர் பொருள் நூல், ‘மறையில்
வந்த அந்தணர் நல்ல வருவாய் கொண்ட நிலங்களை இறையிலியாகப் பெறக் கடவர் என்று
கூறுகிறது. அம் முறையை இந்தியா முழுவதிலும் இருந்த பெரும்பாலான அரசர் பின்பற்றி
வந்தனர். இது பிற்காலச் சோழர் காலத்தில் ‘பட்டவிருத்தி’ எனப்பட்டது. இதனைப் பல்லவ
அரசர் செய்து வந்தனர் என்பது பல பட்டயங்களைக் கொண்டு அறியலாம்.
1. ஓங்கோட்டுப் பட்டயம் : விசய கந்தவர்மன் என்ற பிராக்ருத காலப் பல்லவ வேந்தன், தனக்கு
உட்பட்ட ஆந்திர நாட்டில் ஓங்கோடு என்ற சிற்றுரைக் கோல சருமன் என்ற மறையவனுக்குத்
தானம் அளித்தான். அம் மறையவன் காசியபகோத்திரத்தான். இரண்டு வேதங்களிலும் ஆறு
அங்கங்களிலும் வல்லவன்; அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிற்றுார் 18 வகை வரியினின்றும்
நீக்கப்பட்டது.[10]
2. காசக்குடிப் பட்டயம்: இஃது இரண்டாம் நந்திவர்மனால் விடப்பட்டதாகும். ‘கொடுகொள்ளி’
என்ற சிற்றுர் ‘ஏக தீரமங்கலம்’ என்று பெயரிடப்பட்டுச் ‘சோமயாஜி’ என்ற மறையவற்குக்
கொடுக்கப்பட்டது. அம் மறையவன், “கடல் போன்ற வேதங்களைக் கற்றவன், சாமவேதம்
பாடவல்லவன், ஆறு அங்கங்களையும் பழுதற உணர்ந்தவன்; கரும காண்டம், ஞான காண்டம்
முதலியவற்றில் தேர்ச்சியுற்றவன்; உலகியலை நன்குனர்ந்து நடப்பதில் வல்லவன்.[11] செய்யுள்,
நாடகம், கதைகள், இதிகாசங்கள், கட்டுக்கதைகள் இவற்றில் சமர்த்தன; எல்லாச்சமயச் செயல்களிலும்
தேர்ந்தவன்; நல்லொழுக்கம் உடையவன்; வீட்டை விளக்கு அணி செய்தல் போல நாட்டை
அணி செய்பவன் உயர் கல்வி இருந்தும் அடக்கம் உடையவன்; முற்பிறப்பிற் செய்த நல்வினைப்
பயனால் இப் பிறப்பில் இவ்வுயர்வைப் பெற்றவன்; இரு பிறப்பாளருள் முதன்மையானவன்;
வேத விதிப்படி நடப்பவன்: சாந்தோக சூத்திரத்தைப் பின்பற்றுபவன்; தொண்டை நாட்டில்
‘பூனியம்’ என்ற
சிற்றுரில் வாழ்பவன்; சிறந்த மறையவன்.......” எனப் பலபடப் பாராட்டப்பட்டுள்ளான்.[12]
இதனால் பல்லவ மன்னர் தனிப்பட்ட கல்விமான்களைத் தாராளமாக ஆதரித்து வந்தனர்
என்பது வெள்ளிடைமலை.
கோவில்கள்
பல்லவர் காலத்தில் கயிலாசநாதர் கோவில் போன்றவை பல்கலைப் பள்ளிகளாகவும் இருந்து
வந்தன. அங்குச் சிற்பம், ஓவியம், இசை,நடனம், நாடகம், சமயக்கல்வி சாத்திரக்கல்வி இன்ன
பிறவும் கற்பிக்கப்பட்டு வந்தன. நாகரிக நாட்டார் போற்றும் இக்கலைகள் அனைத்திற்கும்
கோவிலே தாயகமாக இருந்தது. பத்திரப் பதிவும் (பட்டயமும் கல்வெட்டும் பிறவும்) அங்குத்தான்
நடைபெற்று வந்தன. அப்பத்திரங்களிலிருந்தன்றோ, நாம், இன்று பல்லவர் வரலாற்றை அறிந்து
இன்புறுகின்றோம்! பெரிய கோவில்களில் படிக்கும் மண்டபம், நடன மண்டபம், நாடக
மண்டபம், தருக்க மண்டபம் முதலியன இருந்தன. மாபாரதம் போன்ற பழைய கதைகளைக்குடி
மக்கட்கு ஊட்டி அவர் ஒழுக்கத்தை வளர்க்க முயன்றது கோவிலே ஆகும். சமய நூல்கள், தேவாரப்
பதிகங்கள் முதலியன பாதுகாக்கப்பட்ட இடங்களும் கோவில்களே ஆகும். இங்ஙனம் இக்
கோவில்கள் இருமைக்கும் இன்பம் ஊட்டும் நிலைக்களங்களாக இருந்தன.
மடங்கள்
இவை நீண்ட காலமாக நாட்டில் இருந்து வருபவை. இவை உண்டியும் உறையுளும் அளித்து
மாணவர்க்குக் கல்வி கலைக் கூடங்கள் துறவிகள், கற்ற பெருமக்கள், நாடு முழுவதும் சுற்றித்திரிந்து
உண்மை அறிவைத் தேடும் பெருமக்கள் ஆகியவர் தங்கும் இடங்கள்; ஏழைகள், திக்கற்றவர்
முதலியோருக்குப் புகல் இடங்கள். இவை அரசர், சிற்றரசர், செல்வர் முதலியோரால் அமைக்கப்
பட்டவை. இவை சமய உயர்தரக் கல்வியை ஊட்டி
வந்தன. கங்கபாடியில் இருந்த இம் மடங்களில் சமணம், பெளத்தம், தர்க்கம், காவியம், இலக்கணம்,
நாடகம், பரதசாத்திரம் முதலிய பல கலைகளில் வல்லுநர் இருந்தனர் என்று கங்கநாட்டுக் கல்வெட்டுகள்
குறிக்கின்றன. எனின் ஏறக் குறைய அக் காலத்தில் பேரரசராகவும் சிறந்த கலைகளில் நிபுனராகவும்
இருந்த பல்லவப் பேரரசருடைய பெரு நாட்டு மடங்களில் இக் கலைகள் பயிற்றுவிக்கப் பெற்றன
என்பது கூறாதே அமையும் அன்றோ?
சைவ மடங்கள்
சைவ மடங்களுள் காபாலிக மடம், பாசுபத மடம், காளாமுக மடம் எனப் பலவகை இருந்தன.
காபாலிகர் மடம் காஞ்சி-ஏகாம்பரநாதர் கோவிலை அடுத்து இருந்தது என்பதை மந்தவிலாசத்தைக்
கொண்டு குறிப்பாக உணரலாம். காஞ்சியில் பாசுபதர் இருந்தனர் என்று அதே மத்தவிலாசம்
கூறலால், அவர்கட்கும் தனி மடம் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. மயிலாப்பூர்
கபாலீசர் கோவிலில் அல்லது அதனை அடுத்துக் காபாலிகர் மடம் இருந்திருத்தல் வேண்டும்.
கொடும்பாளுர் முதலிய இடங்களிற் காளாமுகர் மடங்கள் இருந்தன. இவற்றுள் பின்னவர்
வைத்து நடத்திய மடங்களே சிறப்பெய்தின என்றுகங்கநாட்டு வரலாற்றைக்கொண்டு உணரலாம்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில்-அப்பர், சம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 20 தளிகளின்
மடங்கள் இருந்தன என்பதையும், அப்பூதி அடிகள், குங்குலியக் கலயர், முருக நாயனார், சம்பந்தர்,
அப்பர் முதலியோர் மடங்கைளஏற்படுத்தினர் என்பதையும் வரலாற்றுச் சிறப்புடைய பெரிய
புராணத்திலிருந்து நன்கறியலாம். இவற்றிற்குப் பட்டயச் சான்று இல்லை. (சோழர் காலத்துப்
பட்டயச் சான்றுகள் உண்டு) எனினும் இவை இருந்திருத்தல் வேண்டும் என்பதை மெய்ப்பிப்பனபோல,
(சுந்தரருக்குமுற்பட்ட நந்திவர்மன் காலத்துப் பட்டயம் ஒன்றில்-கச்சி மேற்றளியைச் சார்ந்த
மடம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மேற்றளியிற் பாடுங்கால் அப்பர் ‘கல்வியிற் கரையிலாத
காஞ்சி மாநகர்’ என்று கூறலை நோக்க, அவர் காலத்திலேயே இம் மடம் இருந்திருக்கலாம் எனக்
கோடலில் தவறில்லை.
காளாமுகர்
இக் காளாமுகர் பெரும் படிப்பாளிகள் சிறந்த ஒழுக்கம் உடையவர்கள் பக்தித் துறையை
மேற்கொண்டவர்கள், மணல் மீது படுத்தல், மந்திரம் செபித்தல், பதிகங்கள் பாடல், இறைவனைப்
பற்றிப் பாடி ஆடுதல், உழவாரப்பணி புரிதல் முதலியவற்றில் ஈடுபட்டிருந்தனர்; ‘அவர்களை
எந்நேரமும் மாணவர் சுற்றிக் கொண்டு இருப்பர்’ என்று கங்க நாட்டுக் கல்வெட்டு ஒன்று
கூறுகின்றது. அவர் தம் பெயர்கள் ‘ராசி, சக்தி, அபரண’ என்ற முடிபுகளைப் பெற்றவை. அவருள்
மணமானவரும் உண்டு; மணமற்றவரும் உண்டு. இருதிறத்தாரும் எண்வகை யோகங்களிற் பயிற்சி
பெற்றவர். எனினும் மணமற்ற குருமாரே சிறப்பாகக் கருதப்பட்டனர். இவர்கள் மடங்கட்குத்
தலைவர்களாகவும், கோவில் கண்காணிப்பாளராகவும், குருமார்களாகவும், சமயக் கல்விச்சாலைத்
தலைவர்ககளாகவும் இருந்து வந்தனர். இவர்கள் தங்கள் அளப்பரிய பல துறைக் கல்வியால்
நாட்டிற் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்கள் ஹொய்சளர் காலத்தில் ‘இராசகுரு’ என்ற
உயர்நிலையில் இருந்து வந்தனர். இவர்களிடம் பேரரசர்கள் சீடர்களாக இருந்தனர். இதனைப்
பிற்காலச் சோழர் கல்வெட்டுகளும் மெய்ப்பிக்கின்றன.
பாடத்திட்டம்
மடங்கள் கற்பித்த பாடங்களில் இலக்கணம், தரிசனங்கள், சித்தாத்தம்,[13] யோகம் அறநூல்கள்,
புராணங்கள், செய்யுள், நாடகம், தருக்கம், இசை, ஓவியம் முதலியன குறிப்பிடத்தக்கவை. [14]
பல்லவர் கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் அணுகி ஆராயின், இதுகாறும் கூறப்பெற்ற
அனைத்தும் பல்லவ நாட்டு மடங்கட்கும் பொருந்தியவையே என்பதை அறியலாம்.
மடத்து ஆட்சிக் குழுவினர்
காவேரிப்பாக்கத்து வரதராசப் பெருமாள் கோவிலில் நிருபதுங்கன் காலத்துக் கல்வெட்டில்,
‘மடத்துச் சத்தபெருமக்கள்’ என்பது காண்ப்படுகிறது. இத் தொடரால், ‘மடத்தை மேற்பார்க்க
அறிஞர் எழுவர் இருந்தனர்’ என்பது தெளிவாகிறது. அவர் ‘அறிஞர் என்பதனாலும், எழுவர்’
என்பதானலும், மடத்துப் பணிகள் பல என்பதும், அவற்றை மேற்பார்க்கவோ ஆட்சி நடத்தவோ
எழுவர் தேவைப்பட்டனர் என்பதும் நன்கு விளங்குகின்றன அல்லவா?
மடத்து ஆட்சி
‘சைவ சமய குரவர் தம் அடியார் பரிவாரங்களுடன் மடங்களில் தங்கி இருந்தனர்; அப்பர்
திருப்பூந்துருத்தியில் மடம் ஒன்றை உண்டாக்கினார்; அங்கு இருந்துகொண்டு பல பதிகங்கள்
செய்தார்; பஞ்சகாலத்தில் அப்பரும் சம்பந்தரும் திருவிழிமிழலையில் இருந்த இரண்டு மடங்களில்
தங்கி இருந்தனர்’ என்பன போன்ற பல செய்திகளை நோக்க, ‘மடத்துச் சத்த பெருமக்கள்’
எனவரும் கல்வெட்டுத் தொடரையும் நோக்க. ‘பல்லவர் காலத்தில் பல ஊர்களில் சிறந்த
கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன.அவை ஒரு குழுவினர் மேற்பார்வையில் நடைபெற்று
வந்தன. அடியார்க்கு வேண்டிய வசதிகள் அளித்தன. சமய வளர்ச்சிக்குரிய சிறந்த கலைப்பீடங்களாக
இருந்தன’ என்பதை நன்கு உணரலாம். பல்லவப் பேரரசர் கோவில்களில் அமைத்த வியத்தகு
ஏற்பாடுகளுடன், மடங்களிலும் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தமையாற்றான் சமயகுரவர்
கவலையின்றி உற்சாகத்துடன் சமயப் பிரசாரத்தைப் பலமாக நடத்தி வந்தனர் போலும்!
பெளத்தர் கலை இடங்கள்
பல்லவர் காலத்தில் ஸ்ரீபர்வதம் எனப்படும் நாகார்ச்சுனமலை, வேங்கியை அடுத்த குண்டப்பள்ளி,
தான்ய கடகம் முதலிய இடங்களில் பெளத்தவிகாரங்களும் பள்ளிகளும் இருந்தன என்பதை
இன்றும் அங்குக் காணக்கிடக்கும் சிதைவுகள் கொண்டு நன்கறியலாம். காஞ்சி, மணிமேகலை
காலத்திற் சிறந்த பெளத்த நகரமாக இருந்ததை இலக்கியம் கொண்டறியலாம். மத்த விலாசம்,
இயூன் - சங் குறிப்பு இவை கொண்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பெளத்த விகாரங்கள்
காஞ்சியில் இருந்தன என்பதை அறியலாம். கி.பி. 7 ஆம் நூற்றாண்டினரான சம்பந்தர் தஞ்சைக்
கோட்டத்தில் உள்ள போதி மங்கை (இக்காலப் ‘பூத மங்கலம்') என்னும் ஊரில் இருந்த
புத்தருடன் வாதிட்டு வென்றார் என்னும் குறிப்பால், தஞ்சைக் கோட்டத்தில் பெளத்தர் இருந்தமை
அறியலாம். திருமங்கை ஆழ்வார் நாகையில் இருந்த பெளத்தவிகாரத்துப் பொன் விக்கிரகம்
ஒன்றைக்கவர்ந்து வந்தனர் என்று குருபரம்பரை கூறலால், இரண்டாம் நந்திவர்மன் காலத்தில்
நாகையில் பெளத்தர் இருந்தனர் என்பது தெளிவு. இவ் விடங்களில் எல்லாம் பெளத்தர் தம்
சமயக் கல்வியைத் தம்மைத் தேடி வந்த மக்கட்கு ஊட்டி வந்தனர் என்பது மிகையாகாது.
சமணர் கலை இடங்கள்
பாதிரிப்புலியூர்-மடம்
பல்லவர் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவில் சிறந்த சமண மடம் பாதிரிப்புலியூரிற்றான்
(பாடலிபுத்ரம்) இருந்தது. ‘லோக விபாகம்’ என்னும் சமண நூல் பாலி மொழியிலிருந்து
வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இடம் பாதிரிப்புலியூரே ஆகும் அன்றோ? கி.பி. 5ஆம்
நூற்றாண்டில் அந்த மடத்தில் புகழ்பெற்ற சிம்மசூரி, சர்வநந்தி என்னும் திகம்பர சமணப் பேரறிஞர்
வடமொழியிலும் பிராக்ருதத்திலும் புலவராய் விளங்கினர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மருள்
நீக்கியார் (அப்பர்) அம் மடத்திற் சேர்ந்து, சமணர் நூல்களைக் கற்றுப்புத்தரைவாதில் வென்று,
மடத்துத் தலைவராகித்தருமசேனர் என்னும் பட்டமும் பெற்றுத் திகழ்ந்தார்.[15] இங்ஙனம்
இம் மடம் பெரிய கலைப்பீடமாக இருந்தமையாற்றான். இடைக்காலப்
பல்லவருள் ஒருவனான முதலாம் சிம்மவர்மன் (கி.பி. 436-450) இம் மடத்தை நன்கு ஆதரித்தான்
என்பது, ‘லோக விபாகம்’ என்னும் நூலைக்கொண்டு குறிப்பாக உணரலாம். இவனுக்கு
அடுத்தவனாக இம் மடத்தைப் பெரிதும் ஆதரித்தவன் மகேந்திரவர்மன் ஆவன் அக்காலத்திற்றான்
அப்பர் இங்குத் தருமசேனராக இருந்தார். அவர் சைவராக மாறினதும் அரசனும் நன்கு
யோசித்துச் சைவனாக மாறினான்; பாதிரிப்புலியூர் மடத்தை அடியோடு அழித்து, அப்
பொருள்களைக் கொண்டு திருவதிகையில் கோவில் கட்டி, அதற்குக் ‘குணதர ஈசுவரம்’ என்று
தன் பெயரிட்டான் என்பன பெரியபுராணத்தால் அறிகிறோம். இந்நிகழ்ச்சியால், அறிவுக்
களஞ்சியமாக இருந்த சமண மடம் அழிந்தது. சமணர், பேரரசன் ஆதரவை இழந்தனர். அதன்
பிறகு பாடலிபுரத்துச் சமணர் பெருமை பிற்கால வரலாற்றில் கேட்கப்படவே இல்லை.[16]
திருப்பருத்திக்குன்றம்
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள இந்த இடம் சமணகாஞ்சி எனப்படும். இது பல்லவர் காலத்தில்
மிக உயர்ந்த நிலையில் இருந்த இடமாகும். இது வேகவதி யாற்றங்கரையில் காஞ்சிக்கு
இரண்டு கல் தொலைவில் உள்ள கலைப்பீடமாகும். இந்த இடத்தில் இரண்டு கோவில்கள்
உள்ளன. ஒன்று பல்லவர் காலத்துக் கோவில் என்னலாம்; மற்றொன்று பிற்காலத்ததாகலாம்.
இத் திருப்பதியைப் பற்றி அறிஞர் T.N. இராமச்சந்திரன்[17] என்பார் அழகிய ஆராய்ச்சி நூல்
ஒன்றை எழுதியுள்ளார். இங்குள்ள ஓவியங்கள் பழையன: மூர்த்தங்கள் பழையன; பல்லவர்
காலச் சிற்ப-ஓவியக் கலைகளை ஓரளவு இங்குக் கண்டு மகிழலாம். இச் சிற்றுர் பல்லவர் காலத்திற்
சிறப்புடையதாக இருந்திருத்தல் வேண்டும் என்பது பார்த்தவுடனே நன்கு வெளியாகிறது.
திருப்பருத்திக்குன்றம் பல்லவர் காலத்தில் சமணக் கலையைப் பரப்ப அமைந்திருந்த நல்லிடம்
என்பதில் ஐயமில்லை. மைசூர் - திகம்பர சமணர். ‘திகம்பர சமணர் கலைப்பீடங்கள் நான்கனுள்
சமண - காஞ்சி ஒன்று’ என்று கூறல் இதற்கு அரண் செய்தல் காண்க. எனினும், இது பிற்காலச்
சோழர் காலத்திற்றான் பெருஞ் சிறப்புப் பெற்றது.
தமிழ்க் கல்வி
பல்லவர் ஆட்சியில் மக்கள் கல்வி, வாணிகம், சமயம், இசை, சிற்பம், ஓவியம், நடனம், நாடகம்,
முதலிய பல துறைகளில் வளர்ச்சி பெற்றனர். வடமொழிக் கல்லூரிகள் இருந்தன என்பதற்குச்
சான்று இருப்பினும், தமிழ்ப்பள்ளிகள் இல்லை என்பது அறிவுடைமை அன்று. தமிழ்க்
கல்வெட்டுகள், தமிழ்ப் பாடல்கள் முதுலியன இருத்தலை நோக்க, ‘பக்திச் சுவை நனி சொட்டச்
சொட்டப் பாடிய, சைவ-வைணவத் திருமுறைகள் இருத்தலை நோக்க, தமிழ் நாட்டில் பல்லவர்
அரசியல் தமிழ்மொழியிலேயே நடந்திருத்தலைப் பட்டயங்களும் கல்வெட்டுகளுமே
அறிவித்தலைக்கான, பல்லவர் ஆட்சியில் தமிழகம் தமிழ் மணத்தில் தழைத்திருந்தது என்பதை
உறுதியாகக் கூறலாம். எனவே, தமிழ் நாட்டு ஆடவர் பெண்டிர் பலருள் சிலரேனும் மேற்கூறிய
பல கலைகளிலும் பண்புற்று விளங்கினராதல் வேண்டும் எனக் கோடல் தவறாகாது.
அறுபான்மும்மை நாயன்மார் வரலாறுகளை நோக்க - அவர்கள் சமயப்பற்றும் தமிழ்ப்பற்றும்
பல்கலை உணர்ச்சியும் காண - பல்லவர் அரசாட்சியின் மேம்பாடு குன்றின்மீதிட்ட விளக்கென
ஒளிரா நிற்கின்றது. அந் நாயன்மார் மனைவியர் ஒழுகலாற்றை நோக்கப் பல்லவர் காலத்தில்
கற்புக்கடம் பூண்டபொற்புடைப் பலர் பல்லவர் நாட்டில் பல்கி இருந்தனர் என்பது விளங்குகின்றது.
இங்ஙனமே திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார் முதலிய வைணவப் பெரியார்களும்
வாழ்ந்த காலம் இதுவே ஆகும். வாதங்களில் வல்லவரான சமணரும் புத்தரும் வாழ்ந்த காலமும்
தத்தம் கலைகளை வளர்த்து மறைந்த காலமும் பல்லவர் காலமே ஆகும். இதுகாறும் கூறியவற்றால்,
பல்லவர் ஆட்சியில் இருந்த மக்கள் பொதுக் கல்வி அறிவும், சமயக் கல்வி அறிவும், பிற கலைகளில்
அறிவும் பண்படப்பெற்றிருந்தனர் என்பதைப் பாங்குற உணரலாம்.[18]
--------
References
[1]. “Moreas’s “The Kadamba Kula,’ p. 14.
[2]. N.V.K. Rao’s “Gangas of Talakad’, pp.257-258.
[3]. Ep.Ind.Vol. XVIII p.II 11
[4]. இப்பெயர் மூன்றாம் நந்திவர்மற்கு உரியது.
[5]. இச் செய்திகளை விளக்கமான படக்குறிப்புடன் எனக்கு உதவியர் புதுவை. ரா.தேசிகப்பிள்ளை
பி.ஏ., பி.எல்., அவர்கள் ஆவர்.
[6]. நான் புதுவை ரா. தேசிகப்பிள்ளை அவர்களுடன் சென்று இவ்விடத்தைப் பார்வையிட்டேன்.
இங்குத் தளவாயாக இருப்பவர் ஆராய்ச்சி துறையிற் பெயர்பெற்ற துப்ராய் துரை மாணவர். அவர்
உடன் வந்து பல இடங்களைக் காட்டித் தாம் கொண்ட கருத்துக்களையும் விளக்கினார்.
[7]. இச் சிற்றுார்களின் செயல்கள் அனைத்தும் தேவாரத் திருமுறைகளில் பரக்கக் காணலாம்.
[8]. M.V.K. Rao’s “Gangas of Talakad’, p.265.
[9]. சாளுக்கிய நாட்டிலும் பிரம்மபுரிகள் பல இருந்தன. இன்றைய காம்பூர் என்பது பிரம்மபுரிகள்
சிதைவேயாகும். அதுவும், சினையாகு பெயராகி (சீகாழியைப்போல, நகரத்தையே குறிக்கலாயிற்று)
[10]. Ep.Ind. Vol. XV. p.250
[11]. ‘உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்’ என்ற தமிழ் மறை நோக்குக.
[12]. S.I.I. Vol. II, p.346.
[13]. ‘இராசசிம்மன் சைவ சித்தாந்தத்தில் வல்லவன்’ என்று கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுகள்
கூறுகின்றன. S.I.I. Vol.I.
[14]. M.V.K. Rao’s “Ganga of Talakad’, pp.267-269.
[15]. அப்பர் புராணம், செ.37-40
[16]. திருவதிகை-கோவிலுக்கு ஒரு கல்தொலைவில் பாழ்பட்டுக் கிடந்து இப்போது வெளிக்கொணரப்பட்ட சிறிய கோவிலே ‘குணதர ஈச்சுரம்’ என்று அறிஞர் கூறுகின்றனர்.
[17]. Vide “Tiruparuthikunram and its Temples’.
[18]. தமிழ்க் கல்வி விளக்கம் ‘இலக்கியம்’ என்னும் தலைப்பில் விவரமாகத் தரப்படும்.
--------------
20. சமயநிலை
சமண வீழ்ச்சிக்குக் காரணம்
இடைக்காலப் பல்லவர் காலத்தில் தமிழகம் நுழைந்த திகம்பர சமணத் துறவிமார் ஆடையின்றிக்
திரிந்தமை, நீராடாது அழுக்குப் படிந்த மேனியராய் அலைந்தமை, இயற்கைக்கு மாறுபட்ட
முறையில் தனித்துத் துறவு நிலையில் முற்ற இருந்தமை, கடுமையான நோன்புகள் நோற்றமை,
சமயத்தின் பெயரால் தற்கொலை செய்து கொண்டமை இன்ன பிறவும் தமிழர் முன் இந்நாட்டிற்காணாத
காட்சிகள் அல்லவா? இவை அனைத்தும் தமிழர் மரபுக்கே மாறுபட்டவை. பல்லவர் காலத் தமிழ்
மக்கள் அகம் - புறம் கண்ட சங்கத் தமிழர் மரபினர்: சைவ-வைணவ வழிபாடு கொண்ட மரபினர்.
இயற்கையின் ஒரு கூறாகிய பெண்ணை (தாய்மையை)க் கடியத் தலைப்பட்ட சமணத்
துறவிமாரை அத்தமிழ்மக்கள் எங்ஙனம் நேசித்தல் கூடும்? முதலிற் சமண முனிவருடைய
கல்வி கேள்விகளிலும் பிற நற்பணிகளிலும் உவந்து சமணரான மக்கள், இம் மாறுபாடுகளை
உணர்ந்த பின்னர் உள்ளுர வெறுத்தது வந்தனர்; அப்பர் துணிந்து வெளிப்பட்டவுடன் சிலர்
வெளிப்போந்தனர்; அரசனே மாறியவுடன் தொண்டை நாடே சமயம் மாறியதென்னலாம்.
இந்நிலைமையே பாண்டிநாட்டிலும் இருந்து, சம்பந்தரால் மாறியது.
உடனே இம் மாறுபாடு எப்படி உண்டானது?
அப்பர்க்கு முன்னரே நாயன்மார் பலர் சமணரைப் பின் பற்றி, மக்களைத் தம்வழித் திருப்பத்
தண்ணிப் பந்தர் வைத்தல், மடங்கள் வைத்துச் சமயக் கல்வியைப் புகட்டல், சமயப் போர் வீரரைத்
தயாரித்தல், திருப்பணிகள் செய்ய மாணவரைத் தயாரித்தல். அடியார்கட்கு அன்னமளித்தல்,
அடியார் எப்பொழுது, வந்தாலும் உபசரித்து வேண்டின தருதல் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுப்
பொதுமக்கள் உள்ளத்தைப் படிப்படியாகத் தம் பழைய சமயத்திற்கு ஈர்த்து வந்தனர். கோவில்களில்
ஆடல் பாடல்கள் தோன்றின; நாடகங்கள் நடிக்கப் பெற்றன; பலவகைப் படைப்புப் பொருள்கள்
(பிரசாதங்கள்) அடியார்க்குத்தரப்பெற்றன; இறைவர்மீது உள்ளத்தை உருக்கும் பதிகங்கள்
இசைக்கருவிகள் துணையுடன் பாடப்பட்டன. ‘உலக வாழ்க்கை இன்பமானது; ஆண் - பெண்
வாழ்வதே இன்ப வாழ்க்கை. இதுவே இறைவன் ஆணை: உலக இன்பங்களை நுகர்ந்து
கொண்டே இறைவன்பால் பக்தி பூண்டு அவரவர் நிலைக்கேற்பத் திருப்பணிகளும் துயவாழ்வும்
நடத்திப் போதலே போதும்’ என்று சைவரும் வைணவரும் கூறத் தொடங்கினர். மக்கள் மனம்
தெளிவுற்றது; அச்சமற்றது. இந்த எளிய போதனையே பொதுமக்கள் விரும்புவதன்றோ?
அதனால், சைவர் தொகை பெருகலாயிற்று: அதன் பயனாகச் சமணர் தொகை குறையலாயிற்று.
சமணர் யாதுதான் செய்வர்? அரசன் அரவணைப்பும் ஒழியவே, சமண முனிவர் - பலர் பெருந்திய
உள்ளம் உடையவராய்க் கங்கநாடு புக்கனர். அங்குத்தம் சமய இலக்கியப் பணிகளைச்
செய்து புகழ் பெற்று வந்தனர்.[1]
சைவ சமயம்
வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் பிறவற்றிலும் வல்ல மறையவர் நூற்றுக் கணக்காகப் பல்லவர்
நாட்டிற் குடியேற்றம் பெற்றனர். இங்ஙனம் மறையவர் தொகை பெருகப் பெருக, அவரது வைதிக
சமயம் பழந்தமிழ்ச்சைவசமயத்தோடு இரண்டறக் கலந்தது; அவர் தம் உருத்திர வணக்கம் நன்றாகச்
சிவ வணக்கத்திற் கலந்துவிட்டது. சங்ககால இறுதியிலேயே உண்டான சிவஉருத்திரக் கலப்பைத்
திருவாசகத்திற் காணலாம். பின்வந்த மறையவரால் மிகுந்த சமயக் கலப்பு ஏற்பட்டது. என்பதைக்
கி.பி. 7ஆம் நூற்றாண்டிற் செய்யப்பெற்ற அப்பர், சம்பந்தர் பாடல்களைக் கொண்டு நன்குணரலாம்.
வேத வேள்வியே இல்லாத பழைய சிவன், வடவர் கலப்பால் வேள்விக்குரிய மகாதேவன் ஆயினன்.
தமிழ் முருகன் சுப்பிரமணியன் ஆயினன்; தமிழக் கொற்றவை துர்க்கை ஆயினள்[2] பல பல
கிளைச் சமயத்தார் வழிபட்டுவந்த மூர்த்திகளை எல்லாம் சிவனுடன் சேர்த்து, ஐயனார் சிவனது
அம்சம், விநாயகர் சிவனது பிள்ளை என்றெல்லாம் கூறி, அதற்கேற்பக் கதைகள் வரையப்பெற்றன.
இத்தகைய மாறுதல் தமிழ்நாட்டில் ஏறத்தாழக் கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் நடந்து முடிந்தன
என்னலாம். சைவ சமயம் பல கிளைகளாகப் பிரிந்து இருந்தது. அப் பல பிரிவினர், பெளத்தரும்
சமணரும் தெற்கே வந்தபொழுதோ-அதற்கு முன்னரோ - பின்னரோ தென்னாடு புக்கனர். இவரே
பாசுபதர், காபாலிகர், காளாமுகர் முதலியோர்.
இவர்தம் பெயர்களில் ஒன்றேனும் தமிழ்ப் பெயராக இருத்தல் அருமை; ‘தேவ சோமா’ முதலிய
பெயர்களை மத்த விலாசத்திற் காண்க. இவர்தம் பழக்க வழக்கங்களும் தமிழ்நாட்டுப் பழக்க
வழக்கங்கட்கு முற்றும் மாறுபட்டவை. ‘அன்பே சிவம்’ என்ற மணிவாசகர் - அப்பர் - சம்பந்தர்
கொண்ட சைவ சமயத்திற்கும் இவர்கள் கொண்ட சைவ சமயத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும்
உள்ள வேறுபாடு காணலாம். எனினும், இக் கிளையினர் கொள்கைகள் பல தேவாரப் பதிகங்களிற்
புகுந்துவிட்டன. இஃது அக்கால நிலையேயன்றி வேறன்று. சமண-பெளத்த சமயங்களை அடக்கத்
தொடங்கிய பழந்தமிழ்ச்சைவம், ஒருபால் வைதிகத்தையும் மறுபால் இக் கிளைகளையும் தழுவி
இவற்றின் துணைகொண்டு அவற்றை அடக்கிவிட்டது என்பது நன்கு தெரிகிறது.
பாசுபதர்
இவர் பழக்கங்களும், நம்பிக்கைகளும் விந்தையானவை இவர் சில சமயங்களில் ‘மயேச்சுரர்’ எனவும்
கூறப் பெறுவர். இவர் திருநீற்றை அணிவர்; சிவனே முழு முதற்கடவுள் என்பர்; லிங்கத்தை அல்லது
சிவமூர்த்தத்தை வணங்குவர். இவருட் சிலர் தலை முடியைக் கத்தரித்து விடுவர்; சிலர்
மொட்டையடித்துவிடுவர்; சிலர் குடுமி வைத்திருப்பர். சிலர் உடல் முழுதும் நீறுபூசி ஆடையின்றி
நடமாடினர். ஆயின், இவர் அனைவரும் உலகப்பற்றை விட்டு மேனிலை பெறத் தவ முயற்சி
மேற்கொண்டிருந்தனர். இவருட்சிலர் சிறுகணங்கள் எனப்பட்டவற்றினிடம் நம்பிக்கை வைத்தனர்.
அவற்றை உளங்குளிரச் செய்ய மக்களைப் பலியிடல், இறந்தவர் இறைச்சியைப் படைத்தல்
முதலியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.[3]
காபாலிகர்
இவர் பைரவரை வணங்கினவர், மண்டை ஒடுகளை மாலைகளாக்கி அணிந்து கொண்டிருந்தனர்.
மனிதர் உட்பட எல்லா உயிர்களையும் பைரவர்க்குப் பலியிட்டனர்; பலியிட்ட உடல் இறைச்சியையும்
மதுவையும் உட்கொண்டனர்; பெண்களை ‘ஆதி சக்தி அவதாரம்’ என்று வணங்கினர்; சிவ
வழிபாட்டில் எல்லாச் சமயத்தவரும் சமமானவரே என்ற கொள்கை கொண்டவர். இவர்கள்
முயற்சியால் சக்தி வணக்கம் மிகுதிப்பட்டது.[4] இவருள் பெண்பாலரும் இருந்தனர் என்பது
மத்தவிலாசத்தாற் புலனாகிறது.
காளாமுகர்
இவர் ‘லகுலீச பாசுபதர்’ என்னும் பெயர் பெற்றவர் பக்தி முறை பின்பற்றியவர்: இறைவனைப்
பற்றிப் பாடலும் மெய்மறந்து ஆடலும் மந்திரம் செபித்தலும் செய்தனர். இவர் அனைவரும்
சிறந்த கல்வி கற்றவர். இவர்கள் செல்வாக்கு, தமிழகத்தில் மிகுந்திருந்தது. சோழர் காலத்தில்
பல கோவில்கள் இவர்கள் மேற்பார்வையில் விடப்பட்டிருந்தனர்.
வைணவம்
சைவம் தமிழ் நாட்டிற்கு உரித்தானது போன்றே வைணவமும் இந்நாட்டிற்கு உரியதே ஆகும்.
இதனை மாயோன் மேய காடுறை யுலகம் என்ற தொல்காப்பியர் சூத்திரம் நன்கு விளக்கும்.
இதன் வளர்ச்சி ஓரளவு சிலப்பதிகாரத்தால் நன்கறியலாம். சைவத்தில் பல புதிய கொள்கைகள்
புகுந்தாற் போல வைணவத்திற் புகுந்த புதியன எவை என்பது அறியக்கூடவில்லை. ஆயின்,
திருமாலின் பல அவதாரக் கதைகளும் புராணச் செய்திகளும் பிறவும் வன்மையுற வழக்குப்பெற்ற
காலம் பல்லவர் காலம் என்னலாம்.
வைணவ வேந்தர்
இவ் வைணவ சமயம் முதலில் பெளத்த சமயத்துடனும் பின்னர்ச் சமண சமயத்துடனும் போரிட்டது.
திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் இவர்தம் பாசுரங்கள்
அவர் காலச் சமய நிலையை நன்குணர்த்துவன ஆகும். பல்லவ அரசருள் இளவரசன் விஷ்ணுகோபன்.
இரண்டாம் சிம்மவர்மன், விஷ்ணுகோபவர்மன் முதலியோர் ‘பரம பாகவதர்’ என்று நம்மைக்
கூறிக்கொண்டனர். ‘சமயங் காப்போர்’ என்றும் தம்மைப் பாராட்டிக் கொண்டனர். பிற்காலப்
பல்லவருள் சிம்மவிஷ்ணு, நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன் முதலியோர் சிறந்த
வைணவப்பற்று உடையவர். அவர்களாற்றான் பல்லவப் பெருநாட்டில் பெருமாள் கோவில்கள்
பல தோன்றின. குகைக் கோவில்கள் பல குடையப்பட்டன; வைணவ மடங்கள் காவேரிப்பாக்கம்
முதலிய இடங்களில் தோன்றின. சைவத்தைப் பின்பற்றிய பல்லவ அரசரும் வைணவத்திற்கும்
பலவகையில் ஆக்கம் அளித்தனர். சுருங்கக்கூறின், பல்லவர் காலத்திற் சைவமும் வைணவமும்
பல்லவ அரசரால் பேணி வளர்க்கப் பெற்றன என்று கூறல் தவறாகாது.
சமயக் கொடுமை
முதலிற் பல சமயங்களும் நன்முறையில் நடந்துவந்தன. ஆயின், நாளடைவில் சமய வாதங்கள்
மிகுதிப்பட்டன. அவற்றால் ஒன்றுக்கென்று பகைமை முற்றத்தொடங்கியது; அரசர் செல்வாக்குப்
பெற்ற சமயம், ஏனைய சமயங்களை ஏளனம் செய்யத் தலைப்பட்டது; மறைமுகமாகச் சில
தீமைகளும் நிகழ்ந்திருக்கலாம். இப் பகைமை அப்பர்க்கு முன்பே வளர்ந்து வந்தது என்பதைத்
தண்டியடிகள் புராணமும் நமிநந்தி அடிகள் புராணமும் நன்கு விளக்குகின்றன.
சமணர்-சைவர் கொடுமை
(1) தங்கள் சமயத்திற் சிறந்து இருந்த தருமசேனர் என்ற திருநாவுக்கரசர் சைவராக மாறியவுடன்
திகம்பர சமணர் அரசனிடம் முறையிட்டனர்; அரசன் அவர் வயப்பட்டுச் சமணனாக இருந்தவன்
ஆதலின், திகம்பர சமணர் அப்பரை ஒழிக்க நீற்றறையில் இடத் தூண்டினர்; விடம் கலந்த
உணவை ஊட்டினர்; யானையால் இடறச் செய்தனர். இறுதியிற் கல்லிற் கட்டிக் கடலில் பாய்ச்சினர்.
சமணச் சார்புடைய மன்னன் இக்கொடுமைகள் செய்யப்பின்வாங்கவில்லை. இறுதியில் அப்பர்
வென்றார்; அரசனும் சைவன் ஆனான். முன்பு சமணச் சார்பு கொண்டு சைவர்க்குத் தீங்கிழைத்தபடியே.
அவன் சைவன் ஆனதும் சிறப்புற்ற பாதிரிப்புலியூரில் இருந்த சமணக் கல்லூரியை ஒழித்தான்!
பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொணர்ந்து திருவதிகையிற்
குணதர ஈச்சரம் என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான். சமணர் முன்னர் விதைத்ததையே
அறுவடை செய்தனர்.
(2) இங்ஙனமே இத்திகம்பர சமணர் மதுரையில் சம்பந்தர் தங்கி இருந்த மடத்திற்கே நெருப்பிட்டு
விட்டனர். அந்நெருப்பிட்ட பயனே. அவர்கள் கழுவேற நேர்ந்தது. இந்த நிகழ்ச்சியிலும் முதலில்
நெடுமாறன் அத் திகம்பரர் பக்கமே சார்ந்து, ‘கண்ட முட்டு, கேட்ட முட்டு’ என்றான். ஆனால்,
அவனே சைவனாக மாறியவுடன். அத் திகம்பரரையே கழுவேறச் செய்தான். திகம்பரர் மடத்திற்குத்
தீவைத்த கொடுமையை எண்ணியே. சம்பந்தர் வாய்திறவாதிருந்தார் என்று சேக்கிழார் கூறுதல்
சிந்திக்கத்தக்கது.
இவை நடந்தனவா?
(1) மேற் சொன்ன இரண்டு நாட்டு நிகழ்ச்சிகளிலும் முற்பகுதியின. சமணர் செய்த கொடுமைகள்,
பின் இரண் சவர் செய்த கொடுமைகள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்ன பாடலியில் இருந்த
புகழ்பெற்ற சமணக் கல்லூரியைப் பற்றிய குறிப்பே காணப்படவில்லை. அச் சமணரும், பாண்டி
நாட்டுச் சமணர் பலரும் கங்கநாட்டிற்குப் போய்விட்டனர்;[5] சிலர் புதுக்கோட்டைச் சீமைக்குப்
போய்விட்டனர்.[6] இக் குறிப்புகளை நடுவுநிலையினின்றும் ஆராயின். பெரியபுராணம் கூறும்
மேற்சொன்ன செய்திகள் பொய்யெனக் கூறல் இயலாது. அப்பர் சமணரால் துன்புறுத்தப்பட்டவர்
என்பதை அவருடைய பாடல்களே விளக்கி நிற்கின்றன. வேறு சான்று வேண்டுவதில்லை.
குணதர ஈச்சரம் என்ற கோவில் இப்பொழுதும் திருவதிகையில் இருக்கிறது. அது மகேந்திரன்
கட்டியதுதான் என்று அதன் தூண்களே சான்று பகர்கின்றன.[7] தான் வேறு சமயத்திலிருந்து
சைவனாக மாறினான் என்பதை மகேந்திரனே தன் கல்வெட்டில் அறிவித்துள்ளான். அவன்
கொண்டிருந்த வேறு சமயம் சமணமே என்பதைச் சித்தன்னவாசல் ஓவியங்கள் மெய்ப்பிக்கின்றன.
(2) சம்பந்தர் பதிகங்களை நன்கு ஆராயின், அவர் திகம்பர சமணரை மனமார வெறுத்தவர்;
அவர்களால் சைவசமயம் பாழாகியது என்பதை நம்பியவர் என்பன நன்கு வெளியாகின்றன.
இராசராசன் காலத்தவரான நம்பியாண்டார் நம்பிதாம் பாடிய சம்பந்தரைப் பற்றிய பாக்களில் பல
இடங்களில் சமணர் கழுவேற்றப்பட்டனர் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். சான்றாக
ஒன்று காண்க: -
“கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக்-காதலால்
புண்கெழுவு செம்புனலாறோடப் பொருதவரை
வன்கழுவில் தைத்த மறையோனை” [8]
நம்பி, சேக்கிழார்க்கு 200 ஆண்டுகள் முற்பட்டவர். இவர் எதனைச்சான்றாகக்கொண்டு இங்ஙனம்
பல இடங்களிற் குறித்தார்? இவர் காலத்தில் அச் செய்தி நாடெங்கும் பரவி இருந்திருத்தல் வேண்டும்
என்பது தெரிகிறது. அன்றோ? இது நிற்க.
வைணவர் கொடுமை
(1) இலக்கியச் சான்று: திருமங்கை ஆழ்வார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர். இரண்டாம் நந்திவர்மன்
காலத்தினர். இவர் சோழநாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் சிறந்த
வைணவ பக்தர். இவர் நாகப்பட்டினத்துப் பெளத்த விகாரத்தில் இருந்த பொன்னாற் செய்யப்பட்ட
புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து, அதைக் கொண்டு பல கோவில் திருப்பணிகள் செய்தனர் என்று
குருபரம்பரை கூறுகின்றது. இவர் பெளத்த-சமண சமயங்கள் மீது நாயன்மாரைப்போலவே
வெறுப்புற்றவர் என்பதை இவர் பாடல்களைக் கொண்டு நன்குணரலாம்.
(2) இவரது காலத்தவரே தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். அவரும் சமண-பெளத்தரை அறவே
வெறுத்தவர்; அமயம் வாய்ப்பின், அவர்களைக் கொல்வதே நல்லது என்ற எண்ணம் கொண்டவர்.
இதனை அப்பெரியார் பாடலே உணர்த்தல் காண்க:
“வெறுப்பொடு சமணமுண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையே ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகர் உளானே!”
பட்டயச் சான்று
“இரண்டாம் நந்திவர்மன் தரும சாத்திர முறைப்படி நடவாத மக்களை அழித்து, இந்த நிலத்தைக்
கைப்பற்றி, வரியிலியாகப் பிராமணர்க்கு அளித்தான்” என்பது உதயேந்திரப் பட்டயத்திற்
காணப்படுகிறது. இக்குறிப்பைப்
பற்றி அறிஞர் தாமஸ் போக்ஸ், “இந்த நிலத்துக்கு உரியவர் சமணர் அவர்களை அழித்து
இந்நிலத்தைப் பிறர்க்குக் கொடுத்தமை என்பது, பல்லவ மல்லன் வரலாற்றில் ஒரு களங்கத்தை
உண்டுபண்ணிவிட்டது. எனினும், இச்செயல் அக்காலநிலையை ஒட்டியதாகும்”[9] எனக்
கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது. இதனால் வைணவனான பல்லமல்லன், தன் முன்னோர்
சமணர்க்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து, மறையவர்க்கு உரிமையாக்கினான் என்பது
வெளிப்படை.
பல்லவ அரசர் பௌத்தர்க்கு நிலம் விட்டதாக இது காறும் ஒரு பட்டயமோ-கல்வெட்டோ
கூறாதிருத்தல் இங்கு நினைக்கத்தக்கது.[10]
சிற்பச் சான்று
பரமேச்சுர விண்ணகரத்தின் உட்சுவர் நிறையச் சிற்பங்கள் அழகொழுகக் காட்சி அளிக்கின்றன.
அவற்றில் சில சிற்பங்கள் பல்லவ மன்னன் சமயக் கொள்கையைக் குறிக்கின்றன; ‘அரசன்
அரியணையில் அமர்ந்துள்ளான். அவனுக்குப்பின் ஒருத்தி கவரி வீசுகிறாள். அரசர்க்கு எதிரில்
துறவிகள் இருவர் கழுவேற்றப்பட் டுள்ளனர். இச்சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலைகொண்ட
கோவிலையும் அதன் வலப்புறம் வைகுந்தப்பெருமாள் கோவில் போன்றகோவிலையும் குறிக்கும்
சிற்பங்கள் காண்கின்றன. ஆழ்வார் சிலை, முதல் மூன்று ஆழ்வாருள் ஒருவரைக் குறிப்பதாகலாம்.
அவர் அக்காலத்திற்பூசிக்கப்பட்டனர்போலும்! சமணர், புத்தர் போன்ற புறச் சமயத்தவரை
அழித்துவைணவம் நிலை நாட்ட முயன்றதைத் தான் இச் சிற்பங்கள் உணர்த்துகின்றன. இஃது
அக்காலத்தை ஒட்டிய செயல் போலும் கழுவேற்றப்பட்டவர் யாவராயினும் ஆகுக: இச்
சிற்பங்களால் பல்லவமல்லன் நடத்தை இன்னது என்பது நன்கு புலனாகிறது.
பெளத்த-சமணப் போராட்டங்கள் பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டன எனக்
கூறலாம்[11]. அதற்குப்பிற்பட்ட கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சமணர் கழுவேற்றப் பட்டனர். எனின்,
வீராவேசத்துடன் சமண-சைவ வாதங்கள் நடந்த சம்பந்தர் காலத்தில்-அப்பரைப் பல்லாற்றானும்
கொல்ல முயன்ற காலத்தில்-சம்பந்தர் இருந்த மடத்திற்கே நெருப்பிட்ட அக்காலத்தில் சமணர்
கழுவேற்றப்பட்டனர் என்பதில் ஐயப்படத்தக்க குறிப்பு யாதுளது? இச்சமயக் கொடுமைகள்,
தாமஸ்போக்ஸ் [12] போன்ற ஆராய்ச்சி அறிஞர் கூறுமாறு, ‘அக்கால நிலைமைக்கேற்ப
நடைபெற்றனவாகும்’ எனக்கோடிலே வரலாற்றுணர்ச்சியுடையார் செயற்பாலது.
உயிர்ப்பலி இடுதல்
முன்னுரை
கபாலிகர் பாசுபதர் முதலிய சைவ சமய வேறு பிரிவினர் பைரவர்க்கும் காளிக்கும் செந்நீரையும்
மதுவையும் படைத்தல் வழக்கம். இவ்விரு கடவுளர்க்கும் உயிர்களைப் பலியிட்டும் வந்தனர்.
இப் பழக்கம் நெடுங்காலமாகவே இந்தியா முழுவதும் இருந்த பழக்கமாகும். இது பல்லவர்
காலத்திலும் இருந்ததென்பது அறியத் தக்கது. ஆயின் பல்லவ அரசர் இந்த வழிபாட்டில் கலந்து
கொண்டனர் என்பதைக் கூறச் சான்று இல்லை. அவர்கள் காலத்தில் துர்க்கை, காளி முதலிய
பல வடிவங்களில் வழிபடப் பட்டு வந்தது பெண் தெய்வமாகும். கயிலாசநாதர் கோவில் சிற்பங்களில்
‘பைரவ மூர்த்தி, பிரம்ம சிரச்சேத மூர்த்தி ஆகியதேவரைக் குறிப்பனவும் உள. காஞ்சியிலும்
மாமல்லபுரத்திலும் துர்க்கை, காளி (மகிடாசுரமர்த்தினி) வடிவங்களைக் காணலாம். இவ்வடிவங்களைக்
கண்ட டாக்டர் ஒகேல் என்பவர், “ஒவ்வொரு சிற்பமும் காளிக்குத் தலையை அறுத்துக்
காணிக்கையாகத் தருதலையே குறிக்கின்றது. இச் செயல் பத்தர்தம் மனவுறுதியை நன்கு
காட்டுகிறது” எனக் குறித்துள்ளார்.[13] தலையை அறுக்கத் துணிந்த பத்தனுக்கு எதிர்புறத்தே
வேறொரு பத்தன்தன் உள்ளத்து உணர்ச்சியால் உயர்ந்த பத்தி நிலையிலிருந்து வழிபாடு
செய்தலையும் அச் சிற்பங்கள் உணர்த்துகின்றன.[14]
சிற்பங்கள்
மகேந்திரவர்மன் காலத்துத்திருச்சிராப்பள்ளி-குகைக்கோவிலின் துர்க்கைக்கு முன் ஒருவன் தன்
கழுத்தை அறுத்துப் பலியிடுவதாகச் சிற்பம் காணப்படுகிறது. இக் காட்சி புள்ள மங்கையில் உள்ள
சிவன் கோவிலிலும் காணலாம். அங்குள்ள சிற்பங்களில் ஒருவன்கழுத்தை அரிந்துகொள்வதைக்
குறிக்கிறது. மற்றொருவன் தன் தொடை யிலிருந்து தசையை அறுத்துக்காளிக்குப் பலியாகத்
தருகிறான். மாமல்லபுரத்தில் உள்ள வராகப்பெருமாள் கோவிலில் அச்சுறுத்தும் தோற்றத்துடன்
கூடிய துர்க்கை உருவம் காணப்படுகிறது. அங்கும் அழகன் ஒருவன் மதுவேந்திய பாத்திரத்துடன்
துர்க்கையை வணங்குகின்றான். வேறொருவன் கோடரி ஒன்றை ஏந்திக் கொண்டே வணங்குகிறான்.
இத்தகைய சிற்பங்கள் அக்கால உயிர்ப்பலியை நினைப்பூட்டுவனவே அன்றி வேறல்ல.[15]
சான்றுகள்
இங்ஙனம் பைரவர்க்கும் காளிக்கும்.உயிர்ப்பலி (மக்கள் பலி) இடல் பண்டை வழக்கமே என்பது
வரலாறு கூறும் செய்தியாகும். திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) சிவபெருமானுக்குக் கொங்கு வீரர்
தம் தலைகளையும் நாக்குகளையும் பலி இட்டமை கல்வெட்டுச் செய்தியாகும்.
இப் பிற்காலக் கல்வெட்டுச் செய்திகளையும் முன்சொன்ன சிற்பங்களையும் நோக்க, பல்லவர்
காலத்தில் உயிர்ப்பலி இடுதல் என்பது கிளைச்சமயத்தார் சிலரேனும் கையாண்டு வந்த பழக்கம்
என்பதை அழுத்தமாகக் கூறலாம், அஃதாவது பைரவர்க்கும் காளிக்கும் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது
எனக் கூறலாம் கூறவே, சிறுத்தொண்டர் தம் ஒரே மகனைப் பைரவர்க்குப் பலியிட்டுச் சமைத்துப்
படைத்ததில் வியப்பில்லை அன்றோ?
---------------
References
[1]. M.V.K. Rao’s “Gangas of Talakad”.
[2.] T.R.Sesha Iyengar’s “Ancient Dravidians."
[3]. M.V.K. Rao’s Gangas of talakad p.189. ‘உயிர்ப்பலி பற்றிய செய்தி இப்பகுதியின் பிற்பட்ட
பிரிவிலே விளக்கப்பட்டடுள்ளது.
[4]. Ibid. pp.188-189
[5]. MVK. Rao’s “Gangas of Talakad” pp.272.
[6]. “Naratha Malai & its Temples, J.O.R. 1933.
[7]. நான் இக் கோவிலை நேரிற் சென்று பார்வையிட்டேன்.
[8]. vide his ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை 11ஆந்திருமுறை.
[9]. Indian Antiquary, Vol. VIII. p.281.
[10]. Dr.C. Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.172.
[11]. The spirit of the then was not unfavourable to the religious presecution of its portrayal on the walls
temple of the 'victorious creed'.
[12]. "The action was in close accordnance with the spirit of the age" - Thomas Foulkes.
[13]. K. Nilakanta Sastry’s article in “Kalaimagal’ (April, 1932.)
[14]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the - Pallavas’, p.183.
[15]. Ibid. p.185.
-----------
21. இசையும் நடனமும்
இசை
நாகரிக நாட்டுக் கலைகளாகப் போற்றப்படும் இசை, நடனம், ஓவியம். சிற்பம், காவியம்
என்பவற்றைப் பல்லவ அரசர் போற்றி வளர்த்தனர். ஒவியமும் சிற்பமும் அவர் தம் ஆட்சியில்
பெற்றிருந்த மேனிலையை அவர்தம் குகைக் கோவில்களிலும் கயிலாசநாதர் கோவில். வைகுந்தப்
பெருமாள் கோவில் போன்ற கற்றளிகளிலும் கண்டு கண்டுகளிக்கலாம். அவை இந்நூல் அடுத்த
பகுதியிலும் பிற இடங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. ஆதலின், இங்கு இசையும் நடனமும் சிறிது
காண்போம்.
மகேந்திரவர்மனும் இசையும்
இவன் பல்லாவரம் குகைக்கோவில் கல்வெட்டில் தன்னைச் ‘சங்கீரண சாதி’ என்று கூறியுள்ளான்.
இதனைப் பிறழ உணர்ந்த அறிஞர் பலர், இவன் தமிழ்த் தாய்க்கும் சிம்மவிஷ்ணுவுக்கும் பிறந்தவன்
எனப் பொருள் கொண்டனர். அது தவறு. இவன் தாளவகைகள் ஐந்தனுள் (சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம்,
கண்டம். சங்கீரனம்) கடைசியில் உள்ள சங்கீரணம் என்பதைப் புதிதாகக் கண்டு, அதன் வகைகளையும்
ஒழுங்குகளையும் அமைத்தவன் என்பது பிற்கால ஆராய்ச்சியாளர் கருத்து. இவனது குடுமியாமலைக்
கல்வெட்டு ஒன்று. ‘சித்தம் நமசிவாய’ என்று தொடங்கிப் பலவகைப் பண்களையும் தாள வகைகளையும்
விளக்கி, முடிவில், ‘இவை எட்டிற்கும் ஏழிற்கும் உரிய’ என்று முடித்துள்ளது. இதனால், ‘மகேந்திரன்
கண்டறிந்த பண்கள் எட்டு நரம்புகளைக கொண்ட வீணைக்கும் பயன்படும். ஏழு நரம்புகளை உடைய
வீணைக்கும் உரியன’ என்பது பொருளாகும். ஏழு நரம்புகளைக் கொண்ட வீணையே யாண்டும் இருப்பது.
மற்றதை மகேந்திரன் புதிதாகக் கண்டு பிடித்தான் போலும்![1]
மாமண்டூர்க் கல்வெட்டில் ‘ஊர்வரி... கந்தர்வ சாத்திரம்’ என்று மகேந்திரன் இசைச் சிறப்பைக் குறித்துள்ளான்.
இப்பேரரசன் தான் இயற்றியுள்ள மத்த விலாசத்தில் இசை, நடனம் பற்றியதன் விருப்பைப் பிறர் வாயிலாக
வெளிப்படுத்துதல் நோக்கத்தக்கது. “இசை எனது செல்வம் ஆநடிப்பவர் தம் அழகிய நடன்ம் பார்க்க
இன்பமானது. தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப அவர்கள் திறம்பட மெய்ப்பாடுகளை விளக்கி நடித்தல்
இனிமையாக இருக்கின்றது. ‘கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல, ஐயநுண் இடையார்
ஆடல் இன்பத்துள் ஆழ்த்துகின்றது.”
மகேத்திரவர்மன் பரிவாதினீ என்னும் பெயர் கொண்ட வீணையில் வல்லவனாக இருந்தான் போலும்!
‘ஒரு பெண்தன் தோழியை அனைத்துக் கொண்டு படுப்பதுபோல நங்கை ஒருத்தி பரிவாதினியை
அணைத்துக்கொண்டு ‘உறங்கினாள்’ என்று அசுவகோஷர் புத்த சரிதத்தில் கூறுதல் காணலாம். மேலும்
அவர், ‘இந்த வீணை பொன் நரம்புகளை உடையது’ என்கிறார். எனவே, பேரரசனான மகேந்திரவர்மன்
சரியான வீணையைத்தான் வைத்திருந்தான் என்பது புலனாகிறது.[2]
இராசசிம்மனும் இசையும்
இராசசிம்மனும் இசையில் பெரும் புலமை பெற்றவன் ஆவன். அவனுடைய பல விருதுப் பெயர்களுள்
‘வாத்ய வித்யாதரன்’ (இசைக் கருவியில் வித்யாதரன்), ஆதோத்ய[3] தும்புரு, (தும்புருவைப்போல
ஆதோத்ய வீணை வாசிப்பில் வல்லவன்). வீணா நாரதன் (வீணையில் நாரதன் போன்றவன்) என்பன
அவனது, இசைப் புலமையை நன்கு விளக்குகின்றன்.
நாயன்மார் இசை
பண்களையும் தாள வகைகளையும் உண்டாக்கி அமைத்தவன். ஒருவன், பலவகை வாத்தியங்களில்
சிறப்பாக வித்யாதரரையும் நாதனையும் தும்புருவையும் நிகர்த்தவன் ஒருவன் எனின் அம்ம்ம்ம! இப்பல்லவப்
பெருவேந்தர் காலம் இசைக்காலமே ஆகும் என்பதில் ஐயமுண்டோ? இதனாற்றான் போலும்,
மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசர் பலவகைப் பண்களைக் கொண்ட, அரியதேனினும்
இனிய தேவாரப் பதிகங்களைத் தலங்கள் தோறும் பாடிக்களித்தார்! பரமனுக்கும் பல்லவ நாட்டு
மக்கட்கும் செவி விருந்தளித்தார்! அவர் காலத்துச் சம்பந்தரும் இசைப் புலவராகி மிளிர்ந்தார்!
சம்பந்தர் இசைப் பாடலிற் பெரிதும் வல்லவர். அவர் பாடிய பாக்களை யாழில் அமைத்துத் தலங்கள்
தோறும் பாடிவந்தவர் திருநீலகண்ட ‘யாழ்ப்பர்னர்’ ஆவர். அவரும் வாசிக்க இயலா வகையில் சம்பந்தர்
ஒரு பாட்டைப்பாடித் திகைக்க வைத்தார்.[4] எனின், அக்கால இசை மேம்பாட்டை என்னென்பது!
அப்பர், ‘ஈசன் எந்தை இணையடி நிழல்-மாசில்லாத விணை ஒலி போன்றது என்று கூறுவதிலிருந்து
அவரது இசைப் புலமையும் இசை இன்பத்தில் ஆழ்ந்து கிடந்த அவரது நுட்ப உணர்வினையும் நாம்
நன்குணரலாம். சுந்தரரும் இசையிற் சிறந்தவர். இம்மூவர் தேன் பாடல்களும் திெவிட்டாத பேரின்பம்
பயப்பனவாகும்; கேட்போர் செவி வழியாப் புகுந்து உள்ளத்தைப் பேரின்ப மயம் ஆக்கிக் கருவி
கரணங்களை ஒயச்செய்து இசை உலகமாகிய பேரின்பப் பெருவாழ்வில் உய்ப்பனவாகும். சைவசமயம்
அக்காலத்தில் மிகுதியாகப் பரவியதற்குற்ற சிறந்த காரணங்கள் சிலவற்றுள் இசைப்பாட்டு ஒன்றாகும்.
இந்த இசையை வளர்த்தவருள் முதல்வன் மகேந்திரவர்மன். அவன் காலத்தில் பல்லவப் பெருநாட்டில்
இருந்த பெருங்கோவில்களில் எல்லாம் இசை வெள்ளம் கரை புரண்டு ஒடியது என்பதை அப்பர்-சம்பந்தர்
பாக்களால் பாங்குற உணரலாம். பெண் மக்கள் இசையில் வல்லவராக இருந்தனர். ஆடவரும்
அங்ஙனமே சிறந்திருந்தனர். ஆடவரும் பெண்டிரும்கோவில்களில் கலந்து பாடினர் என்னும்
குறிப்புக்கள் தேவாரத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம்.
“பண்ணியல் பாடல் அறாத ஆவூர்”
“பக்திமைப்பாடல் அறாத ஆவூர்”
“பாஇயல் பாடல்அறாத ஆவூர்” (சம்பந்தர் பதிகம் 8)
“.......மாதர் விழாச் சொற்கவி பாட நிதான நல்கப்
பற்றிய கையினர் வாழும் ஆவூர்” (சம்.பதி.செ.6)
“கோல விழாவின் அரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரொடும்
பாலென வேமொழிந் தேத்தும் ஆவூர்” (சம். பதி. செ. 9)
“தையலார்பட்டோவாச் சாய்க்காடு”
“மாதர் மைந்தர் இசைபாடும் பூம்புகார்”
‘சித்தம் நமசிவாய’ என்று சிவனார்க்கு வணக்கம் செய்து இசை இலக்கணம் கல்வெட்டிற் பொறித்த
சிறந்த சிவபக்தனான, மகேந்திரவர்மன், இசைக்கலையிலும் நடனக்கலையிலும் பேரின்பம் துய்த்தவன்
ஆதலின், அவனது பெருநாடும் இசையும் நடனமும் ஆகிய கலைகளின் இன்பத்தைச் சமய குரவர்
காலத்தில் நன்கு நுகர்ந்து சைவப் பயிரைத் தழைக்கச் செய்தது. தேவார காலத்தில் இருந்த இசைக்
கருவிகளைக் காணின், பல்லவப் பேரரசர் இசை வளர்த்த பெற்றி மேலும் நன்கு விளங்கும்.
தேவார காலத்து இசைக் கருவிகள் (கி.பி. 600-850)
1. யாழ் 2. வீணை 3. குழல் 4. கின்னரி 5. கொக்கரி 6. சச்சரி 7. தக்கை 8. முழவம் 9. மொந்தை
10. மிருதங்கம் 11. மத்தளம் 12. தமருகம் 13. துந்துபி 14. குடமுழா 15. தத்தலகம் 16. முரசம்
17. உடுக்கை 18. தாளம் 19. துடி 20. கொடுகொட்டி முதலியன. இவற்றுள், பல பண்டைக்கால
முதலே தமிழகத்தில் இருந்தவை. தேவாரத்தில் காணப்படும் பெரும்பாலான பண்கள் தமிழ்நாட்டிற்கே
உரியவை. அவை பண்டை இசை நூல்களில் (அழிந்துபோன நூல்களில்) கூறப்பட்ட இசை நுணுக்கம்
பொருந்தியவை. அப் பண்களில் சில சிலப்பதிகாரத்துட் காணலாம். பல்லவப் பேரரசர் காலத்தில்
தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்களும் தமிழ் இசையும் களிநடம் புரிந்தன என்பதற்குத் திருமுறைகளே
ஏற்ற சான்றாகும்.[5]
ஆழ்வார் அருட்பாடல்கள்
திருப்பதிகங்கள் போலவே, பல்லவர் காலத்தில் ஆழ்வார் அருட்பாடல்கள் வைணவத் தலங்களில்
நன்றாய்ப் பாடப்பட்டு வந்தன. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வைணவம் போற்றப்பட்ட
சமயமாக இருந்தது. அக்காலத்தில் அருட்பாடல்கள் பெரிதும் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம்
சைவர் ஒருபுறமும் வைணவர் மறுபுறமும் இசையோடு கூடிய அருடம்பாடல்களைப் பாடியருளி இசைக்
கருவிகளையும் பயன்படுத்தினர். அரசர் ஆதரவு பெற்ற அப்பெருமக்கட்கு என்ன குறை சுருங்கக் கூறின்
‘பல்லவர் நாடு இசைக் கலையில் கந்தர்வ நாட்டை ஒத்திருந்தது’ என்று கூறி முடிக்கலாம்.
மகேந்திரன் கால நடனம்
மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்ன வாசல் ஒவியங்கள் இரண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில்
பல்லவ நாட்டில் இருந்த நடனக்கலையை நன்குணரலாம்.
(1) வலப்பக்கத்து நடிகை தன் இடக்கையை ‘யானைக்கை’ நிலையிலும், வலக்கையின் அங்கையைச்
‘சதுர’ நிலையிலும் வைத்திருத்தல் நோக்கத்தக்கது. இந்த நடன நிலை மிக உயர்ந்தது. இதனைப்
பிற்கால நடராசர், சிலைகளில் எல்லாம் நன்கு காணலாம். சிவனார் ஆடிய ‘நாதாந்த நடனத்தில்’
இவ்வமைப்பைத் தெளிவாகக் கண்டுகளிக்கலாம்.
(2) இடப்பக்கத்து, நடிகை தன் இடக்கையை லதா விரிசிக நடனத்தில் நீட்டுதல் போலப் பெருமிதத்தோடு
நீட்டியுள்ளார்கள். இடக்கால் பின்பக்கம் மடங்கவேண்டும் வலக்கையின் அங்கையும் வீரல்களும்
மேல்நோக்கி வளைந்திருத்தல் வேண்டும் இடக்கை லதாவைப்போல நன்றாக நீட்டுதல் வேண்டும். இவை
யாவும். அமைந்த நிலையே லதா விரிசிக நடனம் என்பது.
இந்த இரண்டு கூத்தியர் நடன முறைகளிலும் மெய்ப்பாடுகள் பல காணலாம். மெய்ப்பாடுகள் தோன்றும்படி
நடித்தலே நாட்டியச் சுவையை மிகுதிப்படுத்துவதாகும். இம்மெய்ப்பாட்டு வகைகள் புலவாகத்
தொல்காப்பியத்துள் விளக்கப்பட்டுள்ளன. இந் நடிகையர் முழுப் படமும் சித்தரிக்கப்படாமல் இடையளவு
சித்திரிக்கப்பட்டிருத்தல், நட்னக் கலையில் உளதாகும் மெய்ப்பாடுகளை, உணர்த்தலே ஆகும்.
இவ் வியத்தகு ஒவியங்களை வரைந்த பெருமக்கள் சிறந்த நடிகராக இருத்தல் வேண்டும். சிறந்த நடிகரே
சிறந்த ஓவியங்களை, உள் உணர்ச்சியோடு தீட்டவல்லவர் ஆவர். இச் சித்தன்னவாசல் சித்திரங்கள்
தீட்டப்பெற்ற காலத்தில் பல்லவ நாட்டில் ஓவியம் வல்லாருள் பெரும்பாலர் சிறந்த நடிகராகவும்
இருந்தனர் எனக்கோடல் பொருத்தமே ஆகும். பக்தியிற் கட்டுண்டு, இசைக் கலையை நன்குணர்ந்த
திருநாவுக்கரசரும் நடனக்கலை உணர்வை, நன்குடையவர் என்பதை அவருடைய பதிகங்களிலிருந்து
அறியலாம். அவர் சிவனாரது நடனத்தில் உள்ளம் வைத்த உத்தமராக இருந்தார்.
“நீல மணி மிடற்றான்....
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே”
“இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”
“ஆடினார் பெருங்கூத்துக் காளி காண.”
வைகுந்தப்பெருமாள் கோவில்
இக் கோவிலில் நடனம் பற்றி இரண்டு சிற்பங்கள் காணப் படுகின்றன:
(1) அரசன் முன்னிலையில் ஆடவரும் பெண்டிரும் நடித்தல்-ஆடவன் ஒருவன் அழகாகத் தன்னை
அணி செய்து கொண்டு பக்கத்துக்கொருவராக அழகியநங்கையர் இருவருடன் நிற்கின்ற நிலை
என்பன காணத்தக்கன. அரசனது அவை முன்னர் இக்கூத்துநடைபெறுகிறது. இக்கூத்து முடிந்த
பின்னர் மற்போர் நடைபெறுகிறது. இங்ஙனம் நடனத்திற்குப் பிறகு அதே இசை ஒலியுடன் மற்போர்
நடைபெறல் பண்டை வழக்கம் போலும்![6]
(2) நடிகர் ஒன்பதின்மர் அரசன் அவையை அடைகின்றனர். முதல்வன் இசைமுழக்கத்துடன் உள்
நுழைகிறான். அவனுக்குப்பின் ஆடவர் அறுவரும் பெண்டிர் இருவரும் செல்கின்றனர். இவ்விரண்டு
சிற்பங்களோடு, சிலப்பதிகாரச் செய்திகளையும் நோக்க, பல்லவர் காலத் தமிழகத்தில் இருபாலரும்
நடனத்தில் வல்லவராய் இருந்தனர் என்பதும், இருபாலரும் கலந்து ஆடிவந்தனர் என்பதும்
நன்கறியலாம். இங்ஙனம் இருபாலரும் சேர்ந்து நடித்தலைப் பல்லவப் பெருவேந்தர் பாராட்டி
வளர்த்தனர் என்பதும்
அடிகள்மார்
பல்லவர் காலத்துக் கோவில்களில் இசையும் நடனமும் வளர்க்கப்பட்டன. இவை இரண்டும்
சமயத்தின் உறுப்புகளாகக் கருதப்பட்டன. பல கோவில்களில் இவ்விரண்டையும் வள்ர்க்கப்
பெண்கள் இருந்தனர். அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் முதலிய பெயர்களால்
குறிக்கப் பெற்றனர். முத்தீச்சுரா கோவிலில் மட்டும் 42 அடிகள்மார் இருந்தனர் எனின், பல்லவப்
பெருவேந்தர் நடனக் கலையை வளர்த்த சிறப்பை என்னெனப் பகர்வோம் திருவொற்றியூர்க்
கோவிலிலும் குடந்தை முதலிய பல இடங்களிலும் அடிகள்மார் பலர் இருந்தனர்.
“தேனார் மொழியார் திளைத்தங் காடித் திகழும் குடமூக்கில்” (72, 7)
“வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே” (130,1),
“முழவம் மொந்தை குழல்யாழ் ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர்
ஏரார் பூங்காஞ்சி”
“தண்டு உடுக்கை தாளம் தக்கை சார
நடம் பயில்பவர் உறையும் புகார்”
என வரும் திருஞானசம்பந்தருடைய திருப்பாடல் அடிகளால் - அக்காலத்தில் (கி.பி. 7ஆம் நூற்றாண்டில்)
அடிகள் மார் பெருங்கோவில்களில் எல்லாம் இருந்து இசையையும் நடனத்தையும் வளர்த்து வந்தனர்
என்பதை நன்கறியலாம், இசை, நடனம் முதலியவற்றில் பல்லவர்கல்வெட்டுக் குறிப்புகட்குத் தேவாரம்,
விளக்கமாக அமைந்துள்ள பெற்றி அறிஞர் கவனிக்கத்தக்கதாகும். தேவாரப் பதிகங்கள் பக்திச்
சுவையினூடே வரலாற்றுக் குறிப்புகளையும் வாரி வழங்கும் பண்புடையன என்பதைத் தமிழ்மக்கள்
அறியும் நாளே, இத் திருமுறைகள் பொன்னேபோற் போற்றப்படும் பொன்னாள் ஆகும்.
சிவபெருமான் திருக்கூத்து
சிவபெருமான்திருக்கூத்துவகைகள் பல்லவர்க்குமுற்பட்டவை. பல்லவர்க்கு முற்பட்ட மணிவாசகர்
தமது உளமுருக்கும் திருவாசகத்திற் பல இடங்களில் இவற்றைக் கூறிக் களிக்கின்றார். மகேந்திரவர்மன்
தனது மத்தவிலாசத்தில், “சிவன் காபாலி. அவனது தாண்டவ நடனம் மூவுலகங்களையும் ஒருமைப்
படுத்துகின்றது.” என்று கூறியுள்ளான். இந்தத் தாண்டவ நடனம் சிவனார் ஆடிய நடனங்களில்
இரண்டாவதாகும். இஃத அப் பெருமானது பைரவர் அல்லது வீரபத்திரர் நிலையை உணர்த்துவதாகும்.
இந்நடனம் சுடுகாட்டில் பேய்க் கணங்கன் புடை சூழ இறைவன் பத்துக் கைகளுடன் ஆடுவதாகும்.[7]
இத்தகைய சிற்பங்களை எல்லோரா, எலிபென்டா புவனேஸ்வரம் முதலிய இடங்களில் தெளிவுறக்
காணலாம். இந்தத் தாண்டவ நடனம் ஆரியர்க்கு முற்பட்ட நடனக் கலையைச் சேர்ந்தது. ‘பாதி இறை-
பாதி பேய்க்கண்ம்’ அமைப்புக் கொண்ட ஒரு தெய்வ நடனத்தைச் சேர்ந்தது. இக்கூத்து பிற்காலத்தில்
சிவபெருமானுக்கும் அம்மைக்கும் உரியதாகச்சைவசாக்த இலக்கியங்கள் மிக்க அழகாக விளக்கலாயின.[8]
கயிலாசநாதர் கோவில்
சிறந்த சிவபக்தனான இராசசிம்மன், தான் அமைத்த கயிலாசநாதர் கோவிலில் சிவபெருமான்
ஆடிய பலவகை நடனங்களைத் தமிழ்மக்கள் அறியும் வகையில் சிற்பவடிவில் அமைத்துள்ளான்.
அவை உள்ளத்தையும் உயிரையும் ஈர்ப்பனவாகும். அவற்றுள் நாதாந்த நடனமும் குஞ்சித நடன்மும்
குறிக்கத்தக்கன.
நாதாந்த நடனம்
சிவபெருமானுக்கே உரிய பழைய நாதாந்த நடனம்பல்லவர் காலத்துக் கோவில்களில் இல்லை. ஆயின்
அதனினும் சிறிது வேறுபட்டதும் அரியதுமாகிய புதிய நடனம் கயிலாசநாதர் கோவிற் சுவர்களிற்
காணக்கிடக்கின்றது."இது, நாட்டிய நூலில் உள்ள 108 வகை நடனங்களில் சேராதது. இதில் சிவபெருமான்
தன் நடனத்திடையில் திடீரென்று ஆலிதாசன நடனத்தை ஒத்த ஒரு நிலையை அடைகின்றதாகக்
தெரிகிறது.[9]
‘தாக்கிய திருவடி’ நடனம்
நடிகன் வலக்காலையும் வலக்கையையும் வளைக்க வேண்டும், இடக்காலும் இடக்கையும் வலமாகத்
தூக்க வேண்டும்.
இந்த நிலையில் நடித்தலே ‘தூக்கிய திருவடி (குஞ்சிதபாத) நடனம் எனப்படும். இதனையும் கயிலாசநாதர்
கோவிற் சிற்பங்களிற் காணலாம். இங்குச் சிவன் எட்டுக் கைகளை உடையவன். மேல் வலக்கைப்
பாம்பின் வாலைப்பற்றியுள்ளது. அடுத்தகையில் தமருகம் உள்ளது. மூன்றாம் கைவளைந்து, அங்கை
மெய்ப்பாடு காட்டுவதாக உள்ளது; நான்காம் கை ‘அஞ்சித்’ நிலையில் இருக்கின்றது. மேல் இடக்கை
‘மழு’ ஏந்தியுள்ளது. அடுத்தகை ‘கொடிக்கை’ நிலையில் உள்ளது; அடுத்தது ‘முக்கொடி’ (திரிபதாக)
நிலையில் உள்ளது: நான்காம் இடக்கைமேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் உள்ளங்கை சடைமுடியைத்
தொட்டுக் கொண்டு இருக்கிறது; இச் சிவனுக்குக் கீழே மூன்று கணங்கள் நடிக்கின்றனர். இடப்புறம்
உமையான் அமர்ந்துள்ளான். அடியில் விடை காணப்படுகிறது. வலப்புறம் நடனச் சிலை ஒன்றும்
அதன் அடியில் இரண்டு கணங்கள் குழல் வாசிப்பதாகவும் சிற்பங்கள் காண்ப்படுகின்றன்.
இத் தூக்கிய திருவடி நடனச்சிலைகள் சிவ சூடாமணி ஆகிய இராசசிம்மன் உள்ளத்தைக் கொள்ள
கொண்டதாகும். அதனாற்றான் இந்நடனச் சிலைகள் பல கயிலாசநாதர் கோவிலில் காணப் படுகின்றன.
இவனுக்குப்பின்வந்த மூன்றாம் மகேந்திரவர்மன், தான் (கயிலாசநாதர் கோவிலுக்கு எதிரில்) கட்டிய
சிவன்கோவிலில் இதே நடனத்தைக் குறிக்கும் சிற்பத்தை அழகிய முறையில் அமைத்துள்ளான்.
இச் சிற்பங்கள் மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்டவை ஆகும்.[10] இவற்றை நேரிற்
காண்பவரே இவற்றின் அருமை பெருமைகளையும் சிவபக்தர்களான பல்லவப் பேரரசர் கலை
உணர்வின் நுட்பத்தையும் உள்ளவாறு உணர்தல் கூடும். ‘சங்கர பக்தனான இராசிம்மன் தில்லை
நடராசர் கூத்தினும் சிறிது வேறுபட்ட கூத்தை (இறுதியிற் சொன்ன குஞ்சிதக் கூத்தை)த் தனதாகக்
கொண்டது, அவனது கூத்தறிவின் பேரெல்லையை உணர்த்தி நிற்கின்றது. இங்ஙனம் பல்லவப்
பெருவேந்தர் கூத்திலக்கணப் பண்புகளை முற்ற உணர்ந்தவராய்த் தாம் கட்டிய கோவில்களில்
அவற்றை அணிபெற அமைத்து மக்கள் மனத்தைத் தூய கலைகளிற் புகச் செய்து பேரின்பப்
பெருவாழ்வை அளித்துதவினர் என்னல் மிகையாகது.
-----------
References
[1]. Prof Dubreils “pallavas’ pp. 38-40
[2]. Dr.C.Minakshi’s pp.242-248.
[3]. மகேந்திரன் இசைக் கலை உணர்வை முழுதும் உணர வேண்டுமாயின் டாக்டர் மீனாட்சி
அம்மையாரின் அரிய ஆராய்ச்சி நூலைப் படித்துணர்க. ஆதோத்யம் என்பது, முரசம், குழல் தாளம்
ஆகிய நான்கையும் குறிக்கும்.
[4]. சம்பந்தர் புராணம், செ. 446 - 454
[5]. பல்லவர் கால இசைச்சிறப்பை நன்குணர்த்தும் நூல்கள் முதல் ஏழு திருமுறைகளேயாம். இசைபற்றிய
அக்காலக் குறிப்புகள் அனைத்தும் அத் திருமுறைகளில் விளக்கப்பட்டுள்ளன. இத்துறையில் தமிழ்
அறிஞர் ஆராய்ச்சி நடத்தல் இன்றியமையாததாகும்.
[6]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.280.
[7]. ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே’
‘கூரிருட்கூத்தொடு குளிப்போன் வாழ்க!’
‘கழுதொடு காட்டை நாடகம் ஆடி......’
‘குடர்நெடு மாலை சுற்றி....’
‘சுடுகாட்டு அரசே......’ (திருவாசகம்)
‘ஆடினார் பெருங்கூத்துக் காளிகாண் (அப்பர் தேவாரம்)’
[8]. A.K. Kumarasaml, “Siddhanta - Dipika’ Vol.XIII (1912).
[9]. R. Gopinatha Rao’s “Hindu Iconography, Vol II, Part I, p. 269. ‘அரங்கிடை நூலறிவாளர்
அறியப்படாதோர் கூத்து’ என்னும் அப்பர் கூற்றுச் சிந்திக்கற்பாலது.
[10]. Dr. C. Minakshi’s “Adminitration and Social Life under the Pallavas’ pp.281-286.
-------------
22. ஒவியமும் சிற்பமும்
சித்தன்னவாசல்
பல்லவர் கால ஓவியங்களை இன்று நன்கு காட்டத்தக்க இடம் சித்தன்னவாசல் ஒன்றேயாகும்.
இடமும் காணத்தக்கனவும்
சித்தன்ன வாசல் புதுக்கோட்டையைச் சேர்ந்தது; திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 20 கல் தொலைவில்
உள்ளது; நாரத்தாமலைப் புகைவண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள
மலை மிகச் சிறியது. அதன் மீது ஏறிச் செல்லின், அழகின் இருப்பிடமாகவும் ஓவியக் கலையின்
உறைவிடமாகவும் உள்ள குகைக் கோவிலைக் கண்டு களிக்கலாம். இதன் முன்புறம் சுவர் மறைப்புண்டு.
அங்குக் காவலன் ஒருவன் காட்சி அளிக்கின்றான். முகமண்டபமான ஒரு சிறிய தாழ்வாரத்தையும் அதன்பின்
சதுரவடிவில் அமைந்துள்ள உள்ளறையையும் கொண்டதே இக் கோவில். இங்குக் காணத்தக்கவை நான்கு
ஆகும். அவை: (1) உருவச்சிலைகள். (2) நடனமாதர் ஒவியங்கள், (3) அரசன் அரசி ஓவியங்கள், (4) கூரையிலும்
தூண்களிலும் உள்ள ஓவியங்கள் என்பன.
உருவச் சிலைகள்
முன் மண்டபத்தின் முன்புறம் நான்கு தூண்கள் இருக்கின்றன. இவற்றுள் இடையில் உள்ள இரண்டும்
தனித்து நிற்கின்றன. ஓரங்களில் உள்ளவை பாறையுடன் ஒட்டினாற்போலப் பாதி அளவே தெரிகின்றன.
முன் மண்டபத்தின் இரு புறங்களிலும் உள்ள சுவரில் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு மாடங்கள் இருக்கின்றன.
அவ்வொவ்வொரு மாடத்திலும் சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அது யோகத்தில் அமர்ந்து இருப்பது
போலக் காணப்படுகிறது. உள் அறையின் நடுவில் தீர்த்தங்கரர் மூவர் சிலைகள் வரிசையாக இருக்கின்றன.
ஒவ்வொன்றும் மடியில் ஒரு கைம்மீது மற்றொரு கையை வைத்துக்கொண்டுகால்களை மடக்கி
உட்கார்ந்துள்ள நிலை அழகியது. முன்மண்டபத்தில் உள்ள இரண்டு உருவங்களில் ஒன்று சமண
தீர்த்தங்கரரான சுபார் சவநாதர் உருவம் மற்றது. சமண சமயத் தலைவர் ஒருவருடையது. இது மகேந்திரன்
காலத்தில் இக் குகைக் கோவிலில் இருந்த சமணத் துறவிகள் தலைவரைக் குறிப்பதாகக் கூறலாம்.
தீர்த்தங்கரர் மறுபடியும் பிறவாதவர் என்பது சமணர் கொள்கை. ஆதலின் அதனைக்குறிக்க அவர் சிலைகள்
மீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன. சுபார்சவநாதர் தலைமீது மூன்று குடைகள் குறிக்கப்பட்டுள்ளன.
சமயத்தலைவர் மறு பிறப்பு உடையவர் என்பதைக் குறிக்க ஒரு குடையே காட்டப்பட்டுள்ளது.
சுபார்சவநாதர் முடிமீது நாகம் ஒன்று படம் விரித்து,நிழல் தருதல் போலச் செதுக்கு வேலை
காணப்படுகிறது. உள் அறையில் உள்ள மூன்றில் இரண்டு சிலைகள் முக்குடைகளை உடையன.
இச் சிலைகள், அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மகேந்திரன் காலத்துச் சிற்பத் தொழில் இவற்றைக்
கொண்டும். சிற்பமாக மாமல்லபுரத்தில் ஆதிவராகர் கோவிலில் உள்ள சிலைகளைக் கொண்டும்
நன்கறியலாம்.[1]
நடனமாதர் ஓவியங்கள்
இக்கோவில் தூண்கள்மீதும் மேற்கூரைமீதும் மகேந்திரன் அழகொழுகும் ஓவியங்களைத் தீட்டச்
செய்தான். அவற்றுள் அழிந்தன போக இன்று இருப்பவை நேர்த்தியாக இருக்கின்றன. முன்மண்டபத்
தூண்கள் இரண்டிலும் மாதர் இருவர் நடனமாடும். நிலையில் தீட்டப்பட்டுள்ளனர். அவர்தம் உருவங்கள்
அழகாக அமைந்துள்ளன. கோவிலுக்கு வருபவரை இன்முகம் காட்டி அழைப்பன போல்
அவ்வுருவங்கள் வெளி மண்டபத்துண்களில் இருத்தல் சால் அழகியது. வலத்தூண்மீதுள்ள ஓவியம்
மற்றதைவிட நன்னிலையில் இருக்கின்றது.
வலத்தூணில் காணப்படும் நடிகையின் தலை வேலைப்பாடு கொண்டது. கூந்தல் நடுவில் பிரிக்கப்பட்டுத்
தலைமீது முடியப்பட்டுள்ளது. அம்முடிப்புச் சில அணிகளாலும் பல நிற மலர்க் கொத்துக்களாலும்
தாமரை இதழ்களாலும் கொழுந்து இலைகளாலும் அணி செய்யப்பட்டுள்ள நேர்த்தி காணத்தக்கதாகும்.
காதணிகள் கல் இழைக்கப் பெற்ற வளையங்களாகக் காட்சி அளிக்கின்றன; கழுத்தணிகள் சிறந்த
வேலைப்பாடு கொண்டவை. பல திறப்பட்டவை. கையில் கடகங்களும் வளையல் முதலியனவும்
காணப்படுகின்றன. வலக்கையின் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரங்கள் இருக்கின்றன.
மேலாடைகள் இரண்டில் ஒன்று மேலாக இடையில் கட்டப்பட்டுள்ளது; மற்றொன்று மிக்க வனப்புடைத்
தோற்றத்துடன் தோள் சுற்றிப் பின்னே விடப்பட்டுள்ளது. அவ்வாடையின் சுருக்கம் முதலிய அமைப்புகள்
மிகவும் தெளிவாகவும் ஒழுங்காகவும் ஒவியத்தில் காட்டப்பட்டிருத்தல், அக்கால ஓவியக் கலை
அறிவின் நுட்பத்தை நன்கு விளக்குவதாகும்.
இடத்துண்மீதுள்ள நடிகையின் உருவம் முன்னதைவிட அழகாகவும் மென்மைத்தோற்றம்
உடையதாகவும் உள்ளது. இம் மாதரசியின் மயிர்முடி முன்னதைவிடச் சிறிதளவு வேறுபாடு கொண்டது.
எனினும், அணிவகைகளில் வேறுபாடு இல்லை. இந் நடன மாதர்க்கு மூக்கணி இல்லை. இங்ஙனமே
சிற்பங்களில் காணப்படும் பல்லவ அரசியர்க்கும் மூக்கணி இல்லை. காரணம் புலப்படவில்லை.[2]
இவ்வுருவம் சிதைந்துள்ளதால் மேலாடை முதலியன தெளிவுறத் தெரியவில்லை.
இம்மங்கையர் அடிகள்மார் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் அப்சரப் பெண்மணிகள் என்று
வேறு சிலர் கருதுகின்றனர். இவர் யாவரே ஆயினும் ஆகுக. இவர் தம் ஓவியங்கள். (1) பல்லவர்
காலத்துப் பெண்மணிகள் அணிந்தநகைவகைகளும், சிறப்பாக உயர நிலையில் இருந்த நடனமாதர்
அணிந்துவந்த அணிகலன்களும், (2) அக்கால நடிகையர் கூந்தல் ஒப்பனையும், (3) மேலாடைச் சிறப்பும்,
(4) அக்காலத்து நடனக் கலை நுட்பங்களும் நாம் அறியும் வகையில் துணை செய்கின்றன என்பதில்
ஐயமே இல்லை.
அரசன் - அரசி ஒவியங்கள்
வலப்புறத் தூணின் உட்புறத்தில் ஒர் அரசன் தலையும் அவன் மனைவி தலையும் தீட்டப்பட்டுள்ளன.
அரசன் கழுத்தில் மணிமாலைகள் காணப்படுகின்றன. காதுகளில் குண்டலங்கள் இலங்குகின்றன.
தலையில் மணி மகுடம் காணப்படுகிறது. பெருந்தன்மையும் பெருந்தோற்றமும் கொண்ட அந்த முகம்
ஆதிவராகர் கோவிலில் உள்ள மகேந்திரவர்மன் முகத்தையே பெரிதும் ஒத்துள்ளது. ஆதலின்,
அவ்வுருவம் மகேந்திரவர்மனதே என்று அறிஞர் முடிவுகொண்டனர். அண்மையில் உள்ளது.
அரசியின் முகம் ஆகும். அந்த அரசியின் கூந்தலும் தலைமீதுதான் அழகுடன் முடியப்பட்டுள்ளது.
இத்தகைய முடிப்பு இயல்பாகவே அக்கால அழகிகள் கொண்டமுடிப்போ இன்ப நிலையில் போட்டுக்
கொண்ட முடிப்போ விளங்கவில்லை.
கூரையில் உள்ள ஒவியம்
முன் மண்டபக் கூரை முழுவதும் அணி செய்து கொண்டு இருக்கும் ஓவிய அழகே சித்தன்னவாசல்
சிறப்பைப் பெரிதும் காட்டுவதாகும். அவ்வோவியம் தாமரை இலைகளும் தாமரை மலர்களும் கொண்ட
தாமரைக் குளமாகும். இவற்றுக்கு இடையில் மீன்கள், அன்னங்கள், யானைகள், எருமைகள் இவற்றின்
படங்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் கையில் தாமரை மலர்களைத் தாங்கியுள்ள சமணர் இருவரும்,
இடக்கையில் பூக்கூடை கொண்டு வலக் கையால் மலர் பறிக்கும் சமணர் ஒருவரும் சித்தரிக்கப்
பட்டுள்ளனர்.
இஃது எதனைக் குறிக்கிறது?
இவ் வேலைப்பாடு சமணர் சமயக்குறிப்பை உடையதாகும். இது சமணர் துறக்கத்தை உணர்த்துகிறது
என்று சிலரும், ‘சூத்ரக்ருதாங்க்ம்’ என்னும் சமண நூலின் இரண்டாம் பிரிவிற்குமுன் உள்ள தாமரை
பற்றிய உரையாடலைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சிலரும் - இங்ஙனம் பலர் பலவாறு கூறியுள்ளனர்.
இந்த ஓவியத்தில் உள்ள குளத்து நீர் அழகிய கோலத்துடன் விளங்குகின்றது. மலர் ஒவியங்கள் இயற்கை
மலர்களையே பெரிதும் ஒத்துள்ளன. ஏனையவை உயிர் ஓவியங்கள் என்னலாம்.
உள்ளறை மேற்கூரை
உள்ளறையின் மேற்கூரையிலும் இங்ஙனமே நிறம் தீட்டப் பட்டுள்ளது. அது ஸ்வஸ்திகா, சூலம்,
சதுரம், தாமரைமலர் முதலியவற்றைக் கொண்டு போடப்பட்டகோலம் ஆகும். சுவஸ்திகா சமணர்
கையாண்ட குறியாகும். ஏழாம் தீர்த்தங்கரரான சுபார்சவநாதர் தமது அடையாளமாக சுவஸ்திகாவைக்
கொண்டிருந்தார். தீர்த்தங்கரது ஊர்வலத்திற் செல்லத்தக்கஎட்டுக்குறிகளில் ‘சுவஸ்திகா’ ஒன்றாகும்.
திரிசூலம் சிவனுக்குரியது. ஆயின், புத்தர்க்கும் உரியதே ஆகும். சமணர் குறிகளில் திரிசூலமும்
காணப்படுகிறது.
இவற்றை எழுதிய முறை
கற்பாறைகள் மீது இந்த அழகிய ஓவியங்கள் எங்ஙனம் வரையப்பட்டன?[3] “சுவர்ப்புறம் மேடு பள்ளம்
இல்லாமல் சமமாக இருப்பதற்காகச் சுவர்மீது ஒரு நெல் அளவுக்குச் சுண்ணாம்புச்சாந்து பூசப்படும்.
பாறை, தன்மீது தீட்டப் பெறும் நிறத்தை ஏற்றும்கொள்ளும் இயல்பு அற்றது. ஆதலின், சுண்ணச்
சாந்து அதற்குப் பயன்பட்டது. சலித்து எடுக்கப்பட்ட பூமணல், வைக்கோல், கடுக்காய் முதலியவற்றுடன்
கலந்து வெல்ல நீருடன் அல்லது பனஞ்சாற்றுடன் அரைத்தசாந்து சுவரில் அல்லது கூரையில் உறுதியாகப்
பற்றிக்கொள்ளும், அதை எளிதில் பெயர்க்க முடியாது. ஈரம் காயுமுன்பே ஓவியக்காரன் மஞ்சட்
கிழங்கைக் கொண்டு இரேகைகளை வரைந்து கொள்வான். சுண்ணாம்புடன் கலந்த மஞ்சள் நிறம்
மாறிச் சிவப்பாகத் தோன்றுவதுடன் பிறகு அழியாமல் இருக்கும் தன்மையும் வாய்ந்தது. ஒவியக்காரன்
புனையா ஓவியம் என்னும் இந்த இரேகைகளை முதலில் வரைந்துகொண்டே பிறகு நிறங்களைத்
தீட்டுவான்; சிவப்பு, மஞ்சள், வெள்ளை. நீலம், பச்சை கறுப்பு ஆகிய நிறங்களைத் தரும் பச்சிலை
நிறங்களையே பயன்படுத்துவான்....; ஈரம் காய்ந்த பிறகு சுவர் நன்றாய் உலர்வதற்கு முன்னரே
கூழாங் கற்களைக்கொண்டு சுவர்களை வழவழப்பாக்கி மெருகிடுவான். இங்ஙனம் தீட்டப்பட்ட ஓவியம்
அழியாது நெடுங்காலம் இருக்கத்தக்கதாகும்.”[4]
பல்லவர் சிற்பம்
பல்லவர் பெருவேந்தர் குடைவித்த கற்கோவில்களிலும் எடுப்பித்த பெருங்கோவில்களிலும் உள்ள
சிற்பங்களைப்பற்றி விளக்கம் இந்நூலுள் ஆங்காங்குத் தரப்பட்டுள்ளது. மாமல்லபுரம் ஒன்றே சிறந்த
பல்லவர் சிற்பக்கூடம் என்னலாம்; அங்குள்ள அருச்சுனன் தவநிலை காட்டும் சிற்பமும், எருமைத்தலை
அசுரனும்
காளியும் போரிடலைக் குறிக்கும் சிற்பமும் போதியவையாகும். மேலும் காணவேண்டுமாயின்,
கயிலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில்களிற் கண்ணாரக் கண்டு களிக்கலாம். சென்ற
பகுதியில் கூறப்பட்ட சிவனார் நடன வகைகளை உணர்த்தும் சிற்பங்கள் மிகச் சிறந்தனவாகும்.
"வடமொழித் தொடராகிய ‘சித்தானம் வாசஹ்’ என்பது ‘துறவிகள் இருப்பிடம்’ என்னும் பொருளது.
இது பாகதமாய்ச் ‘சித்தன்னவாசல்’ என்று ஆயிற்று” என்று அறிஞர் T.N. இராமசந்திரன் கூறுவர்.
------------
References
[1]. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas,’ p.291. இங்ஙனமே அமராவதி
சிற்பங்களில் காணப்படும் பெண்மணிகட்கும் மூக்கணி இல்லை. இது பண்டைநாகரிகம் போலும்!-
[2]. Dr.K.Gopalachari’s “Early History of the Andhra Country”, p.99.
[3]. Dr.C.Minakshi’s “Administraion and Social Life under the Pallavas” pp.292, 293-295
[4]. P.N. Subramanian’s “Pallava Mahendravarman pp.107-109.
------------
23. பல்லவர் காலத்துக் கோவில்கள்
கோவிலும் கல்வெட்டும்
“செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவை இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திரசித்தன்
(மகேந்திரவர்மன்) அமைத்த கோவில் இது” என்னும் கல்வெட்டு மண்டபப்பட்டில் காணப்படுகிறது.
இதன் காலம் கி.பி. 615-630 ஆகும்.
இந்த மண்டபப்பட்டுக் கல்வெட்டால் அறியத்தக்க செய்திகளாவன:-
(1) மகேந்திரன் காலத்திற்கு முன்னர்க் கற்கோவில்கள் இல்லை. இருந்த கோவில்கள் செங்கல்.
சுண்ணாம்பு, மரம், உலோகம் இவற்றால் ஆனவை.
(2) மகேந்திரனுக்கு முன்னரே தமிழ் மக்கள் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர். ஆனால், அக் கோவில்கள்
நாளடைவில் அழிந்துவிடத்தக்கவை.[1]
(3) அழியத்தக்க பொருள்களால் அமைந்த கோவில்களையே மகேந்திரன் கற்களில் செதுக்கி
அமைத்தான்.[2]
தரையும் சுவர்களும் செங்கற்களால் ஆனவை; மேற்கூரை மரத்தால் ஆகியது. அங்கங்கு இணைப்புக்காக
ஆணிகள் முதலியன பயன்பட்டிருக்கும். இங்ஙனம் அமைந்த கோவில்களாகவே அவை இருத்தல்
வேண்டும். இத்தகையகோவில்களை இன்றும் மலையாள நாட்டில் காணலாம். இங்ஙனம் கோவில்களை
அமைப்பதில் தமிழர் பண்பட்டிராவிடில், திடீரெனக் கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்து பல கோவில்கள்
தமிழ்நாட்டில் தோன்றிவிட்டன எனல் பொருளற்றதாய் விடும்.”[3]
“விமானங்கள், ‘தூயது, கலப்பு, பெருங்கலப்பு’ என மூவகைப்படும். கல், செங்கல், மரம் முதலியவற்றில்
ஒன்றைக் கொண்டே அமைக்கும் விமானம் ‘தூய விமானம்’ எனப்படும் இரண்டைக் கொண்டு
அமைப்பது ‘கலப்பு விமானம்’ எனப்படும். இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களால் அமைப்பது
பெருங்கலப்பு விமானம் எனப்படும்” என்பது கட்டடக் கலை நூல் கூற்றாகும். இதனாலும், பண்டைக்
காலத்தில் கோவில்கள் இருந்தமையும் விமானங்கள் இருந்தமையும் தெளிவாகுமன்றோ?”[4]
இனி மகேந்திரனுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் தக்கானத் திலும் கோவில்கள் இருந்தவற்றைக்
கல்வெட்டுகள் கூறல் காண்க.
(1) முற்காலப் பல்லவருள் ஒருவனான விசயகந்தவர்மன் காலத்தில் (கி.பி. 275-300) புத்தவர்மன்
மனைவியான சாருதேவி நாராயணன் கோவிலுக்கு நில தானம் செய்ததாகக் குணபதேயப் பட்டயம்
கூறுகின்றது.
(2) திருக்கழுக்குன்றத்துக் கோவிலில் உள்ள கடவுளுக்குக் கந்தசிஷ்யன் (கி.பி. 300-356) என்னும்
பல்லவன் நிலம் விட்டதாகவும், அதனை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்தியதாகவும் ஆதித்தசோழன்
கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
(3) கோச்செங்கணான் திருவக்கரையில் உள்ள கோவிலில் பெருமாளுக்கொரு கோவில் கட்டியிருந்தான்;
அதிராசேந்திரன் அதனைக் கல்லால் புதுப்பித்தான்; செம்பியன் மாதேவியார் திருவக்கரைக் கோவிலைக்
கல்லாற் புதுப்பித்தார்.[5] அவரே திருக்கோடிகாவில் இருந்த செங்கல் விமானத்தையும் கருங்கல்
விமானமாக அமைத்தார்.[6]
(4) சாலங்காயன அரசர்வேங்கி நகரத்தில் இருந்த சித்திரதசாமி கோவிலுக்குப் பல தானங்கள்
செய்துள்ளனர் என்று அவர்தம் பட்டயங்கள் (கி.பி. 250-450) பகர்கின்றன.
(5) ஸ்தானகுண்டுரம் என்னும் ஊரில் சாதவாகனர் காலத்தில் சிவன் கோவில் ஒன்று இருந்ததாகக்
கதம்பரது தாளகுண்டாக் கல்வெட்டுக் கூறுகிறது.[7]
(6) முண்டராட்டிரத்துக் கந்துகூரத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்கு இளவரசன் விஷ்ணு
கோபபல்லவன் நிலம் விட்டதாக உருவப்பள்ளிப்பட்டயம் (கி.பி. 450) கூறுகின்றது.
சங்ககாலத்துக் கோவில்கள்
பண்டைத் தமிழகத்தில் தொல்காப்பியர் காலத்திலேயே வீரர் வணக்கத்துக்குரிய கோவில்கள்
(நடுகல் கொண்ட கோவில்கள்) இருந்திருத்தல் வேண்டும் என்பதும், முருகன் திருமால்-காடுகிழான்
(துர்க்கை) முதலிய தெய்வங்க்ட்குக் கோவில்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரலாம்.
தொகை நூல்களிற் சிவபெருமான், முருகன், திருமால். பலராமன் இவர்கள் சிறப்புடைக் கடவுளராகக்
கூறலை நோக்க, இவர்கட்குக் கோவில்கள் இருந்தமை அறியலாம். ஆலமர் செல்வனுக்கு (சிவபிரான்)
நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய்வேன் தந்தனன் என்று புறப்பாட்டுக் கூறுகின்றது. இதனால்
அக்காலத்தில் கோவிலும் லிங்கமும் இருந்தன என்பது பெறப்படுகிறதன்றோ?
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தும் மணிமேகலையிலும் காணப்படும்
கோவில்கள் பல ஆகும்; மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில்,
“காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுயண் ஓங்கியம நெடுநிலைக் கோட்டமும்”
எனவரும் அடிகள் வீரர், அருந்தவர், அரசர், பத்தினிமார் இவர்க்குக் கோவில்கள் இருந்தமையை
வலியுறுத்துகின்றன அல்லவா? சுடுமண் (செங்கல்) கோவில்கள் குன்றுகள் போல் உயர்ந்திருந்தன
என்பது அறியத்தக்கது.
“பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் கணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்.....”
எனவரும் சிலப்பதிகார அடிகளால், புறநானூறு கூறும் சிவன், முருகன், பலராமன் திருமால் இத் தெய்வங்கட்குக் கோவில்கள் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்தமை தெளிவு. இவற்றுடன் அரசன் இருப்பிடமும் கோயில் என்றே வழங்கப் பெற்றதும் அறியக்கிடக்கிறது.
இக் கோயில்களும் அரசர் மாளிகைகளும் மண்டபங்களும் சிற்ப வல்லுநரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து நேரறிகயிறிட்டுத் திசைகளையும் அத் திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி வகுக்கப்பட்டன என்பது,
“ஒருதிறம் சாரா வரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மலைவகுத்து”
எனவரும் நெடுநல்வாடை (வரி 75-78) அடிகளாலும்
“அறக்களத் தந்தனர்.ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர்தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டமும்
எனவரும் சிலப்பதிகார அடிகளாலும் (நடுகற் காதை, வரி 222-225),
“பைஞ்சேறு மெழுகாப்பசும்பொன் மண்டபம்”
எனவரும் மணிமேகலை (சிறைக்கோட்டம்...... காதை, 105) வரியாலும் நன்குனரக் கிடத்தல் காண்க.
இறுதுயிற் கூறிய மண்டபம் பல நாட்டு விற்பன்னருடன் தண்டமிழ் வினைஞர் சேர்ந்து அமைத்த
அற்புதமண்டபம் என்று மணிமேகலை கூறுகின்றது. அம் மண்டபத் தூண்கள்மீது பன்மணிப்
போதிகைகள் இருந்தன: அவற்றின்மேற் பொன்விதானங்கள் இருந்தன. தரை சாந்தால் மெழுகப்பட்டு
இருந்தது.
அரசர் கோவில்களும் தெய்வங்களின் கோவில்களும் சுற்று மதிலையுடையன, உயர்ந்த வாயில்களை
உடையன; அவ்வாயில்கள்மீது உயர்ந்த மண்ணிடுகள் (கோபுரங்கள்) இருந்தன: அம் மண்ணிடுகளில்
வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பது, மணிமேகலை[8] மதுரைக் காஞ்சி[9]
முதலிய நூல்களால் நன்குணரலாம்.
இக் கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் அமைந்தவை. மேலே உலேகத் தகடுகளும் சாந்தும்
வேயப்பட்டிருந்தன. இங்ஙனமே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன.
“விண்பொர நிவந்த வேயா மாடம்”
“சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு”[10]
“நிறைநிலை மாடத்து அரமியந் தோறும்”[11]
இங்ஙனம் அமைத்த பெரிய கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களை உடைய
வாயில்களும், அவ் வாயில்கட்குத் துருப்பிடியாதபடி செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும்
பொருத்தப்பட்டிருந்தன என்பது நெடுநல் வாடை[12] அடிகள் அறிவிக்கும் செய்தியாகும். சிதம்பரத்தில்
பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் நடன கோலத்தைக் காட்டியருளினன் என்பது புராணச் செய்தி.
பதஞ்சலி முனிவர் காலம் கி.மு. 150 என அறிஞர் அறைவர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர்
பெற்ற சிதம்பரத்தில் உள்ள கோவில் கி.மு. 150க்கு முற்பட்டதாதல் அறியத்தக்கது.
முதற் பராந்தக சோழன் (கி.பி. 907-953) சிற்றம் பலத்துப் பொன் விமானத்தைப் புதுப்பித்தான் என்று
கல்வெட்டுக் கூறுகிறது. அதனால் அவனுக்கு முன்பே சிற்றம்பலம் பொன் வேயப்பெற்றதாதல் வேண்டும்
என்பது பெறப்படுகிறதன்றோ? “சிம்மவர்மன் என்னும் அரசன் தன்னைப் பீடித்த உடல் நோயைப்
போக்கிக் கொள்ளச் சிதம்பரம் அடைந்தான். வாவியில் மூழ்கினான்: பொன் நிறம் பெற்றான்; அதனால்
இரண்யவர்மன் எனப்பட்டான் என்று கோவிற்புராணம் கூறுகிறது. அவனே சிற்றம்பலத்தைப் பொன்
வேய்ந்தவன் ஆவான். சிம்மவர்மன் என்ற பெயர் கொண்ட பல்லவ அரசர் பலர் இருந்தனர். அவருள்
கி.பி. 436 முதல் 458 வரை அரசாண்ட சிம்மவர்மனே மேற்சொன்ன திருப்பணியைச் செய்திருத்தல்
வேண்டும் என்பது முன்பே விளக்கப்பட்டது. அப்பர் காலத்தில் சிதம்பரத்தில் பொன் அம்பலம்
இருந்தமைக்கு அவர் பாக்களே சான்றாகும். சிதம்பரம் நடராசர் மண்டபம்[13] மரத்தால் கட்டப்பட்டிருத்தலே
அதன் பழைமைக்குச்சான்றாகும்.
இதுகாறும் கூறிவந்த செய்திகளால், தமிழகத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே - பல்லவருக்கு
முன்னரே கோவில்கள் இருந்தன: கோவில் மதில்கள் இருந்தன; கோபுரங்கள் இருந்தன: கோபுரங்களில்
சுண்ணாம்பு, மண் இவற்றால் செய்யப்பட்டவேலைப்பாடுகள் இருந்தன என்பதை நன்கறியலாம்.
நமது கால எல்லைப்படி, கி.பி. 200 முதல் 250க்குள் தமிழகத்தை ஆண்ட கோச்செங்கட் சோழன் 70
கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் கூறியுள்ளார். அவர்க்கு முன்னரே அப்பர், சம்பந்தர்
தம் பதிகங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். கோச்செங்கணான் கட்டியவை மாடக்கோவில்கள்
எனப்படும். மாடக் கோவில் என்பது கட்டு மலையையும் யானைகள் செல்லக்கூடாதிருக்கும் திருமுன்பையும்
உடையது.[14]
தேவார காலத்துக் கோவில்கள்
தேவார காலத்துத் தமிழகத்தில் ஏறத்தாழ 200 கோவில்கள் இருந்தன. அவை அனைத்தும் மரம், செங்கல்,
மண், உலோகம் இவற்றால் இயன்றவையே என்பது சங்க நூற்பாக்களால் முன்னரே உணர்த்தப்பட்ட
செய்தி ஆகும். இச் செய்தியை அப்பர் காலத்து மகேந்திரவர்மன் தன் மண்டபப்பட்டுக் கல்வெட்டினால்
உறுதிப்படுத்தியுள்ளான் என்பதையும் மேற் காட்டினோம் அல்லவா? இங்ஙனம் அமைந்த பழைய
கோவில்கள் பலவகைப்படும். அவை, (1) பெருங்கோவில், (2) இளங்கோவில். (3) மணிக்கோவில், (4)
கரக்கோவில், (5) தூங்கானை மாடம் முதலாகப் பல வகைப்படும். இவற்றுள் பெருங்கோவில்கள் 78
அப்பர் காலத்தில் இருந்தன என்று அப்பரே கூறியுள்ளார். பெரிய கோவிலைப் பழுது பார்க்குங்கால்
மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்து வந்துள்ள (பெரிய கோவில் திருச்சுற்றில் உள்ள)
சிறிய கோவிலே இளங்கோவில் எனப்படும். பிறவும் ‘இளங்கோவில்’ எனப் பெயர் பெறும். இத்தகைய
இளங்கோவில்கள் சில தேவார காலத்தில் இருந்தன. எனவே, தேவார காலத்திற்கு முன்பே சில
கோவில்கள் புதுப்பிக்கப் பட்டன என்பது தெளிவாகிறதன்றோ? தெளிவாகவே, அவை கட்டப்பட்ட
காலம் மிகப் பண்டையதே என்பது வெளியாகிறதன்றோ? தேவார காலத்தில் விமானம் கொண்ட
கோவில்கள் இருந்தன என்பது பெண்ணாகடம்-துங்கானை மாடம் கோவில் அமைப்பைக்கொண்டு
நன்குணரலாம். விமானம் ‘தூங்கும் யானை வடிவில்’ அமைந்ததாகும். திரு இன்னம்பர். திருத்தணிகைக்
கோவில் விமானங்கள் இம்முறையில் அமைந்தவை. திரு அதிகைக் கோவில், திருக்கடம்பூர் இவற்றின்
உள்ளறைகள் தேர் போன்ற அமைப்புடையவை: உருளைகள் குதிரைகள் பூட்டப்பெற்றவை. திருச்
சாய்க்காட்டுக்கோவிலை ஒட்டித் தேர்போன்றவிமானம் ஒன்று உருளைகளுடன் இருக்கின்றது.[15]
பழைய கோவில்கள்
இந்த விமான அமைப்புடைய தேர் போன்ற கோவில்களே பழையவை. இன்று காணப்படும் கோவில்களை
பழையவை. இன்று காணப்படும் கோவில்களை அடுத்துள்ள தேர்கள் மிகப்பழைய காலத்தில்
மரக்கோவில்களாக இருந்தவை. மனிதன் மரக் கோவிலைப் போலச் செங்கற்கள் கொண்டு பிற்காலத்தில்
கோவில்கள் அமைத்தான் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். சான்றாக நகரில் உள்ள சில
கோவில்களைக் காணலாம்.அவை கி.மு. 250இல் ஆக்கப்பட்டவை. அவற்றைச் சுற்றிக் கற்சுவர்கள்
இருக்கின்றன. ஆயின், கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டவையே ஆகும்.[16]
முதல்-இடைக் காலக் கோவில்கள் (கி.பி. 250-600)
அப்பர் காலத்தில் புகாரில் இருந்த கோவில் பல்லவன் ஈச்சரம் எனப் பெயர் பெற்று இருந்தது. அக்
கோவில் ‘பல்லவன்’ கட்டிய கோவில் அல்லது ‘பல்லவன் பூசித்த கோவில்’ ஆக இருத்தல் வேண்டும்.
அஃது எங்ஙனமாயினும், அப்பல்லவன், அப்பர்காலத்து மகேந்திரவர்மனுக்கு முற்பட்டவனாதல்
வேண்டும். மயேந்திரப் பள்ளி என்பது ஒரு பாடல் பெற்ற இடமாகும். இது மகேந்திரன் காலத்தில்
இப்பெயர் பெற்றதா? அன்றிச் சமணர் பள்ளி அப்பருக்கு முன்னரே சிவன் கோவிலாக மாறிவிட்டதா?
என்பது விளங்கவில்லை. இங்ஙனமே திருப்புகலூர்க் கோவிலுக்குள் வர்த்தமானிச்சுரம் என்னும்
சிறிய கோவில் ஒன்று உண்டு. அதுவும் பாடல் பெற்றதாகும். வர்த்தமானர் என்பது சமண
தீர்த்தங்கரர் பெயர். இவை எல்லாம் மகேந்திரனுக்கு முன்னரே இருந்த கோவில்கள் ஆகும்.
எனவே, முற்கால-இடைக்காலப் பல்லவர் காலங்களில் சில புதிய கோவில்களேனும் தமிழ் நாட்டில்
ஏற்பட்டன என்பதை இவை உணர்த்துகின்றன.
பல்லவ மகேந்திரவர்மனுக்கு (கி.பி. 615க்கு) முற்பட்ட தமிழகத்தில் இருந்த நாயன்மாருள் சிறந்து
விளங்கிய புகழ்ச்சோழ நாயனார். கூற்றுவநாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர் பல
கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தனர் என்று சேக்கிழார் பெருமான் கூறியுள்ளனர்.
கி.பி.600க்கு முற்பட்டவரான திருமூலர், தம் காலத்தில் இருந்த செங்கற்கோவில்களையும் பூமணல்
ஒன்பது மணிகள் இவற்றாலாய லிங்கங்களையும் பற்றிப் பல பாடல்களிற் கூறியுள்ளார். இவை
யாவற்றிற்கும் ஏற்பக் கி.பி.7ஆம் நூற்றாண்டினரான அப்பர். சம்பந்தர் பாடிய தேவாரத் திருமுறைகளில்
ஏறத்தாழ 200க்கு மேற்பட்ட கோவில்கள் பாடல் பெற்றுள்ளன. இவற்றால் சங்ககாலத்தில் இருந்த
கோவில்கள் அல்லாமல் பிற்காலத்திலும் (முற்கால-இடைக் காலப் பல்லவர் காலங்களிலும்) பல
கோவில்கள் புதியனவாகக் கட்டப்பட்டிருந்தன என்றெண்ண இடமுண்டாகிறது.
பிற்காலத்துக் கோவில்கள் (கி.பி. 600-900)
பழைய சமணர்கோவில், மண்டபம்போன்ற அமைப்புடையது: நான்கே தூண்களை உடையது;
அகன்ற கதவுகளை உடையது. மண்டபத்தைச் சுற்றியும் தாழ்வாரத்தை உடையது. மேற்கூரை
கல்தளத்தை உடையது. சுவர்கள் மீதும் தூண்கள்மீதும் சமண சித்திரங்கள் தீட்டப்பெற்றிருக்கும்.[17]
இவ்வமைப்பை ஏறத்தாழ இன்றுள்ள காவிரிப்பூம்பட்டினத்துக் கோவில்களிற் காணலாம்:
மாமல்லபுரத்தில் உள்ள ‘மண்டபங்கள்’ எனப்படுபவை அனைத்தும் இவ்வமைப்பை உடையனவே.
பண்டைச் சமணர் மூன்று சிறு அறைகளைக் கொண்ட கோவில்களை (மண்டபங்களை)யும் அமைத்தனர்;
அவ்வறைகளில் நடுவில் தீர்த்தங்கரரையும் இருபாலும் இயக்கர் இயக்கியரையும் வைத்தனர்.
நடுஅறையும் அருகதேவரும் வடக்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கும்படி அமைத்தனர்.[18]
இம்முறையில் அமைந்தவையே மகேந்திரன் குடைவித்த கோவில்கள் ஆகும். “இங்ஙனம் சமணர்
அமைத்த மண்டபம் கோவில் முறை அதன் திராவிட அமைப்புடன் எல்லோரா வரை கி.பி. 7, 8ஆம்
நூற்றாண்டுகளிற் பரவிவிட்டது. இம்முறை சாளுக்கியராற் பின்பற்றப் பட்டது.[19] “சில பெரிய
சமணர் கோவில்கள் திருச்சுற்றில் பல சிறிய அறைகளைக் கொண்டவை; அவற்றில் சமனவுருவச்
சிலைகள் வைக்கப்பட்டன.[20] இம்முறைப்படி அமைந்ததே இராசசிம்மன் கட்டிய கயிலாசநாதர்
கோவில் ஆகும்.
மகேந்திரன் அமைத்த குகைக்கோவில்கள் ஏறத்தாழச் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் என்னும்
சபையையும் தில்லைக் கோவிந்தராசர் உள்ள இடத்தையும் அமைப்பில் ஒருவாறு ஒத்துள்ளன.
இவன்மகனான நரசிம்மவர்மன் அமைத்த ஒன்றைக்கல் கோவில்கள் மெய்யாகவே தமிழ் நாட்டில்
இருந்த தேர் வடிவில் அமைந்த கோவில்களைப் பார்த்துச் சமைத்தவையே ஆகும், சிற்றுார்
அம்மன் கோவிலுக்கும் மாமல்லபுரத்தில் உள்ள துர்க்கையின் கோவிலுக்கும் வேறுபாடில்லை.
பல்லவர்க்கு முன்பே தமிழகத்தில் இருந்த பெளத்தர் அமைத்த விகார வடிவில் ஒன்றிரண்டு
கோவில்கள் திகழ்கின்றன. இராசசிம்மன் கட்டிய கரையோரக் கோவில் தேர் போன்ற கோவில்
அமைப்புடையதே. அதன் வளர்ச்சியே அவன் கட்டிய கயிலாசநாதர் கோவில் விமானம். இதன்
வளர்ச்சியே தஞ்சாவூர்ப் பெரிய கோவில் விமானம் ஆகும்.
தமது காலத்தில் இருந்த பாடல்பெற்ற கோவில்களில் காணப்பட்ட ஓவியங்களையே பல்லவர்கள்
சிற்பங்களாக மாற்றினர் என்னல் மிகையாகாது. சிலப்பதிகார, மணிமேகலைகளின் காலம் கி.பி.
இரண்டாம் நூற்றாண்டாகும். அக்காலத்தில் இருந்த வியத்தகு சிற்பங்களும், ஓவியங்களும்
மகேந்திரன் காலத்தில் அழிந்துவிட வழியில்லை. ஏறக்குறைய 400 ஆண்டுகட்குள் அவை அழிந்தன
எனக் கூற இடமில்லை. அங்ஙனம் பல அழிந்திருப்பினும், சிலவேனும் அவன் உள்ளத்தைக்
கொள்ளை கொண்டிருத்தல் கூடியதே என்க.
பழங்கோவில் அமைப்பு
அறிஞர் லாங்ஹர்ஸ்ட் “மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கற் கோவில்கள் எல்லாம் அவன் காலத்தில்
இருந்த (செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப்பட்டு, மூங்கிற்கூரை அமைந்து வேலைப்பாடு
கொண்ட செப்புத் தகடுகள் அறைந்த) கோவில்களைப் போன்றவையே என்பதைப் பார்த்தவுடன்
கூறிவிடலாம் என்று வரைந்துள்ளதைக் காண்க.
இப்பொழுதுள்ள தேர், விழாக்காலத்தில் எங்ஙனம் உயரமாகச் சித்திரிக்கப்படுகிறது? அதன் உயரத்தை
நோக்குக. அதற்கும், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை ஓரமுள்ள கோவில் விமானத்திற்கும் வேறுபாடு
இன்மை அறிக. அக் கோவிலுக்கு உருளைகளைப் பூட்டிவிடின், அதற்கும் இன்றைய தேருக்கும்
வேறுபாடு உண்டா என்பதை அறிஞர் ஆராய்தல் வேண்டும். இங்ஙனம், ஆராயின், பண்டை
மரக்கோவில்களே தேர்கள் என்பதை அறியலாம். அவற்றைக் கொண்டே செங்கல், சுண்ணாம்புக்
கோவில்கள் தோன்றின என்பன அறியலாம்.[21]
நீலகிரி மலையில் உள்ள தொதவர் கோவில் பார்க்கத்தக்கது. வட்டமான கற்சுவர் கோவில் எல்லையை
வகுப்பதாகும். இத்துடன் திருநெல்வேலியில் உள்ள பேய்க் கோவில்கள் ஒருமைப் படுகின்றன.
இக் கோவில்களே பண்டைய திராவிடர் கட்டட அமைப்பைக் காட்டுவன. தொதவரிடமுள்ள இருவகைக்
கோவில்களில் கோபுரம்போல அமைந்துள்ள கோவில்களே பழைமை வாய்ந்தவை: தொலைவிலிருந்து
பார்ப்பவர் அதனைக் கிறித்துவர் கோவிற்கோபுரம் எனக்கருதுவர்.[22] இம்மாதிரியே வட இந்தியாவில்
உள்ள கோவில்கள் அமைந்துள்ளன. இதனால். இந்தியாவிற் புகுந்தவுடன் ஆரியர் இவ்வமைப்பைத்
திராவிடரிடமிருந்து கடன் பெற்றனர் எனக் கூறலாம். ஆனால், இந்த அமைப்பு தென் இந்தியாவில்
சதுரக் கோவில்கள் (Dolmens) அமைப்புடன் கலந்து வேறு புதிய அமைப்பைப் பெற்றுவிட்டது.
ஆதலின், இருவகைக் கோவில் அமைப்புகள் தெற்கே பரவலாயின.[23]
பாணினி காலத்தில் கோவில்கள் இருந்தன. சாணக்கியர் காலத்திற் கோவில்கள் விமானங்களுடன்
இருந்தன: அசோகன் காலத்தில் இருந்தன. இக்கோவில்கள் புத்தருக்குமுன்னரேநாட்டில் இருந்தன.
கோவில் கட்டுதல் திராவிடரது பழக்கம் ஆகலாம். அதனைப் பிற்காலத்தில் ஆரியர் கைக்கொண்டனர்.[24]
திராவிடக் கலை
தூபி, சைத்தியம் என்பன திராவிடருடையன. இவற்றை ஆரியர் கடன் பெற்றனர்; இவை பிற்கால
இந்து சமயக் கோவில்களில் காணப்பட்டன. இவற்றையே புத்தர் மேற்கொண்டனர்.[25] விமான
வகைகள் பல தென் இந்தியாவில் உண்டு. அவ் வகைகள் எல்லாம் கல்லறைகளிலிருந்து தோன்றின
என்னல் தவறாகாது.தென்கன்னட கோட்டத்தில் உள்ள ‘முதுபித்ரி’ என்னும் இடத்திற் காணப்படும்
குருமார் கல்லறைகளில் மூன்று முதல் ஏழு அடுக்குகள் கொண்டு ‘விமானம்’ காணலாம். சதுரத்தின்மேல்
சதுரம் வைத்துக் கட்டப்பட்ட ஏழு அடுக்குகள் கொண்ட சதுரக் கல்லறைகள் பல இந் நாட்டில் உண்டு.
இவ்வமைப்புகள் நாளடைவில் பெரிய விமானங்களாக மாறிவிட்டன என்பதில் ஐயமில்லை.[26]
முன்னோர் வணக்கத்திற்காக ஏற்பட்ட பல கோவில்கள் பிற்காலத்தில் கடவுள் கோவில்களாக மாறின.
அப் பழைய கோவில்களில் நீள் சதுர அறைதான் உண்டு. மேலிடம் தளமாக இருந்தது. அறைக்கு
முன்புறம் ஒரு கூடம் உண்டு. முன் சொன்ன தொதவர் கோவில் போன்ற கோவில்களும் உண்டு.
இவ்விரண்டும் பிற்காலத்தில் ஒன்று படுத்தப்பட்டன. சில இடங்களில் இரண்டும் தனித்துக்
காணப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியே இன்றுள்ள கோவில்கள்.[27] நமது தென்னிந்தியாவில்
இங்ஙனம் இருந்த பண்டைக் கோவில்களைப் பார்த்தே பெளத்தரும் சமணரும் தம் கோவில்களை
அமைத்துக்கொண்டனர்.[28] அவற்றைப் பார்த்தே பல்லவர் மாமல்லபுரம் முதலிய இடங்களில்
கோவில்களை அமைத்தார்கள்: பண்டைக் கோவில்களில் இருந்த மண் பதுமைகளைப் பார்த்தே
கற்கோவில்களில் பதுமைகளை அமைத்தார்கள்; விமானங்களையும் தூபிகளையும் பிறவற்றையும்
அமைத்தார்கள்.
முடிபு
சுருங்கக் கூறின், பல்லவர் கோவில் அமைப்பு தமிழ் நாட்டுக் குடிசைக் கோவிலிருந்து உண்டானதென்னல்
மிகையாகாது.[29]
தென்னாட்டுக் கட்டடக் கலை (Architecture) தமிழகத்துக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள்,
விமானங்கள், இவற்றில் காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தும் இந்நாட்டுப் பழைய
வேலைப்பாடுகளிலிருந்து வளர்ச்சியுற்றவையே ஆகும். இந்த வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக
உண்டானவை. மனிதக் குரங்கின் மண்டை ஓட்டிலிருந்து இன்றைய மனிதனது மண்டை ஓடு
வளர்ச்சியுற்றாற் போலவே தமிழகக் கட்டடக் கலையும் இயல்பாகவும் அமைதியாகவும் செம்மையாகவும்
வளர்ச்சி பெற்று வந்ததாகும். இதன் உண்மையை மாமல்லபுரத்துத் தேர்களைக் கொண்டும்.
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவபிரான் கோவில் வேலைப் பாட்டைக் கொண்டும் நன்கறியலாம்.[30]
--
References
[1]. இத்தகைய கோவில் திருவெண்காட்டுப் பெருங்கோவிலில் இன்றும் இருக்கிறது, அதன் வேலைப்பாடு
பார்த்து வியக்கத்தக்கது.
[2]. Loughurst “The Pallava Arehitecture” Part I, pp.22-23.
[3]. R. Gopinatha Rao’s “E.Ind, Vol. X V, p. 15.
[4]. Ram Raz’s “Essay on Indian Architecture’. pp.48-49.
[5]. K.A.N. Sastrys “Cholas’, Vol.II Part I, p 486 & Vol, I, p 385.
[6]. M.E.R. 36 of 1931.
[7]. Dr.N.Venkataramanayya’s “Origin of S.I.Temple’. p. 53.
[8]. சக்கரவாளக் கோட்டம், வரி:42-48, 58:59, மலர் வனம் புக்ககாதை, 127 - 131.
[9]. மதுரைக்காஞ்சி, வரி:352-355.
[10]. பெரும்பாண் ஆற்றுப்படை. வரி 348இ 405.
[11]. மதுரைக்காஞ்சி. வரி. 451
[12]. வரி 79 - 88.
[13]. Navaratnam’s “S.I.Sculpture’ pp.56,57.
[14]. “Sivasthala Manjari,’ p.51.
[15]. “Sivasthala Manjari, pp.50, 91, 135.
[16]. O.C.Gangooly’s “Indian Architecture’, p.13.
[17]. Annual Report of the A.D.S. Circle, 1913-14, p.14.
[18]. Ananda Alwar’s “Indian Architecture,” p.209.
[19]. Fergusson’s “History of Indian and Eastern Architecture’ Vol.II, pp.21-22.
[20]. Ibid.
[21]. A.K.Kumarasamy’s ‘Arts and Crafts’, pp.118-119
[22]. G.Oppert’s “The Original Inhabitants of the India,’ p.573.
[23]. N. Venkataramanayya’s “Origin of S.I. Temple’, p.67.
[24]. Ibid p.44
[25]. Ibid p.39-55.
[26]. Ibid pp.72-75.
[27]. Ibid pp.78-79.
[28]. Annual report of A.D. Southern Circle, 1914, p.34.
[29]. இத்தகைய கோவில்களை இன்றும் காவிரிப்பூம்பட்டினத்திற் காணலாம்.
[30]. Prof. Dubreiul’s “Dravidian Architecture’, pp.1-10, 22.
-----------
24. இலக்கியம்
முன்னுரை
பல்லவர்காலம் ஏறத்தாழக்கி.பி. 250 முதல் 900 முடிய என்னலாம். இந்தக் காலத்திற்குப் பிறகு
சோழப்பேரரசு வளர்ச்சியுற்றது. அக்காலத்தில். சங்ககாலத் தமிழில் இல்லாத அளவு வடமொழிக்
கலப்புத் தமிழில் உண்டாகிவிட்டது. இதனை அக்கால யாப்பருங்கலவிருத்தி. காரிகை,
வீரசோழியம் முதலிய இலக்கண நூல்கள் கொண்டும், பெரிய புராணம், கம்ப ராமாயணம்,
கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் முதலியன கொண்டும் நன்குணரலாம்.
எனவே, சங்கநூல்கட்கும் இச்சோழர்கால நூல்கட்கும் உண்டான மொழி நடைவேறுபாடு,
இரண்டிற்கும் இடைப்பட்ட பல்லவர் காலத்திற்றான் உண்டாகி வளர்ந்திருத்தல் வேண்டும்.
இஃதே உண்மை என்பதை யாப்பருங்கல விருத்தியுரை நன்குவிளக்கிநிற்றல் காணலாம்.
கானவே, பல்லவர்கால இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றிற் சிறப்பிடம் பெறத்தக்கதாகும்;
ஆதலின் இங்கு ஓரளவு நன்கு விளக்கம் பெறும்.
வடமொழிப் பட்டயங்கள்
பல்லவர் வடவர் ஆதலின், அவர் பட்டயங்கள் எல்லாம் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
பிற்காலப் பல்லவர் பட்டயங்கள் எல்லாம் சிறந்த வடமொழி நடை உடையன. முதலாம்
பரமேச்சுரவர்மன் வெளியிட்ட கூரம்பட்டயம் கூறும் பெருவளநல்லூர்ப் போர் வருணனை
படித்து இன்புறத்தக்க பகுதியாகும். அதனை வரைந்தவர் சிறந்த வடமொழிப் புலவராகவும்
போர் வருணனைகள் கொண்ட நூல்கள் நன்கு கற்றவராகவும் இருத்தல் வேண்டும். இரண்டாம்
நந்திவர்மன் வெளியிட்ட காசக்குடிப்பட்டயம் பல்லவர் வரலாற்றைச் சிறந்த முறையில்
விளக்குவதாகும். அதன் நடையும் உயர்ந்த நடை. இவ்வரசனுடைய தண்டன் தோட்டப்பட்டயம்.
மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர் பாளையப் பட்டயம் முதலியவற்றில் வடமொழி
நடை அழகாக இருக்கின்றது. இராசசிம்மன் காலத்துக் கயிலாசநாதர் கோயில் வடமொழிக்
கல்வெட்டுகள் சுருக்கமும் தெளிவும் உடையன. முதலாம் பரமேச்சுரனுடைய மகாபலிபுரத்துக்
கல்வெட்டுகள் சிலேடைப் பொருள் கொண்ட சொற்றொடர்கள் கொண்டவை.
வடமொழி நூல்கள்
லோகவிபாகம், கிராதார்ச்சுனியம். அவந்திசுந்தரி கதை. மத்தவிலாசப் பிரகசனம், காவ்யாதர்சம்
போன்ற வடமொழி நூல்கள் பல்லவர் கால வடமொழி வளர்ச்சிக்குரிய சான்றுகளாம்.
இவை அனைத்தையும் நோக்க. பல்லவர் அவைக்களத்தில் சிறந்த வடமொழிப் புலவர்கள்
இருந்தார்கள் என்பது தெரிகிறதன்றோ?
அச்சுத விக்கிரந்தன் (கி.பி. 350)
புத்ததத்தர் (கி.பி.350) காலத்தவனான இவனைப்பற்றிய தமிழ்ப் பாடல்கள் சில காணக்
கிடக்கின்றன. அவற்றால் இவன் தமிழை ஒரளவு வளர்த்த களப்பிர அரசன் என்பது புலனாகிறது.[1]
இவனைப்பற்றிய பாடல்கள் தமிழ் நாவலர் சரிதை, தொண்டை மண்டல சதகம் முதலியவற்றிற்
காணலாம்.[2] சான்றாக ஒன்றை இங்குக் காண்க.
அச்சுதன் மதுரை கொண்டது
“முரசதிர் வியன்மதுரை முழுவதுஉம் தலைபனிப்பப்
புரைதொடித் திரள்தோள் போர்மலைந்த மறமல்லர்
அடியோடு முடியுறுப்புன்டயர்ந்தவன் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ”[3]
முத்தரையரும் தமிழும் (கி.பி. 700-800)
தஞ்சையை ஆண்ட முத்தரையர்க்குத் தமிழ்ப்பற்று மிக்கிருந்தது. அவருள் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில்
இருந்தவன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன் இவன் புலவர் பலரை
ஆதரித்தவன்; இவனைப் புகழ்ந்து (1) பாச்சில் வேள் நம்பன், (2) ஆசாரியர் அநிருத்தர்,
(3) கோட்டாற்று இளம்பெருமானார், (4) குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள்
பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன.
அவற்றால் இம்மன்னன் அழுந்தியூர், மனலூர், கொடும்பாளுர், காரை, கண்ணனூர்,
அண்ணல்வாயில் என்ற இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றவன் என்பது தெரிகிறது.
இனி, ஒவ்வொரு புல்வரையும் அவர் பாடிய பாக்களையும் பற்றிக் காண்போம்.
(1) பாச்சில் வேள் நம்பன்
இவர் மழநாட்டுத் திருப்பாச்சில் (ஆச்சிரமம்) என்னும் ஊரினர் என்பதும், வேளிர் குலத்தவர்
என்பதும் இவர் தம் பெயரால் அறியப்படும். இவர் பாடியவை ஐந்து வெண்பாக்கள். அவற்றுள்
ஒன்று காண்க:
“வெங்கட் பொருகயல்சேர் வெல்கொடியோன் வாள்மாறன்
செங்கட் கரும்பகடு சென்றுழக்க-வங்குலந்தார்
தேரழுந்தி மாவழுந்தச் செங்குருதி மண்பரந்த
ஊரழுந்தி யூ ரென்னு மூர்.”
(2) ஆசாரியர் அநிருத்தர்
இவர் ‘ஆசாரியர்’ என்பதால், முத்தரையற்கு ஆசிரியராகவேனும், சமண முனிவருள்
ஒருவராகவேனும் விளங்கியவராவர் என்று நினைக்கலாம். இவர் பாடியது கட்டளைக்
கலித்துறை, அது சிதைந்து காணப்படுகிறது.
“..............
...போலரசு பிறவா பிறநெடு மேருநெற்றிப்
பொன்போல் பசுங்க திர்ஆயிரம் (விசும்) பொற்றேர்ப்பருதிக்
கெண்டோ தரவிடு மோவினைச் சோதி யிருவிசும்பே.”
(3) கோட்டாற்று இளம்பெருமானார்
‘கோட்டாறு’ என்பது தென் திருவாங்கூர்ச் சீமையில் இருப்பது. இவர் அவ்வூரினர். இவர்
இளம்பெருமானார் எனப்பட்டதால் இவர் தமையனார் “கோட்டாற்றுப் பெருமானார்” என்ற
ஒருவர் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவரது பாடலும் சிதைந்து
காணப்படுகிறது.
“சேட்டினர் பூந்தண் பொழிற்செம்பொன் மாரிக்கடியரணம்
முட்டினசீற்றமுன் சென்றது பின்பு பகட்டினத் தோர்
கெ.. (மர்) மாறன்க(டி)........க்க”
(4) குவாவங் காஞ்சன்
இவரது முழுப்பெயர் ‘கிழார்க் கூற்றத்துப் பவதாய மங்கலத்து அமருணிலை ஆயின குவாவங்
காஞ்சன்’ என்பது. ‘கிழார்க் கூற்றம்’ என்பது தஞ்சைக் கோட்டத்துப் பாபநாசத்தைச் சுற்றியுள்ள
பகுதியாகும். ‘அமருள் நிலை’ என்பது இவர் படைத்தலைவர் என்பதைக் குறிக்கிறது. இவர்
பாடியனவாக ஆறு பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று காண்க.
“எண்கிண் இருங்கிளையும் ஏறற் கரியவே
வண்கைச் செருமாறன் வாள்காய்த்தி-விண்படர்சேய்
வானாடு தாமூர்ந்த மாநாடக் கண்ணனூர்க்
கோனாடர் புக்கொளித்த குன்று.”[4]
இவற்றால் அறியப்படுவன
இந் நான்கு புலவரும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர் என்பதை எண்ண, உண்மையாகவே உள்ளம்
மகிழ்கிறது. வடமொழி வளர்த்த பல்லவர் காலத்தில் தமிழ் இந்த அளவேனும் வளர்த்த
தென்பது போற்றத்தக்கதே அன்றோ?
இப்புலவர் பெருமக்கள் என்னென்ன நூல்களைப் பாடினார்களோ, அறியோம்; அவை கிடைத்தில.
அந்தக்காலத்தில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமே பெருவரவீன என்பதை மேற்
சுட்டிய பாடல்கள் விளக்குகின்றன. சங்க காலத்தில் அகவலே பேரிடம் பெற்று விளங்கினது:
கலிப்பாஓரளவு பயன்பட்டது. வெண்பா அருகி வழங்கியது. பல்லவர் காலத்தில் வடமொழிப்
புலவர் இந்நாட்டில் பேரளவிற்கு குடிபுகுந்து வடமொழியைப் பரப்பின்மையால் அம்மொழியின்
செய்யுள் இலக்கண அமைதிகள் தமிழிற் பரவின. அப் பரவலின் பயனாக விருத்தம்
முதலியன தமிழிற் பயிலலாயின். தமிழ் யாப்பிலக்கண முறையிலேயே வடமொழிக் கலப்பு
உண்டான காலம் பல்லவர் காலமே ஆகும் என்பது கி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
இருந்த அமிதசாகரர் செய்த யாப்பருங்கல விருத்தியுரையால் நன்குணரப்படுகிறது.
பல்லவரும் தமிழும்
மகேந்திரவர்மன், இரண்டாம்நந்திவர்மன் மூன்றாம்நந்திவர்மன், அபராசிதவர்மன் இவர்களே
தமிழ் அறிவு பெற்றிருந்தனர் என்பது 498. தளவானுர்க் கல்வெட்டு, திருமங்கையாழ்வார்
பாடல்கள், நந்திக்கலம்பக ஆசிரியர் பாடல்கள், திருத்தணிகைக் கல்வெட்டில் உள்ள வெண்பா
இவற்றால் அறியக் கிடக்கிறது. இவர்கட்கு முன்னர் வடமொழியிலும் தென்மொழியிலும்
புலமை பெற்ற ஐயடிகள் காடவர் கோன் என்ற பல்லவ அரசர் ஒருவர் இருந்தார் என்றும்,
அவர் “சிவத்தளி (சேஷத்திர) வெண்பா"ப் பாடினார் என்றும் பெரிய புராணம் குறிக்கிறது.
அவர் பாடிய ‘சிவத்தளி வெண்பா’ சிதைந்த நிலையில் இன்று 11-ஆந் திருமுறையில் இடம்
பெற்றுள்ளது. அவரே மூன்றாம் சிம்மவர்மன் என்பர் ஆராய்ச்சியாளர்.[5]
சிவத்தளி வெண்பா (கி.பி. 550-575)
‘இறக்குந் தறுவாயில் நேரும் துன்பங்கள் அடையாமுன், இன்னின்ன தளிவாழ் இறைவனை
நினை’ என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்த வெண்பாக்களின் தொகுதியே ‘சிவத்தளி
வெண்பா’ என்பது. இப்பொழுதுள்ள பாடல்கள் 24. அவற்றுட் பல தளிகள் குறிக்கப்பட்டுள்ள.
அவை-தில்லை. குடந்தை, ஐயாறு, ஆரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, பாண்ட வாய்த்
தென்னிடைவாய், திருநெடுங்களம், குழித்தண்டலை, ஆனைக்கா, மயிலை, சேனைமாகாளம்,
வளைகுளம், சாய்க்காடு, திருப்பாச்சிலாச் சிராமலை, திருமழபாடி (கொள்ளிடத்துத்தென்)
திருஆப்பாடி, காஞ்சிபுரம், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருக்கடவூர் மயானம் என்பன.
பல்லவரைப் பற்றிய தனிப்பாடல்கள்
அகத்தியனார். இவர் பாடல் ஒன்று, பல்லவம் என்பது தனிநாடு: தமிழ் ‘வழங்காத நாடு’ என்னும்
செய்தியைக் கூறுகிறது.[6]
மகேந்திரன் (கி.பி. 615-630) குடைவித்த தளவானுர்க் குகைக் கோவிலில் வெண்பா ஒன்று
காணப்படுகிறது. அது,
“தொண்டையந்தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன்
வெண்கோட்டின் றென்பான்மிகமகிழ்ந்து-கண்டான்
சரமிக்க வெஞ்சிலையர்ன் சத்ருமல்லே சம்மென்று
அரனுக் கிடமாக அன்று.”[7]
என்பது.
பல்லவ மன்னன் (கி.பி. 719-775) இவனைப் பற்றிய பாக்கள் சில யாப்பருங்கல விருத்தியுரையுட்
காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ‘பல்லவமல்லன்’ என்ற பெயரையே சுட்டுகின்றது.
அஃது எட்டாரைச் சக்கரத்தை விளக்க வந்த மேற்கோள் செய்யுள் ஆகும்.
“.... ........... .....
காடவர்கோன் திரு ஆரமிழ் தாடவர்க்”
.........................
“யாராழி பாய்ந்த விடந்தோ றழகிதாப்
பாராளும் பல்லவ மல்லன் என்றா-ராய்ந்(து).....”
.......................
-பாரில்
“தருமலிந்த வண்மைத் தலைத்தந்து மிக்க
திருமலிந்து தீதிலவே யாக-உருமலிந்த
என்னரசன் மல்லன் மதினிலை யேதிலர்கள்
துன்னரிய வஞ்சினத்தான் தோள்.”[8]
யாப்புநரல் பெருக்கம் (கி.பி. 250-900)
கி.பி. 11ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கல விருத்தி செய்யப் பட்டது; உரையும் அதே காலத்தில்
ஆனது. இதனில், சங்கத்தார் பாடல்கள் சிறுவரவினவாயும், வடமொழி வழக்குப்பற்றித்
தோன்றிய புதிய பா வகைகளை விளக்க வந்த புதிய பாடல்கள் பலவாகவும், இருத்தலை
நோக்க - யாப்பருங்கல விருத்தியுரையுட் கூறப்படும் பல்வேறு இலக்கண நூல்களும் மேற்கோள்
பாடல்களும் சங்க இறுதிக்கும் கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற் றான்
செய்யப்பட்டன என்பதை நன்குணரலாம். அக்காலமே பல்லவப் பேரரசு இருந்த (கி.பி. 250-900)
காலமாகும். மேலும் எட்டாரைச்சக்கரம் போன்ற புதியவை அனைத்தும் பல்லவ மல்லன்
காலத்தில் தோன்றின என்பது மேற்கூறப் பெற்ற செய்யுளைக் கொண்டு தெளிவாக அறியலாம்.
இதனை விரிக்கிற் பெருகும். யாப்பருங்கல விருத்தி உரைநோக்கி ஆராய்ந்து உண்மை
உணர்க.
மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850)
இவன் காடவர் கோன் கழற் சிங்கன் எனப் பெரிய புராணத்தும், ‘நந்தி, பல்லவர் கோளரி என்று
நந்திக்கலம்பகத்தும் கூறப்பட்டவன். யாப்பருங்கல விருத்தியுரையில், கச்சியார் கோ-சிங்கன்
என்றும், ‘நந்தி என்றும் கோன் நந்தி என்றும் வரும்தனிப்பாடல்கள், பொருள் நோக்கி,
இவனையே குறிப்பனவாகக் கொள்ளலாம்.
அவை வருமாறு
(1) ‘நிலமகள் கேள்வனும் நேர் கழலி னானும்
நலமிகு கச்சியார் கோவென்பவே
நலமிகு கச்சியார் கோவாயி னானும்
சிலைமிகு தோள்சிங்கன் அவன்என்பவே
செருவிடை யானை அவனென்பவே”[9]
(2) “வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத்
திரையிரியக் கடல் கடைந்து திருமகளைப் படைத்தனையே[10]
உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை”[11]
(3) “செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீத
சந்தனமென்றாரோ தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோனந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மேல்”
(4) “திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி தெள்ளாறை[12] வெற்பில்
மருத்தேர் குழலிக்குக் கார்முந்து மாகில், மகுடரத்னப்
பரித்தேரும் பாகனும் என்பட்டவோஎன்று பங்கயக்கை
நெரித்தே வயிற்றில்வைத் தேநிற்பளேவஞ்சி நெஞ்சு லர்ந்தே”[13]
(5) ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்;
வையகம் அடைந்ததுன் சீர்த்தி;
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்;
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்;
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்;
செந்தழல் புகுந்ததுன் மேனி;
யானுமென் கவியும் எவ்விடம் புகுவேம்!
எந்தையே! நந்திநாயகனே!”[14]
அபராசிதவர்மன் (கி.பி. 875-893)
இவன் பல்லவர் மரபில் இறுதி அரசன் கி.பி. 875-க்குப் பிறகு நாட்டை ஆண்டவன். இவன்
காலத்தே. நம்பி அப்பி என்பவன் திருத்தணிகை - வீரட்டானேசுவரர் கோவிற்குத் திருப்பணிகள்
பலவும் புரிந்த பெரியவன். அவனைப் பாராட்டி அபராசிதன் ஒரு வெண்பாப் பாடினான்.
அஃது அக்கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது. பாவின் கீழ், ‘இவ்வெண்பாப் பெருமானடிகள்
தாம் பாடி அருளித்து’ என்ற குறிப்புக் காணப்படுகிறது. அபராசிதற்குப் ‘பெருமானடிகள்’
என்ற பெயருண்டு. அவ் வெண்பா இதுவாகும்:
“திருந்து திருத்தணியிற் செஞ்சடைஈ சற்குக்
கருங்கலாற் கற்றளியா நிற்க-விரும்பியே
நற்கலைகள் எல்லாம் நவின்றசீர்நம்பியப்பி
பொற்பமையச் செய்தான் புரிந்து.”[15]
சத்திபல்லவன்
இவன் அரக்கோணம்தாலுக்காவில் தண்டலம் என்ற கிராமத்தில் ஏரியைப் புதுப்பித்தான்
போலும் அங்குள்ள கல்வெட்டில் இரண்டு வெண்பாக்கள் இவனைப்பற்றிக்
காணப்படுகின்றன. இவன் காலம் தெரியவில்லை.
(1) காடவர்கோன் சத்தி கற்றோட்டில் இட்டயாண்(டு)
ஏடியலீரைந்தில் இடுவித்தான்-நீடியசீர்ப்
பல்லவமா ராயன் பசிநீக்கித் தண்டலத்துக்
கல்லிவர்நீர் ஏரிக் கலிங்கு.”
(2) “மண்டலத்துளோர்மதிப்பவண்போளி யூர்நாட்டுத்
தண்டலத்தே ரிக்கலிங்கு தானமைத்தான-ஒண்டழிழ்ப்
பாமங்கை லான்விரும்பும் பல்லவமா ராயனெழில்
பூமங்கை தன்கோன் புரிந்து.”[16]
இராசபவித்திரப் பல்லவதரையன்
இவர் ‘அவிநயம்’ என்ற யாப்பிலக்கண நூலுக்கு உரை எழுதியவர் என்பதைத் தெரிவிக்கும்
பாடல் ஒன்று நன்னூற்கு உரை வகுத்த மயிலை நாதரால் காட்டப்பட்டுள்ளது. அது வருமாறு:
“இந்தப்பத் தெச்சமும்
புவிபுகழ் புலமை அவிநய நூலுள்
தண்டலங் கிழவன் தகைவரு நேமி
எண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப்
பல்லவதரையன் பகர்ச்சியென்றறிக.”[17]
இதனால், இவர் தண்டலத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த பல்லவ மரபினர்
என்பதும், புலமை நிறைந்த இப்பெரியார் அவிநயத்துக்கு உரை கண்டு மகிழ்ந்தவர் என்பதும்
பெறப்படுகின்றன. இவர் காலம் அறியக்கூடவில்லை.
பொதுப்பாடல்
இது பல்லவ அரசன் ஒருவனது ஆணைப்படி அவன் எல்லைப்புற வீரர் வடுகர் முனைச்சுரும்
கடந்து பசு நிரை கவர்ந்த செய்தியைக் குறிப்பதாகும். காலம் கூறக்கூடவில்லை.
“நகில்பொழி தீம்பால் மண்சேறுபடுப்ப
மலர்தலை உலகம் ஒம்பும் என்ப
பரிசிலை தொண்டைப் பல்லவன் ஆணையின்
வெட்சித் தாய்த்து வில்லேர் உழவர்
பொருந்தா வடுகர் முனைச்சுரம்
கடந்து கொண்ட பலஆனிரையே.”[18]
வேறு பல நூல்கள் (கி.பி. 250-900)
இதுகாறும் கூறப்பெற்ற சில்லரைப் பாடல்களால், சங்க காலத்திற்குப் பிறகு வந்த பல்லவர்
காலத்தில் புலவர்பலர் இருந்தனர் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கித் தோன்றும்.[19]
(1) யாப்பருங்கல விருத்தியுரையை நன்கு ஆராயின் பல்லவர் காலத்திற் பல யாப்பிலக்கண
நூல்கள் வடநூல் வழித் தமிழ் ஆசிரியர் பலரால் செய்யப்பட்டன என்பது போதரும். அவற்றினை
விரித்துக் கூறாதுபெயர்கள் மட்டுமே இவண் தரப்பெறும். விரிவை வேறிடத்துக் காண்க.
சங்கயாப்பு, பாட்டியல் நூல், மாபுராணம் என்றயாப்புநூல்கள் இக்காலத்தன. இவையன்றி
மேற்கூறிய உரையால் இலக்கிய நூல்கள் பல்லவர்காலத்து இருந்தன என்பது தெரிகிறது.
அவையாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் காலத்திலும் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது.
அவை முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியான கதை, குடமூக்கிற் பகவர் செய்த வாசு
தேவனார் சிந்தம். அடிநூல், அணி இயல், அமர்தபதி, அரசசந்தம், அவிநந்தமலை, ஆசிரியமுறி,
காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப்பாட்டு, தேசிகமாலை, பசந்தம், பாவைப்பாட்டு,
பிங்கலகேசி, புணர்ப்பாவை, பெரியபம்மம். பொய்கையார் நூல், (களவழியன்று), போக்கியம்,
மணியாரம், மந்திர நூல், மார்க்கண்டேயனார் காஞ்சி, மதுவிச்சை, வளையாபதி முதலியன.
இவற்றுள் இரண்டொன்று நீங்கலாக மற்றவை அனைத்தும் பல்லவர் காலத்திற் செய்யப்பட்டவை
என்பது அவற்றின் வடமொழிப் பெயர்களைக் கொண்டே கூறலாம்.[20]
(2)யாப்பருங்கலக் காரிகை உரையால், கலிதயனார் என்பவர் செய்த யாப்பு நூலும் பாடலனர்
செய்த யாப்பு நூலும், பெயர் தெரியாப் புலவர் ஒருவர் செய்த யாப்பு நூலும் இருந்தன என்பது
தெரிகிறது:[21]
(3) தொல்காப்பியச் செய்யுளியல் உரையிற் காணப்பெறும் நூல்கள் சிலவும் பல்லவர் காலத்தன
எனக்கோடல் தவறாகாது. அவை யாழ் நூல் கந்தர்வ நூல்[22] (இவை நூல்). பருப்பதம், தந்திர
வாக்கியம், வஞ்சிப்பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு, விளக்கத்தார் கூத்து முதலியன.[23]
சைவத்திரு முறைகள் (கி.பி. 250-850)
திருமூலர் திருமந்திரம், பேயம்மையார் பாடியபதிகங்கள், சமயகுரவர் திருமுறைகள், ஐயடிகள்
‘க்ஷேத்திர வெண்பா.’ திருத்தொண்டத் தொகை, சேரமான் பெருமாள் பாடிய அந்தாதி,
உலா முதலியன பல்லவர் காலத்தனவே ஆகும். அவற்றைத் தனித்தனி விரிக்கிற் பெருகும்.
அவற்றுள் திருமுறைகள் பற்றிய குறிப்புகள் இந்நூலுள் ஆங்காங்குத் தரப்பட்டுள்ளன.
நந்திக் கலம்பகம் (கி.பி. 830-850)
இந்நூல் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றியதென்பது முன்பே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்நூல் இவனதுவேலூர் பாளையப் பட்டயத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது. இஃது
இல்லாவிடில் இப்பேரரசன் முதலிற்செய்த வடநாட்டுப் போர் விளக்கம்பெறாது ஒழிந்திருக்கும்.
‘குறுகோட்டை’ என்ற பெயர் ஒன்றே வேலூர் பாளையப் பட்டயக் குறிப்பை நன்கு விளக்கப்
பேருதவி புரிந்தது. மேலும் பட்டயத்திற்குறிக்கப்படாத இவனது தமிழ்ப் புலமை, தமிழ்ப்
புரவலனாந்தன்மை. பிற நல்லியல்புகள். இவன் மனைவியர். தம்பி முதலியவர் செய்திகளும்
இன்னபிறவும் அறிந்து வரலாறு கட்ட இச் சிறு நூல் பேருதவி புரிந்துள்ளது. இம்மூன்றும்
நந்திவர்மனே பெரிய புராணம் கூறும் காடவர்கோன் கழற்சிங்கன் என்பதை அறிய
உதவிபுரிந்தது. இந்நூலே ஆகும். இதனால், கழற்சிங்கன்வரலாற்றுச் சிறப்புப்பெற்று
விட்டான் அல்லனோ? இவன் அவனி நாரணன் என்றொரு பெரும் கொண்டவன் என்பது
கலம்பகம் கூறும் நற்செய்தியாகும். காவேரிப்பாக்கம் ‘அவனி நாராயணச்’ சதுர்வேதி
மங்கலம் எனப்பட்டது. சையாமில் இருந்த குளம் ஒன்று (தமிழன் பல்லவ நாட்டினன்
வெட்டியது) அவனி நாரணம் எனப்பட்டதாக அங்குக் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது.
பின்னிரண்டை ஒப்புநோக்கக் கலம்பகம் எத்துணைப் பேருதவி புரிகிற நிலையில்
இருக்கிறதென்பது தானே விளங்கும். இவற்றோடு, இச்சிறு நூல், தமிழ்மொழியில், கலம்பகம்
என்னும் பிரபந்த முறையில் இன்றுள்ள முதல் நூல் என்று கூறத்தக்க பழைமையும் பெற்ற
தென்னலாம்: பல்லவர் காலயாப்பிலக்கண வளர்ச்சியை உள்ளவாறு அறிய உதவும்
அரிய நூல் என்னலாம்.
பாரத வெண்பர (கி.பி. 830-850)
இதுவும் மூன்றாம் நந்திவர்மன் காலத்து நூல்; அவனால் ஆதரிக்கப்பெற்ற பெருந்தேவனார்
என்ற தமிழ்ப்புலவர் பாடியது. இதனை இந்நூலின் முதற் செய்யுளாலும் அதன்கீழ் உள்ள
உரைப் பகுதியாலும் நன்கு உணரலாம்.
“வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
உண்மையால் பாராள் உரிமையால்-திண்மையால்
தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
யார்வேந்தர் ஏற்பார் எதிர்!”
உரை நடை: “எல்லையின் நிறைந்த எண்டிசை உலகத்து மலையும் மலையும் உள்ளிட்ட மண்மிசை
முழுதும் மறையது வளர்க்க அல்லி பீடத்து அரிவைக்குத் தன் அழகமர் தோளே ஆலயமாக்கிய
பல்லவர் கோமான் பண்டிதர் ஆலயனைப் பரவினேம்.” தெள்ளாற்றுப் போர் குறிக்கப்பட்டுள்ளதால்
இந்நூல் செய்யப்பட்ட காலம் ஏறத்தாழக் கி.பி. 830-850 எனக் கூறலாம்.
உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள்: இது வெண்பா, விருத்தம், அகவல் என்ற மூவகைப்
பாக்களால் ஆனது இடையிடையே கதை தொடர்புக்காக உரைநடை மிகுதியாக விரவப்
பெற்றுள்ளது. இத்தகைய முறை ‘சம்பு’ எனப்படும். இந்நூலாசிரியர் காலத்தில் கங்க நாட்டில்
இச் சம்பு நூல்களேயாக்கப்பெற்றன என்பது இங்கு அறியத்தகும்.[24]
ஆசிரியர் வைணவர்: பெருந்தேவனார் சிறந்த வைணவர் என்பது இந்நூலில் உள்ள கடவுள்
வாழ்த்துப் பாக்கள் பலவற்றால் தெரிகிறது. சிறந்த நாயன்மாருள் ஒருவனான நந்திவர்மனது
அவைப்புலவர் சிறந்த வைணவர் என்பது வியப்புக்குரியது. இஃது அப் பேரரசனது பரந்த
அறிவின் மாட்சியை விளக்குவதாகும் அன்றோ?[25]
நூற் செய்திகள் சில: (1) இவர் பாரதப் போரில் பல்லவரும் போரிட்டனர் எனக் கூறுதல்
நகைப்பைத் தருகிறது. பல்லவர் மட்டும் இல்லை; குந்தளர் (கதம்பர்), சாளுக்கியர், கொங்கணர்,
கங்கர் முதலியதம் கால அரசரையும் பாரதப்போரில் இழுத்துவிட்டனர்.[26] (2) இவர் “மீகாமன்
இல்லாத மரக்கலந்தான் ஆக்கினாய் வேந்தர் ஏறே”[27] என ஓரிடத்தில் உவமை கூறிஇருத்தல்
தம் காலத்துக் கடல் வாணிய உணர்ச்சியால் என்னல் தவறாகதன்றோ?
(3) இவர் குறித்த வைணவத் தலங்கள்: திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை, திருஅரங்கம்
திருஅத்தியூர் என்பன. எனவே, இவை இவர் காலத்தில் மிக்க சிறப்புற்றனவாக இருந்திருக்கலாம்
என்பதை நம்பலாம்.
“தேனோங்கு சோலைத் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்கு
தென்னரங்க மென்றும் திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டே சுகம்.”[28]
(4) தொகைநூல் தொகுப்பாளரா?: இப் பெருந்தேவனார், ‘எட்டுந் தொகையின் தொகுப்பாளர்’
என அறிஞர் சிலர் கருதுகின்றனர். களப்பிரர் குழப்பத்தால் பாண்டிய அரசு திடீரென வீழ்ந்ததாக
வேள்விக்குடிப் பட்டயம் பகர்கிறது. அதனால், அதற்கு முன்னரே சங்கம் முற்றுப்
பெற்றதாகக் கூறமுடியாது. அது திடீரென நின்றுவிட்டதாகல் வேண்டும். பின்னர் வந்த
பாண்டியர் எவரும் அதைப்பற்றிக் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை.பல நூல்கள்
அழியக் காரணம் களப்பிரர் குழப்பம், முதல், இடைக்காலப் பல்லவரது குழப்பமான
அரசாட்சி, பல நாட்டார் செய்த போர்கள். திகம்பர சமணர், புத்தர் இவர்தம் இடையீடு
இன்ன பிறவற்றால் பழந்தமிழ்ச்செய்யுட்கள் பல அழிந்தொழிந்தன. ஓரளவு அமைதியும்
பல்லவர் பாண்டியர் நட்பும் உண்டான நந்திவர்மன் இறுதிக் காலத்தில், கிடைத்த பழைய
பாடல்களைப் பெருந்தேவனார் முறைப்படுத்திச் சேர்த்திருத்தல் கூடியதே என்க. மூன்றாம்
நந்திவர்மன் பைந்தமிழை ஆய்ந்த நந்தி ஆதலாலும், பாண்டிய நாடு தன் உறவு
கொண்டமையாலும் இந் நன்முயற்சியில் ஈடுபடுமாறு தன் அவைப்புலவரை வேண்டி
இருக்கலாம். அவரும் அதற்கு உடம்பட்டுப் பாக்களைத் தொகுத்துக் கடவுள் வாழ்த்துக்கூறி
முடித்திருக்கலாம்,[29] என்று வரலாற்று ஆசிரியர் சிலர் எண்ணுதல் ஆராய்ச்சிக்குரியதே ஆகும்.
சேரமான் பாடிய நூல்கள்
(கி.பி. 825-850)
முன்னுரை
இவர் சுந்தரர் காலத்தவர்; மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர்; சீமாறன் சீவல்லபன் காலத்தவர்;
இவர் பொன் வண்ணத்து அந்தாதியைத் தில்லைநகரிற் (பல்லவர் நாட்டில்) பாடினார்;
மும்மணிக்கோவையைத் திருவாரூரிற் பாடினார்; ஞானவுலாவைக் கயிலையிற்பாடினார்
என்பர். இவை மூன்றாம் பல்லவர்கால நூல்கள் ஆதலின், இவற்றைப் பற்றிச் சிறிதேனும்
அறிதல் நன்றாகும்.
அந்தாதி
இது நூறு பாக்களைக் கொண்டது; முதலும் முடிவும் பொன்வண்ணம் எனத் தொடங்கி முடிவது
சங்கமங்கை (23), மறைக்காடு (47), ஐயாறு (60), தில்லை (77), கழுக்குன்றம் (59) என்ற
தலங்கள் குறிக்கப்பெற்றுள்ளது.அழகிய பொருட் செறிவுடைய பாக்களைத் தன் அகத்தே
பெற்றது. சேரமான் தன்னைச் செவிலி யாகவும், தலைவியாகவும் வைத்து இப் பாடல்களைப்
பாடியுள்ளார். வருணனை மிக்கபாக்கள் சிலவுண்டு. அவற்றில் ஒன்று காண்க.
சிவனார்,
சடை-எரிகின்ற தீப்போன்றது.
கங்கை-அத் தீக்குச் சொரியும் பாற்கடல் போன்றது;
(நீரில் சரிகின்ற) திங்கள்-தோணி போன்றது;
அரவு-தோணி செலுத்துவோனைப் போன்றது.[30]
ஒரு செய்யுளில் மும்மூர்த்திகளுடைய பெயர். இருப்பிடம் நிறம், மாலைகள், ஆதனம் கூறப்பட்டுள்ள
அழகு நோக்கத்தக்கது.
| பெயர்: | சிவன் | அயன் | அரி |
| இருப்பிடம்: | வெற்பு | அலர் | நீர் |
| நிறம்: | எரி | பொன் | கார் |
| மாலை: | கடுக்கை | கமலம் | துழாய் |
| ஆதனம்: | விடை | தோல் | பறவை[31] |
-------------------
மும்மணிக்கோவை
இது திருவாரூரிற் சுந்தரர் முன்பு கோவிலிற் பாடியது. முப்பது செய்யுட்களை உண்ட்யது;
அகவல், வெண்பர், கட்டளைக் கலித்துறை முறையே அமைந்தது. களவு, கற்பு என்ற இரண்டும்
விரவப் பாடப்பெற்றது; ஒவ்வொரு பாவிலும் திருவாரூர் குறிக்கப்பெற்றது. ஒவ்வோர்
அகவற்பாவும் (2, 4, 7, 10, 13, 25) அகநானூற்றுப் பாக்கள் போல முறையும் செறிவும்
முடியும் அமையப்பெற்றது. பத்தாம் செய்யுளின் முதல் ஐந்து அடிகள்தலைவி வருத்த
நிலையை அழகுறக் கூறுவன. இவ் வருணனை சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின்
பிரிவு நிலையுடன் ஒப்பிடத்தக்கது. இதன்கண் ஆரூர், சிராமலை (10), திருக்கடவூர் (24)
குறிக்கப்பட்டுள: தக்கன் வேள்வி (12), சிவன் யானை உரித்தது (28), மலைமகட்கு ஒரு
கூறு தந்தது (28) ஆகிய கதைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஞானவுலா
இது சிவபெருமான்முன் திருக்கயிலையிற் பாடியதென்பர். இந்நூல் படிக்கப் படிக்க இன்பம்
தருவது. இதில் பல அரிய பொருள்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே காண்க.
(1) சிவன், ‘அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே.’
(2) சிவன், ‘எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்
கொடுப்பான்.’
(3) அக்கால இசைக் கருவிகள்-சல்லரி, தாளம், தகுணிதம், தத்தளகம், கல்லலகு. கல்லவடம்,
மொந்தை. சங்கம், சலஞ்சலம், தண்ணுமை, பேரி, குடமுழவம், கொக்கரை, வீணை, குழல்,
யாழ், தடாரி, படகம், மத்தளம், துந்துபி, முருடு[32] என்பன.
(4) ஏழு பருவ மங்கையர் வருணனை படித்து இன்புறத்தக்க பகுதியாகும். அவற்றில் சில
வருமாறு:-
(1) மடந்தை ‘தீந்தமிழின் தெய்வவடிவாள்.’
(2) அரிவை, ‘தன் ஆவார் இல்லாத்தகைமையாள்.’
(3) அவள் ‘இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையையும்
கைவிட்டாள்.'
(4) தெரிவை, ‘ஆராவமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள்.’
(5) இந் நூலால் பெண்கள் சிவபெருமானை எண்ணி வெண்பாக்கள் பாடுதல் மரபு என்பது
தெரிகிறது.[33]
(6) இந்நூலில், இல்லாரை எல்லாரும் என்ற குறளும் கண்டு கேட்டு என்ற குறளும் முழுவதும்
வைத்து ஆளப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின், இது படித்து இன்புறத்தக்க சிறந்த நூல் என
மற்றொரு முறை கூறலாம்.
நாலாயிரப் பிரபந்தம் (கி.பி. 200-900)
முதல்வர் ஆழ்வார் மூவரும் திருமழிசையாழ்வாரும் பல்லவர்க்கு. முற்பட்டவர் ஆவர். நாம்
அறிந்தவரை பல்லவர் காலத்தில் தொண்டை நாட்டில் இருந்த திருமங்கை ஆழ்வாரும் தொண்டர்
அடிப்பொடி ஆழ்வாருமே ஆவர்.[34] இவர்கள் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் இருந்தவர்கள்.
இவர்கள் பாடல்களைக் கொண்ட இப் பிரபந்தம்பற்றி முன்னரே நன்கு விளக்கப்பட்டுள்ளது.
பல்லவர்கால மணிப்பிரவாள நடைக்கு இந்நூல் ஏற்ற சான்றாகும்.
பல்லவர் அவைப் புலவர் (கி.பி. 615-900)[35]
பிற்காலப் பல்லவர் காலத்திற்றான் தமிழ்மொழியிற் கல்வெட்டுகளும்.செப்பேடுகளும் வெளிவந்தன.
அவற்றில் உள்ள அழகிய தமிழ்ப் பெயர்கள், அழகிய தொடர்கள், வருணனை இன்ன பிறவும் பண்பட்ட
புலவர் பெருமக்களால் முதலில் வரையப் பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில்
தமிழ் மக்களை ஆண்டு, தமிழராக மாறிய பல்லவ வேந்தர் தமிழ் அறிவுடையராக இருந்தனர் என்பது
பல சான்றுகளால் நிறுவப்பெற்றது. அவர்கள் தமிழ்மொழியை வளர்த்ததோடு, தமிழ்ப் புலவர்களையும்
ஆதரித்து வந்தனர் எனக் கோடல் பொருத்தமே ஆகும். மூன்றாம் நந்திவர்மனுக்கு முற்பட்ட பல்லவர்
காலத்துப் புலவர் இன்னவர், அவர் செய்த நூல்கள் இன்னவை என்பன இப்பொழுது அறியக் கூடவில்லை.
ஆயினும், ஒவ்வோர் அரசன் அவையிலும் தமிழ்ப் புலவர் (பட்டயம் எழுதவும் கல்வெட்டில் பாட்டு
எழுதவும், பிற சிறப்புடைய அரசியல் ஒலைகள் தீட்டவும்) இருந்திருத்தல் வேண்டும் என்பதை
உய்த்துணரலாம்.
-------------
References
[1]. Tamil Navalar Saritai, S.154-157.
[2]. K.A.N. Sastry’s “Cholas’ Part I, p.121.
[3]. யா-விருத்தி சூ 83. உரை, இது விளக்கத்தனார் பாடியுள்ள நீண்ட கலிப்பாவின் ஒரு பகுதி.
[4]. M.Raghava Iyengar’s “Sasans Tamil Kavi Saritam’ pp.17-21.
[5]. Mysore Annual Archaeological Report 1925, pp.9-12.
[6]. நன்னூல் சூ.272 மயிலை, உரை.
[7]. தளவானுர்க் குகைக் கோவில் கல்வெட்டு; ‘சத்ரு மல்லன்’ என்பது மகேந்திரன் வருதுகளுள் ஒன்று.
[8]. இம் மூன்று பாடல்களுள் பல்லவ மல்லனையே பற்றியவை. யா-விருத்தி, பாகம் 2, பக், 520-522
இப்பாடல்கள் பல்லவமல்லன் காலத்திலே செய்யப்பட்டவை என்பது ‘பாராளும் பல்லவவமல்லன்’
என்ற தொடரால் உணரலாம்.
[9]. யா-விருத்தி சூ.87 உரை.
[10]. இஃது இராட்டிரகூடரை வென்றதால், திருமகள் போன்ற இராட்டிரகூட இளவரசியாகிய
சங்காவை மனைவியாகப் பெற்றமை கூறப்பட்டது; vide Bahur plates.
[11]. இது நீண்ட கலிப்பா, பா-விருத்தி, சூ.86 உரை.
[12]. தெள்ளாறு - வட ::ஆர்க்காட்டுக் கோட்டம் வந்தவாசி தாலுக்காவில் உள்ள ஊர்.
[13]. இது கோவைப் பாடல்போலும் நந்திக்கோவை என்பதொன்று ‘நந்திக் கலம்பகம்’ என்பதுபோல
இருந்ததுபோலும்! அது நந்திவர்மன் தெள்ளாற்றுப் போரில் தமிழரசரை வென்றபின் பாடப்
பட்டதாகலாம்.
[14]. நந்திக்கலம்பகத்தின் இறுதியிற் சேர்க்கப்பெற்ற பாடல்களில் ஒன்று; கையறுநிலை.
[15]. 433 of 1905
[16]. Ep.ind, Vol. VII, p.26.
[17]. சூ.359. உரை.
[18] தொல் அகத். சூ54உரை. இதனால்; இது நச்சினார்க்கினியர் காலம் வரை வழக்கில் இருந்தமை
தெரிகிறது அன்றோ?
[19]. கி.பி. 250 முதல் 900 வரை தமிழகத்திற் பல்லவப் பேரரசே இருந்தமையால், அக்காலத்திற்
செய்யப்பட்ட தமிழ் நூல்களிற் பெரும்பாலான பல்லவப் பெருநாட்டிற் செய்தனவாகக்
கொள்ளப்பட்டன. மேலே கண்டவற்றுட் சில பாண்டிய - சேரநாடுகளிலும் செய்யப்பெற்றவாக
இருக்கலாம்.
[20]. Vide Author’s Article on “Books on Tamil Prosody’ (Selvi, Vol. 15)
[21]. Ibid pp.377–378.
[22]. Ibid p.379.
[23]. ‘காந்தர்வ வித்தை’யில் மகேந்திரனும் இராசசிம்மனும் பல்லவர் புலவர் என்பது முன்னரே
கூறப்பட்டன அல்லவா?
[24]. Ibid. p.379.
[25]. M. V. Rao’s “Gangas of Talakad’, p. 276
[26]. S.387, 484, 514, 546, 559, 571, 583, 590, 618, 629, 678, 711 S.773
[27]. S.669
[28]. S. 484
[29]. P.T.S.Iyengar’s “History of the Tamils’.
[30]. S.67 [31]. S.95
[32]. காரைக்கால் அம்மையார் மூத்த இருப்பதிகத்தில் வரும் இசைக்கருவிகளை நோக்குக.
[33]. வெண்பா மிகுதிப்பட்டது பல்லவர் காலமே என்பதற்கு இஃது மொரு சான்றாகும்.
[34]. வேண்டுமாயின் திருமழிசை ஆழ்வாரை ஏறத்தாழ முற்காலப் பல்லவர் காலத்தவர் (கி.பி. 250-350)
எனக் கொள்ளலாம்.
[35]. தளவானூர் கல்வெட்டு வெண்பா மகேந்திரன் காலத்தது; இவன் காலமுதலே தமிழ்க்
கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஆதலின் இவன். காலமே தொடக்க காலமாகக் கொள்ளப்பட்டது.
--------------
25. பல்லவர் கோநகரம்
சங்க காலச் சோழர் ஆட்சியில் காஞ்சிமா நகரம் எங்ஙனம் இருந்தது என்பது முதற் பிரிவில்
கூறப்பட்டதன்றோ? இப் பிரிவில் பல்லவர் கோநகரம் ஆகிய காஞ்சிபுரம் எந்நிலையில் இருந்தது
என்பதைப் பல்லவர் எழுத்துகளைக் கொண்டும் பிற்காலச் சோழர் எழுத்துகளைக் கொண்டும்
இன்றைய நிலையைக் கொண்டும் ஒருவாறு காண்போம்:
நகர அமைப்பு
இயூன்-சங்காலத்தில் காஞ்சி நகரத்தின் சுற்றளவு ஏறத்தாழ ஆறு கல்; இன்று ஏறத்தாழ ஐந்து கல்;
ஒனகாந்தன் தளியிலிருந்து பிள்ளைப்பாளையம் வரை இன்று வயல்களாக உள்ள நிலப்பகுதி
நகரமாக இருந்திருத்தல் வேண்டும் என்பது கயிலாசநாதர் கோவில் கல்வெட்டுகளால் நன்கு
தெரிகிறது. வேகவதியாற்றை ஓர் எல்லையாகப் பழைய நகரம் கொண்டிருந்ததென்னல் பிழையாகாது.
நகரம் மேற்கில் மேடாகவும் கிழக்கில் பள்ளமாகவும் இருக்கிறது; மேற்கிலிருந்து கிழக்கே
வில்லைப்போல் வளைந்திருக்கிறது; நகரத்தெருக்கள் பெரும்பாலும் அகன்றவை. அரச வீதிகள்
நான்கும் ஏறத்தாழ 100 அடிஅகலம்கொண்டவை: ‘தேரோடும்விதிகள்,படை செல்லும் வீதிகள்’
என்று கூறத்தக்கவாறு அகன்றுள்ளன. பெருமழை நீரும் சாலைகளில் தேங்குதல் இல்லை;
உடனே உட்சென்று விடுகிறது. இந்நகர் நடுவே மஞ்சள்நீர்க் கால்வாய் என்பது ஓடுகிறது.
இதனை அடுத்துப் பண்டைக் காலத்தில் ஒடை போன்ற அகழி இருந்தது என்று பெரியோர்
பலர் கூறுகின்றனர். அந்த அகழிக்கு அணித்தே உள்ள தோட்டங்களில் நிலத்திற்கு அடியில்
செங்கற் படைகள் இன்றும் கிடைக்கின்றன. அச் செங்கற்கள் 18-அங்குல நீளம் 9-அங்குல
அகலம் 4-அங்குலகனம் உடையன. எனவே, அச் செங்கற் சுவர் கோட்டைமதிற்கவரின் பகுதியாக
இருக்கலாம் என்று எண்ண வேண்டுவதாக இருக்கிறது. ‘மகேந்திரன் கோட்டை மதிலுக்குள்
நுழைந்து கொண்டான், அஃது ஏறி உட்செல்ல முடியாத உயரமும் வன்மையும் உடையது’
என்று சாளுக்கியர் பட்டயம் கூறலாலும், ‘மதிற் கச்சி’ எனத் தேவாரத்தில் வருதலாலும் பல்லவர்
காலத்தில் நகரைச் சுற்றி மதில் இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. காஞ்சி நகரம்
பிற்காலத்தில் பல மாறுதல்களைப் பெற்று விட்டமையாலும் சோழர். விசய நகரத்தார்,
முஸ்லிம்கள் இவர்கள் ஆட்சியில் பல மாறுபாடுகள் உற்றிருத்தல் இயல்பே ஆதலாலும்,
பல்லவர் காலச் சின்னங்கள் பல இன்று காண்டல் அருமையே ஆகும்.
எனினும், ஏறத்தாழ இந் நகரப் பொது அமைப்பைப் பல்லவரை அடுத்துவந்த சோழர் காலத்துத்
தண்டியலங்காரம் கூறுகிறது. அது கி.பி. 11ஆம் நூற்றாண்டு நூல்: பல்லவர்க்கு 150 ஆண்டுகட்குப்
பின் செய்யப்பட்டது. பல்லவர் காலத்துத் தலைநகரம் சோழர்க்கு வடபகுதியின் தலைநகரமாக
விளங்கியது. ஆதலால், பெரிய மாறுதல் எதுவும் நேர்ந்திருக்க இடமில்லை. ஆதலின் நாம்
தண்டியலங்காரப் பாடலைச் சிறந்த சான்றாகக் கோடலில் தவறில்லை. அது வருமாறு:
“ஏரி இரண்டும் சிறகா, எயில்வாயிறாக்,
காருடைய பீலி கடிகாவா,-நீர்வண்ணன்
அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே
பொற்றேரான்கச்சிப் பொலிவு.”
பெரியபுராணம்
இது கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பெற்ற நூல்; சோழர்
அலுவலாளரும் தொண்டைநாட்டினரும் காஞ்சியை நேரிற் பார்வையிட்டவருமாகிய சேக்கிழார்
காஞ்சி நகரத்தைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் 60 பாக்களில் சிறப்பித்துள்ளார்.[1]
அப்பாக்களில் வரும் செய்திகளிற் பெரும்பாலான நகர்நிலைமையை அறியப் பேருதவி
செய்வனவாகும்.
கெட்டிஸ் துரை கூற்று
இந்நகர அமைப்பைப்பற்றி, நகர அமைப்புத் திட்டவல்லுநரான திரு. கெட்டிஸ்துரை அவர்கள்
கருத்து கச்சி நகராண்மைக் கழக அறிக்கையில் (1914-1915) அழகாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அதில் சில பகுதிகள் ஈண்டுக் காண்க:-
“காஞ்சி நகரம் எண்ணிறந்த கோவில்கட்கு மட்டுமே பெயர் பெற்றதன்று. மிக்க தேர்ச்சியுடனும்
கூர்ந்த அறிவுடனும் அமைக்கப்பட்ட நகர அமைப்புக்கும் இந்நகரம் பெயர்பெற்றதாகும். இந்த
நகர அமைப்புத் திட்டத்துக்கு இணையான ஒன்று இந்தியாவில் உள்ள வேறு எந்த நகரத்திலும்
இல்லை; உலகத்தில் உள்ள வேறு எந்த நகரத்திலும் இல்லை. வீடுகள் பாதை மட்டத்திற்குப்
பல அடிகள் உயர்த்திக் கட்டப்பட்டிருத்தல் பாராட்டத்தக்கது. மேனாட்டு உயர்ந்த பெரிய
நகரங்களில் காணக் கிடைக்கும் இருட்டுச் சந்துகளும் பலவகை அழுக்குகளும் காஞ்சியிற்
காண்டல் அருமை!..... ஏகாம்பரநாதர் கோவிலைச் சேர்ந்த தேர் ஓடும் வீதிகளும், காமாட்சி
அம்மன் கோவிலைச் சேர்ந்த தேர் ஒடும் வீதிகளும் ஒன்றுக்கொன்று இடர்ப்படாமல்
அமைத்துள்ள முறை வியந்து பாராட்டத்தக்கதாகும்.நகர அமைப்புத்திட்டப் பயிற்சி
பெறுவோர்க்கு இது சிறந்த இலக்காக அமைந்திருக்கிறது......”[2]
பெளத்தர் தெருக்கள்
காஞ்சிநகராண்மைக்கழகம் கி.பி.1865இல் அமைக்கப்பட்டது. அக்காலத்திற்குமுன், இன்று
‘காமாட்சி’ அம்மன் சந்நிதித் தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு ‘புத்தர் கோவில் தெரு’
என்று வழங்கப்பெற்றது. அத் தெருவின் இப்பண்டைப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில்
பார்த்த முதியவர்[3] இன்றும் அத் தெருவில் இருக்கின்றார். 30 ஆண்டுகட்கும் அவரது
இல்லத்திற்கு எதிரில் நான் கைந்து வீடுகளுக்குப் பின்னுள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள்
இரண்டு அகப்பட்டன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தாள்[4] கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
அச்சிலைகள் இருந்த இடம் பண்டைக் காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. அக் கோவிலைச்
சேர்ந்த பழைய கிணறுகள் இரண்டு இன்றும் நன்னிலையில் இருக்கின்றன. புத்தர் கோவிற்
பகுதிகளைக்கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டதாம். இன்றுள்ள காமாட்சி
அம்மன் சந்நிதித் தெருவை அடுத்த சுப்பராய முதலியார் இல்லத் தோட்டத்தில் ஏறத்தாழ
5 1/2 அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. அது முன் சொன்ன இரண்டைப்
போலவே அமர்ந்த நிலையில் அமைப்புண்டதாகும்; முன்னவற்றை விடப் பெரியது. அந்தத்
தோட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்று 150 ஆண்டுகட்குமுன் கட்டப்பெற்றதாம். அதன்
அடிப்படையை அமைக்கும்பொழுது நின்ற கோலங் கொண்ட புத்தர் சிலைகள் காணப்பட்டனவாம்.
இச் செய்திகளைநன்கு ஆராயின்,புத்தர்கோவில் தெருஒன்று இருந்தது. அங்குப்புத்தர்
கோவில்கள் சில இருந்தன என்பது நன்கு புலனாகும் இன்றுள்ள புத்தேரித் தெரு என்பது
‘புத்தர் சேரி’ என்று இருத்தல் வேண்டும்; ஆயின், ‘புத்தேரி’த் தெரு என்றே சோழர்
கல்வெட்டுகளிலும் பயின்று வருதல் இதன் பழைமையைக் காட்டுகிறது. அறப் பணச்சேரித்
தெரு என்று ஒன்றுண்டு. அஃது ‘அறவணர் (அறவண அடிகள்) சேரி’ யாக இருந்திருக்கலாம்
என்பர் இராவ்சாகிப் திரு. மு. இராகவையங்கார் அவர்கள். சில ஆண்டுகட்கு முன் காமாட்சி
அம்மன் கோவிலிருந்து புத்தர் சிலைகளைத்திருவாளர் கோபிநாதராயர் கண்டெடுத்ததை
ஆராய்ச்சி உலகம் நன்கறியும் அன்றோ? மணிமேகலையை நன்கு ஆராய்ந்தவர், காஞ்சியில்
பெளத்த இடங்கள் சில வேனும் இருந்தன என்பதை ஒப்புவர். இபூன்-சங், மகேந்திரவர்மன்
இவர்தம் நூல்களாலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பெளத்தர் காஞ்சியில் இருந்தனர்
என்பதை எளிதில் உணரலாம். எனவே மேற்கூறிய தெருக்கள் இரண்டும் பண்டைக் காலத்தில்
சிறப்பாகப் பல்லவர் காலத்தில் புத்தர் வாழ்ந்த இடங்களாக இருந்தன என்னலாம்.
‘சாத்தன் குட்டைத் தெரு’ என்பதொரு தெருவாகும். ‘சாத்தன்’ என்பது ‘சஹஸ்தன்’ என்பதன்
மருஉ மொழி. இப் பெயர் புத்தர் பெருமானைக்குறிப்பது. ‘சாத்தனார்’ என்பது மணிமேகலை
ஆசிரியர் பெயராதல் காண்க. இதனால், பல்லவர் காலத்திலும் அதற்கு முற்பட்ட சோழர்
காலத்திலும் ‘புத்தர்’ போன்ற கடவுளர் பெயர்களைக் குளங்கட்கு இடுதல் மரபு என்பது
தெரிகிறது.
பிற தெருக்கள்
யானை கட்டுந் தெரு, பட்டாளத் தெரு, காவலன் தெரு, முதலியன அரசியல் அமைப்பைச்
சேர்ந்த தெருக்கள். அவை இன்றும் அப்பெயருடன் வழங்குகின்றன என்பது நோக்கத்தக்கது.[5]
பலவகைத் தொழிலாளர் தெருக்கள் பண்டு இருந்தவாறே இன்றும் இருந்து வருகின்றன.
அவற்றுள் சில சாலியர் தெரு, சுண்ணாம்புக் காரத்தெரு, நிமந்தக்காரத் தெரு (கொத்தத் தெரு)
என்பன. சோலைகள் (இக்கால Park) இருந்த தெருக்கள் சில. அவை திருச்சோலைத் தெரு,
மதுரன் தோட்டத் தெரு, தோப்புத் தெரு முதலியன. மடம், மண்டபம் முதலியவற்றை உடைய
தெருக்கள்-மடத்துத் தெரு, மண்டபத் தெரு, மூன்றாம் திருவிழா மண்டபத் தெரு எனப்பட்டன.
கோவில்கள் உள்ள தெருக்கள் அக் கோவிற் பெயர் கொண்டு விளங்கின. அவை மதங்கீசர் தெரு,
திருமேற்றளி ஈசர் தெரு முதலியன. இப் பெயர்கள் பல்லவர் காலத்தில் இருந்தன என்று கோடலில்
எவ்விதத் தவறும் இருப்பதாகக் தெரியவில்லை. வடக்கு வாசல் தெரு என்றொரு தெரு இன்றும்
இருக்கின்றது. இவ் வாசல் பண்டைக் கோட்டை வாசலாக இருந்திருக்கலாம்.[6]
காஞ்சியை அடுத்துக் காஞ்சி வாயில் என்னும் பெயருடன் சில சிற்றுார்கள் இருந்தன என்பது
இங்குநினைவிற் கொள்ளுதல் நலம்.[7] ‘சாலாபோகம் தெரு’ என்பது ஒன்று. சாலா போகம்
என்பது கோவில் வயல்களைக் குறிப்பதாகும். அயற்றை அடுத்துள்ள தெரு இங்ஙனம்
அழைப்புண்டமை கருதத்தக்கது.
பல்லவ மேடு
இஃது இன்று ‘பாலி மேடு’ எனக் கூறப்படுகிறது. இந்த இடம் பெரிய காஞ்சிக்கும் சிறிய
காஞ்சிக்கும் இடையில் தக்க இடத்தில் அமைந்திருத்தலே - இது பண்டைக் காலத்தில் பல்லவர்
அரண்மனை இருந்த இடமாதல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இம்மேடு காஞ்சி
நகரமட்டத்திற்குமேல் ஏறத்தாழ 30 அடி உயரம் உடையது. இதன்மீது நின்று நாற்புறமும்
காணின், சுற்றிலும் பள்ளமான நிலப்பரப் புண்மையை உணரலாம். மேட்டின்மீது தென்னை
மரங்கள் வளர்ந்துள்ளன. ஒருபால் சிறிய கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் உள்ள
ஆவுடையார் செங்கல்லாலும் சுதையாலும் அமைந்தது. லிங்கம் கல்லால் இயன்றது. அக்கோவிலை
அடுத்து இரண்டு கல் மண்டபங்கள்
காண்கின்றன. ஒரு மண்டபம் மகேந்திரன்தூண்களைக் கொண்டது. அம்மண்டபத்தில் இரண்டு
வரிசைத் தூண்கள் இருக்கின்றன. மண்டபத்தை அடுத்துச் சில அறைகள் காணப்படுகின்றன.
ஒன்று - மிகச்சிறிய அறை அது பூசை அறை போலும்! அதனை அடுத்துள்ள அறை இருண்டது.
அதன் ஒரு மூலையில் சுரங்கம் ஒன்று படிக்கட்டுகளை உடையதாக இருக்கிறதாம். அச் சுரங்கம்
கயிலாசநாதர் கோவிலுக்குச் செல்கிறதாம். மற்றொரு மண்டபம் இடிந்தது. அதில் உள்ள
தூண்கள் ஐவகைப்பட்டவை: பல்வேறு காலத்தவை. மண்டபக்கூரை கருங்கற்களால் ஆனது.
அதன்மீது செங்கல் சுண்ணாம்புத் தளம் இடப்பட்டுள்ளது. இப் பல்லவர் மேடு அகழப்பெறும்
நாளே பல்லவரைப்பற்றிய் நற்குறிப்புகள் கிடைக்கும் நன்னாள் ஆகும். இம்மேடு அரசாங்கத்தார்
பாதுகாவலில் இருப்பது போற்றத்தக்கதாகும்.
திருமேற்றளி என்பது பிள்ளைப்பாளையத்தில் இருக்கின்றது. இக்கோவில் சம்பந்தர், சுந்தரர்
பாடல் பெற்றதாகும். இக்கோவிலில் இருந்த திருமால் சம்பந்தர் பாடல் கேட்டுச் சிவலிங்கமாக
உருமாறினார் என்பது வரலாறு. இக்கோவிலைச் சேர்ந்த மடம் ஒன்று இருந்தது. அதற்குத்
தந்திவர்மன் காலத்து முத்தரையன் ஒருவன் தானம் செய்ததாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[8]
கச்சிநெறிக் காரைக்காடு: இஃது அப்பர். சம்பந்தர் பாடல்கள் பெற்றது. எனவே, இதுவும் கி.பி.
7ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில் ஆகும். இஃது இன்று ஊருக்கு வெளியே இருக்கிறது.
ஆயின் பல்லவர் காலத்தில் ஊருக்குள் இருந்திருத்தல் வேண்டும்.
இங்ஙனமே ஒனகாந்தன்தளி, என்னும் சிறு கோவிலும் ஊருக்குச் சிறிது அப்பால் உள்ளது.
அக் கோவில், கயிலாசநாதர் கோவில், மேற்றளிக் கோவில் இவை மூன்றும் ஏறத்தாழ ஒரே
வரிசையில் உள்ளதை நோக்க, மேற்றளி பல தெருக்கட்கு இடையில் இருத்தலையும், மற்ற
இரண்டும் வயல்கட்கிடையே இருத்தலையும் நோக்கப் பண்டை நகரப் பகுதிகள் சில இன்று
வயல்களாக மாறிவிட்டமை நன்கு விளங்கும். இதனைக் கம்பனவுடையார் காலத்துக்
கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுகளும் மெய்ப்பித்தல் காணலாம்.
முடிவுரை
சுருங்கக்கூறின் காஞ்சிமாநகரம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகச் சிறப்புற்று விளங்கும் மாநகரம்
என்னலாம். இது நகர அமைப்பில் இணையற்று இயங்குவது சமயத்துறையில் சிறப்புற்று
விளங்குவது: வரலாற்றுத்துறையில் வளம்பெற்று இருப்பது. இப்பெருநகரம் பல மரபுகளைச்
சேர்ந்த முடி மன்னர்களைக் கண்டது.[9] பல படையெடுப்புக்களைக் கண்டது. இதனை ஆண்ட
அரசர் மறைந்தனர். இதன்மீது படையெடுத்த பார்மன்னரும் மறைந்தனர். ஆயின் காஞ்சி
இன்றும் நின்று நிலவுகிறது. தனது பண்டை வரலாற்றைச் சிதைவுகள் வாயிலாகவும் கோவில்கள்
வாயிலாகவும் தன்னடியில் மறைப்புண்டுவெளிப்படும் பொருள்கள் வாயிலாகவும் நமக்குப்
புன்முறுவலோடு அறிவித்து நிற்கும் சாட்சி, வரலாற்று உணர்ச்சி உடையாருடைய கண்கட்கும்
உள்ளத்திற்கும் பெரு விருந்தளிப்பதாகும்.
-------------
References
[1]. S.50-110.
[2]. Prof. Geddes’s ‘Report of Towns’ G.O.N.1272, M.dated 16-8-1915.
[3]. திருவாளர். பாலகிருட்டிண முதலியார் அவர்கள்.
[4]. கருக்கி சினையாகுபெயராய்ப் பனையை உணர்த்திற்று ‘பனங்காட்டில் அமர்ந்த காளி’
என்பது பொருள்.
[5]. திருநெல்வேலியில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் இன்றும் ‘பரத்தையர் தெரு’ என்னும்
பெயர் கொண்ட தெரு இருப்பதாகக் திரு.செ.தெ. நாயகம் அவர்கள் கூறினார்கள். இப் பண்டைப்
பெயர் இன்றளவும் நிலைத்திருத்தல் அருமை அன்றோ?
[6]. ‘ஏரி இரண்டும் சிறகா.... பொலிவு’ என வரும் தண்டியலங்கார வெண்பா இங்கு நினைக்கத்தக்கது.
[7]. S.I.I. Vol. II, p.365.
[8]. 89 of 1921.
[9]. “Of all the ancient palces in South India there is none that can rival the ancient Kanchi in
the variety, antiquity and importance of ancient monuments. Here are Jaina and Buddhist,
Saiva and Vaishnava temples of the Pallava, Chola and later times, Which it would be difficult
to imagine in any other place” - K.N.Dikshit. Director-General of Archaeology in Indią, Memoris
of the A.S. of India, No.63 (Preface)
-------------
26. அரசர் பட்டியல்
(1) பல்லவர் காலத்துக் கங்க அரசர் - (கி.பி. 350-907)[1]
Scheme 26_01 here
--------
இம் மரபினர் காலவரையறை திட்டமாக வரையறை செய்யப்படவில்லை. ஆயினும், இங்குள்ள
காலவரையறை ஆராய்ச்சியாளர் கருத்தே யாகும். M.V.K. Rao’s “Gangas ofTalakad’.
-------------
(2) பல்லவர் காலத்துக் கதம்ப அரசர்[2] (கி. பி. 350.570)
scheme 26_02 here
-----
Sircar’s ‘Successors of the Satavahanas’, pp. 232.238-240.
இவனுடன் கதம்பர் காடு ஒழிந்தது ; அவ்விடத்தில் மேலைச் சாளுக்கியர் அரசு ஏற்பட்டது.
இவனும் இவன் மரபினரும் சாளுக்கியரிடம் சிற்றரசராக இருந்து வந்தனர்.
------------
(3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர் (கி. பி. 515-900) [5]
scheme 26_03 here
--------
இது திருவாளர் சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ள ‘பாண்டியர் வரலாறு’ என்னும் நூலிற் கண்டபடி
குறிக்கப்பெற்றது.
இதிற் குறித்துள்ள நெடுஞ்சடையன் பராந்தகனையும் வரகுண மகாராசனையும் ஒருவனாகவும்,
முதல் இராசசிம்மனையும் இரண்டாம் இராசசிம்மனயும் ஒருவனாகவும் கருதுவர் திருவாளர் K. A.
நீலகண்ட சாத்திரியார். —Vide his ‘Pandyan Kingdom,’ p. 41.
--------------
(4) பல்லவர் காலத்து மேலைச் சாளுக்கியர்[8] (கி. பி. 500-750)
scheme 26_04 here
---
Fleet-Bombay Gazetteer.
இவனுடன் முதல் சாளுக்கியப் பேரரசு ஒழித்தது; அதனை இராட்டிரகூடர் கைப்பற்றினர்
இவன் இராட்டிரக்கூடப் பேரரசை ஒழித்து மீண்டும் சாளுக்கியப் பேரரசைக் கி.பி. 973இல் ஏற்படுத்திறன்.
----------------
பல்லவர் வரலாறு முற்றிற்று
This file was last updated on 03 Nov. 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)