pm logo

இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்
முனைவர் ஜே.ஆர். இலட்சுமி

islAmiya ciRRilakkingkaL
by J.R. Lakshmi
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2025.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்
முனைவர் ஜே.ஆர். இலட்சுமி

Source:
இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்
முனைவர் ஜே.ஆர். இலட்சுமி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாம் முதன்மைச் சாலை
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113.
-------------------
Title of the Book : Iculamiyac cirrilakkiyankal
Author : Dr. J.R. Lakshmi, Associate Professor
Department of Tamil, Presidency College Chennai-600 005
General Editor : T. Mahalakshmi, Senior Research Fellow,International Institute of Tamil Studies Tharamani, Chennai-600 113
Publisher & © : International Institute of Tamil Studies II Main Road, C.I.T. Campus,
Chennai-600 113
Publication No. : 613
Language : Tamil
Edition : First
Year of Publication : 2009
No. of Pages > viii + 128
No. of Copies : 1200
Price : Rs.40/- (Rupees Forty Only)
Printed by : United Bind Graphics, Mylapore, Chennai - 600 004.
Subject : Islamic Minor literatures
சீதக்காதி அறக்கட்டளைச் சொற்பொழிவு
(அறக்கட்டளை நிறுவியவர்: சீதக்காதி அறநிறுவனர், அண்ணாசாலை, சென்னை )
வரிசை எண் : 4
அறக்கட்டளைச் சொற்பொழிவாளர் கருத்துகட்கு நிறுவனம் பொறுப்பன்று.
------------

அணிந்துரை


பேரா.முனைவர் கரு. அழ. குணசேகரன்
இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை -600 113

இலக்கியப் படைப்புகள் கால மாற்றங்களுக்கேற்பப் படைக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் 12ஆம் நூற்றாண்டு முதலாகவே தமிழ்ச் சூழலில் படைக்கப் பெற்றுள்ளன. சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறப் பாட்டியல் நூல்கள் முன்வந்தன. பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் நவநீதப்பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் மேலும் பிரபந்த மரபியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி, முத்து வீரியம் என்பவை அவை.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர் தன் சதுரகராதி நூலில் தொண்ணூற்றாறு இலக்கிய வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். தொண்ணூற்றாறு எண்ணிக்கையுள் அகப்படாத வஞ்சி, வளமடல், இன்னிசை இவையன்றிப் பாட்டியல் நூல்களில் அடங்காத தேவபாணி, செந்தமிழ்மாலை, மறக்களவஞ்சி, மெய்க்கீர்த்தி முதலான பல உருப்பெற்றுள்ளன.

இச்சிற்றிலக்கியங்கள் தலைவன், இறைவன் புகழ்பாடுவதான சமயச் சார்புடைய-யனவாக வெளிவந்தன. இந்த வரிசையில் கிறித்துவர்களும், இந்துக்களும், இசுலாமியர்களும் சிற்றிலக்கியங்கள் படைத்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புக்களைப் பெற்றுள்ள இசுலாமியத் தமிழிலக்கியங்களுள் சிற்றிலக்கியங்கள் ஒரு பெரும்பிரிவாகக் காட்சியளிக்கின்றன. எண்ணிக்கை அளவில் மூன்றில் ஒரு பகுதியான இசுலாமியத் தமிழிலக்கியங்கள் சிற்றிலக்கியப் பிரிவினையே சார்ந்துள்ளன. எழுநூற்றுக்கும் மேலாக இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன (ப.14).

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் சுலாமியர் ஒரு நூற்றாண்டுக் காலம் தமிழகத்தின் சில பகுதிகளை ஆட்சிக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களின் சிற்றிலக்கியங்களில்
அரபு, பாரசீகம் எனும் மொழிகள் விரவி இடம்பெற்று யாப்பமைதி கொண்டு மொழிநடை கொண்டிருந்தன.

ஆலீம் புலவர் எழுதிய அதபுமாலை, மச்சரேகைச்சித்தரின் பேரின்ப சதகம், திருப்பாலைக்குடி செய்தக்காதிப் புலவரின் அபூஷகுமா மாலை, செய்யது அனபியா சாகிபு அவர்களின் நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் எனப் பலரும் பலவகைகளில் சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளனர். கோவை, சதகம், அந்தாதி, பதிகம் முதலான பலவகைச் சிற்றிலக்கியங்களை இசுலாமியர்கள் காலந்தோறும் படைத்துத் தமிழுக்கு அணிசெய்துள்ளனர். வரலாற்றுப் புகழ்பெறும் புண்ணிய இடங்களான மக்கா, மதீனா, பாக்தாத் குவாவீர், அஜ்மீர், நாகூர் போன்றவைகளையும் அவ்விடங்களுக்கு உரிய சிறப்புக்கள் குறித்தும் பாட்டுடைத்தலைவன் என (பெல்) நபிகள் நாயகம் அவர்களைத் துதித்துப் படைக்கப்பட்டுள்ளன. றசூல் மாலை எனும் நபியுல்லா மாலை எனும் நூல் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இதனைப் படைத்தவர் காயல் பட்டினத்தைச் சேர்ந்த சாமு நெயினார் லெப்பை ஆவார்.

படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா எனும் இலக்கிய வகைகள் படைக்கப்பட்டன. கிஸ்ஸா என்பது கதை. இசுலாமிய மதக் கதைகளைக் கூறுவது நாமா என்பது. இது நாமே எனும் பாரசீகச் சொல் ஆகும். மசலா என்பது கேள்வி - பதில் முறை கொண்ட இலக்கியம் ஆகும். இசுலாமிய மதக் கருத்துக்களையும் நெறிகளையும் கேள்வி-பதில் எனும் முறையில் விளக்கும் இலக்கிய வகையாகும்.

இசுலாமிய நாயகர் நபிகள் நாயகம் மாபெரும் வீரர். ஹஸ்ரத் அலி, கிமாம்ஹசன், இமாம் ஹுசைன் போன்றோர் எதிரிகளோடு போரிட்டு வென்ற வரலாற்றினை எடுத்து இயம்பும் இலக்கியங்களைப் புலவர்கள் படைத்துள்ளனர். இதுபோன்ற வரலாற்றில் தங்கள் புனைவுகளையும் சேர்த்துப் படைத்துள்ளனர்.

படைப்போர் எனும் ஒருவகை இலக்கியம் மற்றும் இங்குக் குறிப்பிட்டுள்ள கிஸ்ஸா, முனாஜாத்து, மஸ்அலா போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழ் இலக்கிய வளத்துக்கு இசுலாமியரின் சிறந்த பங்களிப்புகளாகும். படைப்போர் இலக்கிய வகையில் உள்ள ஐந்தில், முதல் படைப்போர் இலக்கியத்தில் கடவுள் துதி, அவையடக்கம், நூல் அரங்கேற்றிய காலம், அரங்கேற்றம் நிகழ்ந்த சூழல் முதலான தகவல்கள் உள்ளன. இவை தமிழ் இலக்கிய மரபினை நாட்டியதாக அமையக் காண்கிறோம். இபுனியன் படைப்போர் என்பதில் நபிகளின் வரலாறு இபுனியன் வரலாறு, இபுனியன் இசுலாமிய மார்க்கத்திலிருந்து புறம்பான பாதையில் நிற்பது, அவனது படைப்பலம், நபிகள் அவனிடம் கலீது அவர்களைத் தூது அனுப்புதல், தூதினை இபுனியன் மறுத்தல், போர்ச்சூழல், அதில் அலியார் பங்கு பெறல் முதலான விவரணங்கள் காட்டப்படுகின்றன. இதன்வழி ஐந்து படைப்போர் இலக்கியங்களிலும் உள்ள பொருண்மை மற்றும் உள்ளடக்கம் குறித்து அறியமுடிகிறது என (ப.55) நூலாசிரியர் விளக்குகிறார். தொடர்ந்து ஐந்து படைப்போர் இலக்கியங்களும் முறையே விளக்கப்படுகின்றன. இந்நூலாசிரியர் முனைவர் ஜே.ஆர். இலட்சுமிக்கு எம் பாராட்டுக்கள்.

இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதோடு தம் தனிப்பட்ட அக்கறையையும் காட்டிவரும் நிறுவனத் தலைவரும் தமிழக அரசின் முதல்வருமான மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தமிழுலகம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

தமிழ்ப்பணிகளுக்கு ஆற்றுப்படுத்தி வரும் மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.

நிறுவனச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்துவரும் தமிழ் வளர்ச்சி, அறநிலையம், செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு க. முத்துசாமி இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி.
இச்சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நிறுவனப் பணியாளர்கள், இந்த அறக்கட்டளைச் சொற்பொழிவின் எழுத்துருவையும் மெய்ப்பையும் திருத்திப் பதிப்புச் செய்த முனைவர் ஆ. தசரதன் மற்றும் எழுத்துருவை இந்நிறுவனத்தில் ஒளிவடிவமைப்புச் செய்த திருமதி பி.கௌசல்யா ஆகியோருக்கும் இந்நூலை அழகுற அச்சிட்டுத் தந்த யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் அச்சகத்தாருக்கும் பாராட்டுகள்.

      இயக்குநர்
---------------

முன்னுரை

'இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்' எனும் இந்நூல் உருவம் பெறுவதற்கு வழிவகுத்த பெருந்தகையாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இசுலாமியச் சிற்றிலக்கியம் எனும் தலைப்பைச் சீதக்காதி அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் வழங்கியதும், என் மனத்தில் சொல்லொண்ணாத அச்சமும், கூடவே ஆர்வமும் தோன்றின. அவர்களிடம் மறுப்பு எதுவும் சொல்லாமல், அன்றே வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே பெரம்பூர் ஜாமாலியாவில் உள்ள 'சமரசம்' இசுலாமிய இதழ் வெளியிடும் இடத்திற்குச் சென்று நூல் எழுதவேண்டிய செய்தியைக் கூறினேன்.

அங்கிருந்த அலுவலர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையுடன் 'சமரசம்' பொறுப்பாசிரியர் திரு சிராஜ் அவர்களிடம் அழைத்துச் சென்றனர். அவர் அமைதியாகப் பேசினார். இசுலாமியக் கருத்துகளை விவரித்தார். உதவி பெறுவதற்கு யாரையெல்லாம் அணுக வேண்டுமென முகவரியுடன் தொலைபேசி எண்ணையும் வழங்கினார். குறிப்பாக இசுலாமிய இலக்கிய ஆய்வு இவ்வாறு வெளிக்கொணரப்படுவதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். அவர் அளித்த தகவலின்பேரில் ஒவ்வொருவரையும் தொலைபேசியில் அணுகி, அவர்களது அறிவுரையைப் பெற்றுக் கொண்டேன். இந்நூலினை எழுதுவதற்குப் பயன்பட்ட நூல்களையும் வாங்கிக் கொண்டேன். இதற்குப் பெரிதும் உதவியவர் பேராசிரியர் சாயபு மரைக்காயர் ஆவார். இவ்வாறு தொடர்ந்த பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர் எனது கல்லூரித் தோழி முனைவர் குளோரி பொன்மொழி. இவர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

'இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்' என்ற இந்நூல் எழுத்து வடிவம் பெற்றதும், அதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பேரா. முனைவர் கரு.அழ. குணசேகரன் அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது அவர் மிகுந்த மகிழ்வுடன் கள ஆய்வெல்லாம் மேற்கொண்டீர்களா? எனவும், அந்நூலினைப் பற்றிய செய்திகளையும் ஆர்வமுடன் கேட்டறிந்து உடனே நூல்வடிவம் பெற்றுவிடும் என்று உற்சாகப் படுத்தினார். அதற்கு நன்றி.

ஜே.ஆர். இலட்சுமி
--------------
ஆசிரியர் குறிப்பு

முனைவர் ஜே.ஆர். இலட்சுமி, இனிமை தரும் குற்றாலச் சாரலின் அருகில் உள்ள தென்காசியில் பிறந்து, சோலைகளும், மலைகளும், தேயிலைத் தோட்டங்களும் நிரம்பிய வால்பாறை எஸ்டேட்டில் வளர்ந்தவர். இவரது பெற்றோர் ஜீவரத்தினம், மேரியம்மாள் ஆவர்.

தமிழ் முதுகலைப் படிப்பினை மதுரை லேடி டோக் கல்லூரியிலும், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டப் படிப்புகளைச் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் முடித்தவர். மேலும் வரலாறு, சுற்றுலாவியல், கல்வியியலில் பட்டங்கள் பெற்றவர். கூடுதல் கல்வித் தகுதியாகக் கோவிற் கலைகள், நாட்டுப்புறவியல், இந்தியப் பண்பாடும் வரலாறும் உலக நாகரிகங்களும், கணிப்பொறிப் பயன்பாடு, இதழியலும் தகவல் தொடர்பியலும் எனும் பட்டங்களைப் பெற்றவர்.

1991ஆம் ஆண்டில், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தேர்வு வாரியத்தின் வழியாக (TRB) 1996 முதல் அரசு பணியில் சேர்ந்தார். 2005 வரை சைதாப்பேட்டைக் கல்வியியல் கல்லூரியில் பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாக இப்பொழுது சென்னை, மாநிலக் கல்லூரியில்
இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.
பல ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு, 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வழங்கி உள்ளார். சென்னைப் பல்கலைக் கழக, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக, மாணவ, மாணவியர்களுக்கு நெறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
பல்கலைக் கழக மானியக்குழு நிதிநல்கைத் தொகையில் ஆய்வுத் திட்டங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பவர். நூல் திறனாய்வு, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர்.
-------------
உள்ளே

அணிந்துரை
முன்னுரை
ஆசிரியரைப் பற்றி
1. அறிமுகம்
2. இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்
3. படைப்போர் இலக்கியங்கள்
4. முனாஜாத்து இலக்கியங்கள்
5. கிஸ்ஸா இலக்கியங்கள்
6. மஸ்அலா இலக்கியங்கள்
7. நாமா இலக்கியங்கள்
8. இசுலாமியர் அறிமுகப்படுத்திய பொதுவான சிற்றிலக்கியங்கள்
9. நிறைவுரை
துணைநூற்பட்டியல்
-----------------------

1. அறிமுகம்


மக்களின் வாழ்க்கைமுறை வேறுபாட்டிற்கும், காலச் சூழ்நிலை மாற்றங்களுக்கும், அதன் பின்புலங்களுக்கும் ஏற்பவே ஒவ்வொரு மொழியிலும் உள்ள இலக்கியங்கள் மாற்றங்களைப் பெறுகின்றன. இலக்கியங்கள் எந்தவொரு காலக்கட்டத்தில் தோன்றினாலும் அவற்றினுடைய அடித்தளமாக அமைவது அவை தோன்றிய காலத்தின் சமுதாய வாழ்க்கை முறையாகவே இருக்கும். சமுதாயமும், அச்சமுதாயத்தில் வாழ்வோரின் மனப்போக்கும் இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன.

இவ்வகையில் தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்பவே தமிழிலக்கியம் தன்னகத்தே பல்வேறான வளர்ச்சி நிலைகளைக் கொண்டிருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களுள் பல்வேறு மாற்றங்களைக் காலந்தோறும் தமிழிலக்கியங்கள் பெற்று வந்துள்ளன. அவற்றுள் தனிநிலைப் பாடல்களுக்கும், காப்பியங்களுக்கும் இடைப்பட்ட நிலையில் தோன்றிய ஓர் இலக்கியப் பிரிவே சிற்றிலக்கியங்கள்.

சிற்றிலக்கியம் - பிரபந்தம்

சிறிய இலக்கியம் எனப் பொருள்படும் சிற்றிலக்கியம் எனும் இச்சொல்லாட்சி மிகவும் அண்மைக் காலத்திலே ஏற்பட்டது. இன்று சிற்றிலக்கியம் எனும் சொல்லால் குறிப்பிடப்பெறும் இலக்கிய வகைகளை ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகப் பிரபந்தம் எனும் வடமொழிச் சொல்லால் குறித்தனர். பிரபந்தம் என்ற சொல்லிற்கு நன்றாகக் கட்டுதல் என்று பொருள்.

பிரபந்தம் எனும் சொல்லுக்கு, 'நன்கு கட்டப்பட்ட இலக்கிய வடிவம்' எனும் பொருள் வழங்குவதால் இலக்கியம் எனும் சொல்லுக்கு மாற்றாகவே இச்சொல்லை முதலில் பயன்படுத்தினர் எனலாம். இன்னும் ஆழ்ந்து நோக்கினால் பிரபந்தம் எனும் வடசொல், தமிழில் தொகை, திரட்டு எனும் சொற்கள் தரும் பொருளிலேயே முதன்முதலில் ஆளப்பட்டது என்பது புலனாகும்.

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாடல்களைத் தொகுத்து ஒரே திரட்டாக வழங்கிய நாதமுனியடிகள் அத் திரட்டிற்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பெயரிட்டார். பிரபந்தம் எனும் வடசொல் முதன் முதலாக இவராலேயே தமிழில் வழங்கப்பட்டுள்ளது. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்பது நாலாயிரம் பாடல்களால் ஆன இனிய நூல் எனப்பொருள் படுதலால் இங்குப் பிரபந்தம் எனும் சொல், நூல் அல்லது இலக்கியம் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளமை புலனாகும். அவ்வாறே நாலாயிரம் பாடல்களின் தொகுப்பாக இந்நூல் இருப்பதால் பிரபந்தம் எனும் சொல், திரட்டு அல்லது தொகை எனும் பொருளையும் தரும்.

தொகை நூல்களான சங்க இலக்கியங்களைப் பேரிலக்கியம் என வழங்கும் வழக்கு உண்டென்பதால், பிறிதொரு தொகை நூலான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பேரிலக்கியம் எனக் கொள்ள இடம் உள்ளது. ஆகவே அந்நூலின் தொகுப்பாசிரியர் பிரபந்தம் என்ற சொல்லைப் பேரிலக்கியம் எனும் பொருள்படவே கையாண்டார் எனவும் கருதலாம்.

ஆகவே நாதமுனியடிகளுக்குப் பின்னர், பிரபந்தம் என்ற சொல்லாட்சி தமிழில் பெருகிற்று. அதனால் இலக்கியம் எனும் தமிழ்ச்சொல்லின் இடத்தைப் பிரபந்தம் எனும் வடசொல் தக்க வைத்துக் கொண்டது. பிரபந்தம் எனும் சொல், பேரிலக்கியம், இலக்கியம் என்றும் பொருள் தருமாறு தமிழில் வழங்கி வருவதைக் கண்ட பிற்காலத்தவர் தூது, உலா, கலம்பகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்களைச் சில்லறைப் பிரபந்தங்கள் எனவும் வழங்கினர்.

சில்லறை எனும் சொல் சிலவாக அறுக்கப்பட்டது எனப் பொருள் வழங்குவதால் சிறிய இலக்கியம் என்பதை உணர்த்தச் 'சில்லறைப் பிரபந்தம்' என வழங்கினர். எனவே பிரபந்தம் எனும் சொல் இன்று கருதும் சிற்றிலக்கியம் என்ற பொருளைத் தரவில்லை என்பதான கருத்தும் உள்ளது. பாட்டியல் நூல்கள் கூட, பிரபந்தம் எனும் சொல்லை இலக்கியம் எனும் பொருளிலேயே ஆண்டுள்ளன. எனவேதான் அப்பாட்டியல் நூல்கள் காப்பியம், புராணம் ஆகிய இலக்கிய வகைகளையும் பிரபந்தங்கள் என்றே குறிப்பிட்டுள்ளன. எனவே இலக்கியங்களை அவற்றின் அளவு கருதி வகைமை செய்தோர், இன்று சிற்றிலக்கியங்கள் எனச் சுட்டப் பெறும் இலக்கிய வடிவங்களைச் சில்லறைப் பிரபந்தங்கள் என்றே வழங்கினர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் தனித் தமிழ் இயக்கம் எழுந்தபோது சில்லறைப் பிரபந்தம் என்ற பெயருக்குப் பதிலாகத் தனித்தமிழ்ச் சொல்லான சிற்றிலக்கியம் எனும் பெயர் வழக்கிற்கு வந்தது.

சிறப்பாகப் பேசப்படும் சிற்றிலக்கியங்களுக்குப் பாட்டியல் கூறும் இலக்கணங்கள் பொருந்தி அமைகின்றன. சிற்றிலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள் நான்கு. அவை:
1. பன்னிரு பாட்டியல்
2. வெண்பாப் பாட்டியல்
3. நவநீதப் பாட்டியல்
4. சிதம்பரப் பாட்டியல்
இவை தவிரப் பாட்டியல் என்று பெயர் பெறாது சிற்றிலக்கிய இலக்கணம் கூறும் நூல்கள்,
1. பிரபந்த மரபியல்
2. இலக்கண விளக்கம்
3. தொன்னூல் விளக்கம்
4. சதுரகராதி (3,4 வீரமாமுனிவர் இயற்றியது)
5. முத்துவீரியம்
6. பிரபந்தத் தீபிகை
7. சுவாமி நாதம்
என இவை காலவரிசையில் அமைந்துள்ளன. இந்நூல்களே சிற்றிலக்கிய இலக்கணங்களைச் சுட்டுகின்றன.

சிற்றிலக்கியங்களின் பாடுபொருளாகச் சிற்றின்பமும், பேரின்பமும் அடங்கியுள்ளன. பொதுவாக இறைவன், அரசன், வள்ளல், ஆசான் ஆகியோரின் சிறப்பினை எடுத்துரைத்தலே சிற்றிலக்கியங்களின் பணி எனலாம். ஆனாலும் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் மிகுதியான கற்பனையைக் கொண்டு அமைந்தவை. இந் நூல்கள் இலக்கண வரையறைக்கு உட்பட்டுத் தான் அமைந்துள்ளன என்றும் கூற இயலாது.

பொதுவாக இலக்கியத்திற்கு இலக்கணம் இயம்புவோர், அறம் பொருள் இன்பம் வீட்டைதல் நூற்பயனே' (பவணந்தி முனிவர், நன்னூல், பொதுப்பாயிரம், நூற்பா-10) என்பர். இவ்விலக்கணம் முழுமையும் அமையப் பெற்ற இலக்கியங்கள் பேரிலக்கியம் எனப்படும். இவற்றில் ஒன்றோ பலவோ குறைந்துவரின் அவை 'சிற்றிலக்கியங்கள்' எனப்படும்.

தமிழ்ப் பேரகராதி, 'பிரபந்தம்' என்பதற்குத் தொண்ணூற் றாறு வகைப்பட்ட நூல்; இசையுரு; கட்டுரை என்று பொருள் கூறுகின்றது (Tamil Lexicon Vol. V. pp.2680-81). 'பிரபந்தம் எனும் வடசொல் தமிழில் நூல் என்று பொருள்படும்' எனக் களஞ்சியம் விளக்குகின்றது (கலைக் களஞ்சியம் ஏழாம் தொகுதி, ப.287).

பிரபந்தம் என்பதற்கு மு. அருணாசலம் தமது 'தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு ஓர் அறிமுகம்' என்ற நூலில் அளித்துள்ள விளக்கம் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது, அவர் கூறுகின்றார்:

பிரபந்தம் தெய்வத்தின்மீதோ அல்லது வள்ளல் மீதோ பாடப்பெறும் ஒரு சிற்றிலக்கியம்; அதன் பொருள் அகமாகவும் இருக்கலாம்; புறமாகவும் இருக்கலாம்; அதன் யாப்பு வடிவம் ஆசிரியம் தொடங்கி விருத்தம், கலிவெண்பா வரை எந்த வகையினதாகவும் இருக்கலாம். பாடல் எண்ணிக்கைக்கும் வரையறை இல்லை. ஆயினும் சில இலக்கியங்கள், பாடல் எண்ணிக்கையை 5, 8, 20, 40, 70, 400 என்று வரையறுத்துக் கூறுகின்றன.
என்கின்றார் (M.Arunachalam, An Introduction to the History of Tamil Literature, p.238).

ஆகவே இதைச் சிற்றிலக்கியங்களுக்குரிய இலக்கணமாகக் கொள்ளலாம்.

சிற்றிலக்கிய வரையறை

சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் எனும் கருத்து இன்று மிகப் பரவலாக வழங்கி வருகிறது. பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் என்ற கருத்து பதினேழாம் நூற்றாண்டிலிருந்து வழங்கி வருவதை இலக்கியச் சான்றுகள் மூலம் அறியமுடிகிறது.

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான படிக்காசுப் புலவர் பாடிய 'சிவந்தெழுந்த பல்லவன் உலா' எனும் நூலில் 'தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான்’ எனும் தொடர், பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறாகக் கருதும் வழக்கினைக் காட்டுகிறது. 1682 முதல் 1723 வரையிலான இலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் எனும் கோட்பாடு தமிழ் இலக்கிய உலகில் தோன்றிற்று எனலாம்.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான வீரமாமுனிவர் தாம் எழுதி வெளியிட்ட சதுரகராதியில் தொண்ணூற்றாறு இலக்கிய வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
ஆனால் இவ்வகராதிக்கு முன்னர் இவர் எழுதிய தொன்னூல் விளக்கம் எனும் நூல் தொண்ணூற்று மூன்று இலக்கிய வகைகளை மட்டுமே சுட்டுகிறது. இம்முரண்-பாட்டினை நோக்கும்போது இவர் காலத்தில் பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் என்ற கருத்து இருந்துள்ளது. ஆனால் அவ்விலக்கிய வகைகள் இவையே என வகுத்துக் காட்டும் வழக்கு இல்லாதிருந்தது என அறியலாம். இவரே தொண்ணூற்றாறு இலக்கிய வகைகளை எடுத்துக்காட்ட முயன்று தாம் எழுதிய சதுரகராதியில் தொண்ணூற்றாறு இலக்கிய வகைகளின் பெயரினை ஒருவாறு எடுத்துக் காட்டினார் எனலாம்.

இவருக்குப் பின்னர் எழுந்த குடுமியான்மலைச் சுப்பிரமணிய பாரதியாரின் பொருட்தொகை நிகண்டு, வீரமாமுனிவர் சதுரகராதியில் காட்டிய இலக்கிய வகைகளை அப்படியே எடுத்து மொழிந்து பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் என்ற கருத்தினை வலிமைபெறச் செய்தது. பதினெட்டாம் நூற் றாண்டில் எழுந்த பிரபந்த மரபியல் எனும் பாட்டியல் நூல்,

வானவர் ஏத்தும் மறையோர் முதலிய
மக்களின் னோர்க்குத் தக்க தன்மையிற்
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
தொண்ணூற் றாறெனும் தொகையதான
முற்பக ரியல்பைமுன்னுறப் பாடும்
பிரபந்த மரபியலது பிரபந்த மரபியலே

எனும் நூற்பாவில் பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் என்ற கருத்தினை எடுத்துக் காட்டியுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த பிரபந்தத் தீபிகை எனும் மற்றொரு பாட்டியல் நூலும் பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் என்பதை

பதினாறை யாறிற் பெருக்குப் பிரபந்தாதி
பலவகை எடுத்துரைக்கின்

எனும் தொடரால் குறிப்பிட்டு இக்கருத்தினை வலியுறுத்துகிறது. இவ்வாறு படிக்காசுப் புலவரின் காலந் தொடங்கி மிதமாக வளர்ந்து வந்த 'பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும்' எனும் கோட்பாடு, இருபதாம் நூற்றாண்டில் சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் என்ற புதிய கோட்பாடு எழ அடித்தளமாயிற்று. முன்னரே குறிப்பிட்டவாறு பிரபந்தங்கள் என்ற சொல் பொதுவாக இலக்கியங்கள் என்ற பொருளிலேயே வழங்கப் பெற்று வந்திருப்பினும், பிரபந்தங்கள் எனும் சொல் சிற்றிலக்கியம் எனும் பொருளைத் தரும் எனப் பிற்காலத்தவரால் பிழைபட உணரப்பட்டமையால் பிரபந்தங்கள் (இலக்கியங்கள்) தொண்ணூற்றாறு வகைப்படும் எனப் பாட்டியலார் முதலானோர் கருதினர். அதுவே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும் எனக் கருத இடம் தந்தது. உண்மையில் இலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்ற கோட்பாடு எவ்வகையிலும் பொருந்தாது.

இலக்கிய வகைகள் காலந்தோறும் புதிது புதிதாக எண்ணற்ற அளவில் எழுந்துள்ளமையை அறிஞர் பலரும் நன்கு எடுத்துக் காட்டியுள்ளனர். எனவே தொண்ணூற்றாறு எனும் இவ்வரையறை பற்றிய கோட்பாடு பொதுவாக வழங்கி வரும் ஒரு வழக்கே அன்றிப் பொருள் புணர்ந்த கோட்பாடன்று என்பதை உணர வேண்டும்.

சிற்றிலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழிலக்கிய வரலாற்றின் இடைக்காலமே சிற்றிலக்கியங்களின் பொற்காலமாகக் கருதப்படுகின்றது. தமிழக வரலாற்றின் சமய எழுச்சிக் காலத்தில் அதுவும் குறிப்பாகப் பல்லவ மன்னர்கள் காலத்திலேயே பேரிலக்கியங்களிலிருந்து மாறுபட்ட இலக்கிய அமைப்புகள் தமிழில் தோன்றிப் பெருகலாயின. சங்க இலக்கியம், காப்பிய இலக்கியங்களுக்குப் பின்னர், தமிழிலக்கிய உலகில் ஏற்பட்ட இருண்டகாலப் பகுதியானது, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே சிற்றிலக்கியங்களின் தோற்றத்தால் ஒளிமயமானது.

19ஆம் நூற்றாண்டு முதல் இன்றையநிலை வரை பல புதிய சிற்றிலக்கியங்கள் தோன்றியவாறு இருப்பதைக் காணலாம். தொண்ணூற்றாறு என்னும் எண்ணிகையுள் அடங்காத வஞ்சி, வளமடல், பெயர் இன்னிசை போன்ற இலக்கியங்களும் சிற்றிலக்கிய அமைப்பினையே கொண்டிருப்பதனால், இப்பிரிவுகளையும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையுள் அடக்க வேண்டியுள்ளது. இதுமட்டுமின்றி, பாட்டியல் நூல்களில் அடங்காத தேவபாணி, யானைத் தொழில், செந்தமிழ் மாலை, மறக்களவஞ்சி, மெய்க்கீர்த்தி முதலான பல இலக்கியப் பிரிவுகளுக்கும் பாட்டியல் நூல்களில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஆகவே அக்காலத்திலேயே தொண்ணூற்றாறு என்ற எண் வரையறைக்கும் அடங்காத பல சிற்றிலக்கியங்கள் இருந்திருக்கின்றன.

இன்றைய நிலையில் பல சிற்றிலக்கியப் பிரிவுகள் காணப்படினும் இவை ஒவ்வொன்றின் தோற்றத்திற்கும் வெவ்வேறான காரணங்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியரின் நூற்பாக்களான,

குழவி மருங்கினும் கிளவதாகும்
(தொல்: பொருள்: புறத்திணையியல் : 82)
ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
(தொல்: பொருள்: புறத்திணையியல் : 33)

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிர்ச் சொன்ன பக்கமும்
(தொல்: பொருள்: 1034)

என்பன முறையே பிள்ளைத்தமிழ், உலா, ஆற்றுப்படை எனும் சிற்றிலக்கியப் பிரிவுகளாகப் பிற்காலத்தில் உருப்பெற்றன என்ற கருத்து நிலவுகின்றது. மேலும் தொல்காப்பியர் புறப்பொருள் துறைகளாகக் குறிப்பிடும் களவஞ்சி, காஞ்சிமாலை,
ச்சிமாலை, புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, இயன்மொழி போன்றன, பிற்காலத்தில் அவ்வப் பெயர்களிலேயே சிற்றிலக்கியங்களாகத் திகழ்வதைக் காணமுடிகின்றது. எனவே சிற்றிலக்கியங்களின் பிரிவுகள் தோன்றிப் பெருகத் தொல்காப்பியம் இருநிலைகளில் காரணமாக அமைந்திருக்கின்றது.

1. தொல்காப்பியர் கூறியிருக்கும் பொருள் விளக்கங்கள் பிற்காலத்தில் வேறு பெயர் பெற்றுச் சிற்றிலக்கியப் பிரிவுகளாகத் திகழுதல்.
இந்நிலைக்குச் சான்றாக ஆற்றுப்படை, உலா முதலான சிற்றிலக்கியங்களைக் கூறலாம்.

2. தொல்காப்பியர் கூறியுள்ள அகத்திணை, புறத்திணைத் துறைகள் அதே பொருள் விளக்கங்களுடனும், அதே பெயருடனும் தனித்தனிச் சிற்றிலக்கியங்களாக வளர்ச்சி பெற்றிருத்தல்.

இதற்கு எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியர் கூறும் பாடாண்துறைகளான இயன்மொழி வாழ்த்து, வாயுறை வாழ்த்து முதலானவை பிற்காலத்து அதே பெயரில் தனித்ததொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்றிருத்தலைக் கூறலாம்.

எனவே சிற்றிலக்கியப் பிரிவுகளின் பெருக்கத்திற்குத் தொல்காப்பியம் ஓர் அடித்தளமாகவே அமைந்துள்ளது.

தொல்காப்பியம் சிற்றிலக்கியங்களின் பெருக்கத்திற்குக் காரணமாவது போல் சங்க இலக்கியங்கள், வேறுபிற இலக்கியப் பிரிவுகளில் இடம்பெற்றிருக்கும் சிறிய பகுதிகள், பொருள் விளக்கங்கள் முதலானவையும் பிற்காலத்தில் தனித்த சிற்றிலக்கியங்களாக விளங்குவதைக் காணமுடிகின்றது. இத்தகைய நிலைகளை அடித்தளமாகக் கொண்டு தோன்றிய சிற்றிலக்கியங்களுக்குச் சான்றாகப் பாதாதிகேசம், குறத்திப்பாட்டு
முதலானவற்றைக் கூறலாம். சங்க இலக்கியங்களின் கருப்பொருளாக விளங்கிய அகம், புறம் ஆகிய கருத்துகளின் கலவைகளும் கலம்பகம், கலம்பக மாலை சிற்றிலக்கியங்களாக உருவம் பெற்றன. இவையன்றிப் பக்தி எழுச்சிக் காலத்தில் இறைவனைத் தலைவனாகக் கொண்டு பாடல்களின் எண்ணிக்கை வேறுபாட்டிற்-கேற்பப் பல்வேறு பெயர் பெற்ற சிற்றிலக்கியங்களும் தோன்றலாயின. சான்றாகக் கலித்துறையால் முப்பது பாடல்கள் பாடுவது மும்மணிக் கோவை எனும் சிற்றிலக்கியமாகவும், வெண்பாவில் முப்பது பாடல்கள் பாடுவது தண்டகமாலை எனவும் வழங்கப்படுதலைக் கூறலாம். இதுபோல் இடம்பெறும் பாடல் எண்ணிக்கையின் அடிப்படையிலே சதகம்போன்ற சிற்றிலக்கியங்களும் உருவாகின.

சிற்றிலக்கியங்களாக இன்றைய நிலையில் உள்ள அனைத்தும் தனித்தனிக் கருப்-பொருளையும், கருத்தமைப்புகளையும் உடையனவெனக் கூறவியலாது. சான்றாகக் கலம்பக இலக்கியத்துள் உலா, தூது, குறம் போன்றவை உறுப்புகளாக இடம் பெறுகின்றன. பவனி வரும் தலைவனைப் புகழ்ந்து பாடுதல் உலா; தலைவனைப் பிரிந்து தனித்து வாடும் தலைவி தன் இயலாமையை எடுத்துரைக்கப் பறவை போன்றவற்றைத் தலைவனிடம் தூதாக அனுப்புதல் தூது; தலைவனைப் பிரிந்து துயருறும் தலைவியின் குறிப்பறிந்து அவளை வந்தடையும் தலைவன் குறித்துக் குறத்தி, குறி கூறுவதாக அமைவது குறம் என்பதின் பொருளமைதியாகும்.

இவ்வாறு அமைந்த ஒவ்வொன்றுமே தனித்த சிற்றிலக்கியங்களாக இடம் பெற்றிருத்தலைக் காணலாம். எனவே காலப் பின்புலத்திற்கு ஏற்பவும் ஒவ்வொரு கருப்பொருள்களும் பல்வேறு தனித்த சிற்றிலக்கியங்களாகத் திகழ்கின்றன. எனவே, இன்றைய நிலையில் சிற்றிலக்கியப் பிரிவுகளின் வளர்ச்சிக்கு இங்குக் குறிப்பிட்ட பல்வேறு நிலைகள் காரணமாக அமைகின்றன.

சமய நோக்கில் சிற்றிலக்கிய வளர்ச்சி

தமிழக வரலாற்றில் கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளின் தொடக்கம் முதல் சமயம் சார்ந்த இலக்கியங்கள் தோன்றி வளரத் தொடங்கின. இக்காலத்திற்கு முன்னரே பௌத்த, சமண இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன. தமிழகத்தைப் பல்லவர்கள், சோழர்கள் ஆளத் தொடங்கிய சூழ்நிலையில் சைவ, வைணவ சமயங்கள் கோயில்களோடு சேர்ந்து வளர்ந்தன. பல்லவ, சோழ மன்னர்கள் கோயில் கலைகளிலும், அவை சார்ந்த இலக்கியங்களிலும் தனிக்கவனம் செலுத்தியதன் விளைவாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் கோயில் கோயிலாகச் சென்று பாசுரங்களைப் பாடியருளினர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் பிற நாயன்மார்கள் திருமுறைகளையும், பன்னிரு ஆழ்வார்கள் திவ்வியப் பிரபந்தங்களையும் படைத்தளித்தனர். மாணிக்கவாசகர் பாடிய திருக்கோத் தும்பி, திருத்தெள்ளேனம் முதலியன சிற்றிலக்கியத் தோற்றத்திற்கு அடிகோலின. பெண் நாயன்மார்களுள் காரைக்கால் அம்மையார் அந்தாதி இலக்கியத்தின் தோற்றத்திற்குக் காரணமாக விளங்கினார்.

நாயக்கர் காலம் முதல் சமயம் சார்ந்த சிற்றிலக்கியங்களின் தோற்றம் விரைவு நிலையை அடைந்தது. இதன் பயனாகச் சைவ, வைணவ சமயங்களன்றி மேலை நாட்டிலிருந்து இந்தியா வந்த சமயங்களான கிறித்தவம், இசுலாம் முதலானவை தமிழ் மொழியோடு உறவு கொண்டன. அந்நிலையில் அச்சமயப் புலவர்கள் பல்வேறு சிற்றிலக்கியங்களைப் படைத்தனர்.

சைவ சமயச் சிற்றிலக்கியங்கள்

பல்லவர்கள் தமிழகத்தை ஆண்டபோது நிலவி வந்த சமண, பெளத்த சமயங்கள் செல்வாக்கினை இழக்கத் தொடங்கின. அக்காலத்தில் நாயன்மார்கள் தோன்றிச் சைவ சமய வளர்ச்சியை முன்வைத்து இலக்கியங்களைப் படைத்தனர். பல்லவ மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த சோழ மன்னர்களும் பக்தி ஈடுபாட்டால் பல்வேறு கோயில்களை எழுப்பினர்.

சங்க காலத்தில் தோற்றம் பெற்ற திருமுருகாற்றுப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நூல் நக்கீரரால் இயற்றப்பட்டதாகும். நாயன்மார்களின் பாடல் தொகுப்புகள் திருமுறைகள் என்று வழங்கப்படுகின்றன. ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்ற சேந்தனார் திருப்பல்லாண்டின் நான்கு பதிகங்களும், ஒன்பதாம் திருமுறையில் அமைந்த திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் சிற்றிலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவை.
பதினோராம் திருமுறையில் இடம்பெறும் அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை எனும் இலக்கியங்களைக் காரைக்கால் அம்மையார் இயற்றினார்.

இவ்வாறாகப் பதிகம், கோவை, மாலை, அந்தாதி, எழுகூற்றிருக்கை, ஒருபா ஒருபஃது, ஆற்றுப்படை எனும் வடிவ அமைப்புகளில் பக்தியைப் பாடுபொருளாகக் கொண்டு சிற்றிலக்கிய வகைகளில் நூல்களைப் படைத்தனர். நாயன்மார்கள், பக்தி இயக்கக் காலத்தில் சிற்றிலக்கிய வளர்ச்சியில் இவ்வாறு பங்காற்றியவர்களாக விளங்குகின்றனர். ஆகவே வடிவ அமைப்பிலும் பாடுபொருள் சிறப்பிலும் பதினோராம் திருமுறை இலக்கியங்கள் பிற்காலச் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளன.

வைணவ சமயச் சிற்றிலக்கியங்கள்

கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் பல்லவர் வரலாற்றையும், சோழர் வரலாற்றையும் உள்ளடக்கிய பக்தி இலக்கியக் காலமாகும். பக்தியை இலக்கியமாக வளர்த்த பெருமை வைணவ சமயத்தில் சிறந்து விளங்கிய ஆழ்வார்களுக்கு உண்டு. ஆழ்வார்களால் வைணவ சமயம் செழித்த காலத்தில் இலக்கியங்கள் பல்கிப் பெருகின. இக்காலத்தில் ஆழ்வார்கள் பாடிய வைணவ இலக்கியங்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என வழங்கப்படுகிறது.

பல்லாண்டு, மடல், மாலை, பாவை, பள்ளி எழுச்சி என்பன பொருள் அடிப்படையில் அமைவனவாகும். அவற்றுள், இயன் மொழி, செவியறிவுறூஉத் துறையில் அமையும் வாழ்த்துகள் இறைவனைப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்தும் முறையில் அமையும். இவ்வகையில் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு முதல் இலக்கியமாகும். தொல்காப்பியத்தில் கூறப்படும் கண்படை நிலை, துயிலெடை நிலை பற்றிய செய்திகள் பள்ளி யெழுச்சி வகை இலக்கியங்களின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன. தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருப்பள்ளி எழுச்சி வைணவ இலக்கிய வகைகளில் எழுந்த முதல் பள்ளி எழுச்சி இலக்கியமாகும்.

அகப்பொருள் துறைகளில் ஒன்று மடல். பக்தி இலக்கியங்களுள் மடல் தனி வகையாக மலர்ந்துள்ளது. அதற்குத் திருமங்கையாழ்வாரின் 'சிறிய திருமடல்' 'பெரிய திருமடல் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டலாம்.

ஒரே வகையான பல்வகைச் செய்யுள் அல்லது பாவகைகளால் தொடுக்கப்படுவது மாலை இலக்கியமாகும். வைணவ இலக்கியங்களில் மாலை இலக்கியங்கள் நிறைவாகக் காணப்படுகின்றன. தொண்டரடிப் பொடியாழ்வாரின் 'திருவரங்கத்து மாலை', 'சடகோபன் சந்திரகலாமாலை' என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கன.

எழுகூற்றிருக்கை என்பது எண் அலங்கார அடிப்படையில் பெயர் பெற்று விளங்கும் இலக்கிய வகை. பக்தி இலக்கியக் காலத்தில் வைணவ இலக்கிய வகைகளில் ஒன்றாகத் திருமங்கை ஆழ்வார் எழுகூற்றிருக்கை எனும் நூலைப் படைத்துள்ளார். ஆசிரியப்பாவால் ஒன்று முதல் ஏழு இறுதியாக மிகுந்தும் குறைந்தும் எண் அலங்கார முறையில் பாடப்படும் சிறப்பினை உடையது. திருமங்கை ஆழ்வாரின் திருவெழு கூற்றிருக்கை 46 அடிகளைக் கொண்ட நிலைமண்டில ஆசிரியப்பாவால் இயற்றப் பட்டதாகும்.

அந்தம் ஆதியாகத் தொடுப்பது அந்தாதி. அவ்வகையில் நம்மாழ்வாரின், 'பெரிய திருவந்தாதி', 'திருவாசிரியம்' என்பதும், மதுரகவியாழ்வாரின் 'கண்ணிநுண் சிறுத்தாம்பு', 'சடகோபரந்தாதி' என்பதும் குறிப்பிடத்தக்கன.

பிள்ளைத் தமிழ் என்பது, குழந்தையாக எண்ணிப்பாடும் பாடலாகும். பெரியாழ்வார், கண்ணனைக் குழந்தையாகப் பாடியமையும், குலசேகர ஆழ்வார் திருக்கண்ணபுர இராகவனைக் குழந்தையாகப் பாடியமையும் குறிப்பிடத்தக்கன.

இவ்வாறாக இலக்கியங்கள் தோன்றிச் சமய வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் துணைபுரிந்தன.

கிறித்துவ சமயச் சிற்றிலக்கியங்கள்

ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் கிறித்துவப் பாதிரியார் கிறித்துவ சமயத்தை இந்தியாவில் பரப்பும் நோக்குடன் செயல்பட்டனர். தமிழ் மக்களின் மனத்தில் இடம்பிடிக்கும் வகையில் தமிழ்மொழியைக் கற்றனர். தமிழிலே இலக்கியங்கள் படைத்தும் சமயத்தைப் பரப்பியும் வந்தனர். கிறித்துவ சமயத்தைப் பரப்பும் நோக்குடன் செயல்பட்டிருந்தாலும் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய இலக்கிய, இலக்கண, அகராதிப் பணிகள் குறிப்பிடத்தக்கன. சீகன் பால்கு, வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல் முதலானோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். கிறித்துவர்களான வேதநாயகம் பிள்ளை, எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை முதலானோரும் இவ்வகையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றினர்.

மேலும், மாலை, பாவை, அம்மானை, மகத்துவம், பிரளயம், அவதாரம் முதலான சிற்றிலக்கிய வகைகளில் கிறித்துவப் புலவர்கள் நூல்களைப் படைத்தளித்தனர்.

வேதநாயகம் சாத்திரியார் குறவஞ்சி, கும்மி, ஏற்றப்பாட்டு, மாலை, பிரவேசம் எனும் இம் வகைகளில் சிறப்புமிகு சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். அவற்றுள் 'ஞானக்கும்மி`, 'ஞான ஏற்றப்பாட்டு', 'பராபரமாலை செபமாலை', 'சென்னைப் பட்டினப் பிரவேசம்', 'ஞான உலா', 'வண்ண சமுத்திரம், 'அறிவானந்தம்' முதலிய இலக்கியங்கள் இவரது புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன. இவரது இலக்கியப் படைப்புகளுள் 'பெத்லகேம் குறவஞ்சி' குறிப்பிடத்தக்கதாகும். இவர் சரபோஜி மன்னன் அவைக்களப் புலவராக வீற்றிருந்த பெருமைக்குரியவர்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மாலை, அந்தாதி, பதிகம், கீர்த்தனை எனும் வகைகளில் இலக்கியங்களைப் படைத்தளித்து புகழ் பெற்றார். 'தேவதோத்திரமாலை', 'பெண்மதி-மாலை', தேவமாதா அந்தாதி', 'சத்திய வேத கீர்த்தனை', 'பெரிய நாயகி அம்மாள் பதிகம்', 'சர்வசமய சமரசக் கீர்த்தனை' எனும் வகையில் அவரது இலக்கியங்கள் புகழ்பெற்றன.

கிறித்துவக் கம்பர் எனச் சிறப்பிக்கப்படும் எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை குறிப்பிடத்தக்கவர். இவர் மனோகரம், பிரபந்தம், நிர்ணயம் எனும் வகைகளில் 'இரட்சண்ய மனோகரம்', இரட்சண்ய சமய நிர்ணயம்', 'இரட்சண்யக் குறள்', என்பனவற்றைப் படைத்தார்.

அந்தோணிக்குட்டி அண்ணாவியார் 'ஆனந்த மஞ்சரி', 'ஆசைப்பத்து', 'பாலதியானம்', 'பேரின்பக் காதல்', 'அருள் வாசகம்' எனும் சிற்றிலக்கிய வகைகளை உள்ளடக்கிய 'கிறித்துவ சங்கீதம்' எனும் திரட்டைப் படைத்தளித்தார்.

வீரமாமுனிவர் 'அடைக்கலமாலை', 'திருக்காவலூர்க் கலம்பகம்', 'கித்தேரியம்மாள் அம்மானை' எனும் இலக்கியங்களைப் படைத்துச் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றினார்.

இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளைப் பெற்றுள்ள இசுலாமியத் தமிழிலக்கியங்களுள் சிற்றிலக்கியங்கள் ஒரு பெரும்பிரிவாகக் காட்சியளிக்கின்றன. எண்ணிக்கை அளவில் மூன்றில் ஒரு பகுதியான இசுலாமியத் தமிழிலக்கியங்கள் சிற்றிலக்கியப் பிரிவினையே சார்ந்துள்ளன. இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றின் தொடக்க காலம் முதல் இன்றைய காலம் வரையில் எழுநூறுக்கும் மேலாக இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. இவை பெரும்பாலும் கோவை, சதகம், கலம்பகம், அந்தாதி, மாலை, பிள்ளைத் தமிழ், தூது, பதிகம், இன்னிசை, குறவஞ்சி, தசரத்தினம், அலங்காரம், சரமகவி, பல்சந்தமாலை, வாயுரை வாழ்த்து, திருமண வாழ்த்து, ஒருபா ஒருபஃது, பஃறொடை, ஆற்றுப்படை, பள்ளு, சதுர்ப்பிரபந்தம், மஞ்சரி முதலான தமிழ்ச் சிற்றிலக்கியப் பிரிவுகளையே சார்ந்துள்ளன. இப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் ஒன்று முதல் இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளைக் கொண்ட இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களைக் காணலாம்.

இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய வடிவங்களு எண்ணிக்கை அளவில் மிக அதிகமான நூல்களைப் பெற்றிருப்பது மாலை எனும் சிற்றிலக்கிய வடிவம். மாலை இலக்கிய வடிவத்தில் அமைந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட லக்கியங்களைத் தன்னகத்தே பெற்றுள்ளது. எனவே சுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியப் பிரிவுகளுள் மாலை லக்கியங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. இசுலாமியத் தமிழுலகில் தோன்றிய முதல் ஐந்து நூல்களுள் மூன்றான பல்சந்த மாலை, மிஃறாஜ் மாலை, கனகாபிஷேகமாலை ஆகியன மாலை எனும் பெயரைக் கொண்டுள்ளன. அத்துடன் பல்சந்தமாலை எனும் இலக்கியமே முன்னோடியான பெருமையையும் பெற்றுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

இசுலாம் தமிழுலகில் இடம்பெறத் தொடங்கியதும், இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியமும் தொடங்கியது. சிற்றிலக்கிய வளர்ச்சியில் இசுலாமியர்களின் பங்கும் பணியும் போற்றத்தக்க நிலையில் கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் அமைந்தன.

பரந்துப்பட்ட கால எல்லையையும், எண்ணிக்கையில் பல நூறு இலக்கியங்களையும், இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பெற்றுள்ளன. ஆனால் தமிழ் இலக்கிய உலகம் அதற்கு உரிய இடம் அளிக்கவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு இலக்கியங்களையும், இசுலாமியப் புதிய தமிழிலக்கிய வடிவங்களையும், (படைப்போர், முனாஜத்து, கிஸ்ஸா, மசலா, நாமா முதலான இலக்கிய வடிவங்கள்) சிற்றிலக்கியங்-களையும் பெற்றுள்ளன. ஆனால் இசுலாமியத் தமிழின் மொத்த உருவமே தமிழிலக்கிய வரலாற்றில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை நிலையாகும். தமிழிலக்கிய வரலாறு தொடர்பாக எழுந்துள்ள பல நூல்களிலும் இசுலாமியத் தமிழ் பெயரளவில்கூட இடம்பெறாமல் இருந்திருக்கின்றது.

1859ஆம் ஆண்டில் கற்பிட்டி காசிச் செட்டி தமிழ் புளுடார்க் (Plutarch) எனும் ஆங்கில நூலை எழுதி வெளி யிட்டுள்ளார். இதில் நூற்றுத் தொண்ணூற்றேழு தமிழ்ப் பெரியோர்கள் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கையில் ஒரு முஸ்லிம் தமிழ்ப் புலவரின் பெயர்கூட இடம்பெறவில்லை. 1916இல், ஆ. குமாரசாமிப்புலவர், 'தமிழ்ப் புலவர் சரிதம்' எழுதியுள்ளார். இதிலும் 2000க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இவ்வுலகிற்கு அளித்துள்ள முஸ்லிம் புலவர்களின் தமிழ்த் தொண்டு பற்றி ஒரு வரியில் கூட ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டவில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதிய இலங்கையைச் சார்ந்த வி. செல்வநாயகமும் தமது நூலில் இசுலாமியத் தமிழுக்கான எல்லையைச் சுருக்கி வழங்கியுள்ளார். இதுபோன்று தமிழிலக்கிய வரலாற்றினை எழுதியுள்ள பலரும் இசுலாமியத் தமிழின் விரிந்துபட்ட இலக்கியப் பரப்பினை அவர்கள் தம் கண்ணோட்டத்திலேயே சுருக்கித் தந்துள்ளனர். சு. வித்தியானந்தன் தமது 'இலக்கியத் தென்றல்', 'கலையும் பண்பும்' எனும் நூல்களில் இசுலாமியர் தம் தமிழ்த் தொண்டினை ஓரளவு விளக்கியுள்ளார்.

எனவே இசுலாமியத் தமிழின் முழுமையான இலக்கியப் பரப்பே தமிழிலக்கிய உலகில் உரிய இடத்தைப் பெறாததால் இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களும் அவற்றுக்கென உள்ள சிறப்பிடத்தைத் தமிழிலக்கிய வரலாற்றில் பெறவில்லை எனலாம். ஆகவே இத்தேவையை நிறைவு செய்யும் வகையில், ம.முகம்மது உவைஸ், பீ.மு. அஜ்மல்கான் இருவரும் சில தொகுதிகளில் வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

சிற்றிலக்கியப் புலவர்கள்

சிற்றிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த காலம் முதலாகப் பல்வேறு புலவர்கள் சிற்றிலக்கிய வகை நூல்களைப் படைத்துப் புகழ்பெற்று விளங்குகின்றனர். குறிப்பாக 12ஆம் நூற்றாண்டு தொடங்கி, சிற்றிலக்கியப் புலவர்கள் சுட்டிக் கூறத்தக்க வகையில் சிறப்புடன் இலக்கியங்களை இயற்றியிருக்கின்றனர். அந்த இலக்கியங்கள் அவர்களின் கவி ஆளுமைப் பண்புகளையும் இலக்கியப் படைப்புச் சிறப்புகளையும் வெளிப்-படுத்துவன. 12ஆம் நூற்றாண்டுமுதல் 14ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலப் பகுதி வரலாற்றுக் காலத்தில் குறிப்பிடத்தக்கன. இக்கால இலக்கியங்கள் அரச பரம்பரையினரின் சிறப்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன.

12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர், திருவரங்கத் தமுதனார், நெற்குன்றவாணர் உள்ளிட்ட புலவர்கள் இக்காலத்தில் சிறந்து விளங்கினர்.

13ஆம் நூற்றாண்டில் விலாசம், மாலை, கதை, மான்மிய இலக்கியங்கள் சிறப்புப் பெற்றிருந்தன. இக்காலத்தில் பொய்யாமொழிப் புலவர், வித்தியாதரணியர், அருணந்தி சிவாச்சாரியார், புகழேந்திப் புலவர் முதலியோர் மிகச் சிறந்த சிற்றிலக்கியப் படைப்பாளர்களாகத் திகழ்ந்தனர்.

மணவாள மாமுனிகள், நயினார் ஆசாரியார், பரஞ்சோதி முனிவர், குருகைப் பெருமாள் கவிராயர் முதலிய சிற்றிலக்கியப் புலவர்களைக் கொண்ட 14ஆம் நூற்றாண்டில் புராண, கலம்பக, அந்தாதி இலக்கியங்கள் புகழ்பெற்றன.

16ஆம் நூற்றாண்டில் கவி காளமேகம், இரட்டைப் புலவர்கள், அருணகிரி நாதர், உத்சித்தேவர், வரதுங்கராம பாண்டியன், பகழிக் கூத்தர், பெரியவாச்சான் பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வசைகவி பாடியும், சிலேடை இலக்கியங்கள் பாடியும், சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு இக்காலத்தில் மிகச் சிறந்த பங்காற்றினர்.

மாலை, கோவை, பள்ளு இலக்கியங்கள், அதிவீரராம பாண்டியர், இராமச்சந்திரக் கவிராயர், நிரம்ப அழகிய தேசிகர் முதலிய புலவர்களால் பாடப்பட்டன. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், சிற்றிலக்கியப் புலவர்களான, சிவப்பிரகாசர் ஆகியோர் நல்ல பல இலக்கியங்களைப் படைத்தனர். இவர்கள் மடங்கள், குறுநில மன்னர்களால் போற்றிச் சிறப்பிக்கப்பட்டிருந்தனர்.

12ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டுவரை சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகின. அவை காலமாற்றம், பொருள் மாற்றம், ஆட்சி மாற்றம் முதலிய கூறுகளைத் தாங்கியவை. அவ்வகையில் வாழ்வின் பல்வேறு கூறுகளை இலக்கியங்களில் பிரதிபலிக்கச் செய்தபெருமை சிற்றிலக்கியப் புலவர்களையே சாரும்.
-----------

2. இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்


தமிழ் இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கிய வகைகள் அனைத்தையும் முஸ்லிம் புலவர்கள் பயன்படுத்தி, இசுலாமிய அடிப்படையில் தமிழ் இலக்கியம் படைத்துள்ளனர்.

சைவமும் வைணவமும் சமணமும் பௌத்தமும் கிறித்துவமும் போன்றே இசுலாமும் இன்பத் தமிழ்க் கடலை வளப்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் தமிழ்த் தொண்டு புரிந்ததில் எவர்க்கும் பின்னிட்டவர்கள் அல்லர். (கண்ணப்ப முதலியார் பாலூர், தமிழ் நூல் வரலாறு, ப.385). கடந்த நானூறு ஆண்டுகளில் அறுநூற்றுக்கும் மேற்பட்ட இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான இலக்கியங்களை அருந்தமிழில் ஆக்கியுள்ளார் ( சாயபு மரைக்காயர், மு., இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள், கட்டுரை, சமரசம் இதழ், சென்னை, 1-1-81)

ஆயினும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இசுலாமியர்களின் தமிழ்த் தொண்டு இன்னும் விரிவாக எழுதப்படவில்லை.

ஈழத்துப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் இது பற்றிக் குறிப்பிடுகையில்

“எண்ணிறந்த இசுலாமியப் புலவர்கள் மிகச் சிறந்த நூற்கள் பலவற்றைத் தமிழிலே
படைத்திருக்கின்றனர். ஆனால் இவ்விலக்கியங்களைப் பற்றிப் பலருக்குத் தெரியாது. சீறாப்புராணம் போன்ற சில நூற்கள் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்த் தொண்டிலே ஊறித் திளைத்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் புலவர்களின் படைப்புகள் அறிமுகப்படுத்தப் படவில்லை “
(வித்தியானந்தன், சு., இசுலாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைக் கோவை, u.154).

தமிழக வரலாற்றில் நான்காம் நூற்றாண்டிற்கும், ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட முந்நூறு ஆண்டுக் காலத்தை 'இருண்டகாலம்' என்பர். இதுபோன்று கி.பி. 16ஆம் நூற்றாண்டிற்கும், 19ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நவாபுகளும், நாயக்கர்களும், மராத்தியர்களும் ஆட்சி செலுத்தினர். அப்பொழுது பிறமொழியாளரின் செல்வாக்கு பெருகியிருந்தது.

தமிழகத்தை அக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் சிற்றின்பச் சிந்தை மிக்கவர்களாக இருந்தனர். அக்காலக் கட்டத்தில் தனிப்பட்டோரைப் பாராட்டிப் பயன் பெறுவதற்காகப் புலவர்கள் பிரபந்தங்கள் பல பாடினர்.

இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் என்று காலவாரியாக வரலாறு எழுதுவதைப் போன்று 16ஆம் நூற்றாண்டிற்கும் 19ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை 'இசுலாமியர் காலம்' என்று குறிப்பிட்டு எழுதினால் அது பொருத்தமுடையதாகவே விளங்கும்.

இம் முந்நூறு ஆண்டுகளில் உருவாகி வெளிவந்த இலக்கியங்களின் எண்ணிக்கை பெருக்கத்தில் மட்டுமில்லாமல் கருவிலும், உருவிலும் கூடத் தனிவழி கண்டு இமயமென உயர்ந்து நின்றது என்பதை மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது என்கிறார் மு. சாயபு மரைக்காயர் (சாயபு மரைக்காயர், மு., இசுலாமியர் தமிழ்த் தொண்டு, பக்.11-12).

தமிழுக்கேயுரிய இலக்கியப் பண்புகளைப் போற்றிப் பாதுகாத்து நிலைபெறச் செய்ததோடு 'பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்ற நன்னூலாரின் கூற்றுக்கேற்ப-கால வளர்ச்சிக்கேற்பப் புதிய இலக்கியங்கள் பலவற்றையும் இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் எழுதியுள்ளனர் (மணவை முஸ்தபா, இருளில் ஒளி ஏற்றிய சென்னை, இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள், முஸ்லிம் முரசு, ஜனவரி, 1978, பக்.25-26) என்று குறிப்பிடுவதை இங்கு எண்ண வேண்டும்.

சைவரும் வைணவரும் பாடிய பிரபந்தங்களைப் பாடுவதோடு இசுலாமியர் நின்றுவிடவில்லை. அவர்கள் பல புதிய பிரபந்த வகைகளையும் தமிழில் புகுத்தித் தமிழன்னையைப் பொலிவுடன் வாழச் செய்திருக்கின்றனர் (வித்தியானந்தன், சு.,
சுலாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைக் கோவை, ப.155) அவ்வாறு இசுலாமியர் தமிழில் அறிமுகப்படுத்திய அச்சிற்றிலக்கியங்கள் படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா, மஸ்அலா, நாமா எனும் பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. இப்புதுவகைச் சிற்றிலக்கியங்களே அன்றித் தமிழில் பொதுவாக வழங்கும் பிற சிற்றிலக்கிய வகைகளிலும் முஸ்லிம் புலவர்கள் நூற்களை இசுற்றியுள்ளனர்.

இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் உருவமும் உள்ளடக்கமும்

இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் அந்தந்தக் காலத் தமிழ்ச் சிற்றிலக்கியப் பிரிவுகளின் வடிவத்திற்கேற்ப யாப்பமைதிகளையும் ஏனைய பிற இலக்கண வரையறைகளையும் பெற்றுள்ளன. வடிவம் என்ற நிலையில் இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களை ஏனைய பிற தமிழ்ச் சிற்றிலக்கியங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவற்றின் மொழியாகும். இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் அனைத்தும் அரபு, பாரசீக மொழிகள் கலந்த தமிழ் யாப்பமைதியைப் பெற்றுச் சிறக்கின்றன.
சுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் பாடுபொருள்கள் பெரும்பாலும் அரபுநாட்டு இசுலாமிய வரலாற்றையும், பின்புலத்தையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இசுலாமியச் சமயக் கருத்துகள்

இசுலாமிய அடிப்படைச் சமயக் கருத்துகளையும், நெறிமுறைகளையும் மட்டுமே எடுத்துரைக்கும் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பல உள்ளன. இசுலாம் தொடர்பான அறிவுப் பெருக்கத்திற்கு நூல்கள் தேவைப்பட்டன. ஆகவே இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் தொடக்க காலத்தில் சமயத் தொடர்பானவையே தோன்றின. இவ்வகையில் பாட்டுடைத் தலைவர் என்று யாரையும் சுட்டிக்காட்ட இசுலாது. இவ்வாறு அமைந்த மச்சரேகைச் சித்தரின் 'பேரின்ப சதகத்தில்', சதக இலக்கிய வடிவத்திற்குட்பட்டுச் செய்யுள்களை அமைத்துள்ளார்.

இவர் பேரின்ப நிலையை, சுலாத்தின் அடிப்படை இறைவழிபாட்டு நெறியின் மூலமாக அடையும் வழியை வகுத்துக் காட்டுகின்றார். இதுபோல் சாமுநைனா லெப்பை ஆலிம் எழுதிய 'அதபு மாலை' எனும் சிற்றிலக்கியத்தில், இசுலாத்தின் அடிப்படையில் தம் வாழ்வை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை விளக்கம் பெறச் செய்துள்ளார்.

ஒருவர் உண்மையான முஸ்லிம் என்றால் எத்தகைய நெறிமுறைகளை, மார்க்கச் சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை அதபுமாலை' வரையறுத்துக் காட்டுகிறது. இசுலாத்தின் அடிப்படைக் கருத்திற்கிணங்கக் கலிமா (இசுலாத்தின் மூலமந்திரம்), ஈமான் (நம்பிக்கை), சக்காத் (தர்மம்) போன்ற ஒவ்வொரு செய்தியும் இந்நூலில் விளக்கம் பெற்றுள்ளது. இவ்வாறு இசுலாமியச் சமய அறிவினை மட்டுமே புக்கட்டுவனவாக எண்ணிறந்த இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பல்வேறு
சிற்றிலக்கிய வடிவத்தில் தோன்றியுள்ளன.

இசுலாமிய வரலாற்று உள்ளடக்கங்கள்

இசுலாமிய வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள சிற்றிலக்கியங்கள் பல தோன்றின. இவ்வகையில் அடங்கும் சிற்றிலக்கியங்களுக்கு சுலாமிய சமயத்தில் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படும் ஏதாவது ஒரு வரலாற்றுச் செய்தி பாடுபொருளாக அமையும். இவ்வகையில் ஆலிப் புலவரால் இசுற்றப்பட்ட மிஃறாஜ் மாலையைக் குறிப்பிடலாம். இந்த இலக்கியத்தின் பாடுபொருள் இசுலாமிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற நபிகள் நாயகத்தின் (சல்) விண்ணேற்றப் பயணமாகும். இவ்விண்ணேற்றப் பயணத்தின் போதே நாயகத்தை (சல்) வானவர்கோன் ஜிப்றயீல் (அலை) விண்ணிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள அற்புதங்களைக் காட்டினார்கள். அத்துடன் அறுசிற்கும் (அல்லாஹ்வின் சிம்மாசனம்) நபி (சல்) சென்று அங்கு அல்லாஹ்வின் பல்வேறு கட்டளைகளையும் பெற்று வந்தார்கள். இசுலாமிய வரலாற்றில் இத்தகு காட்சி நிலை யாருக்கும் கிடைத்ததில்லை. இச்சிறப்புப் பெற்ற வரலாற்று நிகழ்ச்சியான விண்ணேற்றப் பயணமே மிஃறாஜ் மாலையில் உள்ளடக்கமாக அமைந்துள்ளது.

திருப்பாலைக்குடி செய்துக் காதிப் புலவரால் இசுற்றப்பட்ட 'அபூஷகுமா மாலை' குறிப்பிடத்தக்கதாகும். இதில் மூன்றாவது கலிபா (பிரதிநிதி என்று பொருள்படும் நிலையில் இச்சொல் குறிக்கப் பயன்படுகிறது) உமறு இப்னு கத்தாப் (றலி) தமது ஆட்சியில் இசுலாமிய நீதி முறையை நிலைநாட்டுவதற்காகத் தமது மகனைத் தண்டித்த வரலாற்றுச் செய்தி இடம்பெற்றுள்ளது.

இதுபோன்று இன்னும் பிற இசுலாமிய வரலாற்று நிகழ்ச்சிகள் பல்வேறு சிற்றிலக்கியங்களுக்கும் உள்ளடக்கச் செய்தியாக அமைந்துள்ளன. இதனடிப்படையில் தோன்றும் இசுலாமியச் சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் பாத்திரங்களை விட வரலாற்று நிகழ்ச்சியே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (சல்) பாட்டுடைத் தலைவராக அமைதல்

இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் நபிகள் நாயகத்தை (சல்) மட்டுமே பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுந்துள்ள இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை அதிகம்.

உருவமற்ற இறைவழிபாட்டு நெறிமுறையை அடித்தளமாகக் கொண்டது இசுலாமாகும். எனவே எந்தவொரு இசுலாமியத் தமிழிலக்கியத்திலும் அல்லாஹ்வை பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளவில்லை. பிற சமயத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பலவும் இறைவனுக்கு முக்கியத்துவம் அளித்து, அவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்தன. அதுபோல் சிறப்பானதோர் இடத்தை முஸ்லிம் புலவர்கள் அல்லாஹ்வின் தூதுவர்களுள் முக்கிய இடத்தைப் பெற்ற நபிக்கு (சல்) அளித்தனர். இதன் பயனாய் நபி (சல்)யைப் பாட்டுடைத் கொண்டு பல்வேறு தலைவராகக்
சுலாமியச் சிற்றிலக்கியங்களை இசுற்றியுள்ளனர்.

செய்யது அனபியா சாகிபுவின் 'நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்', செய்குனாப் புலவரின் 'மக்காக் கலம்பகம்', கவிக்களஞ்சியப் புலவரின் 'நபியவதார அம்மானை' போன்ற பல இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பெருமானார் நபி (சல்) யைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளன. இவ்வாறாக இசுலாமியச் சிற்றிலக்கியப் பிரிவுகளான கோவை, சதகம், அந்தாதி, பதிகம் முதலான சிற்றிலக்கிய வடிவங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சிற்றிலக்கியமாவது அண்ணல் நபி (சல்)யைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளது.

இறைநேசர்கள் பாட்டுடைத் தலைவர்கள்

அல்லாஹ்வின் அருள்பெற்ற இறைநேசச் செல்வர்களான முகியித்தீன் ஆண்டவர், நாகூர் ஆண்டவர், ஹஸ்றத் சுல்தானுல்லாரியீன் செய்யிது அருமதுல் கபீர் நிபாய் ஆண்டவர் போன்ற இன்னபிற நேசர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு எழுந்துள்ள சுலாமியச் சிற்றிலக்கியங்கள் இப்பிரிவில் அடங்கும். குலாம் காதிறு நாவலரால் இசுற்றப்பட்ட 'குவாலீர் கலம்பகம்', அதன் இலக்கணத்திற்கேற்ப அமைந்த நூறு செய்யுள்கள் கொண்டுள்ளது. கவுது எனும் பெயரால் அழைக்கப்படும் அவுலியாவே பாட்டுடைத் தலைவராவார். இதுபோன்றே பிற நேசர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்ட இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. அவற்றுள் அந்தந்த இறைநேசர்களின் பெருமையும், சிறப்பும், வரலாற்று முக்கியத்துவமும் விரித்துரைக்கப் படுகின்றன

புரவலர்கள் பாட்டுடைத் தலைவர்கள்

சில இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் புரவலர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகப் பெற்றுள்ளன. தம் புலமையைப் பாராட்டிய பல வள்ளல்களின் கொடைத் தன்மையையும், நல்லியல்புகளையும் பாடினர். இதற்குச் சான்றாக மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படையைக் கூறலாம். இந்நூல் குலாம் காதிறு நாவலரால் இசுற்றப்பட்டது. மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரிடத்துச் சென்று சிறப்புப் பட்டமும் பரிசிலும் பெற்ற ஒருவர் அச்சிறப்பினைப் பெறாத புலவரிடத்துத்
தாம் பெற்று வந்த பெருமையை எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுபோன்ற தனி நபர்களின் வள்ளல் தன்மையை இசுலாமியக் கருத்துகளுடன் இணைத்துப் பாடும் சிற்றிலக்கியங்கள் சிலவே உள்ளன.

வரலாற்றுப் புகழ்பெறும் புண்ணிய இடங்கள்

இசுலாமிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் புண்ணிய இடங்களைப் புகழ்ந்துரைப்பதைப் பொருளாகக் கொண்டு சிற்றிலக்கியங்கள் அமைந்துள்ளன. இதனடிப்படையில் முஸ்லிம்களின் புண்ணிய இடங்களான மக்கா, மதீனா, பக்தாத், குவாலீர், அஜ்மீர், நாகூர் போன்ற பல நகரங்களின் பெருமைகளும் முக்கியத்துவமும் பாடப்பட்டுள்ளன. அத்துடன் அப்புண்ணிய நகரங்களின் சிறப்புக்குக் காரணமான முஸ்லிம் பெரியவர்களின் வரலாற்றுப் பின்புலமும் ஆங்காங்கே
இச்சிற்றிலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும்.

இந்த வகை உள்ளடக்கத்தில் அந்தாதி, கலம்பகம் போன்ற சிற்றிலக்கியப் பிரிவுகளில் அதிகமான இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. குலாம் காதிறு நாவலரின் திருமக்காத் திரிபந்தாதியில், முஸ்லிம்களின் முதல் புண்ணிய நகரமான மக்காவின் எழில் வளமும் வரலாற்றுச் சிறப்பும் எடுத்துக்காட்டப் படுகின்றன. இதில் பாத்திரங்கள், வரலாற்று நிகழ்வுகள் முதலானவற்றைக் காட்டிலும் அவற்றுக்குக் காரணமான இடத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அகப்பொருள் அடிப்படை

அகப்பொருள் அடிப்படையில் இடம்பெறும் இலக்கிய வகைகள், கோவை, தூது இலக்கியங்களாகும். செவத்த மரைக்காயரால் எழுதப்பட்ட 'திருமாக்காக் கோவை', கோவை இலக்கியத்திற்குரிய அகப்பொருட் சுவையை உள்ளடக்கமாகக் பெற்றுச் சிறக்கிறது. இதில் மக்கா நகர் வாழும் தலைவன், தலைவியரின் குணநலன்கள் இடம்பெறுகின்றன. மேலும் இசுலாமியத் தமிழ்க் கலம்பகங்களிலும் கலம்பக உறுப்புகளுக்கேற்ப அகப்பொருள் சார்ந்த உள்ளடக்கப் கருத்துக்கள் இடம்பெறுவதும் இங்குக் குறிக்கத்தக்கதாகும். மொத்தத்தில் இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் அகப்பொருட் சுவையமைந்த உள்ளடக்கச் செய்யுள்கள் மிகக் குறைவே ஆகும். ஏனைய பிற தமிழ்ச் சிற்றிலக்கியங்களைப்போல் அகப்பொருள் கருத்துகளைப் பாட்டுடைத் தலைவன் தலைவியருடன் தொடர்புபடுத்திப் பாடுவதற்கு இசுலாமிய மார்க்கம் இடம் தருவதில்லை. எனவே அகப்பொருள் சுவையில் அமைந்த செய்யுள்களில்கூட நேரிடையாகப் பாட்டுடைத் தலைவர்களை அகப்பொருளுடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் தலைவர்கள் பாடவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

இசுலாமியச் சமய விழாக்கள்

ஏதேனும் குறிப்பிட்ட இசுலாமியச் சமய விழாக்களில் படிப்பதற்காக எழுதப்பட்ட உள்ளடக்கங்களைப் பெற்றுச் சில இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. நபிகள் நாயகம் (சல்) பிறந்த மாதமாகிய ரபியுலவ்வலில் (மூன்றாவது
சுலாமிய மாதம்) அண்ணல் நபியின் (சல்) பெயரில் உணவளிப்பது சிறிய விழாவாக அனைத்து முஸ்லிம்களின் வீட்டிலும் மேற்கொள்ளப்படும். இதனைக் கந்தூரி என்றும் அழைப்பர். இவ்வாறு மேற்கொள்ளப்படும் கந்தூரி விழாவில் நாயகம் (சல்) பேரில் மௌலிது ஓதப்படும். மௌலிது என்பதன் நேரடியான பொருள் பிறந்த நாள் என்பதாகும். இச்சொல் பெரும்பாலும் பெருமானார் அண்ணல் நபி (சல்)க்கு உடையது. ஏனைய பிற இறைநேசர்களின் பிறந்த நாளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இம்மௌலிது நாயகம் (சல்) பிறந்த நாளான ரபியுலவ்வல் பிறை பனிரண்டில் ஓதப்படும்.

அன்றைய தினம் மௌலிதுவிற்கு முன்னர், 'கசீதத்துல் புறுதா' எனும் அரபு நூல் படிக்கப்பட வேண்டும். இது நபி (சல்) யின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறுவதாகும். இதனைப் பாடுவது கடினமென உணர்ந்த காரணத்தினால் இத்தகு நிகழ்ச்சிகளில் மட்டுமே படிக்கத்தக்கதான 'றசூல் மாலை' எனும் இசுலாமியச் சிற்றிலக்கியம் இசுற்றப்பட்டுள்ளது. இந்நூலின் முழுப்பெயர் 'நபியுல்லா மாலை' என்பதாகும்.

இந்நூலை இசுற்றியவர் காயல் பட்டினத்தைச் சார்ந்த சாமுநெயினார் லெப்பை என்பவராவர். தற்போது கந்தூரி விழாக்களில் மெளலிது ஓதுவதற்கு முன்னர் அண்ணல் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுட்டும் 'றசூல் மாலை' எனும் சிற்றிலக்கியமே படிக்கப்படுகிறது. இத்தகு முறையில் சிலவே உள்ளன. குறிப்பிட்ட இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் ஒரு சிலவே உள்ளன.

குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்

முஸ்லிம் மக்கள் வாழ்வின் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பயன்படத்தக்க பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு சில இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. ஒருவர் இறக்கும் தறுவாயில் அல்லது இறந்தபின் அவரது உறவினரும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கத்தக்க நெறிமுறைகளை உள்ளடக்கமாகப் பெற்றதே 'ஒசியத்துமாலை' எனும் சிற்றிலக்கியமாகும். ஒசியத்து எனும் அரபுச்சொல், ஒருவன் இறக்கும் தறுவாயில் தனது உறவினர்களுக்கு இறுதியாகக் கூறுவதையே குறிப்பதாகும். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஓசியத்து மாலை பொதுவாக மேற்குறித்த சூழலிலே பயன்படுத்தப்படுகிறது. இத்தகு உள்ளடக்கங்களைப் பெற்ற இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் ஒருசிலவே உள்ளன.

ஆகவே சில இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் மேற்குறித்த பிரிவுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட பிரிவுகளுடன் தொடர்புடையதாக இருக்கும். அத்தகைய சிற்றிலக்கியங்களையும் இப்பிரிவில் அடக்கலாம். இவ்வகையில் மதினா நகரம் பல பாடல்களில் பாடுபொருளாக அமைந்துள்ளது. அதுபோல் நபிகள் நாயகத்தின் சிறப்பும் பெருமையும் பல செய்யுட்களில் பாட்டுடைத் தலைவர் என்ற நிலையில் உள்ளடக்கக் கருத்தாக இடம்பெற்றுச் சிறக்கின்றன.

கலம்பக உறுப்புக்களுக்கேற்ப ஆங்காங்கே அகப்பொருட் சுவையை மட்டுமே உணர்த்தக் கூடிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. உருவம், உள்ளடக்கம் பற்றிய கருத்துகளின் அடிப்படையில் இசுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களை வகைப்படுத்தலாம். எனினும் உள்ளடக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வு ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்காது. ஆகவே சுலாமியத் தமிழிலக்கியங்கள் அவை சார்ந்துள்ள சிற்றிலக்கிய வடிவங்களின் அடிப்படையிலே விளக்கம் பெறுகின்றன.

இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் அமைப்பும் சிறப்பும்

இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் அமைப்பில் தனிச்சிறப்புப் பெற்றுள்ளன. இலக்கியம் என்பதைக் கொள்கை அளவில் மூன்று அடிப்படை நிலைகளில் காணலாம். அவை:
1. இலக்கியத்திற்குரிய பொருள்
2. இலக்கிய அமைப்பும், இலக்கிய வகைகளும்
3. இலக்கிய வெளியீட்டு முறை
என்பன (சுப்பிரமணியன், ச.வே., தமிழ் இலக்கியக் கொள்கை, மூன்றாம் தொகுதி, ப.4.).
இந்த அடிப்படையில் இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் அமைப்பையும், சிறப்பையும், அவை உணர்த்தும் இலக்கியக் கொள்கைகளையும் நோக்கலாம்.

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இச்சிற்றிலக்கிய வகைகள் பெரும்பாலானவற்றிலும் தமது இலக்கியங்களைப் படைத்துள்ளனர். அன்றியும் புதுவகைச் சிற்றிலக்கியங்களையும் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர் ஆகவே இசுலாமியச் சிற்றிலக்கியங்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.
1. இசுலாமியர் அறிமுகப்படுத்திய புதுவகைச் சிற்றிலக்கியங்கள்
2. இசுலாமியர் வழங்கிய பொதுவான சிற்றிலக்கியங்கள்

இசுலாம் பெற்றுள்ள படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா, மஸ்அலா, நாமா போன்ற புதுவகைச் சிற்றிலக்கியங்களை இசுலாம் அல்லாத வேறு தமிழிலக்கியங்களில் காணமுடியவில்லை. இவை இசுலாம் மதத்துக்கே உரிய சிறப்பிலக்கிய வகைகளாகும் (அஜ்மல்கான், பீ.மு., மசலா கட்டுரை, இசுமி மாத இதழ், ஏப்ரல் 1982).

இவற்றை இசுலாமியத் தமிழிலக்கிய வடிவம் என்றே குறிப்பிடலாம். அம்மானை, அந்தாதி, ஆற்றுப்படை, பிள்ளைத் தமிழ், புராணம், கலம்பகம், கோவை, பாவை, மாலை போன்ற பல்வகைப்பட்ட பழைய இலக்கிய மரபுகளைப் பின்பற்றி முஸ்லிம் புலவர்கள் எழுதியுள்ள சிற்றிலக்கியங்களை இசுலாமியர் வழங்கிய பொதுவான சிற்றிலக்கியங்கள் என்ற பிரிவில் அடக்கலாம்.

இவ்வாறு இசுலாமிய நெறிமுறைகளைப் பாமரர்களுக்கும் விளங்கும் வகையில் எளிய நடையில் விளக்குவதும், இசுலாமியக் கோட்பாடுகளை அமைதியான முறையில் பரப்புவதுமே இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் அடிப்படையான இலக்கியக்
கொள்கை எனலாம்.

இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் பாடுபொருள் அனைத்துமே இசுலாத்தின் நெறியாகவும், இசுலாமியப் பெரியவர்கள் தம் வாழ்வு வழி சிறக்கும் மறை நெறியாகவுமே உள்ளன. தமிழ் முஸ்லிம்கள் சமய நெறி சாராத இலக்கியங்களை அருகியே படைத்துள்ளனர் என்பதும் எண்ணத்தக்கது (முகமது அலிஜின்னா, இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றுக் கருத்தரங்கச் சிறப்புமலர், இளையான் குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வெளியீடு, ப.34).

இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுக்கும், பிற சமயப் புலவர்களுக்குமிடையே ஓர் இன்றியமையாத வேறுபாடு உண்டு. இசுலாமியத் தமிழிலக்கியங்களில் பிற சமயக் காழ்ப்பையோ, அனைவரையும் மதம் மாற்றச் செய்யும் சமயப் பிரச்சாரத்தையோ காண இசுலாது. முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் இசுலாமியக் கொள்கைகளைப் பரப்புவதை மட்டுமே தம் நோக்கமாகவும், இலக்கியக் கொள்கையாகவும் கொண்டிருந்தனர். எனவேதான் "இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள் பிற மதக் கண்டனங்கள் அற்றவை; பிறரைத் தம் வயப்படுத்தும் சமயப் பிரச்சாரங்கள் இல்லாதவை" என்று ஈழத்துப் பேராசிரியர் வி. செல்வநாயகம் குறிப்பிட்டுள்ளார் (சாயபு மரைக்காயர், மு., இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள், கட்டுரை சமரசம், 1.2.81 இதழ்).

இலக்கியம் என்பது மனித வாழ்வை மேம்பாடுடையதாக்கும் ஓர் அரியசாதனம் என்பது மேலோர் கருத்து. இக்கண்ணோட்டமே இசுலாமிய இலக்கியப் படைப்புகளுக்கு வழித்துணையாக அமைந்துள்ளது என எம். அப்துல் வஹ்ஹாப் சாஹிப் குறிப்பிட்டுள்ளார். (அப்துல் வஹ்ஹாப் சாஹிப், எம்., இசுலாமிய இலக்கியம், கட்டுரை, பிறை மாத இதழ், ஜனவரி, 1974, பக்.39-54).

யாரால் பிறர் நலம் பெறுகின்றார்களோ அவர்களே சிறந்த மனிதர்கள் என்று வள்ளல் நபி பெருமானார் கூறியுள்ளார். இது இலக்கியப் படைப்பாளர்களுக்கு மிகவும் பொருந்தும். ஏனென்றால் குறுகிய கால உலக நன்மைகளையும், இலாபங்களையும் கருத்தில் வைத்து, மக்களின் கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டி அதனால் பயனடைய முற்படுபவர்கள் எழுத்தாளர்கள் அல்லர்; மாறாக மனித நிலத்துக்கே தீமை விளைவிக்கும் எதிரிகள் அவர்களே என்கிறார் மு. சாயபு மரைக்காயர் (சாயபு மரைக்காயர், மு., இசுலாமியர் தமிழ்த் தொண்டு, ப.16)

ந.வீ. ஜெயராமன் சிற்றிலக்கியங்களின் பொதுவான இசுல்பு பற்றித் தமது 'சிற்றிலக்கியச் செல்வம்' என்ற நூலில் குறிப்பிடும்போது, "சிற்றிலக்கியங்கள் அனைத்தும் சிற்றின்பப் பொருளை விளக்குவதாக அமைந்திருப்பினும், அவற்றுள் சில பேரின்பப் பொருளை விளக்கும் தத்துவக் குவியலாகவும் அமைந்துள்ளன" (ஜெயராமன், ந.வீ., சிற்றிலக்கியச் செல்வம், ப.25) என்கின்றார்.

இதனை மறுத்து மு.சாயபு மரைக்காயர் குறிப்பிடும் பொழுது, மேற்கண்ட செய்திக்கு மறுதலையாகவே இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் அமைந்துள்ளன. சிற்றின்பப் பொருளைப் பாடுவதற்காக ஒரு நூலைக் கூட முஸ்லிம் புலவர்கள் எழுதவில்லை. இது இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பாகும். இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் யாவுமே பேரின்பப் பொருளையே பெரிதும் பாடுகின்றன. (சாயபு மரைக்காயர், மு., இசுலாமியர் தமிழ்த் தொண்டு, ப.17) என்கிறார். இவ்வாறு இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் அமைப்பின் சிறப்பை அறிஞர் பலரின் கருத்துகளின் வழி உணரமுடிகின்றது.

இசுலாமியர்கள் அறிமுகப்படுத்திய புதுவகைச் சிற்றிலக்கியங்கள்

"தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக் காலப் பரப்பும், பல்வேறு இலக்கியக் காலப் பகுதிகளும் (Literary Periods) கொண்டது. ஒவ்வொரு காலப்பகுதியும் பழைய வகைகளை வளர்த்திருக்கிறது. மரபு அடிப்படையிலான புதிய வகைகளையும்
தோற்றுவித்திருக்கிறது. பிறமொழி இலக்கியங்களின் தாக்கத்தினால் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றிருக்கிறது" (பெரிய கருப்பன், இராம, தமிழ் இலக்கிய வகைகள், கட்டுரை, வையை வியாழவட்டக் கருத்தரங்க மலர்-1, மதுரைப் பல்கலைக் கழகம், 1973-74, ப.111) என்று இராம. பெரிய கருப்பன் தமிழ் இலக்கிய வகைகளின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியம் காட்டும் 'விருந்து' எனும் வனப்பு காலந்தோறும் புதியனவாகப் படைக்கப்படும் புத்திலக்கியங்களைச் சுட்டுகின்றது. 'விருந்து' நூல்களின்
இசுல்பினை,
விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
(தொல். செய்யுளியல், நூற்பா-236)

என்று தொல்காப்பியர் விளக்குகின்றார். இவ்வனப்பினுள், முஸ்லிம் புலவர்கள் அறிமுகப்படுத்திய புதுவகைச் சிற்றிலக்கியங்கள் எல்லாம் அடங்கும்.

இசுலாமியர்கள் அறிமுகப்படுத்திய புதுவகைச் சிற்றிலக்கியங்களைக் காணும்போது, இசுலாம் மதத்தின் கலாச்சாரமும் கோட்பாடுகளும் அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளில் பின்புலத்துடன் நெருங்கிய தொடர்புடையன. அதனால் இசுலாம் வழித்தோன்றும் தமிழிலக்கியங்களிலும் அரபு, பாரசீகத்தின் தாக்கத்தினைக் காணமுடிகின்றது (அஜ்மல்கான், பீ.மு., மதிநா மாத இதழ், திருநெல்வேலி, ஜனவரி, 1981, பக்.50-51).

இசுலாமியர் புதிதாக அறிமுகப்படுத்திய சிற்றிலக்கிய வகைகளுள் படைப்போர் என்பது தமிழ்ப்பெயர். முனாஜாத்து, கிஸ்ஸா, மசலா என்ற மூன்றும் அரபுப் பெயர்கள். எஞ்சிய நாமா என்பது பாரசீகப் பெயராகும். இப்பிரபந்தங்கள் அரபு, பாரசீகப் பெயர்களைக் கொண்டதனால், 'முஸ்லிம் பிரபந்தங்கள்' என அழைக்கப்படலாயின. முஸ்லிம்களுக்கே உரியவையாக இவை திகழ்கின்றன. இப்பிரபந்தங்களில் இடம்பெற்ற பாக்களோ தமிழ்ப்பாக்கள். அவை தமிழ் யாப்புக்கு அப்பாற் செல்லவில்லை. அப்பாக்களும், அரபு, பாரசீக மொழிகளிலுள்ள பிரபந்தப் பாக்களும் கருத்து ஒற்றுமை உடையவை.
அதனாலே அப்பாக்கள் அப் பெயர்களைப் பெற்றன (உவைஸ், எம்.எம்., இசுலாமும் இன்பத் தமிழும், பக்.94-95). என்று இசுலாமியத் தமிழ்ப் பேரறிஞர் உவைஸ் கூறுகின்றார்.

மேலும் இப்புதுவகைச் சிற்றிலக்கியங்களின் பொருளைக் கூர்ந்து நோக்கினால், கதை என்ற பொருளைக் கொண்டது 'கிஸ்ஸா' எனும் சொல். இவ்வகைப் பிரபந்தம் இசுலாமிய மதக்கதைகளைக் கூறும். 'நாமே' என்ற பாரசீகச் சொல் தமிழில் 'நாமா' என மருவி வழங்குகின்றது. கதை, புத்தகம், வரலாறு என்பவை இதன் பொருள்கள். போரைப் பற்றிய பிரபந்தமே 'படைப்போர்' ஆகும். 'மசலா' என்ற அரபுச் சொல்லின் பொருள் கேள்வி என்பதாகும். இசுலாமிய மதத் தொடர்பாகக் கேள்விகளையும் மறு-மொழிகளையும் கொண்டதே மசலா பிரபந்தம் (வித்தியானந்தன், சு., இசுலாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைக் கோவை, ப.155) என்கிறார்.

'முனாஜாத்து' எனும் அரபுச்சொல், இரகசியம் பேசுதல் என்ற கருத்துடையது. இச்சொல் வழிபாட்டுப் பிரார்த்தனை என்பதையும் குறிக்கும். இறைவனையும் அவனது நல்லடியார்களையும் போற்றிப் புகழ்ந்து அருள் வேண்டும் சிற்றிலக்கிய வகையே ‘முனாஜாத்து' எனப்படும். (சாயபு மரைக்காயர், மு., இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள், கட்டுரை, சமரசம், 1.1.81,இதழ்)

இசுலாமியர் அறிமுகப்படுத்திய இச்சிற்றிலக்கிய வகைகளைப் பற்றி மு. அப்துல் கறீம் குறிப்பிடுகையில், "இப்புதுவகைச் சிற்றிலக்கியங்கள் தமிழ் மண்ணையும் மரபையும் மறவாத இசுலாமிய இலக்கியங்கள் எனலாம். இசுலாமியக் கோட்பாடுகளையும் வரலாற்றையும் பாமரர் அறியப் பாடுவதே இவற்றின் அடிப்படை நோக்கமாகும்" (அப்துல் கறீம், மு., இசுலாமும் தமிழும், ப.210).

இவ்வாறு இத்தகு இலக்கியக் கொள்கைக்கு உட்பட்டு விளங்கும் இசுலாமியச் சிற்றிலக்கிய வகைகள் ஒவ்வொன்றையும் காண்போம்.

படைப்போர்

இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் இலக்கியவுலகிற்கு அறிமுகப்படுத்திய புதுவகைச் சிற்றிலக்கியங்களுள், ஏனையவை எல்லாம் அரபு, பாரசீகப் பெயர்களில் அமையப்பெற்றுள்ளன. ஆனால் தமிழ்ப் பெயருடன் விளங்கும் ஒரே சிற்றிலக்கியம் படைப்போர் ஆகும்.

படை, போர் என்பன ஏறக்குறைய ஒரு பொருள் சொற்கள். ஆங்கிலத்தில் வழங்கும் 'War Ballad' என்ற நூல் வகையின் இலக்கணங்கள் அனைத்தும் ஏறத்தாழப் படைப்போரில் அமைந்திருக்கக் காணலாம். முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதாருக்குமிடையே நடந்த போர்களைப் பற்றியே இந்த நூல்கள் வருணிக்கின்றன (உவைஸ், எம்.எம்., இசுலாமியத் தென்றல், ப. 96).

முஸ்லிம்கள் அறிமுகப்படுத்திய புத்திலக்கிய வகையான 'படைப்போர்', தமிழ்ச் சிற்றிலக்கியமாகிய பரணிக்கு இணையானது. வீரப்பாடல்களைப் பரணி வடிவில் பாடாது, படைப்போராக முஸ்லிம் புலவர்கள் புனைந்து பாடியதற்குக் காரணம் உண்டு.

இசுலாமியக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் விட்டுப் பிறழா வண்ணம், வீரப்பாடல்களைப் பாட எண்ணிய முஸ்லிம்களுக்குப் பரணியின் கூறுபாடுகள் இசுலாமிய நெறிக்குப் புறம்பாக அமைந்தமையால், அரபு இலக்கிய நெறியைப் பின்பற்றிப் 'படைப்போர்' எனும் புதிய இலக்கிய வகையை முஸ்லிம் புலவர்கள் கண்டனர் (செய்யிது அகமது கபீர், எ.எம். இறவுசுல்கூல் படைப்போர் ஓர் அறிமுகம், கட்டுரை, 14வது கருத்தரங்க ஆய்வுக்கோவை தொகுதி-3, ப.259).

பரணியின் உறுப்புக்களாகிய 'கடைதிறப்பு', 'காளிபாடியது', 'பேய் பாடியது', 'பேய் முறைப்பாடு', 'அவதாரம்' போன்றவை இசுலாமிய மரபிற்கும், அறநெறிக்கும் ஒவ்வாதவை ஆகும். ஆகவே இவற்றை விடுத்து, பரணியின் ஒரு பகுதியாகிய 'போர்பாடியது' என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு, வீரநிலைப் பாடல்களை இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் 'படைப்போர்' என்ற சிற்றிலக்கிய வகையாகப் படைத்துள்ளனர்.

இசுலாமிய வரலாற்றில் இன்றியமையாத போர்களாகிய பத்ரு, உஹது, ஹீனைன், கைபர், கர்பலா போன்றவற்றை வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு படைப்போர் இலக்கியம் இசுற்றப்படவில்லை. ஆயினும் இசுலாமிய வரலாற்று நாயகர்களான நபிகள் நாயகம், மாபெரும் வீரர் ஹஸ்ரத் அலி, நபி பேரர்கள் இமாம் ஹஸன், இமாம் ஹீசைன் போன்றோர் எதிரிகளோடு போரிட்டு வென்ற வரலாற்றினை வைத்து, வரலாற்றுத் துணுக்குகளைப் பொருளாக்கி வரலாற்று கற்பனை மாந்தர்களையும் கதா நாயகர்களையும், பாத்திரங்களாக்கிப் படைப்போர் இலக்கியத்தைப் படைத்துள்ளனர்.

இசுலாமியர்களுக்கும், இசுலாமியர் அல்லாதாருக்கும் இடையே நடந்த போர்களுக்குக் காரணம், மண், பெண் ஆதிக்க வெறியல்ல. கொள்கையே என்பதையும், இப்போர்கள் இசுலாமிய அறநெறியினை நிலைநாட்டுதற் பொருட்டு நடந்தனவே என்பதனையும் வலியுறுத்தி நிற்கின்றன.

எம்.எம். மீரான் பிள்ளை என்ற ஆய்வாளர் படைப்போர் வடிவங்கள் இருவகையாகப் பாகுபாடு செய்துள்ளார். அவை:
1. வீரகாவியங்கள்
2. நாட்டுப்புற வீரக்கதைப் பாடல்கள் என்பன (மீரான் பிள்ளை, எம்.எம். இசுலாமியத் தமிழ் வீரப் பாடல்கள் ஓர் அறிமுகம், கட்டுரை, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம், ப. 110)

அதில் காப்பிய இலக்கணம் பொருந்த வடிவமும் பொருளும் செம்மையுடன் சிறக்கும் படைப்போர்களை 'வீரகாவியம்' என்றும், ஓசைநயம் சிறக்க நெகிழ்ச்சியான அமைப்பிலுள்ள படைப்போர்களை 'நாட்டுப்புற வீரக்கதைப் பாடல்கள்' என்றும் பிரித்துள்ளார்.

குஞ்சுமூகப் புலவரால் இசுற்றப்பட்ட 'இறவுசுல்கூல் படைப்போர்', சுல்கா எனும் வீராங்கனைக்கும் இறவுசுல்கூல் எனும் எதிர்த்தலைவனுக்கும் இடையே நடைபெற்ற போர்களை வீரச்சுவை நயம் சிறக்கக் கூறுகின்றது. இப்படைப் போர் 'மணி மேகலை', 'குண்டலகேசி' போன்று பாட்டுடைத் தலைவியின் பெயரால் 'சல்காப் படைப்போர்', எனவும் வழங்கப்படும் (செய்யிது அகமது கபீர். எம். இறவுகல்கூல் படைப்போர் ஓர் அறிமுகம், கட்டுரை, 14ஆவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி மூன்று, ப.264).

ஆகவே படைப்போர் வகையைச் சேர்ந்த நூலாயினும் காப்பிய இலக்கணங்கள் பல இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நாட்டுப் படலம், நகரப்படலம் தொடங்கி 45 படலங்களும், 2481 விருத்தப்பாக்களும் இந்நூலில் அமைந்துள்ளன.

மற்றொரு வீரகாவியப் படைப்போராகிய செய்யிறத்துப் படைப்போர்' குஞ்சுமூசுப் புலவரால் 520 விருத்தப்பாக்களில் பாடப்பட்டுள்ளது. இந்நூலிலும் காப்பிய இலக்கணங்கள் பொருந்தியுள்ளன. ஹஸ்ரத் ஹசனுல் பசிறி என்பவர் அரபியில் இசுற்றிய ஒரு காப்பியத்தைப் பின்பற்றியே இந்நூல் தமிழில் பாடப்பட்டுள்ளது.

படைநிலை, ஒளிமுழக்கம், போரிடுதல், வீரர்தோற்றம், களவருணனை முதலியவை இந்நூலில் வீரகாவிய இசுல்புகளாகப் பொருந்தி அமைகின்றன. வீரகாவிய மெய்ப்பாடுகள் பாடல்தோறும் கவினுறச் சித்திரிக்கப் பட்டுள்ளன.
இதுபோல் நாட்டுப்புற வீரக்கதைப் பாடல்களாக விளங்கும் சில படைப்போர்களும் காணப்படுகின்றன. பூவை ஹசனலிப் புலவரின் 'ஐந்து படைப்போர்', காளைஹசனலிப் புலவரின் 'ஹூசைன் படைப்போர்', வரிசை முகிய்யித்தீன் புலவரின் 'சக்கூன் படைப்போர்', அப்துல் காதர் ராவுத்தர் புலவரின், 'காசீம் படைப்போர்', செய்யது முகமது புலவரின், 'நபுஸீப் படைப்போர்' முதலியவற்றை வீரநிலைக் கதைப்பாடல்கள்' எனலாம். இப்படைப் போர்கள் யாவும் ஈரடி வீரப்பாக்களாக (Heroic Couplets) அமைந்து, பாமரர்களுக்கு எளிதில் புரியும் வகையில் உள்ளன.

பூவை ஹசனலிப் புலவரால் பாடப்பட்ட 'ஐந்து படைப்போர்', ஒன்றோடொன்று தொடர்புடைய ஐந்து போர்களைப் பற்றிக் கூறுகின்றது. இப்போர்கள் வீரர் அலிக்கும், இபுனியன், உச்சி, வடோச்சி, தாகிப், இந்திராயன் ஆகிய ஐந்து எதிர்த்தலைவர்களுக்கும் இடையே நடைபெற்றவை ஆகும்.

ஐந்து போர்களிலும் முஸ்லிம் அல்லாத படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்ற தலைவர்களின் பெயர்களாலேயே இப்படைப்போர்கள், 'இபுனியன் படைப்போர்', 'உச்சி படைப்போர்', 'வடோச்சி படைப்போர்', 'தாகிப் படைப்போர்', 'இந்திராயன் படைப்போர்' என்று அழைக்கப்படுகின்றன (உவைஸ், எம்.எம். இசுலாமும் இன்பத் தமிழும், ப.141).

இப்பெயரிட்ட முறை பற்றி ஆழ்ந்து நோக்கினால் உண்மை புலப்படும். போர் யார் காரணமாகத் தோன்றியதோ அவர் பெயரோடு அப்போரின் பெயரைக் குறிப்பதே இசுல்பு முறையாகும். தற்காப்புக்காக அன்றி ஆக்கிரமிப்புப் போருக்கு இசுலாத்தில் அனுமதி இல்லை. ஆகவே 'ஐந்து படைப்போரில்' வீரர் அலியார் ஐவரோடும் போரிட விரும்பிப் போருக்கு எழவில்லை. இந்த ஐவரும் போருக்கு எழுந்தபோது தற்காப்புக்காகப் போரிடுகின்றார். ஆகவே அலியார் படைப்போர் எனப் பெயரிடாது, தோற்ற பகைவர் பெயரோடு சேர்த்துப் பெயரிடப்படுகிறது.

இதனைப் போல் வரிசை முகிய்த்தீன் புலவரின் 'சக்கூன் படைப்போர்', ஈராக்கை ஆண்டு வந்த சக்கூன் எனும் கொடியவனை அண்ணல் நபிகளார் போரில் வென்ற வரலாற்றை விளக்குகின்றது. தோல்வி அடைந்த, சக்கூன், ஈமான், அவர்களைக் கொண்டு சுலாத்தைத் தழுவியதாக இந்நூல் பாடுகின்றது.

காளை ஹசனலிப் புலவரின் 'ஹூசைன் படைப்போரும்', அப்துல் காதர் ராவுத்தரின் 'காசீம் படைப்போரும்', கொடியவர்களை எதிர்த்து நின்று வீரமரணம் அடைந்த பாட்டுடைத் தலைவர்களின் வீரத்தினை உருக்கமாகப் பாடுகின்றன.

வட்டார வழக்கியலும், கொச்சைச் சொற்களும், பழமொழிகளும் மலிந்து காணப்படும் வீரநிலைக் கதைப் பாடல்களாகிய இப் படைப்போர்களைத் திருமலர் மீரான்பிள்ளை 'நாட்டார் காவியங்கள்' என்று அழைப்பது பொருத்தமானதாகும்.

படைப்போர்-இலக்கியக் கொள்கை

1. முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவருக்கும் இடையே நடைபெற்ற போர்களையே இந்நூற்கள் விளக்குகின்றன.
2. தீயசக்திகள் வீழ்ச்சியடைவதையும், தூய சக்திகள் வெற்றி பெறுவதையும் கருவாகக் கொண்டுள்ளன.
3. இசுலாமிய மரபிற்கும், கொள்கைகளுக்கும் பொருந்தாத உறுப்புக்களை விடுத்து, 'பரணி'யின் ஒரு பகுதியாகிய 'போர்பாடியது' என்பதை மட்டும் பாடுபொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
4. பெரும்பாலான படைப்போர்களில் தலைமைச் சிறப்பு, காப்பியத் தலைவருக்கு அப்பாற்பட்டு நபிகள் நாயகத்துக்கு வழங்கப்படுகிறது.
5. மண், பெண் ஆதிக்க வெறியற்று, இசுலாமிய அறநெறிகளையும் கொள்கைகளையும் நிலைநாட்டுதற் பொருட்டு நடந்த போர்களையே இவை விவரிக்கின்றன.
6. அநீதியை அகற்றவும், தற்காப்பிற்கும் மட்டுமே நபிநாதர் படைகள் போர் செய்கின்றன.
7. எதிர்த் தலைவர்கள் பலரும் இசுலாத்தை இறுதியில் மனமுவந்து ஏற்கின்ற நிலை காணப்படுகின்றது.
8. எதிர்த் தலைவர்களின் பெயர்களே பெரும்பாலான படைப்போர் இலக்கியங்களுக்கு நூற்பெயராகச் சுட்டப்படுகின்றன.
9. காப்பிய இலக்கணம் பொருந்த அமைந்த படைப்போர்கள் விருத்த யாப்பிலும், நாட்டுப்புற வீரக்கதைப் பாடல்களாக விளங்கும் படைப்போர்கள் கண்ணிகளாலும் பாடப்பட்டுள்ளன.
10. பெரும்பாலும் அதீதக் கற்பனைகளும் விரசங்களும் தவிர்க்கப்படுகின்றன.

முனாஜாத்து

ஆண்டவனையும் அவனது தலை சிறந்த அடியார்களையும் அருள்புரியுமாறு கேட்டுப் பாடப்பட்ட பாக்களே 'முனாஜாத்து' என்று வழங்கலாயின. 'முனாஜாத்து' என்ற அரபுச் சொல், 'இரகசியமாகச் சொல்லுதல்' என்று பொருள்படும். இச்சொல் வழிபாட்டுப் பிரார்த்தனையையும் குறிக்கின்றது. ஆண்டவனைக் குறையிரந்து பாடுவதையும் முனாஜாத்து என்பர்.

ஈழத்துப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் இச்சிற்றிலக்கிய வகை பற்றிக் குறிப்பிடுகையில், "முஸ்லிம்களிடையே வழங்கும் நூற்களுள் பெரும்பாலானவை
முனஜாத்து நூற்களே! பொதுமக்கள் உள்ளத்தைப் பெரிதும் கவரும் தன்மை வாய்ந்த இப்பிரபந்தம், அல்லாவினிடத்தும் அவனது திருவருளைப் பெற்ற மகான்களிடத்தும் அருள் வேண்டுதலைக் கூறுவன. எண் வரையறுக்கப்படாத செய்யுளாக இது வழங்குகிறது. (வித்தியானந்தன், சு., இசுலாமியத் தமிழிலக்கியக் கட்டுரைக் கோவை, ப. 156) என்கின்றார்.

முஸ்லிம் புலவர்கள் பலராலும் முனாஜாத்துப் பாடல்கள், பக்திச் சுவையுடன் பாடப்பட்டுள்ளன. ஆண்டவனின் அருட்பேற்றினைப் பெறுவதற்கும், அவனது திருவருள் பெற்ற பெரியார்களைப் போற்றுவதற்கும் முனாஜாத்துக்கள் பயன்படுகின்றன. "இத்தகைய இசுலாமிய இறைவேட்டற் பாடல்களைத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களின் இறைவேட்டல் பாக்களோடு ஒப்பிடலாம்” (அப்துல்கறீம், மு., இசுலாமும் தமிழும், ப.219) என அப்துல்கறீம் கருதுகிறார்.

மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகிய செ.மு. செய்யது முகம்மது ஆலிம் என்பவர், 'முனாஜாத்து மாலிகை' என்ற நூலை இசுற்றியுள்ளார். இந்நூலில் 12
முனாஜாத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இறைவன்மீதும், நபிகளார்மீதும், வீரர் அலி, பாத்திமா நாயகி, இமாம் ஹுசைன், முகியித்தீன் ஆண்டகை, நாகூர் ஆண்டகை ஆகியோர்மீதும் இந்நூலில் முனாஜாத்துக்கள் பாடப்பட்டுள்ளன. பெரும்பாலும் முனாஜாத்துப் பாக்களின் இறுதியில் அம்முனாஜாத்தில் புகழப்பட்டவர் விளிக்கப்படுகின்றார். பாமரர் முதல் பண்டிதர் வரை எல்லோருக்கும் எளிதில் விளங்கும்படி இம் முனாஜாத்துக்கள் இயற்றப்பட்டுள்ளன. (உவைஸ் எம்.எம்., சுலாமும் இன்பத் தமிழும், ப97).

மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீதுப் புலவர், 'ஆனந்த சாஹித்யம்' என்றொரு நூலைப் பாடியுள்ளார். மேலும் செய்யது முகியித்தீன் கவிராயர் இசுற்றியுள்ள 'நவநீத புஞ்சம்' என்ற நூலிலும் பல முனாஜாத்துக்கள் உள்ளன. இவை பெரும்பாலும் முனாஜாத்துப் பதிகங்களாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவையே அன்றி எண்ணிலடங்கா முனாஜாத்துப் பாக்கள் இசுலாமியத் தமிழ் இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ளன.

'முனாஜாத்து' இலக்கியக் கொள்கை

1. ஆண்டவனையும், அவனது அருள்பெற்ற பெரியோர்களையும் போற்றிப் புகழ்ந்து, வேண்டும் அருள் வேட்டல் நூற்களே முனாஜாத்துக்கள்.
2. முனாஜாத்துப் பாக்களின் இறுதியில் அம்முனாஜாத்தில் புகழப்பட்டவர் விளிக்கப்படுவர்.
3. இசுலாமியப் பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகளை அறியத் துணைபுரிகின்றன.
4. பாமரமக்களுக்கு இசுலாமிய அறிவை எளிய நடையில் புகட்டுகின்றன.
5. முனாஜாத்துப் பாடல்களுக்கு எண் வரையறை இல்லை.

கிஸ்ஸா

கதை சொல்லுதல் என்ற பொருளை உடைய 'கஸஸ்' என்ற அரபுச் சொல்லை வினையடியாகக் கொண்டது 'கிஸ்ஸா' எனும் சொல். ஆகவே கிஸ்ஸா என்பது கதையென்ற பொருளை உடையது.

அரபுநாட்டு மக்கள் தங்கள் ஓய்வு நேரங்களைக் கதை அல்லது கிஸ்ஸா கூறுவதில் கழித்தனர். அக்கதைகள் கேட்போரைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் வாய்ந்தன. அன்றாட அலுவல்களினால் களைப்புற்றோர்க்கு ஆறுதல் அளிக்க வல்லன. கேட்போரின் அறிவை வளர்க்கக் கூடியன. இவற்றோடு இசுலாமியப் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு அக்கதைகள் காட்சியளித்தன. அவை பொழுது போக்குக்காக மட்டுமில்லாமல் இசுலாமியப் போதனைகளைப் புகட்டும் வாயில்களாகவும் அமைந்தன.

மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் இக்கிஸ்ஸாக்கள் பொது வழக்கிலே வேரூன்றி விட்டன. இதன் பயனாகத் தமிழிலும் கிஸ்ஸா நூற்கள் தோன்றின. 23 கிஸ்ஸாக்கள் தமிழில் காணப்படுகின்றன எனும் கருத்தை முன்வைத்து உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டு கிஸ்ஸாக்களைப் பீ.மு. அஜ்மல்கான் இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.

1. இசுலாமிய மார்க்க வரலாற்று நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட கிஸ்ஸாக்கள்.
2. வரலாறு தொடர்பில்லாது இசுலாமியக் கருத்துகளை மட்டுமே மையமாகக் கொண்ட கிஸ்ஸாக்கள் (அஜ்மல்கான், பீ.மு., கிஸ்ஸா கட்டுரை, மதிநா மாத இதழ், ஜனவரி, 1961, ப.57)

நபிமார்களின் வரலாற்றினையும், இறைநேசச் செல்வர்களின் வரலாற்றினையும், அரபுநாட்டு மன்னர்கள் சிலரது வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு 18 கிஸ்ஸாக்கள் தமிழில் எழுந்துள்ளன. இவ்வரலாற்றுக் கிஸ்ஸாக்கள் பாட்டுடைத் தலைவர்களின் முழுமையான வரலாற்றைக் கூறாமல், அவர்களது வாழ்விலிருந்து சில நிகழ்ச்சிகளை மட்டுமே எடுத்துரைக்கின்றன. ஏனைய ஐந்து கிஸ்ஸாக்களும் வரலாறு தொடர்பற்று இசுலாமிய நல்லுரைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன.
கிஸ்ஸா இலக்கியத்திற்குரிய வடிவம் இன்னதென்று வரையறுக்க முடியவில்லை. சில செய்யுள் நடையிலும், சில உரைநடையிலும், இன்னும் சில செய்யுள், உரைநடை இரண்டும் சேர்ந்ததாகவும் காணப்படுகின்றன. 'யூசுப் நபி கிஸ்ஸா', 'முகம்மது அனிபு கிஸ்ஸா' போன்றவை செய்யுள் வடிவத்திலும் 'அலி' (ரலி) கிஸ்ஸா' என்பதில் செய்யுள் உரைநடை இரண்டும் சேர்ந்தும் காணப்படுகின்றன. இவை தமிழிலுள்ள கிஸ்ஸா
இலக்கியங்களில் புகழ் பெற்றவை ஆகும்.

கிஸ்ஸா - இலக்கியக் கொள்கை

1. இசுலாமிய வரலாற்று நிகழ்ச்சிகளையும், இசுலாமியக் கொள்கைகளையும் இசுலாமியப் போதனைகளையும் கதையாக எடுத்துரைக்கின்றன.
2. மணிமிடைப் பவளம் போல வரலாற்றினிடையே இசுலாமிய நல்லுரைகள் இடம்பெறுகின்றன.
3. கிஸ்ஸாக்களுக்கென்று தனி இலக்கிய வடிவம் இல்லை. செய்யுளாகவோ, உரைநடையாகவோ அல்லது செய்யுள் உரைநடை இரண்டும் சேர்ந்தும் அமைந்து உள்ளன.
4. பெரும்பாலான கிஸ்ஸாக்களில் இசுலாத்தைத் தழுவிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருப்பதால் இசுலாம் பரவிய வழிமுறைகளை அறியத் துணை புரிகின்றன.
5. இசுலாமிய மார்க்கப் பற்றினை வலியுறுத்துகின்றன.

மஸ்அலா

இசுலாமிய மார்க்கத் தொடர்பான கேள்விகளையும், மறுமொழிகளையும் கொண்ட ஒரு சிற்றிலக்கிய வகையே 'மஸ்அலா' என்பதாகும். (நசிமாபானு,சா., இசுலாமியச் சிற்றிலக்கியங்கள், கட்டுரை, சமரசம், 1-1-81, இதழ், ப.12). 'ஸூஆல்' என்ற அரபுச் சொல்லுக்குக் 'கேள்வி கேட்டல்' என்பது பொருள். அச்சொல்லே 'மஸ்அலா' என்றும், பின்னர் 'மசலா' என்றும் மருவி வழங்குகின்றது. மசலா எனும் இச்சொல் கேள்வி-புதிர், பிரச்சினை போன்ற பல பொருள்களைக் கொண்டதாகத் திகழ்கின்றது.

இசுலாமியக் கலைக்களஞ்சியம், மசலா எனும் சொல்லுக்கு விளக்கம் தருங்கால், இதன் பொருள் தேவை, தேடப்படும் பொருள் என்பதாகும் ஒரு மார்க்க விற்பன்னரிடம் சென்று, மார்க்கம் பற்றித் தேவைப்படும் பிரச்சினைக்கும் பெறும் விளக்கம் 'மஸ்அலா' எனப்படும் (இசுலாமியக் கலைக் களஞ்சியம், மூன்றாம் தொகுதி, ப.652) என்று விளக்குகின்றது.

ஆகவே இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளை விளக்கும் முறையில் அமைந்தவையே 'மசலா நூற்கள்' எனலாம். ஐயத்தெளிவின் அடிப்படையிலேயே இச் சிற்றிலக்கியம் தோன்றியுள்ளது.

இசுலாமிய மார்க்கம் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு அல்லது வினாக்களுக்கு, உரிய ஐயங்களை நீக்கித் தெளிவு பெறத் துணைபுரிவதாக 'மசலாக்கள்' உள்ளன. இலக்கியங்கள்என்ற முறையில் அவற்றைப் படைக்கும் கவிஞன், கற்பனை வளத்தைப் புகுத்திக் கூறும் மிகைக் கூற்றுக்கள் இலக்கிய வகையனைத்திலும் இடம்பெறும். ஆனால் ‘மசலா' இலக்கியத்தில் கற்பனைக்கு இடமில்லை. எனவே ‘மசலா' உண்மை நிலையை விளக்கும் உயர்ந்த இலக்கிய வகையாகும் (அதிரை அஹ்மத், மசலா இலக்கியங்கள், சீறா கருத்தரங்குச் சிறப்பு மலர், உமறுப்புலவர். தமிழ்ப் பேரவை, ப.19).

இசுலாம் தொடர்பாகத் தோன்றும் மசலாக்களுக்குத் தீர்வுகாணத் துணை புரிபவை அல்குர் ஆனும், அல்ஹதீதும் ஆகும். எனவேதான் நபிகள் நாயகம் அவர்கள், உங்களுக்கிடையே நான் இரண்டினை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டால் தீங்கு நேராது. அவையிரண்டும் அல்குர் ஆனும், அல்ஹதீதும் ஆகும் என்றார்.

இசுலாத்தில் காணப்படும் இத்தகைய நெறிமுறையே இசுலாமியத் தமிழ்ப்புலவர்கள் உள்ளத்தில் இடம்பெற்று 'மசலா' எனும் தனி இலக்கிய வகை தோன்றக் காரணமாயிற்று என்று பீ.மு. அஜ்மல்கான் குறிப்பிடுகின்றார்.

மஸ்அலா இலக்கியங்களுக்கு ஆதாரமாக விளங்கும் அல்குர்ஆன், அல்ஹதீது ஆகிய இரண்டிலும் வாழ்வின் நடப்பியல் உண்மைகளே புதைந்திருக்கின்றன. எனவேதான் வற்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றும் இலக்கியங்களும் இத்தகு முறையிலேயே அமைந்துள்ளன.

தமிழக முஸ்லிம்களிடையே வழங்கும் மசலா நூற்களுள், நூறுகேள்விகளையுடைய 'நூறுமசலா’, ‘அதிசய புராணம்', என்று என்ற அழைக்கப்படும். 'ஆயிரம் மசலா', 'தவத்தூது' வெள்ளாட்டி மசலா' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

'நூறு மசலா' பாடியவரின் பெயர் அறியுமாறில்லை. காயல் பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மருதூம் முகம்மது புலவர், இந்நூலின் திருந்திய பதிப்பை வெளியிட்டவர் ஆவார். அந்நூலில் பல இன்னல்களுக்கு ஆளான அப்பாசு என்ற இளவரசன், பகுவீறு நாட்டுக்கு வருகின்றான். அந்நாட்டு ளவரசி மெகர்பான், மசலா எனப்படும் கேள்விகளைக் கேட்டு விடை கூறாதவர்களைக் கொன்று வந்தாள். அப்பாஸ், மெகர்பானிடம் சென்று, அவள் கேட்டநுட்பமான கேள்விகளுக்குத் தக்க விடையளித்தான். இளவரசி மெகர்பன் வினவவும், அப்பாஸ் விடையளிக்கவுமாக அமைந்த நூறு வினாவிடைகளைக் கொண்டதாக 'நூறு மசலா' அமைந்துள்ளது.
நுட்பமான மார்க்க உண்மைகள் இந்நூலில் சுவையாக விளக்கப்பட்டுள்ளன.

அதாவது, மெகர்பான் என்ற இளவரசி, ஒரு மரத்திற்குப் பன்னிரெண்டு கொப்புகள்; ஒவ்வொரு கொப்பிற்கும் முப்பது இலைகள், ஒவ்வொரு இலையிலும் பாதிவெள்ளை, பாதி கறுப்பு, அம்மரத்தில் ஐந்து பூக்கள் இருக்கின்றன; இவற்றை விளக்க வேண்டும்" என்று வினா தொடுக்கிறாள். அதற்கு அப்பாசு, மரத்தினை ஆண்டாகவும், கொப்புகளைப் பன்னிரண்டு மாதங்களாகவும், முப்பது இலைகளை முப்பது நாட்களாகவும், இலையின் வெள்ளையும் கறுப்பும் பகலும் இரவு மென்றும், ஐந்து பூக்களும் தொழுகைக்குரிய ஐந்து வேளைகளெனவும் விடையளிக்கிறான். இவ்வாறே நூறு மசலாக்களுக்கும் சரியான விடையளித்து வெற்றி பெறுகின்றான். தோற்றுப்போன மெகர்பான், அப்பாசுக்கு மனைவியாகிறாள் (அப்துல் கறீம், மு., சுலாமும் தமிழும், கழக வெளியீடு, ப.218) என்பதாக அச்சிற்றிலக்கியம் காட்சிப்படுத்துகிறது.

அடுத்து, அதிசயபுராணம் என்று வழங்கும் ‘ஆயிரம் மசலா' மதுரை வண்ணப் பரிமளப் புலவரால் பாடப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் அருளிய ஹத்துக்கள் இந்நூலில் கூறப்படுகின்றன. இசுலாத்தைப் பற்றி அறியாத யூதர் கேட்ட கேள்விகளுக்கு விடைகூறும் வகையில் 'ஆயிரம் மசலா' அமைந்துள்ளது. யூதர்கள் சார்பாக அப்துல்லா இப்னுசலாம் கேள்விகேட்க, அக்கேள்விகளுக்கெல்லாம் அண்ணல் நபிகளார் விடை பகர்ந்துள்ளார். இந்நூலில் ஆயிரம் கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைந்துள்ளன.

ஆயிரம் மசலாக்களைத் தொடர்ந்து கேட்ட அப்துல்லா இப்னுசலாம், அவற்றுக்கு அண்ணலார் அளித்த மத விளக்கங்கள் மனத்திற்குப் பொருத்தமாயிருந்ததால் மனப்பூர்வமாக எழுநூறு பேரடங்கிய தூதுக்குழுவினரும் விருப்போடு, இசுலாத்தில் இணைந்தனர். இச் செய்திகளை 'ஆயிரம் மசலா' கூறுகின்றது (அதிரை அஸ்மத், ஆயிரமசலா, கட்டுரை, இசுலாமிய இலக்கியச் சிந்தனை, ப.63).

செய்யது அப்துல் காதிறு லெப்பை ஆலிம் என்பவரால் இசுற்றப்பட்ட 'தவத்தூது' என்ற 'வெள்ளாட்டி மசலா' இது உரைநடையில் அமைந்துள்ளது. 669 மசலாக்களை உள்ளடக்கியதாக உள்ளது என அறியமுடிகின்றது.

மசலா இலக்கியக் கொள்கை

1. இசுலாமிய மார்க்கம் தொடர்பாக ஏற்படும் ஐயங்களுக்கு, வினாவிடை முறையில் இந்நூற்கள் விளக்கம் அளிக்கின்றன.
2. இசுலாமியத் திருமுறையாகிய திருக்குர்ஆன், நபிகள் நாயகம் அருளியுள்ள ஹதீதுகள் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு மார்க்க விளக்கங்கள் தரப்படுகின்றன.
3. மசலா நூற்களில் கற்பனைகளுக்கு இடமே இல்லை. உண்மை நிலையை விளக்கும் உயர்ந்த இலக்கிய வகையாக இவை உள்ளன.
4. வினாவிடை அமைப்பின் மூலம் நுட்பமான வினாக்களுக்கும் மிகத்தெளிவாக எளிய நடையில் விளக்கங்கள் தரப்படுவதால் இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளை எவரும் எளிதில் அறிவதற்குத் துணைபுரிகின்றன.

நாமா

'நாமே' என்ற பாரசீகச் சொல்லே தமிழில் 'நாமா' என மருவி வழங்குகின்றது. இச்சொல் கதை, வரலாறு, நூல் என்ற பல பொருள்களைத் தரும். செயற்கரிய செயல் செய்த செம்மல்களின் சிறந்த வரலாற்றைப் பாரசீக இலக்கிய அமைப்பைத் தழுவித் தமிழில் 'நாமா' என்ற பெயரில் புதுவகை இலக்கியப் பிரபந்தத்தை இசுலாமியப் புலவர்கள் பாடினர். (அப்துல் கறீம், மு., இசுலாமும் தமிழும், ப.220). இவ்வாறு முஸ்லிம் புலவர்களால் பாடப்பட்ட 'நாமா' வகையைச் சேர்ந்த 18 நூற்கள் தற்போது கிடைக்கின்றன.

இந்த இலக்கியவகையைப் பற்றி இசுலாமியக் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகையில், "பார்சியிலுள்ள நூல்களின் ஒருவகையாகும் இது. பார்சியில் எழுதப்பட்டுள்ள 'ஸியாஸத் நாமா', 'காபூஸ் நாமா' ஆகிய நூற்கள் பிரபலமானவை. 'ஸியாஸத் நாமா' அரசர்களுக்கான அறிவுரையாக இருக்கின்றது" (இசுலாமியக் கலைக் களஞ்சியம், தொகுதி மூன்று, ப.407) என்கின்றது.

தமிழில் செய்யது அகமது மரைக்காயர் புலவர் பாடியுள்ள 'நூறு நாமா, மதாறு சாகிப் புலவரின் 'மிஃராஜ்நாமா', அப்துல் காதர் சாஹிபின் 'சக்கறாத்து நாமா' ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும்.

'நூறுநாமா' எனும் புதுவகைச் சிற்றிலக்கியத்தைச் செய்யிது அபூபக்கர் எனும் புலவர் பாடியுள்ளார். இவர் 'சின்னச் சீறா' பாடிய பனீ அகமது மரைக்காயரின் புதல்வர் ஆவார். இமாம் கஸ்ஸாலி இசுற்றிய நூலைத் தழுவி, இந் 'நூறு நாமா' இசுற்றப்பட்டதெனக் கூறப்படுகிறது.

தொங்கல் எனும் செய்யுட்கள் அமையப் பாடப்பட்டது 'நூறு நாமா. அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் அமையப் பாடப் பெறுவதே 'தொங்கல்' எனும் செய்யுள் வகை. இருநூற்றுக்கும் மேற்பட்ட தொங்கல் பாக்களைக் கொண்டது. இந்நூல் முழு உலகமும் படைக்கப்பட்ட முறையை 'நூறு நாமா கூறுகின்றது. 'நூர்' என்பதற்கு வெளிச்சம் அல்லது ஒளி எனப் பொருள் கூறப்படுகின்றது. ஒளியினால் உலகம் படைக்கப்பட்டது என்று கூறும் இந்நூல், 'நாமா' எனும் இலக்கிய வகைகளுள் சிறந்ததாகக் கருதப்படுகின்றது (நசிமாபானு.சா., இசுலாமியச் சிற்றிலக்கியங்கள், கட்டுரை, சமரசம்,1-1-81).

இவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் பாடப்பட்டுள்ள 'நாமா’க்களில் சிறந்தது மதாறுசாகிப் புலவரின் 'மிஃராஜ் நாமா' என்பதாகும். அதாவது நபிகள் நாயகம் விண்ணுலகிற்கு ஏகிய நிகழ்ச்சியை 'மிஃராஜ்' என்பது குறிப்பிடுகிறது.

ஹாமு நைனா லெப்பையின் 'இருஹாது நாமா' என்பது, இறைவணக்கத்தை நிறைவேற்றாது வீணில் வாழ்ந்து சென்ற மக்களிடம் இறைவன் எவ்வாறு கேள்வி கேட்டுத் தீர்ப்பளிக்கிறான் என்பதை விளக்குகின்றது.

ஆம்பூர் அப்துல் காதர் சாகிபின் 'சக்கறாத்து நாமா' மரண வேளையில் மனிதன் அனுபவிக்கும் துன்பங்களை அழகுற விவரிக்கின்றது. 'சக்கறாத்து' என்ற அரபுச் சொல் மரணவேளையைக் குறிப்பதாகும். வாழ்க்கையின் இறுதி நேரத்தை நினைவுறுத்தி, மரணவிளக்கம் மனத்தைத் துலக்கும் என்ற மாபெரும் உண்மையை விளக்கியிருக்கும் இந்நூல். மறுமையில் வெற்றியைப் பெற இம்மையில் தொழுகை முதலான இறைவணக்கச் செயல்களை நிறைவுறச் செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றது.

மேலும் சக்கறாத்து நிலையிலிருந்து ஆறுதல் பெறுவதற்குரிய வழியையும் கூறுகின்றது. வாழ்நாள் வீண் நாளாக்காமல் அல்லாவைத் தொழுது வந்தால் ஆறுதல் கிடைக்கும் என உரைக்கின்றது.

வாழ்ந்த காலத்திலெல்லாம் வாழ்ந்து
வல்லோன் தனைவணங்காமல் நீங்காமல்
சூழ்ந்த வினையெல்லாம் உலகிற் செய்து
தொலையாத் துன்பமாய் வீண்நாள் போக்கி
தாழ்ந்து மடிந்திங்கே வந்தபோது
தவிப்பது மிகக் குற்றமாமே!
வாழ்ந்த நாளிலே வணங்கி வந்தால்
வரிசை மிகவுண்ட றாஹத்துண்டு
(அப்துல் காதர் சாகிபு, ஆம்பூர், சக்கறாத்து நாமா, பாடல் 676887-76)

இவ்வாறு 99 பாடல்களைக் கொண்ட ‘சக்கறாத்து நாமா' என்பதில் 'தொங்கல்' எனும் பாவினம் கையாளப்பட்டுள்ளது. இத்தகைய பாக்கள் வேறு தமிழ் நூல்களில் காணப்பட்டாலும், அவை தொங்கல் என்று வழங்கப்படவில்லை. முஸ்லிம் இலக்கியத்தில் மட்டுமே தொங்கல் என வழங்கப்படுகிறது.

வாலை பாவா சாகிபின் 'கோஷா நாமா' என்ற நூல் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய வேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றது. இந்நூலின் 234 பாடலில் பெண்களுக்கான பல அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன (சாயபு மரைக்காயர், மு., இசுலாமியர் தமிழ்த் தொண்டு, ப.25).

நாமா இலக்கியக் கொள்கை

1. வரலாற்றைக் கூறும் சிற்றிலக்கிய வகையே 'நாமா' எனப்படும்.
2. இம்மை இன்பங்களில் மூழ்கி, மறுமையை மறந்து வாழும் மனித சமுதாயத்துக்கு இறைநெறியை உணர்த்துகின்றன.
3. 'தொங்கல்' எனப்படும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலேயே பெரும்பாலான நூற்கள் எழுதப்பட்டுள்ளன.

இசுலாமியப் புலவர்கள் அறிமுகப்படுத்திய பொதுவான சிற்றிலக்கியங்கள்

புதியவை படைத்த முஸ்லிம் புலவர்கள், பழைய மரபைப் பின்பற்றிப் பாடவும் தவறவில்லை. தமிழிலுள்ள சிற்றிலக்கிய வகைகள் அனைத்திலுமே இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் தமது இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

தமிழ் இலக்கிய, இலக்கண மரபையொட்டியே இவ்வகைச் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன. இசுலாமியக் கொள்கைகளுக்கும் பண்பாட்டிற்கும் முரணாக அமையும் சிற்சில இடங்களில் மட்டும் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தேவையான மாற்றங்களைச் செய்துள்ளனர்.

-- கலம்பக இலக்கியங்கள்
-- அந்தாதி இலக்கியங்கள்
-- ஆற்றுப்படை
-- கோவை இலக்கியங்கள்
-- மாலை இலக்கியங்கள்
-- சதக இலக்கியங்கள்
-- திருப்புகழ்
-- கீர்த்தனம்
-- கும்மி
-- சிந்து
-- தாலாட்டு
-- ஏசல்
-- குறவஞ்சி இலக்கியங்கள்
-- பிள்ளைத் தமிழ்

முதலிய சிற்றிலக்கியங்கள், சுலாமியப் புலவர்கள் அறிமுகப்படுத்திய பொதுவான சிற்றிலக்கியங்கள் ஆகும்.

தொகுப்புரை

1. இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் உள்ளடக்கம் இசுலாமியக் கொள்கைகளை உட்படுத்தியே காணப்படுகின்றன.
2. பழைய மரபைப் பின்பற்றிச் சிற்றிலக்கியங்களைப் பாடியதோடன்றி, கால வளர்ச்சிக்கேற்பப் புதுவகைச் சிற்றிலக்கியங்களையும் இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
3. இசுலாமியச் சிற்றிலக்கியங்களை, இசுலாமியர் அறிமுகப்படுத்திய புதுவகைச் சிற்றிலக்கியங்கள் என்றும், இசுலாமியர் வழங்கிய பொதுவான சிற்றிலக்கியங்கள் என்றும் இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
4. படைப்போர் முனாஜாத்து, கிஸ்ஸா, மஸ்அலா, நாமா போன்றவை முஸ்லிம் புலவர்கள் அறிமுகப்படுத்திய சிற்றிலக்கிய வகைகளாகும்.
5. அரபு, பாரசீகம் போன்ற மொழிகளில் புகழ்பெற்ற இலக்கிய வகைகள் தமிழ் வடிவம் பெற்றுள்ளன.
6. முஸ்லிம் புலவர்கள் அறிமுகப்படுத்திய சிற்றிலக்கிய வகைகளை, இசுலாம் மதத்துக்கே உரிய சிறப்பிலக்கிய வகைகள் என்று சொல்லாம். முஸ்லிம் அல்லாத பிறரால் ப்புதிய வகைகள் இசுற்றப்படவில்லை என்பது இச்சிற்றிலக்கியங்களின் சிறப்பை உணர்த்தும்.
7. இசுலாமிய நெறிமுறைகளைப் பாமரர்களுக்கும் விளங்கும் வகையில் எளிய நடையில் விளக்குவதும் இசுலாமியக் கோட்பாடுகளை அமைதியான முறையில் பரப்புவதுமே இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் அடிப்படையான இலக்கியக் கொள்கை எனலாம்.
8. இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் பாடுபொருள் அனைத்துமே இசுலாத்தின் நெறியாகவும், இசுலாமியப் பெரியார்தம் வாழ்வு வழி சிறக்கும் மறை நெறியாகவுமே
உள்ளன.
9. இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் பெரும்பாலும் சமய நெறி சார்ந்தவையாகவே உள்ளன.
10. இசுலாமியச் சிற்றிலக்கியங்களில் பிற சமயக் காழ்ப்பையோ, அனைவரையும் மதம் மாற்றச் செய்யும் சமயப் பிரச்சாரத்தையோ காண இசுலாது.
11. மனித வாழ்வை மேம்பாடுடையதாக்கும் நோக்கமே இவற்றின் இலட்சியமாக இருக்கின்றது.
12. இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் யாவுமே பேரின்பப் பொருளையே பெரிதும் பாடுகின்றன. சிற்றின்பப் பொருளைப் பாடுவதாக ஒரு நூலைக் கூட முஸ்லிம் புலவர்கள் எழுதவில்லை.
13. அரபு, பாரசீக இலக்கிய அமைப்பைச் சார்ந்தெழுந்த இசுலாமியச் சிற்றிலக்கியங்கள், தமிழ் மண்ணையும் மரபையும் மறவாத வகையில் அமைந்துள்ளன.
14. இசுலாம் பரவிய வழிமுறைகளை அறியத்துணை புரிகின்றன.
15. ஏற்கெனவே தமிழிலுள்ள சிற்றிலக்கிய வகைகளைப் பாடும் போது, இசுலாமிய மரபிற்கும் அறநெறிக்கும், ஒவ்வாத கூறுகளை ஒதுக்கிவிட்டு இசுலாமியக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே லக்கியங்களைப் படைத்துள்ளனர்.
16. இசுலாமிய மார்க்கம் தொடர்பாக ஏற்படும் ஐயங்களுக்கு, திருக்குர் ஆன் மற்றும் நபிகள் நாயகம் அருளிய ஹதீதுகள் ஆகிய இரண்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விளக்கங்கள் தருகின்றன.
17. தனிமனிதன் புகழ்பாடும் சிற்றிலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் பாடவில்லை. எவரையும் பாராட்டிப் பயன்பெறுவதற்காக நூற்களை இசுற்றும் போக்கு இசுலாமியச் சிற்றிலக்கியங்களில் காணப்படவில்லை.
18. மது அருந்துதல், திருடுதல், விபச்சாரம், சூதாடுதல், வட்டிவாங்குதல், பொய்பேசுதல் போன்ற தீயொழுக்கங்கள் சாடப்படுவதோடு, இசுலாமிய நெறிகளுக்குட்பட்டு வாழும் முறையும் விளக்கப்படுகின்றன.
19. ஒழுக்கத்தை வலியுறுத்துவதே இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் உயிர்ப்பாக உள்ளது.
-----------------------

3. படைப்போர் இலக்கியங்கள்


தமிழிலக்கிய வரலாற்றில் அறிமுகமாகாத இசுலாமியத் தமிழ் இலக்கியப் பிரிவுகள் எண்ணற்றவை. அவற்றுள் ஒன்றே படைப்போர் எனும் இலக்கியப் பிரிவாகும்.

தமிழில் படைப்போர் இலக்கிய வகையின் தோற்றம்

இசுலாமியக் கருத்துகளைத் தமிழ் மக்களது உள்ளத்திலே பரப்பிட வேண்டும் என்ற ஆதங்கத்தில் முஸ்லிம் புலவர்கள் இசுலாத்தின் வரலாற்றை அதன் பின்னணியுடன் எடுத்துரைக்க முற்பட்டனர். அவ்வாறு முற்பட்ட முஸ்லிம் புலவர்களது மனத்தைப் பெரிதும் கவர்ந்தவை இசுலாம் எதிர்கொண்ட போர் நிகழ்வுகள் எனலாம். இவர்களது எண்ணத்திற்குமுன் மாதிரியாகத் தமிழ் மரபிற்கேற்ப செய்யுள்களை இசுற்றினர். அவற்றிற்கு ஏனைய இசுலாமியத் தமிழிலக்கியங்களைப்போன்ற அரபு, பாரசீக மொழிகளின் பெயர்களையும் சூட்டாது இதுவரையில் இருந்து வந்த பிற தமிழிலக்கிய வகைகளின் பெயர்களையும் வைக்காது பொருள் விளக்கமுறும் வகையில் தனித்தமிழில் 'படைப்போர்' எனும் இலக்கியப் பெயர் சூட்டித் தனித்ததொரு இலக்கிய வகையை உருவாக்கினர்.

இவ்வாறு தனித்ததொரு இலக்கியவகையை முதன் முதலில் தமிழிலக்கிய உலகில் உருவாக்கிய பெருமை, முஸ்லிம் தமிழ்ப் புலவர் வரிசை முகிய்யித்தீன் புலவரையே அவர்களையே சாரும். இவர் ஈராக்கினை ஆண்டு வந்த சக்கூன் எனும் அரசனுடன் பெருமானார் நபி (சல்) எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொண்ட வரலாற்றை 'சக்கூன் படைப் போர்' எனும் தலைப்பில் கி.பி. 1686இல் அரங்கேற்றினார். இப் படைப்போர் இலக்கியத்திற்குப் பின்பே ஏனைய இத்தகைய இலக்கியங்கள் இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் இடம் பெறலாயின.

சக்கூன் படைப்போர்

படைப்போர் இலக்கியங்களின் காலத்தால் முதன்மை நிலை பெறுவது சக்கூன் படைப்போர் ஆகும். படைப்போர் இலக்கியங்களுள், சக்கூன் படைப்போர் முதன்மை நிலை பெறுவதுடன் இசுலாமிய தமிழிலக்கிய வரலாற்றின் தொடக்க கால இலக்கியங்களாகக் கருதப்படும் முதல் பத்து இசுலாமியத் தமிழ் இலக்கியங்களுள் ஏழாவது நிலையும் பெறுகிறது.

ஹிஜ்றி 1098ஆம் ஆண்டு சக்கூன் படைப்போர் இசுற்றப்பட்டது. சக்கூன் படைப்போர் முஸ்லிம் அல்லாத கூட்டத்தாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற போரினையே விவரிக்கின்றது.

சக்கூன் என்பவன் முஸ்லிம் அல்லாதவர்களின் கூட்டத்திற்கு தலைவனாவான். இது பெருமானார் நபி (சல்) காலத்தில் நடைபெற்ற போர்களுள் ஒன்றாகும். முஸ்லிம் அல்லாத அரசனான சக்கூன் ஈராக் நாட்டின் அரசனாக இருந்தவன். அவனிடத்துப் பெருமானார் நபி (சல்) அவர்கள் இசுலாத்தின் ஏகத்துவ இறைவழிபாட்டு நெறிமுறைகளை வலியுறுத்த வேண்டி மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே போர் நிகழ்ந்தது. போரில் சக்கூன் தோற்கடிக்கப்பட இறுதியில் சக்கூனும் அவனது கூட்டத்தாரும் நபி (சல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இசுலாத்தின்மீது ஈமான் கொண்டு முஸ்லிமாக மாறுகின்றனர். இறுதியில் இசுலாத்தின் ஏற்றத்தைச் சக்கூனும் அவனைச் சார்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டதால் அவன் இழந்த நாட்டினை அவன் வசமே மீண்டும் ஒப்படைத்து அவனையே அரசனாக இருந்து இசுலாத்தின் வழியில் ஆட்சி புரியும்படி செய்வித்தார் நபி (சல்). இதுவே சக்கூன் படைப்போரின் கதை.

ஐந்து படைப்போர்

படைப்போர் இலக்கிய வரிசையில் காலத்தால் iரண்டாவது நிலையில் தோன்றியது ஐந்து படைப்போர் ஆகும். இதனை இயற்றியவர் காயாமொழி ஊரை அடுத்த பூவை மாநகரத்தைச் சார்ந்த, யூசுபு நபி காவியத்தின் ஆசிரியரான கந்தப்பிள்ளைப் புலவரவர்களின் குமாரர் ஹஸனலிப் புலவராவார். படைப்போர் இலக்கியத்திற்கு இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் வழிகாட்டியாக இருந்த சக்கூன் படைப்போர் தோன்றியதற்கு ஐம்பத்தொரு ஆண்டுகளுக்குப் பின்பே ஐந்து படைப்போரை ஹஸனலிப் புலவர் இயற்றியுள்ளார்.

தலைப்பிற்கு ஏற்ப ஐந்து படைகளது போர்ச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஐந்து படைகளது போர்களும் முஸ்லிம் மக்கட்கும் முஸ்லிம் ஏகத்துவ இறைவழிபாட்டுக் கொள்கைக்கு எதிரான இனத்தவருக்குமிடையே நடைபெற்றதாகும். ஐந்து படைப்போரில் உட்பிரிவுகளாக,

-- இபுனியன் படைப்போர்
-- உச்சி படைப்போர்
-- வடோச்சி படைப்போர்
-- தாகி படைப்போர்
-- இந்திராயன் படைப்போர்


எனும் ஐந்து வெவ்வேறு தலைப்புகளில் போர்ச் செய்திகள் முறையாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்த உட்பிரிவுகளின் தலைப்புகளில் இடம்பெற்றிருக்கும் இபுனியன், உச்சி, வடோச்சி, தாகி, இந்திராயன் முதலான பெயர்கள் அந்தந்த உட்பிரிவுகளின் போரில் முஸ்லிம் அல்லாதாரின் கூட்டத்திற்குத் தலைமையேற்று வரும் தலைமை மாந்தர்களின் பெயர்களே. படைப்போர் இலக்கியம், போருக்கு முக்கியத்துவம் தருவதால் போரில் தலைமையேற்று வரும் எதிரிடை மாந்தர்களின் பெயரையே தலைப்புகளாகப் பெற்றுள்ளன. மேலும் இசுலாமிய வரலாற்றுச் சகாப்தத்தில் தொடக்கக் காலக் கட்டத்திலிருந்து இன்றுவரை இடைப்பட்ட போர்க்களங்கள் எண்ணற்றவைகள். ஆனால் அப்போர்களுள் எவையேனும் வலிந்து மேற்கொள்ளப்படவில்லை.

அல்லாஹ்வின் அல்குர் ஆன் கட்டளையின்படி 'எவர்கள் விசுவாசங் கொண்டு தங்கள் ஊர்களிலிருந்து வெளிப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தத்தம் செய்து யுத்தம் புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்வினிடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். அத்தகையோர் தாம் நிச்சயமாக சித்தியடைந்தோர் (9:20) என்பதற்கேற்ப மேற்கொள்ளப்பட்ட தற்காப்புப் போர்கள். எனவே கொள்கை முரண்பாடு காரணமாக பகைவர்கள் மேற்கொண்ட தாக்குதலை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்பந்தம் இசுலாத்திற்குத் தொடக்கக் காலத்திலிருந்தே எதிர்ப்பட்டது.

ஐந்து படைப்போரில் இடம்பெற்றிருக்கும் ஐந்து படைப்போர்களு ம் வெவ்வேறான பெயர்களில் அமைந்திருப்பினும் இவை ஐந்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய, தொடர் போர் நிகழ்வுகளாகவே உள்ளன. இவ்வைந்து படைப்போர்களும் வெவ்வேறானவை என எண்ண முடியாத அளவிற்கு ஒன்றின் முடிவுடன் அடுத்த படைப்போரின் தொடக்க நிகழ்வுகள் தொடர்பு கொண்டுள்ளன. அடுத்தடுத்து வரும் போர்ச் செய்திகளை அதற்கு முந்திய பகுதிகளில் தெரிவித்து விடுவதால் ஐந்து படைப்போர் செய்திகளைப் படித்து வருவோர்க்கு ஒரே நிகழ்ச்சியின் தொடர்ச்சி என்ற எண்ணம் ஏற்படுகிறது.

ஒவ்வோர் படைப்போர் செய்திகளையும் விவரிக்கத் தொடங்கும் முன் ஆசிரியர் இது 'ஐந்து படைப்போரில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது
மூன்றாவது,நான்காவது, எனக் குறிப்பிடுகிறார். எனவே இவற்றுள் ஒன்றேனும் இடையில் விடுபடுமானால் அது முழுமையான நிறைவு பெற முடியாது.

ஐந்து படைப்போரிலும் தொடக்கத்தில் காப்பு-வெண்பா மட்டுமே தனித் தனியே இடம் பெற்றுள்ளது. ஆனால் முதல் படைப்போராக அமைந்துள்ள இபுனியன் படைப்போரின் தொடக்கத்தில் மட்டுமே கடவுள் துதி,அவையடக்கம், நூல் அரங்கேற்றிய காலம் பற்றிய குறிப்பு, அரங்கேற்றம் நிகழ்ந்த சூழல் முதலான பல்வேறு தகவல்கள் குறிக்கப் பட்டுள்ளன. ஐந்து படைப்போரினைப் பற்றிய விவரத்தை அறிந்து கொள்வதற்குரிய இக்குறிப்புக்கள் இதில் அடங்கியுள்ள ஐந்து பகுதிகளுக்கும் பொதுவானவை ஆகும். மேலும் இம் முதல் பகுதியான இபுனியன் படைப்போரிலேயே நபி நாயகத்தின் வரலாறு, இபுனியன் வரலாறு, இபுனியன் இசுலாமிய மார்க்கத்திலிருந்து புறம்பான பாதையில் நிற்பது, அவனது படைபலம், அவனிடம் நபி நாயகம் கலீது அவர்களை தூதனுப்புதல், அதனை இபுனியன் மறுத்தல், பின் போர்ச் சூழல், அதில் அலியார் பங்கு பெறல் முதலான போருக்கு அடிப்படையான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. போரின் தொடக்கம் எப்போது? ஏன்? என்ற வினாவுக்குரிய பதில்கள் இபுனியன் படைப்போரின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளன. ஏனைய நான்கு போர்ப் பகுதிகளிலும் போரின் தொடக்கம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றிய விவரங்களை அறிய முடியாது.

ஐந்து படைப்போர் முழுமையும் அலி (றலி) அவர்களே தலைமைப் பாத்திரப் படைப்பாகவுள்ளார். அதனை,

மூமினா னோரையெல்லா முறையாகவே பணிவேன்
ஆமினார் பெற்றெடுத்த ஆலநமி நம்மிறசூல்
பெற்றெடுத்த பாத்திமத்துப் பெண்ணாரி னற்புருடர்
கத்தனரு ளோங்கும் அலி காரணமாம் வென்றபடை
இம்மா நிலமதனி லெல்லெவருங் கேட்பதற்குப்
பெம்மா னினல்ல பெரிய வருளாலே
(ஐந்து படைப்போர் : இபுனியன் படைப்போர் கண்ணி 20-23)

படைப்போரின் தொடக்கத்தில் ஆசிரியர், சுட்டியுள்ள கண்ணிகளின் மூலமாக அறியலாம். ஐந்து படைப்போரின் தொடக்கத்தில் காப்பு-வெண்பா இவ்வாறு உள்ளது.

பூமுதல் யாவையுமே பொற்பா யமைத்தளிக்கும்
மாமுதலே யெங்குநிறை வள்ளலே-கோமகனாம்
ஏதிபுனி யன்படைப்போ ரியான்சொலவே யெவ்வுயிருங்
காதல்கொளு மாண்டவனே காப்பு

அதன்பின் கடவுளர் துதி பிரிவின்கீழ்ப் துதி என்ற பத்தொன்பது கண்ணிகள் உள்ளன. இத்துதியில் 'அவனுக்கே எல்லாப் புகழும்' என்று பொருள்படும் அல்ஹம்து வில்லாஹி எனத் தொடங்கப்பட்டுள்ளது. இதன்பின் முறையாக வந்துதித்த சீர்முஹம்மது, 1,24,000 நபிமார்கள், அபூபக்கர் (றலி) உமர் (றலி) உதுமான் (றலி) அலி (றலி) முதலான கலீபாக்கள், முகியித்தீன் ஆண்டகை, சதக்கத் துல்லா அப்பா முதலான இறை நேசச் செல்வர்கள் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளார்கள். இறுதியாக அசனலிப் புலவர் தம் தந்தையையும் புகழ்ந்துரைத்துள்ளார்

அந்தமுள தென்பூவைக் கன்பாக வந்துதித்த
கந்தப்பிள்ளை பாதங் கருணையுடனே புகழ்வேன்
(ஐந்து படைப்போர்; இபுனியன் படைப்போர் ; கண்ணி : 19)

இவ்வரிகளின் மூலம் அசனலிப் புலவரது தந்தையின் பெயர் கந்தப்பிள்ளை என அறியப்படுகிறது.

-- இபுனியன் படைப்போர்

முதலாவது படைப்போரான இபுனியன் படைப்போர் ஐந்து படைப்போரின் 49ஆவது கண்ணி முதல் 922 கண்ணி வரை விவரிக்கப்பட்டுள்ளது. குறாசான் எனும் பதிக்கு அரசனான, கொடுங்கோலாட்சி செலுத்தும் இபுனியனுக்கு நல்வழிகாட்டும் பொருட்டுப் பெருமானார் நபிகள் நாயகம் (சல்) காலித் என்பாரைத் தூதனுப்புகிறார். அது கண்டு கோபமுற்ற இபுனியன் மதீனாவில் வீற்றிருக்கும் நாயகத்தை (சல்) நோக்கிப் பெரும்படையுடன் போர் தொடரும் பொருட்டுப் டையெடுத்து வருகிறான். அப்போது தற்காப்புப் போருக்கான அவசியம் நாயகத்திற்கு (சல்) ஏற்பட்டது. இத் தற்காப்புப் போருக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்கும் பணியை ஹஜ்ரத் அலி (றலி) அவர்கள் ஏற்று நடத்திடப் போர்மூண்டு இறுதியில் இபுனியன் கொல்லப்படுகிறான். போரின் இறுதியில் கணவன் இறந்த செய்தியறிந்து இபுனியனின் மனைவி ஒப்பாரி வைக்கிறாள்.

என்னைவிட்டுப் போனீரே யெப்போ துமைக்காண்பேன்
மன்னவரே யென்று மாரடித்தாள் மாமயிலாள்

எனத் துயருகிறாள். இதன் பின் இபுனியன் மனைவி இச்செய்தியை இந்திராயன் எனும் மன்னனுக்குத் தெரியப்படுத்துவதுடன் முதலாவது படைப்போர் முடிவுறுகிறது.

-- உச்சி படைப்போர்

இபுனியன் படைப்போரைத் தொடர்ந்து இடம் பெற்றிருப்பது உச்சி படைப்போராகும். இது முறுத்தானை ஆட்சி புரியும் இந்திராயன் பற்றிய செய்தியுடன் தொடங்குகிறது. இந்திராயனுக்கு இரு மகள்கள். அவர்களுள் மூத்தவளைத் தாகி என்பவனுக்கு மண முடித்துள்ளான். இரண்டாமவளான பனிமதியை மணமுடிப்பதற்கான வரன் தேடும் நிலையிலேயே இபுனியன் இறந்த செய்தி அவனது மனைவி மூலமாக இந்திராயனுக்கு வந்தடைகிறது. இந்நிலையில் அலியின்(றலி) தலையை யார் கொண்டு வருகின்றார்களோ அவர்களுக்கே பனிமதியை மணமுடித்துக் கொடுக்கப்படும் என இந்திராயன் அறிவிப்புச் செய்தான். அத்துடன் பெரும் கோபங்கொண்டு,

பேயனலி யென்பவனைப் பேய்க்குவிருந் தாகிடவே
காயந் தனையறுத்துக் கண்டமிட்டுத் தான் தலையை
கொண்டு வந்தார் சீமையிலே கண்டதொரு பாதியும் நான்
இன்றுதரு வேன்மகளையேற்றுகலி யாணஞ்செய்தே
(உச்சிப் படைப்போர்: கண்ணி:60-61)

என்று கூற இதனைக் கேள்வியுற்ற உச்சி என்பான் அலியைப் போரில் தோல்வியடையச் செய்து கொண்டு வருவதாகச் சபதம் ஏற்றுப் போருக்குத் தலைமை ஏற்றுப் புறப்பட்டான்.

உச்சி தலைமையில் இந்திராயனின் படை, போருக்குப் புறப்பட்டது. அங்கு உச்சி படைகளுடன் ஹஜ்ரத் அலி (றலி) அவர்களது படைகள் நடத்திய போர் மிகவும் கடுமையானதாக அமைந்தது. அப்போரினை,

காலாட் படையுடனே காலாள்களு மெதிர்த்தார்
வேலாட் படையுடனே வேலாள்களும் மெதிர்த்தார்
பட்டையத்தார் தம்முடனே பட்டையத்தார் தாம்பொருதார்
ஒட்டகத்தார் தம்முடனே யொட்டகத்தார் தாம்பொருதார்
வேற்காரர் தம்முடனே வேற்காரர் தாம் பொருதார்
மாற்காரர் தம்முடனே மாற்காரர் தாம் பொருதார்
வாட்காரர் தம்முடனே வாட்காரர் தாம் பொருதார்
மாழ்க்காரர் உச்சிபடை, பாரை வளைந்தனபோல்
கார்மழை சொரிந்தனபோற் கடுவாளிதான் சொரிந்தார்
போர் தனிலே நின்று . . . . . . .
(உச்சி படைப்போர் : கண்ணி : 162-166)

எனப் போரில் காணப்பெறும் எதிரிப் படையின் அழிவினையும் ஆசிரியர் பல கண்ணிகளில் வர்ணித்துள்ளார். அலி (றலி) அவர்களது படைகளிலிருந்து பன்மடங்கு அதிகமுள்ள உச்சி படை அவர்களை வளைத்துக் கொண்டமை 'சிங்கத்தை ஆட்டினங்கள் சேர வளைத்ததுபோல்' இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உச்சிபடைப் போரினை அசனலிப்புலவர் 392 கண்ணிகளில் எடுத்துரைத்துள்ளார். இதில் பல கண்ணிகளில் அலி (றலி) அவர்களது குதிரையான 'துல்துல்' என்பதன் ஆற்றல் விளக்கப்பட்டுள்ளது. அலி (றலி)யின் திறமையான போருக்குமுன் ஈடு கொடுக்க முடியாத உச்சி இறுதியில் பின்வாங்கி ஓடி மாண்டு விடுகிறான். இச் செய்தியைப் போரிலிருந்து உயிர் பிழைத்து ஓடியோர் மன்னர் இந்திராயனிடத்து எடுத்துக் கூறுவதுடன், உச்சி படைப்போர் முடிவுறுகிறது.

-- வடோச்சி படைப்போர்

உச்சி தோற்கடிக்கப்பட்டதைக் கேட்ட இந்திராயன் கோபங் கொண்டான். உள்ளக்கிடக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கையில், அங்கே வட்ட மண்டல மன்னன் வடோச்சி என்பவன் வந்தான். இந்திராயன் வடோச்சிக்கு நடந்தவற்றைக் கூறினான். நிகழ்ந்த அனைத்தையும் கேட்ட வடோச்சி இந்திராயன் நிலைமையைக் கண்டு வருந்தினான். ந்நிகழ்ச்சியுடன் மூன்றாவது படைப்போரான வடோச்சி படைப்போரை ஆசிரியர் துவக்கம் செய்துள்ளார்.

படைத்த ஆதிதான் தடுத்தாலும் அலிதனை இங்குக் கொண்டு வருவேன் என்று இந்திராயனுக்கு உறுதி கூறினான். இந்திராயன் அளவிலா மகிழ்ச்சியடைந்தான். தனது மகளை வடோச்சிக்குத் திருமணம் செய்வதாகக் கூறினான். வடோச்சி அலியைக் கொன்று வருவதாக எழுதிக் கொடுத்தான்.

வடோச்சி போருக்குப் புறப்படுமுன் போரில் வெற்றி பெற்றால் தனக்குக் கிடைக்க இருக்கும் பெரும் பேற்றினைப் பற்றி எண்ணினான். இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் அரச மாளிகையில் பனிமதி உலாவி வருவதைக் கண்டான்; கண்டு உள்ளங் குளிர்ந்தான். அவளின் ஒப்பற்ற அழகு அவன் உள்ளத்தில் பதிந்தது.

வடோச்சியும் மிக்க அழகுள்ளவன். பலம் வாய்ந்தவன். ஆற்றல் படைத்தவன். அழகில் சீவகனும் ஒப்பாக மாட்டானாம். தண்டாயுதமெடுத்தால் வீமனையும், வில்லெடுத்தால் அர்ச்சுனையும் தோற்கடிக்கும் ஆற்றல் படைத்தவனாம். நளன் கூட இவன் வடிவுக்கு நிகரற்றவனாம். கொடையில் கர்ணனும் தோற்றுப் போவானாம். இவ்வாறு வடோச்சி பலவாறாக வர்ணிக்கப்பட்டுள்ளான். அவ் வர்ணனைகளைப் பின்வருமாறு ஆசிரியர் பாடுகிறார்.

இன்னமதுர சீவகனு மிங்கிவனுக் கொவ்வாது
கனமகுட ராஜர்களுங் கலங்குவா ரேயவர்க்கு
தண்டா யுதமெடுத்தாற் றான்வீமன் தோற்றிடுவான்
நன்றான வில்லெடுத்தால் நல்விஜயன் தோற்றிடுவான்
நளனு மிவன்வடிவி னான்கிலொன்று காணானே
பழகுமிவன் வடிவு பார்க்கிலரிச் சந்திரனாம்
கர்ணனிவன் கொடைக்குக் கால்வாசி காணாது
தர்மமிக னீதந் தனக்குநிகர் காணாது
இன்னமவன் வெற்றிசொல்லிங் கென்னால் முடியாது
(வடோச்சி படைப்போர்: கண்ணி : 438-447)

இத்தகைய பண்புகள் படைத்த வடோச்சி மதிமயங்கினான். உள்ளங் குலைந்தான். செய்வது இன்னதென்றறியாது தடுமாறினான். வடோச்சியின் இந்நிலையை அவன் நண்பன் கண்டான். இந்நிலைக்குக் காரணம் என்ன என்று வினவினான். பனிமதியைக் கண்டு தனதுள்ளம் பறிபோனதை வடோச்சி கூறினான். தொடர்ந்து போர்ச் செய்திகளை மட்டுமே விவரிக்காமல் இடையில் இத்தகு வர்ணனைகளைச் சேர்த்துச் சுவை உண்டாக்குவதை அசனலிப் புலவர் ஓர் உத்தியாகவும் பயன்படுத்தியுள்ளார் எனலாம்.

உச்சியின் படையைக் காட்டிலும் பெரிய படையுடன் வடோச்சி போருக்குச் சென்றான். படைகள் ஏழு சமுத்திரமும் ஒன்று திரண்டு போவதுபோல் காட்சியளித்தனவாம். அப்படைகள் போவதினால் மேலே எழும்பும் தூசி சூரியனையே மறைத்து விட்டதாம். இக்கருத்துகளையே பின்வரும் கண்ணிகளில் அமைத்துள்ளார்.

வாசமுட னாயுதங்கள் வாய்ப்பா யெடுத்தணிந்து
ஆளுமந்தப் பொற்றேரி லான வடோச்சியர் கோன்
ஏழு சமுத்திரம்போ லேகினான் சேனையோடும்
ஆதித் தனுமறைந்தா னந்தரத்திற் றூசியதாய்
(வடோச்சி படைப்போர் : கண்ணி:482-484)

வடோச்சியும் படைகளும் அரபு நாட்டினூடாக மக்கமா நகருக்கு வெளியே சென்றனவாம். வடோச்சிக்கும் முஸ்லிம் மக்களின் தூதுவர்க்குமிடையே உரையாடல் நடைபெற்றது. வடோச்சி தான்வந்த காரணத்தைக் கூறினான். அலியாரைக்கொன்று அவர்தம் தலையைக் கொண்டுபோய் இந்திராயனுக்குக் காட்டவேண்டும் என்று கூறினான். வெவ்வேறான உரையாடல் நிகழ்ந்தபின் அலியார் அவ்விடம் வந்தார்கள்.

வடோச்சியும் தான் வந்த காரணத்தை உள்ளவாறே கூறினான். இவற்றையெல்லாம் கேட்ட பிறகு அலி (றலி) அவர்கள் வடோச்சியை இசுலாத்தைத் தழுவும்படி அழைத்தார்கள். வடோச்சியும் இசுலாத்தைத் தழுவ உடன்பட்டான். போர் புரிந்து வாகைமாலை சூடவந்த வடோச்சியும் படை வீரர்களும் இசுலாத்தைத் தழுவினர். இதனை,

சூரியனைக் கண்டதுய்ய நல்ல தாமரைபோற்
காரியமென்றே யலியைக் கண்டவர்களுள் மகிழ்ந்தே
வாரியென வந்த வடோச்சியர் கோ னும்படையும்
கோரியாய் தானே குணமான நல்மனதாய்
ஈமான் தனைமனதி லெண்ணியலி யைப்புகழ்ந்தார்
கோமா நபிக்கீமான் கொண்டான் வடோச்சியர்கோன்
(வடோச்சி படைப்போர் : கண்ணி : 614-616)

என ஆசிரியர் வர்ணிக்கிறார்.

வடோச்சி படைப்போரின் நிகழ்வுகள் இத்துடன் முடிவுற அடுத்து நான்காவது படைப்போர் தொடர்கிறது. வடோச்சி படைப்போரில் மொத்தம் 315 கண்ணிகள் இடம்பெற்றுள்ளன. வடோச்சி படைப்போர் ஏனைய நான்கு படைப்போர் பகுதியிலிருந்து சற்று மாறுபட்டுள்ளது. இப்படைப்போரில் போருக்கு வடோச்சி ஆயத்தமாகி வரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளனவே தவிரப் போர் நிகழ்ச்சிகள் முன்னரே வடோச்சியின் மனமாற்றம் நிகழ்வதால் போர் தவிர்க்கப்படுகிறது. இந்நிலை இசுலாம் எதிர்கொள்ளும் போர்கள் அனைத்தும் பகைவரிடம் பகைமை பாராட்ட அல்ல என்பதை மெய்ப்பிக்கிறது. தற்காப்பிற்காகவே இசுலாம் போர்களை எதிர்கொண்டது. இசுலாம் விரும்பியதும் வலியுறுத்தியதும் பகைவர்களின் மனமாற்றமே. இதனை நன்கு உணர்த்துவது வடோச்சி படைப்போராகும்.

-- தாகிப் படைப்போர்

மூன்றாவது படைப்போருக்குப்பின் தாகிப் படைப்போர், நான்காவதாக 707ஆவது கண்ணியிலிருந்து தொடங்குகிறது. வடோச்சி இசுலாத்தைத் தழுவினார். தாகியின் கோட்டையை முற்றுகையிட எண்ணினார். அலி (றலி) அவர்களின் ஒத்துழைப்பை வேண்டினார். எப்படியாவது தன் எண்ணத்தை நிறைவேற்றக் கங்கணம் கட்டினார். தாகியைக் கொன்றால் தன் ஆசை நிறைவேறும் என்று எண்ணினார். அதனால், தாகியின் கோட்டையைப் படைகளுடன் வளைத்தார். கோட்டையை முற்றுகை-யிட்டனர். அப்போது தாகியிடத்தில் ஒரு தூதன் அனுப்பப்பட்டான் அத்தூதன் நல்வழியைப் பின்பற்றும்படி தாகியிடம் எடுத்துரைத்தான். அவ்வறிவுரைகள் அனைத்தும் அவனது காதில் ஏறவில்லை. தாகியின் நிலைமையை தூதனுக்கு நன்கு விளங்கியது. அறிவுரைகள் கூறுவதில் பயனில்லை என்று கண்டான். அலி (றலி)யையும் தாகியையும் ஒப்புநோக்கிக் கூறினான். பல உவமைகளைக் கையாண்டான். அலியை (றலி) முள்ளுள்ள கொம்பாகக் கொண்டால், தாகிமுள்ளில்லாத கொம்பாவான். தாகி தேன் இல்லாத பூவாக ஒப்பிடப்பட்டால் அலி (றலி) தேன் நிறைந்த பூவாவார். இக்கருத்துகளை,

முள்ளுள்ள கொம்பலிகாண் முள்ளில்லாக் கொம்பே நீ
கள்ளில்லாப் பூ நீயே கள்ளுள்ள பூவலிகாண்
(தாகி படைப்போர் : கண்ணி : 750)

என இந்நூலாசிரியர் அசன்அலிப் புலவர் கூறுகிறார்.

இத்தகைய அறிவுரைகள் பயன்படவில்லை. தாகி போருக்கு ஆயத்தமானான். போர்க்கோலம் பூண்டான். இரு சாரார்க்கும் இடையே போர் மூண்டது. கடுமையாகப் போர் நடந்தது. பற்பல ஆயுதங்களால் அளவிடற்கரிய இன்னல்கள் நிகழ்ந்தன. இருசாராரும் அம்புமாரி பொழிந்தனர். இவ்வாறு அம்பு மழையை பொழிவதின் பயனாகச் சூரியனைக் காண முடியவில்லையாம். ஒன்றோடொன்று நெருக்கமான மிகப் பல அம்புகள் எய்யப்பட்டதால் அந்த அம்புகள் ஆதித்தனையே மறைத்து விட்டனவாம்.

ஆயுதங்க ளெல்லா மழியப் பொருதனரே
வாய்மதங்கள் பேசி வலியகணை கொண்டெறிவார்
ஆதித் தனுமறைந்தா னம்புமழை யாலுடனே
(தாகி படைப்போர் : கண்ணி : 766-767)

மேலும் தாகிக்கு அறிவுரை கூறப்பட்டது. தாகியோ அவ்வுரைகளைப் பொருட்படுத்த-வில்லை. போர் புரிவதிலேயே மூழ்கியிருந்தான். அலி (றலி) அவர்களால் கொல்லப்படுமுன் நல்வழியைப் பின்பற்றுமாறு புத்திமதி சொல்லப்பட்டது. ஆனால் போர் தொடர்ந்து நடைபெற்றது. பலர் மாண்டனர். படைகள் அழிக்கப்பட்டன. பிணங்கள் குன்றுபோல் குவிந்து கிடந்தனவாம். யானை வீரர் யானையுடனே மாண்டனராம். குதிரை வீரர் குதிரையுடன் மாண்டனராம். இத்தகைய பல கொடூரக் காட்சிகள் அப்போர்க்களத்தில் காணக்கிடக் கின்றனவாம்.

இவ்வாறு நடைபெற்ற போரின் இறுதியில் தாகி தோற்கடிக்கப்பட்டான். வெட்டுண்டான். தாகியின் தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டது. வடோச்சிக்கு அளவிலா மகிழ்ச்சி உண்டாகியது. தன் எண்ணம் நிறைவேறப் போவதாக உள்ளம் குளிர்ந்தார் வடோச்சி. தாகியின் தலை அலியின் (றலி) தலைபோல் இருக்கக் கண்டார். தாகியின் துண்டிக்கப்பட்ட தலையைக் கொண்டு இந்திராயனிடம் சென்றார். அலி (றலி)யின் தலையெனக் காட்டி பனிமதியை மணக்கவே விரைந்து சென்றார்.

தாகி கொலையுண்டது, தாகியின் மனைவியாகிய இந்திரயனின் மூத்த புதல்விக்கு எட்டியது. அவளுக்குப் பொறுக்க முடியாத துக்கம் ஏற்பட்டது. துக்கத்தை வாய்விட்டுக் கூறினாள். தாகியின் ஆற்றலைக் கூறி உள்ளம் நொந்தாள். பதைபதைத்தாள். இச்செய்தியுடன் தாகி படைப்போர் 886ஆவது கண்ணியுடன் முடிவுறுகிறது.

 இந்திராயன் படைப்போர்

இந்திராயன் கொலுமண்டபத்தில் வீற்றிருந்தான். அலி (றலி)யின் தலையைக் கொண்டு வந்திருப்பதாக வடோச்சி, வாயில் காப்போன் இந்திராயனிடம் கூறினான். இந்திராயன் அளவிலா மகிழ்ச்சியடைந்தான். உடனே வடோச்சியை உள்ளே கூட்டி வரும்படிக் கட்டளையிட்டான். வடோச்சியின் தீரச் செயலை அனைவரும் வாழ்த்தினர். இந்திராயனின் இளைய புதல்வி பனிமதிக்குத் தகுந்த மன்னவன் என்று எல்லோரும் வடோச்சியைப் புகழ்ந்தனர். வடோச்சியின் வெற்றியை முன்னிட்டு முழுநகரமும் மகிழ்ந்தது. நகரத்தவரும் கொண்டாடினர்.

இந்நிலையில் வடோச்சியும் இந்திராயன் கொலு மண்டபத்தை அடைந்தார். நாற்பத்தொண்ணாயிரம் தூண்களைக் கொண்டதாக வர்ணிக்கப்படும் இந்திரனின் கொலுமண்டபத்தில் வீற்றிருந்த மன்னனைச் சுற்றி அமைச்சர், படைத் தலைவர், வேதியர் முதலாயினோர் குழுமியிருந்தனராம். வடோச்சி 'அலி தலை, பாரும்' எனத் தான்கொண்டு வந்த தலையை இந்திராயன் முன் வைத்தார். வேல்விழியாள் பனிமதிக்குப் பரிசு இது என்று கூறினார். இதனைக் கண்ட இந்திராயன் அகமகிழ்ந்தான். தான் எதிர்பார்த்தவாறு எல்லாம் நடைபெற்றன என்று உள்ளம் குளிர்ந்தான்.

மறுநாளே தன்புதல்வி பனிமதிக்கும் வடோச்சிக்கும் திருமணம் நிறைவேற வேண்டும் என்று இந்திராயன் எண்ணினான். எண்ணியவாறே கட்டளையிட்டான். முரசறையச் செய்தான். முரசு அடிப்போரும் இந்திராயன் கட்டளையை நிறைவேற்றினர். இம் முரசொலி பனிமதிக்கு எட்டியது. பனிமதி காரணத்தைக் கேட்டாள். பனிமதிக்குத் தாலிகட்டவே இம்முரசொலி என்று தாதியர் கூறினர். நிகழ்ந்தவை அனைத்தையும் ஒன்றும் விடாது தாதிமார் பனிமதிக்குக் கூறினர். ஆனால், பனிமதி, அலியின் தலை வடோச்சியால் கொண்டு வரப்பட்டது என்ற கூற்றை ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனாலும் தெருக்கள் அலங்கரிக்கப்பட்டன. வாழை, கமுகு முதலியன நடப்பட்டன. பந்தல்கள் இடப்பட்டு, கோலங்கள் எழுதப்பட்டன. பன்னீராலும் சந்தனத்தாலும் தரை மெழுகப்பட்டது. நிறை கும்பங்கள் பதிக்கப்பட்டன. இவ்வாறு பற்பல முறைகளில் அலங்காரஞ் செய்து மக்கள் களிப்பெய்தினர்.

இவ்வாறு ஆடிப்பாடி மக்கள் மகிழ்ந்திருக்கையில் வேதக் குறிகாரரைப் பார்த்து, 'பலன் கூறுமாறு', இந்திராயன் கட்டளையிட்டான். குறிகாரரோ 'பொல்லாங்கு தீவினை வரும்' என்று கூறினார்கள். அத்தோடு நில்லாது 'நாளை திருமணம் நிறைவேறாது. சில நாட்கள் செல்லும். வடோச்சியே பனிமதியை மணப்பார்' என்று குறிகாரர் கூறினார். இவ்வாறு இருக்க, தாகியின் நகரிலிருந்து இப்பொழுது செய்தி வரக்கூடாது என்றும், தன்எண்ணம் நிறைவேறும் அளவும் உண்மையில் நடந்தவை வெளிப்படக்கூடா என்று வடோச்சி வேண்டிக் கொண்டிருந்தார். இவ்வாறு எண்ணிக்கொண்டே மணக்கோலத்துடன் ஊர், சுற்றி வந்தார்.

இதற்கிடையில் இந்திராயனின் மூத்த புதல்வி, தாகியின் மனைவி எழுதியனுப்பிய ஓலை இந்திராயனுக்குக் கிடைத்தது. தாகி படையில் கொல்லப்பட்டதும், தாகியின் தலையையே அலி (றலி)யின் தலை என்று வடோச்சி கொண்டு வந்ததும் வெளியாயின. இந்திராயனுக்குக் கோபம் பொங்கியெழுந்தது. இவையெல்லாம் வடோச்சியின் சூழ்ச்சி என்று அறிந்தான். வடோச்சியைக் கொல்லும்படி கட்டளையிட்டான். போர்புரியப் படைகளைத் திரட்டினான். வடோச்சியின் படைகட்கும் இந்திராயனின் படைக்கும் போர் மூண்டது. போர் கடுமையாக நடை பெற்றது. வடோச்சி அலி(றலி)யை அழைக்க எண்ணினான்.

இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கையில் மக்கமா நகரில் அலி (றலி) ஈச்சமரத்தில் ஏறி ஈத்தங்கனி பறித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அலி (றலி) அவர்களுக்கு ஓர் ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்டதும் வடோச்சிக்குத் துணைபுரிய வேண்டுமென்று தீர்மானித்தார்கள். வடோச்சியின் பக்கத்தில்போய் நின்றார்கள். ஏற்ற சமயத்தில் துணை கிடைத்தது என்று அல்லாஹ்வை வடோச்சி புகழ்ந்தார்.

அலி(றலி)யின் வருகையின் பின்னர்க் கடுமையாகப் போர் நடைபெற்றது. இந்திராயன் இசுலாத்தைத் தழுவினான். சுல்தான் முகம்மது தீன் எனப் பெயர் பெற்றாராம். வடோச்சி பனிமதியைத் திருமணம் புரிந்தார். எல்லாம் இன்பமாய் நிறைவேறின. இப்படைப் போர் 844 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இதுவே ஐந்து படைப்போருள்ளும் மிகுதியான கண்ணிகளை உடையது.

இறவுசுல்கூல் படைப்போர்

படைப்போர் இனத்தைச் சேர்ந்த நூல்களுள் இறவுசுல்கூல் படைப்போரும் ஒன்று. இந்நூல் சல்கா எனும் படைப்போர் என்றும் வழங்கும்.

சல்கா எனும் பெயரை உடைய பெண்ணின் வரலாற்றினையே இந்நூல் சிறப்பாகக் கூறுகின்றது. இப்பெண்ணைக் கற்பு நாயகி என்று அழைப்பர். இப்பெண் அல்லாஹு ஆலாவின் உண்மைத் திருத்தூதர் முஹம்மது (ஸல்)வின் இயற்கை ஆற்றலை அறிந்த ஈமான் கொண்டு இசுலாத்தைத் தழுவியதைப் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகின்றது.

இந்நூல் குஞ்சுமூசு லெப்பை ஹாஜி ஆலிம் புலவரவர்களால் பாடப்பட்டது. இந்நூலில் முதன்முதலில் அவையடக்கம் கூறப்படுகின்றது. காப்புப் பாவில் எல்லாத்துதியும் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன என்றும், எல்லாப் படைப்புகளையும் படைத்தவன் அல்லாஹ் என்றும் கூறப்பட்டுள்ளது.

சையிதத்துப் படைப்போர்

இசுலாமியப் படைப்போர் இலக்கியங்களுள் காலத்தால் மூன்றாவது தோன்றியது சையிதத்துப் படைப்போர். இதனை இயற்றியவர் தேங்காய்ப்பட்டிணத்தைச் சார்ந்த குஞ்சு மூசுப் புலவர். படைப்போர் இலக்கிய ஆக்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பெருமையையும் சிறப்பையும் உடையவர். இவர் இயற்றியுள்ள சையிதத்துப் படைப்போர், இறவுசுல்கூல் படைப்போர் ஆகிய இரண்டும் பிற படைப்போர் இலக்கியங்களிலிருந்து வேறுபட்ட பல்வேறு தனித் தன்மைகளைப் பெற்றுள்ளன. படைப்போர் இலக்கியங்களுள் பெண்களைத் தலைமை மாந்தராகப் பெற்றுச் சிறக்கும் படைப்போர் நூலை இசுற்றியுள்ள பெருமை குஞ்சு மூசுப் புலவரையே சேரும்.

பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்களது வாழ்வுடன் தொடர்புடைய ஒரு போர்ச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதே சையிதத்துப் படைப்போர். இசுலாத்தில் அண்ணல் நபி(சல்) அவர்களுக்குப் பின் இசுலாமிய ஆட்சியை மேற்கொண்டு ஆட்சி நடத்திய முதல் கலீபாவான ஹளரத் அபுபக்கர் சித்தீக் (றலி) அவர்களது மகன் அப்துர் ரஹ்மானால் துன்பமுற்ற ஏமன் நாட்டு மன்னருக்கும் அவரது மகவிற்கும் அண்ணலெம் பெருமானார் நபி(சல்) அவர்களது கட்டளையின்படி உதவி அவரை முஸ்லிம்கள் மீட்ட செய்தியையும் மனம் மாறிய அப்துல் ரஹ்மானும் அவர் மனைவி சையிதத்தும் இசுலாத்தைத் தழுவியபின் அவர்களை எதிர்த்து அபாசுபியான் படைகளுடன் போராடி வெற்றி கொண்ட வரலாற்றையும் உரைப்பதே சையிதத்துப் படைப்போர். இப் படைப்போர் இலக்கியத்திற்குரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ப்பாடுபொருள் போர் நிகழ்வினை விரிவாக அரபு இலக்கியத்தில் ஹஸனுல் பசரி என்போர் எடுத்துரைத்துள்ளார்.

தொகுப்புரை

1. இசுலாமிய நெறியும் தமிழ் இலக்கிய மரபும் இணைந்ததின் பயனாய் முஸ்லிம் தமிழ்ப்புலவர்களால் இசுற்றுவிக்கப்பட்ட ஒரு புதுவகை இலக்கியப் பிரிவே படைப்போர்
இலக்கியங்களாகும்.
2. இத்தகு புதுவகை இலக்கியப் பிரிவிற்குரிய பாடுபொருள் இசுலாமிய மார்க்கத்துடன் தொடர்புடைய ஏதாவது ஒரு போர்ச் செய்தியாக அமைதல் வேண்டும்.
3. இப்படைப்போரின் நோக்கம் அநீதியை அகற்றுவதும், ஒன்றிறைக் கொள்கையை நிலை நாட்டுவதும் தற்காப்புமாக அமைந்துள்ளது.
4. படைப்போர் இலக்கியங்கள் அனைத்திலும் அவற்றின் தலைப்பிற்கேற்பப் போர் நிகழ்வுகளே மேலோங்கி இருக்கின்றன.
5. போர் நிகழ்வுகளில் தலைமை மாந்தரின் போர்த்திறன் முக்கியத்துவம் பெற்றுச் சிறப்பித்துப் பாடப்பெறுகின்றது.
6. அதீதக் கற்பனைகளும், நம்பத் தகாத நிகழ்வுகளும் படைப்போர் இலக்கியங்களில் காணப்படவில்லை.
7. படைப்போர் இலக்கியங்களின் உருவம் தொடர்பாக எந்தவொரு வரையறையும் இல்லை.
8. குறிப்பிட்ட உறுப்புகளைத் தலைப்பாகக் கொண்டு அமைதல் வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
9. இத்தனை செய்யுட்களைப் பெற்றுவர வேண்டும் என்றோ இன்ன யாப்பில்தான் பாடப்பெறுதல் வேண்டும் என்பதாகவும் இல்லை.
----------------

4. முனாஜாத்து இலக்கியங்கள்


அரபுச் சொல்லான முனாஜாத்து என்பதன் நேரடியான பொருள் 'இரகசியமாகச் சொல்லுதல்' என்பதாகும். இசுலாமிய தமிழ்ச் சிற்றிலக்கியப் பரப்பில் தனித்ததொரு இலக்கிய வடிவமாகத் திகழும் முனாஜாத்து எனும் பிரிவின்கீழ், பல்வேறு இலக்கியங்கள் அடங்கியுள்ளன. இவ்விலக்கியங்கள் பெரும்பாலும் அல்லாஹ்வின் நல்லடியார்களைப் புகழ்ந்து பாடும் பாடற் தொகுதிகளை உள்ளடக்கமாகப் பெற்றுள்ளன. இப்பாடற் தொகுதிகளை நோக்கும்போது 'வழிபாட்டுப் பிரார்த்தனை' என்ற பொருளும் முனாஜாத்துப் பாடல்களுக்கென்று பாடல் வரையறையோ ஏனைய பிற இலக்கண வரம்பினையோ கூற இயலாது. முனாஜாத்துப் பாடல்களில் இசுலாமிய போதனை பொதிந்திருக்கும். பாமர மக்களும் இசுலாத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

முனாஜாத்துப் பாடல்கள்

குத்புநாயகம், திருக்காரணப் புராணம், திருமணிமாலை, புதுகுஷ்ஷாம் எனும் நான்கு காப்பியங்களையும், மக்ககாக் கலம்பகம், நாகையந்தாதி போன்ற பல சிற்றிலக்கியங்-களையும், சித்திரக் கவிகள் உட்படத் தனிப்பாடல்கள் பலவற்றையும் இயற்றிய புலவர் நாயகம் எனும் சேகுனாப் புலவர் என்றும் வழங்கப் பெற்ற செய்கு அப்துல் காதிர் நெயினார் லெப்பை ஆலிம் புலவர் பல முனாஜாத்துப் பாடல்களைப் பாடி உள்ளார். எந்த ஒரு புலவரும் அல்லாஹ்வின் பேரில் முனாஜாத்துப் பாடியே நூலைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

சேகுனாப் புலவரும் முதலில் ஹக்கு பேரில் முனாஜாத்துப் பாடியுள்ளார். இங்கு ஹக்கு என்பது உண்மை. அதாவது உண்மையானவன் எனப் பொருள்படுகின்றது. எனவே இது அல்லாஹ் மீது பாடப்பட்ட முனாஜாத்தாகும். இம்முனாஜாத்துக்குப் பின்புலமாய் ஒரு செய்தி அமைந்துள்ளது. அதாவது, கி.பி. 1843ஆம் ஆண்டு சென்னை மாநகரில் பேதி நோய் ஏற்பட்டது. அது உபா என்று அழைக்கப்பட்டுள்ளது. அந்த நோய் மிகவும் அச்சுறுத்துவதாக உணரப்பட்டது. ஆகவே முஸ்லிம் மக்கள் ஒருங்கு கூடிச் சேகுனாப் புலவரை அணுகினர். இந்த நோயினால் ஏற்படக்கூடிய கேடுகள் நீங்கிட அல்லாவைப் புகழ்ந்து ஒரு முனாஜாத்துப் பாடித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவ்வாறே பாடிக் கொடுத்தார்கள். நோயும் நீங்கிவிட்டது. எல்லோரும் மகிழ்ந்தனர்.

வரக்கூடிய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பற்றும்படி பாடிய பாடல்,

வள்ளன் மகுமூ தெனுநயினார் வழியி லொழுகி உன்னுடைய
விள்ளு மார்க்கந் தனையெடுத்து விளக்குந் தீனோ ராகையினால்
தெள்ளு மறிவே மெய்ப்பொருளே தெளிவே எங்கள் கண்மணியே
எள்ளு மாபத் தணுகாமல் இன்பம் புரிவாய் றகுமானே (9)

என அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வே பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அடியார்கள் நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், நோய் அணுகாமல் அவர்களைக் காப்பாற்றும்படி இறைஞ்சினார்கள். முகம்மது நபி (சல்) அவர்கள் போதித்த மார்க்கத்தைப் பின்பற்றி ஒழுகுகிறவர்களைக் காப்பாற்றும்படி வேண்டினார்கள்.

குறை நீங்கப் பாடும் முனாஜாத்துப் பாடல்கள்

கர்ப்பமுற்ற பெண்கள் ஒன்பது மாதம் நிறைவானதும் அல்லாஹ்விடத்தில் இரங்கிப் பாடும் பாடலாக அமைந்துள்ளது.

வள்ளல் முகம்ம திறசூல் தம்மையே-புவியிலனுப்பி
வழியு மொழியு மருளு நாயனே
உள்ள நன்றி தன்னில் மிகவுமே கேட்குமுன்னம்
உதவி செய்யுமெங்கள் நாயனே (3)

எனவும், அடுத்து நபிமார்களின் பிராட்டிமார்களின் பொலிவினால் அல்லாஹ்விடம் உதவி கோரப்பட்டது.

நீதமுடைய ஆதம் ஸபீயுல்லா-கிருபை கொண்ட
நீதியின் மதியின் ஹவ்வா பறக்கத்தால்
மாதருலகத்திற் பெற்றுப் பலுகியே துயரமின்றி
வாழ்ந்துண் டிருக்கக் கருணை புரிகுவாய் (4)

என நபிமார்களின் துணைவியரின் பொருட்டால் குறை இரங்கிய புலவர் நாயகம் அடுத்து நபிகள் நாயகம் முகம்மது (சல்)வின் புதல்வியர் நால்வரையும் ஸைனபு, றுக்கையா, உம்முகுல்தூம், பாத்திமா எனக் குறிப்பிட்டு அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் குறை இரங்கி உள்ளார்.

தொடர்ந்து வரும் பதினொரு பாடல்களிலும் பெருமானார் (சல்) அவர்களின் இளைய புதல்வியும் அலி(றலி) அவர்களின் அருமை மனைவியாரும் அசன் (றலி) அவர்களினதும், உசைன் (றலி) அவர்களினதும் தாயாருமாகிய பாத்திமா (றலி)வைத் தனிமையாகக் குறிப்பிட்டு அவர்கள் தம் பொருட்டால் கர்ப்ப மகளிர் சலிப்பில்லாமல் பிள்ளை பெற அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் குறை நீங்கப் பாடப்பட்டுள்ளது.

ஆல நபிம் மருமை மக்களிளைய பிள்ளை
அழகாம் பாத்தி மாதம் பொருட்டினால்
கால காலந் துயர மின்றியே உம்மத் தோர்கள்
களிப்புக்கொள்ளச் சிறப்புப் பெருக்குவாய் (18)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முனாஜாத்துப் பாடல்களில் யாப்பமைதி

முனாஜாத்துப் பாடல்கள் சிலவற்றில் தமிழ் யாப்பமைதி காக்கப்பட்ட அதே வேளையில் இலக்கணவழு இடம் பெற்றுள்ளதைக் காணலாம் அவ்விலக்கண வழுக்கள் தமிழ் மொழியைப் பொறுத்த மட்டிலேதான் வழுக்களாகக் கொள்ளலாம். அரபுமொழி அவற்றை வழுக்களாகக் கருதாது. தமிழ்மொழியில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்கள் ங, ட, ல, ள, ழ, ர, ண, ன என்பன ஒரு போதும் மொழிக்கு முதலில் வாரா. மற்றும் சில உயிர் எழுத்துகளைக் கொண்ட உயிர் மெய் எழுத்துகள் மொழிக்கு முதலில் வரும். ஆனால் அரபு மொழியில் அப்படியில்லை. எல்லா எழுத்துகளும் அரபு மொழியில் மொழிக்கு முதலில் வரும். எனவே இந்த நியதியைப் பின்பற்றிச் சேகுனாப் புலவரும் ஏனைய புலவர்களும் முனாஜாத்துப் பாக்களைப் பாடியுள்ளனர். அரபு அரிச்சுவடியில் அரபு எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள ஒழுங்கு முறைக்கு இணங்க ஒவ்வோர்
எழுத்தையும் முதல் எழுத்தாகக் கொண்டு முனாஜாத்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

செய்கு அப்துல் காதிறுநயினார் லெப்பை ஆலிம்புலவர் இம்முறையைப் பின்பற்றி முகம்மது நபி (சல்) பேரில் முனாஜாத்து பாடியுள்ளார். றசூலுல்லா பேரில் முனாஜாத்து என அதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பாடல்களிலே இசுலாமியத் தத்துவ ஞானம் பொதிந்துள்ளமையைக் காணலாம். அரபு அரிச்சுவடியில் எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் பாடல்கள் அரபு எழுத்துகளில் எழுதப்பட்டால் அரபு லிபியில் பயிற்சி உடையோர்க்குப் படிப்பதே எளிதாயிருக்கும். தமிழில் எழுதப்பட்டிருந்தால் அந்த எழுத்தோ சொல்லோ எதுவென அடையாளம் காண்பது சிரமமாயிருக்கும்.

றசூலுல்லா பேரில் முனாஜாத்து எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள 29 செய்யுட்கள் ஒவ்வொன்றும் அகுமது நபியுல்லா என்றும் முகம்மது நபியுல்லாம் என்றும் முடிவுறுவதைக் காணலாம். அரபு அரிச்சுவடியில் முதலாம் எழுத்தான அலிபு எனும் எழுத்துடன் முதலாம் செய்யுள் தொடங்குகிறது.

'அலிபெழுத் தொன்று மூன்றா யைந்துமா யேழுமாகி' என அலிப் என்பது முதற் சொல்லாய் அமைந்துள்ளது. 'அ' எனும் எழுத்து மொழிக்கு முதலில் வரும். ஆதலால் அலிபு என்று தொடங்கும் செய்யுள் தமிழ் இலக்கண மரபு வழுவாது வந்துள்ளது. இப்பாடல்களின் தொடக்கமான அரபு எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஓர் அரபுச் சொல்லுக்கு முதலாய் அமைந்துள்ளன. அவ்வரபுச் சொல்லோ ஒவ்வொரு பாடலுக்கும் முதலாக அமைந்துள்ளது. அரபுச் சொற்களை முதலில் கொண்டு பாடல்கள் தொடங்கிய போதிலும் எதுகை மோனை நயங்கள் யாப்பமைதியுடன் இப்பாடல்களில் விளங்கக்
காணலாம்.

அரபு அரிச்சுவடியில் பத்தாம் எழுத்து 'றே' என்பதாகும். தமிழ் இலக்கண மரபுக்கு ஏற்ப றகரம் மொழிக்கு முதலில் வராது. ஆனால் புலவர் நாயகம் அரபு 'றே' எனும் எழுத்தை வைத்துப் பாடி உள்ளார். அருள் எனும் பொருளில் வரும் றகுமத் எனும் அரபுச் சொல்லைக் கொண்டு அமைந்துள்ள அவருடைய பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.

றகுமத்துக் குரிய பேறும் றியாலத்தும் பொதிந்து நிற்ப
அகமுற்ற மணியாய் நின்ற அகுமதாம் அறுவாகுக்கும்
பகுமற்ற மூன்றினுக்கும் பதவிய பொருளாய் நின்றே
முகமொய்த்த வள்ளலான முகம்மது நபியுல்லாவே
(அரபு அரிச்சுவடி 10)

அரபு எழுத்துக்களில் மூன்று லகரங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் மூன்றாவது அரபு அரிச்சுவடியில் 23வது எழுத்து என்பது ஒரு பாடலின் முதலாம் அடியின் முதல் எழுத்தாய் அமைந்துள்ளது. ஆனால் லகரம் தமிழ் இலக்கணத்திற் கிணங்க மொழிக்கு முதலில் வராது. எனினும் ஆசிரியர் அதனை இங்கே மொழிக்கு முதலில் வர அமைத்துப் பாடி உள்ளார். பெருமானார் முகம்மது (சல்) அவர்களைப் படைத்திராவிடில் உலகங்களையே படைத்திருக்க மாட்டேன் என அல்லாஹ் அல்குர் ஆனிலே கூறியுள்ளார். ஆலம் எனும் அரபுச் சொல் எல்லா உலகங்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். 'லவுலாக்க' எனும் சொல்லுடன் பாடல் ஆரம்பிக்கிறது. அச்சொல்லுக்கமைய நான்கு அடிகளிலும் எதுகை அமைந்துள்ளது. எதுகையாக அமைந்துள்ள நான்கு சொற்களுமே அரபுச் சொற்களாக அமைந்துள்ளன.

லவுலாக்க ஆலமெல்லா நான்கடையேனென் றோதும்
அவுலாநீ ராகை யாலும் அறுவாகுக் குயிர்நீ ராலே
கவுலான துள்ள நோக்கிக் கட்கடை யென்பா னோக்கு
மவுலா அலா முறாதி முகம்மது நபியுல் லாவே
(அரபு அரிச்சுவடி-23)

இவ்வாறு பாடல்கள் அமைந்துள்ளன.

சேகுனாப் புலவரின் மூன்றவாது நான்காவது முனாஜாத்துப் பாடல்கள் நாகூர் ஆண்டகை சாகுல் கமீது ஒலியுல்லா அவர்கள் பேரில் பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் அரபு அரிச்சுவடியில் உள்ள ஒவ்வோர் எழுத்தைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரபு அரிச்சுவடியில் கடைசி எழுத்து 'யே' ஆகும். இந்த 'யே' எழுத்து முதலாக வரும் யாது எனும் சொல்லை வைத்து றசூலுல்லா பேரில் முனாஜாத்திலும் சாகுல் கமீது ஆண்டகை பேரில் முனாஜாத்திலும் பாடியுள்ளார். யாது என்பது பாரசீகச் சொல். நினை என்பது அதன் பொருளாகும். 'யே' எழுத்தை முதலில் கொண்ட யாது எனும் சொல்லைக் கொண்டு இரண்டு முனாஜாத்துக்களிலும்
வரும் ம் 28ஆம் செய்யுளை ஆரம்பித்துள்ளார். றசூலுல்லா பேரில் உள்ள முனாஜாத்தில் வரும் அந்தப் பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.

யாதுட னினைவும் பூண்டியாவர்க்கு முதலாய் நின்ற
வேதியர் மூவருக்கும் விளக்கென விளங்கி யெங்கும்
போதரம் பெருகு மையா புன்மையன் றுன்பமெல்லாம்
மோதிடா தகற்ற வேண்டு முகம்மது நபியுல் லாவே
(அரபு அரிச்சுவடி-28)

சாகுல்கமீது ஆண்டகை பேரில் முனாஜாத்துப் பாடலில் 'யே' எனும் அரபு எழுத்தை முதலில் கொண்டு யாது எனும் பாரசீகச் சொல்லோடு முனாஜாத்துப் பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.

யாது வளருமுளத்தூடு மினிமை பெருகுங் கண்ணூடும்
போது மமுதக் கனியறிவே பொங்கு மென்றன் றவப்பயனே
கோது விளையாக் கொடுந்துன்பங் கொள்ளா தியாருஞ் சுகம்பெறவே
தாது மலர்த்தா டரவேண்டும் ஹாகுல் ஹமீது நாயகமே
(அரபு அரிச்சுவடி -28)

பதுறுத்தீன் புலவரின் முகியித்தீன் முனாஜாத்துப் பாடலில் 35 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் முதல் 30 பாடல்களும் அரபு அரிச்சுவடியில் 29 எழுத்துகளில் ஒவ்வொன்றையும் முதல் எழுத்தாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் முகியித்தீன் ஆண்டவர் அவர்களை விவரிக்கும் முறையில் ஒவ்வொரு பாடலின் இறுதி அமைந்துள்ளது. பெரும்பாலான பாடல்கள் முஹியித்தீன் என்று முடிகின்றன. சில பாடல்கள் யாமுஹியித்தீனே என்றும் வேறு சில பாடல்கள் கௌதுல் அஃலம் யாமுகியித்தீனே என்றும் வேறுசில பாடல்கள் செய்யிதே யாமுஹியித்தீனே என்றும் பல்வேறு வகையாக முடிவு பெறுவதைக் காணலாம்.

பதினெட்டாவது எழுத்தான 'ஐன்' எனும் எழுத்தினால் ஒருபாடல் தொடங்குகிறது. ஐனுடன் தொடங்கும் இப் பாடலில் 'ஐ என்பது முற்றுமடக்காக நான்கு அடிகளில் வரும் அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தப்பாவில் ஒரே விதத்தில் அமைந்துள்ளது. முற்று மடக்காக வரும் முதல் இருசீர்களையும் போலல்லாது ஒரு கருத்தைச் சுட்டுவதாகவே நான்கு அடிகளிலும் உள்ள சொற்கள் ஒரேவிதமாய் அமைந்துள்ளன. இப்பாடலிலும் அரபுச் சொற்கள் மலிந்திருப்பதைக் காணலாம்.

ஐனது தாத்த வையினரூபாய் ஸிர்ரி னுள்ளாய்
ஐனது அவ்வ லான அஹ்மது நபியுல் லாவின்
ஐனது ஆரிபான அஹததாம் பொருளை யென்னுள்
ஐனதாற் காட்சிகாண அருளும்யா முகியித்தீனே
(அரபு அரிச்சுவடி-18)

பதுறுத்தீன் புலவரின் முனாஜாத்துப் பாடலின் இறுதிச் செய்யுள் இவ்வாறு அமைந்துள்ளது.

எந்தனக் கறிவு தந்தோர் இறைகுர்ஆ னோதித் தந்தோர்
வந்தனைக் கிருபை வைத்தோர் வரும்பொருள் உள்ள மீந்தோர்
தொந்தமாங் கிளைய யலார் சொற்பிழை பொறுத்தெந் நாளு
தந்தருள் கிருபை செய்வீர் சமதுயா முஹியித் தீனே
(அரபு அரிச்சுவடி-35)

இவ்வாறு முகியித்தீன் முனாஜாத்துப் பாடலில் ஆசிரியர், போதகர், கிருபை செய்தோர், உதவி புரிந்தோர், உற்றார் உறவினர், எல்லோருடைய பிழைகளையும் பொறுத்துக் கிருபை செய்யுமாறு முகியித்தீன் ஆண்டவரிடம் புலவர் வேண்டியுள்ளார்.

முனாஜாத்து மாலிகை

கீழக்கரையைச் சேர்ந்த செ.மு. செய்யிது முகம்மது ஆலிம் புலவர் பல முனாஜாத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது முனாஜாத்து மாலிகை, பன்னிரண்டு முனாஜாத்துப் பாடல்களைக் கொண்டது. மாலிகை என்றால் தொகுக்கப்பட்ட மாலை என்பது பொருள். மலர்களால் எவ்வாறு மாலை தொடுக்கப்படுகிறதோ அவ்வாறே முனாஜாத்து மலர்களால் தொடுக்கப்பட்டது முனாஜாத்து மாலிகை.

முனாஜாத்து மாலிகையின் முதலாவது முனாஜாத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து பாடப்பட்டது. அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள் 99ஐயும் அமைத்துப் பாடப்பெற்ற அஸ்மா உல் ஹுஸ்னா முனாஜாத்தாகத் திகழ்கின்றது. ஆசிரியர் தாம் பயின்ற அல்குர் விரிவுரைகளாகக் கஷ்புல் மஹ்ஜூபைன், சாவி, ஜமல் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். 'அர்ஹமுர்றாஹிமீனே' என ஒவ்வொரு பாடலும் முடிவுறுகிறது. இச்சொற்றொடர் 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும்' என்பதையே குறிக்கின்றது. அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்களாலேயே முனாஜாத்து மாலிகை பாடப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள் வரும் இடங்களில் எல்லாம் அரபு எழுத்துகளில் அவற்றைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இரண மீந்திடும் றஸ்ஸாக்கே இகபர நன்மை யாவும்
கரம ளித்திடும் பத்தாஹே கனவறி வுறும் அலீமே
பிரிந்திட உயிரை மேவிப் பிடித்திடும் காபி லான
அருமறை பகரும் ஆதி அர்ஹமுர் ராஹி மீனே"
(பாடல்: 5)

இவ்வாறு உயிர்களுக்கெல்லாம் உணவு ஈந்திடுவதனால் றஸ்ஸாக் என்றும், இம்மை மறுமை நன்மை அளித்திருப்பவன் என்பதனால் பத்தாஹ் என்றும், எல்லையற்ற அறிவுடையவன் என்பதனால் அலீம் என்றும், பிரிந்திட உயிரை மேவிப் பிடிப்பவன் என்பதனால் காபில் என்றும், அழகுத் திருநாமங்களை உடையவன் அல்லாஹ் என்பதனை விளக்கியுள்ளார்.

முனாஜாத்து மாலிகையின் மூன்றாவது முனாஜாத்து றசூலுல்லா பேரில் பாடப்பட்டது. பதினொரு பாடல்களைக் கொண்ட இம்முனாஜாத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் 'முகம்மது நபியுல்லாவே' என நபிகள் நாயகம் (சல்) விளிக்கப்பட்டுள்ளார். இசுலாத்தைப் பரப்பும் பணியில் முகம்மது நபி (சல்) மக்காவுக்கு அருகிலுள்ள தாயிபுக்குச் சென்றிருந்தார்கள் அப்பொழுது அங்குள்ள முஸ்லிம் அல்லாதோர் கல்லாலும் சொல்லாலும் அடித்து அவர்களைத் துன்புறுத்தினர். அமரர்க்கெல்லாம் அரசரான ஜிபுறீல் (அலை) தோன்றி அவ்வாறு கொடுமை செய்தோரை அழித்துவிட உத்தரவிடுமாறு அண்ணல் நபியிடம் (சல்) வேண்டினார்கள். அவர்கள் எப்போதோ ஒரு நாள் திருந்திவிடுவார்கள். அதனால் அவர்களைக் கொடுமை செய்யாதீர் என்று கூறினார்கள் நபிகள் நாயகம் (சல்). இக்கருத்துகள் ஒரு முனாஜாத்துப் பாடலில் இவ்வாறு இடம் பெற்றுள்ளன.

கொன் மனக் குபிரர் கூடிக் கொடுமிடர் விளைத்த காலும்
புன்மனத் திவரை யாமும் பொடிபடுத் திடவுத் தாரம்
சொன்மி னென் றமரர் வேண்டுந் தொடர் மொழி மறுத்துப் பேசு
மும்மறை புகழ வந்த முகம்மது நபியுல் லாவே
(பாடல்: 8)

ஐந்தாவது முனாஜாத்துப் பாடலாக அமைந்துள்ளது பாத்திமா (றலி) பேரிலான முனாஜாத். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'அர்ஹமுர் றாஹிமீனே என்பது இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலிலும் பாத்திமா நாயகியின் புகழ் பாடப்பட்டுள்ளது.

ஒளிர்தவக் கடலினூடே உதித்திடும் ஒருமுத் தென்னக்
களிதரும் இறசூ லுல்லா கதிர்க்குல மணியாய்த் தோன்றி
மிளிர்தரும் பாத்தி மாதம் மேதகை பறக்கத் தாலே
அளிபெற அருள வேண்டும் அர்ஹமுர் றாஹி மீனே
(பாடல்: 2)

அலி(றலி) அவர்களினதும் பாத்திமா (றலி) அவர்களினதும் அன்புப் புதல்வர்களான இமாம் ஹஸன் (றலி) அர்வளையும் மாம் ஹுஸைன் (றலி) அவர்களையும் முன்னிலைப்படுத்தி அவர்களுடைய கருணையைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் வேண்டி நிற்றற் பொருளில் பாடப்பட்டுள்ளது. இதனை அஹ்ஸனுல் முனாஜாத்து எனப் பெயரிட்டுள்ளார். மிக்க அழகான புகழ்ந்திரத்தல் என்பது அச்சொற்றொடரின் பொருளாகும்.

முனாஜாத்து மாலிகையில் இடம்பெற்ற பத்தாவது முனாஜாத்து, அரபு அரிச்சுவடியில் உள்ள எழுத்துகள் முதலில் வரப் பாடப்பட்டுள்ள ஒரு முனாஜாத்துப் பாடல் கீழக்கரை கல்வத்து நாயகத்தின் கருணையைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் குறை இரங்குவதாக அமைந்துள்ளது.

இவ்வாறு முனாஜாத்து மாலிகைப் பாடல்கள் ஏராளம் காணப்படுகின்றன.

நவநீத புஞ்சம்

பல பாடல்களைக் கொண்டது நவநீதபுஞ்சம் எனும் நூல். திருப்புகழ் பிள்ளைத்தமிழ், மாணிக்கமாலை முதலியன இதில் அடங்கும். முனாஜாத்துப் பாக்கள் பலவும் நவநீத புஞ்சத்தில் இடம்பெற்றுள்ளன. நவநீத புஞ்சத்தில், செய்யிது முகியித்தீன் கவிராயர் இயற்றிய பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவர் முகம்மதுசைன் புலவரின் புதல்வர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலியைச் சார்ந்த மேலப்பாளையம். இவர் மரபினரான சாகுல் கமீதுப் புலவர் பாடிய முனாஜாத்துப் பாடல்களும் இந்நவநீத புஞ்சத்தில் இடம் பெற்றுள்ளன.

நவநீதபுஞ்சத்தில் இடம்பெற்றுள்ள முனாஜாத்துப் பாக்கள் பெரும்பாலும் முனாஜாத்துப் பதிகங்களாகவே அமைந்துள்ளன. நவநீத புஞ்சத்தில் இடம்பெற்றுள்ள முனாஜாத்துப் பதிகம் றகுமான் பேரிலானது. அல்லாஹ் பேரிலானது. இரட்டை ஆசிரிய விருத்தமாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
செய்யத்தகாத, குற்றம் வருத்தும் கிரியைகளை ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய செய்யத்தகாதன வற்றைத் தாம் செய்துள்ளதாகவும், ஆகையினால் தம்மை ஆட்கொள்ளுமாறும் அல்லாஹ்வை வேண்டியுள்ளார். அவ்வாறு ஆட்கொள்ளும் நாள் எந்நாளோ எனப் புலம்பி அல்லாஹ்விடம் குறை இரங்கி உள்ளார். பொதுமக்களிடையே பொதுவாக உள்ள குறைகளைத் தன்னிடம் உள்ள குறையாகக் கருதிப் பாடியுள்ளார்.

உள்ளத்தை அடக்க முடியாதவன் பாவி. உலகிலுள்ள மாய வித்தைகளில் கை தேர்ந்த பெண்களைத் தொடருபவன் வஞ்சகன். ஐந்து வேளையும் தொழாதவன் தோஷி மறதியுடையவன் மூடன். எல்லையில்லாத மெய்ஞ்ஞானத்தை அறியாதவன் முரடன். ஆணவத்துக்கு ஆளாகும் ஒருவன் ஆணவத்தால் துன்பம் உண்டாக்குபவன் வண்டன். தெளிவாகத் தெரிய இருக்கின்றவற்றைக் கண் இருந்தும் பாராதவன் கட்குருடன். பணம் எனப் பணத்தில் ஆசை வைத்து அதனைச் சம்பாதிக்கும் வழிவகைகளையே நிதமும் சிந்தித்தவனாய்க் கவலையில் மூழ்கி உள்ளவன் அழுகல். இத்தகைய தீய பண்புகள் தம்மிடத்தே உண்டென்றும், ஆகவே அவற்றை அகற்றிவிடத் தம்மை ஆட்கொள்ளும்படியும் வேண்டியுள்ளார். மற்றவர்களை ஆட்கொள்ளும் முன்னர்த் தம்மை ஆட்கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். அவ்வாறு தம்மை ஆட்கொள்ளும் நாளுக்காக வேண்டுகிறார். 'எல்லாவற்றிற்கும் முதலானவனும் அன்புடையோனு-மாகியவனே' என்பதாகப் பொருள்படும் 'ஆதி றகுமானியே' எனவும் அல்லாஹ்வை விளித்துப் பாடியுள்ளார்.

நவநீத புஞ்சத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த முனாஜாத்துப் பாடல் முகம்மது றசூலுல்லாஹ் பேரில் பாடப்பட்டது. 31 செய்யுட்களைக் கொண்ட இன்னிசையாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலும் ஹாமிதுறசூல் நபியே என முடிகிறது. றசூல் நாயகம் (சல்) அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் குறை இரங்குவதாய் அமைந்துள்ளது. இப்பாடல்களிலே நபிகள் நாயகம் (சல்) அவர்களின் புகழ் பேசப்படுவதோடு தமக்கு அருள்புரியுமாறு அண்ணலாரை (சல்) வேண்டுவதாகவும் கருத்துகள் அமைந்துள்ளன.

பொதுவாக முனாஜாத்துப் பாடல்கள் எவ்வாறு ஒரு நூலில் அமைகின்றனவோ அவ்வாறே நவநீத புஞ்சத்திலும் அமைந்துள்ளன. நபிகள் பெருமானார் (சல்) அவர்கள்மீதும் அவர்களின் பேரர்கள்மீதும் பாடிய பின்னர் முகியித்தீன் ஆண்டவர்
அவர்கள்பேரில் முனாஜாத்துப் பாடல் பாடப்பட்டுள்ளது. முப்பது இன்னிசைச் செய்யுட்களாக இம் முனாஜாத்துப் பாடல் அமைந்துள்ளது. ஒவ்வொரு செய்யுளும் 'செய்கு முகியித்தீனே' என முடிவுறுகிறது. இம்முனாஜாத்தின் முதலாம் பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.

பூவே மதுவே பொருளே யருளேயென்
நாவே நலமே நடுவிரங்கு நாயகமே
கோவே யிறசூல் குறைசிக் குலக்கொழுந்தே
தேவே யரசர்பணி செய்கு முகியித்தீனே (பாடல்: 1)
(Ref. ப.89, எப்பொழுதும் எவ்விடத்தும் . . . )

இதுபோல் ஹாஜி.வி.எம்.சம்சுத்தீன் சில முனாஜாத்துப் பாடல்களைப் பதிப்பித்துள்ளார். அதன் பெயர் முனாஜாத்து மஹ்றிபத்துல இல்ஹாமியா என்பதாகும். இதனைக் கோட்டாறு செய்கு முகம்மது என்பவர் இயற்றியுள்ளார். இவர் செய்கு முகம்மது அப்துல் கரீம் அவர்களின் சீடராவார். புதுக்குடி நூறுல் முஹம்மதியா மத்ரசாவில் அதிபராக விளங்கியவர். இலவசமாக வாங்கிய இதனை வ.மி. சம்சுத்தின் ஹாஜியார் வெளியிட்டுள்ளார். இசுலாமிய ஏக தத்துவத்தைக் குறிக்கும் இல்முத் தௌஹூதை அறிந்தவர்கள் மட்டுமே இந்நூலை ஆராய்தல் வேண்டும் என்று பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 113 கண்ணிப் பாடல்களைக் கொண்டுள்ளது இம்முனாஜாத்து நூல். ஒவ்வொரு பாடலும் 'யாஹய்யுன்கையூம்' என முடிவு பெறுகிறது.

தொகுப்புரை

இதுபோல் இன்னும் பல முனாஜாத்துப் பாடல்கள் தோன்றியுள்ளன. மேலும் ஒரே முனாஜாத்துப்பாடல் பல நூல்களில் இடம்பெறுவதும் உண்டு. இவ்வாறு பார்க்கும் பொழுது இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் உள்ள முனாஜாத்துக்கள் எண்ணிலடங்கா இலட்சக்கணக்கான முனாஜாத்துப் பாடல்கள் இசுலாமியத் தமிழ் இலக்கியத்தின் பா வளத்தைப் பெருக்கி உள்ளன எனின் அது மிகையாகாது எனலாம்.
-----------------

5. கிஸ்ஸா இலக்கியங்கள்


இசுலாமியத் தமிழிலக்கிய வடிவங்களுள் கிஸ்ஸா என்பதும் ஒன்று. அரபு மொழியின் செல்வாக்கால் இசுலாமியத் தமிழ் பெற்ற பல பயன்களும் ஒன்றே தமிழகத்தில் கிஸ்ஸா இலக்கியங்களின் தோற்றமெனலாம்.

கிஸ்ஸா எனும் சொல் அரபுச் சொல்லை வினையாகக் கொண்டு தோன்றியதாகும். 'கஸஸ்' எனும் அரபு அடிச் சொல்லிருந்து தோன்றியதே கிஸ்ஸா எனும் சொல். கஸஸ் என்பது அரபு மொழியில் 'கதையுரைத்தல்' எனப் பொருள்படும். கிஸ்ஸா என்பதன் நேரடியான பொருள் கதை என்பதாகும்.

தமிழுலகில் நாட்டுப்புறக் கதைகள், கதைப்பாடல்கள் என்பன பழமையும், முதுமையும் பெற்று இலக்கியத் தன்மைகளுடன் சிறந்து விளங்குகின்றன. அதுபோலவே அரபுமொழியிலும் கிஸ்ஸா என்பதில் இவ்வகை இலக்கியங்கள் உள்ளடங்கியுள்ளன.

நாட்டுப்புறக்கதைகள் அந்தந்த இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற உள்ளடக்கக் கருத்துகளைப் பெற்று விளங்குவனவாகும். இதுபோலவே அறபுமொழியில் தோன்றிய
கிஸ்ஸா இலக்கியங்களும் அந்நாட்டின் வரலாற்றுச் சூழலுக்கேற்ப இசுலாமியப் பெரியோர்களின் வரலாறுகளையும், இசுலாமிய சமயக் கருத்துக்களையும் உள்ளடக்கமாகப் பெற்றமைந்துள்ளன. தமிழகத்தில் தோன்றிய நாட்டுப்புறக் கதைகளுக்கு மதுரை வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வரலாற்றுப் பாத்திரங்களும், நல்லதங்காள் சரித்திரம், ஐவர் ராசாக்கள் சரித்திரம் போன்ற சரித்திர நிகழ்வுகளும் கருப்பொருளாக அமைந்தன. இதுபோலவே அரபுமொழியில் தோன்றிய கிஸ்ஸாக்களில் பெருமானார் காலத்துத் தோன்றிய மார்க்கப் பெரியோர்களான ஹம்ஊன் (றலி) தமீமுல் அன்ஸாரி போன்றோர்களின் வரலாறுகளும், சைத்தூன், அபூஷஹமா போன்றோர் வாழ்வில் நடைபெற்ற சரித்திர நிகழ்வுகளும் கருப்பொருள்களாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

தமிழகத்தில் தோன்றிய தொன்மை வாய்ந்த நாட்டுப்புற இலக்கியப் பிரிவிற்கும் கிஸ்ஸா இலக்கியங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. இங்குத் தோன்றியுள்ள நாட்டுப்புறக் கதைகளையும், கதைப்பாடல்களையும் எந்தவொரு தனிப்பட்ட சமயமும் உரிமை கொண்டாட முடியாது. அனைத்துப் பிரிவினருக்கும் உரியன எனும் வகையில் பல்வேறு வரலாற்றுப் பாத்திரங்களையும் சரித்திர நிகழ்வுகளையும் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. கிஸ்ஸா எனும் இலக்கிய வகையின்கீழ் அடங்கும் அனைத்துக் கருத்துகளும் இசுலாமிய சமயக் கருத்துகளை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழகத்தில் தோன்றிய முஸ்லிம் புலவர்கள் அரபு மொழியில் தோன்றிய கிஸ்ஸா எனும் இலக்கிய வடிவங்களையே முன்னோடியாகக் கொண்டு அதே பெயரில் முஸ்லிம் சமயச் சான்றோர்களின் வரலாறுகளையும் சரித்திர நிகழ்வுகளையும் எடுத்துரைத்துள்ளனர்.

கிஸ்ஸா இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

தொடக்க காலத்தில் முஸ்லிம்களுக்கிடையே ஏராளமான கிஸ்ஸாக்கள் வாய்மொழியளவிலேயே வழங்கப்பட்டு வந்தன. தங்கள் சமயக் கருத்துகளை எளிய முறையில் கதை கூறும் பாணியில் எடுத்துரைத்து, சமயக் கல்வி புகட்டக் கிஸ்ஸாக்கள் பிரச்சார சாதனமாகவே பெரிதும் பயன்பட்டன. முஸ்லிம்களுக்கிடையே வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வந்த கிஸ்ஸாக்கள் பொழுது போக்கு நிலையிலும் அமைந்திருந்தன என்பதை அறிய முடிகிறது. தமிழக முஸ்லிம் மக்களது மனநிலைக்கு ஏற்பச் சமயச் சான்றோர்கள் பல்வேறு கிஸ்ஸாக்களை அரபு மொழி இலக்கியங்களை முன்னோடியாகக் கொண்டு, அவற்றைத் தமிழாக்கம் செய்து வாய்மொழியாகப் பரப்பி வந்தனர். நாளடைவில் வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்த கிஸ்ஸாக்கள் அரபுத் தமிழிலும், தமிழிலும் வடிவம் பெறத் தொடங்கின.

கிஸ்ஸா எனும் இலக்கிய வடிவத்தின்கீழ், தமிழில் தோன்றிய முதல் இலக்கியம் என்ற பெருமை சைத்தூன் கிஸ்ஸாவையே சேரும். இதனைக் கி.பி. 1874ஆம் ஆண்டு ஷேக்லெப்பை இசுற்றியுள்ளார். கிஸ்ஸாக்கள் ஒரே கதைக் கருவினையும், ஒரே பெயரினையும் பெற்றுச் சில கதையம்ச வேறுபாடுகளை உள்ளடக்கி வெவ்வேறான ஆசிரியர்களால் வெவ்வேறு ஆண்டுகளில் இயற்றப் பட்டிருக்கின்றன.

தமிழகத்து முஸ்லிம்களிடையே மிகவும் சிறப்புமிக்க கிஸ்ஸா இலக்கியங்களுள் முதல் நிலை பெறுவது யூசுப் நபிகிஸ்ஸா எனலாம். யூசுப் நபியின் கதை அல்குர் ஆனில் இடம்பெறத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றது. எனவே யூசுப் நபியின் கதை பொதுவாக முஸ்லிம்களுக்கிடையே மிகவும் போற்றிப் பாராட்டப்பட்டது.

கிஸ்ஸா இலக்கியங்களின் உருவமும் உள்ளடக்கமும்

பொதுவாகத் தமிழிலக்கிய உருவங்களை வகைப்படுத்தும் போது, முதல் நிலையில் செய்யுள் வடிவம், உரைநடை வடிவம் என்றே பிரிப்பர். இவ்வகையில் கிஸ்ஸா இலக்கியங்களைச் செய்யுள் அல்லது உரைநடை என்று வரையறுத்துக் கூறமுடியாத நிலையில் கிஸ்ஸா இலக்கியங்களின் உருவம் அமைந்துள்ளது. சில கிஸ்ஸாக்கள் செய்யுள் வடிவத்தில், சில உரைநடை வடிவத்தில், சில பாட்டிடையிட்ட செய்யுள், உரைநடைச் செய்யுள் என விரவிக் காணப்படுகின்றன.

யூசுப் நபி கிஸ்ஸா, முகம்மது அனிபு கிஸ்ஸா போன்றன செய்யுள் வடிவத்திலும், காலி கோரி கிஸ்ஸா, அலிறலியல்லாஹு அன்ஹு கிஸ்ஸா போன்றவைள் உரைநடை வடிவத்திலும், சைத்தூன் கிஸ்ஸா, ஷம் ஹூன் றலியல்லாஹு அன்ஹுடைய கிஸ்ஸா போன்றவை செய்யுள், உரைநடை ஆகிய இரண்டும் விரவியும் கிஸ்ஸாக்களுள் பெரும்பாலானவை உரைநடை வடிவத்திலேயே அமைந்துள்ளன. எனினும், கிஸ்ஸா இலக்கியங்களுக்குரிய வடிவம் இன்னதுதான் என்று வரையறுக்க முடியாதபடி செய்யுள், உரைநடை ஆகிய இரண்டும் அமையப்பெற்று இருத்தல் ஏனைய பிற இசுலாமிய இலக்கியப் பிரிவுகளிலிருந்து இவ்வகை இலக்கியங்களைப் பெரிதும் வேறுபடுத்துகின்றன.

ஒரே பெயரில் அமைந்துள்ள கிஸ்ஸாக்களில் கூட உருவத்தில் ஒற்றுமையைக் காணமுடியவில்லை. ஷேக்லெப்பை எழுதியுள்ள 'ஸைத்தூன் கிஸ்ஸா' முழுவதும் செய்யுள் வடிவத்திலும், அப்துல் காதர் சாகிபு எழுதியுள்ள 'ஸைத்தூன் கிஸ்ஸா' செய்யுள், உரைநடை ஆகிய இரண்டும் விரவியும் அமைந்துள்ளன. எனவே ஒரே பெயரில் ஒரே கதையில் ஒன்றுக்கு மேற்பட்ட கிஸ்ஸாக்கள் இருந்தாலும் அவை உருவத்தாலும் காலத்தாலும் வேறுபட்டிருப்பதால் தனித்தனி இலக்கியங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. செய்யுள் வடிவில் அமைந்துள்ள கிஸ்ஸாக்கள் விருத்தங்களாகவே உள்ளன.

கிஸ்ஸாக்களை அவற்றின் உள்ளடக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம்.
1. இசுலாமிய மார்க்க வரலாற்று நிகழ்ச்சிகளை மையமாக் கொண்ட கிஸ்ஸாக்கள்
2. வரலாற்றுத் தொடர்பில்லாது இசுலாமியக் கருத்துகளை மட்டுமே மையமாகக் கொண்ட கிஸ்ஸாக்கள்.

கிஸ்ஸா தமிழிலக்கியங்கள் முழுக்க முழுக்க இசுலாமிய மார்க்கத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. கிஸ்ஸாக்களின் நோக்கங்களுள் மார்க்கக் கருத்துரைகளையும், மார்க்கவழி நின்ற முன்னையோர் வரலாற்றினையும் பரப்புதல் என்பதே முதன்மையாக இருப்பதால் கிஸ்ஸாக்கள் இசுலாமியக் கருத்துக்களையே மையமாகக் கொண்டுள்ளன.

இசுலாமிய மார்க்க வரலாற்று நிகழ்ச்சி கிஸ்ஸாக்கள்

வரலாறு என்பது நபிமார்களின் வரலாற்றினையும், இறைத்துவம் பெற்ற இறைநேசச் செல்வர்களின் வரலாற்றையும், அரபு நாட்டில் சில மன்னர்களது வரலாற்றினையும் குறிப்பதாகும். இதனடிப்படையில் கிஸ்ஸாக்கள் அமைந்துள்ளன. இக் கிஸ்ஸாக்களுள் குர் ஆனில் இடம்பெற்றுள்ள நபிமார்களுள் அய்யூப் நபி, யூசுப் நபி ஆகிய இருவரது வரலாற்றினையும் அடிப்படையாகக் கொண்ட இரு கிஸ்ஸாக்கள் காணப்படுகின்றன. அல்குர்ஆனின் 12ஆவது அத்தியாயம் யூஸுஃப் என்ற தலைப்புடன் 117 வசனங்களைக் கொண்டுள்ளது. இக்கதையே குர்ஆனில் இடம்பெற்றுள்ள கிளைக் கதைகளிலேயே விரிவானதும் முழுமையானதுமாகும். இக்கதை முழுக்க மனிதர்களின் நிலை மாற்றத்தையே குறிப்பதாகும். இதனையே கருவாகக் கொண்டு விருத்தப்பாவில் யூசுப் நபிகிஸ்ஸா அமைந்துள்ளது. இக் கிஸ்ஸாவினை ஓர் உருவகக் கதையாகவே ஆசிரியர் இசுற்றியுள்ளார். அய்யூப் நபி நோய்வாய்ப்பட்டதும், அது அல்லாஹ்வின் கருணையால் குணமானதும் போன்ற நிகழ்ச்சிகள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. இவற்றினை மையமாகக் கொண்டே அய்யூப் நபிகிஸ்ஸா அமைகிறது. நபிமார்கள் அன்றி குர்ஆனில் இடம் பெற்றுள்ள மரியம் வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டே பீவி மர்யமுடைய கிஸ்ஸா காணப்படுகிறது.

பெருமானார் அடியொற்றி ஆட்சி நடத்தி 'நேர்வழி நடந்த நால்வர்' எனச் சிறப்புப் பெற்றவர்களுள் ஹஸரத் உமர், ஹஸரத் அலி ஆகிய இருவரது வரலாற்றினையும் ஒட்டியே இரண்டு கிஸ்ஸாக்கள் காணப்படுகின்றன. ஹஸரத் அலியார் பரம்பரையான முகம்மது அனிபாவைக் கதை நாயகராக மூன்று கிஸ்ஸாக்கள் கொண்டுள்ளன. இம்மூன்றிற்குள்ளும் முகம்மது அனிபா, சைத்தூன் கலந்து கொண்ட போர் நிகழ்ச்சிகள் விரிவாக இடம் பெறுவதுடன் ஏனைய ராஜாக்களான செண்டுல் ராஜன் போன்றோர் இசுலாமைத் தழுவிய நிகழ்ச்சிகளும் விவரிக்கப்படுகின்றன.

இறைவனுடைய கருணையைப் பெற்ற அவுலியா எனும் இறை நேசர்களின் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு சில கிஸ்ஸாக்கள் தோன்றியுள்ளன. இத்தகைய கிஸ்ஸாக்களின் கதைத் தலைவராக இருப்பவர்கள் அரசர்களாகவே இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுல்தான் இபுறாகீமுடைய கிஸ்ஸா, இப்றாகீம் அவிலியாவின் கதையை எடுத்துரைக்கின்றது. இறை நேசரான அரசர் காலிதிப்துல் வலீது அவர்களின் மகனான ஷம்ஊன் றலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தலைவராகக் கொண்டு நான்கு கிஸ்ஸாக்கள் உள்ளன.

மதீன மாநகரில் வாழ்ந்த இருவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு இரு கிஸ்ஸாக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஒன்று லாபிர் எனும் ஆலிம் மகளான இசுவத்து நாச்சியார் எனும் கற்புநாயகி தமது கற்பைக் காத்த சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

யூசுப் நபிகிஸ்ஸாவின் கதையமைப்பு

யூசுப் நபிகிஸ்ஸா ஜயம்பேட்டை மதாரு சாஹிபு அவர்களால் எழுதப்பட்டதாகும். நபிகளுள் ஒருவரான யூசுப் என்பவரே இக்கதையின் நாயகராவர். இது 155 செய்யுள் விருத்தங்களைக் கொண்டுள்ளது. அரபு நாட்டின் கன்னான் நகரில் உள்ள யாகூப் என்பாரின் 12 மகன்களுள் ஒருவரே யூசுப் நபியாகும். தந்தை யூசுப்பிடம் அதிக நேசத்துடன் இருப்பதைக் கண்ணுற்ற ஏனைய சகோதரர்கள் பொறாமை கொண்டு அவரைக் கொல்லக் கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். இறையருள் பெற்றயூசுப், எகிப்து வியாபாரியான மாலிக் என்பவரால் மிசுர் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு அந்நகர் மன்னர் அஜூஸ் என்பவரிடம் அடிமையாக விற்கப்படுகின்றான். அஜுஸ் மனைவியான சுலைகா திருமணத்திற்கு முன்பே 16 வயது யூசுப்பைத் தம் மோகத்திற்கு இணங்கும்படி முயன்று தோல்வியடைந்தாள். அதன் பயனாய் யூசுப் சிறையிலடைக்கப் படுகிறார்.

12 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப்பின் அரசன் கண்ட கனவின் பலன் கூறும் நிமித்தமாக விடுவிக்கப்பட்டு அரசவையில் முக்கிய இடம் பெற்றார் யூசுப் நபி. பின் நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் விளைவாக அரசனும் உயிர் இழக்க, யூசுப் அரசராகின்றார். இந்நிலையில் சுலைகா வயது முதிர்ந்து யூசுபிடம் வந்து உணவு கேட்கும் நிலைமைக்குட்படுகிறாள். இதனைக் கண்ட இறைத்தூதர் ஜிபுரயீல், இத்தனை ஆண்டுகள் உனக்காகவே காத்திருந்து முதுமை அடைந்திருக்கும் விதவை சுலைகாயைத் திருமணம் செய்து கொள்வதே அல்லாஹ் நாடிய தாகும் என்று தெரிவித்தார். சுலைகாவை 16 வயதுப் பெண்ணாக மாற்றித் திருமணம் செய்விக்கின்றார். இறுதியில் கொடுமை செய்த சகோதரர்களும் யூசுப்நபியிடமே தஞ்சமடைந்தனர். இதுவே யூசுப் நபி கிஸ்ஸா தரும் கதையாகும்.

யூசுப் நபி கிஸ்ஸாவின் உட்பொருள்

யூசுப் நபி கிஸ்ஸா உருவக் கதை என்றே கூற வேண்டும். மக்கள் அனுபவம் பெற வேண்டும் என்பதே யூசுப்நபியினுடைய வாழ்வின் மறைபொருளாகும். யூசுப்நபி இளமைக் காலம் முதல் இறையருளைப் பெற்றவர். யூசுப் நபியின் சகோதரர்களது பொறாமையும் வெறுப்பும் நேர்மையற்ற நடைமுறையுமே யூசுபிற்கு இவற்றை எதிர்க்கும் ஆற்றலை வளர்த்து இறையருள் நற்பணிக்கு ஈடுபடத் தூண்டியது.

யூசுப் நபியின் சகோதரர்கள், மனித சமுதாயத்தின் குரூரத் தன்மைகளின் பிரதிபலிப்பாகவே படைக்கப்பட்டுள்ளனர். கொடிய இன்னல்கள் பலவற்றையும் யூசுபின் சகோதரர்கள் புரிந்த போதிலும் இன்னல்கள் அனைத்தையும் தாங்கி இறுதியில் மேம்பட்ட நிலைக்கு யூசுப் வந்தார். தமக்குத் துன்பம் புரிந்த தம் சகோதரர்களுக்கும் அடைக்கலம் அளித்தார்.

தனக்கும் மீறிய உயர்ந்தவற்றின் மீது மனித இனத்திற்கும் சாதாரணப் பலவீனங்களுக்கும் எடுத்துக்காட்டவே சுலைகாவும் ஏனைய மிசுர் நாட்டுப் பெண்மணிகளும் இடம்பெறுகின்றனர். இந்நிலையைக் கிஸ்ஸாவில் எடுத்துக் காட்டும்போது யூசுபின் அழகில் மோகம் கொண்ட மிகர் பெண்கள் அவரைக் கண்டவுடன் கனியை அறுப்பதற்குப் பதிலாகத் தங்களது கையை அறுத்துக் கொண்ட காட்சியை மிக அழகாக ஆசிரியர் படைத்துள்ளார்.

உருசிகள் பெருகிய கனியே நீங்கள்நோக்கி
      யருந்துங்களென வுரைத்தார்
திசையா யூசுபைக் கோதைமார்கள் செங்கணோக்கியே
      காதல் கொண்டு
விசையாக் கரங்களைச் சூரியாலே மேவியரிந்து கொண்டு
      திரமோட
மசக்கா யவரவர் விரகமாகி மையற் றலையேறி
      மயங்கிப் போனார் (பா : 85)

இவ்வாறு சுலைகா, ஏனைய மிசுர் பெண்கள், யூசுபின்மீது மோகம் கொண்டு காம இச்சைக்கு உட்பட்டதையும், யூசுபின் மௌனத்தையும் கிஸ்ஸாவில் காட்டியுள்ளார்.
இக்கிஸ்ஸாவில், யூசுபு நபியை மிசுர் நகருக்குக் கொண்டு சென்று அவரைக் கண்காட்சியாக்கி, பொருள் தேடி இறுதியாக ஏலத்தில் வணிகர் விற்றார். எகிப்து அரசர் அஜிஸ், யூசுப் நபியைத் தம் மகனாக நினைத்து வளர்க்கலானார். ஒருவகையில் யூசுப் நபி தம் இறையருட் திருப்பணியை முழுமையாக உலகுக்கு அறிவிக்க ஒரு கருவியாகவே இருந்திருக்கின்றார். அஜூஸ் இல்லத்திலேயே யூசுப் முழு ஆண்மையையும், இறையிடத்திலிருந்து ஞானத்தையும் சக்தியையும் முழுமையாக அடைகின்றார். இதனைக் குர் ஆன் (12:22) 'அவர் தன் வாலிபத்தை அடைந்ததும் நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்தோம்' என்று குறிக்கின்றது. மற்றவர்களுக்கு நல்லதைச் செய்யவும், தன்னுடைய நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்ளவும் நினைக்கும் நேர்மையுள்ள ஒருவர் மற்றவர்களின் மடமை காரணமாகவும், பாவங்களின் விளைவாகவும் எத்தகைய இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதையே யூசுப் நபி சிறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி உணர்த்துகிறது.

மனித இனங்களுள் இருக்கும் பலவீனங்களான பொருள் வேட்கை, காம இச்சை, ஆசை முதலான ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டாகவே யூசுப் நபி கிஸ்ஸாவில் வரும் பாத்திரங்களான யூசுப் சகோதரர்கள், சுலைகா முதலான ஏனைய மிசுர் நகரப் பெண்கள், வணிகர் மாலிக் முதலானவர்கள் படைக்கப்பட்டுள்ளனர். இப் பலவீனங்களுக்கு இடையில் அகப்பட்டுக் கொள்ளும் உண்மையின் வெற்றிக்குச் சான்றாகவே யூசுப் காணப்படுகிறார்.

யூசுப் நபி கிஸ்ஸாவில் திருமறையிலிருந்து மாறுபட்ட கருத்துகள்

அல்குர்-ஆனின் 12ஆவது அத்தியாயம் ‘யூஸுஃப்' என்ற தலைப்புடன் 111 வசனங்களைக் கொண்டுள்ளது. இக்கதையே குர் ஆனில் இடம்பெற்றுள்ள கிளைக் கதைகளிலேயே விரிவானதும் முழுமையானதுமாகும். இது முழுக்க மனிதர்களின் நிலைமாற்றத்தையே குறிப்பதாகும். நேர்மை உயர்த்தப்படுதல், உண்மையின் வெற்றி ஆகியனவே இக்கதையின் அடித்தளமாகும். குர் ஆனில் இடம்பெற்றுள்ள இக்கதையைப் பற்பல இடங்களில் மதாரு சாகிபு மாற்றம் செய்திருக்கின்றார். குறிப்பாக, சுலைகா தொடர்பான செய்திகளில் மாற்றத்தைக் காணலாம். இப்பெயரே குர் ஆனில் காணப்படவில்லை. இதேபோல் யூசுப்பிற்குத் தீனார் என்ற தங்கை இருப்பதாகக் கூறுவது, அஜுஸ் மிசுர் நாட்டின் மன்னராகக் காட்டப்படுவது, யூசுப் சுலைகா திருமணம்,கனவு தொடர்பான செய்திகள் குர் ஆனிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ள-வற்றில் சிலவாகும். எனவே முதன் நூலில் இல்லாத பல செய்திகளையும் கதை அமைப்பின் நிறைவிற்காகவே ஆசிரியர் சேர்த்திருக்க வேண்டும் என உணரமுடிகிறது.

சைத்தூன் கிஸ்ஸாவின் கதையமைப்பு

சைத்தூன் கிஸ்ஸா என்ற பெயரில் இசுலாமியத் தமிழ் இலக்கியங்களுள் இரு கிஸ்ஸாக்கள் இருப்பதாக அறியமுடிகிறது. கிஸ்ஸா இலக்கியங்களின் தோற்றத்திற்கு வித்திட்ட பெருமை இக் கிஸ்ஸாவையே சேரும். எனினும் ஷேக் லெப்பை இசுற்றியதாக அறியப்படும் முதலாவது கிஸ்ஸாவின் காலமான கி.பி. 1874 என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் அறிய முடியவில்லை. இரண்டாவதாக, பேட்டை ஆம்பூரைச் சார்ந்த அப்துல்காதர் சாகிப் அவர்களும் சைத்தூன் கிஸ்ஸா ஒன்றினை இயற்றுவித்துள்ளார். இதன் காலத்தையும் சரிவர அறியமுடியவில்லை. இக் கிஸ்ஸாவினைப் பற்றி ஆசிரியர் கூறும்போது இக்கிஸ்ஸா பாரசீக மொழியிலும் உருது மொழியிலும் உள்ள கிஸ்ஸாக்களிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாரசீக, உருது மொழிகளில் பயிற்சியற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காகவே இந்நூல் எழுதப்பட்டது என்கிறார்.

சைத்தூன் கிஸ்ஸாவின் வடிவம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்போன்று அமைந்திருக்கும். கதைப் பகுதிகளுக்கு இடையிடையே கவிதைப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த கலீபாக்களுள் நான்காவது கலீபா என்ற பெருமைக்குரியவர் அலி (றலி) அவர்களே. அலி(றலி) அவர்களின் நான்கு புதல்வர்களுள் ஒருவரே முஹம்மது ஹனிபு என்பர். இவரது தாயார் பீபி ஹனிபா ஆவர். முஹம்மது ஹனிபு அறிவு ஆற்றலுடன் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். இவ்வாறு இவ்வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டதாகும்.

சைத்தூன் கிஸ்ஸாவின் கதைச் சுருக்கம்

ஒருநாள் முஹம்மது ஹனிபு அவர்கள் நால்வருடன் வேட்டையாடக் காடு ஒன்றிற்குச் சென்றார்கள். அந்நால்வருள் இருவர் அபூபக்கர் சித்தீக்கின் (றலி) புதல்வராவர். ஏனைய இருவரும் உமறுகத்தாபு (றலி) அவர்களின் புதல்வராவர். இவர்கள் ஐவரும் விரைவாகக் குதிரையில் காட்டின் வழியே செல்வதைச் சைத்தூன் என்ற பெண் கண்டாள். இவர்கள் வேட்டையாட வந்த காடு சைத்தூனுக்குச் சொந்தமானது. தனது ஆணைக்குள் உள்ள பகுதியில் உலாவும் அந்த ஐவரைக் கண்டதும் சைத்தூனுக்குக் கோபமுண்டாகியது. அவர்களைப் போருக்கு அழைத்தாள். போரில் முஹம்மது ஹனிபு மூர்ச்சையுற்றார். அவர் இறந்து விட்டார் என்று நினைத்து முஹம்மது ஹனிபை அவ்விடத்தே விட்டு மற்ற நால்வரையும் கைது செய்து தனது மாளிகைக்குச் சைத்தூன் அழைத்துச் சென்றாள்.

பிறகு சைத்தூன் மதீனா செல்ல நினைத்தாள். அங்குச் சென்று வெற்றியீட்ட எண்ணினாள். மதீனா செல்லும்பொழுது விழுந்து கிடந்த முஹம்மது ஹனிபு மூர்ச்சை தெளிந்து மதீனா சென்றார். முஹம்மது ஹனிபைத் தாயார் அன்போடு வரவேற்றார். நடந்தவை அனைத்தையும் அறிந்தார்- பின்னர் முஹம்மது ஹனிபு, சைத்தூனுடன் போர் புரியச் சென்றார். போரில் முஹம்மது ஹனிபு வெற்றியீட்டினார். சைத்தூனுடன் நடத்திய போர்களின் பயனாக வேறு பல இன்னல்களைச் சமாளிக்க வேண்டிய நிலைமை முஹம்மது ஹனிபுக்கு ஏற்பட்டது. பல போர்களில் பங்கு பெற நேர்ந்தது. ஒரு போரில் சூழ்ச்சிக்கு ஆளாகிப் படுகுழியில் வீழ்ந்தார். நோய்வாய்ப்பட்டார் தீடீரென எடுத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது அனைவரும் முஹம்மது ஹனிபைத் தேடிச் சென்றனர். கடலுக்கப்பால் ஹாயாபரியுடைய மகள் ஹாயாபரி என்பவளால் கடத்திச் செல்லப்பட்டார் என அறிந்தனர். அங்குச் செல்லும் வழியில் பல அரசர்கள் இசுலாத்தைத் தழுவினர். முஹம்மது ஹனிபு மீட்கப்பட்டார். இறுதியில் எல்லாம் இன்பமாய் முடிந்தன. இதுவே சைத்தூன் கிஸ்ஸாவின் கதைச் சுருக்கமாகும்.

சைத்தூன் கிஸ்ஸாவில் முஹம்மது ஹனிபும் சைத்தூனும் போரில் ஈடுபட்டனர் என்ற நிகழ்ச்சி இசுலாமிய வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை. உண்மையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்பதை நிலைநிறுத்தச் சான்று இல்லை. இக்கதை பாரசீக, உருது ஆசிரியர்களின் கற்பனையில் எழுந்திருக்கலாம் அல்லது தமிழ் நாட்டு முஸ்லிம் புலவர்களின் உள்ளத்தில் மலர்ந்திருக்கலாம். இது எவ்வாறாயினும் உண்மையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது போலவே குறிப்பிடப்பட்டுள்ளது. பல முஸ்லிம் பெரியார்களின் பெயர்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இப் பெயர்களைக் கேட்டவர்கள் இக்கதை உண்மையில் நிகழ்ந்தது என்று கொள்வர்.

சைத்தூன் கிஸ்ஸாவில் இசுலாமியக் கொள்கை

குதிரைகள் விரைந்து செல்லும் காட்சி இக் கிஸ்ஸாவின் பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் இக்காட்சி ஒரே முறையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. உவமை, சொல்லாட்சி முதலியன ஒரே வகையில் அமைந்துள்ளன.

செந்தூள் பறந்து தூசியெழும்பிட சூரர்கள் கண்டார்கள்
கருந்தூள் மறந்து தூசியெழும்பிட கண்டா ரந்நேரம்
(சைத்தூன் கிஸ்ஸா)

பொதுவாக இசுலாம் தற்காப்பின் பொருட்டு நடத்தும் போரையே அனுமதிக்கிறது. ஆக்கிரமிப்பை, அங்கீகரிப்பதில்லை. அக்கொள்கையே மிகச் சுருக்கமாக முஹம்மது ஹனிபு வாயிலாக ஓர் அடியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

"எதிரி அடித்தபின் நாங்களடிப்பது எங்கள் வழக்க மென்றார்".

இவ்வாறு சைத்தூன் கிஸ்ஸாவில் உவமைகள், சொல்வளம் ஆளப்பட்டுள்ளன. அவை மக்கள் எளிதில் விளங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

இசுலாமியக் கொள்கையில் அடுத்ததாக, இருவர் போர் புரியும் பொழுது ஒருவர் இன்னொருவரின் ஆற்றலைக் குறைவாகக் கூறித் தனது வீரத்தைப் பெரிதாகக் கூறுவது இயற்கை. இத்தகைய நிலையில்,

புலியைப் பசுவும் வெல்வதுண்டோ இந்தப் பூமியிலே
பூனையை எலிகள் வெல்வதுமுண்டோ இந்தப் பூமியிலே
நரியைக் கோழிகள் வெல்வதுமுண்டோ இந்தப் பூமியிலே
(சைத்தூன் கிஸ்ஸா)

என்பதாக உள்ளது. பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற வழக்கத்தையும் இந்நூல் காட்டுகின்றது.

காட்டுக்கு வேட்டையாட நீ வந்த
காரிய மொன்று மில்லை
வீட்டுக்குள்ளிருந்து நீ நூலினை நூற்பது
உனக்குத் தகுந்த வேலை (சைத்தூன் கிஸ்ஸா)

இவ்வாறு முஹம்மது ஹனிபைத் தேடித் தாயார் செல்லும் பொழுது சைத்தூனைச் சந்தித்ததும் தாயாரின் கூற்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோழிகள் வந்ததா நரியினைப் பிடிக்கக்
      கொக்கரித்துக் கொண்டு
ஆடுகள் வந்ததா புலியை மிரட்ட
      ஆங்காரங் கொண்டு
தவளைகள் வந்ததா பாம்பினை வெல்ல
      தைரிய மிகவாகி
எலிகள் வந்ததா பூனையைத் தின்ன
      ஏக்கமிகக் கொண்டு (சைத்தூன் கிஸ்ஸா)

இவ்வாறு எளிய நடையில் உண்மையில் நிகழாத ஒரு கதையை இசுற்றியதற்குரிய ஒரு காரணம் இருக்கிறது. அதாவது பழங்காலத் தமிழர் வாழ்க்கையில் போர் முதலிடத்தைப் பெற்றிருந்தது. ஆகவே அக்காலப் போரிலும் அறப்பண்புகள் மிகுந்து இருந்தன என்பதைத் தெளிவுபடுத்தவே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தொடர்பில்லாத இசுலாமியக் கருத்துக் கிஸ்ஸாக்கள்

வரலாற்றுத் தொடர்பில்லாத இசுலாமியக் கிஸ்ஸாக்களை ஐந்து பிரிவாகப் பிரிக்கலாம்.

-- காலியாருக்கும் கள்ளனுக்கும் நடந்த கிஸ்ஸா
-- விறகு வெட்டியார் கிஸ்ஸா
-- காலிகோரி கிஸ்ஸா
-- கபன், கள்ளன் கிஸ்ஸா
-- குலேபகாவலி கிஸ்ஸா

காலியாருக்கும் கள்ளனுக்கும் நடந்த கிஸ்ஸா

இசுலாமிய சமயத்தில் ஒருவர் காலியாராக அமைவதற்குரிய தகுதிகள், அவருக்குரிய கடமைகள் முதலானவற்றை விவரிப்பது காலியாருக்கும் கள்ளனுக்கும் நடந்த கிஸ்ஸாவாகும்.

ஆலம் யாவு மமைத்தர சாளுமோர்
மேலவர் பிணிந் தேமிகு கல்வியார்
காலி யார்க்குங் கள்ளற்கு நடந்துள
வோல மாரும் கிஸ்ஸாவை யுரைக்குவாம்

எனும் காப்புக் கலிவிருத்தச் செய்யுளுடன் தொடங்கிக் கிஸ்ஸா முழுவதும் உரைநடை வடிவத்தில் அமைந்துள்ளது. அனைத்தும் கற்றுத்தேர்ந்த காலியாரும், நாயகம் பெருமானார் (ஸல்) அவர்களது ஹதீதான ‘யாதனும் ஒருவன் ஓரிடத்தை நாடிப் பிரயாணப் பாதையில் போவதற்கு முன்னதாக ஒரு தோழனைக் கூடச் சேர்த்துக் கொள்க' எனும் வாக்கினை மறந்து செயல் பட்டதின் விளைவாக வழியில் ஒரு கள்ளனிடம் அகப்பட்டுக் கொள்ள அவர்தம் உடைமைகளை இழந்து நிற்பதை விவரிக்கிறது. உடைமைகளைத் திருடிய கள்ளன் காலியாரின் தவத்தினையும் சுட்டிக் காட்டுகின்றான். இதற்குரிய மூலக்கதை அரபு இலக்கியங்களில் உண்டா என்பதை உறுதியாக அறிய சுலவில்லை. நபி (ஸல்)யின் சொல்லை மறந்தவர்களுக்குக் கெட்ட விதிதான் நடைபெறும் என்பதை இக் கிஸ்ஸா உணர்த்துகிறது. அல்குர் ஆன் வாக்குகளும் பெருமானாரின் பொன்மொழிகளும் காலியாருக்கும் கள்ளனுக்கும் நடக்கும் விவாதத்தில் எடுத்துக் காட்டப்படுகின்றன. அரபுச் சொற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

விறகு வெட்டியார் கிஸ்ஸா

இசுலாமிய ஏழாவது மாதமான ரஜப் 22ஆம் தேதி கந்தூரி பாத்திஹா ஹஸ்ரத் இமாம் ஜாபர் ஸாதிக் (றலி) அவர்களது பெயரால் நடத்தப்படுவது வழக்கமாகும். இக் கந்தூரி பாத்திஹாவின் ஆரம்பச் சூழலையும், அதன் அவசியத்தையும் ஓர் ஏழை விறகு வெட்டியின் வாழ்வியல் நிகழ்ச்சியுடன் தொடர்புபடுத்தி விளக்குகிறது.

ஒரு விறகு வெட்டிக்குக் கடும் பஞ்சம் ஏற்பட்டு வேறுநாடு சென்று பொருள் தேடச் சென்றான். அவனது மனைவி ஒரு மந்திரியின் வீட்டில் வேலை செய்து துன்பத்துடன் வாழ்ந்து வந்தாள். இந்நிலையில் ஹஸ்ரத் இமாம் ஜாபர் ஸாதிக்(றலி) அவர்கள் தமது நண்பர்களுடன் ஒருவன் எப்படிப்பட்ட துன்பத்தில் சிக்குண்டு கிடந்த போதிலும் அத்துன்பம் நீங்கிட வேண்டுதலைக் கொண்டு ரஜப் மாதம் 22ஆம் தேதி அவனது சக்திக்கும் தகுதிக்கும் தகுந்தபடி மைதாமாவினால் ஆன பூரியான் என்று வழங்கப்படும் பண்டத்தைத் தயாரித்து அத்துடன் இரண்டு பாத்திரம் நிறையக் கீர் எனும் பாயாசத்தையும் சமைக்க வேண்டும்; ஆண்டவன் சன்னிதானத்தில் பாத்திஹா ஓதி, தன் வேண்டுதல் நிறைவேற்றத்திற்காக மன்றாடிக் கொள்வானாகில், நாயன் அவன் வேண்டுதலை அவசியம் பூர்த்தி செய்து வைப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட விறகு வெட்டியின் மனைவியும் அவ்வாறே செய்தாள். அவளது துன்பங்கள் யாவும் நீங்கின.

அத்துடன் வெளிநாடு சென்ற அவளது கணவனுக்கும் புதையல் கிடைக்கப் பெற்றுத் திரும்பி வந்தான். இதனைக் கண்டு பொறாமை கொண்ட மந்திரியின் மனைவி விறகு வெட்டி கொள்ளையடித்திருப்பான் என்று கூறினாள். ஆகவே மந்திரி, அரசன் மகனைக் கொன்றான். அதற்குத் தூக்குத் தண்டனை பெற்றுக் கடும் துன்பத்திற்கு ஆளானான்.

இறுதியில் மந்திரியின் மனைவி, ஜாபர் ஸாதிக் (அலை) அவர்கள் மீது நம்பிக்கையின்றி நடந்த தம் குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுத் தன் குடும்பத் துன்பம் நீங்குவதற்கு ரஜப் மாதம் 22ஆம் தேதி ஜாபர் ஸாதிக் அவர்களது பெயரில் பாத்திஹா ஓதுவதாக வேண்டிக் கொண்டாள். அதன் பலனாக மந்திரியும் விடுதலை பெற்றதுடன் அவர் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றுப் பழைய நிலைக்கு வந்தார். இதுவே விறகு வெட்டி கிஸ்ஸாவின் கதையாகும்.

இது உருது மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக அப்துல் ரஸாக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான மூலக்கதை அரபு மொழியிலிருக்க வாய்ப்பில்லை. கதையின் போக்கும், அதன் நிகழ்வுகளும் இங்குள்ள சூழலுக்கேற்ப அமைந்துள்ளன. இக்கிஸ்ஸா முழுவதும் உரைநடையிலே அமைந்துள்ளது. உரைநடை அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது. ஏனைய கிஸ்ஸாக்களுடன் ஒப்பிடும்போது அரபுச் சொல் கலப்பு மிகக் குறைவாக உள்ளது.

காலிகோரி கிஸ்ஸா

ஆண்டவன் படைப்பில் குறைகண்டால், அது நம்முடைய அறிவீனம் என்பதை எடுத்துரைப்பதே காலிகோரி கிஸ்ஸா. இந்துஸ்தானி மொழியில் கோரி என்றால் சிவத்தவள் என்றும், காலி என்றால் கருத்தவள் என்றும் குறிப்பதால் இதனடிப்படையில் இக்கிஸ்ஸா பெயர் பெற்றுள்ளது. கருத்தவள், சிவத்தவள் ஆகிய இருவரின் தர்க்கவாதமாகும். இதனை உருது மொழியிலிருந்து அய்யம்பேட்டை அப்துல் ரஸாக் தமிழாக்கம் செய்துள்ளதாகக் குறிக்கப் பட்டுள்ளது.

இதில் ஆண்டவன் படைத்த பொருள்கள் எல்லாம் மானிட வர்க்கத்திற்கு வசியமானவை என்றும், அவன் எந்த அமைப்பிலும் திறத்திலும் படைத்திருக்கிறானோ அதில் நாம் குறையேதும் கூற முற்படுவோமாகில், அது நம்முடைய, அறியாமையையும் மதியீனத்தையுமே வெளிப்படுத்துவதாகும்.

இந்த வரலாறு இருபெண்களைப் பற்றியதாகும். ஆதலால் இதை ஆடவர்கள் பொதுவாகவும், பெண்கள் குறிப்பாகவும் கேட்பது அவசியமாகும் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இக்கிஸ்ஸாவில் சிவத்த நிறமுடையவள் தன் நிறம் கருதிப் பெருமைப்பட்டுக் கொள்வதுடன் கருத்த நிறமுடையவளை நோக்கி, அவளது கருமை குறித்து இழிவாகவும், தாழ்வாகவும் பேசுகிறாள். இதற்குக் கருத்தவள் தர்க்க முறையில் விடை கொடுத்துச் சிவத்தவளின் செருக்கினைச் சுட்டிக்காட்டி விளக்குகிறாள். பெண்களுக்குச் சிவப்பானவர்கள் சிறப்பானவர்கள் என்றும் கருத்தவர் தாழ்வானவரென்றும் ஒரு கருத்து பரவிய சூழ்நிலையில், அத்தகு நிறவேற்றுமையை மாந்தர் தம் மனத்துள்
கொள்ளக் கூடாது என்பதை அறிவூட்டுவதற்காகவே காலிகோரி கிஸ்ஸா தோன்றியிருக்க வேண்டும்.

இசுலாம், இந்தியா போன்ற பிற நாடுகளில் பரவத் தொடங்கியபோது அரபு நாடுகளிலிருந்த சமயத்தைப் பரப்புவதற்காகப் பல சமயச் சான்றோர்கள் இங்கு வந்து குடியேறினர். அவர்கள் அனைவரும் ஆடவர்களாகவே இருந்தனர். அத்தகு ஆடவர்கள் இங்குக் கருமை நிறமுள்ள பெண்களை மணந்தால்தான் இசுலாம் பரவி வேரூன்றும் என்ற சூழல் ஒரு காலக் கட்டத்தில் இருந்திருக்க வேண்டும். அத்தகு நிலையில் சிவப்பு நிறமுள்ள அரபு தேசத்தில் பெண்களைப் பார்த்துப் பழகியவர்கள் கருப்பு நிறப் பெண்களை ஒதுக்கி விடுதல் ஆகாது என்ற காரணத்திற்காகவே காலிகோரி கிஸ்ஸா போன்றன தோன்றியிருக்க வேண்டும். எனவே இதுபோன்ற கிஸ்ஸாக்களுக்குரிய மூலம், அரபு மொழியில் இருந்திருக்குமா என்பது ஐயத்திற்குரியது. இந்தியச் சூழலுக்கேற்ப இங்குள்ள முஸ்லிம்கள் இத்தகு கிஸ்ஸா இலக்கியங்களை உருவாக்கியிருக்கலாம். எனவே இக்கிஸ்ஸா நிறவேற்றுமையைத் தவிர்க்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே எழுதப்பட்டதெனலாம். இக்கிஸ்ஸா முழுவதும் உரைநடையாக அமைந்துள்ளது.

கபன் கள்ளன் கிஸ்ஸா

உருது செய்யுளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உரைநடை வடிவத்திலிருக்கும் பிறிதொரு கிஸ்ஸாவே கபன் கள்ளன் கிஸ்ஸா. இக்கிஸ்ஸா அனைத்துக் கிஸ்ஸா இலக்கியங்களுள்ளும் மிகச் சிறியது. கபன் துணியைத் திருடும் ஒரு திருடனின் இழி செயல் அவனுக்கு உணர்த்தப்பட்டு இறுதியில் அவனும் உயிர் துறக்க நேரிடுவதையே கபன் கள்ளன் கிஸ்ஸா குறிப்பிடுகிறது.

குலேபகாவலி கிஸ்ஸா

குலேபகாவலி கிஸ்ஸா, பொது நிலையில் அமைந்த சில கருத்துகளை உள்ளடக்கமாகப் பெற்றமைந்துள்ளது. பொதுவாக வரலாறு தொடர்பில்லாக் கிஸ்ஸா இலக்கியங்களுக்குரிய மூலம், அரபு இலக்கியங்களில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

தொகுப்புரை

புதுவகை இசுலாமியத் தமிழிலக்கியப் பிரபந்தங்களுள் ஒன்றாகக் கிஸ்ஸா இலக்கியங்கள் காணப்படுகின்றன. இசுலாம் சமயக்கருத்துகளையும், நபிமார்களின் வரலாறுகளையும், பிற வரலாற்று நிகழ்வுகளையும் தமிழக முஸ்லிம் மக்களிடம் பரப்புவதற்கு ஒரு சிறந்த கருவியாகவே பயன்பட்டிருக்கின்றன. இக்கிஸ்ஸா இலக்கியங்களால், இசுலாம் பரவிய சூழல்களையும் ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது.
---------------

6. மஸ்அலா இலக்கியங்கள்


இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் புதுவகை முஸ்லிம் தமிழ்ச் சிற்றிலக்கியப் பிரிவுகளுள் ஒன்றாக மஸ்அலா இலக்கியங்கள் காணப்படுகின்றன. அரபு மொழி இலக்கியத் தாக்கத்தால் இசுலாமியத் தமிழிலக்கியம் பெற்ற பயன்களுள் மஸ்அலா எனும் இலக்கிய வகையும் அடங்கும்.

‘மஸஅலா எனும் அரபுச் சொல்லின் (Mas'alat) பொருள் வினா என்பதாகும். இவ்வரபுச் சொல் ஸுஆல் (Su'al) கேள்வி எனும் அரபு வேர்ச்சொல்லிருந்து தோன்றியதாகும். அரபில் மஸ்அலா என்பதன் பிறிதொரு பொருள் 'பிரச்சினை என்பதாகும்.

பெருமானார் அண்ணல் நபி (சல்) அவர்களின் காலத்திற்குப் பின் இவ்வுலகில் இசுலாம் வேரூன்றிப் பரவத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையில் இசுலாமியப் போதனைகளிலும் அம்மார்க்கம் வகுத்துக் காட்டும் நெறிமுறைகளிலும் ஐயங்கள் ஏற்பட்டு அவ்வையங்கள் வினாவாக எழுகின்றபோது அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறையை இசுலாம் வகுத்துக் காட்டுகின்றது. அதாவது ஒருவருக்கு இசுலாத்தின் பரந்துபட்ட நற்போதனைகளில் எப்பகுதியில் ஐயங்கள் தோன்றினும் அவற்றை மார்க்கப் போதகர்களிடம் வெளிப்படுத்தித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே மார்க்கத்தில் பின்பற்ற வேண்டிய வழியாகும். இத்தகைய முறையின் அடிப்படையில் எழும் ஐயப்பாடுகளையே மஸ்அலா எனும் அரபுச்சொல் குறிக்கிறது. எனவே மஸ்அலா இலக்கியவகை இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளை விளக்கும் வகையில் எழும் ஐயங்களையும் அவற்றிற்குரிய விடைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டமைந்துள்ளது
எனலாம்.

மஸ்அலாக்களும் மார்க்க வழிமுறையும்

சமூக வாழ்வில் வெவ்வேறான காலச்சூழல்களில் வேறுபட்ட சிக்கல்கள், ஐயப்பாடுகள், புதிர்கள் தோன்றுவதுண்டு. இவ்வாறு ஏற்படும் ஐயப்பாடுகளுக்கும் சிக்கல்களுக்கும் உரிய தீர்வினைத் தீர்க்கும் வகையில் இசுலாமிய மார்க்கம் அதற்குரிய வழிவகைகளை வகுத்துக் காட்டத் தவறவில்லை. இசுலாமிய மார்க்கத்தின் அடிப்படையில் எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஏற்படும் மஸ்அலாக்களுக்குரிய முறையான தீர்வுகளுக்கு அணுக வேண்டியது இரண்டு வழிமுறைகளாகும். ஒன்று அல்குர்ஆன். பிறிதொன்று அல்ஹதீது. அல்குர்ஆன் இசுலாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் அடங்கிய அடிப்படை முழு முதல் வேதமாகும். இது அல்லாஹ்வின் இறைத்தூதர் பெருமானார் நபிகள் நாயகம் (சல்) தம் வாழ்வினை மேற்கொண்டது அல்குர் ஆனின் ஒவ்வொரு கருத்துகளுக்கும், ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஏற்பவே ஆகும்.

பெருமானார் நபி (சல்) அவர்களின் வாழ்க்கை அல்குர் ஆனிற்குரிய விரிவுரை என்றே கூறலாம். இத்தகு சிறப்பினைப் பெற்ற பெருமானாரின் வாழ்வில் அவர் சொன்னவை, செயல் படுத்தியவை முதலான அண்ணலாரின் வாழ்வுடன் நேரிடையான தொடர்புடைய செய்திகளே அல்-ஹதீதாகும். எனவே முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் அல்குர் ஆனும் அல்ஹதீதும் வழிகாட்டியாக உள்ளன. பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த மக்களின் மனத்தில் இசுலாமியப் போதனைகள், நடைமுறைகள் தொடர்பாக ஏற்பட்ட ஐயப்பாடுகளுக்குரிய விடைகளை அல்குர்ஆனும், அல்ஹதீதும் என்றென்றும் அழியாத கோட்பாடுகளையும் கொள்கை விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளன.

எனவே இசுலாமிய மார்க்கப் பெரியோர்கள் எந்தவொரு காலச் சூழலிலும் ஏற்பட்ட மஸ்அலாக்களுக்குரிய தீர்வினை நாடும்போது அல்குர் ஆனையும் அல்ஹதீதையும் அடிப்படையாகக் கொண்டே பதில் அளித்து வந்தனர். இந்நெறிமுறையின் அடிப்படையிலேயே மஸ்அலா இலக்கியங்களும் அமையப்பெற்றுள்ளன. இது மஸ்அலா இலக்கியங்களுக்குரிய பொதுத்தன்மை எனலாம். இப்பொதுத்தன்மையின் அடிப்படையிலேயே முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் தமது மஸ்அலா இலக்கியப் படைப்புக்களை உருவாக்கியுள்ளனர்.

ஆயிர மஸ்அலாவின் தனிச்சிறப்பு

சுலாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியப் பிரிவில் மஸ்அலா எனும் இலக்கிய வகையின்கீழ் இதுவரையிலும் மூன்று இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் கி.பி.1572இல் காலத்தால் முதலில் தோன்றிய மஸ்அலா இலக்கியம் ஆயிரம் மஸ்அலா ஆகும். இந்நூலின் முழுப்பெயர் 'ஆயிரமஸ் அவா வென்று வழங்கும் அதிஜய புராணம்' (Ref. ப.170) என்பதாகும். இம்மஸ்அலா இலக்கியத்தை இயற்றுவித்தவர் மதுரையைச் சார்ந்த வண்ணப் பரிமளப் புலவராவார்.

ஆயிரமசலா ஒரு நீதி இலக்கியத்தைப் போல் விளங்குகிறது. இதில் அடங்கியிருக்கும் கருத்துகள் இசுலாமிய மார்க்கப் போதனைகளாகவும் வாழ்க்கை நெறிப்படி இசுலாம் காட்டும் நல்வழிமுறைகளாகவும் உள்ளன.

தீன் என்பது இசுலாமிய மார்க்கத்தைக் குறிக்கும் அரபுச் சொல்லாகும். இத்தீனின் அடிப்படையான ஆணிவேர் ஈமானாகும். அதாவது இசுலாத்திலும் அதனுடைய ஏகத்துவ இறைக்கொள்கையிலும் நம்பிக்கை கொள்வதையே ஈமான் எனும் சொல் குறிக்கிறது. இது பற்றி அப்துல்லா இப்னுசலாம் நாயகத்திடம்,

மானாக மேவந்த மக்காவில் வாழ்
தேனாவி லேவந்த செப்போசையாய்
மீனாக மேகொண்ட மெய்த்தூ தரே
தீனாவ தோதென்று செப்பீர் மனே (ஆயிரமசலா:71)

என்று வினவ அதற்கு இறசூலுல்லா (சல்)

வீறான சூதர்க்கு மேலானவா
தேறாகு பாகொத்த தீனாவதே
சாறான கலிமா ஷஹாதத்துட
னீறாத சீபத்தி லீமானுமாம் (ஆயிரமசலா : 72)

என இசுலாத்தின் மூலமந்திரமான கலிமாவின்மேல் ஈமான் கொள்வதையே தீனென்று சுட்டுகின்றார்கள். கலிமா என்பது சுலாத்தின் அடிப்படை போதனைகளைச் சுட்டும் மூலமந்திரமாகும். இது ஐந்து வகைப்படும். அவற்றுள் முதலாவது கலிமா ஏகத்துவ இறைவழிபாட்டுக் கொள்கையை வலியுறுத்தும் 'வாயிலாக இல்லல்லாகு முஹம்மதுற்-றசூலுல்லா என்பதாகும். இதன் பொருள் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே. முஹம்மது அவனது திருத்தூதர்' என்பதாகும். இக்கருத்தை வலியுறுத்துவதே மேற்சொன்ன பாடலாகும்.

இசுலாத்தில் சுவர்க்கத்தை ஜென்னத் என்பர். இத்தகைய சுவர்க்கச் சுவனங்கள் எட்டாகும். அவை முறையே தாறுல் ஜலால் ஒளியாலும், ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும், ஜன்னத்துல் மவா பொன்னாலும், ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் முத்தாலும், ஜன்னத்துந் நயீம் வைடூரியத்தாலும், தாருஸ் ஸலாம் செம்மணியாலும், தாருல்கரார் பவளத்தாலும், ஜன்னத்துல் அதன் மரகதத்தாலும் படைக்கப்பட்டனவாகும். இத்தகைய சுவர்க்கம் பற்றிய குறிப்புக்கள் இறைவனின் திருமறையாம் அல்குர் ஆனிலும் இடம் பெறுகின்றன. இந்த எட்டுச் சுவர்க்கங்கள் பற்றிய விளக்கமும் சிறப்பும் ஆயிமசலாவில் விரிவாக இடம் பெறுகின்றன.

உலகில் மானுடர்கள் பலவிதம். அதற்கான விளக்கத்தை நாயகத்தின் வழியாக அறிகிறோம்.

ஒரு மண்ணாற் படைத்த மாந்த ரொருவடி வாவரென்றே
கருதியே பலமண் கொண்டு கருப்பிடித் தமைத்தா னந்தப்
பரிசினால் மனுட ரெல்லாம் பலவண்ண மானா ரென்ன
மருவியே யிறசூல் கூற (ஆயிரமசலா : 661)

என்பதிலிருந்து மானுடப்படைப்பு மண்ணிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்டது என்ற இசுலாத்தின் கொள்கையை அறியலாம். இதனைத் திருமறையான அல்குர்ஆனில் அல்லாஹ் நிச்சயமாக நாம் உங்களை மண்ணிலிருந்து சிருஷ்டித்தோம்' (அல்குர் ஆன் 22:5) என்று குறிப்பிடுகின்றான். அத்தகைய படைப்பும் ஒரே மண்ணிலிருந்து படைக்கப்படவில்லை. பல மண் கொண்டு படைக்கப்பட்டதால் மானுடர் பல வண்ணமானார்கள்.

முஸ்லிம் மக்கள், 'கியாமத்' (இறுதி) நாள் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனைக் கியாமத்துஸ் ஸுக்ரா, கியாமத்துல் உஸ்தா, கியாமத்துல் குப்ரா என்ற மூன்று வகையாகக் கொள்வர். முதலாவது ஒவ்வொரு மானுடப் பிறவியும் இறக்கும்போது ஏற்படும் நிலையையும் இரண்டாவது எல்லாப் படைப்பினங்களும் அழிந்து உலகம் முடியும் நாளையும் மூன்றாவது அழிந்த படைப்பினங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு அவரவரின் நன்மை தீமைப் பலன்களை எய்துவதையும் குறிப்பனவாகும். இத்தகைய மூன்றில் முதல் இரண்டு நிலைகளும் தோன்றுவதற்கான அடையாளங்களை இறைவன் தன் திருமறையிலும் குறித்துள்ளான். இத்தகையனவாக அடையாளங்கள் உள்ளன. இவற்றை ஆயிரமசலாவில் வண்ணப் பரிமளப் புலவர் தம் பாவண்ணத்தால் விரிவாக எடுத்துரைக்கின்றார். மேற்குறித்த கியாமதுல் உஸ்தா எனும் உலகம் அழியும் நாளில் மானுடர் மானத்தை மதியார். வீதியில் நடப்பவரும் கூடத் தம் மேனி தெரிய நடப்பார்கள். ஆகாத மதுவை உண்டு அழிவார்கள். பள்ளி வாசலுக்குச் செல்லார்கள். ஈமானை மானுடர் கைவிடுவார்கள். அத்துடன் மானுடரில் மட்டுமின்றி அக்காலத்தே இசுற்கையும் கூட முரணாவதை,

மாரிதருங் கொடையுமா றும்றகுமத் துளதுஞ்
சீரியருந் தீன்வழியிற் செய்யார்கள் நற்செயலை
வேரியருங் கோடைமிக மாரிகா லமுமாங்
காரியம் பார்க் கிவிரணங் காணாது போதவுமே (ஆயிரமசலா : 859)

என ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். இவ்வாறாகக் கியாமத் நாள் அடையாளங்கள் தோன்றியபின் ஒவ்வொருவரும் இறப்பெய்தி இறுதி நாளில் எழுப்பப்படுவார்கள் என்பது இசுலாத்தின் போதனையாகும்.

இவ்வாறு ஆயிரமசலாவில் வாழ்வின் தோற்றம் வாழ்வியலின் நிகழ்வுகள் அந்நிகழ்ச்சிகளின்போது எதிர்ப்படும் இடையூறுகள் அவ்விடையூறுகளிலிருந்து மீட்சி பெறுவதற்கான வழிமுறைகள், நல்வழியில் நல்மோட்சம், அம்மோட்சத்தின் சிறப்பு, வாழ்வின் இறுதிநாள் இத்தகைய இறுதி நாள் உலகப் பிறவிகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்பட்ட பின் கியாமத்துல் உஸ்தா எனும் உலக முடிவுநாள் பற்றிய விளக்கங்கள், அடுத்துக் கியாமத்துல் குப்ராவானா மறுமை எழுச்சி நாள் வரையிலான பல்வேறு ஐயப்பாடுகள் ஆயிரம் வினாக்களாகப் பகுக்கப்பட்டு அப்துல்லா இப்னு சலாமால் வினாவாக எழுப்பப்பட்டுப் பெருமானார் நாயகத்தின் (சல்) திருமொழியாக விடைகள் உரைக்கப்பட்டுள்ளன.

வெள்ளாட்டி மஸ்அலா

மஸ்அலா இலக்கிய வகையுள் காலத்தால் இரண்டாவது இடத்தைப் பெறுவது வெள்ளாட்டி மசலா ஆகும். இவ்விலக்கியத்தின் முழுப்பெயர் 'தவத்தூது என்ற வெள்ளாட்டி மஸ்அலா' என்பதாகும். இதனை இசுற்றியவர் காயல்பட்டணம் ஹெய்கப்துல் காதிறு லெப்பை என்பவராவார். கி.பி. 1856ஆம் ஆண்டு வெள்ளாட்டி மஸ்அலா தோன்றியுள்ளது. ஆகவே ஆயிர மசலாவின் தோற்றத்திற்கும் வெள்ளாட்டி மஸ்அலாவின் தோற்றத்திற்கும் பெரும் இடைவெளி இருப்பதை அறிய முடிகிறது.

மஸ்அலா இலக்கியங்களாக இடம்பெற்றுள்ள மூன்று இலக்கியங்களுள் வெள்ளாட்டி மஸ்அலா மட்டுமே உரைநடை வடிவத்தில் அமைந்துள்ளது. இம்மஸ்அலாவின் தலைப்பில் இடம்பெற்றுள்ள வெள்ளாட்டி என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் 'பணிப்பெண்' என்பதாகும். தவத்தூது என்பது பணிப்பெண்ணின் பெயராகும். மன்னர் ஹாரூன் ரஷீது அரசவையில் உள்ள அறிஞர் நால்வரின் பல்வேறு வினாக்களுக்கு வெள்ளாட்டி தவத்தூது விடையளிப்பதால் தவத்தூது என்ற பெயரிலேயே இம்மஸ்அலா இடம்பெற்றுள்ளது.

இந்நூலின் தொடக்கத்தில் வெள்ளாட்டி தவத்தூது பற்றிய வரலாற்றுப் பின்னணி இடம்பெற்றுள்ளது. பகுதாது நாட்டில் தாறுஸ்ஸலாம் எனும் பட்டணத்தில் வாழ்ந்து வரும் பெரும் செல்வந்தரான சவுதாக்கர் (வர்த்தகர்) ஒருவருக்கு நீண்ட காலமாகக் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்து பின் அல்லாஹ்வின் கருணையால் பதுறுஸ்ஸமான் எனும் ஆண்மகவு ஒன்று பிறந்திட, செல்வந்தர் தம் மகனை நல்வழிப்படுத்தி மார்க்க நெறியில் வளர்ப்பதற்காக ஐந்து வயது வெள்ளாட்டிப் பெண்ணைத் தேடுகின்றார். அவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'எனக்கொரு வெள்ளாட்டியவள் சிறிய வயதானவள், ஐந்து வயதுப் பெண்ணானவள், வர்ணிப்பிலடங்காத மிகுந்த அழகானவள், நல்லவள், குறுஞ்சிரிப்புள்ளவள், உயர்ந்த நிரப்பமுள்ளவள், மதுரவாக்குள்ளவள், வாடை மணமானவள், தலைகனத்தவள், அவள் காலத்திலவளுக்கு நிகரில்லாதவள், இப்பேர்க்கேற்ற பெண்வேண்டும்' என்கிறார்.

இத்தகு இசுல்புகள் அனைத்தும் வாய்க்கப் பெற்ற வெள்ளாட்டியை ஒரு வியாபாரி மூலமாக விலைக்கு வாங்கி அவளுக்குத் தவத்தூது என்ற பெயரும் இட்டனர். அவ்வெள்ளாட்டி தவத்தூது தீனுக்கடித்தளமான அறிவுகள், மார்க்கமுறை விளங்கும் பிக்ஹுடைய அறிவுகள், அக்காயிது, சுலூக்கு, தஸவ்வுபு, மஃரிபாவுடைய அறிவுகள், விரிவு பிரிவான மஸ்அலாக்கள் அரபு நிகண்டு, அகராதி, வயித்தியத்துடைய அறிவு சொல் சூட்சமான நவநீதம், நூதனமான அறிவுகள் கணக்கு ஹிசாபு, வானம் பூமி பற்றிய அறிவுகள் முதலான அனைத்தையும் கற்றுத்தேறி அறிவுக்கடலாக விளங்கினாள். அவளின் பயனாய்ச் சவுதாக்கர் மகன் பதுறுஸ்ஸமானும் படித்து அநேக அறிவுகளிலும் தேர்ந்து விளங்கினான்.

இவ்வாறு இருக்கும்போது ஒரு நாள் சவுதாக்கர் தம் மகன் பதுறுஸ்ஸமானை அழைத்து இறுதிவரையில் தவத்தூது வெள்ளாட்டியைப் பின்பற்றிக் கொள்ளும்படி அறிவுரை கூறி இறந்துவிட்டார். அவரின் இறப்புக்குப் பின் பதுறுஸ்ஸமான் தகப்பனாரின் அறிவுரைகளை மறந்து நடந்த காரணத்தினால் சில காலத்தில் சவுதாக்கர் விட்டுச் சென்ற ஆஸ்தி முழுவதையும் தொலைத்துவிட, பின் வெள்ளாட்டியிடம் வந்து தன் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு அழுதான். அதனைக் கண்ட தவத்தூது அவனது குற்றம் முழுவதையும் மறந்து பின் அவனை நோக்கி 'இவ்வெள்ளாட்டி உங்களுக்கு இணக்கமேயல்லாது மற்றொருவருக்கு இணக்கமாக மாட்டாளென்று' சொன்னாள். அத்துடன் அவன் இழந்த செல்வங்களைப் பெற்றுத்தர ஒருவழியும் கூறினாள்.

அமீருல் முமினீன் சுல்தான் ஹாறூன் ரஷீது இடத்தில் தம்மைப் பதினாயிரம் தங்கக்காசிற்கு விற்றுப் பொருள் பெறுமாறு கூறினாள். வெள்ளாட்டியின் ஆலோசனையின் படியே பதுறுஸ்ஸமான் தவத்தூதுவை மன்னர் ஹாரூன் ரஷீது அரண்மனைக்கு அழைத்துச் சென்று விவரம் கூறினான். அதனைக் கேட்ட ஹாரூன் ரஷீது 'நீர் சொன்னது போலவள் மிகைத்த அறிவுள்ளவளாயிருந்தால் நீர் கேட்ட தொகையிலும் அதிகமாகத் தருவோம். உலமாக்கள் கேட்ட சவால்களுக்கு நேரான மறுமொழி அவள் சொல்லாவிட்டால் நீரும் உம்முடைய வெள்ளாட்டியைக் கூட்டிக் கொண்டு போகலாமென்று' சொன்னார். அதற்கு ஏற்ப ஒப்புக்கொள்ளவே சுல்தான் எல்லா அறிவுகளிலும் ஆராய்ந்திருக்கிற உலமாக்களை வருத்தித் தன் சமூகத்திலே இருத்தி வைத்தார். அவர்களும் திறம் வாய்ந்தவர்களான நான்கு உலமாக்கள் கேட்கும் கேள்விகளும், அவற்றிற்குத் தவத்தூது அளிக்கும் பதில்களுமே தவத்தூது வெள்ளாட்டி மஸ்அலாவின் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளது.

இந்நூலில் மஸ்அலாக்கள் 1ஆவது, இரண்டாவது ‘சுவால்' என எண்குறியீட்டுடனேயே காணப்படுகிறது. அதுபோலத் தவத்தூதுவின் பதில்களும் 'ஜவாபு' எனவே குறிக்கப்பட்டுள்ளது. அரபில் சுவால் என்பது வினாவென்றும் ஜவாபு என்பது பதில் என்றும் பொருள்படும். இசுலாம் மார்க்கத்தில் திறம் வாய்ந்த அறிவு பெற்ற நான்கு உலமாக்களது ஐயப்பாடுகளையும் யாதொரு தடையும் இல்லாமல் வெள்ளாட்டி தீர்த்து வைத்ததால் சுல்தான் ஆமிறுல் மூமின் ஹாறூன் ரஷீது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆகவே, ‘அவளுக்கு நீர் விலை கூறிய பதினாயிரந் தங்கக்காசும் உமக்கு உறுதியென்று சொல்லிக் கொடுத்து அல்லாஹு தஆலா உங்களுக்குப் பறக்கத்துச் செய்வானாக-வுமென்று துவாச் செய்தார். மன்னன் ஆசியின்படி பதுறுஸ்ஸமானும் தவத்தூதுவும் மணம்புரிந்து செல்வச் செழிப்புடன் மகிழ்வுடன் வாழ்ந்தார்கள் என்ற செய்தியுடன் வெள்ளாட்டி மஸ்அலா முடிவுறுகிறது.

இவ்வாறு உள்ளடக்கச் செய்திகளுள் மூன்று மஸ்அலா நூல்களுள் மார்க்கச் செய்திகள் அதிகம் இடம்பெற்றிருப்பது வெள்ளாட்டி மஸ் அலாவிலேயே ஆகும். இசுலாமிய மார்க்கத்தின் அடிப்படைச் செய்திகளிலும், மார்க்கத்தின் அடிப்படைச் செய்திகளிலும், மார்க்கத்துள் முக்கியமாகக் கருதப் படும் ஹதீதுகளிலும் ஓரளவு பரிச்சயம் இல்லாதவர்களால் வெள்ளாட்டி மஸ்அலாவின் உள்ளடக்கச் செய்திகளை முழுமையாகப் புரிந்து கொள்ளல் கடினமாகும். வெள்ளாட்டி மஸ்அலா உரைநடை வடிவத்தில் அமைந்திருப்பினும் செய்யுள் நடையில் அமைந்துள்ள ஏனைய இரண்டு நூல்களான ஆயிர ஃமஸ்அலா, நூறுமஸ்அலா, செய்திகளைப் புரிந்துகொள்வதைக் காட்டிலும் கடினமாகவுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள எந்தவொரு வினாவிடையும் அரபுமொழி அறிவின்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது எனக் கூறலாம்.

நூறு மஸ்அலா

நூறு மஸ்அலா இசுலாமிய மஸ்அலா இலக்கியங்களுள் காலத்தால் மூன்றாவது தோன்றியது. இம்மஸ்அலா இலக்கியத்தை இசுற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நூறுமஸ் அலாவில் உள்ள செய்திகள் பகுவீறு நாட்டு மன்னனின் மகள் மெஹர்பானுவிற்கும் அகமதுசா என்ற மன்னனின் மகன் அப்பாஸ் என்பவருக்கும் இடையே நடைபெறும் வினாவிடைகளாக உள்ளன. மன்னர் மகள் மெஹர் பானுவின் நூறு மஸ்அலாக்களுக்கும் திறம்பட அப்பாஸ் விடையளித்து வெற்றி கொள்வதுடன் ளவரசியை மணமுடித்துத் தான் இழந்த அரசினையும் மீண்டும் பெறுகின்றார். இச்செய்திகள் அனைத்தும் கண்ணிகளாக விரித்துரைக்கப் பட்டுள்ளன.

அந்தமான் எனும் நகரத்தின் அரசன் அஹமதுஷாவிற்கு நீண்ட காலமாகப் பிள்ளைச் செல்வம் இல்லாதிருந்து பின் ஆண் மகன் பிறந்தான். அவனுக்கு அப்பாஸ் எனப் பெயரிட்டனர். ஒருநாள் தம் பதினைந்தாவது வயதில் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது நீரின் வேட்கையால், கள் குடித்து மயக்கமடைந்தான். அதன் காரணமாகக் கலக்கம் அடைந்த மன்னன் அஹமதுஷா பல்வேறு அரிய முயற்சிகளால் மயக்கம் தெளிவடையச் செய்தார். பின்னர், இசுலாமிய மார்க்க வழியின்படி, கள் அருந்திய தண்டனையாகக் காட்டிற்குத் தம் மகனை அனுப்புவது என முடிவெடுத்தான். பின் தம் அன்பு மகனைப் பிரிந்து வாழ மனமில்லாமல் அவன் செய்த தவற்றிற்காகத் தம் மகன் மனைவியுடன் அரசைத் துறந்து காட்டிற்குச் சென்றான்.

அங்குப் பல்வேறு துன்பங்களைச் சந்தித்து இறுதியாக பகுவீறு நாட்டுக்கு வந்தடைந்தான். பகுவீறு நாட்டு மன்னன் மகள் மெஹர்பானு தாம் கேட்கும் நூறுமஸ் அலாவிற்கு விடையளிப்பவரையே திருமணம் புரிவதாக எண்ணம் மேற்-கொண்டிருந்தாள். மெஹர்பானுவின் நூறு மஸ்அலாவிற்கு விடையளிக்க முற்பட்டுத் தோல்வி ஏற்படுமானால் அவர்களது உயிர் பறிக்கப்படும் என்பது நிபந்தனை ஆகும். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அப்பாஸ், மெஹர்பானுவின் வினாக்களுக்கு விடையளிக்க முற்பட்டான். இக் கதைப்பகுதி வரையிலான செய்திகள் நூறு மஸ்அலாவின் நூல் வரலாறு என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளன. இதன் பின்பே முந்நூற்று எண்பத்து ஆறாம் கண்ணி முதல் மெஹர்பானுவின் கதைப்பகுதி மஸ்அலாவும் தொடக்கம் பெறுகின்றது.

இதில் ஆதம் நபி (அலை) பற்றியும் மூசாநபி (அலை) அவர்கள் பற்றியும் பல நபிமார்கள் தொடர்பாக அவர்களது வாழ்வியல் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய ஐயப்பாடுகள் மஸ்அலாக்களாக இடம்பெற்று அப்பாஸினால் விடை அளிக்கப் படுகின்றன. இறை நேசச் செல்வர்கள் தொடர்பாகச் சில வினாக்களும் காணப்படுகின்றன.

மெஹர்பானுவின் ஐயப்பாடுகளுள் பல விடுகதைகள் போன்றும், பறவைகள், மிருகங்கள் முதலானவை பற்றிய விவரங்களும் மஸ்அலாவாக எழுப்பப்பட்டுள்ளன. மேலும் மஸ்அலாக்கள் ஏனைய இரண்டு நூல்களிலும் தொடர் நிகழ்வுகளாக ஒன்றன்பின் ஒன்றாக இடம் பெற்றிருப்பதுபோன்ற அமைப்பு முறை நூறு மஸ்அலாவில் காணப்படவில்லை. ஒவ்வொரு நாளிலும் சில வினாக்கள் மெஹர்பானுவினால் அரசவையில் எழுப்பப்படுகின்றன. அதற்கு அப்பாஸ் விடையளித்தபின் மீண்டும் அடுத்த நாள்தான் மஸ்அலா தொடக்கம் பெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மஸ்அலாவிற்கு இடைப்பட்ட நிலையில் ஆசிரியர் வேறு பல நிகழ்வுகளை விரித்துரைக்கின்றார். இதில் அப்பாஸின் செயல்கள் இடம் பெற்றுள்ளன.
மெஹர்பானுவின் அழகு வர்ணனைகளும் அப்பாஸின் அறிவுத் திறம் குறித்த மெஹர்பானுவின் எண்ண ஓட்டங்களும் முதல் நாள் வினாவிற்கும் இரண்டாம் நாள் வினாவிற்கும் டைநிலையில் விரிவாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.

நூறு மஸ்அலாவில் மெஹர்பானுவின் நூறு வினாவிற்கும் அப்பாஸ் விடையளித்த பின் இறுதியாக மெஹர்பானுவை அப்பாஸ் திருமணம் புரிந்து கொள்கிறான். இவர்களது திருமண ஏற்பாடு பற்றிய செய்திகள் நூலின் இறுதிப் பகுதியில் விரிவாகப் பேசப்படுகின்றன. மெஹர்பானுவை அப்பாஸ் தாலி கட்டியே நிக்காஹ் செய்து கொண்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

நிக்காஹுசெய்து கொடுங்களென்று பகுவீறு
      நேசமுடன்றா னுரைக்க
ஒக்குமென்று சாட்சிவைத்தே அப்போ தகப்பனுமே
      யொலிகொடுக்க
முக்கியா யெல்லோரு மங்ஙன் முறைமுறையா
      யிருந்தார்கள்
மறைமுறையாய்த்தானிருக்க அங்குமொய்குழல்
      மாதர்கள் சேர்ந்து
மறையினர் கடான்புகழ ராஜன்மகடனக்குத் தாலிகட்டி
      (கண்ணி:908-910)

அகமதுஷா பெற்ற காளை அப்பாஸிடம் மணமகளை ஒப்படைப்பதாக ஆசிரியர் குறித்துள்ளார். திருமணச் சடங்கு முறை தமிழ்க் கலாச்சாரத்தின் தாக்கத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. இவ்வாறு திருமணம் நடைபெற்று முடிந்தவுடன் அப்பாஸ், அவனிழந்த நாட்டினைப் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நூறுமஸ்அலாவில் மிகுதியான உவமைகள், அடுக்குவமைகள், நயம் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரபு, பாரசீகச் சொற்களின் பயன்பாட்டிலும் நூறுமஸ்அலா ஏனைய இரண்டு மஸ்அலா இலக்கியங்களிலிருந்தும் தனித்து விளங்குகிறது.

தொகுப்புரை

இசுலாமியத் தமிழ் இலக்கிய வடிவங்களுள், மஸ்அலா லக்கியங்கள், இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன. நூலின் உள்ளடக்கத்தில் மிகுதியான மஸ்அலாக்களைப் பெற்றதில், ஆயிரமஸ்அலா முதன்மை நிலை பெறுகிறது. மேலும் இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் காலத்தைத் தெளிவாகக் குறித்துச் சிறப்பை பெற்றுள்ளது. வெள்ளாட்டி மஸ்அலா உரைநடை வடிவத்திலே அமைந்துள்ளது. உள்ளடக்கச் செய்திகளை எடுத்துக் கூறுவதில் மார்க்கக் கருத்துக்களே மிகுதியாக இடம்பெற்றுள்ளன. நூறுமஸ் அலா இலக்கியச் சுவை மிகுந்து காணப்படுகிறது. எளிய நடையைப் பெற்றுள்ளது.
-----------------

7. நாமா இலக்கியங்கள்


இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் புதுவகை இசுலாமியத் தமிழிலக்கியங்கள் எனக் கூறத்தக்க சிறப்பிடத்தைப் பெறும் இலக்கிய வடிவங்களுள் ஒன்று நாமா எனும் இலக்கிய வகையாகும். நாமா (Nama) எனும் இச்சொல் நாமே (Nameh) எனும் பாரசீகச் சொல்லின் தமிழ் வடிவமாகும். பாரசீக மொழியில் நாமே என்பது கதை அல்லது நூல் அல்லது தொடர் வரலாறு எனப் பொருள்படும். நாமே எனும் இச்சொல் பாரசீக மொழியில் குறிப்பிடத்தக்க ஒருவகை இலக்கியப் பிரிவினைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சான்றாக, காபூஸ்நாமே, ஸியாஸத் நாமே, ஷா நாமே போன்ற பாரசீக இலக்கியங்களைக் குறிப்பிடலாம். இவ்விலக்கியங்கள் இவ்வொன்றும் வெவ்வேறான தொடர் நிகழ்வுகளை எடுத்துரைப்பனவாகும். எனவே பல்வேறு செய்திகளை ஒருதொடர் நிகழ்வுகளாகப் படைத்துக் காட்டும் ஒரு இலக்கிய வகையைச் சார்ந்ததே 'நாமே' எனும் பெயராகும்.

முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் இசுலாமியக் கருத்துக்களையும், வரலாறுகளையும் தமிழுலகில் பரப்புதல் வேண்டும் என்பதே நாமா எனும் புதுவகை இலக்கியங்கள் தமிழிலக்கிய வரலாற்றில் இடம்பெறுவதற்குக் காரணமாயிற்று. இவ்விலக்கிய வகையின் அறிமுகம் இசுலாமியத் தமிழிலக்கிய வரலாறு தொடக்கம் பெற்ற சில நூற்றாண்டுகளுக்கும் பின்பே நடைபெற்றுள்ளது. நாமா இலக்கிய வகையை அறிமுகம் செய்வித்த பெருமை ஐயன்பேட்டையைச் சார்ந்த மதார் சாஹிப் புலவரையே சாரும்.

மிஃறாஜ் நாமா

இசுலாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் உள்ள பல்வேறு இலக்கியங்களில் முக்கியத்துவம் பெறும் பெருமானார் நபி (சல்)யின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அவர்கள் தம் வாழ்வியல் வரலாற்று நிகழ்வுகளுள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சி மிஃறாஜ் செய்தியே ஆகும். இதுவே மிஃறாஜ் நாமாவின் பாடுபொருளாக உள்ளது.

அல்லாஹ்வின் ஆணைப்படி வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அண்ணல் நபி(சல்) அவர்களை மேல் உலகுக்கு அழைத்துச் சென்று அங்கு அல்லாவின் கட்டளைகளை ஏந்தி விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு மீண்ட செய்திகளை விரிவாக எடுத்துரைத்துள்ளார். பெருமானார் நபி (சல்) முஸ்லிம் மக்களுக்குரிய இறைக்-கட்டளைகளான ஐவேளைத் தொழுகை, முப்பது நாள் நோன்பு, சக்காத்து முதலான அல்லாஹ்வின் கட்டளைகளைப் பெற்று வந்ததும் இவ்விண்ணேற்றப் பயணத்தின்போது
ஆகும். இக்கட்டளைகளைப் பெருமானார் நபி (சல்) பெற்றதை மதார் சாகிபு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் அல்லாஹ்நபி (சல்) அவர்களின் உம்மத்துக்குரிய (முஸ்லிம் மக்களுக்குரிய) கடமையாக நாள் ஒன்றுக்கு ஐம்பது வேளை தொழுகையையும் ஆண்டிற்கு ஆறுமாத நோன்பையும் ஒரு முஸ்லிமின் வருமானத்தில் நாலில் ஒரு பகுதியைச் சக்காத்தாகச் செலவிடுதல் வேண்டும் என்றும் கட்டளையிட்டார். இதனைத் தன் மனத்தில் ஒப்புக் கொண்டபெருமானார் நபி(சல்) அவர்கள் அல்லாஹ்வின் ஆணைகளை மூசாநபி யிடத்துத் தெரிவித்தார்கள்.

இதனைச் செவியுற்ற நபியவர்கள் பெருமானார் (சல்) அவர்களை நோக்கி அல்லாஹ்விடம் மீண்டும் சென்று அவன் தன் கட்டளைகளை எளிதாக்கும்படி மன்றாடக் கூறினார்கள். மூசாநபி அவர்களின் கருத்துப்படி நபி(சல்) மீண்டும் அல்லாவிடம் சென்று தம் உம்மத்தோர்களுக்காக மன்றாடி வேண்டினார்கள். இதன் பயனாகவே இன்று நடைமுறையில் இருந்து வரும் முஸ்லிம்களுக்குரிய கடமையான நாள் ஒன்றுக்கு ஐவேளைத் தொழுகை, வருடத்தில் ஓர் மாதம் நோன்பு, வாழ்வில் ஒருமுறை ஹஜ்ஜீ செய்தல் முதலான கட்டளைகளைப் பெற்றார்கள்.

இசுலாத்தில் இத்தகு சிறப்புமிக்க கட்டளைகளை அல்லாவிடமிருந்து பெருமானார் நபி (சல்) பெற்று வந்த வரலாற்று நிகழ்ச்சிகளே, மிஃறாஜ் நாமாவில் விவரிக்கப்பட்டுள்ளன. இத்தகு சிறப்புப் பெற்ற மிஃறாஜ் நாமாவைப் படிப்போர், படித்ததைக் கேட்டோர் அடையும் பயனையும் ஆசிரியர் நூலின் இறுதியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மிகுறாசு நாமாத் தன்னை
      யாதோர் அடியானும் படித்தாலுமாம்
சிந்தை மகிழ்ச்சியாய்க் கேட்டாலுமாம்
      செப்பும் படிக்கிதை யுவந்தாலுமாம்
அந்த மஜ்லிசி லிருந்தாலுமாம்
      அறியும் செவிதனிற் கேட்டாலுமாம்
வந்த கலியெல்லாம் அகன்றுபோகும்
      வல்ல பெரியோனும் உதவி செய்வான்
--- (மிஃறாஜ் நாமா, 231)

இந்த நாமாவில் கற்பனைப் புனைவுக்கு இடமில்லை என்றும், அரபுமொழிக் கலப்பு அதிகமாக உள்ளது எனவும் அறிய முடிகின்றது.

அலி நாமா

மிஃறாஜ் நாமாவிற்கு அடுத்த நிலையில் அதன் காலத்தை ஒட்டியே தோன்றியுள்ள இரண்டாவது நாமா, அலி நாமாவாகும். இந்நாமாவை ஹிஜ்றி 1167 இல் சையது முஹம்மது அண்ணாவியார் இயற்றியுள்ளார்.

அலிநாமாவின் நாயகர், நாயகம் பெருமானார் நபி(சல்) அவர்களுக்குப் பின் இசுலாமிய ஆட்சி செலுத்திக் கலீபாக்களுள் நான்காவது நிலையில் ஆட்சி புரிந்த அலி (றலி) அவர்களாவார். இவர் அபுத்தாலிபுவின் புதல்வரும் பெருமானர் (சல்) அவர்களின் மகள் பாத்திமாவின் கணவரும் ஆவார். அலி(றலி) ஹிஜ்ரி 35 முதல் 40ஆம் ஆண்டுவரையில் திறம்பட அரசாட்சி செலுத்தியராவார். இசுலாமிய வரலாற்றில் சந்தித்த பெரும் போர்களான பத்ருப்போர், உஹத் போர், அகழ்ப்போர், கைபர்ப் போர் முதலான அனைத்திலும் வெற்றியை நாட்டியவரும் அலியே(றலி) ஆவர்.

அலி நாமாவில் இடம்பெற்றிருக்கும் பாடுபொருள் அலியது(றலி) வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியே ஆகும். இரக்கக் குணம் படைத்த அலி (றலி) ஓர் ஏழையின் கடனைத் தீர்ப்பதற்காக ஓர் அரசனிடம் தம்மையே அடிமையாக விற்று அந்த ஏழையின் துயர் நீக்கியதை அலிநாமாவில் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு அடிமையாக அலி(றலி) அரசனிடம் இருக்கும்போது, அவ்வரசனின் எதிரிகளைப் போர்மூலம் வெற்றி கொண்டார். இறுதியாகத் தாம் அடிமையாக இருந்த அரசனுடனேயே போரிட்டு வெற்றிக் கொண்டார். அவனையும் இசுலாத்தைத் தழுவும்படிச் செய்த கதை நிகழ்ச்சிகளைச் சையிது முகம்மது அண்ணாவியார் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

தொழுகை நாமா

அலி நாமாவிற்கு அடுத்த நிலையில் தோன்றியுள்ள மூன்றாவது நாமா இலக்கியம் தொழுகை நாமாவாகும். இதனை மதுரையைச் சேர்ந்த புலவரான மாலிக்கு சாஹிப் இயற்றியுள்ளார். தொழுகை என்பது ரபில் ஸலாத் எனக் குறிப்பிடப்படுகிறது. இசுலாத்தில் ஐம்பெரும் கடமைகளில் இரண்டாவது முக்கியக் கடமையாவது இறைவணக்கமான தொழுகையாகும். தொழுகையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அல்லாஹ் தன்திருமறையில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும் 'ஜகாத்து'க் கொடுத்தும் வாருங்கள், ஏனென்றால் மரணத்திற்கு முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மை செய்து அனுப்பியிருந்தீர்களோ அதனையே அல்லாஹ்வினிடம் மறுமையில் பெற்றுக் கொள்வீர்கள் (அல்குர் ஆன் 2:110). ஆகவே இறப்பதற்கு முன் இசுன்ற அளவு நன்மையைத் தொழுகையின் மூலமாகத் தேடிக் கொள்ளுமாறு அல்லாஹ் வலியுறுத்துகின்றார் பெருமானார் நபியும்(சல்) தம் அல் ஹதிதுகளில் தொழுகையின் அவசியத்தையும் சிறப்பையும் பல்வேறாக உயர்த்தியுள்ளார்கள்.

இத்தகு தொழுகை ஒரு முஸ்லிமின் ஆத்ம பரிசுத்தத்திற்குரிய வழியாகும். இதனை ஒவ்வொரு முஸ்லிமும் நாள் ஒன்றுக்கு ஐந்து வேளையாக முறையே அதிகாலை, நண்பகல், பிற்பகல், அந்திமாலை, முன் இரவு ஆகிய நேரங்களில் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவ் இறைவழிபாடுகள் அதற்கெனவுரிய வழிமுறைகளில் அரபு மொழியிலேயே நிகழ்த்தப்படல் வேண்டும். தொழுகையை எவர் விட்டு விடுகின்றாரோ அவர் இசுலாத்தை விட்டு அப்புறப்படுத்தப் பட்டவராவார் என்பது நபிபெருமானார் திருமொழியாகும். இத்தகு முக்கியத்துவம் உள்ள தொழுகையை மரணம் வரும் முன்னே மனத்தில் கொண்டு உய்வு பெற வேண்டும் என்பதையே பாடுபொருளாகக் கொண்டுள்ளது தொழுகை நாமா.

'துனியா' என்பது உலகம் என்று பொருள். உலகில் மக்கள் பெரிதும் விரும்புவதும், தேடி அலைவதும் செல்வத்திற்காகவே. இச் செல்வம் அழியக் கூடியதன்றி இறக்கும் தறுவாயில் ஒருவருடன் ணைந்து வந்து உதவுவதுமில்லை என்பதை உணர்த்துகிறார்.

காசினியில் வாழ்வெல்லாங் கண்சிமிட்டிக் கண்விழித்துப்
பேசுமட்டு முண்டோதான் இத்துன்யா மானிடரே
அல்லாதுவிட் டிந்தவுயி ரகன்றிடும்போ துங்கள்பொருட்
செல்லாது மண்ணறைக்குட் சேர்ந்து வரமாட்டாதே
தேடிய முதல்களெதுந் தேவியருஞ் செல்வர்களும்
கூடவராது கண்டாய்க் குழிதனிலே மானிடரே
(தொழுகை நாமா, கண்ணி, 19,34,55)

இவ்வுலக வாழ்வின் நிலையாமையை எடுத்துக்கூறும் ஆசிரியர், ஒருவரின் இறப்பைத் தவிர்த்தல் அரிது என்பதை எடுத்துக்கூறி அனைவர் மனத்திலும் உலக வாழ்வின்மீதுள்ள பிடிப்பு நீங்கும்படி உணர்த்துவதை அறிந்து கொள்ளமுடிகிறது.

'மலக்கு' என்பது வானவர்களைக் குறிப்பதாகும். ஒருவரின் இறப்புக்குப்பின் அல்லாஹ்வின் கட்டளையின்படி அவரின் நன்மை தீமைகளை எடுத்துரைப்பவர்களும் மலக்குகளே ஆவர். இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காகத் தோண்டப்படும் குழி கபறு எனப்படும். இவ்வாறு கபறில் வானவர்கள் வந்து தோன்றி அவரின் நன்மை தீமைகளை அல்லாஹ்விடம் எடுத்துக் கூறுவர் எனக் கூறும் மாலிக்குச் சாஹிப் புலவர் அத்துன்பங்களிருந்து விடுபட துன்பங்களை மறந்து அனைத்தும் இவ்வுலக இன்ப அல்லாஹ்வே எனத் தம் வாழ்வை மேற்கொள்ளத் தூண்டுகிறார் என்பதை உணர முடிகின்றது.

இவ்வாறு அவனே கதி என்று தொழுகை மேற்கொள்வதால் வரும் பயன்களும் விரிவாகத் தொழுகை நாமாவில் இடம்பெற்றுள்ளன. 'பறக்கத்' என்பதன் பொருள் முழங்காலிடுதல் என்பதாகும். இச்சொல் எல்லாவிதமான நற்பேறுகளையும் உள்ளடக்கியதாகும். இத்தகைய சிறப்பினையே தொழுபவர்கள் பெறுவர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. தொழுகையின் இன்றியமையாமையைப் பெருமானார் நபி (சல்) பல்வேறாகத் தம் அல் ஹதீஸ்களில் வலியுறுத்தி உள்ளார்கள். அத்தகைய பல கருத்துக்களையும் மாலிக்குச் சாஹிப் புலவர் தொழுகையை வலியுறுத்தும் தம் பாடுபொருளுக்குச் சிறப்புத் தரும் வகையில் அமைந்துள்ளதை அறியமுடிகிறது. இதில் அரபுச் சொற்களை மிக அவசியமான இடங்களில் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் ஆசிரியர் பயன்படுத்தும் நடையால் அவர்தம் அரபுச் சொற்களின் பொருளையும், அரபு மொழியறிவு இல்லாதோரும் புரிந்துகொள்ள முடிகிறது என்பதை உணரமுடிகிறது.

சக்கறாத்து நாமா

தொழுகை நாமாவிற்கு அடுத்த நிலையில் சக்கறாத்து நாமா தோன்றியது. இதனை ஆமூரைச் சார்ந்த அப்துல் காதிர் எழுதினார். சக்கறாத்து என்பது ஒருவருடைய இறப்பு வேளையைக் குறிப்பதாகும். பொதுவாக முஸ்லிம்கள் ஒருவரின் இறப்புத் தருணத்தைச் 'சக்கறாத்து ஹால்' என்பர். இத்தகு நிலையில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அனுபவங்கள் வரலாம். சுலாத்தில் சக்கறாத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்நிலையில்தான் இறை நம்பிக்கையாளர்களின் அனுபவமும் வெவ்வேறாக இருக்கும் எனச் சுட்டப்படுகிறது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இறப்பு வரும்போது அருளுடை வானவர்கள் வெண்பட்டாடைகளைக் கொண்டு வந்து அவர்களை வரவேற்பர். இறை நம்பிக்கையாளர் நெற்றியில் வியர்க்கும் அளவிற்குத் துன்பத்திற்குள்ளாகி இறந்து விடுகிறார் என்று அண்ணல் நபி(சல்) கூறுகிறார்கள் (அல்ஹதீது பக்.164-165).

அல்லாஹ்வின்மீது அவர்கள் கொண்ட பற்றின் காரணமாக அவர்களது ஆன்மாவானது வெகு விரைவாக அவர்களின் உடலை விட்டு நீங்கி விடுகிறது. ஆனால் தீயோர்களின் ஆன்மா மிகவும் கடுமையான துன்பத்துடனேயே உடலை விட்டு நீங்குகிறது. எனவே சக்கறாத்து நிலையில் இன்னல் இன்றி இருப்பதற்கு இசுலாம் பல்வேறான வழிமுறைகளை வகுத்துக் காட்டுகிறது. ஆசிரியர் அப்துல் காதிர், சக்கராத்து எனும் இசுலாமியக் கொள்கைக்கு நாமா எனும் இலக்கிய வகையின் மூலமாக உருவமளித்திருக்கிறார் என அறிந்து கொள்ள முடிகிறது.

அகாயத் நாமா

சக்கறாத்து நாமாவிற்கு அடுத்த நிலையில் தோன்றிய அகாயத் நாமாவை இயற்றியதும் சக்கறாத்து நாமாவின் ஆசிரியர் அப்துல்காதிர் அவர்களே ஆவார். சிறந்த அறிவு எனப் பொருள்படும் அகாயித் என்பது 'கலாம்' எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி இசுலாத்தின் ஈமான் எனும் நம்பிக்கை பற்றி விளக்கும் பகுதியாகும். இத்தகு முக்கியமான பகுதிகளே அகாயத் நாமாவில் உள்ளடக்கமாக இடம் பெற்றுள்ளன.

இபுலீசு நாமா

இபுலீசு என்பது சாத்தான் என்பதற்கு இணையான சொல்லாகும். இச்சொல் நிராசையுறுதல் என்று பொருள்படும் 'பலஸ' எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதன் நேரடியான பொருள் நிராசை அடைந்தவன் என்பதாகும். இப்லீஸ் அல்லாஹ்வின் பேரருளை விட்டு நிராசையுற்றதால் இப்பெயர் பெற்றான். இறைவனின்
றைவனின் கட்டளைகளை ஏற்க மறுத்த காரணத்தினால் இப்லீஸிற்கு அல்லாஹ்வின்
அருள் கிடைக்கவில்லை. அல்குர் ஆனில் ஏழு இடங்களில் இப்லீஸ் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதில் அல்லாஹ்வின் கட்டளையை அவன் ஏற்க மறுத்த செய்திகள் இடம்பெற்றுள்ளன என்பதாக அறிய முடிகின்றது.

தஜ்ஜால் நாமா

முகம்மது இப்ராகீம் சாகிபுவால் அவர்களால் தஜ்ஜால் நாமா இயற்றப்பட்டது. தஜ்ஜால் என்பதன் பொருள் பொய்யன் என்பதாகும். இப்பெயர் அல்குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. அல்ஹதீஸ்கள் மட்டுமே தஜ்ஜால் பற்றிக் கூறுகின்றன. அண்ணல் நபி (சல்) தமது காலத்திற்குப்பின் முப்பது தஜ்ஜால்கள் என்றும் உலக முடிவு நாளின்போது தோன்றுவர் தோன்றவிருக்கும் தஜ்ஜாலே மிகக் கொடியவன் என்றும் கூறி, அவனது கொடிய செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளுமாறு பலமுறை முஸ்லிம்களைத் தம் அல்ஹதீதுகளின் வாயிலாக எச்சரித்துள்ளார்.

மஸீஹுத் தஜ்ஜால் (Masihu'd-Dajjal) என்பவனே இறுதி தஜ்ஜாலாவான். தஜ்ஜால் என்பவன் கிறித்துவ மதத்தில் கிறிஸ்துவின் விரோதி எனக் கூறப்படுபவனுக்குச் சமமாகும். சிரியா மொழியில் கிறிஸ்துவின் விரோதிக்கு 'மஸீஹெதஜ்ஜால்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் நபியென்று தம்மை வாதாடும் பொய்யர்களுக்கும் இம்மொழியில் 'நபியெதஜ்ஜாலா' என வழங்கப்படுகிறது. தஜ்ஜால் பற்றி அல்ஹதீக்களின் விமர்சனத்தில் பல்வேறு உருவகக் கதைகள் வழங்குகின்றன. மஸீஹ் என்ற சொல்லுக்குத் தொடக்கத்தில் அரக்கன் என்றே பொருள் கொள்ளப்பட்டு வந்த காரணத்தினால் அத்தன்மைகள் பொருந்திய தஜ்ஜாலுக்கும் அவ்வாறு பெயர் கூறப்பட்டதாகக் காமூஸில் கூறப்பட்டுள்ளது. தஜ்ஜால் நாமா தஜ்ஜால் என்பவனின் அரக்கக் குணங்களையும் அவனால் இவ்வுலகுக்கு வரும் இன்னல்களையும் விவரிக்கின்றது.

நஸீஹத்து நாமா

அப்துல்காதர் சாகிபு அவர்கள் நஸீஹத்து நாமாவை இயற்றியுள்ளார்கள். நஸீஹத்து என்பதன் பொருள் நேர்மையான அறிவுரைகள் என்பதாகும். இதன் பொருளுக்கு ஏற்ற பல ஒழுகலாறுகளையும், அறிவுரைகளும் கூறப்பட்டுள்ளன. அன்றாட வாழ்விற்கு அவசியமான உணவு, உடை, உடல் ஆரோக்கியம் ஆகியவை சிறக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் எடுத்துக் கூறப்படுகின்றன. இல்லற வாழ்வு செம்மையாகவும், இல்லறத்தின் பயனாய்த் தோன்றும் வழித்தோன்றல்கள் சிறப்புப் பெறவும் பல்வேறு நல்வழிமுறைகள் நஸுஹத்து நாமாவில் இடம் பெற்றுள்ளன. இன்னின்ன கிழமை, மாதங்களில் இன்னின்ன ஒழுக்கங்களை இசுலாமிய நெறிக்கேற்ப மேற்கொள்ளப் படவேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இதற்கு முந்திய நாமாக்கள் அனைத்தும் செய்யுள் வடிவத்தில் அமைந்திருக்க உரைநடை வடிவமாக நஸுஹத்து நாமா அமைந்திருக்கிறது.

ஹகீகத் நாமா

ஹகீகத் நாமாவில் நசீகத்து நாமா போன்றே பல்வேறு அறிவுரைகள் அடங்கியுள்ளன. ஹகீகத் என்பது உண்மை என்று பொருள்படும். இச்சொல் பொதுவாக ஆன்மீக நெறியில் முறையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அல்லாஹ்வின் உண்மையான உள்ளுணர்வை ஒருவர் அடைய வேண்டுமானால், ஆன்மீக நெறியில் ஹகீகத் எனும் நிலையை அடைய வேண்டும். அவ்வாறு அடைவதற்குரிய நல்லுரைகளை வழங்குகிறது இந்நாமா.

பறுலு நாமா

பறுலு என்பது இசுலாத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகளாகும். இவை இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்கடமை ஆகிய ஐம்பெரு பகுதிகளாகும். இக்கடமைகளை நிறைவேற்றுதலே ஒரு முஸ்லிமின் கட்டாயக் கடமை. இதனையே 'பர்ளு' என்றழைப்பர். இந்நாமாவில் நபி நாயகத்தின் புகழ்ச்சியும் பற்லுவின் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. பற்லு நாமாவில் அடங்கியுள்ள செய்யுள்களில் சில நாயகம் பெருமானார் (சல்) பற்றிய துதிப் பாடல்களாகவும், இன்னும் சில உலுவின் பற்று பற்றிய விளக்கங்களாகவும் இடம்பெற்றுள்ளன. ஆங்காங்கே ஆசிரியர், வாழ்க்கை நிலை பற்றிய சிந்தனைக் கருத்துகளையும் தம் செய்யுள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

லுக்மான் நாமா

செய்யுள் நடையில் அமைந்துள்ள இரு லுக்மான் நாமாக்களின் உள்ளடக்கங்களும் லுக்மான் எனும் முஸ்லிம் சமயப் பெரியார் பற்றிய கருத்துகளைக் கொண்டுள்ளன. இசுலாத்தில் லுக்மான் ஒரு தத்துவஞானியாகவும் சமய மேதாவியாகவும் விளங்கினார். அல்லாஹ்வால் மெய்யறிவு அருளப் பெற்ற லுக்மானின் முழுப்பெயர் 'லுக்மான் ஹக்கீம்' என்பதாகும். அல்லாஹ் லுக்மானிற்கு ஞானம் அருளியதைத் திருமறை குறிப்பதாக அறிந்து கொள்ள முடிகிறது.

இருஷாது நாமா

இருஷாது நாமாவை, காயல் பட்டணத்தைச் சார்ந்த சுலைமான் லெப்பையின் குமாரர் ஹாமுனா லெப்பை இயற்றியுள்ளார். இந்த நாமாவில் இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான இறைவழிபாட்டுக் கொள்கையான தொழுகையே நூல் முழுவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நாமா முழுவதும் தொழுகையின் அவசியத்தையும் இசுலாத்தில் தொழுகைக்குரிய முக்கியத்துவத்தையும், அவ்வாறு தொழாதவர்கள் இம்மை, மறுமையில் அடையும் தொழுகையே நூல் முழுவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நாமா முழுவதும் தொழுகையின் அவசியத்தையும் இசுலாத்தில் தொழுகைக்குரிய முக்கியத்துவத்தையும், அவ்வாறு தொழாதவர்கள் இம்மை, மறுமையில் அடையும் துன்பங்களையும் பல்வேறாக விவரித்துள்ளார்.

மவுத்து என்பது இறப்பு என்றும், கபற் என்பது இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காகத் தோண்டப்படும் குழி என்றும், கியாமம் என்பது இறுதி நாள் என்றும் பொருள்படும். ஆகவே தொழுகை மறந்தோர்கள் இம்மூன்று நிலைகளிலும் கடும் துன்பத்தை அடைவார்கள் என்றே வலியுறுத்தப் பட்டுள்ளது. இம் மூன்று நிலைகளில் மட்டுமல்லாது உயிருடன் இருக்கும்போது தொழுகையை மறந்தவன் பல இன்னல்களை அடைவான் எனவும் குறிப்பிடுகிறது.

தொழுகையின் அவசியத்தை வலியுறுத்த பல்வேறு சிறிய சிறிய நிகழ்ச்சிகளைப் பலரது வாழ்விலிருந்து எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிகள் இருஷாது நாமாவில் கிளைக்கதைகள்போன்று இடம்பெற்றுள்ளன. ஒரு தமையன் தன் தங்கையின் மவுனத்திற்குப்பின் அவளைக் கபறில் அடக்கம் செய்து விட்டு வந்தபின் தம் மடியில் இருந்த பணம் காணாத காரணத்தினால் மீண்டும் அடக்கம் செய்த கபறிற்குச் சென்று தோண்டிப் பார்க்கின்றான். அங்குத் தம் தங்கையை அடக்கம் செய்த கபறில் வெடிக்கும் நெருப்புகள் காணப்படுகின்றன. அக்காட்சி அவனைத் திடுக்கிடச் செய்கிறது. தன் தாயிடம் வினாவிய பின்பே தம் தங்கை ஐந்து வேளையும் சரியாகத் தொழாத நிலையே அவளின் கபறில் கண்ட காட்சி என உணர்கிறான் என்பதாக நாமா இலக்கியங்களின் செய்திகளை அறிய முடிகிறது.

தொகுப்புரை

நாமா இலக்கியங்களுள் ஒரே ஆசிரியர் அதிகமான நாமாக்களை இயற்றிய நிலையில் முதன்மை நிலையைப் பெறுபவர் அப்துல் காதிர் புலவராவார். இவர் நான்கு நாமாக்களை இயற்றியுள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் அப்துல் வஹாப் சாகிப் மூன்று நாமாக்களையும், இப்பராஹிம் காதர் சாகிப் இரண்டு நாமாக்களையும் இயற்றியுள்ளனர். இதே போல் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களால் இயற்றப்பட்டுள்ள பல நாமாக்கள் காணப்படுகின்றன. தொழுகை நாமா, இபுலீசு நாமா, தஜ்ஜால் நாமா, நூறு நாமா, ஊஞ்சல் நாமா, லுக்மான் நாமா முதலான ஆறு தலைப்புக்களும் முறையே இருவேறு ஆசிரியர்களால் வெவ்வேறான காலக்கட்டத்தில் இயற்றப்பட்டுள்ளன. நாமா இலக்கியங்களுள் பெரும்பான்மை-- யானவை அரபு, பாரசீகச் சொற்களையே தலைப்பாகப் பெற்றுள்ளன என அறிய முடிகின்றது.
--------------

8. இசுலாமியர் அறிமுகப்படுத்திய பொதுவான சிற்றிலக்கியங்கள்


இசுலாமியர் அறிமுகப்படுத்திய பொதுவான சிற்றிலக்கியங்கள் பல காணப்படுகின்றன. இங்குக் குறிப்பிட்ட சில இசுலாமியச் சிற்றிலக்கியங்களின் பொதுத்தன்மையை அறியவும், அதனில் உள்ள வகைகளையும் தெரிந்து கொள்ளவும் இசுலும்.

இசுலாமியக் கலம்பகங்கள்

இசுலாமியச் சமயத்தைச் சாந்தனவாக அமைந்துள்ள கலம்பகங்கள் ஏழு என அறிய முடிகின்றது.

-- மக்காக் கலம்பகம்
-- மதீனக் கலம்பகம்
-- திருமதீனக் கலம்பகம்
-- பதாயிகு கலம்பகம்
-- குவாலீர் கலம்பகம்
-- திருக்கோட்டாற்றுக் கலம்பகம்
-- திருபகுதாதுக் கலம்பகம்

இந்தக் கலம்பகங்களுக்கிடையே உருவ, உள்ளடக்க நிலையில் சில ஒற்றுமைகளும் சில வேறுபாடுகளும் காணப் பெறுகின்றன. இக்கலம்பகங்கள் அந்தந்தக் கலம்பகங்களின் பாட்டுடைத் தலைவர் வாழும் நகரங்களின் பெயரினைப் பெற்றுத் திகழ்வதில் ஒன்று பட்டுக் காணப்படுகின்றன. உள்ளடக்கச் செய்திகளை, இசுலாமிய மார்க்கக் கருத்துகளை எடுத்துரைப்பதில் ஒன்றுபட்டுக் காணப்படுகின்றன.

இசுலாமியக் கலம்பகங்களில், நபிகள் பெருமனார்(சல்) வாழ்வில் நடந்த பல வரலாற்று நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.

அந்தாதி இலக்கியங்கள்

இசுலாமிய அந்தாதிக் கோட்பாடுகளை வழிவகுத்துப் பரப்பிய சமயச் சான்றோர்-களையும் அச்சான்றோர்களை உலகுக்களித்துத் தம்மைப் பெருமைப்படுத்திக் கொண்ட திருத்தலங்களின் சிறப்புக்களையும் எடுத்துரைக்கின்றன. பதின்மூன்று அந்தாதி நூல்களுள் முகையதீன் ஆண்டவர் பெயரில் பதிற்றந்தாதி, ஞான அந்தாதி ஆகிய இரண்டும் முறையே பாட்டுடைத் தலைவரின் பெயரிலும், பாடப்படும் பொருள் அடிப்படையிலும் பெயர் பெற்றுள்ளன. ஏனைய பதினொரு அந்தாதி நூல்களும் பாடப்படும் திருத்தலங்களான மக்கா, மதீனா, நாகூர், பதாயிகு பக்தாத் முதலான அடிப்படையிலே தலைப்பினைப் பெற்றுள்ளன.

ஆற்றுப்படை இலக்கியங்கள்

சிற்றிலக்கிய வடிவங்களின் பலவற்றில், முஸ்லிம் புலவர்களின் கவனத்தை ஆற்றுப்படை இலக்கிய வகையும் கவர்ந்துள்ளது. இதனால் புலவராற்றுப்படை எனும் பெயரில் இரு நூல்கள் உருவாகியுள்ளன. இவற்றுள் முதல் நூலினை உருவாக்கியவர் நான்காம் தமிழ்ச் சங்கப் புலவராக வாழ்ந்து மறைந்த குலாம் காதிறு நாவலராவார். இப்புலவராற்றுப்படை என்பது மதுரைத் தமிழ்ச் சங்கத்திடமிருந்து பரிசில் பெறாத புலவர் ஒருவரைத் தாம் பரிசில் பெற்று வந்த தமிழ்ச் சங்கத்தில் வழிப்படுத்துதல் ஆகும். இப்புலவராற்றுப்படை இசுலாமியத் தமிழிலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க நூலாக விளங்குகிறது.

இசுலாமியத் தமிழிலக்கிய ஆற்றுப்படை இலக்கியப் பிரிவினுள் அடுத்த நிலையில் எழுந்த ஆற்றுப்படையைக் கவி செய்கலாவுதீன் இயற்றியுள்ளார். இவர் பிறவியிலே குருடர். ஈழத்தின் கரைத்தீவு எனும் கிராமத்தைச் சார்ந்தவர். இவரது புலவராற்றுப்-படையில் கல்வி வல்லான் ஒருவன் பாவாக்க விரும்பிவர அவனைப் புலவர் இல்லத்திற்கு ஆற்றுப்படுத்துமாறு அமைந்துள்ளது. இலங்கையின் பொன்பரப்பி எனும் பகுதியில் கரைத்தீவுப் பகுதி அமைந்துள்ளது. இதுவே புலவராகிய செய்கலாவுதீன் வாழும் இல்லமாகும். இந்த இடம் வந்து சேர்வதற்கான குறிகளையும் தகவல்களையும் இந்தப் புலவராற்றுப் படை விரிவாகக் கூறுகிறது என்பதை அறிய முடிகிறது.

கோவை இலக்கியங்கள்

இசுலாமியப் புலவர்கள், அகப்பொருள் சுவையுடைய கோவை இலக்கிய வடிவத்திலும் சில படைப்புகளைத் தந்துள்ளனர். கோவை இலக்கியங்களோ முழுமையும் அகப் பொருட் சுவைகளையே மையமாகப் பெற்றுள்ளன. எனவே சுலாமிய நெறிக்குட்பட்டுத் தம் படைப்புகளை உருவாக்கு வதற்கான கோவையாசிரியர்களின் முயற்சி போற்றுதற்குரியது.

-- பல்சந்த மாலைக் கோவை
-- மும்மணிக் கோவை
-- பதானந்தக் கோவை
-- ஆசாரக் கோவை
-- கொள்கை மணிக்கோவை
-- முஹம்மது காசிம் பொன்மொழிக் கோவை
-- செய்குத் தம்பிப் பாவலரின் கோவை
-- மக்காக் கோவை
-- விஜயன் அப்துல் ரகிமான் அகப்பொருள் பலதுறைக் கோவை
-- ஷம் சுத்தாசீன் கோவை

பல்சந்த மாலைக் கோவை பற்றி, தமிழிலக்கிய உலகில் முதன் முதலில் வெளியிட்டவர் வையாபுரிப்பிள்ளை ஆவார். பிற தமிழக் கோவை நூல்களைப்போல் தலைவன், தலைவி முதலியவர்களைக் கடவுளாக இசுலாமியக் கோவை நூல்கள் கொண்டமையவில்லை.

மாலை இலக்கியங்கள்

இசுலாத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய ஒழுக்கங்களை மாலை இலக்கியங்கள் மிக நுட்பமாகக் கூறுகின்றது. இவ்வொழுக்கங்கள் ஒரு முஸ்லிம் எவ்வாறு தனது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. உலக வாழ்க்கையைச் செவ்வனே நடத்தினால் மட்டுமே மேன்மையான நிலையை அடையலாம் என்று இசுலாம் வலியுறுத்துகின்றது.

இவ்வொழுக்கங்களை முஸ்லிம் மக்களிடையே பரப்பப் பல நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் அரபு மொழியில் இருந்தமையினால் அரபு மொழியில் பயிற்சி பெற்றவர்களே அறியக்கூடியதாக இருந்தன. இத்துறையில் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்குத் துணை புரிய மாலை வகையைச் சேர்ந்த பல நூல்கள் முஸ்லிம்களிடையே பரவத் தொடங்கின.

-- இரசூல் மாலை
-- அதபு மாலை
-- ஒசியத்து மாலை
-- ராஜமணி மாலை
-- அபூஷகுமா மாலை
-- பலுலூன் அசுகாபி மாலை
-- பொன்னரிய மாலை
-- அகந்தெளிவு மாலை
-- இறமளான் மாலை

இவ்வாறு பேச்சுமொழியில் அமைந்த மாலையும், வரலாற்று நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டும் காணப்படுகின்றன. இசுலாமிய ஒழுக்க நெறிகளைக் கூறுவதாகவும் அமைந்துள்ளன.

சதக இலக்கியங்கள்

இசுலாமிய சமயத்தைச் சார்ந்த சதக இலக்கியங்களாக ஏறக்குறைய இருபத்தி மூன்று சதகங்கள் காணப்படுகின்றன என முகம்மது உவைஸ், அஜ்மல்கான் குறிப்பிடுகின்றார்கள். சமய அடிப்படையில் சைவத்திற்கு அடுத்த இரண்டாவது நிலையில் அதிகமான சதக இலக்கியங்களைப் பெற்றிருப்பது இசுலாமிய சமயமாகும். அந்தந்தந்தச் சதகங்களின் பாட்டுடைத் தலைவர்களுக் கேற்ப அவரவர்களின் நல்லியல்புகளும் இடம் பெறுகின்றன. இசுலாமிய சதகங்களைப் பின்வரும் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்திக் காணலாம்.

1. நபிகள் நாயகத்தின்மீது பாடப்பட்ட இசுலாமிய சதகங்கள்.
2. இறைநேசச் செல்வர்கள் பற்றிய இசுலாமியச் சதகங்கள்.
3. சூபித்துவக் கொள்கை விளக்க இசுலாமியச் சதகங்கள்.
4. பிற இசுலாமியச் சதகங்கள்.
இப்பிரிவுகளுள் சதகங்கள் அதிகம் காணப்படுகின்றன.

மெய்ஞ்ஞானச் சதகம் திமுகம் மதுநபி சதகம்
திருநபியின் சதகம் இறசூல் சதகம்
அப்துறகுமானறபிச் சதகம் முனாஜாத்து சதகம்
முகையித்தீன் சதகம் அகத்தீசர் சதகம்
காருண்ய சதகம் மோக்ஷ சதகம் காரண சதகம் மெஞ்ஞான சதகம்
பூரண சதகம் பேரின்ப சதகம் வேதாந்த சதகம்
நாதாந்த சதகம் சிதானந்த சதகம் எதார்த்த சதகம்
குதுபு சதகம் வைத்ய சதகம்
தரிசனமாலை சதகம் சலவாத்து சதகம்
சீறாச் சதகம்

இவ்வாறு அமைக்கப்பட்ட சதக இலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு பொருள் பற்றித் தோன்றலாயின. சதக இலக்கியத்தின் அமைப்பில் நூறு பாடல்கள் இருக்க வேண்டும் என்ற வரன்முறை இருந்தது. ஆனால் இன்னின்ன பொருள்பற்றிய தாகத்தான் சதக இலக்கியங்கள் அமைய வேண்டும் என்ற வரையறை காணப்படவில்லை.

திருப்புகழ் இலக்கியம்

தெய்வத்தன்மையுடைய, புனிதமான ஒன்றினைப் புகழ்ந்து பாடப்படும் பொழுது, அந்தப் புகழ் அடைமொழி, பெற்றுத் திருப்புகழ் எனப் பேசப்படுகிறது. இறைவனை அல்லது இறைவனின் தூதரென நபிகளாரை அல்லது இறைநேசச் செல்வர்களைப் புகழ்ந்து பாடும் புகழ்ச்சிப் பாடல்கள் எப்பொழுதும் திருப்புகழ் என்றே அழைக்கப்படும். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே 'அல்ஹமீது லில்லாஹ்' என்கிறது

இறைமறை அல்குர் ஆன் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் பெயரால் தொடங்கும் அல்குர் ஆன் முதல் வாக்கியம் 'அல்ஹமீது லில்லாஹ்' என்றே தொடங்குகிறது. அல்லாஹ்வைப் புகழ்வதை முஸ்லிம் மக்கள் ஒரு மரபாகக் கொண்டு பின்பற்றி வருகின்றனர். இவ்வகையில் திருப்புகழ் பாடியிருக்கின்றனர்.

சந்தத் திருப்புகழ் நவரத்தினத் திருப்புகழ்
ஞானத் திருப்புகழ் சுத்தக்கனித் திருப்புகழ்
ஆதமலைத் திருப்புகழ் மனோரஞ்சிதத் திருப்புகழ்
திருப்புகழ் பாமாலிகை பஞ்சமணித் திருப்புகழ்
சத்தரத்நத் திருப்புகழ் சீறாப்புராணத் திருப்புகழ்
முகியித்தீன் ஆண்டகைபேரில்
திருப்புகழ்

திருப்புகழ் சிற்றிலக்கியம் அதிகளவு கட்டுப்பாடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. எல்லா அடிகளும் ஒரே விதமான சந்தம், வண்ணம் இடம்பெறல் வேண்டும்.

கீர்த்தனம்

கீர்த்தனம் என்பது, பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் எனும் உறுப்புக்களைக் கொண்ட இசைவடிவம். இத்தகைய கீர்த்தனையை இசுலாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் நூல்கள் கொண்டு திகழ்கின்றன.

சீறாக் கீர்த்தனம் சுகிர்த் மெஞ்ஞானச் சங்கீர்த்தனம்
சங்கீத சிந்தாமணி நவரசக் கீர்த்தனாலங்காரம்
அலங்காரக் கீர்த்தனம்

இவ்வாறு பல கீர்த்தனங்கள் இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவற்றின் இராகம், தாளம், சுதி, வண்ணம், சந்தக் குறிப்பு என்பனவற்றைப் பயன்படுத்திச் சிறந்த இசை வல்லுநர்களாக விளங்கியிருக்கிறார்கள். இவ்வாறு இசைத் தமிழ் வளர்ச்சிக்கு இசுலாமியப் புலவர் ஆற்றிய தொண்டு மகத்தானது என்பதை உணர முடிகிறது.

கும்மி

இசுலாமிய அடிப்படையில் தமிழில் பாடப்பெற்ற ஞானக் கும்மிப் பாடல்கள் முஸ்லிம் புலவர்களால் இயற்றப் பட்டுள்ளன. சுபியாக்கள் என வழங்கப்படும் மெய்ஞ்ஞானப் புலவர்களே அத்தகைய ஞானக்கும்மிப் பாடல்களைப் பாடியுள்ளனர். மெய்ஞ்ஞானப் புலவர்களைத் தமிழில் சித்தர் என வழங்குகின்றனர் இசுலாமியக் கும்மிப் பாடல்களுள் பெரும் பாலானவை முஸ்லிம் பெரியாரின் வாழ்க்கையினைப் பொருளாகக் கொண்டுள்ளன.
சீவிய சரித்திரக் கும்மி
சிங்காரக் கும்மி
காரண அலங்காரக் கும்மி

என ஞானத்தையுயே அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன.

சிந்து

சந்தத்துடன் பண்ணமைதி பெற்று இருப்பவையே சிந்து ஆகும். முஸ்லிம் மக்கள் இசைத் தமிழில் ஈடுபாடுள்ளவர்களாக இருந்ததினால் சிந்து போன்ற இசைத் தமிழ் சார்பான நூல்கள் முஸ்லிம் மக்களிடையே பெருவழக்கைப் பெறலாயின. இசுலாமியக் கோட்பாடுகள், கட்டளைகள், தத்துவங்கள் முதலியவற்றை முஸ்லிம் மக்கள் எளிதில் அறிந்து உணர்ந்து பாடினர். அதனால் பாடிப் பயன் பெறுவதற்கு இத்தகைய இசைத்தமிழ்ப் பாடல்கள் பெரிதும் உதவின எனலாம்.

தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே சிந்துக்கள் வழக்கில் இருந்துள்ளன. முழுமையான நூலுருவிலும் சிந்துப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. பல்வேறு புலவர்களும் தத்தம் ஏனைய நூல்களிலும் ஓரிரு சிந்துப்பாடல்களைத் தனியே பாடி யுள்ளதைக் காணலாம்.

நவநீத ரத்நாலங்காரச் சிந்து நொண்டிச் சிந்து
ஒலி நாயகரவதாரச் சிந்து பூவடிச் சிந்து
கப்பற் சிந்து எண்ணெய்ச் சிந்து

என இவ்வாறு முஸ்லிம் புலவர்கள் பாடிய சிந்து இலக்கியங்கள் அறியமுடிகின்றன.

தாலாட்டு

இசைக் கருவிகள் பயன்படுத்தாவிட்டாலும் இசை அமைதியுடன் பாடப்படுபவை தாலாட்டுப் பாடல்கள். இத்தகைய தாலாட்டுப் பாடல்கள் முஸ்லிம் மக்களிடையே பெருவழக்கில் வழங்கப்படுகின்றன. தமிழ்த் தாலாட்டுப் பாடல்களையே முஸ்லிம் தாய்மார் தமது குழந்தைகளை உறங்கச் செய்வதற்குப் பயன்படுத்துவர்.

தாலாட்டுப் பாடல்கள் பல வகையினதாக அமையும். ஒரே ஆசிரியர் வெவ்வேறு வகையான தாலாட்டுப் பாடல்களை இயற்றி யுள்ளமையைக் காணலாம்.

ஞானத் தாலாட்டு சுகானந்தத் தாலாட்டு
மணிமந்திரத் தாலாட்டு மீறான் தாலாட்டு
பாலகர் தாலாட்டு மஅரிபத்தின் தாலாட்டு
பிள்ளைத் தாலாட்டு

இவ்வாறு தாலாட்டுப் பாடல்களைப் பார்க்கும்போது முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையிலே தமிழ்த் தாலாட்டுப் பாடல்கள் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றன என்பது புலனாகின்றது.

ஏசல்

மக்கள் வழக்கில் பயன்படுத்தப்படும் மற்றொருவகைச் சிற்றிலக்கியம் ஏசல் என்பதாகும். முஸ்லிம் மக்களிடையே பெரு வழக்கைப் பெற்றுள்ள ஏசல் சிற்றிலக்கியப் பிரபந்தங்கள்
ஸ்லாமிய சமயக் கோட்பாடுகளையும் ஒழுக்கக் கட்டுப் பாடுகளையுமே விவரிப்பனவாக அமைந்துள்ளன. அத்தகைய இசுலாமிய அடிப்படையில் தோன்றிய ஏசல் பிரபந்தங்கள் தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழும் உரையாடலாகவே அமைந்திருக்கும். ஏசல் சிற்றிலக்கியம் போன்றும் அவற்றைவிட அளவில் சிறியனவையாக உள்ள பல சிற்றிலக்கியங்கள் தமிழில் இசுலாமிய அடிப்படையில் தோன்றி உள்ளன.

குறவஞ்சி இலக்கியங்கள்

குறம் சிற்றிலக்கிய வகைகளுள் சில இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் படைத்துள்ளார்கள்.
ஞானரத்தினக் குறவஞ்சி பிசுமில் குறம்
ஞான ஆசாரக் குறவஞ்சி குறமாது
ஞானக் குறம்

இவர்கள் ஆன்மீகத் தத்துவங்களை, நாடகமாகவும் தரமுடியும் என்பதை நிறுவியுள்ளனர்.

பிள்ளைத் தமிழ்

தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒரு முக்கிய வகையே பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள். பல்வேறான பக்தி இலக்கிய வகைகளைப் படைத்தளித்துள்ள முஸ்லிம் புலவர்கள் மிகுந்த எண்ணிக்கை அளவிலான முஸ்லிம் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைப் படைத்தளித்திருப்பதை அறிய முடிகிறது.

இசுலாமியத் தமிழிலக்கிய மரபில் மரபு வகைச் சிற்றிலக் கியங்களுள் ஒரு முக்கிய இலக்கியப் பிரிவாகப் பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. முஸ்லிம் புலவர்கள் ஏனைய பிற சமயப் புலவர்களிலிருந்து பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் வேறுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இறைவன்மீது ஏனைய பிற சமயத்தவர்கள் பாடியது போன் று பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைப் பாடவில்லை. ஆனால் தங்களது சமய நெறிக்குட்பட்ட எல்லைப் பரப்பினை அமைத்துள்ளன. ஆகவே சமயச் சான்றோர்களை மட்டும் தலைவராகக் கொண்டே பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைப் படைத்தளித்துள்ளனர்.

முகையதீன் பிள்ளைத் தமிழ்
நபிநாயகம் பிள்ளைத் தமிழ்
நபிசல்லல்லாகு அலைகிவ சல்லம் அவர்கள் பேரில் பிள்ளைத் தமிழ்
முகியத்தீன் அப்துல் காதிர் ஜெயிலானி ஆண்டவர்கள் காரணப் பிள்ளைத் தமிழ்
செட்டு தாவுது பிள்ளைத் தமிழ்
சாகுல் ஹமீது ஆண்டவர் பிள்ளைத் தமிழ்
தைக்காசாகிபு ஒலியுல்லா பேரில் பிளைத் தமிழ் திருச் சந்தப் பிள்ளைத் தமிழ்
றசூல் நாயகம் பிள்ளைத் தமிழ்
பாத்திமாநாயகி பிள்ளைத் தமிழ்
பிள்ளைத் தமிழ் முகியித்தீனாண்டவர்கள் ஞானப் பிள்ளைத் தமிழ்
சாலிஹ் வலியுல்லாஹ் திருச்சந்தப் பிள்ளைத் தமிழ்
செய்யிது முகம்மது புகாரி பிள்ளைத் தமிழ்
நபிநாயகம் பிள்ளைத் தமிழ்
நத்ஹரொலி ஆண்டவர் பிள்ளைத் தமிழ்
நாகூர்ப் பிள்ளைத் தமிழ்
நாகூர் மீரான் சாகிபு ஆண்டவர் பிள்ளைத் தமிழ்
ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ்
கேசிஎம் பிள்ளைத் தமிழ்
என இசுலாமியப் பிள்ளைத் தமிழ் அமைந்துள்ளன.

தொகுப்புரை

முஸ்லிம்களுக்கே உரிய இசுலாமிய இலக்கிய வடிவங்களோடு நின்று விடாது இசுலாமிய அடிப்படையில் தமிழில் எழுத முற்பட்ட முஸ்லிம் புலவர் தமிழ் மொழிக்குரிய சிற்றிலக்கிய வடிவங்கள் பலவற்றை அடியொற்றி இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள் படைத்துள்ளனர். தமிழுக்குரிய சிற்றிலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் எதனையும் விட்டு விடாமல் எழுதியிருக்கிறார்கள்.
-----------------
நிறைவுரை

இசுலாமியப் பண்பாடு, கோட்பாடு, வரலாறு, வாழ்வியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இசுலாமிய இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இசுலாமியச் சட்ட திட்டங்கள் அனைத்தும் திருக்குர் ஆனிலும் ஹதீதுகளிலுமே கூறப்பட்டுள்ளன. 'இசுலாமியச் சிற்றிலக்கியங்கள்' எனும் தலைப்பிற்கான கருத்துக்கள் பல இசுலாமிய நூல்களிலிருந்து தொகுத்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முஸ்லிம் புலவர்கள் அறிமுகப்படுத்திய புதுவகை இசுலாமியச் சிற்றிலக்கியங்களான படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா, மஸ்அலா, நாமா போன்ற இலக்கிய வகைகளுக்கு மூலமாக அமைந்த நூல் ம.முகம்மது உவைஸ், பீ.மு. அஜ்மல் கானின் 'இசுலாமியத் தமிழ் இலக்கிய வரலாறு' என்பதேயாகும். இசுலாமிய நெறிமுறைகளை எளிதில் மக்கள் புரியுமாறு இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் அமைந்துள்ளன. இசுலாமியச் சிற்றிலக்கியப் பாடுபொருள்கள் அனைத்துமே இசுலாத்தின் நெறியாகவும், இசுலாமியப் பெரியவர்களின் வாழ்வின் நெறியாகவுமே அமைந்துள்ளன. சுலாமியச் சிற்றிலக்கியங்கள் அனைத்துமே ஒழுக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன.

சுலாமியப் புதுவகைச் சிற்றிலக்கியப் பிரிவில் படைப்போர் இலக்கியம், போர்ச் செய்திகளைக் குறிப்பிட்டாலும், அதில் அநீதியை அகற்றுவதும், இறைக் கொள்கையை நிலைநாட்டுவதாகவே அமைக்கப்பட்டுள்ளன. முனாஜாத்து இலக்கியம் முழுவதுமே இசுலாமிய நெறிகளை விளக்குவனவாக அமைந்துள்ளன. இதுபோல் கிஸ்ஸா
லக்கியங்களும் நபிமார்களின் வரலாறு, பிறவரலாற்று நிகழ்வுகள், இசுலாம் சமயக் கருத்துகள் அனைத்தையுமே கதை மூலமாக விளக்குவதாக அமைந்துள்ளன. மேலும் இசுலாமியக் கருத்துகளைத் தமிழக முஸ்லிம் மக்களிடம் பரப்பும் கதைகளாக அமைந்துள்ளன.

மஸ்அலா இலக்கியங்கள் வினாவிடை அமைப்பாக உள்ளன. இதன் உள்ளடக்கத்தில் இசுலாமிய மார்க்கக் கருத்துக்களே மிகுதியாக இடம்பெற்றுள்ளன. எளிய நடையாகவும் அமைந்துள்ளன. நாமா இலக்கியங்கள் முழுவதும் இசுலாமியக் கருத்துகளே நிறைந்து காணப்படுகின்றன. மேலும் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் போல் இசுலாமியச் சிற்றிலக்கியங்களும் அதிகளவு எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் அனைத்துமே மார்க்க நெறியாகவும், ஒழுக்கத்தையும் மனித உயிர்களின் மதிப்புகளையும், ஆன்மாவின் உயர் நிலையையும் வலியுறுத்துகின்றன.
-----------------
துணை நூற்பட்டியல்

1. அல்ஹாஜ் கலாநிதி முகம்மது உவைஸ், இஸ்லாமும் இன்பத் தமிழும், யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை, 1976.
2. அலிபாவா, உ. இசுலாமியச் சதகங்களின் பாடுபொருள்,
வளர்தமிழ்ப் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 2005.
3. அஜ்மல்கான், பீ.மு. இசுலாமியத் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி-4, சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1997.
4. உவைஸ், எம்.எம்.இசுலாமியத் தென்றல், மணிக்குரல் பதிப்பகம், இலங்கை.
5. கண்ணன், இர. சிற்றிலக்கிய ஆராய்ச்சி, இரண்டாம் தொகுதி, அப்பர் பதிப்பகம், சென்னை, 2002.
6. சாயபு மரைக்காயர், மு. இசுலாமியர் தமிழ்த் தொண்டு, கங்கை புத்தக நிலையம், சென்னை, 2006.
7. சாயபு மரைக்காயர், மு., இசுலாமியத் தமிழ்ப் புலவர்கள், கட்டுரை, சமரசம், 1.2.81, இதழ், சென்னை.
8. சாயபு மரைக்காயர், மு. இசுலாம் வளர்த்த தமிழ், இசுலாமியத் தமிழ் இலக்கியக் கழகம், மயிலாடுதுறை, 1998.
9. தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சி வரலாறு, முதல் தொகுதி, பச்சையப்பன் ஆய்வரங்கம், சென்னை, 1998.
10.பொன்னுசாமி, மு. தமிழ் சிற்றிலக்கிய வரலாறு, தொகுதி-II, இந்து பதிப்பகம், கோயம்புத்தூர், 2004.
11. ரஹ்மத்துல்லா, வ., இஸ்லாமிய ஃபக்கீர்கள், படையல் வெளியீடு, சென்னை, 2007.
12. நூர்மைதீன், வா.மு.அ. நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை, 1986.
13. முகம்மது உவைஸ், ம. அஜ்மல்கன், பீ.மு. இசுலாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி-3, மதுரை கமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1994.
14. முகம்மது உவைஸ், ம, இசுலாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி-2, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1990.
15. முஹம்மதுமைதீன், ம. முஹம்மது காசிம் உலா, யுனிவர்ஸல் பிரின்டிங் ஹவுஸ், சென்னை, 1982.
16. மெய்ஞ்ஞானாமிர்தம், தக்கலை எம்.எஸ்.பஷீர், தில் ஹாத் பதிப்பகம், சென்னை, 2001.
----------------

This file was last updated on 30 October 2025.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)